சுவடு வாசகர்களுக்கு வணக்கம்.
கடந்த ஜூன் மாதத்தில் சுவடு இணைய இதழ் புதுப் பாய்ச்சலைத் தொடங்கிய பிறகு, நீங்கள் காட்டும் பேராதரவிற்கு நன்றியுரைக்க வார்த்தைகளில்லை. இந்தச் சிறப்பு உங்களால் வந்தது.
வாரந்தோறும் இந்தப் பகுதியில், முந்தைய வாரத்தில் வாசகர்கள் மனத்தில் சுவடு பதித்திருக்கும் தட ங்களை, வாசகர்களிடமே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் வாசகர்கள் எண்ணங்களை அலசவும் அவர்களின் புதிய யோசனைகளை அறிந்து செயல்படுத்துவதற்காகவும் ஒரு வாசலைத திறந்து வைக்கிறோம்.
ஜூன் மாதத்திலிருந்தே சுதர்சனம்.E.S. அவர்களும் ம.செ. மோகன் ராஜா அவர்களும் கவிதைகளுக்குத் தங்கள் பின்னூட்டங்கள் மூலம் ஆதரவு தந்து வருகிறார்கள். அவர்களது கருத்துகள் நமது கவிஞர்களுக்கு உற்சாகம் தருபவை. கவிஞர்களைக் கொண்டாடும் அவர்களுக்கு எமது சிறப்பு வந்தனங்கள்.
சென்ற வாரம் (01.07.2023 முதல் 07.07.2023 வரை) வெளிவந்த படைப்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.
கவிதாயினி யாழினிஸ்ரீ எழுதிய பின்னப்பட்ட எண்ணங்கள் என்ற கவிதை சென்ற வாரத்தில் மிகப் பெரிய வாசகர் பரப்பைச் செனறடைந்திருக்கிறது.
இரண்டு தொடர்கள் கவர்ந்த மனங்கள்
சவிதா எழுதிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கமான வடிவம், முன்பிருந்தே வந்துகொண்டிருக்கும் தொடர். அதற்கே உரிய வாசக நண்பர்கள் இன்றும் அதைப் பின்தொடர்கிறார்கள்.
மற்றொன்று, சென்ற வாரம் தொடங்கப்பட்ட மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் தொடர். தோழர் சி.ஞனாபாரதியின் அலசலில் மகாபாரத இதிகாசத்தில் இடம்பெற்றுள்ள சில நிகழ்வுகள் மீதான கேள்விகளை முன்வைக்கும் இந்தத் தொடர், வாசகர் பரப்பில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் தொடர் குறித்து தசாமி அவர்கள் கருத்திடும்போது, ‘இதிகாசம் என்பது தொன்மையானது; காலத்தால் அழிவின்றித் தொடர்ந்து பேசப்படுவது என்ற வழக்கமான பார்வையிலிருந்து, சற்றல்ல; மிக ஆழமாகவே விலகி தனித்த கருத்தைப் பேசுகிறது. குறுக்குவழிக்காரர்களை நறுக்கு விசாரணை செய்கின்ற இப்பெருந்தொடரை வாசிப்பதை அதையொட்டிச் சிந்திப்பதை நினைக்க நினைக்க சிந்தை மகிழ்கிறது என்றும் சுவடு தளமான இங்கு இவ்விடம் நவ்வியொன்றின் துள்ளலோடு ஒரு நெடும் பரப்பைக் கடக்க இருப்பது, வெறும் வாசிப்பல்ல நறும் வாசிப்பு…’ என்று பாராட்டி இருப்பதை, சுவடு மகிழ்ச்சியுடன் இங்கு பகிர்ந்துகொள்கிறது.
விமர்சனங்கள் பெறும் முக்கியத்துவம்
கவிதை குறித்த மார்க்சின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும் என்ற எஸ்.சுதாகரின் விமர்சனக் கட்டுரையை நிறைய பேரை ஈர்த்துள்ளதோடு, பாராட்டையும் பெற்றுள்ளது.
ஆஷஸ் தொடரும் ஆஸ்திரேலியாவும் என்ற கிரிக்கெட் குறித்த கோவை பிரசன்னன் அவர்களுடைய விளையாட்டு விமர்சனம் சிறப்பான கவன ஈரப்பைப் பெற்றிருக்கிறது. ஆறுமுகம் என்ற அன்பர் அந்தத் தருணத்தை, ‘விதியும் விளையாடும்’ என்று நறுக்கென்று விமர்சித்திருந்தார்.
மாமன்னன் திரைப்படம் குறித்து மது ராஜேந்திரன் அவர்கள் எழுதிய விமர்சனத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு, அந்தப் படத்தின் மீதான வீச்சைக் காட்டுகிறது. முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களும் சகோதரி பானுரேகா அவர்களும் விமர்சனத்தைப் பாராட்டி வாழ்த்தியிருந்தார்கள்.
இந்த வாரத்தில் இரண்டு நூல் விமர்சனங்களும் வெளியாகியிருந்தன.
தோழர் அக்ரி பரத்வாஜ் எழுதியிருந்த மார்க்சின் இலக்கிய மனம் என்ற நூலறிமுகம் புத்தகப் பிரியர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. ‘நூல் அறிமுகம் மிகமிக அருமை. கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே‘ என்று ம. செ. மோகன் ராஜா அவர்கள் பாராட்டியிருந்தார். ‘அழகான, சுருக்கமான, தெளிவான விமர்சனம்’ – இது அனிதா ஸ்ரீகாந்த் அவர்களின் பாராட்டு.
தோழர் கோமதிசங்கர் அவர்கள் எழுதிய தேரி என்ற நாவலுக்கான விமர்சனமும் வாசிப்பாளர்களிடம் சிறப்பான கவனம் பெற்றுள்ளது. ‘வாசிக்கத் தூண்டும் விமர்சனம்’ என்று ரேணு சதீஷ் மற்றும் ம. செம. மோகன் ராஜா ஆகியோரும் ‘அருமையான மதிப்புரை’ என்று பானுரேகா மற்றும் சுமி ஹரி ஆகியோரும் பாராட்டியிருந்தார்கள்.
இந்த வாரத்தில் முத்து ஜெயா அவர்கள் எழுதிய வேர் சிறுகதை சுவடு இதழை அலங்கரித்தது. அந்தக் கதையை ஏராளமான வாசகர்கள் வாசித்திருப்பதானது மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த வாரம் இடம்பெற்ற முகப்புக் கட்டுரை, தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி மாபெரும் கவனம் பெற்றுள்ளது குறித்து சுவடு பெருமகிழ்ச்சி கொள்கிறது.
அது மட்டுமல்லாது, ஜூன் மாதத்தில், கலைஞர் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி சுவடு மன்சூர் எழுத்தில் வெளியான கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்? கட்டுரை இந்த மாதத்திலும் புதிய வாசகர்களால் வாசிக்கப்படுவதும் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய செய்தியாகும். மேலும்தோழர் கோமதி சங்கர் அவர்களின், 1946 – இறுதிச் சுதந்திரப் போர் நூல் குறித்த விமர்சனம், வன்மம் களைந்த மெய் கவிதை, தேவி லிங்கம் எழுதியுள்ள நிர்பந்தங்கள் சிறுகதை, ஈகோலை எழுத்தில் துள்ளிக் குதிக்கும் ஜீன்கள் அறிவியல் கட்டுரை, கோவை பிரசன்னாவின் வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள் முகப்புக் கட்டுரை, உமா மகேஸ்வரி அவர்களின் ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு, சேதுவின் பாதி ஆப்பிள் விளைவு மற்றும் கோவை பிரசன்னா எழுதிய சிறு பத்திரிகைகள் – அறிந்ததும் அறியாததும் ஆகிய கட்டுரைகள், பொற்கொடியின் யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா? மற்றும் எஸ்.சுதாகரின் மெழுகாய் உருகும் மனங்கள் ஆகிய நேர்காணல்கள் உட்பட, பல்வேறு வகைமையிலான படைப்புகளும் சுவடு வாசகர்களின் மாபெரும் ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி அவர்கள் எழுத்தில் சென்ற மாதம் வெளியான, அரசுப்பள்ளிகளில் நிலவும் கல்விச் சிக்கல்களைக் குறித்துப் பேசும் கட்டுரை, ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ கட்டுரை 20000-க்கும் அதிகமானவர்களால் வாசிக்கப்பட்டிருப்பது சுவடு இதழின் பயணத்தில் ஒரு மைல் கல் என்று மகிழ்கிறோம்.
வாசகர்களும் படைப்பாளிகளும் காட்டி வரும் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி பாராட்டுகிறோம். தரமான படைப்புகளை வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபோடும் இந்தப் பயணத்தை இன்னும் உங்கள் அனைவரின் ஆதரவோடு சிறப்பான அனுபவமாக்குவோம் என்ற உறுதியை உங்களுக்கு வழங்குகிறோம். தொடர்ந்து சுவடுக்கு உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறோம்.
- சுவடு ஆசிரியர் குழு
கோலா குடும்பம்ம்
July 11, 2023அடடா மிகச்சிறப்பு..
Porkodi
July 11, 2023Congrats ❤️❤️❤️