ஏர்மங்கலம், இந்தப் பாடல் மருதநிலத்துக்கு மட்டுமே உரியது. பொன்னேர் பூட்டல் என்று முதன் முதலாக மருதத்தில் ஏர் பூட்டும் நிகழ்வைக் குறிப்பிடுவார்கள். அப்போது ஏர்கலப்பையை வைத்திருக்கும் உழவர் பெருமக்களால் பாடப்படும் பாடல் ஏர்மங்கலம் ஆகும். பொன்னேர் பூட்டல் நிகழ்வு பற்றி தமிழ் இலக்கியங்களில் அநேக இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சித்திரை மாதத்தில் நடைபெறும் விழாவாகும். இன்றும் கூட சில கிராமங்களில் பொன்னேர் பூட்டல் நிகழ்வு விமரிசையாக இல்லாவிடினும், பாரம்பர்ய நிகழ்வாக நடத்தப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையிலும் பொன்னேர் பூட்டல் பற்றியும் ஏர்மங்கலம் பற்றியும் குறிப்பு உள்ளது.

”பார்உடைப் பனர்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும்”

(சிலப்பதிகாரம். நாடுகாண் காதை-134,135)

இராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க, தெற்கு நோக்கிச் செல்லும் அனுமனிடம் இராமன் சொல்வதாகக் கம்பன் கவி எழுதுவார்.

”தென் தமிழ்நாட்டு அகன் பொதியில்
திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவன் உறைவிடம் ஆம்
ஆதலினால் அம்மலையை இறைஞ்சி ஏகி
பொன்திணிந்த புனல் பெருகும்
பொருநை எனும் திருநதி பின்பொழிய;”

  • (கம்பராமாயணம்-நாடவிட்ட படலம் 31)

தென்தமிழகத்தில் பொதிகை மலையில் அமர்ந்து அகத்தியர் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். அந்த மலையின் பக்கம் சென்றுவிடாதீர்கள். இனிதான தமிழைக் கேட்டு மெய்மறந்து அங்கேயே இருந்துவிடவும் நேரலாம். பொன் கலந்துவிட்டதுபோல் ஓடும் நீரினைக் கொண்ட பொருநை நதி அம்மலையில் இருந்துதான் உருவாகிறது என்பது இதன் பொருள். தமிழுக்கும் தாமிரபரணிக்கும் கம்பனால் பெருமை சேர்க்கப்பட்ட பாடல் இது.

இந்தத் தாமிரபரணியை ”தண்பொருந்தப் புனல் நாடு” என்கிறார் சேக்கிழார். மாறவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு இரண்டு ’தண்பொருந்தம்’ என்றே தாமிரபரணியைக் குறிப்பிடுகிறது. அசோகர் காலக் கல்வெட்டும் பாலி மொழியில் தாமிரபரணியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

”வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மொழுகிக்
களிந்த குங்குமக் கலவையுங் காசறைச் சாந்தும்
அளைந்த தெண்டிரைப் பொருநையோ அந்நதி ஞாங்கர்
விளைந்த செந்நெலும் கன்னலும் வீசுமவ்வாசம்”

  • திருவிளையாடற்புராணம்-84
    இது பக்தி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பாடல்.

வளைந்த மெல்லிடை உடைய பெண்கள் தாமிரபரணியில் குளிக்கும்போது, தங்களுடைய மார்பகத்தில் பூசி, பின் கழுவும் குங்குமக் கலவையும் கஸ்தூரி மஞ்சள் கலவையும் சந்தனச் சாறும் பொருநைநதியில் கலந்து ஓடுவதால் அந்த நதியின் நீரில் சந்தனம், மஞ்சள், குங்கும வாசனை கலந்திருக்கிறது. அந்த நதியின் நீரில் மட்டுமா அவ்வாசனை தெரிகிறது, நதியின் நீர் வயல்களுக்குப் பாய்வதால் அந்நீர் உறிஞ்சி விளைந்த செந்நெல்லிலும் கரும்பிலும் அந்த மணம் வீசுகின்றது. சுவையுடன் சுகந்தமும் கிடைக்கின்ற நெல் விளையும் பூமி தமிரபரணியின் மருத நிலங்கள் என்பது இப்பாடல் மூலம் தெரிகின்றது.

”அழகர் கருணை போல் பொருநை பொங்கிவரும்
அழகைப் பாரும் பள்ளீரே”

  • (முக்கூடற்பள்ளு)

இப்படி பொருநை, தண்பொருநை, தண்பொருந்தம், தாமிரவருணி எனப் பலவாறு பலகாலங்களில் அழைக்கப்பட்டு வந்த நதிதான் தாமிரபரணி. தமிழ் பேசும் நல்லுலகில் பிறந்து, அங்கேயே தவழ்ந்து, ஓடி கடலைச் சேர்கின்ற நதி. தாமிரச் சத்து நிறைந்த தண்ணீரை முகந்து ஓடும் ஒரு நதி இது. அதனால்கூட தாமிரபரணி ஆகியிருக்கலாம்.
கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞர்களான ஹெரோடெட்டஸ், பிளினி, தாலமி ஆகியோர் தாமிரபரணியின் பெருமைபற்றி தங்களது நூல்களில் எழுதியுள்ளனர்.

தாமிரபரணி நதி மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பொதிகைமலைச் சாரலில் முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள பூங்குளம் என்ற இடத்தில் சிறிய ஓடையாய்ப் பிறந்து தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து புன்னக்காயலில் வங்கக் கடலில் கலக்கிறது. வழி நெடுக அநேக சிற்றாறுகளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் இந்நதியின் மொத்தப் பயணதூரம் 125 கி.மீ.

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றுகளால் மழை பெறும் மேற்கு மலைத் தொடர்ப் பகுதியில் உருவாவதால் ஆண்டு முழுவதும் நீரோடிக் கொண்டிருக்கும் வற்றாத பெருநதி இது. அடர் வனத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து கிளை பரப்பியுள்ள மரங்களில் இருந்து வீழும் இலைகளாலும், தாழத் தவழ்ந்து வளரும் செடி கொடிகளின் இலைகளாலும் இந்த நதி மலைகளில் நடக்கும் மண் தடம் முழுதும் பஞ்சு போன்ற அமைப்பைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக மழையற்ற காலங்களிலும் கூட மலைகள் ஊற்றுப் பெருக்கித் தாமிரபரணிக்கு எப்போதும் சுவையான தண்ணீரைத் தந்து கொண்டே இருக்கின்றன.

தாமிரபரணி, தமிழகத்தில் காவிரிக்கு அடுத்து மாபெரும் மருதநில வயல்களைத் தன் கரையெங்கிலும் ஏற்படுத்தியுள்ளது. கூடக் குறைய 86,107 ஏக்கர் பாசனப் பரப்பைத் தன் தண்ணீரால் ஆராட்டி மக்களுக்கு அன்னம் கொடுக்க உறுதுணையாய் இருக்கின்ற ஜீவநதி தாமிரபரணி. தான் பாயும் வழிநெடுகிலும் நெல், கரும்பு, வாழை என வளப்படுத்திவிட்டே புன்னக்காயலில் கடலைத் தொடுகிறது.

மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, இராம நதி, கயத்தாறு மற்றும் சித்ராநதி என்று தமிழ் இலக்கியம் போற்றும் சிற்றாறு ஆகியன மேற்கு மலைகளில் தோன்றி தாமிரபரணியுடன் இணையும் துணை ஆறுகள். இவைகளாலும் பொதிகையின் சூழலாலும் பருவ மழைகளாலும் ஆண்டு முழுவதும் வற்றாது ஓடும் வரத்தைப் பெற்றிருக்கிறாள் தாமிரபரணி.
சித்ரா நதி, கயத்தாறு இரண்டும் சீவலப்பேரியில் தமிரபரணியில் கலக்கின்றன. இதனை முக்கூடல் என்கிறார்கள். முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் இந்நிலத்தைக் காதலித்து எழுதிய பாடல்கள் பல உண்டு.

”மீது யர்ந்திடுந் தெங்கிள நீரை
மிடைந்த பூகஞ் சுமந்துதன் காயை
சூத மொன்றிச் சுமக்கக் கொடுக்குஞ்
சூதந் தன்கனி தூங்கும் பலாவின்
ஓதும் அந்தப் பலாக்கனி வாழை
உளுக்க வேசுமந் தொண்குலை சாய்க்கும்
மாது ளங்கொம்பு வாழையைத் தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே”

தென்னையின் இளநீரை அருகிலுள்ள பாக்கு மரங்கள் தாங்கும், பாக்கின் குலைகளை அடுத்துள்ள மாமரங்கள் சுமக்கும், மாங்கனிகளை பக்கத்திலிருக்கும் பலா மரங்கள் பிடித்து நிறுத்தும், பலாக்கனிகளை கீழிருக்கும் வாழை தாங்கும், வாழையை அருகிருக்கும் மாதுளை தூக்கிப் பிடிக்கும். அவ்வளவு வளம் கொண்டது தாமிரபரணியின் வடகரையில் இருக்கும் என் அரசூர் நாடு என்கிறார் ஒரு பெண்.

”பங்கயம் தலை நீட்டிக் குரம்பினில்
பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மெள்ளத் தொடும் அந்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய்க்கதிர் செந்நெல்
அளாவி நிற்கும் அச்செந்நெலும் அப்பால்
செங்கரும்புக்குக் கைதரும் போல் வளர்
சீவல மங்கை தென்கரை நாடே”

நீர்நிலையில் பூத்துள்ள தாமரை வரப்பில் தலை வைத்து பச்சை இஞ்சியின் இலைகளைத் தொடும், இஞ்சியோ மஞ்சளின் கழுத்தைப் பாசத்துடன் தடவும், மஞ்சளோ வரப்புயர வளர்ந்திருக்கும் நெற்பயிருடன் கூடிக் குலாவி நிற்கும், நெல்லோ அப்பாலுல்ல செங்கரும்பிற்குக் கைகொடுத்து வளர்ந்து இருக்கும். அதே தாமிரபரணியின் தென்கரையில் இருக்கும் சீவல்மங்கை நாட்டின் வளமே ஆகச் சிறந்தது என்கிறார் இன்னொரு பெண்.

ஆக மொத்தத்தில் தாமிரபரணி பாயும் இடங்களெல்லாம் வளமான பூமியாக உள்ளது. விளைச்சலுக்கு விடிவு தரும் தண்ணீர், விளைவதற்குத் தேவையான மண்வளம், உழைக்கச் சலிக்காத மனித வளம் என நிறைந்துள்ளவை தாமிரபரணியின் இருகரைகளும்.

உண்ண உணவும், சிலாகிக்க உணர்வும், பேச இலக்கியங்களும் தந்த நதிகள் தமிழ் கூறும் தொல்லுலகில் பல இருக்கின்றன. காண்போம், காத்திருங்கள்.

கட்டுரையாளர்: சாதாரணன்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *