பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச் செல்வதையே இலக்காகக் கொண்ட, காலத்தால் உருவாக்கப்பட்டவர்தான் தோழர் ஜீவா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தோழர் ஜீவானந்தம்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907 ஆகஸ்ட் 21ஆம் தேதி பிறந்தார் ஜீவா. ஜீவாவின் பெற்றோர் பட்டம் பிள்ளையும் உமையம்மையும் அன்றைய ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்கள். பொருளாதார வசதியில் குறைந்திருந்தாலும் பட்டம் பிள்ளையின் பொதுப்பணித்துறைக் காவலர் பணி அவரை அரசு விசுவாசியாக வாழ நிர்ப்பந்தித்திருந்தது.

தென்பாண்டிச் சீமையில் நிரம்பி வந்த வழக்கத்தின்படி நான்காவதாகப் பிறந்த இந்தக் குழந்தைக்கு மூக்காண்டி என்ற பெயரைச் சூட்டினர். இது அங்கு நிலவி வந்த ஒரு பழக்கம். குலதெய்வமான சொரிமுத்தையன் பெயரைச் சூட்டும் வகையில் சொரிமுத்து என்ற பெயரையும் ஜீவாவிற்கு இட்டனர். பங்கிம் சட்டர்ஜியின் நாவலான ஆனந்த மடத்தில் வரும் ஜீவானந்தர் என்ற பெயரின் தாக்கத்தாலும் விவேகானந்தரின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் சிராவயல் காந்தி ஆசிரமத்தை அமைத்து நடத்தத் தொடங்கியபோதுதான் தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

ஐந்தாவது படிவத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே 80 வெண்பாக்களை இயற்றியவர். இளமைப் பருவத்திலேயே மகாத்மா காந்தி வாசகசாலை அமைத்தார்; நாடகக் குழுக்களை உருவாக்கினார்; கிராமங்களில் மாணவர் அமைப்புகளை உருவாக்கி, கிராமச் சேவைகளில் நிவாரப் பணிகளில் ஈடுபட்டார்.

ஐந்தாம் படிவம் படித்துக்கொண்டிருந்தபோது சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாவலையும் ஞான பாஸ்கரன் என்ற நாடகத்தையும் எழுதினார். ஞான பாஸ்கரன் நாடகத்தை அவரே தயாரித்து அரங்கேற்றி, அதில் நடிக்கவும் செய்தார்.

எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பிற்குக் கோட்டாறு அரசுப் பள்ளியில் சேருகிறபோது வட கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுத்தார்.

கவிஞர் ஜீவா

ஒருபக்கம் தேச விடுதலை, மறுபக்கம் சுயமரியாதை, மூன்றாவது பக்கம் தொழிலாளி வர்க்க விடுதலை என்று முப்பரிமாணம் கொண்ட ஜீவா, சின்னஞ்சிறு வயதிலேயே தேச விடுதலைப் பாடல்களை எழுதியவர் காரைக்குடி வட்டார வாழ்வில் ஒரு பெண்விடுதலைக் கவிஞராகவும் தலித் விடுதலைக் கவிஞராகவும் புகழ்பெற்றவர்.

மார்க்சியத்தோடும் தொழிலாளி வர்க்கத்தோடும் கொண்ட தொடர்பால் அவரது பாடல்களில் சோசலிசம், ஜனநாயகம், தொழிலாளர் விடுதலை ஆகியவை பாடுபொருளாக அமைந்தன. சிறந்த ஜெர்மனி ஆசிரியரான ரெணி புலாப் மில்லர் எழுதிய போல்ஸ்விசம் அகமும் முகமும் என்ற நூலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து, அந்தப் பாடலைத் தழுவி 1934இல் கோடி கால் பூதமடா என்ற பாடலை எழுதினார்.

ஏங்காதெழுந்திருடா என்ற தலைப்பில் அவர் எழுதிய வீரச் சுவை மிக்க பாட்டு, பொதுமையாகக் கடமையை வற்புறுத்தும் பாட்டாகும். செயலில் குதிக்கக் கொதிப்பேறி ஓடும் குருதியில் தெம்பு பாய்ச்சும் பாட்டாக அது இன்றும் விளங்குகிறது.

1938இல் பாசிசம் என்ற தலைப்பில், பாசிச எதிர்ப்பை முன்வைத்து,  

பாசிசமே பாசிசமே
பாதக ஏகாதிபத்தியத் தீதின் அகோரத்தன்மை
நீசத்தனத்தின் எல்லை நிட்டூர ரூபம்
நெறியில் சர்வாதிகார வெறி மகாபாபம்

என்ற பாடலை எழுதினார்.

பட்டிமன்றப் பேச்சாளர் ஜீவா

கம்பன் விழாவின் ஒருபகுதியாக நடந்த பட்டிமன்றத்தில், கூற்றினும் கொடியவள் கூனியா? சூர்ப்பநகையா? கைகேயியா? என்ற தலைப்பில் ம.பொ.சி, எஸ்.ராமகிருஷ்ணன், தோழர் ஜீவா ஆகியோர் பேசினர்.

கைகேயியே என்ற தலைப்பில் ஜீவா பேச எழுந்து, 20 நிமிடங்கள் முன்னுரையாகப் பேசினார். பின்பு, ‘கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறாள். ஒன்று, ராமன் காட்டுக்குப் போக வேண்டும்; இரண்டு, பரதன் நாட்டை ஆள வேண்டும். இவற்றைக் கேட்டதும் தசரதன் மயங்கி விழுந்துவிடுகிறான். இதைக் கண்ட கைகேயி, ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள். ராமன் வருகிறான். தசரதன் மயங்கிக் கிடக்கிற அந்த நிலையிலேயே ராமனிடம் கைகேயி, ‘நீ காட்டுக்குப் போக வேண்டும்; பரதன் நாட்டை ஆள வேண்டும். இது மன்னனின் கட்டளை’ என்கிறாள். ராமன் உடனே காட்டுக்குப் புறப்படுகிறான். மயக்கம் தெளிந்து தசரதன், ‘ராமன் எங்கே?’ என்று கேட்க, கைகேயியோ அவன் காட்டுக்குப் போய்விட்டான் என்கிறாள். அதைக் கேட்டதும் வருத்தம் தாளாமல் தசரதன் செத்து விடுகிறான். கணவன் இறந்ததைப் பார்த்த கைகேயி தூங்கப் போகிறாள். ராமன் காட்டுக்குப் போயாச்சு; தன்மகன் நாடாள வந்து விடுவான்; தன் கணவனும் இறந்தாச்சு என்று நிம்மதியில் தூங்குகிறாள் என்று கூறிவிட்டு, ஜீவா கூட்டத்தைப் பார்த்து, கூற்றினும் கொடியவள் யார்?  நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்’ என்று கூற, கூட்டமே கொந்தளித்து ஆரவாரித்தது.

22ஆவது கம்பன் விழாவின் இறுதி நாளில், இதுவரை வழக்கில் இல்லாத வகையில் தனது பேச்சால் கம்பன் அடிபொடி ச. கணேசனின் மனத்தைப் பூரிப்படையச் செய்கிறார். ச.கணேசன் தனது நன்றியுரையில், இதுவரை கம்பன் விழா நடத்திய பயன் முழுவதையும் இன்றுதான் பெற்றேன் என்று கூறி முடிக்கிறார். இவ்வாறுதான், ஜீவா என்ற மார்க்சியவாதி கம்பனைப் பார்த்தார்.

பாரதியைப்பற்றி சரியான முறையில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜீவாதான். ஒருமுறை பாரதியைப்பற்றிப் பேசிவிட்டு இறங்கியபோது, பாரதியின் மகள் சகுந்தலா பாரதி ஓடிவந்து, அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு நா தழுதழுக்க, ‘என் தந்தையின் பெருமையை இன்றுதான் நிஜமாக உணர்கிறேன்’ என்றாராம். அதேபோன்று, தாகூர் விழாவில் அவர் பேசி முடித்ததும், தாகூரின் பேத்தி ஓடிவந்து ஜீவாவைப் பாராட்டி, ‘என் தாத்தாவின் கவிதைகள் எவ்வளவு ஆழமானவை என்பதை இன்றுதான் உணர்ந்தேன்’ என்றாராம்.

இவையெல்லாம் ஜீவா ஒரு மாபெரும் கொள்கையாளர்; எதார்த்த இலக்கிய நெறியைத் தமிழ் மக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தியவர் என்பதைக் காட்டுகின்றன.

போராளி ஜீவா

மேடையில் ஓர் வேங்கை பாயுமே
கைகளை விண்ணோக்கி வீசி வருமே
வீறு கொண்டு ஓர் யானை போரில் கிளம்புமே
வெஞ்சேனை முறுக்கேறுமே
கோடையின் இடி கொண்டு கொட்டுமே
வார்த்தையில் கொஞ்சு தமிழ் விளையாடுமே

என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையோடு மல்லுக்கட்டிய தோழர் ப. ஜீவானந்தம், நாடக உலக தேசபக்தரான விஸ்வநாததாஸ் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவருக்கு சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாடகத்தை எழுதித் தந்தவர். ஜீவா பத்தாம் வகுப்பு படிக்கும்போது காந்திஜியைப் பற்றியும் கை ராட்டினத்தைப் பற்றியும் எழுதியபாடல், அந்த நாடகத்தில் முதல் பாடலாக இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியன ஜீவாவை தேசிய இயக்கத்தின்பால் ஈர்த்தன. கதர் ஆடை அணியும் வழக்கத்தை அவர் கடைசிவரை கைவிடவில்லை. அவருடைய அன்னை இறந்தபோதுகூட கதர் ஆடை கிடைக்காததால் கொள்ளி வைக்கவே மறுத்துவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திய பரத்வாஜர் ஆசிரமத்தில் ஏற்பட்ட சாதியப் பாகுபாடு, ஜீவாவைப் பொதுவுடைமையை நோக்கி நகரச் செய்தது என்பதில் இருவேறு கருத்து கிடையாது. சிராவயல் ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் பற்றிக் காந்தியிடம் விவாதித்தார். காந்திஜியின் வர்ணாசிரமக் கருத்துக்கள் முற்போக்கானவை அல்ல என்பதை உணர்ந்தார்.

உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகக் கொடுமைகள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகச் சீர்திருத்தம் மட்டும் போதாது;  சமூகப் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும்; அதைச் சமதர்ம அஸ்திவாரத்தில் கட்ட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். காந்தியத்திலிருந்து விலகி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து, வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு, தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, அவரைச் சங்கிலியில் கட்டி அடித்து இழுத்து வந்தனர் அன்றைய ஆங்கிலேயக் காவலர்கள். வர்ண பேதங்களுக்கு எதிராக மட்டுமல்லாது வர்க்க பேதங்களுக்கு எதிராகவும் போராடவேண்டும் என்று பெரியாரிடம் வாதிட்டார்.

08.01.1932இல் கோட்டையூரில் தடை உத்தரவை மீறிப் பேசிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறை புகுந்தார். சிறை வாழ்க்கையின்போது பகத்சிங்கின் தோழர்களான பூதேஸ்வர் தத், குந்தர் லால், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி போன்றோரைச் சந்தித்ததன் மூலம், 1932இல் ஒரு காங்கிரஸ்காரராகச் சிறை புகுந்து, அதே ஆண்டு நவம்பரில் ஒரு கம்யூனிஸ்டாக சிறையிலிருந்து வெளிவந்தார் ஜீவா. பின்னர் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் சென்னை மாகாணச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. அதன்பிறகு 1936இல் தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவா உறுப்பினராக இருந்தார்.

தமிழ்ப் பற்றாளர் ஜீவா

மறைமலை அடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, தனித்தமிழ்ப் பற்றாளராக, ஜீவா என்ற தன் பெயரை உயிர் அன்பன் என்று மாற்றிக்கொண்ட அவர், மிகப்பெரும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டவர். ஜீவாவின் நடவடிக்கைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு, வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு, ஜீவா தமிழ்நாட்டில் நடமாடத் தடை விதித்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், நேரு தலைமையிலான அரசு 1948 முதல் 1951 வரை கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த காலத்தில் சிறை சென்று திரும்பினார்.

1952இல் அன்றைய வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்றம் சென்றார். திமுக சட்டமன்றத்துக்குள் நுழையும் முன்பாகவே, தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டுமென்று சட்டமன்றத்தில் பேசியவர் தோழர் ஜீவானந்தம். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். கல்வி, நீதிமன்றம், நிர்வாகம் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று 1952 செப்டம்பர் 29இல் சட்டமன்றத்தில் முழங்கினார்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த அவர், மேற்குத் தாம்பரத்தில் ஒரு சிறிய குடிசையிலேயே கடைசிவரை வாழ்ந்தார். இதைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் காமராஜர், அவருக்குத் தனியே வீடு ஒதுக்க முன்வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்ட மாமனிதர் அவர். 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் உடல்நலக் குறைவால் அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது இறுதிச் சடங்கில் பாவலர் வரதராஜன் கண்ணீர் மல்கப் பாடிய வரிகள் இவை.

சிங்கமென முரசறைந்த குரலும் எங்கே?
செந்தமிழை ஆய்ந்து சொன்ன உருவம் எங்கே?
செங்கொடி ஈன்றெடுத்த ஜீவா எங்கே?
இனி எங்கள் குறை ஈடு செய்ய யார்தான் இங்கே?

  • அக்ரி பரத்வாஜ்

Comments (5)


Surya

சிறப்பான கட்டுரை.

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 21, 2023

நன்றிகள் – சுவடு ஆசிரியர் குழு

Govindaraj R
Govindaraj R
August 21, 2023

மிகச் சரியான நினைவுப்‌ பதிவு. இன்றைய தேவை.இன்றியமையாத் தேவை. வாழ்த்துக்கள் தோழர்.

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 21, 2023

நன்றிகள் – சுவடு ஆசிரியர் குழு

ம. செ. மோகன் ராஜா
ம. செ. மோகன் ராஜா
August 21, 2023

அருமையான கட்டுரை. ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *