கரைசேராப் படகுகள் – 8

கரைசேராப் படகுகள் – 8

தொடர்கதை சேதி  சொல்லப்  போன மனுஷன்  வெள்ளையத்தேவன் மாதிரி  வெள்ளைப் பசுவைப் பிடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் குழம்பித்தான் போனாள் மரகதம். “மதனி, நான்தான் அந்த ஊருதானேன்னு மாடு வாங்க அண்ணனைக் கூப்பிட்டுகிட்டுப் போனேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மாட்டை ஓட்டிச் சென்றான்   மாணிக்கம். ‘வெளைஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேர்றதுக்கே பணத்துக்கு  பவுசத்து நிக்கயிலே, இந்த மனுஷன் கூறு கெட்டுப்போய்  மாட்டைப் புடிச்சிட்டு வந்துட்டாரே’ன்னு மனதிற்குள்  பயந்த மரகதம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “சரி… சரி… வெளக்கு வைக்கப் போவுது. வீட்டுக்கு வந்து கஞ்சித் தண்ணி குடிச்சிட்டு, பொறவு களத்து காவலுக்கு வரலாம்”  என்று  கணவனுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அருக்காணி  ஆய்ந்து வச்ச கீரையெல்லாம்  சிவப்பு நிறத்தில் மஞ்சள் பூ போட்ட புடவை முந்தானையை விரித்து மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பினாள் மரகதம். “அடியே…. எத்தனை பேரு வேலை செஞ்சாங்க? எவ்வளவு வேலை செஞ்சாங்கன்னு  சொல்லாமலேயே கிளம்பறயே…”  என கூப்பாடு போட்டார் செந்தாமரை. “ஆம்பள ஆளு 25, பொம்பள ஆளு 10, நம்ம அருக்காணியை எனக்கு ஒத்தாசைக்கு வச்சிருந்தேன். கணக்கு தீர்க்கும்போது  அவ வந்து நிக்கப் போறா. அவ கணக்கை  நான் பாத்துக்கறேன்” என்று படபடவென்று சொல்லிக் கொண்டே நடந்தாள் மரகதம். அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே பக்கத்தில் ஓடினார் செந்தாமரை. நாலு தளை தாண்டியதும்  கோவாலு  நாயக்கர் தோட்டம் வந்தது. “அண்ணாத்த, புள்ள பெத்தவளுக்கு கத்தரி பிஞ்சும் முருங்கைப் பிஞ்சும் பறிச்சுகறேன்” என்று தூர நிக்கற உருவத்தைப் பார்த்துக் கத்திவிட்டு வேகமாக கத்தரி பிஞ்சைப் பறிச்சா. “மச்சான் ரெண்டு முருங்கை பிஞ்ச ஒடியேன்”னு சொன்னவள், காய்களைப் பறிச்சதும் செந்தாமரை தோளில் இருந்து துண்டை எடுத்து அதுல பறிச்சதெல்லாம் போட்டு மூட்டை கட்டிக்கொண்டு நடையைக் கட்டினர் இருவரும்.  வீட்டிற்கு வந்ததும் இருவரும் அரப்புப்  பொடி போட்டு நன்கு குளித்துவிட்டு வந்தனர். “எலே செந்தாமரை, இன்னிக்கு ஏன் இவ்வளவு நேரம்?” என்று  கேட்ட  அம்மாவுக்கு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே, களத்து காவலுக்குப் போனதில் இருந்து முருங்கைக்காய் பறிச்சது வரைக்கும்  வெட்டி ஒட்டி படம் ஓட்டினார் செந்தாமரை.  காதில் தொங்கிய  பாம்படம் ஊஞ்சல் ஆட, மஞ்சள் நிறத்தில்  ஓரத்தில் மட்டும் காபி நிறத்தில் லேசான  கோடு போட்ட புடவை முந்தானையால் அடிக்கடி முகத்தை துடைத்துக் கொண்டும் ரவிக்கை அணியாத  மேலுக்கு  விசிறி   விட்டுக் கொண்டும் கதை கேட்டாள் பட்டம்மா பாட்டி. பின்பக்கம் இருக்கும் சமையல் அறையில் அடுப்பை ஊதி ஊதி நொந்து கொண்டிருந்த மரகத்திற்கு, ‘ஆத்தாளும் மவனும் அப்படி என்னதான் பேசுவாங்களோ!” என்று மனசுல உலை கொதித்தது. ஒரு வழியாக  சமைத்து  முடித்து   சாப்பாடு தட்டில்  வரும்போது  இரவு  ஏழு மணி சங்கு கூவியது. “ஏண்டி.. இந்த பச்ச புளிக்குழம்புக்கும், பருப்புத் துவையலுக்குமா இம்புட்டு நேரம்?” என்று வியாக்கனம் பேசினார் பட்டம்மா.  “ம்… உங்க அதட்டலுக்கு நான் பயப்படலாம், பச்சை மட்டை கூடவா பயப்படும்?”  என்று  வெடுக்கென்று  பதில் சொல்லிட்டு, “ஏனுங்க, நாளைக்கு கழிச்சுப் போட்ட புளியமரத்தை வெறவுக்கு ஏத்தி அனுப்புங்க” என்று பட்டம்மாள் மேலிருந்த எரிச்சலைக் கணவனிடம் காட்டினாள் மரகதம். நாலு முழ வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு, துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு, நீண்ட மூங்கில் கழியை ஒரு கையிலும்  லாந்தர் விளக்கை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு நின்ன  செந்தாமரையைப் பார்த்து, “என்  ராசா அப்படியே  மாறு வேசத்தில வரும் ராசராச சோழனாட்டம் இருக்கேடா”  என்று பட்டம்மா நெட்டை முறித்தாள். இதை ரசித்துக்கொண்டே தூக்குச் சட்டியை எடுத்துவந்து கொடுத்து, “மாமா, காசற கீரை சாதம். நிறைய  பூண்டு போட்டு நல்லெண்ணெய்யில்  பண்ணது; வீணாக்கிபுடாதீங்க. பருப்பு துவையலும் வச்சிருக்கேன். உங்களுக்குத்தான் வாயில்  வேப்பங்குச்சியை வச்சதுமே வயிறு பசிக்குமே…” என்றாள் மரகதம். “நாளைக்கு அமட்டச்சிக்கு  சொல்லணும். புனிதாவுக்கு தலைக்கு ஊத்த பச்சில மருந்தைத் தேடி எடுத்து வரணும். இதெல்லாம் முடிச்சிட்டு அப்பறம் வயக்காட்டுக்கு போ” என்று மரகதத்திற்குக் கட்டளையிட்டார் பட்டம்மா. “மரகதம் நீ சீக்கிரம் வந்து மாத்தினாதான் ஆச்சு. எனக்கும் நிறைய வேலையிருக்கு. ஐயர்கிட்ட  பேரு வாங்கணும்; பொண்ணுங்களுக்கும்  அங்காளி, பங்காளிக்கும்  சொல்லிட்டு வரணும். டவுனுக்குப் போய் காப்பு வாங்கணும்” என்று இழுத்த செந்தாமரையிடம்,  “என்னது..! காப்பா?” என்று மாமியாரும் மருமகளும் ஒத்து ஊதினார்கள். “தவள  மாட்டிகிச்சு” என்று செந்தாமரை நினைத்தார். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 5

கரைசேராப் படகுகள் – 5

தொடர்கதை – சாம்பவி சங்கர் சூரியன் தத்தளித்து, தகதகத்துக் கிளம்பும் காலைப்பொழுது. அந்த ஓட்டு வீட்டு வாசலில் பெரிய வேப்பிலைக் கொத்து சொருகி இருந்தது.  பெரிய அகலமான பித்தளைச் சட்டியில் ஆலம் கரைத்து, அதில் வேப்பிலை, கரித் துண்டு, காய்ந்த மிளகாய் போட்டு வாசலில் அனைவரின் பார்வையில் படும்படி வைத்திருந்தனர். மரகதம் மூன்றாம் நாள் புனிதாவுக்கு சாதம் கொடுப்பதற்காக, அதிகாலையிலேயே எழுந்து, குளிசெலவு எல்லாம் மண் சட்டியில் வைத்துப் பொன்னிறமாக வறுத்து, அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள். முதல்நாளே பட்டம்மாள் பாட்டி கால்கிலோ பூண்டை உரித்து வைத்திருந்தாள். அலமு பாட்டி, அவள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பிஞ்சுக் கத்தரிக்காயைப் பறித்துவந்து மரகதத்திடம் கொடுத்து இருந்தார். நல்லெண்ணெய் நிறைய ஊற்றி, பூண்டைப் போட்டு, அதன் தலையில் கொஞ்சமாகப் பெருங்காயத்தைக் கொட்டி, நன்றாக வதங்கியதும் பிஞ்சுக் கத்திரிக்காயைப் போட்டு, நல்லெண்ணெயில் மூழ்க விட்டு, தட்டு போட்டு மூடி வைத்து வதக்கி, கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த குளி செலவு போட்டு சட்டியை மூடி வேகவைத்தாள் மரகதம். அந்த வாசனை தெருவில் செல்பவர்கள் அனைவரையும் சுண்டி இழுத்தது. “அடியே… மரகதம், அந்த கத்திரிக்காய் சட்டியில் சுடச்சுட சாதம் போட்டு எடுத்துட்டு வாடி…” என்று பட்டம்மா பாட்டி நாவில் நீர் ஊற சொன்னார். “பாரேன் இந்தக் கிழவிக்கு, அங்க புள்ளை பெத்தவ பசியோட இருக்கா. இங்கே இவங்களுக்கு சாப்பாடு கேட்குதாம்” என்று மாமியாரை மனதிற்குள் கிண்டல் அடித்துவிட்டு, தன் மகள் புனிதாவிற்குச் சுடச்சுட சாதமும் கத்தரிக்காய் வதக்கலும் சேர்த்து காலையில் 7 மணிக்கு உணவு கொடுத்தாள். இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த புனிதாவிற்கு, இந்தச் சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது. அவசரமாக வேலை முடித்துக் கொண்டிருக்கும்போதே, “வயலில் ஆளுங்களுக்கு சாப்பாடு வேணும்” என்று செந்தாமரை மரகதத்தை அவசரப்படுத்தினார். நேற்று  செய்து வைத்த கூழில் இருந்து ஒரு அண்டா கூழைக் கரைத்து, அதற்கு ஊறுகாய் மிளகாயும் நார்த்தங்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாயை ஒரு டப்பாவிலும் எடுத்துக்கொண்டாள். கூழ் அண்டாவை, தலையில் சும்மாடு வைத்துத் தூக்கிக்கொண்டாள். மரகதமும் செந்தாமரையும் மாறி மாறி அந்தக் கூழ் அண்டாவை ரெண்டு பர்லாங்கு  தூரத்தில் உள்ள வயலுக்கு எடுத்துச் சென்றனர். வயலில் அறுவடை வேகமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு இருந்த பாதாம் மரத்திலிருந்து கிடுகிடுவென்று வாதாம் இலைகளைப் பறித்த மரகதம், இலைகளை வேகவேகமாக தொண்ணை ஆக்கி, அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் கூழ் ஊற்றிக் கொடுத்தாள். பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த அருக்காணியையும் கூப்பிட்டுக் கூழ் கொடுத்தாள் மரகதம். மரகதம் வயல் வேலை செய்து கொண்டிருந்தாளே தவிர, ‘பட்டம்மா பாட்டியும் அலமு பாட்டியும் புனிதாவையும் குழந்தையையும் நன்றாகப்  பார்த்துக்கொள்வார்களா?’ என்ற கவலையிலேயே அவள் மனம் இருந்தது. மதியம் ரெண்டு மணி இருக்கும். வீட்டு வாசலில் தபால்காரர் வந்து, “ஐயா… ஐயா…” என்று கத்திக் கொண்டிருந்தார். வாசலில் வேப்பிலை சொருகவில்லை என்றால், அவர் நேரடியாக உள்ளே சென்று இருப்பார். வேப்பிலையைப் பார்த்ததும் தயங்கி, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். ஆடி அசைந்து, திருவாரூர் தேராட்டம் பட்டம்மா பாட்டி வெளியில் வந்தார். “யார் அது? நம்ம ராமுவா? வாப்பா… என்ன வெளியிலேயே நின்னுட்ட?” என்று அக்கறையுடன் கேட்டார் பாட்டி. “வெளியில்தான் வேப்பிலை வேலி போட்டுட்டீங்களே, அப்புறம் எப்படி உள்ளே வர்றது?” என்று அங்கலாய்த்தார் கடுதாசி கொண்டுவந்தவர். “பாட்டி இந்தாங்க, இதை பத்திரமாக உங்க பிள்ளைகிட்ட கொடுத்துடுங்க” என்று கூறி, கவரைப் பாட்டியிடம்  கொடுத்துவிட்டுச் சென்றார். பாட்டி அதை எடுத்து வந்து, பத்திரமாக சாமி மாடத்தில் முருகர் படத்திற்குப் பின்னால் வைத்தார். ‘யார் கண்ணிலும் படாமல், பத்திரமாக என்னிடமே இரு’ என்று படத்திலிருந்த செந்திலாண்டவன் சிரித்தார். வயக்காட்டில் அறுவடை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களும் கதிர் அறுத்து, அரி அரியாக  வைத்தனர். அதை மரகதம், செந்தாமரை, இன்னும் சிலர் கட்டுக் கட்டாகக் கட்டினர். சில கட்டுகள் கட்டி முடித்ததும், ஆண்கள் அந்தக் கதிர்களைத் தலையில் வைத்துக்கொண்டு களத்து மேட்டுக்குச் சென்றனர். கதிர்களை அறுத்து முடித்ததும் பெண்களும் அந்தக் கதிர்களைத்  தலையில் சுமந்து, களத்து மேட்டுக்குக் கொண்டு வருவார்கள். இதில் அழகு என்னவென்றால், ஆண்கள் வேகமாக வாய்க்கால் வரப்புகளில் நடந்து களத்து மேட்டுக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் பாவம், தட்டுத்தடுமாறி வரப்புகளில் மேடு பள்ளங்களில் கால்வைத்து நடந்து வருவது நடனமாடிக்கொண்டே வருவதுபோல அழகாக இருக்கும். இந்த ஆண்கள் கட்டுகளைக் களத்தில் போட்டுவிட்டு, பாதி வழியில் வந்து தன் தங்கையோ,  மனைவியோ,  அம்மாவோ,  அத்தை மாமன் மகளோ, தூக்கி வரும் கட்டுகளை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள். அந்தக் கதிர் மாற்றும் அழகு, வானத்தில் அலை அலையாகச் சென்று கொண்டிருக்கும் மேகங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்த் திசையில் வரும் மேகத்துடன் மோதிக் கலைந்து செல்வது போல இருக்கும். கதிரெல்லாம் களம் வந்து சேர்வதற்குள், சூரியன் கீழ் வானம் வந்து சேர்ந்துவிட்டான். அவசர அவசரமாகக் கதிர்க் கட்டுகளை அடுக்கி வைத்துவிட்டு, ஆட்கள் எல்லாரும் அங்கேயே கரண்ட் கொட்டாயில் மோட்டார் கிளப்பி குளித்துவிட்டு, துணிகளைக் காய வைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள். பெண்கள் மார்பையும் உடலையும் மூடுவது போல, ஒற்றை சேலைத் தலைப்பை ஏற்றிக் கட்டிக்கொள்வார்கள். இன்னொரு தலைப்பை மறுகையால் பக்கவாட்டில் தூக்கிப் பிடித்தது  போல நடந்து வருவார்கள். கடலில் பாய்மரக் கப்பல், பாய்மரம் கட்டி கடலின் அலைகளில் ஆடி அசைந்து நகர்வது மாதிரி இருக்கும், பெண்கள் சேலை உலரவைத்து நடந்து வரும் அழகு. அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, செந்தாமரையும் மரகதமும் பேசிக்கொண்டே வந்தார்கள். “இன்னும் அறுவடை செய்ய வேண்டிய தளைகள் 4 துண்டு இருக்கு. இன்னைக்கு இரண்டு துண்டுதான் முடிஞ்சிருக்கு. இதுவே சின்ன தளைகள்தான்” என்று வேலையின் கடினத்தை வருத்தமாகக் கூறினார் செந்தாமரை. “ஆமாங்க, குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வயல் வேலைகளையும் பார்க்க முடியலைங்க” என்று அலுப்புடன் கூறினாள் மரகதம். “அடி போடி, எள்ளு எண்ணெய்க்குக் காயுதாம், எலிப்புழுக்கையும், ‘ஆமாம், கூட சேர்ந்து நானும் காயுறேன்’னு சொல்ற மாதிரி இருக்கு நீ பேசறது. நான் கூலி கொடுக்க பணத்துக்கு என்ன பண்றதுன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். இவ என்னடான்னா வேலை அதிகமா இருக்குன்னு புலம்பறா”   என்று குறைபட்டார் செந்தாமரை. “ஆமா, பொம்பளைங்க வேலை செய்யறது ஆம்பளைங்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியாதே” என்று மனதுக்குள் புலம்பினாள் மரகதம். வேக வேகமாக வீட்டிற்குள் வந்த மரகதம், அவசரமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு, அதைவிட அவசரமாக மிளகு பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைத்து, அதற்குத் தொட்டுக் கொள்வதற்கு உடைத்த கடலையும் பூண்டும்  சேர்த்துத் துவையல் செய்தாள். புனிதாவிற்கு வறுத்த ரொட்டியைக் காபியில் ஊறவைத்து மாலை 6 மணிக்கே பட்டம்மா பாட்டி  கொடுத்திருந்தார். வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையிடம் சென்று, கொஞ்சிக் கொண்டிருந்தார் செந்தாமரை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு முழுவதும் மரகதம்தான் அந்தப் பச்சை சிசுவைப் பார்த்துக்கொள்வாள். புனிதாவால் எழுந்து உட்காரக்கூட முடியாது. இன்னும் சரியான சத்தான ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. குழந்தை பிறந்த ரணம் குடல் முழுக்க உள்ளாகவே இருக்கும். அந்த ரணம் ஆறுவதற்கு ஒரு வாரமாவது ஆகும். அது வரைக்கும் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடணும். புனிதா வெளியில் அனைவரிடமும் சிரித்துப் பேசிப் பழகினாலும், அவள் மனம் முழுவதும் அவள் கணவனின் நினைவே நிறைந்திருந்தது. “என்னதான் வேலை அதிகமாக இருந்தாலும், நான் எப்படி இருக்கேன்னு விசாரித்து ஒரு கடுதாசிகூடப் போட முடியாதா?” என்று புனிதாவிற்குக் கோபம் லேசாக எட்டிப் பார்த்தது. “நொண்டியாகக்கூட இருந்துவிடலாம்; திருமணத்திற்குப் பிறகு ஒன்டியாக மட்டும் இருக்கக்கூடாது” என அடிக்கடி பாட்டி சொன்னது புனிதாவிற்கு நினைவுக்கு வந்தது. ‘இவள் வாழ்வின் சதியில் எனக்கும் பங்கு’ என்று செந்தில் ஆண்டவரும் அவருக்குப் பின்னிருந்த கடுதாசியும் சிரித்துக் கொண்டிருந்தது. தொடரும் சாம்பவி சங்கர்

நிலம், நிலமறிய ஆவல் – 20

நிலம், நிலமறிய ஆவல் – 20

ஏர்மங்கலம், இந்தப் பாடல் மருதநிலத்துக்கு மட்டுமே உரியது. பொன்னேர் பூட்டல் என்று முதன் முதலாக மருதத்தில் ஏர் பூட்டும் நிகழ்வைக் குறிப்பிடுவார்கள். அப்போது ஏர்கலப்பையை வைத்திருக்கும் உழவர் பெருமக்களால் பாடப்படும் பாடல் ஏர்மங்கலம் ஆகும். பொன்னேர் பூட்டல் நிகழ்வு பற்றி தமிழ் இலக்கியங்களில் அநேக இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சித்திரை மாதத்தில் நடைபெறும் விழாவாகும். இன்றும் கூட சில கிராமங்களில் பொன்னேர் பூட்டல் நிகழ்வு விமரிசையாக இல்லாவிடினும், பாரம்பர்ய நிகழ்வாக நடத்தப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையிலும் பொன்னேர் பூட்டல் பற்றியும் ஏர்மங்கலம் பற்றியும் குறிப்பு உள்ளது. ”பார்உடைப் பனர்போல் பழிச்சினர் கைதொழஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும்” (சிலப்பதிகாரம். நாடுகாண் காதை-134,135) இராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க, தெற்கு நோக்கிச் செல்லும் அனுமனிடம் இராமன் சொல்வதாகக் கம்பன் கவி எழுதுவார். ”தென் தமிழ்நாட்டு அகன் பொதியில்திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்என்றும் அவன் உறைவிடம் ஆம்ஆதலினால் அம்மலையை இறைஞ்சி ஏகிபொன்திணிந்த புனல் பெருகும்பொருநை எனும் திருநதி பின்பொழிய;” (கம்பராமாயணம்-நாடவிட்ட படலம் 31) தென்தமிழகத்தில் பொதிகை மலையில் அமர்ந்து அகத்தியர் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். அந்த மலையின் பக்கம் சென்றுவிடாதீர்கள். இனிதான தமிழைக் கேட்டு மெய்மறந்து அங்கேயே இருந்துவிடவும் நேரலாம். பொன் கலந்துவிட்டதுபோல் ஓடும் நீரினைக் கொண்ட பொருநை நதி அம்மலையில் இருந்துதான் உருவாகிறது என்பது இதன் பொருள். தமிழுக்கும் தாமிரபரணிக்கும் கம்பனால் பெருமை சேர்க்கப்பட்ட பாடல் இது. இந்தத் தாமிரபரணியை ”தண்பொருந்தப் புனல் நாடு” என்கிறார் சேக்கிழார். மாறவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு இரண்டு ’தண்பொருந்தம்’ என்றே தாமிரபரணியைக் குறிப்பிடுகிறது. அசோகர் காலக் கல்வெட்டும் பாலி மொழியில் தாமிரபரணியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. ”வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மொழுகிக்களிந்த குங்குமக் கலவையுங் காசறைச் சாந்தும்அளைந்த தெண்டிரைப் பொருநையோ அந்நதி ஞாங்கர்விளைந்த செந்நெலும் கன்னலும் வீசுமவ்வாசம்” திருவிளையாடற்புராணம்-84இது பக்தி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பாடல். வளைந்த மெல்லிடை உடைய பெண்கள் தாமிரபரணியில் குளிக்கும்போது, தங்களுடைய மார்பகத்தில் பூசி, பின் கழுவும் குங்குமக் கலவையும் கஸ்தூரி மஞ்சள் கலவையும் சந்தனச் சாறும் பொருநைநதியில் கலந்து ஓடுவதால் அந்த நதியின் நீரில் சந்தனம், மஞ்சள், குங்கும வாசனை கலந்திருக்கிறது. அந்த நதியின் நீரில் மட்டுமா அவ்வாசனை தெரிகிறது, நதியின் நீர் வயல்களுக்குப் பாய்வதால் அந்நீர் உறிஞ்சி விளைந்த செந்நெல்லிலும் கரும்பிலும் அந்த மணம் வீசுகின்றது. சுவையுடன் சுகந்தமும் கிடைக்கின்ற நெல் விளையும் பூமி தமிரபரணியின் மருத நிலங்கள் என்பது இப்பாடல் மூலம் தெரிகின்றது. ”அழகர் கருணை போல் பொருநை பொங்கிவரும்அழகைப் பாரும் பள்ளீரே” (முக்கூடற்பள்ளு) இப்படி பொருநை, தண்பொருநை, தண்பொருந்தம், தாமிரவருணி எனப் பலவாறு பலகாலங்களில் அழைக்கப்பட்டு வந்த நதிதான் தாமிரபரணி. தமிழ் பேசும் நல்லுலகில் பிறந்து, அங்கேயே தவழ்ந்து, ஓடி கடலைச் சேர்கின்ற நதி. தாமிரச் சத்து நிறைந்த தண்ணீரை முகந்து ஓடும் ஒரு நதி இது. அதனால்கூட தாமிரபரணி ஆகியிருக்கலாம்.கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞர்களான ஹெரோடெட்டஸ், பிளினி, தாலமி ஆகியோர் தாமிரபரணியின் பெருமைபற்றி தங்களது நூல்களில் எழுதியுள்ளனர். தாமிரபரணி நதி மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பொதிகைமலைச் சாரலில் முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள பூங்குளம் என்ற இடத்தில் சிறிய ஓடையாய்ப் பிறந்து தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து புன்னக்காயலில் வங்கக் கடலில் கலக்கிறது. வழி நெடுக அநேக சிற்றாறுகளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் இந்நதியின் மொத்தப் பயணதூரம் 125 கி.மீ. தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றுகளால் மழை பெறும் மேற்கு மலைத் தொடர்ப் பகுதியில் உருவாவதால் ஆண்டு முழுவதும் நீரோடிக் கொண்டிருக்கும் வற்றாத பெருநதி இது. அடர் வனத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து கிளை பரப்பியுள்ள மரங்களில் இருந்து வீழும் இலைகளாலும், தாழத் தவழ்ந்து வளரும் செடி கொடிகளின் இலைகளாலும் இந்த நதி மலைகளில் நடக்கும் மண் தடம் முழுதும் பஞ்சு போன்ற அமைப்பைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக மழையற்ற காலங்களிலும் கூட மலைகள் ஊற்றுப் பெருக்கித் தாமிரபரணிக்கு எப்போதும் சுவையான தண்ணீரைத் தந்து கொண்டே இருக்கின்றன. தாமிரபரணி, தமிழகத்தில் காவிரிக்கு அடுத்து மாபெரும் மருதநில வயல்களைத் தன் கரையெங்கிலும் ஏற்படுத்தியுள்ளது. கூடக் குறைய 86,107 ஏக்கர் பாசனப் பரப்பைத் தன் தண்ணீரால் ஆராட்டி மக்களுக்கு அன்னம் கொடுக்க உறுதுணையாய் இருக்கின்ற ஜீவநதி தாமிரபரணி. தான் பாயும் வழிநெடுகிலும் நெல், கரும்பு, வாழை என வளப்படுத்திவிட்டே புன்னக்காயலில் கடலைத் தொடுகிறது. மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, இராம நதி, கயத்தாறு மற்றும் சித்ராநதி என்று தமிழ் இலக்கியம் போற்றும் சிற்றாறு ஆகியன மேற்கு மலைகளில் தோன்றி தாமிரபரணியுடன் இணையும் துணை ஆறுகள். இவைகளாலும் பொதிகையின் சூழலாலும் பருவ மழைகளாலும் ஆண்டு முழுவதும் வற்றாது ஓடும் வரத்தைப் பெற்றிருக்கிறாள் தாமிரபரணி.சித்ரா நதி, கயத்தாறு இரண்டும் சீவலப்பேரியில் தமிரபரணியில் கலக்கின்றன. இதனை முக்கூடல் என்கிறார்கள். முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் இந்நிலத்தைக் காதலித்து எழுதிய பாடல்கள் பல உண்டு. ”மீது யர்ந்திடுந் தெங்கிள நீரைமிடைந்த பூகஞ் சுமந்துதன் காயைசூத மொன்றிச் சுமக்கக் கொடுக்குஞ்சூதந் தன்கனி தூங்கும் பலாவின்ஓதும் அந்தப் பலாக்கனி வாழைஉளுக்க வேசுமந் தொண்குலை சாய்க்கும்மாது ளங்கொம்பு வாழையைத் தாங்கும்வளமை ஆசூர் வடகரை நாடே” தென்னையின் இளநீரை அருகிலுள்ள பாக்கு மரங்கள் தாங்கும், பாக்கின் குலைகளை அடுத்துள்ள மாமரங்கள் சுமக்கும், மாங்கனிகளை பக்கத்திலிருக்கும் பலா மரங்கள் பிடித்து நிறுத்தும், பலாக்கனிகளை கீழிருக்கும் வாழை தாங்கும், வாழையை அருகிருக்கும் மாதுளை தூக்கிப் பிடிக்கும். அவ்வளவு வளம் கொண்டது தாமிரபரணியின் வடகரையில் இருக்கும் என் அரசூர் நாடு என்கிறார் ஒரு பெண். ”பங்கயம் தலை நீட்டிக் குரம்பினில்பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்தடவி மெள்ளத் தொடும் அந்த மஞ்சள்அங்கு அசைந்திடும் காய்க்கதிர் செந்நெல்அளாவி நிற்கும் அச்செந்நெலும் அப்பால்செங்கரும்புக்குக் கைதரும் போல் வளர்சீவல மங்கை தென்கரை நாடே” நீர்நிலையில் பூத்துள்ள தாமரை வரப்பில் தலை வைத்து பச்சை இஞ்சியின் இலைகளைத் தொடும், இஞ்சியோ மஞ்சளின் கழுத்தைப் பாசத்துடன் தடவும், மஞ்சளோ வரப்புயர வளர்ந்திருக்கும் நெற்பயிருடன் கூடிக் குலாவி நிற்கும், நெல்லோ அப்பாலுல்ல செங்கரும்பிற்குக் கைகொடுத்து வளர்ந்து இருக்கும். அதே தாமிரபரணியின் தென்கரையில் இருக்கும் சீவல்மங்கை நாட்டின் வளமே ஆகச் சிறந்தது என்கிறார் இன்னொரு பெண். ஆக மொத்தத்தில் தாமிரபரணி பாயும் இடங்களெல்லாம் வளமான பூமியாக உள்ளது. விளைச்சலுக்கு விடிவு தரும் தண்ணீர், விளைவதற்குத் தேவையான மண்வளம், உழைக்கச் சலிக்காத மனித வளம் என நிறைந்துள்ளவை தாமிரபரணியின் இருகரைகளும். உண்ண உணவும், சிலாகிக்க உணர்வும், பேச இலக்கியங்களும் தந்த நதிகள் தமிழ் கூறும் தொல்லுலகில் பல இருக்கின்றன. காண்போம், காத்திருங்கள். கட்டுரையாளர்: சாதாரணன்