மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

12. திருமண உரிமைகளின் பரிணாம வளர்ச்சி இன்றைய சமுதாயத்தில் கருமுட்டை அல்லது விந்து தானம் செய்தவரின் பெயரை அதை தானமாகப் பெற்றவர்களுக்குக்கூடத் தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. ஆனால், கருமுட்டை அல்லது விந்து தானம் என்ற அதிநவீன விஞ்ஞானமுறை இல்லாததாலும் குழந்தை ‘வரம்’ தந்தவரே நேரடியாக உடலுறவு வைத்துக்கொள்வதாலும் குழந்தையின் தாய் யார் என்பதையும் தந்தை யார்  என்பதையும் மறைக்க இயலாத சூழல் அப்போது இருந்தது. அது பல்வேறு சமயங்களில் விதுரன் போன்ற ஞானிகளைக்கூடக் கடும் அவமானத்திற்கு உள்ளாக்கி வைத்ததையும் பார்க்கிறோம். ஒருவகையில் பார்த்தால், குருவம்சத்தினர், மீனவர் குலப் பெண்ணான சத்யவதியின் வழித்தோன்றல்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், வேதங்களைத் தொகுத்தவர் என்று சொல்லப்படும் வேதவியாசரின் வாரிசுகள் என்பதை மகாபாரதத்திலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். அதனால், பீஷ்மரைப் போன்றவர்கள், தொடர்ந்து சத்திரியகுலம் மட்டுமே அரசாளத் தகுதியுள்ளவர்கள் என்று சொல்வது மகாபாரதக் கதையின் கதைப்போக்கிற்கு எதிர்மாறாக இருப்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டு, மாத்ரியுடன் உடலுறவுகொள்ள முற்பட்டபோது, முனிவரின் சாபத்தின்படி தலை சுக்கு நூறாக வெடித்துச் செத்துப் போனான். பாண்டுவின் இளைய தாரமான மாத்ரி, கணவனுடன் உடன்கட்டை ஏறித் தன்னை மாய்த்துக்கொண்டாள். ஆனால், பாண்டுவின் முதல் மனைவியான குந்திதேவி, உடன்கட்டை ஏறுவதைத் தவிர்த்துவிட்டு, பாண்டவர்களை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டாள். இந்த நிகழ்வு, உடன்கட்டை ஏறும் வழக்கம் மகாபாரதக் காலத்திலேயே இருந்தது என்பதைக் காட்டுகிறது. ஆனால், உடன்கட்டை ஏறுவதைப் பொறுத்தவரையில், இறந்தவரின் மனைவிக்குக் குழந்தைகள் இருந்தால் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளத் தேவையில்லை என்பதும், குறைந்தது குழந்தைகளைக் கவனித்து வளர்க்க இறந்துபோன கணவனுக்கு குந்திதேவி போல இன்னொரு மனைவி இருந்தால்தான் உடன்கட்டை ஏறி, ‘சதிமாதா’ ஆகமுடியும் என்பதும் விளங்கும். எனவே, மகாபாரதக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் மனைவி கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான நியதி அல்ல என்பதைத்தான் குந்திதேவியும் மாத்ரியும் நமக்கு உணர்த்துகிறார்கள். மகாபாரதக் காலத்தில் பெண்ணிற்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டது என்றாலும் பெண் என்பவள் ஆன்மா என்று ஒன்று இல்லாத ஜீவன் என்ற நிலைப்பாடு அப்போது இல்லை என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. பெண் ஆன்மா இல்லாதவள் என்பதால், இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறி சதிமாதாவாகக் கடமைப்பட்டவள் என்பது, பின்னாளில் பார்ப்பானியத்தால் முனமொழியப்பட்ட நிலைப்பாடு. உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம், ராஜாராம் மோகன்ராய் மற்றும் ஆங்கிலேயர்களின் முன்முயற்சியினால் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது ‘உடன் கட்டை’ ஏறும்படி செய்பவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. மத ரீதியான பாரம்பரிய  வழக்கம் என்ற வாதத்தைச் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாக, ‘உடன்கட்டை’ ஏற்றும் வழக்கம் இப்போது இந்தியாவில் அடியோடு ஒழிந்துவிட்டது. அதிலும், பலதார மணம் புரிவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 494 சொன்னபிறகு, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கருத்தியல், நடைமுறைக்கு வந்துவிட்டது. மேலும் பெண்ணிற்கு 1955ஆம் ஆண்டு, இந்து திருமணச் சட்டத்தின் மூலம், விவாகரத்து உரிமை வழங்கப்பட்ட பின்பு, ‘கற்பு’ என்ற கற்பிதத்திற்குக் கொடுக்கப்பட்டு வந்து புனித அந்தஸ்தைச் சட்டம் ஒழித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இருபாலருக்கும் திருமண உரிமை வழங்கப்பட்ட பின்பு, இந்து திருமணச் சட்டத்தில் கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில், இருபாலரும் விவாகரத்து பெற்றுக்கொள்வதோடு, வேறு ஒருவரை மறுமணமும் செய்துகொள்ள முடியும். அவ்விதம்  மறுமணம் செய்தவரையும் விவாகரத்து செய்தால், மீண்டும் மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெறுவதால், அந்த உரிமையின் உள்ளே ‘பலதாரத் திருமண உரிமை’யும் ‘பலபுருஷத் திருமண உரிமை’யும் ஒளிந்திருப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, ஒரு சமயத்தில் ஒரு பெண் (அ) ஆண் பல ஆண்களை அல்லது பெண்களை மகாபாரதக் காலம் போல மணம் செய்துகொள்ள முடியாது என்றாலும், வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு மறுமணத்தின்போதும், பல புருஷர்களுடன் வாழும் உரிமையைப் பெண்களும் பல பெண்களுடன் வாழும் உரிமையை ஆண்களும் பெற்றுவிட்டனர் என்பதுதான் இன்றைய சட்ட நிலைப்பாடு. சட்டமே அங்கீகாரம் வழங்கிய பின்பு, இன்றும் கற்பின் புனிதம் பற்றியும் மேன்மை பற்றியும் பேசுவது நடப்பில் இருக்கும் இந்து திருமணச் சட்டப் பிரிவுகள் கூறும் உள்ளடக்கம் பற்றிய அறியாமையின் காரணமாகச் சொல்லப்படும் வாதமேயன்றி வேறில்லை. பெண்ணை உடன்கட்டை ஏற்றுவதைப் புனிதச் செயல் என்று கொண்டாடிய காலத்திலிருந்து, விவாகரத்து உரிமை வழங்கியதன் மூலம், கற்பு என்ற கற்பிதத்திற்குக் கொடுத்துவந்த புனித அந்தஸ்து சட்டத்தால் பறிக்கப்பட்டுவிட்ட காலகட்டத்திற்கு வந்துவிட்டோம் என்பதுதான் புரிந்துகொள்ளப்பட வேண்டிய சமூகப் பரிமாணம். இப்போது, ‘திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட புனித உறவு’ என்ற அபத்ததிலிருந்து, வால்டேர் போன்ற மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் சொல்லியவண்ணம், ‘திருமணம் என்பது இருவருக்குமிடையில் செய்துகொள்ளப்படும் சமூக ஒப்பந்தம் (Social Contract)’ என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பது தெளிவு. இது புரியாதவர்கள், திருமணம், விவாகரத்து, மறுமணம் இவற்றைப் பற்றிய பழைய பாரதக் கலாச்சாரம்தான் உலகத்திற்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது என்று பத்தாம்பசலித்தனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புரிதல் இல்லாததால்தான், இந்து மதம், உலகில் உள்ள ஏனைய மதங்களைவிட மேன்மையான மதம் என்ற கருத்தோட்டத்தில் இருந்துகொண்டு, அவர்கள் தங்கள்  கண்ணோட்டத்தை உலகக் கண்ணோட்டததிலிருந்து சுருக்கிக்கொண்டுவிடுகிறார்கள். (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

11. மகாபாரதத்தில் தாசியும் நவீன பாரதத்தில் கொத்தடிமையும் திருதராஷ்டிரன் ஏன் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன வியாசர், அதற்கு திருதராஷ்டிரனின் தலைவிதியோ கர்மாவோ காரணம் என்று சொல்லி மழுப்பவில்லை. திருதராஷ்டிரன் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகப் பிறந்தததற்கு, அவனுடைய தாய் அந்நியருடன் உறவு கொள்வதை எண்ணி, கண்ணை மூடிக்கொண்டதால் ஏற்பட்ட எதிர்பாரத விபத்து என்று கூறிக் கதையை நகர்த்துகிறார். முதல் நாள் இரவு, நன்கு அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் தள்ளப்பட்ட அம்பிகை, பயங்கரமான உருவத்தில் இருந்த வேறொரு ஆணுடன் கலவி முடியும்வரை, கண்ணை இறுக மூடிக்கொண்டுவிட்டாள். அம்பிகை, கலவியின்போது கண்ணை இறுக மூடிக்கொண்டதால், திருதராஷ்டிரன் பார்வை  இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்கிறார் வியாசர். அம்பாலிகையும் வியாசருடன் சகஜமாக உறவில் ஈடுபடவில்லை. மிகுந்த கூச்சத்துடன் நடந்துகொண்டதால் உடல் வெளுத்தும் மலடனாகவும் பாண்டு பிறந்தான் என்கிறது மகாபாரதம். ஆகவே, இரண்டு மனைவியர் இருந்தும் சாபத்திற்கு முன்பே அவனுக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதுபோகவும் அம்பிகையின் சேடிப் பெண்ணாக வேலை பார்த்த ஒரு பெண்ணையும் வியாசருடன் உறவு கொள்ள வைத்தார்கள். அந்த வேலைக்காரப் பெண்ணிற்குப் பிறந்தவன்தான் விதுரன். இந்தச் சம்பவங்களின்படி பார்த்தால், திருதராஷ்டிரனும் பாண்டுவும் சத்ரியர்களாக மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் விசித்ர வீரியனின் வாரிசுகளாக அரச பதவி பெற்றனர். அவர்களுடைய சகோதரன் விதுரன் மட்டும் சூத்திரனாகவே நடத்தப்பட்டான். திருதராஷ்டிரனும் பாண்டுவும் விதுரனும் வியாசருக்குப் பிறந்தவர்கள் என்பதால், ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஆவார்கள். ஆனால், விதுரனின் தாய் வேலைக்காரி (தாசி) என்பதால், மற்ற இருவரும் விசித்திர வீரியனின் புதல்வர்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட போதும், விதுரனை விசித்ரவீரியனின் மகனாக அன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவும் ஏறத்தாழ, கர்ணன் பாண்டுவின் புத்திரனாகக் கருதப்படமாட்டான் என்ற சட்ட நிலைப்பாட்டோடு ஒத்த நிலைப்பாடாகும். விதுரன், பெரிய நீதிமான் என்று கொண்டாடப்பட்டவன். கிருஷ்ண பரமாத்மாவின் பரம பக்தன். அவன் கையில் இருந்த சிவதனுசு, உலகை வெல்லக்கூடியது. விதுரனால் சொல்லப்பட்ட சமூக நீதிகளை ‘விதுர நீதி’ என்ற பெயரில் தொகுத்துள்ளார்கள். திருதராஷ்டிரன் அரசவையில் முக்கிய அமைச்சராக இருந்த விதுரன், பல சமயங்களில் பாண்டவர்களை ஆதரித்துப் பேசும் வழக்கமுள்ளவனாக இருந்தான். அது துரியோதனனை எரிச்சலடைய வைத்தது. கிருஷ்ணன் ஊசிமுனை நிலம் கேட்டு சமாதானத் தூதுவனாக வந்தபோது, ‘நீ என்ன இருந்தாலும் தாசி மகன் (வேலைக்காரியின் மகன்)தானே’ என்று விதுரனை துரியோதனன் கடுமையாக வசை பாடினான். கர்ணனுக்குத் தன் தாய் யார் என்று தெரியாததால் ஏற்பட்ட அவமானத்தைவிட, தன் தாய் யார் என்பது தெரிந்ததால் விதுரன் சொல்லொணா அவமானப்பட்டான். பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக, அரசாட்சிப் பொறுப்பேற்கும் உரிமையைத் தன் தந்தை இழந்ததும் மூத்தவன் இருக்கும்போது இளையவன் மன்னனானதும் துரியோதனனை நிலைதடுமாற வைத்த மோசமான சட்ட நிலைப்பாடுகள். இவை ஒருபுறமிருக்க, ‘தாசி மகன்’ (வேலைக்காரியின் மகன்) என்றழைக்கப்பட்ட விதுரனின் தாயையும் அவளைப் போல அந்தப்புரங்களில் பணியாற்றிய வேலைக்காரப் பெண்களைப் பற்றியும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் அடிமைச் சமுதாயம் ஒருபோதும் இருந்ததில்லை என்பது சில தத்துவ ஆசிரியர்களின் கருத்து. அடிமைச் சமுதாயத்தைக் கடந்துதான் நிலப் பிரபுத்துவ சமுதாயம் ஏற்பட்டது என்று வாதிடுவோரும் உண்டு. இந்தச் சர்ச்சை இன்றும் முடிவில்லாத சர்ச்சையாக இருக்கிறது. அந்தப்புரப் பெண்களுக்குப் பணிவிடை செய்து அந்தப்புரத்திலேயே வாழும் பெண்களை, வேத வியாசர் ‘தாசி’ என்ற பெயரில்தான் அழைக்கிறார். ‘தாசி’ என்ற சொல்லுக்கு, வேலைக்காரி என்ற அர்த்தம் மட்டுமின்றி அடிமை என்ற அர்த்தமும் உண்டு. ஆனால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யயாதியின் கதையில், அசுர குருவின் (பிராமணர்) மகள் தேவயானியை, யயாதி மணந்தபோது அசுரர்களின் அரசனின் மகளான சர்மிஷ்டை, அவளுடைய தீய செயலுக்கு (வேறொன்றுமில்லை.. அசுர குருவின் மகள் தேவயானியை அரசனின் மகள் என்ற நிலையில் அவமதித்தாள்) தண்டனையாக தேவயானியின் ‘தாசி’யாக அனுப்பப்படுகிறாள் என்கிறது  மகாபாரதம். அதுமட்டுமன்றி, பின்ளாளில் யயாதி, சர்மிஷ்டையை தேவயானிக்குத் தெரியாமல் மணந்துகொண்டதால், தேவயானியை சமாதானம் செய்வதற்காக அசுர குரு சுக்கிராச்சாரியார், ‘உன்னுடைய யௌவனம் இப்போதே அழிந்து நீ முதுமை எய்துவாயாக’ என்று யயாதிக்கு சாபம் கொடுத்ததாகவும் மகாபாரதம்  சொல்கிறது. யயாதியின் கதை தனிக்கதை. அதை ‘தாசி’ பற்றிய பதப் பிரயோகத்தை விளக்குவதற்காக இங்கே குறிப்பிட நேர்ந்தது. தாசி என்பவள் ஒரு மணப்பெண்ணுக்கு தரப்படும் சீர்வரிசைப் பொருளைப்போல, எந்த உரிமையும் இல்லாத ஒரு அஃறிணைப் பொருளாக நடத்தப்படுவதை மகாபாரதத்தில் பார்க்கிறோம். அதனால் ‘தாசி’யை விரும்பி மணந்த யயாதி, சபிக்கப்பட்டான். விதுரனின் தாய் அவளுடைய விருப்பமின்றியே வியாசருடன் உடலுறவு கொள்ளும்படி செய்யப்பட்டாள். இந்த அடிமைமுறை, இப்போது இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘கொத்து’ என்றால் உணவு என்று அர்த்தம். ‘கொத்தடிமை’ என்றால் உணவை மட்டும் கொடுத்து அடிமையைப் போல 24 மணி நேரமும் முதலாளிகளுக்கு உழைக்க வைக்கப்படுபவர்கள் என்று பொருள். கொத்தடிமை முறை இப்போது பெரும்பாலும் செங்கல் சூளைகளில்தான் இருக்கிறது. அங்கே, பள்ளிக்கூடம் போகவேண்டிய மாணவர்கள் வறுமையின் காரணமாக, ‘கொத்தடிமை’ ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளைவிடக் கேவலமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப்படுவதுடன், ஒரு சுதந்திர நாட்டில் எந்த மனித உரிமையும் இல்லாமல் ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். இப்போது இந்த முறை ‘சுமங்கலித் திட்டம்’ என்பதுபோல, பல்வேறு பெயர்களில் நூற்பாலை முதல் பல்வேறு தொழில்களில் கால் பதித்துவிட்டது. எங்கே இந்தக் கொத்தடிமை முறை வழக்கில் இருக்கிறதோ, அங்கே பெண்கள் எஜமானர்களின் காமப் பசிக்கு இரையாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. ‘கொத்தடிமை’ முறை குற்றம் என்று சட்டம் அறிவித்துவிட்டாலும் மகாபாரதக் காலத்தில் இருந்ததைப்போல், இன்றும் அது வழக்கில் இருப்பதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது. இப்போது, ‘தொழில் வளர்ச்சியின்’ மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துகிறோம் என்ற சாக்கில், அந்நிய முதலாளிகளை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைக்கும் அரசுகள், அவர்கள் தொழில் நடத்த சாதகமான சூழலை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், இதுவரை 8 மணி  நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக்க முயல்கிறார்கள். 8 மணி நேர வேலை – 8 மணி நேர ஓய்வு – 8 மணி நேர ஆக்கப்பூர்வமான செயல்பாடு என்று, ரத்தம் சிந்தியும் உயிர்த் தியாகம் செய்தும் மே தினத் தியாகிகள் பெற்றுத்தந்த மனித உரிமையைப் பறிப்பதற்கு, எல்லாவிதமான பசப்பு வார்த்தைகளையும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பேசுகின்றன. 12 மணி நேர வேலை என்பது, வேறு வடிவத்திலான கொத்தடிமை முறை என்பதை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் அறியும். எனவே, வேலை நேரத்தை அதிகரித்து அதிக உபரி மதிப்பை லாபமாகப் பெற, தொழிலாளர் வர்க்கத்தைக் கொடும் சுரண்டலுக்கு உள்ளாக்கி, தொழிலாளியை குடும்பம், சமூகம்,அறிவியல் மற்றும் கலையில் ஈடுபாடு முதலான எல்லா அம்சங்களில் இருந்தும் அந்நியப்படுத்த முன்னெடுக்கப்பட்ட முயற்சி, இப்போது தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுவிட்டாலும், அந்த அபாயம் முழுமையாக நீங்கிவிடவில்லை என்பதால், அதை எதிர்க்க சதா விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியமாகிறது. அன்றாடம் காய்ச்சிகளான கட்டடத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கூலிமுக்குகள்’ அதிகரித்துக்கொண்டே போகின்றன. அந்தத் துறையில் வேலைநேரம் முறைப்படுத்தப்படாமல், கடும் உடல் உழைப்பினால் மாடமாளிகைகளைக் கட்டவேண்டியுள்ளது. அவர்களுக்கு தினந்தோறும் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லை. அந்தக் கூலி முக்குகள் கடும் போட்டியின் காரணமாக, ‘கொத்தடிமைச் சந்தைகளாக மாறிவருவதை, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பொய் பேசும் அரசியல்வாதிகள், கருத்திலேயே கொள்வதில்லை என்பது வேதனையான விஷயம். அதனால் மகாபாரதக் காலத்தில் ‘அடிமை முறை’ இருந்ததா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, இன்றைய சமுதாயத்தில் ‘நவீனக் கொத்தடிமை முறை’ இந்தியாவில் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

10. துரியோதனின் புகழ் துரியோதனன் பிறந்தபோது நரிகள் ஊளையிட்டதாகவும் கோட்டான்கள் கூவியதாகவும் கழுதைகள் கத்தியதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் துரியோதனனின் வருகையைப் பல்வேறு கெட்ட சகுனங்களோடு தொடர்புபடுத்தி அவன் பிறப்பை அறிமுகப்படுத்துகிறார் வியாசர். ஆனால், துரியோதனன் சத்ரியனைப் போல வீரமரணம் எய்தியபோது பலமுறை வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்ததாகச் சொல்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ‘நான் சத்ரியனாக வீர மரணம் எய்தி, என் சுற்றத்தாரோடும் என் நண்பன் கர்ணனோடும் மகிழ்வோடு இருக்க சொர்க்கம் போகிறேன். பாவிகளான நீங்கள் இந்தப் பாவபூமியில் நீண்டகாலம் வாழ்ந்து ஆட்சி புரிந்து மாளாத துன்பமுற்று, பின்பு மேலுலகம் வருவீர்களாக. சத்ரியனாக மரணமடைவதில் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு, புலம்பிட எதுவுமில்லை’ என்று மரணத் தருவாயில் துரியோதனன் சொன்னபோதெல்லாம் தேவர்கள் பூமாரி பொழிந்து அவனை கௌரவப்படுத்தினார்கள் என்கிறார் வியாசர். எதையும் தட்டையாகச் சொல்லாமல் சுவாரசியமான நிகழ்வாகச் சொல்வது மகாபாரதத்தை இணையில்லாத இதிகாசமாக்குகிறது என்பதற்கு இவையும் எடுத்துக்காட்டு. அந்த கௌரவம் இரண்டு தரப்பிலும், துரியோதனனைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தேவர்கள் பூமாரி பொழிந்ததற்குப் பிரதான காரணம், திரௌபதி செய்த சபதமே. யுத்த நெறிகளுக்குப் புறம்பாக, சட்டவிரோதமாக, பீமன் துரியோதனைனைக் கொல்வதற்குக் காரணமாய் அமைந்தது அந்த சபதம். துகிலுரிதல் நிகழ்ச்சிக்குப் பின்பு, திரௌபதி தன் கருங்கூந்தலை அவிழ்த்துவிட்டு, “துரியோதனா, பீமனின் கதாயுதத்தினால் பிளக்கப்படும் உன் தொடையின் ரத்தத்தை இந்த அவிழ்ந்த கூந்தலில் பூசாமல் என் கூந்தலை முடிந்திடமாட்டேன்” என்று சபதம் செய்தாள். துரியோதனனும் பீமனும் கதாயுதத்தில் சமமானவர்கள். இருவருக்குமே கிருஷ்ணனின் அண்ணனான பலராமன்தான் குரு. கதாயுத யுத்தத்தில் இடுப்பிற்குக் கீழே அடிக்கக்கூடாது என்பது சட்ட நியதி. ஆனால், திரௌபதி சபதம் செய்யும்போதே ‘பீமனின் கதாயுதத்தால் பிளக்கப்பட்ட உன் தொடை ரத்தம்’ என்று யுத்த நியதிக்குப் புறம்பாகச் சபதம் செய்கிறாள். வேறு வார்த்தைகளில் சொன்னால், திரௌபதியின் அந்தச் சபதமே அப்போதைய யுத்த நெறி சம்பந்தமான சட்ட நிலைப்பாட்டிற்குப் புறம்பான சபதம். இறுதியில், துரியோதனனுடன் பீமசேனன் கதை யுத்தம் செய்தபோது, இருவரும் சமமாகப் போரிட்டனர் என்கிறார் வியாசர். அவர்கள் யுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தீர்த்த யாத்திரை போயிருந்த கிருஷ்ணனின் அண்ணன் பலராமன், யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு வந்துவிடுகிறார். யுத்தத்தை அவரும் கிருஷ்ணனோடு கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். கதாயுத யுத்தம் நீண்ட நேரம் நீடித்தது. யார் வெல்வார் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா, தன் தொடையைத் தட்டி பீமனுக்கு சமிக்ஞை கொடுத்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட பீமசேனன், துரியோதனன் எதிர்பார்க்காத சமயத்தில் துரியோதனின் தொடையில் அடித்து, துரியோதனின் தொடையைப் பிளந்தான். துரியோதனன் நிலை தடுமாறி நிலத்தில் விழுந்தான். அப்போது பீமசேனன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் கிடந்த துரியோதனின் தலையைத் தன் கால்களால் மிதித்துத் துவைத்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலராமனின் கோபம் உச்சத்தைத் தொட்டது. யுத்த நியதிகளுக்குப் புறம்பாகத் தொடையில் அடித்ததுமில்லாமல், கீழே விழுந்த துரியோதனின் தலையைக் கால்களால் மிதித்துத் துவைத்ததை பலராமனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பீமசேனனைப் பார்த்து, பலராமன் காறி உமிழ்ந்தான்.பலராமனுக்கு ‘ஹலாயுதன்’ என்று ஒரு பெயர் உண்டு. ஹலாயுதம் என்பது, உழவர்கள் பயன்படுத்தும் ஏர் என்கிற மேழி. முறையற்ற செயல் செய்த பீமனைத் தாக்குவதற்காக, பலராமன் ஹலாயுதத்தைத் தூக்கிக்கொண்டு பீமனைத் தாக்கத் தயரானபோது, கிருஷ்ணன், “நீ தீர்த்த யாத்திரை போயிருந்தபோது நடந்த யுத்தத்தில், இரண்டு பக்கத்திலும் ஏராளமான முறைகேடுகளை இரு தரப்பினரும் தெரிந்தே செய்துள்ளனர். மேலும், திரௌபதி துரியோதனின் தொடை ரத்தத்தைப் பூசிக் குழல் முடிப்பேன் என்று சபதம் செய்துள்ளதால், பீமனுக்கு துரியோதனின் தொடையில் அடித்துப் பிளப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையேல் திரௌபதி, அவள் செய்த சபதத்தின்படி கடைசிவரை குழல் முடிக்க முடியாமலே போயிருக்கும். எனவே, கோபத்தை அடக்கிக்கொண்டு மதுராபுரிக்குப் போ” என்று சொல்லி, பலராமனை சமாதானம் செய்து அனுப்பினான். அந்த நொடி முதல் துரியோதனனின் பேச்சு, செயல் எல்லாமே ஒரு மாவீரனின் பேச்சு மற்றும் செயலை ஒத்திருந்ததாலேயேதான், தேவர்கள் அவன் இறந்தபோது பூமாரி பொழிந்து அவனை வாழ்த்தினார்கள். “நான் சக்ரவர்த்தி. நான் இறந்த பிறகு, என் தலையைக் காக்கைகள் மிதிக்கும். அதை பீமா, என் மரணத் தருவாயில் நீ செய்தாய். அதனால் நீ காக்கைக்கு நிகரானாவன்தான். நான் சக்ரவர்த்தியாகவே இறப்பேன்” என்று முழங்கினான். துரியோதன வதமானது பாண்டவர்களுக்கும், குறிப்பாக கிருஷ்ண பரமாத்மாவிற்கும் பீமசேனனுக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்திய சம்பவமாகவும் அமைந்துவிட்டது. (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

9. வியாசர் வம்சாவழி விளக்குவதென்ன? அம்பையின் கதை பீஷ்மரின் வாழ்க்கைச் சரித்திரத்தில் துடைத்தெறியப்பட முடியாத களங்கமாகும். ஏனென்றால், அம்பை ‘ராட்சதத் திருமணம்’ பற்றி எடுத்துவைத்த வாதம், மறுக்கப்பட முடியாத சட்ட நியதியாகும். அம்பை சால்வனைக் காதலித்தவள் என்பது உண்மையாக இருந்தாலும்  ராட்சதத் திருமண முறையில் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவமில்லை என்பதால், அதைக் காரணம் காட்டி அவளைத் திருமணம் செய்ய மறுத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாத அதர்மம். மற்றவர்களின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக, சுயம்வர மண்டபத்திற்கு வந்திருப்பதை வெளிப்படச் சொல்லாமல், ‘ராட்சதத் திருமண முறையில்’ சகோதரர்களுக்காக, இளவரசிகளை பலவந்தமாகத் தோள்பலத்தினால் தூக்கிச் சென்றுவிட்டு அநாதரவாக விடுவதும் நிச்சயமாக ஏற்கமுடியாத அநீதியாகும். விசித்ரவீரியன் அம்பிகையையும் அம்பாலிகாவையும் திருமணம் செய்துகொண்டான். விசித்ரவீரியனுக்கு மனைவியர் மூலம் குழந்தைப் பேறு இல்லை. மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், அந்த அரசவம்சம் அத்தோடு அழிந்துவிடும். மிகவும் உடல் நலிவடைந்திருந்த விசித்திர வீரியன், தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்பதும் தெரிந்திருந்தான். அரசி சத்யவதி பீஷ்மரிடம் விவாதித்தாள். அப்போதுதான் இன்னொரு ரகசியம் வெளிப்பட்டது. சத்யவதி, சந்தனு அரசனை மணக்கும் முன்பே பராசரர் என்ற முனிவரோடு சேர்க்கை ஏற்பட்டு, ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்தாள். அந்தக் குழந்தைதான் வியாசர். விசித்திர வீரியனுக்கு, தாய் வழியில் அண்ணன் முறையாவார். உத்தமரான வேத வியாசரை அம்பிகையோடும் அம்பாலிகையோடும் உடலுறவு கொள்ளச் செய்து, அதன் மூலம் புதல்வரைப் பெற்று, அரச வம்சத்தைத் தழைக்க வைப்பது என்ற யோசனையை சத்யவதி முன்வைத்தாள். பீஷ்மருக்கு வேறு வழியில்லை என்று புரிந்தது. ஆகவே சம்மதித்தார். விசித்திர வீரியனும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான். அரச வம்சம், வாரிசின்றித் துண்டிக்கப்பட்டுவிடக்கூடிய அபாயம் பற்றி, பீஷ்மரும் அமைச்சர்களும் அரசியல் பிரதானிகளும் பார்ப்பன வழிகாட்டிகளும் அமர்ந்து, அது குறித்துத் தீவிர ஆலோசனை செய்தார்கள். சத்யவதியின் யோசனை அனைவராலும் ஏற்கப்பட்டது. வியாசரும் அந்த ஏற்பாட்டிற்கு உடன்பட்டார். அதன்பிறகு விசித்திர வீரியன் சிறிது காலத்தில் இறந்துபோனான். விசித்ர வீரியனின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த ஏற்பாடு நடத்தி முடிக்கப்பட்டது என்றும் விசித்ரவீரியன் உடல் நலிவுற்று சிரமத்தில் இருக்கும்போதே, அவன் சம்மதத்துடன் இந்த ஏற்பாடு நடந்ததென்றும் இருவிதமாகக் கதைகள் சொல்லப்படுகின்றன. ஏனெனில், கணவன் சம்மதத்துடன் இந்த உறவு நடந்தால் மட்டுமே வியாசரின் பிள்ளைகள் விசித்ர வீரியனின் வாரிசுகள் என்று ஏற்கப்படுவார்கள். கணவனின் சம்மதத்துடன் வேறொரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டுக் குழந்தைப் பேறு அடைவதை இன்றைய சமுதாயத்தின் பார்வையில் பார்த்தால், அது மிக மிக ஆபாசமானதும் அசிங்கமானதுமான செயலாகத் தோன்றும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், உடலுறவின்றி கருமுட்டை அல்லது விந்து தானம் செய்து, செயற்கைக் கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்த ஏற்பாடு இது. இந்த முறையைப் பல்வேறு கோணங்களில் இருந்து, பல்வேறு விதமாக நியாயப் படுத்தினாலும் இன்றைய சமுதாயத்தால் ஏற்க முடியாத கேவலமான ஏற்பாடாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இதிலும் அம்பிகை மற்றும் அம்பாலிகையின் விருப்பம் குறித்து யாரும்  கவலைப்படவில்லை. இது அரச வம்சத்தை விருத்தி செய்ய, அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நியதி. வியாசருக்கும் அம்பிகைக்கும் பிறந்த திருதராஷ்டிரன், பிறவியிலேயே பார்வை இல்லாதவன். வியாசருக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த மகன் பாண்டு. திருதராஷ்டிரன் பாண்டுவிற்கு மூத்தவன். மூத்தவன் என்ற வகையில் அஸ்தினாபுரத்து அரசனாக வேண்டியவன் திருதராஷ்டிரன்தான். ஆனால் பார்வை இல்லாதவன் என்பதால், அரசனாக அவனுக்குத் தகுதியில்லை என்று கருதி, இளையவனான பாண்டுவிற்குத்தான் மன்னனாகப் பட்டம் சூட்டினார்கள். பாண்டு, தனது மனைவியரான குந்திதேவி மற்றும் மாத்ரியுடன் கானகத்திற்குப் போனபோதுதான், பாண்டுவின் பிரதிநிதியாக, அஸ்தினாபுரத்தின் மன்னாக, திருதராஷ்டிரன் ஆட்சி நடத்தினான். இதுதான் மகாபாரத இதிகாசத்தில் குருஷேத்ர யுத்தம் நடந்ததற்கான மூலகாரணம் என்பதை விளங்கிக் கொள்ளாவிடில் மகாபாரதமே விளங்காது. பார்வையற்றவன் அல்லது மாற்றுத் திறனாளிக்கு மன்னனாக உரிமையில்லை என்பது அன்றைய சட்ட நிலைப்பாடு. அந்த பாரதக் கலாச்சார நிலைப்பாடு இன்று மாறிவிட்டது. மாற்றுத் திறனாளி என்பதற்காக, யாரையும் எந்த ஒரு பொறுப்பு வகிப்பதில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பதை சொல்லத் தேவையில்லை. குருக்ஷேத்ர யுத்தத்தின் அடிப்படைக் காரணமாக இருந்த ஒரு சட்ட நிலைப்பாடு, இன்று காலாவதியாகிவிட்டதைப் பார்க்கிறோம். இந்தத் தகுதி நிர்ணயம் இல்லாமல் இருந்திருந்தால், மூத்தவனான திருதராஷ்டிரன்  அஸ்தினாபுரத்தில் சட்டப்பூர்வமான மன்னனாகி இருப்பான். திருதாஷ்டிரனின் புதல்வர்களான கௌரவர்களும் அஸ்தினாபுர ராஜ்ஜியத்தின் சட்டப்பூர்வமான வாரிசுகளாகி இருப்பார்கள். பாண்டுவின் மைந்தர்களான பாண்டவர்களுக்கு, ராஜ்ஜியத்தில் பங்கு கோர உரிமையில்லை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடுதான், கௌரவர்களை உரிமை கோர விடாமல் தடுத்த சட்ட முட்டுக்கட்டை. இந்த விஷயத்தை சரியாகப் புரிந்துகொண்டவர்கள், துரியோதனனைக் கெட்டவன் என்று சொல்லப் பலமுறை யோசிப்பார்கள். மாற்றுத்திறனாளி என்பதால், தன் தந்தைக்கு அரச பதவி வகிக்கத் தகுதியில்லை என்ற சட்ட நிலைப்பாட்டை துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், ராஜ்ஜியம் திருதராஷ்டிரனின் வாரிசுகளான தங்களுடையது என்பதிலும் பாண்டு புத்திரர்களுக்கு அதில் உரிமை கோர அருகதையில்லை என்பதிலும் அவன் திடமாக இருந்தான். அதிலும் பாண்டவர்கள் உண்மையில் பாண்டுவின் புத்திரர்கள் இல்லை என்பதும் அவனை  அவனுடைய நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வைத்தது. மேலும், பாண்டு இறந்து போன பின்பு, திருதராஷ்டிரன் உயிரோடு இருந்து, மன்னனாக ஆட்சிபுரிந்துகொண்டு இருக்கும்போது, யுதிஷ்டிரன் அல்லது தருமபுத்திரனுக்கு இளவரசனாகப் பட்டம் சூட்டுவது முறையில்லை என்பதும் அவன் கருத்தோட்டத்திற்கு வலு சேர்த்த இன்னொரு முக்கியமான அம்சமாகும். (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

5. கர்ணன் பாண்டு புத்திரனா? மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய – சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர் இதுபோல் பலமுறை சட்டங்கள், தர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். கர்ணனை, குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் ஏனைய பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் மகனாக வீடுமன் கருதவில்லை என்பதைப் பார்த்தோம். ஏன்?கர்ணன் பிறந்தபோது, குந்திதேவி திருமணமாகாத பெண். கர்ணன் பிறந்த பின் திருராஷ்டிரனின் தம்பி பாண்டுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். பின்னர், பாண்டு சல்லியனின் தங்கை மாத்ரியை, இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்கிறான். பாண்டுவிற்கு, தன் திருமணத்திற்கு முன்பு குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் இருப்பதே தெரியாது. இந்த நிலையில், பாண்டுவும் குந்திதேவியும் மாத்ரியும் வனத்திற்குப் போய் விளையாடிக் களித்துக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவம் எடுத்து கலவியில் ஈடுபட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். முனிவரும் அவரது பத்தினியும் மான் வேடத்தில் இருப்பதை அறியாத பாண்டு, மான் வேடத்தில் இருந்த ரிஷியை அம்பெய்திச் சாய்த்தான். மரணத் தருவாயில் இருந்த ரிஷி, ‘அயோக்கியனே, நீ எந்த ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டாலும் அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாக வெடித்து நீ இறந்துபோவாய்’ என்று சபித்துவிட்டு இறந்துவிட்டார்.அந்த சாபத்தினால் மனமுடைந்துபோன பாண்டு, தன்னுடைய இரு மனைவியரையும் தொடாமலேயே பிரம்மச்சாரியைப் போல் வாழ்ந்து வந்தான். அஸ்தினாபுரத்தின் மன்னான பாண்டுவிற்குக் குழந்தைப் பேறு வாய்க்க வாய்ப்பே இல்லை என்பது, பாண்டுவைக் கடும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில்தான் குந்திதேவி, ‘முன்னொரு சமயம் துர்வாசமுனிவர் தனக்கு, தான் விரும்பும் யாரையும் அழைத்து உறவுகொண்டு குழந்தைப் பேறு அடையும் மந்திரத்தை’ வரமாகத் தந்திருப்பதைப் பாண்டுவிற்குத் தெரிவித்தாள். அப்போதும், தான் கன்னியாக இருந்தபோதே சூரிய தேவனிடம் அதைப் பரீட்சித்துப் பார்த்து, கர்ணனைப் பெற்றெடுத்த சம்பவத்தைப் பாண்டுவிடம் சொல்லாமல் குந்திதேவி மறைத்துவிட்டாள். அந்தக் குழந்தையை ஆற்றோடு விட்டுவிட்டதே கர்ணனின் துயரங்களுக்குக் காரணமாய் அமைந்தது. துர்வாசர் தந்த வரம் பற்றிக் குந்திதேவி சொன்னதைக் கேட்டு, பாண்டு அகமகிழ்ந்தான்.அந்த மந்திரத்தைத் தனது இரண்டவாது மனைவியான மாத்ரிக்கும் சொல்லித்தரும்படி பாண்டு குந்திதேவியிடம் சொன்னான். அதன்படியே, அந்த மந்திரத்தைக் குந்திதேவி மாத்ரிக்கும் சொல்லிக் கொடுத்தாள். குந்திதேவி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தருமதேவனை (எமதர்மன்) வரவழைத்து, அவன் மூலம் தருமன் என்கிற யுதிர்ஷ்டனைப் பெற்றெடுத்தாள். பின்னர் வாயு பகவானை வரவழைத்து, பீமனைப் பெற்றெடுத்தாள். கடைசியாக இந்திரன் மூலம் அர்சுனனைப் பெற்றெடுத்தாள். அதேபோல் மாத்ரி, அஸ்வினி சகோதரர்களை வரவழைத்து நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பெயருள்ள ஐவரையும் குடிமக்கள் அனைவரும் பாண்டவர்கள் என்று அழைத்தனர். பாண்டவர்களைப் பாண்டுவின் சம்மதத்தின் பேரில் பாண்டுவின் மனைவியர் வெவ்வேறு தேவர்கள் மூலம் பெற்றெடுத்ததால் பாண்டு அவர்களை, ‘தனக்கே பிறந்த தன்னுடைய வாரிசுகள்’ என்று ஏற்றுக்கொண்டான். அதனால் அவர்கள் ‘பாண்டுவின் புத்திரர்கள்’ ஆவார்கள். அதாவது மகாபாரதக் காலத்தில், ஒரு பெண் தன் கணவனின் சம்மதத்தோடு, வேறு ஆண்களோடு உறவுகொண்டு பெற்ற பிள்ளைகள், கணவனின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பாண்டவர்களுக்கு மூத்தவனான கர்ணன், குந்திதேவிக்கு பிறந்தது பாண்டுவிற்கு மரணம் வரை தெரியாத ரகசியம். அதனால் பாண்டுவிற்குத் தெரியாமலும் பாண்டுவின் சம்மதமின்றியும் பிறந்த கர்ணன் பாண்டுவிற்குப் பிறந்த மகனாகவும் வாரிசாகவும் கருதப்படமாட்டான் என்பதும் பீஷ்மர் சொன்ன இன்னொரு சட்டவிதி. அதாவது, கர்ணன் குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் பாண்டவர்களின் மூத்த அண்ணனாக இருந்தாலும் அவன் பாண்டுவின் மகனாகமாட்டான் என்பதால் பாண்டவர்களைப் போல அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரும் உரிமையுள்ளவனாக மாட்டான் என்பது, தத்து எடுப்பது சம்பந்தமாக அப்போதைய நடைமுறையில் இருந்த சட்டவிதி. கர்ணனே அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை இல்லாதவன் என்பதால், விருஷகேதுவுக்கும் உரிமை கிடையாது என்பதை சொல்லத் தேவையில்லை.இதுதான் மகாபாரதம் சொல்லும் பாரதக் கலாச்சாரம் என்றால் பலர் ஆச்சர்யப்படக் கூடும். இந்த மகாபாரதக் கால வாரிசுரிமைகள், இத்தனை தூரம் வளைந்து போவதற்கும் ஆதிக் காரணம் பீஷ்மர்தான். எப்படி?(வரும் புதன்கிழமை பார்க்கலாம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

4. பீஷ்மர் சொன்ன சட்ட விதி சரியா? நேர்க்கோட்டில் வியாசரால் சொல்லப்ட்ட மகாபாரதத்தை ரசிப்பதுடன், வியாசராலும் மக்களாலும் சேர்க்கப்பட்ட உபகதைகளையும் ரசிப்பதும் மகாபாரம் முன்வைக்கும் சில சட்டப் பிரச்சனைகளை, அதாவது, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உற்று நோக்குவதும் ‘பாரதக் கலாச்சாரம்’ என்பது மாற்றமில்லாமல் ஒரே கலாச்சாரமாக நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரமா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்பதுதான்  இந்தப் பெரிய கட்டுரையை எழுதுவதற்கான உந்துதல் ஆகும். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கௌரவப் படையின் முதல் தலைமைச் சேனாதிபதியான பீஷ்மர், 10ஆம் நாள் போரில் வீழ்ந்தார். அதன் பின்னர் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான துரோணர் 15ஆம் நாள் கொல்லப்பட்டார். அதன்பின் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான கர்ணன் 17ஆம் நாள் போரில் கொல்லப்பட்டான். கர்ணன் இறந்தபோது, அவன்தான் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரிந்தது. அதனால் கர்ணன் இறந்ததும் யுத்தம் தற்காலிகமாக நின்றுவிட்டது. பாண்டவர்களும் கௌரவர்களும் மாளாத துக்கத்தில் மூழ்கினர். கர்ணனுக்கு விருஷகேது என்ற மகன் இருந்தான் அவன் கர்ணனின் 10 மகன்களில் உயிரோடு இருந்த கடைசி மகன். அவன் கௌரவப்படையில் சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் செய்து வந்தான். கர்ணனின் மகனை மன்னனாக்குவதில் தர்மனுக்கும் துரியோதனனுக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தை அத்தோடு நிறுத்திவிட்டு, கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டிவிடலாம் என்று கௌரவர்களும் பாண்டவர்களும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும் இதுபற்றி பீஷ்மரிடம் ஆலோசனை பெற விரும்பினர். பீஷ்மர் அப்போது அம்புகளினால் ஆன படுக்கையில் படுத்திருந்தார். அவர், சூரியன் தெற்குத் திசையில் பயணிக்கும் தட்சிணாயணப் புண்ணிய காலத்திலோ அல்லது வடக்குத் திசையில் பயணிக்கும் உத்ராயணப் புண்ணிய காலத்திலோ, விரும்பும்போது மரணமடைந்துகொள்ள வரம் பெற்றிருந்ததால், பீஷ்மர் குருக்ஷேத்திர யுத்தகாலம் முழுவதும் உயிரோடு இருந்தார். அவர் குலத்தின் பிதாமகன் என்பதால், கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டுவது பற்றி, அவரிடம் இரு தரப்பினரும் ஆலோசனை கேட்டனர். பீஷ்மர், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். இறந்துபோன கர்ணனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் விருஷாலி. அவள் துரியோதனனின் தேரோட்டியின் மகள். அந்த முதல் மனைவிக்கும் கர்ணனுக்கும் பிறந்த மகன்தான் விருஷகேது. கர்ணனின் இரண்டாவது மனைவி சுப்ரியா. துரியோதனின் மனைவியின் அந்தப்புரத்தில் பணியாற்றிய தோழி. விருஷகேது கர்ணனின் சூத்திர மனைவியின் மகன் என்பதால், அவன் குலத்தினால் சூத்திரன் என்றும் அதனால் அஸ்தினாபுரத்தின் மன்னனாக அவனுக்குத் தகுதியில்லை என்றும் ஒரு சத்திரியன் மட்டுமே மன்னனாகத் தகுதி உள்ளவன் என்றும் பீஷ்மர் சொன்னார். அதனால் கர்ணணின் மகனுக்கு முடி சூட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிவிடுகிறார். அதனால் அந்த  ஆலோசனை கைவிடப்பட்டது. யுத்தத்தைத் தொடர்வது என்றும் முடிவாயிற்று. அதுவரை கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்துவந்த கர்ணனின் மகன் விருஷகேது மட்டும் பாண்டவர் அணியில் சேர்ந்துகொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டான். பீஷ்மர் விருஷகேதுவுக்குப் பட்டம் சூட்டுவதை நிராகரித்ததன் காரணமாகப் போர் மேலும்  நீடித்தது. இல்லையேல் 17ஆவது நாளிலேயே குருக்ஷேத்ர யுத்தம் முடிவிற்கு வந்திருக்கும். கர்ணனின் மகனேயானாலும் விருஷகேது சூத்திரன் என்பதாலும் சத்ரியன் இல்லை என்பதாலும் அவன் முடிசூட்டிக் கொள்ளத் தகுதியற்றவன் என்று பீஷ்மர் சொன்ன சட்டவிதியின் காரணமாக, மேலும் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோனார்கள். மகாபாரதக் காலத்துச் சட்டம் சூத்திரன் – சத்திரியன் என்ற பாகுபாடு பார்க்காமல் இருந்திருந்தால், இந்த அநியாயமான மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். இந்தச் சட்டவிதி இந்தக் காலம் வரை தொடர்ந்திருந்தால், அதாவது, அதே கலாச்சார விதிகள் இப்போதும் தொடருமானால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகவும் வைசிய வகுப்பைச் சேர்ந்த தாமோதரதாஸ் நரேந்திர மோடி பிரதமராகவும் ஆகியிருக்க முடியுமா? முடியாதல்லவா..? மராட்டிய வீரர் சிவாஜியும் இதே பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. வீர சிவாஜி மீனவ வகுப்பைச் சேர்ந்தவர். சத்திரியர்கள்தான் மன்னனாக முடிசூட்டிக்கொள்ள முடியும் என்று பார்ப்பனர்கள் சொன்னதால், வீர சிவாஜி பெரும் பொருட்செலவில் காசிக்கு ஆள் அனுப்பி ‘காகா பட்டர்’ என்ற பார்ப்பனரை மகுடம் அணிவிக்க அழைத்து வரச் செய்தார். காகா பட்டர் பண ஆசை பிடித்த பைசாசம். ‘பரிகாரம் செய்து, மீனவ குலத்தைச் சேர்ந்த வீர சிவாஜிக்குப் பட்டாபிஷேக விழா நடத்தித் தருகிறேன்’ என்று கூறி, சிவாஜி சேர்த்து வைத்திருந்த திரண்ட செல்வம் முழுவதையும் அபகரித்துக்கொண்டான். அதன் பிறகும் அவனுடைய சாதித் திமிர் போகவில்லை.  இதை ‘வீர’ சிவாஜியால் தாண்டிப் போக முடியவில்லையே..! பாரத கலாச்சாரம் மாறாமல் தொடர்கிறது என்பது சரியா..? பீஷ்மர் சட்டப் பிரச்சினைகளைச் சொன்னது இப்போதுதானா..? (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

3. பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் ஒரே இலக்கு மகாபாரதத்தில் வரும் உப கதைகள் வியாசருடையதா அல்லது பிறருடையதா என்ற கேள்வியை முந்தைய பதிவில் கேட்டு வைத்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உப கதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியமாக மாற்றம் கொண்டிருக்கின்றன என்ற எமது கருத்தையும் சொல்லி வைத்தோம். தொடர்ந்து இன்னும் சில கதைகளைப் பார்ப்போம். காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் முடித்தபின்பு, பீஷ்மருக்கு ஒரு ரகசியம் தெரியவருகிறது. அதாவது, ஜாதகப்படி காந்தாரியின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்றும் அதனால் காந்தாரி விதவையாகிவிடுவாள் என்பதும் அவளுடைய ஜாதக அமைப்பு என்று சோதிடர்கள் சொன்னார்கள். அதற்குப் பரிகாரமாக, காந்தாரியை ஒரு ஆட்டிற்குத் திருமணம் செய்துகொடுத்து, அந்த ஆட்டினை காந்தாரியின் முதல் கணவனாகக் கருதிக் கொன்றபின், அவளை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அந்த வகையில் திருதராஷ்டிரனுடனான அவள் திருமணம் அவளுக்கு இரண்டாவது திருமணம் மட்டுமல்ல, விதவா திருமணமும் ஆகும். இந்த உண்மை, திருதராஷ்டிரனின் திருமணத்தின்போது பீஷ்மரிடம் சொல்லாமல் மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மை தெரிந்ததும் பீஷ்மரால் கோபத்தை அடக்க முடியவில்லை. காந்தாரியின் தந்தையையும் சகுனி உட்பட காந்தாரியின் நூறு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். அனைவருக்கும் சேர்த்து அவர்கள் உயிர்வாழ நூறு சோற்றுப் பருக்கையும் ஒரு நத்தை ஓட்டில் தண்ணீரும் கொடுத்தனர். குருவம்சத்தினர், தங்கள் கைதிகளுக்கு சோறும் தண்ணீரும் கொடுக்காமல், பட்டினி போட்டுக் கொன்றனர் என்ற பழி வராமல் இருக்க இந்த விசித்ரமான ஏற்பாடு. ஆனால் காந்தார (இன்றைய ஆப்கானிஸ்தான்) இளவரசர்கள் ஆலோசனை செய்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பருக்கையைத் தின்று உயிர் வாழ்வது முடியாதகாரியம் என்பதால், நூறு பருக்கைகளையும் இளையவனான சகுனிக்குக் கொடுத்து அவனை உண்ண வைத்து, அவன் மட்டுமாவது உயிர்வாழ்ந்து குருவம்சத்தைவேரறுக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர். அந்த யோசனையின்படியே சகுனியை மட்டும் உயிர்வாழ வைத்துவிட்டு, மற்றவர்கள் இறந்துவிட்டனர். சகுனியின் தந்தை இறப்பதற்கு முன்பு தன்னுடைய நடுவிரல்களை உடைத்து, இரண்டு தாயக்கட்டைகளைச் செய்து சகுனியிடம் கொடுத்து, அந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கும் எண்களையே போடும் என்று வரம் தந்துவிட்டு இறந்து போகிறான். இந்த தியாகத்தை, குரு வம்சத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர்கள் செய்கிறார்கள். அந்த முறையில் பார்த்தால், பூமியின் பாரத்தைக் குறைப்பது, அதாவது மனிதக் கூட்டத்தைக் கொன்றழிப்பது என்ற, யோசித்தால் நாகரிகத்தில் மிகவும் கீழ்மையான அவதார நோக்கம் கொண்டு வந்திருக்கும் யாதவ குல வாசுதேவ கிருஷ்ணன் என்ற கிருஷ்ண பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே நோக்கம் என்பது வியாசர் இதிகாசத்தில் வியப்பைத் தருவதாகும். ஏனெனில், இதிகாச நாயகன் கிருஷ்ணன் என்றால் இதிகாச வில்லன் சகுனி. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் ஒரே நோக்கத்தையே இலக்காக வைத்தஒரே ஒரு இதிகாசம் மகாபாரதம்தான். இதில் யார் நல்லவர் என்பதும் யார் கெட்டவர் என்பதும் விடை காண முடியாத கேள்வி. மகாபாரதத்தில் எத்தனை உபகதைகள் இருக்கின்றன என்று ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு, மகாபாரதத்தை ‘மண்-பொன்-பெண்-ஆசைகூடாது’ என்று ஒரே வாசகத்தில் சொல்லவும் முடியும்; பல்லாயிரம் பக்க அளவிற்கு விரிவுபடுத்தியும் சொல்லமுடியும் என்பது புரியும். இந்த பீஷ்மர் எப்போதெல்லாம் சட்டங்களை நீட்டினார் என்பதைத் தொடர்ந்து பார்க்கப் போகிறோம்.. (மீண்டும் புதன்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தை, பலர் பலமுறைகளில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். பல விதங்களில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். மகாபாரத மீள் வாசிப்புகளும் விவாதங்களும் பாரதி தொட்டு, தற்காலத்தில் பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று நீள்கிறது. அவ்வகையில், எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் ஞானபாரதி சின்னச்சாமி அவர்கள் மகாபாரத உபகதைகளை எடுத்துக்கொண்டு, மகாபாரதக் காலத்துச் சட்ட விதிகளை – சமூக விதிகளை விவாதிக்கிறார். அவரது விசாரணைகள் சுவடு இணையத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடராக வெளியாகும் – சுவடு ஆசிரியர் குழு 1. அறிமுகம் இதிகாசமும் உபகதைகளும் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியப் படைப்பை, அதன் வேறொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காட்டுவதற்கான சிறு முயற்சி இது. இதிகாசம் என்பதற்குப் பல அர்த்தங்களும் இலக்கணங்களும் சொல்லப்படுகின்றன. மதவாதிகள், கடவுள் ஒரு நோக்கத்திற்காக மனித உருவில் பூமிக்கு வந்து, வாழ்ந்து, திரும்பவும் மேலுலகம் செல்லும் வரையில் உள்ள கதையைச் சொல்வது இதிகாசம் என்று சொல்கின்றனர். இதிகாசங்கள், அவை இயற்றப்பட்ட காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சமூக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பண்டைக் கால வாழ்க்கை முறையைப்பற்றி அறிந்துகொள்கிற அக்கறையும் முனைப்பும் இல்லாதவர்களோ, ‘இதிகாசம் என்பது ஆபாசக்குப்பை’ என்று முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறார்கள். மகாபாரதத்தை, அதன் பிரம்மாண்டமான வடிவமைப்பையும் கதாபாத்திரங்களையும் அதில் உலவும் எண்ணிலா நுட்பங்களையும் மனதில் கொண்டு, அதற்கு இணையான படைப்பு எதுவுமில்லை என்பதால் அதை இதிகாசம் என்று கொண்டாடுவோரும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், ஒரு இதிகாசம் என்பது அதில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும், ‘பின்னிட்டு விளக்கவும் முன்னிட்டு விளக்கவும்’ தக்க சுவாரசியமான உபகதைகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதும், அதுபோன்ற உபகதைகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கத்தக்க இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதுமே இதிகாசத்தின் பல இலக்கணங்களில் முக்கிய இலக்கணம் என்று கருதுகிறேன். அவ்வாறே மகாபாரதத்தில் பலப்பல உபகதைகள் சேர்க்கப்பட்டும் உள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்ட உபகதைகள் மூலமாக, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உசாவிப் பார்க்க முடிகிறது என்பதும் அவை மீறப்பட்ட தருணங்களை ஆராயவும் முடிகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கன. அதுமட்டுமின்றி, அந்த ஆய்வுகளின் வழியாக, இன்று இதிகாசங்கள் சொல்வதைத் தங்களுக்கு ஏற்றாற்போல் திரித்துக்கொண்டு, பாரத கலாச்சாரம் என்பதாக நடப்பியலில் பரப்புவதை மறுக்க முடியும். இராமாயாணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே, மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உபகதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியம் என்பது என் அப்பிப்பிராயம். அத்தகையதொரு இதிகாசத்தை எவ்வளவு பெரிய மூளை படைத்த அசுர எழுத்தாளனாலும் இன்றைக்கு எழுதிவிட முடியாது என்பதும் அவ்வளவு உபகதைகளை தக்க இடத்தில் சேர்க்க முடியாது என்பதும் பல படைப்பாளிகளின் பிரதானமான வாதம். இன்று எந்த ஒரு தனிப் படைப்பாளியாலும் அதுபோலத் தன் படைப்பில் நிகழ்வுகளின் காரண காரியத்தை விளக்க உபகதைகளை சேர்க்கத்தக்க இடத்தை உருவாக்கித் தரமுடியாது என்பதில் சந்தேகமில்லை. அவற்றில் ஒளிந்திருக்கும் மகாபாரதக் காலச் சமூக விதிகளைப் பார்க்கலாம், வாருங்கள். 2. பெண்கள் இரகசியத்தைக் காப்பதில்லையா? நாடு முழுவதும் பேசப்படும் கர்ணனைப் பற்றிய உபகதைகளைச் சேகரித்தால், அது ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றனர். அவற்றில் மிகப்பல வியாசரே சேர்த்தவை. மற்றவை, தங்கள் கற்பனா வளத்தின் மூலம் யாரால் சேர்க்கப்பட்டது என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாத வண்ணம் மக்கள் சேர்த்தவை. கிருஷ்ணனின் அண்ணனான பலராமனின் மகள் வத்சலாவின் திருமணத்திற்கு, துரியோதனன் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்புகிறான். அதில் முக்கியமானது கண்ணாடி பதித்த ஒரு மாயப் பேழை. அந்த மாயப்பேழையின் சிறப்பு என்னவென்றால், அந்தப் பேழையின் மேல் யார் ஏறி நின்றாலும் அவர்கள் எவ்வளவு திடசித்தத்தோடும் கட்டுப்பாடோடும் இருந்தாலும் அவர்களுடைய உள்மனத்தில் வெளி உலகம் அறியாவண்ணம் மறைத்து வைத்திருக்கும் பிடித்தமான நபர் அல்லது ரகசியத்தை அது வெளிப்படுத்திவிடும். திரௌபதி மாயப் பேழையில் ஏறி நிற்க மிகவும் தயங்கினாள். மிகவும் வற்புறுத்தி மாயப்பேழையில் திரௌபதியை ஏறி நிற்கவைத்தபோது மாயப் பேழையின் கண்ணாடியில் வசீகரச் சிரிப்புடன் கர்ணன் தோன்றினான். கர்ணனைப் பார்த்ததும் திரௌபதி வியர்த்து விறுவிறுத்து மயங்கிவிடும் நிலைக்குப் போய்விட்டாள். அன்றுதான் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரௌபதி, கர்ணனையும் காதலிக்கிறாள் என்ற மர்மம் அம்பலமாயிற்று. இன்னொரு உபகதையைப் பார்ப்போம். கர்ணன் படுகளத்தில் வீழ்ந்த பின்புதான், குந்திதேவி ‘மகனே.. என் மகனே..’ என்று அரற்றிக்கொண்டு, அழுது புலம்பியபடி கர்ணனைத் தேடிவருகிறாள். அப்போதுதான் பாண்டவர்களுக்கு, தங்கள் தாய் குந்தியின் மகன்தான் கர்ணன் என்பதும் அதனால் கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்பதும் தெரியவந்தது என்று மகாபாரதம் சொல்கிறது. கர்ணன் பாண்டவர்கள் அனைவருக்கும் மூத்தவன். துரியோதனனின் உயிர் நண்பன். ஆகவே ஒரு வாதத்திற்காக, ‘கர்ணன் தங்களுடைய அண்ணன் என்று தெரிந்திருந்தால் பாண்டவர்களும் ராஜ்ஜியத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்கள். துரியோதனனும் மனமுவந்து ராஜ்யத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பான்’ என்று வைத்துக்கொண்டால், குருக்ஷேத்திர யுத்தத்தில் இரு தரப்பிலும் 10 பேரைத் தவிர போரில் பங்குகொண்ட அனைவரும் மரணமுற்று இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. குந்திதேவி இந்த ரகசியத்தைக் கர்ணனின் மரணத் தருவாய் வரையில் பாதுகாத்து வைத்திருந்ததால்தான் இவ்வளவு உயிர்ப்பலி ஏற்பட்டது என்பது தருமபுத்திரனைக் கடும் சினம் கொள்ள வைத்தது. ஏனெனில், ‘பட்டத்திற்குரியவனைக் கொன்றுவிட்ட பின்பு பெற்ற வெற்றியினால் என்ன பயன்?’ என்று தருமன் மனம் கொந்தளித்தது. அதனால் ‘பெண்களுடைய மனத்தில் இனி ரகசியமே தங்கக் கூடாது’ என்று தருமன் குந்தி தேவியைச் சபித்தான் என்பது ஒரு உப கதை. பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பது பிற்போக்கான கருத்துதான். ஆனால் அதைக் கல்வி அறிவு இல்லாத நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், வெறும் போகப் பொருளாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இருந்த பெண்கள், பொழுதுபோக்காக அரட்டை அடிக்கும்போது, ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதாகப் பார்க்கிறோம். குந்திதேவி இந்த ரகசியத்தை நெடுங்காலம் பாதுகாத்து வந்ததற்குக் காரணம், அது குந்திதேவியின் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்பதுதான் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமாகும். இந்த இரண்டு விஷயங்களையும் இவ்வளவு விரிவாகச் சொல்லக் காரணம், இவை இரண்டும் இரு சுவாரசியமான உபகதைகள் என்பதுதான். ‘பெண்களின் மனத் தில் ரகசியம் தங்கக்கூடாது’ என்று தர்மபுத்திரன் கொடுத்த சாபம் பாலியல் சம்பந்தப்படாத விஷயங்களில் மட்டுமே பலனளித்தது போலும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் எனது நண்பர். (தொடரும் )