சின்னதாய்ச் சிங்காரித்துச்
சின்னக்கண்ணில் மையிட்டு
புருவமிரண்டின் மத்தியிலே
வண்ணக் குப்பிப் பொட்டுமிட்டேன்!
உச்சி வகிடின் நடுவினிலே
நெற்றிச்சுட்டி ஆடவிட்டேன்!

மணிக்கட்டு அது நோகாது `
சிறு வளையல்கள் பூட்டிவிட்டேன்,
வீடெங்கும் நீ இசை நிரப்ப
கால்சலங்கைக் கட்டிவிட்டேன்!

வண்ணமணி மேகலையும்
தொங்கும் மணிஆரமும்
அதன் இடங்கள் சேர்த்துவிட்டேன்!
கூண்டுகிளிப் பொருத்திய
காதணியும் தொங்கவிட்டேன்!

முல்லைப்பூக் கரங்களுக்கு
மருதாணி நிலாக்கள் வைத்தேன்!
மல்லிப்பூ வாசனை நுகர்ந்து
அம்மா… இது வேண்டுமென்றாய்!
அழகாய்ச் சரமொன்று கட்டி
பின்னலிலே சூட்டிவிட்டேன்!

அத்தனையும் முடித்து
பாவாடை நுனிபிடித்து,
பாட்டொன்றுப் பாடி
பாங்காய் உன் தலைசாய்த்து
கேட்டாய்…!
“அம்மா, நல்லா இருக்குல்ல…”
இதோ வந்துவிட்டது மகளே
நம்வீட்டில் பண்டிகை நாள்!

ஊரெங்கும் பொங்கலோ
நாடெங்கும் தீபாவளியோ
நீதானே என் பண்டிகை
நீதானே என் திருவிழா

அம்மா நான் உன்னை அலங்கரித்து
கவியொன்றும் பாடிவைத்தேன்
மகளே நீ என் தமிழ்ச்சாமி!

                                  - அனிதாராஜ் 🖊

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *