பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச் செல்வதையே இலக்காகக் கொண்ட, காலத்தால் உருவாக்கப்பட்டவர்தான் தோழர் ஜீவா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தோழர் ஜீவானந்தம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907 ஆகஸ்ட் 21ஆம் தேதி பிறந்தார் ஜீவா. ஜீவாவின் பெற்றோர் பட்டம் பிள்ளையும் உமையம்மையும் அன்றைய ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்கள். பொருளாதார வசதியில் குறைந்திருந்தாலும் பட்டம் பிள்ளையின் பொதுப்பணித்துறைக் காவலர் பணி அவரை அரசு விசுவாசியாக வாழ நிர்ப்பந்தித்திருந்தது. தென்பாண்டிச் சீமையில் நிரம்பி வந்த வழக்கத்தின்படி நான்காவதாகப் பிறந்த இந்தக் குழந்தைக்கு மூக்காண்டி என்ற பெயரைச் சூட்டினர். இது அங்கு நிலவி வந்த ஒரு பழக்கம். குலதெய்வமான சொரிமுத்தையன் பெயரைச் சூட்டும் வகையில் சொரிமுத்து என்ற பெயரையும் ஜீவாவிற்கு இட்டனர். பங்கிம் சட்டர்ஜியின் நாவலான ஆனந்த மடத்தில் வரும் ஜீவானந்தர் என்ற பெயரின் தாக்கத்தாலும் விவேகானந்தரின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் சிராவயல் காந்தி ஆசிரமத்தை அமைத்து நடத்தத் தொடங்கியபோதுதான் தன் பெயரை மாற்றிக்கொண்டார். ஐந்தாவது படிவத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே 80 வெண்பாக்களை இயற்றியவர். இளமைப் பருவத்திலேயே மகாத்மா காந்தி வாசகசாலை அமைத்தார்; நாடகக் குழுக்களை உருவாக்கினார்; கிராமங்களில் மாணவர் அமைப்புகளை உருவாக்கி, கிராமச் சேவைகளில் நிவாரப் பணிகளில் ஈடுபட்டார். ஐந்தாம் படிவம் படித்துக்கொண்டிருந்தபோது சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாவலையும் ஞான பாஸ்கரன் என்ற நாடகத்தையும் எழுதினார். ஞான பாஸ்கரன் நாடகத்தை அவரே தயாரித்து அரங்கேற்றி, அதில் நடிக்கவும் செய்தார். எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பிற்குக் கோட்டாறு அரசுப் பள்ளியில் சேருகிறபோது வட கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுத்தார். கவிஞர் ஜீவா ஒருபக்கம் தேச விடுதலை, மறுபக்கம் சுயமரியாதை, மூன்றாவது பக்கம் தொழிலாளி வர்க்க விடுதலை என்று முப்பரிமாணம் கொண்ட ஜீவா, சின்னஞ்சிறு வயதிலேயே தேச விடுதலைப் பாடல்களை எழுதியவர் காரைக்குடி வட்டார வாழ்வில் ஒரு பெண்விடுதலைக் கவிஞராகவும் தலித் விடுதலைக் கவிஞராகவும் புகழ்பெற்றவர். மார்க்சியத்தோடும் தொழிலாளி வர்க்கத்தோடும் கொண்ட தொடர்பால் அவரது பாடல்களில் சோசலிசம், ஜனநாயகம், தொழிலாளர் விடுதலை ஆகியவை பாடுபொருளாக அமைந்தன. சிறந்த ஜெர்மனி ஆசிரியரான ரெணி புலாப் மில்லர் எழுதிய போல்ஸ்விசம் அகமும் முகமும் என்ற நூலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து, அந்தப் பாடலைத் தழுவி 1934இல் கோடி கால் பூதமடா என்ற பாடலை எழுதினார். ஏங்காதெழுந்திருடா என்ற தலைப்பில் அவர் எழுதிய வீரச் சுவை மிக்க பாட்டு, பொதுமையாகக் கடமையை வற்புறுத்தும் பாட்டாகும். செயலில் குதிக்கக் கொதிப்பேறி ஓடும் குருதியில் தெம்பு பாய்ச்சும் பாட்டாக அது இன்றும் விளங்குகிறது. 1938இல் பாசிசம் என்ற தலைப்பில், பாசிச எதிர்ப்பை முன்வைத்து,   பாசிசமே பாசிசமேபாதக ஏகாதிபத்தியத் தீதின் அகோரத்தன்மைநீசத்தனத்தின் எல்லை நிட்டூர ரூபம்நெறியில் சர்வாதிகார வெறி மகாபாபம் என்ற பாடலை எழுதினார். பட்டிமன்றப் பேச்சாளர் ஜீவா கம்பன் விழாவின் ஒருபகுதியாக நடந்த பட்டிமன்றத்தில், கூற்றினும் கொடியவள் கூனியா? சூர்ப்பநகையா? கைகேயியா? என்ற தலைப்பில் ம.பொ.சி, எஸ்.ராமகிருஷ்ணன், தோழர் ஜீவா ஆகியோர் பேசினர். கைகேயியே என்ற தலைப்பில் ஜீவா பேச எழுந்து, 20 நிமிடங்கள் முன்னுரையாகப் பேசினார். பின்பு, ‘கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறாள். ஒன்று, ராமன் காட்டுக்குப் போக வேண்டும்; இரண்டு, பரதன் நாட்டை ஆள வேண்டும். இவற்றைக் கேட்டதும் தசரதன் மயங்கி விழுந்துவிடுகிறான். இதைக் கண்ட கைகேயி, ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள். ராமன் வருகிறான். தசரதன் மயங்கிக் கிடக்கிற அந்த நிலையிலேயே ராமனிடம் கைகேயி, ‘நீ காட்டுக்குப் போக வேண்டும்; பரதன் நாட்டை ஆள வேண்டும். இது மன்னனின் கட்டளை’ என்கிறாள். ராமன் உடனே காட்டுக்குப் புறப்படுகிறான். மயக்கம் தெளிந்து தசரதன், ‘ராமன் எங்கே?’ என்று கேட்க, கைகேயியோ அவன் காட்டுக்குப் போய்விட்டான் என்கிறாள். அதைக் கேட்டதும் வருத்தம் தாளாமல் தசரதன் செத்து விடுகிறான். கணவன் இறந்ததைப் பார்த்த கைகேயி தூங்கப் போகிறாள். ராமன் காட்டுக்குப் போயாச்சு; தன்மகன் நாடாள வந்து விடுவான்; தன் கணவனும் இறந்தாச்சு என்று நிம்மதியில் தூங்குகிறாள் என்று கூறிவிட்டு, ஜீவா கூட்டத்தைப் பார்த்து, கூற்றினும் கொடியவள் யார்?  நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்’ என்று கூற, கூட்டமே கொந்தளித்து ஆரவாரித்தது. 22ஆவது கம்பன் விழாவின் இறுதி நாளில், இதுவரை வழக்கில் இல்லாத வகையில் தனது பேச்சால் கம்பன் அடிபொடி ச. கணேசனின் மனத்தைப் பூரிப்படையச் செய்கிறார். ச.கணேசன் தனது நன்றியுரையில், இதுவரை கம்பன் விழா நடத்திய பயன் முழுவதையும் இன்றுதான் பெற்றேன் என்று கூறி முடிக்கிறார். இவ்வாறுதான், ஜீவா என்ற மார்க்சியவாதி கம்பனைப் பார்த்தார். பாரதியைப்பற்றி சரியான முறையில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜீவாதான். ஒருமுறை பாரதியைப்பற்றிப் பேசிவிட்டு இறங்கியபோது, பாரதியின் மகள் சகுந்தலா பாரதி ஓடிவந்து, அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு நா தழுதழுக்க, ‘என் தந்தையின் பெருமையை இன்றுதான் நிஜமாக உணர்கிறேன்’ என்றாராம். அதேபோன்று, தாகூர் விழாவில் அவர் பேசி முடித்ததும், தாகூரின் பேத்தி ஓடிவந்து ஜீவாவைப் பாராட்டி, ‘என் தாத்தாவின் கவிதைகள் எவ்வளவு ஆழமானவை என்பதை இன்றுதான் உணர்ந்தேன்’ என்றாராம். இவையெல்லாம் ஜீவா ஒரு மாபெரும் கொள்கையாளர்; எதார்த்த இலக்கிய நெறியைத் தமிழ் மக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தியவர் என்பதைக் காட்டுகின்றன. போராளி ஜீவா மேடையில் ஓர் வேங்கை பாயுமேகைகளை விண்ணோக்கி வீசி வருமேவீறு கொண்டு ஓர் யானை போரில் கிளம்புமேவெஞ்சேனை முறுக்கேறுமேகோடையின் இடி கொண்டு கொட்டுமேவார்த்தையில் கொஞ்சு தமிழ் விளையாடுமே என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையோடு மல்லுக்கட்டிய தோழர் ப. ஜீவானந்தம், நாடக உலக தேசபக்தரான விஸ்வநாததாஸ் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவருக்கு சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாடகத்தை எழுதித் தந்தவர். ஜீவா பத்தாம் வகுப்பு படிக்கும்போது காந்திஜியைப் பற்றியும் கை ராட்டினத்தைப் பற்றியும் எழுதியபாடல், அந்த நாடகத்தில் முதல் பாடலாக இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியன ஜீவாவை தேசிய இயக்கத்தின்பால் ஈர்த்தன. கதர் ஆடை அணியும் வழக்கத்தை அவர் கடைசிவரை கைவிடவில்லை. அவருடைய அன்னை இறந்தபோதுகூட கதர் ஆடை கிடைக்காததால் கொள்ளி வைக்கவே மறுத்துவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திய பரத்வாஜர் ஆசிரமத்தில் ஏற்பட்ட சாதியப் பாகுபாடு, ஜீவாவைப் பொதுவுடைமையை நோக்கி நகரச் செய்தது என்பதில் இருவேறு கருத்து கிடையாது. சிராவயல் ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் பற்றிக் காந்தியிடம் விவாதித்தார். காந்திஜியின் வர்ணாசிரமக் கருத்துக்கள் முற்போக்கானவை அல்ல என்பதை உணர்ந்தார். உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகக் கொடுமைகள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகச் சீர்திருத்தம் மட்டும் போதாது;  சமூகப் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும்; அதைச் சமதர்ம அஸ்திவாரத்தில் கட்ட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். காந்தியத்திலிருந்து விலகி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து, வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு, தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, அவரைச் சங்கிலியில் கட்டி அடித்து இழுத்து வந்தனர் அன்றைய ஆங்கிலேயக் காவலர்கள். வர்ண பேதங்களுக்கு எதிராக மட்டுமல்லாது வர்க்க பேதங்களுக்கு எதிராகவும் போராடவேண்டும் என்று பெரியாரிடம் வாதிட்டார். 08.01.1932இல் கோட்டையூரில் தடை உத்தரவை மீறிப் பேசிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறை புகுந்தார். சிறை வாழ்க்கையின்போது பகத்சிங்கின் தோழர்களான பூதேஸ்வர் தத், குந்தர் லால், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி போன்றோரைச் சந்தித்ததன் மூலம், 1932இல் ஒரு காங்கிரஸ்காரராகச் சிறை புகுந்து, அதே ஆண்டு நவம்பரில் ஒரு கம்யூனிஸ்டாக சிறையிலிருந்து வெளிவந்தார் ஜீவா. பின்னர் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் சென்னை மாகாணச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. அதன்பிறகு 1936இல் தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவா உறுப்பினராக இருந்தார். தமிழ்ப் பற்றாளர் ஜீவா மறைமலை அடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, தனித்தமிழ்ப் பற்றாளராக, ஜீவா என்ற தன் பெயரை உயிர் அன்பன் என்று மாற்றிக்கொண்ட அவர், மிகப்பெரும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டவர். ஜீவாவின் நடவடிக்கைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு, வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு, ஜீவா தமிழ்நாட்டில் நடமாடத் தடை விதித்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், நேரு தலைமையிலான அரசு 1948 முதல் 1951 வரை கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த காலத்தில் சிறை சென்று திரும்பினார். 1952இல் அன்றைய வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்றம் சென்றார். திமுக சட்டமன்றத்துக்குள் நுழையும் முன்பாகவே, தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டுமென்று சட்டமன்றத்தில் பேசியவர் தோழர் ஜீவானந்தம். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். கல்வி, நீதிமன்றம், நிர்வாகம் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று 1952 செப்டம்பர் 29இல் சட்டமன்றத்தில் முழங்கினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த அவர், மேற்குத் தாம்பரத்தில் ஒரு சிறிய குடிசையிலேயே கடைசிவரை வாழ்ந்தார். இதைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் காமராஜர், அவருக்குத் தனியே வீடு ஒதுக்க முன்வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்ட மாமனிதர் அவர். 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் உடல்நலக் குறைவால் அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது இறுதிச் சடங்கில் பாவலர் வரதராஜன் கண்ணீர் மல்கப் பாடிய வரிகள் இவை. சிங்கமென முரசறைந்த குரலும் எங்கே?செந்தமிழை ஆய்ந்து சொன்ன உருவம் எங்கே?செங்கொடி ஈன்றெடுத்த ஜீவா எங்கே?இனி எங்கள் குறை ஈடு செய்ய யார்தான் இங்கே?

தோழர் 100

தோழர் 100

முப்பெருங்கால முத்திரையாகத் திகழும் தோழர் தோழர் என். சங்கரய்யா நூறாண்டு சிறப்புக் கட்டுரை இந்திய நாட்டின் விடுதலைக்கான முன்னாளைய இயக்கம், விடுதலைக்குப் பிறகு சமத்துவ மாற்றங்களுக்கான பின்னாளைய இயக்கம், அதற்காக உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான இந்நாளைய போராட்ட இயக்கம் – இம்மூன்று போராட்ட இயக்கக் காலத்திலும் களம் கண்டு தடம் பதித்தவர், முப்பெருங்கால முத்திரையாகத் திகழ்பவர் தோழர் என். சங்கரய்யா. நூறு வயதைத் தொடும் சங்கரய்யா இன்று நம்மோடு வாழ்கிறார் என்பதை விட, அவரோடு நாம் வாழ்கிறோம் என்று நினைக்கையில் உள்ளம் சிலிர்க்கிறது. இயக்கமே வாழ்க்கையெனக் கொண்டவர் சங்கரய்யா என்பதற்கு இதோவொரு சான்று: மதுரையில் நான் ‘தீக்கதிர்’ அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, ஒரு தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்த சங்கரய்யாவிடம் சிறப்பு நேர்காணல் எடுக்க விரும்பி என்னைத் தொடர்புகொண்டார் ‘ஜூனியர் விகடன்’ செய்தியாளர். அவரை அழைத்துச் சென்று சங்கரய்யாவிடம் அறிமுகப்படுத்தினேன். நமக்கும் புதிய தகவல்கள் கிடைக்கும் என்று நேர்காணல் முடியும் வரையில் நானும் உடனிருந்தேன். அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பிறகு, “உங்களுடைய சொந்த வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார் நண்பர். “இவ்வளவு நேரம் அதைத்தானே சொல்லிக்கொண்டிருந்தேன்,” என்றார் சங்கரய்யா! “இல்லை, உங்களின் பள்ளி, கல்லூரிப் படிப்பு பற்றிச் சொல்லுங்கள்,” என்றார் நண்பர். “ஓ, அதைக் கேட்கிறீர்களா,” எனக் கேட்டவாறு தனது படிப்பு பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தவர் அப்படியே அன்றைய விடுதலைப் போராட்டம், அதிலே மாணவர்கள் பங்கேற்பு என்று இறங்கிவிட்டார். அவர் பத்திரிகையாளர் விடாமல் “உங்களின் குடும்ப வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்,” என்றார். “அதுவா,” என்று தொடங்கிய சங்கரய்யா, திருமணத்திற்குப் பிறகு வந்த ஒரு மக்கள் போராட்டம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார். நண்பருக்கு ஏமாற்றமே என்றாலும், “இயக்க வாழ்க்கையையும் சொந்த வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு தலைவரைச் சந்தித்தது பெருமிதமாக இருக்கிறது,” என்று பின்னர் என்னிடம் நெகிழ்ச்சியோடு கூறினார். மக்களின் வழக்கறிஞராக மதுரை அமெரிக்கன் கல்லூரியில், ஒரு வழக்கறிஞராக உருவாக வேண்டும் என்ற விருப்பத்தோடு இவரைச் சேர்த்துவிட்டார் தந்தை. மூன்றாமாண்டு இறுதித்தேர்வுக்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில், நாட்டின் விடுதலைக்காகவும், போராளிகள் மீதான ஒடுக்குறைகளைக் கண்டித்தும் பெரும் அலையாக எழுந்த போராட்டத்தில், இவர் கலந்துகொண்டார். தான் கலந்துகொண்டதோடு சக மாணவர்களையும் கலந்துகொள்ளச் செய்தார். சகித்துக்கொள்ளுமா ஆங்கிலேய அரசு? சங்கரய்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. பதினெட்டு மாதங்கள் கழித்துதான் சிறையிலிருந்து வெளியே வந்தார். வழக்கறிஞராக முடியாவிட்டால் என்ன? மக்களுக்காக வாதாடுகிறவராகப் பரிணமித்தார். நாட்டின் அரசியல் விடுதலை சமுதாய ஏற்றத்தாழ்வுகளிலிருந்தும் விடுதலை பெறுவதோடும் இணைந்தால்தான் முழுமையடையும் என்ற தெளிவோடு, அதற்கான பாதையாக  மார்க்சியத் தத்துவ வெளிச்சத்தில் நடைபோட்டு, ஒரு கம்யூனிஸ்ட்டாகக் களமாடத் தொடங்கினார். மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளின் தலைமைப்பொறுப்புகளில் செயல்வட்டவரான அவர், கட்சித் தலைவராக, அனைத்துத் துறை சார்ந்தவர்களின் பிரச்சினைகளையும் அறிந்து, அவர்களுக்குத் தீர்வுக்கான வழிகளைச் சொல்கிறவராக விளங்கினார். பல்வேறு துறை சார்ந்த நிலைமைகளைத் தெரிந்துகொள்வதற்கான ஆவணங்களையும் உள்வாங்கிப் படிப்பார். கள நிலைமைகளுக்கு ஏற்ப சரியாக வழிகாட்டுவார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என தொழில் சார்ந்தோர் மட்டுமல்ல, கலை இலக்கியவாதிகள் கூட முக்கியமான திருப்பங்கள் நேர்கிறபோது அவரோடு அமர்ந்து பேசி வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள். உள்ளடக்கமா, உருவமா என்ற இந்தக் களத்தினருக்கே உரிய விவாதம் முன்னுக்குவந்தபோது, மார்க்சியப் பார்வையோடு இரண்டின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்ததை, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். படித்துத் தெரிந்துகொண்ட புரிதல்கலிருந்து மட்டுமல்லாமல், போராட்ட அனுபவப் பள்ளியிலிருந்து கற்றறிந்த தெளிதல்களிலிருந்தும் இவ்வாறு வழிகாட்டும் ஆசானாய்ப் பாடம் நடத்தினார். அதுதான் பரிசு! நாடு சுதந்திரமடைந்த பிறகு, சமத்துவ லட்சியங்களோடு போராடிய கம்யூனிஸ்ட்டுகள் மீது ஆட்சியாளர்களால் ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன. மறுபடி சிறைவாசம். ஆம், ஆங்கிலேயர் ஆட்சியில் நான்காண்டு, காங்கிரஸ் ஆட்சியில் நான்காண்டு என்று எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் சங்கரய்யா. முந்தைய ஆட்சியின் சிறைவாசம் எப்போது முடிந்தது என்றால், 1947 ஆகஸ்ட் 14 அன்று! ஆம், தேச விடுதலைக்கு ஒரு நாள் முன்பு! விடுதலைப் போரின்போது சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கான தியாகிகள் ஓய்வூதியத் திட்டத்தை அன்றைய ஒன்றிய அரசு கொண்டுவந்தது. விடுதலைக்காகப் போராடும் கடமையை நிறைவேற்றியதற்கு ஓய்வூதியமா என்று கேட்டு, அதை ஏற்க மறுப்பது என்று கம்யூனிஸ்ட்டுகள் முடிவு செய்தார்கள். சங்கரய்யாவிடம் இது பற்றி ‘தினமணி’ செய்தியாளர் சோமசுந்தரம் கேட்டபோது, ”சுதந்திரத்திற்காக ஜெயிலுக்குப் போனதே பெரிய பரிசுதான்,” என்று இயல்பாகக் கூறினார். தீண்டாமை ஒழிப்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, 1990களில் தமிழகத்தில் பல இடங்களில் சாதிய மோதல்கள் நிகழ்ந்தன.  அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு, வன்முறைகளை ஒடுக்கவும், காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வு நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தினார். அத்துடன், அந்த வன்முறைகளின் ஊற்றுக் காரணியாக இருப்பது தீண்டாமைக் கொடுமைதான், அதற்கு எதிரான சமூக உணர்வை வளர்ப்பதில் அரசுக்குப் பொறுப்பிருக்கிறது என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்டார் கலைஞர். பல்வேறு மாவட்டங்களிலும் தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளை அரசாங்கமே நடத்தியது. அதில் சிறப்புரையாளராகப் பங்கேற்று முழங்கினார் சங்கரய்யா. அன்றைய சூழலில் சாதிய வன்முறைத் தீ பரவாமல் அணைக்கப்பட்டதில் சங்கரய்யாவின் இந்த முனைப்புகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு அவரது அடங்காத கனவு. காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில், காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில், மக்கள் நல்லிணக்க சேவைக்கான விருது சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. விருதுகளை ஏற்கிற வழக்கமில்லாத அவர், அறக்கட்டளையின் நோக்கம் குறித்த மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டார். விருது விழா அறக்கட்டளை சென்னை மேடவாக்கத்தில் நடத்திவரும் காயிதே மில்லத் கல்லூரயில் நடைபெற்றது. அந்த விழாவில் தனக்குத் தரப்பட்ட இரண்டரை லட்சம் ரூபாய் விருதுப் பணத்தை, அந்தக் கல்லூரியில் தலித், பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவி நிதியை ஏற்படுத்தித் தொடர்ச்சியாகப் பயனளிக்குமாறு கேட்டுக்கொண்டு அறக்கட்டளையிடமே ஒப்படைத்தார். இளைய தலைமுறையினர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பவர் சங்கரய்யா. “இன்றைய இளைஞர்கள் உங்கள் காலத்தைப் போல பொது அக்கறையற்றவர்களாக இருக்கிறார்களா,” என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். “இல்லை. அவர்கள் தங்களுடைய பொது அக்கறைகளை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதைப் புரிந்துகொண்டு, அதே வேளையில் சமத்துவ மாற்றங்களுக்கான லட்சியங்களை அவர்கள் ஏற்க வைக்கிற பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது. அது பற்றி அவர்களோடு நாம் பேசுகிறோமா, அல்லது அவர்களுக்கு அக்கறையில்லை என்று விட்டுவிடப்போகிறோமா என்பதே முக்கியம்,” என்றார். அவ்வாறு பேசுவதற்குக் கிடைக்கிற எந்தவொரு வாய்ப்பையும் அவர் தவறவிட்டதில்லை.  “குடும்பத்தில் போராடுங்கள்!” இளைஞர்கள் மேற்கொண்ட ஒரு மாநிலந்தழுவிய பரப்புரை இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சி சில ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் நடைபெற்றது. அதில் வாழ்த்துரை வழங்கிய சங்கரய்யா, ”இளைஞர்களின் மற்ற பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காகப் பொது வெளியில் போராடுங்கள். அதே வேளையில், சாதிப்பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க உங்கள் குடும்பத்திலும் போராடுங்கள். உங்கள் வீட்டில் உங்கள் சகோதரியோ சகோதரனோ சாதி கடந்து, மதம் கடந்து காதலிக்கிறார்கள் என்றால் அந்தக் காதலுக்கு ஆதரவாளர்களாக இருங்கள், அவர்களுக்காக உங்கள் பெற்றோர்களோடு வாதாடுங்கள்,” என்று அறைகூவல் விடுத்தார். கூடியிருந்த இளைஞர்களிடையே அந்த அறைகூவலால் ஏற்பட்ட எழுச்சிகரமான உணர்ச்சி அங்கே பேரலையோசையாக எழுந்த கரவொலிகளில் எதிரொலித்தது. மேடைகளிலும் தனிப்பட்ட முறையிலும் இதைச் சொல்வதற்கான முழுத்தகுதி அவருக்கு உணடு. அவரே மதமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்தான். கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நவமணி. இயக்க வாழ்க்கைக்கும் வந்தவர். அவரும் இவரும் இணைந்து இல்லறம் காண விளைந்தபோது இரு தரப்பிலுமே பெற்றோர்களும் உற்றார்களும் தயங்கினர். தனது முடிவில் உறுதியாக இருந்த சங்கரய்யாவும் அவருடைய அண்ணனும் குடும்பத்துப் பெரியவர்களுடன் எடுத்துப்பேசி ஒப்புக்கொள்ள வைத்தார்கள். அதே போல உறுதியாக இருந்த நவமணியும் அவருடைய அண்ணனும் தங்களுடைய குடும்பத்துப பெரியவர்களுடன் பேசி ஏற்கவைத்தனர். சங்கரய்யா-நவமணி இணையரின் பிள்ளைகள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோருமே காதல் மணம், சாதி மறுப்பு மணம், மதமறுப்பு மணம் என்று முன்னுதாரணம் படைத்திருக்கிறார்கள். எனக்கு அவர் ஊக்கமளித்த அனுபவத்தையும் இங்கே பகிர்ந்தாக வேண்டும். தொலைக்காட்சி விவாதங்களிலும், வேறு பல பத்திரிகைகயில் எழுதுகிறபோதும் எனது சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்துவதுண்டு. 2019 மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, இடதுசாரிகள் தங்களுக்குள் பேசியாக வேண்டியது என்ன என்ற ஒரு கட்டுரையை ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் எழுதினேன். பாராட்டு, விமர்சனம் இரண்டுக்கும் அந்தக் கட்டுரை உள்ளானது. பின்னொரு நாளில் சங்கரய்யா வீட்டிற்குச் சென்றிருந்தபோது, “நிறைய எழுதுறீங்க. மற்ற பத்திரிகைகள்லேயும் எழுதுறீங்க டிவி விவாதங்கள்லேயும் பங்கெடுக்கிறீங்க. மாறுபட்ட விசயங்கள் சொல்றீங்க…” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். அவர் முகத்தையே உற்றுக்ககவனித்தேன். “நல்லது. தொடர்ந்து எழுதுங்க.” எனக்கு எத்தகைய உற்சாகத்தை அது தந்தது என்று விளக்க வேண்டியதில்லை. ஒருவரை நூறாண்டு வாழ்கவென வாழ்த்துவது தமிழ் மக்களின் ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. தங்களின் அன்புக்கு உரியவர்களை, ஆசிர்வாதம் கோரி வணங்குகிறவர்களை இவ்வாறு வாழ்த்துவார்கள். தோழர் சங்கரய்யாவின் அர்ப்பணிப்பு மிக்க போராட்ட வாழ்க்கையால் சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைச் சந்தித்தவர்கள், சொந்த வாழ்க்கையில் நன்மைகளை அடைந்தவர்கள், உரிமைகளை உறுதிப்படுத்திடும் நம்பிக்கை பெற்றவர்கள் எல்லோருமே மனம் நிறைந்து வாழ்த்தியிருப்பார்கள் – நூறாண்டு வாழ்கவென்று. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் – யாருககாக அவர் போராடவில்லை? அவர்கள் அனைவரும் வாழ்த்தியிருப்பார்கள். உழைப்பாளி மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப வாழ்ந்து காட்டியிருப்பது போலவே, அவர்களின் இந்த வாழ்த்துக்கேற்பவும் வாழ்கிறார் சங்கரய்யா. ஆகவேதான், தமிழகமே அவரது நூறாவது பிறந்தநாளை உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடுகிறது. கட்சி மாறுபாடுகளைக் கடந்து அரசியல் தலைவர்களும், பல்வேறு களச் செயல்பாட்டாளர்களும் இன்று அவரை வாழ்த்துகிற வாய்ப்பில் வணங்கி மகிழ்கிறார்கள். நாமும் அந்த மகிழ்ச்சியில் இணைவோம். அந்த வாழ்த்து, அவரது பொதுநல வாழ்க்கை நதியின் ஒரு துளியிலேனும் நம்மையும் நனைக்கும். கட்டுரையாளர்: அ. குமரேசன் படங்கள்: இணையம் மற்றும் @tncpim