மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

3. பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் ஒரே இலக்கு

மகாபாரதத்தில் வரும் உப கதைகள் வியாசருடையதா அல்லது பிறருடையதா என்ற கேள்வியை முந்தைய பதிவில் கேட்டு வைத்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உப கதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியமாக மாற்றம் கொண்டிருக்கின்றன என்ற எமது கருத்தையும் சொல்லி வைத்தோம். தொடர்ந்து இன்னும் சில கதைகளைப் பார்ப்போம்.

காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் முடித்தபின்பு, பீஷ்மருக்கு ஒரு ரகசியம் தெரியவருகிறது. அதாவது, ஜாதகப்படி காந்தாரியின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்றும் அதனால் காந்தாரி விதவையாகிவிடுவாள் என்பதும் அவளுடைய ஜாதக அமைப்பு என்று சோதிடர்கள் சொன்னார்கள். அதற்குப் பரிகாரமாக, காந்தாரியை ஒரு ஆட்டிற்குத் திருமணம் செய்துகொடுத்து, அந்த ஆட்டினை காந்தாரியின் முதல் கணவனாகக் கருதிக் கொன்றபின், அவளை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

அந்த வகையில் திருதராஷ்டிரனுடனான அவள் திருமணம் அவளுக்கு இரண்டாவது திருமணம் மட்டுமல்ல, விதவா திருமணமும் ஆகும். இந்த உண்மை, திருதராஷ்டிரனின் திருமணத்தின்போது பீஷ்மரிடம் சொல்லாமல் மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மை தெரிந்ததும் பீஷ்மரால் கோபத்தை அடக்க முடியவில்லை. காந்தாரியின் தந்தையையும் சகுனி உட்பட காந்தாரியின் நூறு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். அனைவருக்கும் சேர்த்து அவர்கள் உயிர்வாழ நூறு சோற்றுப் பருக்கையும் ஒரு நத்தை ஓட்டில் தண்ணீரும் கொடுத்தனர்.

குருவம்சத்தினர், தங்கள் கைதிகளுக்கு சோறும் தண்ணீரும் கொடுக்காமல், பட்டினி போட்டுக் கொன்றனர் என்ற பழி வராமல் இருக்க இந்த விசித்ரமான ஏற்பாடு.

ஆனால் காந்தார (இன்றைய ஆப்கானிஸ்தான்) இளவரசர்கள் ஆலோசனை செய்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பருக்கையைத் தின்று உயிர் வாழ்வது முடியாத
காரியம் என்பதால், நூறு பருக்கைகளையும் இளையவனான சகுனிக்குக் கொடுத்து அவனை உண்ண வைத்து, அவன் மட்டுமாவது உயிர்வாழ்ந்து குருவம்சத்தை
வேரறுக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர். அந்த யோசனையின்படியே சகுனியை மட்டும் உயிர்வாழ வைத்துவிட்டு, மற்றவர்கள் இறந்துவிட்டனர்.

சகுனியின் தந்தை இறப்பதற்கு முன்பு தன்னுடைய நடுவிரல்களை உடைத்து, இரண்டு தாயக்கட்டைகளைச் செய்து சகுனியிடம் கொடுத்து, அந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கும் எண்களையே போடும் என்று வரம் தந்துவிட்டு இறந்து போகிறான். இந்த தியாகத்தை, குரு வம்சத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர்கள் செய்கிறார்கள்.

அந்த முறையில் பார்த்தால், பூமியின் பாரத்தைக் குறைப்பது, அதாவது மனிதக் கூட்டத்தைக் கொன்றழிப்பது என்ற, யோசித்தால் நாகரிகத்தில் மிகவும் கீழ்மையான அவதார நோக்கம் கொண்டு வந்திருக்கும் யாதவ குல வாசுதேவ கிருஷ்ணன் என்ற கிருஷ்ண பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே நோக்கம் என்பது வியாசர் இதிகாசத்தில் வியப்பைத் தருவதாகும்.

ஏனெனில், இதிகாச நாயகன் கிருஷ்ணன் என்றால் இதிகாச வில்லன் சகுனி. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் ஒரே நோக்கத்தையே இலக்காக வைத்த
ஒரே ஒரு இதிகாசம் மகாபாரதம்தான். இதில் யார் நல்லவர் என்பதும் யார் கெட்டவர் என்பதும் விடை காண முடியாத கேள்வி.

மகாபாரதத்தில் எத்தனை உபகதைகள் இருக்கின்றன என்று ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு, மகாபாரதத்தை ‘மண்-பொன்-பெண்-ஆசைகூடாது’ என்று ஒரே வாசகத்தில் சொல்லவும் முடியும்; பல்லாயிரம் பக்க அளவிற்கு விரிவுபடுத்தியும் சொல்லமுடியும் என்பது புரியும்.

இந்த பீஷ்மர் எப்போதெல்லாம் சட்டங்களை நீட்டினார் என்பதைத் தொடர்ந்து பார்க்கப் போகிறோம்..

(மீண்டும் புதன்கிழமை தொடர்வோம்)

  • ஞானபாரதி சின்னச்சாமி

Comments (3)


Renusathish
Renusathish
July 8, 2023

உப கதைகளை கொண்டு அன்றைய மக்களின் வாழ்வியல் முறைகளையும் இன்றைய கால கண்ணோட்டத்தோடு கூறி இருப்பது நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

Renusathish
Renusathish
July 8, 2023

உப கதைகளை கொண்டு அன்றைய மக்களின் வாழ்வியல் முறைகளையும் இன்றைய கால கண்ணோட்டத்தோடு கூறி இருப்பது நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

Anita Srikanth
Anita Srikanth
July 8, 2023

வணக்கம் ஐயா..
படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு. நிறையா தகவல்களை எழுதி இருக்கீங்க..
பல தகவல்களை தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *