கரைசேராப் படகுகள் – 7

கரைசேராப் படகுகள் – 7

தொடர்கதை` வேகவேகமாக நான்கு கால் பாய்ச்சலில் வாய்க்கால் வரப்பெல்லாம் தாண்டி நடந்தார் செந்தாமரை. நான்கு வயல் தாண்டியதும் மாணிக்கம்  முன்னால் செல்வது தெரிந்தது. இங்கிருந்து சத்தமாகக் கூப்பிட்டார் செந்தாமரை;  “எலே மாணிக்கம்.. எலே மாணிக்கம்….” என்று கத்தினார். மாணிக்கம் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றுகொண்டான். கிட்ட நெருங்கியதும் மாணிக்கத்தைப் பார்த்து, “ஏதோ விசயமா விரசா போற போலிருக்கு” – எங்கே  செல்கிறாய் என்று கேட்காமல் நாசூக்காகக் கேட்டார். “ஆமாண்ணே, பெரிய கருப்பன் வீட்ல மாடு பிடிக்கறதுக்காக மாம்பாக்கம் போறண்ணே” என்று மகிழ்வாகச் சொன்னான் மாணிக்கம். “நல்லதா போச்சு; நானும் என் சின்ன மவள கொடுத்த வீட்டுக்குத்தான் போய்கிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவனுடன் சேர்ந்து நடந்தார் செந்தாமரை. “ஏம்பா.. மாடு வாரத்துக்கு பிடிக்கப் போறயா? மொத்தமா பிடிக்கப் போறயா?” என்று கேட்ட செந்தாமரைக்கு, “விலைக்குதான்ணே.. நல்ல  கறவை மாடா வேணும்ணே” என்று சொல்லிவிட்டு, “ரெண்டு பொட்ட புள்ள ஆயிடுச்சி. அதுங்களுக்குக் கல்யாணம் காட்சின்னு பாக்கணும். காடு கழனியை மட்டும் நம்பி என்ன பண்றதுண்ணே? அதான் மாடு வாங்கலாம்னு” இழுத்தா மாதிரி சொன்னான் மாணிக்கம். “அதுவும் சரிதான்; நல்ல ரோசனைதான்” என்று சொல்லிக்கொண்டே தலையை அண்ணாந்து பார்த்தார். மணி 12 இருக்கும் என நினைத்துக் கொண்டு, “எலே.. இது கோணங்கி வீட்டுக் கிணறுடா; தண்ணி தேனாட்டம் இருக்கும்” என்று சொன்ன செந்தாமரை, படியில இறங்கி தண்ணீரைக் கையில் அள்ளிக் குடிக்க, மாணிக்கமும் இணைந்துகொண்டான். துண்டை ஈரமாக்கி  வெயில் தெரியாமல் இருக்க, தலையில போட்டுக் கொண்டு நடந்தார்கள் இருவரும். மாம்பாக்கம் வந்ததும், “அண்ணே, நீங்க சம்பந்தி வீட்டுக்கு போயிட்டு, கருப்பன் வீட்டுக்கு வந்து மாடு வாங்கித் தாங்கண்ணே” என்றான் மாணிக்கம். “வேலியில போன ஓணானை வேட்டியில விட்ட கதையாயிடுச்சே; வயல்ல வெள்ளாமை இருக்கு, இவன்கிட்ட வியாபாரம் பேசறது தெரிஞ்சா மரகதம் வைவாளே” என்று மனதிற்குள் புலம்பினார். ஆனால் வாய் “வரேன் மாணிக்கம்” என்றது. சம்பந்தி வீட்டுக்குப் போனதும், “தங்கச்சி.. தங்கச்சி…” என்று கூப்பிட்டார். “அடடே! வாங்கண்ணே… என்று வரவேற்றபடி புனிதாவின் மாமியார் பவுனு  வெளியே வந்தார். “புள்ள பெத்த தீட்டு உள்ள வரக்கூடாது; இங்கேயே உட்காந்துக்கறேன்” என்று துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார் செந்தாமரை. “புனிதாவும் பேத்தியும் எப்படிண்ணா இருக்காங்க? எங்கண்ணா வயல் வேலை அதிகமா இருக்கு; கை உழைச்சாதான் கஞ்சிங்கற கதையா இருக்கு. இப்பகூட பொட்ட புள்ளைங்களும் அவரும் வயக்காட்டுலதான் இருக்காங்க. பேத்திய கூட வந்து பாக்க முடியல” என்று புலம்பினாள் பவுனு. “ஏழாம் காப்புக்கு குடும்பத்தோட வந்துடுங்கன்னு சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” என்றார் செந்தாமரை.   “ஆமாண்ணே, என் பேத்திக்குக் காப்பு செய்து போடணும். புள்ள பணம் அனுப்பவே இல்ல, வர்றது வயிறுக்கும் வாய்க்குமே பத்த மாட்டேங்குது” என்று பஞ்சப் பாட்டு பாடினாள் பவுனு. “அதனாலென்ன, காப்புதானே? நான் பார்த்துகறேன்” என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு, “மச்சான் வந்தா சொல்லிடுமா” நான் கிளம்பறேன் என்றார். “இருங்கண்ணே, சாப்பிட்டு போவீங்க” என்ற பவுனிடம்  “வேணாம்” என்று மறுத்துவிட்டுக் கிளம்பினார். வழியெல்லாம், ‘அறுவடைச் செலவையே எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை; இப்ப காப்பு செலவு வேறயா?’ என்று கவலைப் பட்டுக்கொண்டே வந்தார், கருப்பன் வீட்டுக்குச் சென்று மாட்டைப் பல்லு பிடித்துப் பார்த்தார். மடியில  கை வைத்துப் பார்த்தார். “என்ன மாணிக்கம், விலை பேசிடவா?” என்று கேட்டார். “ஆமாண்ணே, பேசி முடிச்சிடுங்க” என்றான் மாணிக்கம். கருப்பனும் செந்தாமரையும் துண்டைப் போட்டு விரலைப் பிடித்து விலை பேசினார்கள். ரொம்ப நேரம் பேரம் பேசி, கடைசியாக மாணிக்கத்திற்குத் திருப்தியாக விலையை முடித்துக் கொடுத்தார். மாட்டை ஓட்டிகொண்டு கிளம்பி வந்தான் மாணிக்கம். வரும் வழியெல்லாம் “;அந்த ஐயனாரப்பன்தான் உங்களைப்போல வந்து, எனக்கு மாடு வாங்கி கொடுத்தாரு” என்று  செந்தாமரையைப் புகழ்ந்து கொண்டே வநதான் மாணிக்கம். வயக்காட்டில் எல்லாரையும் விரட்டி வேலை வாங்கிக்கொண்டு இருந்தாள்  மரகதம். “கதிரெல்லாம் சீக்கிரம் களம் போய்ச் சேரணும். உங்க ஆண்ட வந்தார்னா என்னை ஆஞ்சிடுவார் ஆஞ்சி” என்று விசனப்பட்டாள். “அடியே.. அருக்காணி.. வாய்க்கால் ஓரத்துல கொஞ்சம் காச்சற கீரைய பறிச்சுக் கொடேன்” என்று அதிகாரம் பண்ணினாள் மரகதம். “புள்ள பெத்தவளுக்கா கீரை?” என்று அதிர்ந்தாள் அருக்காணி. “வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்; கத்தாழ முள்ளு கொத்தோட புடுங்குசாம்னு,  நடிக்காதடி. புள்ள பெத்தவளுக்கு எங்கனயாவது கீரை தருவாங்களாடி?” என்று அதட்டலாகச் சொன்னாள் மரகதம். கதிர் எல்லாம் களம் வந்து சேர்ந்ததும், கட்டெல்லாம் எண்ணி வைக்கோல் பிரி போட்டுக் கட்டி, மூலைக்கு மூலை அடையாளம் வைத்துவிட்டு  மாமனுக்காகக் காத்திருந்தாள் மரகதம். வயக்காட்டில் வேலை செய்த பெண்கள் எல்லாம் வாய்க்கால் தண்ணியில் குளித்துவிட்டு, முந்தானையைப் போட்டு அந்த வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்ப்பதற்கு வானில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் நிலவு ஓடி ஓடிப் பிடிப்பது போல அழகாக இருந்தது. வயக்காட்டில் யாரும் இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தாள் மரகதம். தூரத்தில் ஓநாய் கத்தும் சத்தம் கேட்டது. ‘பச்ச உடம்புக்காரிக்கு சோறு போடணுமே; இந்த மனுசனை இன்னும் காணோமே’ என்று தவித்தாள். தூரத்தில் மாமன் மாடு பிடித்து வருவதைப் பார்த்ததும், குழம்பினாள் மரகதம். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 4 

கரைசேராப் படகுகள் – 4 

தொடர்கதை குழந்தை பெற்றெடுத்த எந்த உயிரினமாக இருந்தாலும் அகோரப் பசியில் இருக்கும். சில உயிரினங்கள் தன் குட்டியையே சாப்பிட்டுவிடும். அப்படி ஒரு பசியில்தான்  நாக்கு வறண்டு தண்ணீர் கேட்டாள் புனிதா. ஆனால் இந்தப் பட்டம்மா கிழவி அதைப் பிடுங்கிவிட்டதே என்ற கோபத்துடன், “ஏன் அத்தை, தண்ணி டம்ளர புடுங்கறீங்க?” என்று  கேட்டாள்  மரகதம்.  “பொசக்கெட்டவளே, புள்ள பெத்த உடனே தண்ணி குடிச்சா ஜன்னி வச்சிடும்” என்று ஆதங்கத்துடன் சொன்னார் பட்டம்மா. “இப்ப என்ன பண்றது? புள்ளைக்கு நாக்கு வறளுதே” என்று விசனப்பட்டாள் மரகதம். “சர்க்கரைத் தண்ணிய தொட்டு, பச்ச மண்ணு நாக்கிலும் புனிதா நாக்கிலும் தடவுங்க” பட்டம்மா பக்குவமாகச் சொன்னார். தாமரைமீது மோகம் கொண்டு ஆதவன் அதிவேகமாய் வரும் இளங்காலைப் பொழுது. ஆதவனைக் கண்ட வெட்கத்தில் ஆம்பலும் அல்லியும் மறைய, குளங்களில் தாமரைகள் பூத்துக் குலுங்கின.  மரகதம்  சாணத்தால் வாசல் மெழுகி, கோலம் போடாமல் விட்டாள். அப்பதான் தீட்டு வீடுன்னு பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஏழு நாளுக்கு அந்த வீட்டுடன் அன்னம் தண்ணி புழங்க மாட்டாங்க.  வீட்டு வாசலில் “அம்மா… தாயீ..” என்ற குரல் கேட்டு வெளியில் வந்த மரகதம், வாசலில் வண்ணாத்தி இருப்பதைப் பார்த்தாள்.  “வா சொக்கி.. ஏன் நேற்று துணி எடுத்துட்டு வரல?” என்று சற்று அதட்டலுடன் கேட்டாள். “வந்தேன் தாயீ, திண்ணையில பெரிய வூட்டு அய்யாமாருங்க எல்லாம் இருந்தாங்க, அதான் போயிட்டேன். பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காமே, ரொம்ப சந்தோசமுங்க”  என்று வெள்ளந்தியாகப் பேசினாள் சொக்கி.  “ஆமா சொக்கி, தீட்டு எடுக்கற அன்னிக்கு உனக்கு வெத்தல பாக்கு தரேன். இப்ப பாப்பா துணிய தனியா எடுத்துட்டுப் போ” என்று உள் அறையைக் காட்டினாள் மரகதம். “எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. புள்ள பெத்த வீடும் கல்யாண வீடும் ஒன்னுன்னு சொல்வாங்க. வாரவங்க போறவங்களை கவனிக்கணும்; புள்ள பெத்தவளை கவனிக்கணும். காடு கழனிய பாக்கணும். இந்த மனுஷன் வேற, ரெண்டு நாள்ல அறுவடைன்னு சொல்றாரு. ஆளுங்களுக்கு கூழாக்குவேனா? புனிதாவ கவனிப்பேனா? ஆத்தாடி, தலைய சுத்துதே!” என்று புலம்பிக்கொண்டே வேலைகளைத் தொடர்ந்தாள் மரகதம். “செந்தாமர.. டவுனுக்குப் போய் புனிதாவுக்கு வறுத்த ரொட்டி வாங்கிட்டு வா. இன்னிக்கு புனிதாவுக்கு அதுதான் சாப்பாடு”  என்று மகனுக்குக் கட்டளையிட்ட பட்டம்மா, “ஏன்டா, உன் மத்த மவளுக்கெல்லாம் சேதி சொல்லிட்டியா?” என்று பேத்திகளைப் பார்க்கும்  ஆர்வமுடன் கேட்டாள்.  “சொல்லி விட்டிருக்கு. அவளுங்க எல்லாம் ஏழாம் காப்புக்கு வர்ரோம்னு சொல்லியிருக்காங்க” என்றார் செந்தாமரை. “என்னமோ போடா, நீ பெத்தது மூனும் பொண்ணா போச்சேன்னு வெசனமா இருக்கு” என்று புலம்பிக்கொண்டே பட்டம்மா பாட்டி நெய்யை ஊற்ற, “யாரை நோவறது? விதைச்சவன் விதைச்சுட்டான்; விதி வழியே போவ வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டார் செந்தாமரை.  “ஏங்க காலையிலேயே எதுக்கு சலிச்சிகிட்டு? ஆகற வேலைய பாருங்க. போய் சுப்புடு ஐயரைப் பாத்து புள்ளைக்கு பேர் குறிச்சிட்டு  வாங்க” என்று செந்தாமரையைக் கிளப்பி சுப்புடு ஐயர் வீட்டிற்கு அனுப்பினாள் மரகதம்.  “மரகதம்….  மிளகு, சீரகம், தனியா, சுக்கு, ஓமம், திப்பிலி, இதையெல்லாம் பொன்னிறமா வறுத்து, அம்மியில வச்சு ஒட்ட ஒட்ட அரைச்சு, குழம்பு வைக்கணும். இனிமே மூனு மாசத்துக்கு இது மாதிரி பத்தியச் சாப்பாடுதான் தரணும்” என்று மரகதத்திற்கு விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்  பட்டம்மா.  பக்கத்துத் தெரு குப்புசாமி ரெட்டியார் கொல்லையில் களையெடுத்துக் கொண்டே  பெண்கள், ஊர்க் கதையை ஊறுகாய் இல்லாமல் வாயில் ஊறவைத்தனர்.  “ஏன்டி, நம்ம ஓட்டு வீட்டு  பட்டம்மா பாட்டி பேத்திக்கு பொண்ணு பொறந்திருக்காமே!”  என்று முனியம்மாவுக்கு மூக்கு வியர்த்தது.  “ஆமான்டி, பாவம் அவ புருசன் வரலன்னு அழுதுகிட்டு இருக்காளாம். எங்க இருக்கானோ?! உயிரோட இருக்கானோ, இல்லையோ! யாரு கண்டா? கல்யாணம் பண்ணி மூனு மாசத்துல விட்டுட்டு போனான்; இன்னி வரைக்கும் தகவல் இல்லையாம்”  என்று  அருக்காணி அளந்துவிட்டுக் கொண்டிருந்தாள்.  மனிதர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள், தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்கள். அந்த வார்த்தையின் பலன் பிறருக்குச் சொந்தம் என்பதை அறியாமலே பேசுகிறார்கள். இங்கும் அப்படித்தான், களையெடுத்துக் கொண்டே புனிதாவின் கணவனைப் பற்றி, தப்புத் தப்பாக தலைப்புச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர். “அருக்காணி, உன் வாயில நல்ல வார்த்தைகளே வராதா? பாவம் புனிதா, அவ புருசனைப் பத்தி அவச்சொல்லா சொல்ற. எல்லாம் மாசம் ஒரு தடவை கடுதாசி போடறானாம்” என்று நல்ல மனதுடன் பேசினாள் சிவப்பி.  “ஏன்? கடுதாசி போடற துரைக்கு ஒரு எட்டு வந்து பாக்க முடியாதாமா? அப்படி என்ன பொல்லாத வேலை? ஒருக்கால் அங்க ஏதாவது வீடு கீடு வச்சிருப்பானோ?” என்று திரையில்லாமல் படம் ஓட்டினாள் அருக்காணி.  “ஊரு கதைய உப்பில்லாம பேசறியே அருக்காணி, உன் புருசனை எங்க மூனு மாசமா காணோம்? அடிச்சி விரட்டிட்டியா?” என்று கடுப்புடன் கேட்டாள் சிவப்பி.  “என் கதைதான் ஊரு சிரிக்குதே! உனக்கு வேற தனியா சொல்லணுமா? அவன்தான் அந்த எடுபட்ட  சிறுக்கியை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டான். அதான் ஒரேயடியா போய் சேருடான்னு தலைமுழுகி விட்டுவிட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னாள் அருக்காணி. அருக்காணியைப் பொறுத்தவரை அவள் கதையாக இருந்தாலும், ஊர்க்கதையாக இருந்தாலும், மேளம் கொட்டாமல் தண்டோரா போடுவாள். இது அவள் இயல்பு. அதை யாரும் பெரிதாக எடுத்துக்க மாட்டாங்க. ‘குடிகாரக் கணவனிடம் உதைபட்டு வாழறதைவிட, தனியா உழைச்சு ரெண்டு புள்ளைங்களைக் காப்பாத்தறாளே’ன்னுதான் சந்தோஷப்படறாங்க. அருக்காணி ஒரு கொல்லையில் வேலை செய்தால், அங்கே ஊர் செய்தி முழுவதும் தெரிந்து கொள்ளலாம். இன்னிக்கு இப்பதானே தென்னன்டை  தெரு புனிதாவைப் பற்றி சொல்லியிருக்கா? இன்னும் வடக்குத் தெரு, நடுத் தெரு, வில்லித் தெருன்னு எல்லா செய்தியும் வரும். யார் யார் வீட்ல அடிச்சிகிட்டாங்க என்பதில் தொடங்கி, யார் வீட்ல என்ன சமையல் செய்தாங்க என்பது வரை அனைத்துச் செய்திகளுக்கும் குத்தகைக்காரி இந்த அருக்காணி. தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 3

கரைசேராப் படகுகள் – 3

தொடர்கதை மனிதன் பிறக்கும்போதே பல உறவுகளுடன்தான் பிறக்கிறான். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு எங்கோ பிறந்து வளர்ந்த ஆணும் பெண்ணும்  இணைகின்றனர். வெறும் மஞ்சள் கயிறும் மோதிரமும் மட்டுமா  இருவரையும் இணைக்கிறது?! அவை வெறும் அடையாளம் மட்டுமே. கணவன் – மனைவி உறவு என்பது பூர்வ ஜென்ம பந்தம், நம்பிக்கை இருப்பவர்களுக்கு; இந்த ஜென்மத்து சொர்க்கம் அன்பு இருப்பவர்களுக்கு. பிரசவம் முடிந்த மறுநொடியில், பிறந்திருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூட கேட்கத் தோன்றாமல், கணவனைத் தேடுகிறாள் என்றால், ‘எனக்குக் குழந்தை பிறந்தாலும்  அவர்தான் முக்கியம்’ என்று உணர்த்தும் மறைபொருள் இது என்பதை அனைவரும் அறிந்தனர். “அம்மாடி தாயே, நீ படிச்சிருக்க; உன் கணவரைப் பற்றி உனக்குத் தெரியாதா? நீதான் மனசைத் தேத்திக்கணும்” என்று செந்தாமரை, தன் மகளுக்கு ஆறுதல் கூறினார். “நீ பார்த்து வச்ச மாப்பிள்ளைதானே? அவ ஏன்டா மனசைத் தேத்திக்கணும்?” என்று மகன் மீது பாய்ந்தாள் பட்டம்மா பாட்டி.  மருத்துவச்சி குழந்தையை சுத்தப்படுத்தி, பழைய நூல் புடவையில் சுற்றி எடுத்து வந்து  செந்தாமரையிடம் காட்டினாள். ரோஜாக் குவியலுக்கு மத்தியில்  தாமரைப் பூ மலர்ந்திருப்பதைப் போன்று அந்தக் குழந்தை பூத்திருந்தது.  புனிதாவைப் போன்று அழகான பெண் குழந்தை. குழந்தையைப்  பார்த்ததும், முதலில்  அதன்  காதைத் திருப்பிப் பார்த்து, “என்  நிறமெல்லாம் வரமுடியாது” என்று அலட்டிக் கொண்டாள் அலமு பாட்டி.  “ஆமா, ஆமா. நீ  காக்கா சிவப்பாச்சே” என்று கிண்டலடித்தாள் பட்டம்மா  பாட்டி. “ஏம்பா செந்தாமரை, குழந்தை  உனக்குச் சொந்தமா? இல்ல, ஊருக்குச் சொந்தமா?” என்று  கோபால் நாயக்கர் கேட்டார்.   “என் பொண்ணு மாதிரியே  தங்கச்சிலை பொறந்திருக்கா  நாயக்கரே” என்று மகிழ்ச்சியுடன் வெளியில் இருந்த அனைவரின் கைகளையும் பிடித்துக் கொண்டார் செந்தாமரை.  “சரிப்பா, இந்தப் பேப்பரில் குழந்தை பிறந்த நேரம், தேதியெல்லாம்  குறிச்சிருக்கேன். வெள்ளனயே  போய்  நம்ம சுப்புடு ஐயர்கிட்ட குழந்தைக்கு ஜாதகம் எழுதிக்கோ” என்று சொல்லிவிட்டு பெரிசுகள்  திண்ணையைக் காலி செய்தனர். பாட்டிகளும் ஆளுக்கொரு காரணம் சொல்லிவிட்டுக் கிளம்பினர். “வள்ளி, பொறந்த குழந்தை பையனா பொண்ணான்னு கேட்க மறந்துட்டோமே?” என்று சுகுணா தண்ணி மோந்துகொண்டே ஆதங்கப்பட்டாள்.  “அதுக்கு ஏன் அம்புட்டு விசனப்படற? என் மாமியாளும் உன் ஆத்தாளும் வந்தா தெரிஞ்சிடப் போகுது” என்று  வள்ளி  நீட்டி முழக்கினாள். “சுகுணா, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வச்சிருக்கேன். வந்து எடுத்துகிட்டு போ” என்று  சொன்ன  வள்ளிக்கு, ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு, “வள்ளி, என் குடம் ரொம்பிடுச்சு. நீ மோந்துக்கோ” என்று வாளியை நீட்டினாள் சுகுணா.  “சுகுணா, மதியம் நெல்லு குத்தியது மேலெல்லாம் வலிக்குது. நாலு குடம் தண்ணி இறைச்சி கொடேன்”  என்று  கேட்டாள்  வள்ளி. “அதானே பார்த்தேன், என்னடா ‘செட்டியார் ஆத்தைக் கட்டி இழுக்கறாரே’ன்னு”  என்று  வள்ளி குழம்பு கொடுத்த  காரணத்தைச் சொல்லிவிட்டு,  நீர் இறைத்தாள் சுகுணா. “அம்மா, நாக்கு வறட்சியா இருக்கு; கொஞ்சம் தண்ணி கொடும்மா” என்று புனிதா குரல் கொடுத்தாள்.  மரகதம் எடுத்துக்கொண்டு சென்ற தண்ணீர் டம்ளரை  வெடுக்கென்று பிடுங்கினாள்  பட்டம்மா  பாட்டி.  தொடரும் சாம்பவி சங்கர்

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

தமிழ் படைப்பிலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர் எழுத்தாளர் அகிலன். 1922 இல் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் என்னும் ஊரில் பிறந்த அகிலாண்டம் என்ற அகிலன் 1938 இல் தனது முதல் கதையை எழுதினார். பள்ளியில் வெளிவந்த பத்திரிகையில் ‘அவன் ஏழை’ என்ற அந்தக் கதையை பதினாறு வயதுப் பையனான அகிலன் கொடுத்தபோது, அந்தக் கதையின் நடைச் சிறப்பு ஆசிரியருக்கு ஐயத்தை ஏற்படுத்த, இந்தக் கதையை எங்கு திருடினாய்?’ என்று கேட்டார். ‘ஐயா, என் கதையை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். திருப்பித் தந்து விடுங்கள். நான் திருடனில்லை’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் அகிலன். அந்த ரோசத்திலேயே உண்மையை உணர்ந்த ஆசிரியர், அவரைத் தட்டிக் கொடுத்தார். 1944 இல் அவரது முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ வெளிவந்தது. ஆனால், அகிலன் தமிழ் வாசகர்களிடையே வாழ்நாள் முழுவதும் மங்காத முழு நிலவாகவே பிரகாசித்தார். பள்ளிப் பருவத்திலேயே வாலிபர் சங்கம் அமைத்து, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் நிராகரிப்பு என்றெல்லாம் தேசிய இயக்கங்களில் செயல்பட்டிருக்கிறார். தேசிய இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த அகிலனுக்கு, ‘தேச விடுதலை மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும்’ என்று, அன்றிருந்த எல்லாப் படைப்பாளிகளைப் போலவே மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்யோ என்ற யதார்த்தம் அவரைச் சுட்டிருக்க வேண்டும். அவர் படைப்புகளில் இந்த ஏமாற்றத்தை நாம் அடையாளம் காண முடியும். மு.வ., கி.வா.ஜ. உள்ளிட்ட இலக்கிய ஜாம்பவான்களிடமும், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள் உள்ளிட்ட கலைஞர்களுடனும் நெருக்கமும் அன்பும் கொண்டிருந்தார். தீவிர கொள்கைப் பிடிப்பும் நேர்மையும் அவரது எழுத்தாளர் வாழ்வின் இலட்சியமாக இருந்தன. போட்டி மிகுந்த அன்றைய படைப்புலகில், அவர் தன் இலட்சியத்தில் என்றும் தளராமல் தன் படைப்புகளை வெளிக் கொணர்ந்தார். அகிலனுக்கென்று மிகப் பெரிய வாசகர் வட்டம் எப்போதும் இருந்தது. எல்லா வார, மாத இதழ்களிலும் அவரது சிறுகதைகளோ தொடர் கதைகளோ நிச்சயம் வந்த வண்ணம் இருக்கும். மொத்தம் 20 நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் சிறுவர் நூல்கள் என்று பன்முகப் படைப்பிலக்கியங்களிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். எளிய நடையுடன் கூடிய இவரது படைப்புகளில், சமூகப் பொறுப்புடன் கூடிய எழுத்து வேட்கை துலங்குவதைக் காண முடியும். சுவையான கதைக்களம், உயிர்த் துடிப்பான பாத்திரப் படைப்பு, அறம் சார்ந்த வாழ்க்கையின் மீதான பிடிப்பு என்று, அகிலனின் படைப்புகள் வாசகர் மனதைக் கொள்ளை கொண்டன. 1963 இல் அவரது சரித்திரப் புதினமான ‘வேங்கையின் மைந்தன்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற அகிலன், 1975 இல் அவரது ‘சித்திரப் பாவை’ நாவலுக்கு ஞான பீடம் விருதையும் வென்றார். அவரது பாவை விளக்கு, வாழ்வு எங்கே மற்றும் கயல் விழி ஆகிய படைப்புகள் திரைப்படங்களாக வந்தன. எங்கே போகிறோம், சிநேகிதி, பெண், கொம்புத் தேன் மற்றும் நெஞ்சின் அலைகள் உள்பட்ட மகத்தான நாவல்களைப் படைத்த அகிலன், தனக்கென்று மிகப் பெரிய வாசகர் உலகத்தைக் கொண்டிருந்தார். அகிலனின் படைப்புகள் சர்ச்சைகளையும் காட்டமான விமர்சனங்களையும் சந்தித்த தருணங்களும் உண்டு. அவற்றை மிகுந்த நேர்மையுடன் அணுகினார் அகிலன் என்ற பண்பாளர். மிகச் சிறந்த இலக்கிய மேதையும் ஒரு அரை நூற்றாண்டு கால இலக்கிய உலகின் இலட்சியம் மிக்க அடையாளமாகவும் (1944 – 1988) தமிழ் உலகில் சுடர் விட்ட அகிலனுக்கு இன்று நூற்றாண்டு தொடங்குகிறது. சுவடு இதழ், ஒரு தொடக்கமாக அகிலனின் நூற்றாண்டை, எழுத்தில் சமூகப் பொறுப்பின் அடையாளமாகப் போற்றிக் கொண்டாட வாசகர்களை அழைக்கிறது. வாழ்க அகிலன் புகழ்! கோமதி சங்கர்

அடடே சுந்தரா

அடடே சுந்தரா

திரை விமர்சனம் நானி, தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா நசீமுடன் இணைந்து  அட்டகாசமாக நடித்து, விவேக் ஆத்ரேயா எழுதி சிறப்பாகவும், சிரிப்பாகவும் இயக்கியுள்ள காதல் கதைதான், சுந்தரத் தெலுங்கில்  ‘அண்டே சுந்தரநிக்கி’, மொழி மாற்றத்தில் தேன் தமிழில் ‘அடடே சுந்தரா’. காதல் என்றாலே, வழக்கமாகச் சாதியோ மதமோ ‘கேட்’டைப் போடும்தானே! இந்தப் படத்தில் மதம்! எதற்கெடுத்தாலும் ஹோமம் செய்யும் விஸ்வநாத ஐயரின் (நரேஷ்) ஒரே மகன் சுந்தர பிரசாத் (நானி), ஊரறிந்த இந்து. பாயசமே கசப்பான முன் அனுபவத்தால், இந்து மதமும் கசந்த தாமஸின் (அழகம் பெருமாள்) இரண்டாவது மகள் லீலா தாமஸ் (நஸ்ரியா நசீம்). அவர்களுக்குள் லேசுப்பட்ட காதல் இல்லை. பள்ளி நாடகத்தில் வேஷமிட்டு நடித்தபோது துவங்கிய 100% உண்மையான காதல். நடுவிலே சுந்தரன் தொடர்பற்றுப்  போக, பருவமடைந்த லீலா கொஞ்சம் டைவர்ஷன் ஆகி, பின் சற்றுச் சுதாரித்து, இப்போது மீண்டு(ம்) சுந்தரனின் பாதையில்! 180 டிகிரி எதிரும் புதிருமாக உள்ள குடும்பத்தில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான நிலையைக் கடந்து,  காதலை நிறைவேற்றிக் கொள்ளத்தான், எத்தனை பாடுகள், பொய்கள், தந்திரங்கள், கோபதாபங்கள், உணர்ச்சிப் பிரவாகங்கள், மௌன யுத்தங்கள், சரணாகதிகள்…!!! இத்தனையையும் தாண்டி, அவர்களின் காதல் கைகூடியதா என்பதுதான், ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் மொத்தக் கதை. நகைச்சுவை கலந்த திரைப்படம், நானி, நஸ்ரியாவின் அசத்தலான தலைமையில், நரேஷ், ரோகிணி, பாட்டி அருணா பிக்‌ஷு,  அழகம் பெருமாள், நதியா, தன்வி ராம்,  மேனேஜர் ஹர்ஷவர்தன் பலமான கூட்டணியில்,  தங்குதடையின்றி ‘கலகல’வென்று செல்வது, இனிமை, சிறப்பு. மனிதத்தை மறுக்கும் மதவாதக் கருத்தியல்கள், சடங்கு சம்பிரதாயங்கள் மீது, ஆங்காங்கே அழுத்தமாகக் குட்டு வைப்பதும் பாராட்டத்தக்கது. பிராமணன், சமுத்திரத்தைத் தாண்டக்கூடாது என்கிற சம்பிரதாயம், அவசியத்திற்கும் அவசரத்திற்குமேற்ப மீறவும், அதற்கான பரிகாரமும்  படிப்படியாக நீர்த்துப்போய், நாக்கிலே ஒற்றைத் தர்ப்பையைக் கொளுத்தி, குறுக்கில் இழுத்து விடுவதில் குறுகிப் போவதையும், சுயநலத்தோடு ஒரு சமயம் மதத்தைப் பொருட்படுத்தாததையும், பிறிதொரு நிலையில் மதத் துவேஷத்தில் உக்கிரத்துடன் நிற்பதையும் இயக்குனர் பதிவு செய்திருப்பது, அவர்களை ஒருவேளை சிந்திக்க வைக்கக்கூடும். லேடிஸ் பை-சைக்கிளை எதிர்க்கும் சுந்தரனிடம் அப்பா, சிலதைக் காப்பாத்தணும்னா, சிலதை இழந்துதான் தீரணும்; விதவிதமான ரீசன் எல்லாம் உங்களாலதான் சார் சொல்ல முடியும்; என்னது! நல்ல குடும்பம்னு சொல்லி, சம்மதிக்க வெச்சியா? அப்ப, நம்ம குடும்பம் நல்ல குடும்பம் இல்லியா? போன்ற வசனங்களும், சுந்தரனுக்கும் அவனது மேனேஜருக்குமான  உரையாடல்களும் சுவையானவை. மேலும் இப்படத்தில், கருத்தரித்தது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும், ‘டிஸ்ஜெர்மினொமா’ எனும் கொடிய கருப்பைப் புற்று நோயின் அடையாளத்தை மறைத்துவிடும் கொடுமை குறித்து விழிப்புணர்வு கொள்ள வழிவகுத்த இயக்குனரை வெகுவாகப் பாராட்டலாம். சிறுவன் சுந்தரன் (வினய்) மற்றும் சிறுமி லீலா தாம்ஸன் (ஹரிகா கோயிலம்மா) போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். சௌமியா (அனுபமா பரமேஸ்வரன்),  ஜோதிடர் ஜோகராவ் ( ஸ்ரீகாந்த் ஐயங்கார் ), சுந்தரின் மாமா (பிரித்வி ராஜ்), ஜோசப் (வெங்கடேஷ் மஹா), டாக்டர் குரு (ராகுல் ராமகிருஷ்ணன்), கைனகாலஜிஸ்ட் (பவித்ர லோகேஷ்), வம்சி (சாய் ரோனக்), பட இயக்குநர் (அலி) எனத் துணைப் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களும், நடிப்பில் சோடை போகவில்லை. விவேக் சாகரின் பின்னணி இசையும் பாடல்களும் இனிமை. நிகேத் பொம்மியின் கண்கவர் ஒளிப்பதிவு ‘பளிச்’. குறிப்பிடத்தகுந்தது, ரவி தேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பு. குறிப்பாக, ‘கட் டயலாக்ஸ்’  காட்சிகளை குழப்பமில்லாமல், விறுவிறுப்பு குறையாமல் ‘கட்’ செய்தது. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க, நிறைய நியாயம் இருக்கிறது. முன் பாதியில் கணிசமாகக்  குறைக்க வாய்ப்பும் இருக்கிறது. படத் தொகுப்பாளரை இயக்குநர் அனுமதித்திருக்கலாம். சமூகத்தில் முதன்மை பெற வேண்டியது, மதம் தாண்டிய மனிதக் காதலே என்பதை, அழுத்தந்திருத்தமாகவும் நகைச்சுவையுடனும் வழங்கும் விவேக் ஆத்ரேயின் ‘அடடே சுந்தரா’, பலே சுந்தராதான். மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

யாரைத் திருப்திப்படுத்த?

யாரைத் திருப்திப்படுத்த?

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா? ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்.அடுத்த வேளை உணவுக்கான ஆர்டர்கள் ஹோட்டலுக்குச் சென்றிருக்கும்,பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர். படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர். சாப்பிட்ட இலைகளயும் குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார். ஒரு அவசரச் சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென, உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார். மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள். எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார். இத்தனை தூரம் வந்தாச்சு, போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர். தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்.கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும். அடுத்து வரும் நாட்களில், நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும். உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும். ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும். இரண்டு வாரங்களில் உங்கள் மகன், மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்குத் திரும்பிடுவர், ஒருமாத முடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்குச் சிரிப்பார். அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத் துவங்கியிருப்பர்.அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும். மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும். நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்.இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதி கொடுத்தல் மட்டும் மிகச் சிரத்தையாக நடக்கும். கண்மூடித் திறக்கும் இடைவெளியில், வருடங்கள் பல ஓடியிருக்கும். உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது. என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்.உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய் அபூர்வமாய் உங்களைப்பற்றி யாரிடமோ பேசக்கூடும். மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும். மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கிப் பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும். இப்போது சொல்லுங்கள், உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்? பார்த்திபன் கண்ணன்

கரைசேராப் படகுகள் 2

கரைசேராப் படகுகள் 2

தொடர்கதை வாழ்க்கை , எந்தத் துன்பமும் இல்லாமல்  மகிழ்ச்சியாகச் செல்லும்வரை  மனிதனுக்கு  தான்தான்  பெரிய சக்தி என்ற எண்ணம். கொஞ்சம் துன்பம் தலை தூக்கும்போதுதான்  தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணர்கிறான்; அதையும்  மதங்களில் தேடுகிறான்; மனித மனங்களை விட்டுவிட்டான்.  புனிதாவின்  அலறல் ஓலம் , ஈரக்குலையே  வாய்வழியே  வந்துவிடும் அளவிற்கு  வெளியில்  இருப்பவர்களுக்கு  வேதனையளித்தது. பெண்கள் உள்ளே போகலாம் என்று நினைத்தால், வெளியே திண்ணையில்  பெருசுகள் இருக்கிறார்கள். அவர்களை மீறிப் போனால் மரியாதையாக இருக்காது என்று வாசல் தெளிக்கும் இடத்திலேயே இளவட்டப் பெண்கள்  தத்தளித்து நின்றனர். தெருத்திண்ணையில் பட்டம்மா  பாட்டியுடன்  வட்டமேசை போடவரும் வல்லரசு நாடுகள் அலமு பாட்டி, கருப்பாயி  பாட்டி, கோமளா பாட்டி என, அனைவருக்கும் தகவல் தெரிந்து, அடித்துப்பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினர்.  “ஏம்பா  செந்தாமரை, பொட்டி வண்டிய கட்டுப்பா. டவுன் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போகலாம்” என்று பால் ரெட்டியார்  குரல் கொடுத்தார்.  “யார்ரா இவன் மடையன், இந்த நேரத்தில எந்த டவுன் ஆஸ்பித்திரி திறந்திருக்குமாம்?” என்று  கோபால் நாயக்கர் பதில் கொடுத்தார். கூடியிருந்தவர்களின்  தவிப்பு  செந்தாமரையை மேலும்  கலக்கமாக்கியது. உள்ளே வந்த பாட்டிகள் நேராக பட்டம்மா பாட்டியிடம் போனார்கள். குழந்தை கீழே விழுந்தால்,  யாரும் பார்க்கலைன்னா அழாம அது பாட்டுக்கும் எழுந்து விளையாடும்; யாராவது  பார்த்தால்தான் ஒப்பாரி வைக்கும். அது மாதிரி, இது வரைக்கும் தேமேன்னு வெற்றிலை இடித்த பட்டம்மா பாட்டி, தோழிகளைப் பார்த்ததும் , “அடி ஏய்!! என் பேத்தி நிலைமையை  பார்த்தீங்களாடி”ன்னு  ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.  “ஏய் கிழவி, சும்மா இருக்க மாட்டியா? எழவு வீடு மாதிரி ஒப்பாரி வைக்கற?” என்று செந்தாமரை அதட்டினார். உடனே எல்லா பாட்டிகளும் எழுந்து, புனிதா இருக்கும் அறைக்குள் சென்றனர். செந்தாமரை செய்வதறியாது தலையில் அடித்துக் கொண்டார். “ஏம்மா மருத்துவச்சி, கர்ப்பப் பை வாய் திறந்திடுச்சா?”ன்னு, எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி அதட்டல் விட்டாள் அலமு பாட்டி.  யாரும் பேசற நிலையிலா இருக்காங்க அங்க? மருத்துவச்சி கட்டில்ல ஏறி, முட்டியால புனிதா வயிற்றில் அழுத்திக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்ததும் கோமளா பாட்டி அலறினாள்.   “ஏம்மா, என்னம்மா பண்ற? இப்படி  முட்டியால அழுத்தினா குழந்தை  தலை அழுந்தும்மா. மூளை நரம்பு பாதிச்சு மனவளர்ச்சி இல்லாம போயிடும். சில நேரங்களில்  அது மலத்தையே சாப்பிட்டு விடும். இப்படி தூர வாம்மா”ன்னு மருத்துவச்சியை தூர வரச்சொல்லிட்டு  கோமளா பாட்டி புனிதாவின் வயிற்றை அழுத்திவிட்டுக் கொண்டே கீழிறக்கினாள். “புனிதா, ஐயோ ஐயோன்னு  கத்தாதே. குழந்தை நல்லபடியா பொறக்கணும்னு  மனசுல நினைச்சுகிட்டு, சாமி பேரை சொல்லிக் கத்து” என்று  கோமளா பாட்டி புனிதாவிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே குழந்தை வரும் பாதை வழுக்கிக்கொண்டு வருவதற்காக அங்கு விளக்கெண்ணெய் தடவி விட்டு, மீண்டும் கைகளால்  வயிறை அழுத்தினாள். இப்போது புனிதாவுக்கு வலி உச்சத்தைத் தொட்டது. அவளுடைய அலறல் வெளியில் இருப்பவர்களின் இதயத்தைக் கையில் வைத்துத் துடிக்க வைத்தது. கோமளா பாட்டி அதிக அழுத்தம் கொடுக்கவும், தலையைத் திருப்பி குழந்தை வெளியே வர ஆரம்பித்தவுடன், அதன் தலையை லாவகமாகப் ,பிடித்து குழந்தையை வெளியே எடுத்தாள்.   குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்டதும்,  பால் ரெட்டியார் தயாராக வைத்திருந்த பேப்பர் பேனாவில் நேரம்   குறித்தார். 20-10-1965, நேரம்: சூரியன் அஸ்தமனமாகும் 6:15 என எழுதினார். வெளியில் நின்றிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். “வாங்கடி, பொழுது இருட்டுது. சீக்கிரம் தண்ணி மோந்துட்டு போகணும்”னு ஒருத்தி குரல் கொடுத்ததும், அனைவரும் கிணற்றடி நோக்கி ஓடினர்.  புனிதா கொஞ்சம் நிதானமானதும் செந்தாமரை  உள்ளே வந்து பார்த்தார். செந்தாமரையைப் பார்த்ததும், “அவர் வரலையாப்பா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள் புனிதா.  “அதுக்குதான்  நான் அப்பவே சொன்னேன். ஊரில் இல்லாத மாப்பிள்ளைன்னு தூக்கிவச்சிகிட்டு ஆடுனீங்க” என்று  பப்படம்  மாதிரி பொரிந்தாள் பட்டம்மா பாட்டி.  தொடரும் சாம்பவி சங்கர்

கானல் சுவாசிக்கும் கால்கள்

கானல் சுவாசிக்கும் கால்கள்

புகைப்படத்துக்கான கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள்: கோபிப்பாளையம் புனித தெரசா தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அரசு தாமஸ் அவர்கள், கடைத்தெருவில் கண்ட காட்சியைச் சிறைப்பிடித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, ஒரு உழைப்பாளியின் நிலையை நமக்கெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படத்திற்குப் பொருத்தமான கவிதை எழுதும்படி ஒரு போட்டியை நம்முடைய சுவடு இதழ் மற்றும் சுவடு பதிப்பகம் சார்பாக அறிவித்தோம். ஏராளமானவர்கள் போட்டியில் பங்கேற்றுக் கவிதைகளை அனுப்பியிருந்தார்கள். போட்டிக்கான நடுவராக இருந்து, கவிதைகளை வாசித்து, அவற்றிலிருந்து 3 கவிதைகளைப் பரிசுக்கானவையாகத் தெரிவு செய்தார் தோழர் கோமதி சங்கர் அவர்கள். பரிசு பெற்ற கவிஞர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும். பரிசு பெற்ற மற்றும் போட்டியில் பங்கேற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நம்முடைய வாழ்த்துக்களும், நன்றியும். ஆசிரியர் அரசு தாமஸ் அவர்களுக்கும் தோழர் கோமதி சங்கர் அவர்களுக்கும் சுவடு இதழ் மற்றும் சுவடு பதிப்பகத்தின் நன்றிகள். முதல் பரிசு பெற்ற கவிதை கானல் சுவாசிக்கும் கால்கள்கானல் சுவாசித்தபடிகால்கள் மிதிக்கின்றனதலைச்சுமை ஏனோதக்கையாய் மிதக்கிறதுஇந்தப் பயணம்இலக்கு நோக்கியதா?இரைப்பை இரைச்சலுக்கானதா?மகளின் சீர் குடத்திற்கானதா?மனைவியின் மருந்துக் குப்பிகளுக்கானதா?கடன்பட்ட நெஞ்சத்துக்கானதா?கவனிப்பாரற்ற சுயத்துக்கானதா?யூகிக்கக் கிடைக்கும் காரணங்கள் ஏராளம்பழுத்த மனதில் நம்பிக்கையோ தாராளம்தூரங்கள் கண்டு துவளவில்லைபாரங்கள் ஏந்த அஞ்சவில்லைவியர்வையில் குளிக்கும் உடலைமஞ்சள் நீரில் அலசி அலங்கரிக்கும் வரைஓடும் கால்களுக்கு ஓய்வேது?சுமக்கும் எடைக்கு குறைவேது?சளைக்காத மனமேசற்று நில்!களைத்தபடி உடன்வரும் உடலுக்குப் புத்துணர்வூட்டஒரு கோப்பை தேநீர் தருகிறேன் யாழினிஸ்ரீ கூடுதல் பரிசு பெற்ற கவிதைகள் எழுத முடியா நெடுந்துயர்வறுமை வாழ்க்கைக்குள்செலுத்திய பாரம்சைக்கிள் சக்கரங்கள் சுழலும்படிமூச்சிறைக்கப் பெடலைமிதிக்க விட்டிருக்கிறதுபசி ஒரு படி மேலே சென்றுமனதிற்குள் அளவிடமுடியாபாரத்தையும்தலையில் அளந்து வைத்த பாரத்தையும்ஏற்றி விட்டிருக்கிறதுகருணையுள்ள இந்த பூமிகாலம் காலமாய்ஏனோ எல்லோருக்கும் பொதுவாய்சுழல்வதில்லைகருணையற்ற இந்தக் காலம்காலம் காலமாய்ஏனோ எல்லோருக்கும் பொதுவாய்விடிவதில்லைநரம்புகள் புடைக்க வாழ்வைஎதிர்கொள்ளும் மனிதனின்நெடிதுயரத்தைஏனோ என்னால்எழுதி தொலைக்கக் கூடமுடிவதில்லை வழிப்போக்கன் பேர் சொல்லும் காசுவண்டி வாகனம் பெருத்துப் போச்சிஎங்க வயிறோ சிறுத்துப் போச்சிஊரெல்லாம் அதிக சம்பளம் வாங்குற காலத்தில கூடநாங்க வாங்குறதென்னவோ அஞ்சு பத்து கூலிதான்எழுதப் படிக்கத் தெரியாம போனதாலஎடை தூக்க வந்திட்டோம்எடைக்கு எடை ஏழுமலையானுக்கே படியளக்கும் மகராசா!இந்த ஏழ வயித்தையும் கொஞ்சம் பாருமையா!பட்டு சொக்கா போட்டு பகுமானமா நிப்பவரே!சீக்கிரம் பாத்துப் போட்டு தாங்க,பத்திரமா கொண்டுபோறேன்!!தலையில பொதி சுமக்குறோம்காலணிகூட இல்லாம காலணாவுக்குக் காத்துக் கிடக்கிறோம்எரி எந்திரமெல்லாம் எங்கிட்ட இல்ல சாமிஏதோ, ஏறி மிதிச்சா என்னோட சுமையவும் சேத்து சுமக்கமிதிவண்டி ஒன்னிருக்கு!அழுத்தி மிதிச்சா அஞ்சி நிமிசமாகும்எறக்க கூட ஆள் வேணாம்,ஒத்தாசைக்கு நின்னாபோதும்சேத்து ஏதும் கேட்கல,சொத்து சேர்த்து வைக்கவும் கேட்கலஒழைக்கிற காசு உடம்புல ஒட்டணும்இன்னைக்கு ஒட்டுற காசு உங்க பேர் சொல்லட்டும்! வே. ஆறுமுகப்பாண்டி

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

நூல் அறிமுகம் இருபத்தி ஆறு தலைப்புகளில், இந்தப் புதினம் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுப் புதினம். காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளான ‘ஜனவரி 30, 1948’ தான் இறுதி இயலின் தலைப்பு. இந்நூல், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்து விட்டுத் தம் பசுமையான நினைவுகளோடு பிரியா விடை கொடுக்கும், புதினத்தின் முக்கியக் கதைமாந்தர்களான சீனிவாச ராகவன், பிரான்சிஸ், மற்றும் செந்தூர் பாண்டியன் ஆகியோரது எதிர்காலத் திட்டங்கள் பற்றிய உரையாடலோடு தொடங்குகிறது. ஆதரவற்ற அநாதையான பிரான்சிஸ், தான் வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தினைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள கண்டியில் கிறித்துவப் பாதிரியாவதற்குப் படிக்கச் செல்கிறான்.  செந்தூர் பாண்டியன், தன் தந்தையின் வணிகத்தை மேம்படுத்த லாகூருக்குப் பயணிக்கிறான். பயணத்தின்போது, அரசு உயர் அதிகாரி ஒருவரோடு பரிச்சயம் ஏற்பட, அந்த அதிகாரி, காந்தியம் பற்றி அறிந்து கொள்ளச்சொல்லி, ரொமன் ரொலைந்த் எழுதிய நூல் ஒன்றையும், தன்வரலாற்றுப் புத்தகமான ‘சத்திய சோதனை’ நூலையும் வாசிக்கத் தருகிறார். அந்த நூல்களைப் பயணத்தின் போதே வாசிக்கத் தொடங்குகிறான் செந்தூர் பாண்டியன். பிராமண குலத்தைச் சேர்ந்த ராகவன், தன் தந்தையின் வழி, வழக்குரைஞர் தொழில் செய்யாது, புனேயில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் நிருபர் பணிக்குச் செல்கிறான். அந்தப் புதிய சூழலில், ராகவன் வரலாற்றுப் பாத்திரங்களான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கர்க்கரே, சாவர்க்கர் போன்றோர்களோடு தொடர்பு ஏற்பட்டு அவர்களோடு தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபடுகிறான். இதனால், காந்தியத்தைப் பற்றியும், பிராமணீயத்தின் மறுபுறத்தையும், இந்துத்துவ அமைப்புகளின் வெறுப்பு அரசியலை மய்யமாகக் கொண்ட தீவிரவாதத் தன்மையையும் அவனால் நன்கு உணர முடிகிறது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சமயங்களின்  நல்லிணக்கத்திற்குப் பெயர் போன லாகூர் மாநகரம், அங்கு நிகழ்ந்த முஸ்லீம் லீக் மாநாட்டுப் பிரிவினைவாதத் தீர்மானத்தின் பின்புலத்தில்  தீவிரவாத இஸ்லாமியர்களின் போக்கினால் எவ்வாறு அமைதியற்றுப் போயுள்ளது என்பதை லாகூர் சென்றடைந்தவுடன், செந்தூர் பாண்டியன் கண்கூடாகப் பார்த்து அதிர்ந்து போகிறான். அவனுடைய சினேகிதன் யாகூப் கூட மதவெறியால் மாறிப் போயிருப்பதைக் கண்டு வருத்தம் கொள்கிறான். ஆனால், யாகூப்பின் அன்னையும், சகோதரியும் இவன் மீது எப்போதும் போல சகஜமாகப் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில், யாகூப்பின் இளைய சகோதரி சலேலாவிற்கு, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் தாய், செந்தூர் பாண்டியனுக்கு மணம் முடிக்க யோசனையை முன்வைக்கிறார். பிறகு, தேசப் பிரிவினையுடனான சுதந்திரம் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், லாகூர் பாகிஸ்தானின் பக்கம் என்று தகவல் கசிந்தவுடன், லாகூரில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. இதன் தீவிரத்தை உணர்ந்த செந்தூர் பாண்டியனின் தந்தை சற்குணம் தன் வீட்டுப் பத்திரத்தை சலேலாவின் பெயருக்கும், தன் பெரிய கடையினை யாகூப்பின் பெயருக்கும் மாற்றம் செய்து, அவர்கள் அன்னையிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டுத் தன் மகனுடன் சொந்த ஊர் திரும்புவதாகச் சொல்கிறார். தன் தொழிலில் ஈட்டிய சொத்தையே எழுதிக் கொடுத்து விட்ட சற்குணத்திற்கு, தன் சொத்தான சலேலாவைத் தருகிறாள் அவளுடைய அன்னை. தான் மனதால் நேசித்த சலேலா, மனைவியாகப் போகும் குதூகலத்துடன்  தன் தந்தையுடன் ஊர் திரும்பும் வழியில், காவலர்கள் வழி மறிக்கிறார்கள்.  சலேலாவின் மீது கொண்ட இச்சை காரணமாக, ஒரு வாரம்  வைத்துக் கொண்டு அனுப்புவதாகக் கூறித் தன் வண்டியில் ஏற்றச் சொல்கிறார்கள். அதை எதிர்த்து மற்ற இருவரும் போராடும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்கிறான் செந்தூர் பாண்டியன். அதே சமயத்தில், சலேலாவும், காவலர் பிடியிலிருந்து திமிறி, காவலரின் கத்தியுடன் கூடிய துப்பாக்கியால் தன்னைக் கீறிக் கொண்டு சாய்கிறாள். ஓட்டுனர் பகதூர், அதிர்ச்சியில் உறைந்து போகும் செந்தூர் பாண்டியனைத் தேற்றி,  தில்லி நோக்கிச் செல்லலாம் என்கிறான். அங்கு காந்தி தங்கியிருந்த குடியிருப்பையும், அவரது சமாதான நடவடிக்கைகளையும் கண்ணுற்ற பாண்டியன், பழி வாங்கும் எண்ணம் ஏதுமின்றி, சொல்லொணாத் துயரைத் தாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்வதைத் தவிர்த்து, ராகவனைச் சந்திப்பதற்காகப் புனே செல்கிறான். அங்கு ராகவனோடு கழிக்கும் கால கட்டத்தில், காந்தியைக் கொல்ல சதிவலை பின்னப்படுவதாக இருவரும் உணர்கிறார்கள். தேசப் பிரிவினையால், உலகு கண்டிராத மதக் கலவரமும், தேசம் கண்டிராத அகதிகள் பிரச்னையும் ஏற்படுகிறது. முஸ்லீம் லீக ஆட்சி செய்யும் வங்காளம் கொலைக் களமாக மாறுகிறது. வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டதுபடி, 55000 ராணுவ வீரர்கள் தில்லியில் கொண்டு வர இயலாத அமைதியை, ஒற்றை வீரராக காந்தி, நவகாளியில் தன் சாகும் வரை உண்னாவிரதப் போராட்டத்தால் கல்கத்தாவில் கொண்டு வருகிறார். அதன் பின் தில்லி வருகிறார் காந்தியடிகள். தன்னுடைய சமாதான நடவடிக்கைகள் பலனளிக்காது போகவே, பிர்லா மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். அடுத்தடுத்த உண்ணாவிரதத்தால் 79 வயது நிரம்பிய காந்தியின் உடல்நிலை மிகவும் பலவீனமடைந்தாலும், நாட்டில் அமைதியை நிலை நாட்ட உறுதியுடன் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார் மகாத்மா காந்தி.    காந்தியைக் காண செந்தூர் பாண்டியன் தில்லி செல்கிறான். ஐந்து நாட்களில் நிலைமை சீரடைகிறது. ‘காந்தி செத்தொழியட்டும்’ என்று பழித்த அகதிகள், காந்தியின் உயிரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும், அமைதிக்கான உறுதிமொழியைக் காந்தியிடம் அளித்தபின், அந்த உறுதிமொழிகள் மன உறுதியுடன் நிறைவேற்றப் படாவிட்டால், தான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டியதிருக்கும் என்று காந்தி எச்சரிக்கை விடுக்கிறார். மௌலானா ஆசாத் பழச்சாறு கொடுக்க உண்ணாவிரதம் நிறைவு பெறுகிறது. அதற்குப்பின், வழக்கம் போல காந்தி தன் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஆனால், அவரைக் கொல்வதற்கான திட்டம் புனாவில் தீட்டப்பட்டு, அதை நிறைவேற்றத் தில்லியில் திரள்கிறது மதவெறி பிடித்த கோட்சே கும்பல். ஒரு மாகாத்மாவின் கொலைச் செயலின் பின்புலமாக இருந்த மதவெறி பிடித்த பிராமணீயக் கொள்கையை மட்டுமின்றி, அந்தப் படுகொலை செயல்படுத்தப்பட்ட நுட்பமான விவரங்களையும் இந்த அற்புதமான நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.  நூலாசிரியர்: கன்யூட் ராஜ் பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2022)  விலை: ரூ. 460/- ஆனந்த் பாசு                      

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

உங்கள் மகன் மெக்கானிக்கல் என்ஜினியரென வைத்துக்கொள்வோம். அல்லது ஏதோ ஒரு பட்டதாரி. படித்து முடித்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் வெறுமனே கையை பிசைந்தபடி இருக்கும் சூழலில், மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கான கடிதம் வருகிறது. மகிழ்கிறீர்கள்; வேண்டிக்கொள்கிறீர்கள்; கனவு காண்கிறீர்கள்; இனி எல்லாம் சுகமேயென ஆனந்தக்கண்ணீரை துடைத்துக் கொள்கிறீர்கள். நேர்முகத்தேர்வில், “எட்டுமாதம் மட்டுமே பணிக்காலம், மாதம் 15000 சம்பளம், எட்டு மாதம் கழித்து நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் சம்மதமா?”யென வினவுகிறார்கள். உங்கள் மகனின் பதில் என்னவாக இருக்கும்? பெற்றோர்களாகிய உங்கள் மனநிலை மற்றும் பதில் என்னவாக இருக்கும்? எனக்குத் தெரிந்த வரை “கிடைத்த வேலையைத் தவற விடாதே. சும்மா இருப்பதைக் காட்டிலும் இது மேல். உள்ளே நுழைந்து விடு பிறகு பார்த்துகொள்ளலாம்” என்பதாகவே இருக்கும். எட்டு மாதப் பணிக்குப் பிறகு வெளியேறி, வேறொரு நிறுவனத்திற்கு இதே எட்டுமாதப் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டி வரும். இப்படியாக எட்டு எட்டாகப் பிரித்துக்கொண்டு 58 வயது வரை, சொற்ப மாதச் சம்பளத்திற்குப் பணி செய்து ஓய்வு பெறுபவர்களும் உண்டு. சம்பளம் மற்றும் பிஎஃப் தவிர வேறு எந்தப் பலனுக்கும் இவர்கள் தகுதியானவர்கள் அல்ல. சில நிறுவனங்களில் பிஎஃப் பணத்திற்கு உத்திரவாதம் கிடையாது. ஒப்பந்தப் பணியாளரெனில், உங்கள் ஒப்பந்தக்காரர் என்ன தருகிறாரோ, அதுவே உங்களுக்கான பிஎஃப் பணம். உலகெங்கும் உள்ள பெரிய நிறுவனங்கள், ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய போக்கைக் கடைபிடித்து வருகின்றன. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் 5000 பேர் பணிபுரிவதற்கான தேவை இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2000 பேர் மட்டுமே ஆரம்ப கால, நிரந்தரப் பணியாளர்களாக அந்த நிறுவனம் தக்க வைத்துக்கொள்ளும். மீதமுள்ள 3000 பேர் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்துக்கொள்ளும். நிரந்தரப் பணியாளரின் வேலையும் தற்காலிகப் பணியாளரின் வேலையும் எந்த மாற்றமும் இன்றி, வேலைப் பளு முதல் வேலை நேரம் வரை ஒன்றாகவே இருக்கும். நிரந்தரப் பணியாளரின் மாதச் சம்பளம் 1,00,000 என வைத்துக்கொண்டால், தற்காலிகப் பணியாளரின் சம்பளம் வெறும் 15000 ஆக இருக்கும். இத்தகைய உழைப்புச் சுரண்டல் மூலமாக அதீத இலாபத்தின் சுவையை அனுபவித்துப் பழகிய முதலாளிகள், நிரந்தர வேலைக்கு நிரந்தரப் பணியாளர்களை ஒரு போதும் நியமிக்க மாட்டார்கள். நிர்வாகத் தரப்பைப் பொருத்தமட்டில் கூறப்படும் காரணங்கள்: நிலையற்ற வியாபாரச் சந்தை. மாறிவரும் தொழிற்நுட்பத்திற்கான முதலீடுகள், போட்டியாளர்கள், உள்நாட்டு வரிகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இத்தகைய பணியாளர்களை நியமித்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள். இவை உண்மைதானே என எண்ணும் அதே நேரம், ஈட்டும் இலாபத்தை வளராத மாநிலங்கள் அல்லது வளராத நாடுகளில் முதலீடு செய்து மிகக் குறைந்த மாதச் சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி, உற்பத்தியைத் தொடங்கி உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வார்கள். சுருக்கமாகச் சொல்வதனால், வளர்ச்சி என்பது முதலாளிகள் வகையினர்களுக்கு ஆனதாக மட்டுமே இருக்கும். ஏதோவொரு காரணத்துக்காக ஒரு ஆலை மூடப்பட்டாலும், பிற ஆலைகள் இயங்கும்படியான திட்டமிடல் அவர்களுக்குக் கை கொடுத்து விடுகிறது. இத்தகைய தனியார்களின் போக்கைத்தான் அரசுத் துறைகளிலும் அரசு நிறுவனங்களிலும் அமுல்படுத்த, அரசு நினைக்கிறது. இதன் மூலம் பொருளாதரத்தைச் சீர் திருத்தம் செய்துக்கொள்ள முனைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, உள்நாட்டுத் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்துவது, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு ஏற்ற நம்பகத்தன்மையுடன் கூடிய சூழலை உருவாக்கும் திறனற்றுக் கிடக்கிறது. தேவையற்ற சர்ச்சைகள் மூலம் உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்க வழி வகுப்பது போன்ற செயல்கள் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவையே ஏற்படுத்தும். அதிகப்படியான நிதி ஒதுக்கப்படும் ராணுவத்தில் இருந்து “சாப்பிட ரொட்டி கூட இல்லை” என, கண்ணீர் மல்கிய ராணுவ வீரரின் காணொளி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராணுவத்தில் காலியிடங்கள் இருந்த போதும் அதை நிரப்பாமல், நான்கு ஆண்டுகள் வரை மட்டும் பணிபுரியவேண்டும்; அதில் 25% பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் என்றால், மீதம் 75% பேரைத் தகுதியற்றவர்களாகத்தானே கருத வேண்டி வரும்.? அவ்வாறு தகுதியற்றவர்களாகக் கருதப்படும் அத்தகைய வீரர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்!? என்ற கேள்வி எழுவதோடு, அவர்களுக்கு அளிக்கப்படும் 12 இலட்ச ரூபாய் எந்த அளவிற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும்? அவ்வாறு ராணுவத்திற்குத் தகுதியற்றவர்களை முன்னணி நிறுவனங்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தும்? அந்தப்பணி எத்தகையதாக இருக்கும்? பொருளாதாரப் பின்னணியோ, மேம்பட்ட கல்வித்திறனோ அற்றவர்கள்தானே பெரும்பாலும் ராணுவத்தை தேர்வு செய்கிறார்கள்? அதிலும் மூத்த பிள்ளையெனில் உடன் பிறந்தோரைக் கரைசேர்த்து, தான் கரையேறுவதற்குள் அனைத்தும் கரைந்து விடுமே. அடுத்து எங்கே செல்ல முடியும்? தற்போது அவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறிவருகிறார்கள். அப்படியான வேலை வாய்ப்பு இருக்குமேயானால் எட்டுமாத வேலைத் திட்டத்தை நீக்கி நிரந்தர வேலைவாய்ப்பை பொறியியல் மற்றும் தொழிற்நுட்பம் பயின்ற இளைஞர்களுக்கு அளித்திருக்கலாமே? தெளிவில்லாத திட்டங்களை ஆதரிப்பது என்பது, நம் பிள்ளைகளின் வாழ்விற்கு நாமே சூன்யம் வைத்துவிடுவதாக அமைந்துவிடும். நிரந்தரமான பணிமுறைகளுக்கு நிரந்தரமான பணியாளர்களை அமர்த்துவது ஒன்றே சரியானது. அதற்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை. ஜெகதீஷ் நிதி

அவள் பெயர் சக்தி

அவள் பெயர் சக்தி

மேடை நாடக விமர்சனம் திருமணமாகி ஏழு ஆண்டுகளான நிலையில், ஜனனி கார்த்திக் தம்பதியருக்குள் குழந்தைப் பராமரிப்பு, வீட்டு வேலைகளைப்  பகிர்தல், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றில் எழும் பிரச்சனைகளின் உச்சமாக, குழந்தை ஆர்த்தியை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விடுகிறாள் ஜனனி. சராசரி அப்பாவாக பரமேஸ்வரன், கொஞ்சமே புரிந்த அம்மாவாக சாந்தி, அவர் காலத்திலேயே உறைந்து போனவளாக கொள்ளுப்பாட்டி, தனித்துவத்தில் அக்கறையும், ஊசலாட்டமும் ஒருங்கே கொண்ட தங்கையாக ஹரிணி ஆகியோர் ஜனனியின் ஊடாகவும், அவளுடன் சேர்ந்தும் வாழ்க்கையை அவரவர்  கோணத்தில் அலசுகிறார்கள்; வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. என்னதான் முடிவு என்பதும், அந்த முடிவை எட்டுவதற்கான காரணங்களாக அவர்கள் எவற்றை நிறுவுகிறார்கள் என்பதும்தான், தாரிணி கோமல் எழுதி இயக்கியுள்ள, கோமல் தியேட்டரின் ‘அவள் பெயர் சக்தி’ நாடகத்தின் கதைக்கரு. நாடகாசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக இயக்குநர் என்கிற பன்முகத் திறமை கொண்ட, நினைவில் வாழும் கோமல் சுவாமிநாதன் அவர்களின் புதல்வி தாரிணி கோமல் இந்த நாடகத்தை மிகச் சிறப்புற எழுதி இயக்கியுள்ளார். கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவில் சிறந்த நாடகமாகப் பரிசு பெற்றது. சிறந்த கதை இயக்கத்திற்காகத்  தாரிணி கோமல் விருது பெற்றுள்ளார். நான்கு தலைமுறைப் பெண்களின் வளர்சிதை மாற்றங்களைப் பதிவு செய்ய முனைந்திருக்கிறார் தாரிணி. ஒரே குடும்பத்தில் உள்ள அந்த நான்கு பெண்களின் தலைமுறை முன்னேற்றத்தை வேறுபடுத்திக் காட்டுவதில் பெறும் வசதியை, அது ஒரே குடும்பமாக உள்ளதாலேயே, இயல்பாகப் பரிணமிக்கும் எந்த ஒரு மாற்றத்தையும் நிலைநிறுத்திக் கொள்வதில், உணர்வுபூர்வமான குறுக்கீடு இல்லாது நேர்மறையான வாய்ப்பைப் பெற இயலாமல் போவது ஏமாற்றமே! பல்வேறுபட்ட குடும்பங்களில் இருக்கும் நான்கு தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையைத் தெரிவு செய்திருந்தால், தலைமுறை மாற்றத்தைப் பதிவு செய்வது சற்று சவாலாக இருந்தாலும், எதார்த்தமாக இருந்திருக்கக் கூடும். கல்வி, பொருளாதார வகையில் சௌகரியமான ஒரு குடும்பச் சூழலில் நிகழக்கூடிய தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைவிட, இவை அல்லாத ஒரு குடும்பத்தில் கண்ணெதிரே காணும் (அவ்விதம் கவனிக்க விழைந்தால்)  குடும்பத்தின் பொருட்டான  ஒரு பெண்ணின் தியாகம், அர்ப்பணிப்பு அதனினும் உயர்வாகத் தெரிய, கொண்டாட வாய்ப்புண்டு. அந்தக் கொள்ளுப் பாட்டியிடம், அன்றாடம் நடக்கும் தன் சோகக் கதையைக் கூறும் அக்குடும்பப் பணிப்பெண் சுகுணாவின் கதையும், அப்படித்தானே! இந்த நான்கு தலைமுறைப் பெண்களின் தனிமனித சுதந்திரம், ஆசாபாசங்கள், ஆதங்கங்கள், பிரச்சனைகள், ஐயத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பின்மை ஆகியவற்றை அலசும் அக்கறையில் கொஞ்சம், அவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக அமைந்துள்ளவர்கள், ஆண்கள்தான் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக் காட்டி இருக்கலாம். என்ன, கைத்தட்டு கிடைப்பதென்பது சற்றுச் சிரமம்தான்! குடும்பத்திற்காக, இட மாறுதலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் விதமாக, தனது பதவி உயர்வை அம்மா சாந்தி துறந்ததை வருத்தத்தோடு வெளிப்படுத்துவதும், விருப்ப ஓய்வு கொடுப்பதற்குத்  தடையாக இல்லாமல், தான் ‘அனுமதி’க்கவேதானே செய்தேன் என்று சங்கரன் கூறுவதும்,  அதேபோன்று, தன் வேலை, தனது பதவி உயர்வு, நிறுவனத்தில் தமக்குள்ள இருப்பு என்று, சுயநலமாக தன்னைப் பற்றியே சிந்திக்கும் கார்த்திக் பேசுவதும் கவனிக்கத்தக்கவை. கதைக்கருவை ஒட்டிய வசனங்கள் கூர்மையானவை. குறிப்பாக, ஜனனி, தினேஷ், அர்ஜுன், ஹரிணி பேசும், தாரிணி கோமலின் வசனங்கள் சிந்தனைக்கு உரியவை!  ஜனனியாக வரும் கிருத்திகா சுர்ஜித், ஹரிணியாக வரும் மயூரா பாலகுருநாதன் இருவரும் நாட்டியக் கலைஞர்கள் என்பதால், மெருகேறிய நடிப்பைக் காண முடிகிறது. அறிமுக நடிப்பிலேயே அசத்திய பேபி இயல், உஷா ரவிச்சந்திரன் (கொள்ளுப்பாட்டி), அனுராதா கண்ணன் (சாந்தி), சித்தார்த் (கார்த்திக்), பரமேஸ்வரன் ஹரிஹரன் (சங்கரன்), சாய் ஸ்ரீனி (அர்ஜுன்), ஸ்ரீகிருஷ்ணன் (தினேஷ்), சுதா, சுகுணா (வீட்டுப் பணிப்பெண்கள்) தத்தம் பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி, சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவர்களில் சிலர் விருதுகளையும் பெற்றுள்ளனர் என்பது சிறப்பு. ஜனனி எதிர்கொள்ளும் பிரச்சனை வேண்டுமானால், விவாகரத்து வரையில் போவதற்கான கடுமையான பிரச்சனையாக, அந்தக் குடும்பத்திற்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக விவாகரத்து என்பதே படுபாதகமான ஒன்று என்று நிறுவுவதும், இழிவும், அவமரியாதையும், பாலியல் வன்முறையும் நிகழ்த்தும், நிகழ்த்த முயற்சிக்கும் ஆண்களைப் பற்றி அணுவளவும் கண்டிக்காமல், பெண்களை மட்டும் கட்டுப்படுத்த முனைவதும், ஆங்காங்கு வாரி இறைக்கும் முற்போக்குக் கருத்துகளை இரக்கமே இல்லாமல் மீண்டும் வாரி எடுத்து ஒரு மூலையில் கொட்டுவதற்கு ஒப்பாகி விடுவதைத் தவிர்த்திருக்கலாம். நல்லவேளை, அக்குடும்பத்தினர் கலாச்சாரக் காவலர்களாகவும் அவதாரமெடுத்து, ஜனனி ஹரிணியைப் பார்த்து, ‘இதென்ன கர்மமோ, ஆம்பள பொம்பளங்கற வித்தியாசமில்லாம, புருஷா மத்தியில இப்படித்தான் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட்டை போட்டுண்டு’ என்று சொல்லாமல் விட்டதும், அமெரிக்கா செல்வதற்கு கார்த்திக் பின்னர் ‘அனுமதி’ தந்ததும், ‘ கிரகாச்சாரம், கடல் தாண்டறதா? இதெல்லாம் பாத்துண்டு இன்னும் நான் உசுரோட இருக்கனுமாடா சங்கரா!’ என்று அரற்றாமல் விட்டதும் கொஞ்சம் ஆறுதல்தான்! எந்த ஒரு நிறுவனத்திலும், தகுதி இல்லாமல் பணி நியமனம், பதவி உயர்வு அளிப்பதில்லை. குடும்பச் சூழல் காரணமாகவே, பதவி உயர்வுக்கு உரிய தேர்வை எழுதாத காரணத்தினால்தான், தமக்கு அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைக்கவில்லை, எழுத்தராகவே விருப்ப ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது என்று ஒப்புக் கொண்டு கூறும் சாந்தி, இன்று தன்னைவிடப் பணி நிலையில்  இளையவர்களும்  தகுதியே இல்லாதவர்களும் (!) உயர் அதிகாரிகளாக உள்ளதாக வெறுப்பை உமிழ்வது போன்று பேசுவது அபத்தம் அல்லவா! பத்மா ஸ்டேஜ் கண்ணனின் நாடக அரங்கம் அருமை. தங்கபாண்டியன் மற்றும் சிவா, ராஜேந்திரன், செல்வனின் மேடை நிர்வாகம் சிறப்பு. மைலை பாபுவின் ஒளியும், விருது பெற்ற பெரம்பூர் குமாரின் ஒப்பனையும்,  முத்தாய்ப்பாக  குஹபிரசாத்தின் பின்னணி இசையும், ஸ்ரீஜித்தின் ஒலிக் கோர்ப்பும், பாடலைப் பாடிய அனந்துவின் குரலும் நாடகத்தின் பின்புலத்தில் பக்கபலமாக அமைந்துள்ளது சிறப்பு! சில குறைகள் இருந்தாலும், போதிய அளவு ஆழ்ந்து இல்லாது மேம்போக்காகத்தான் என்றாலும், முன் முயற்சியாக பெண்களின் தலைமுறை இடையேயான பல்வேறுபட்ட மனநிலைகளை, பிரச்சனைகளை முன்னெடுத்துக் கதைக் கருவாக்கி, சிறந்த கலைஞர்களைக் கொண்டு, திறம்பட ‘அவள் பெயர் சக்தி’ என்கிற நாடகமாக இயக்கி வழங்கியுள்ள தாரிணி கோமல் சந்தேகமின்றி, பாராட்டுக்குரியவரே! மது ராஜேந்திரன்

கரைசேராப் படகுகள்

கரைசேராப் படகுகள்

தொடர்கதை – பகுதி 1 ‘ஜல் ஜல்’ என்ற சலங்கை ஒலி வானில் எதிரொலிக்க, புழுதிப் படலமொன்று மேகத்தினைத் திரையிட, அதற்குள் சூரியன் ஒளிந்து கொள்ள, சூரியனைத் தேடி நிலாமகள் வரும் மந்தகாசமான மாலைப் பொழுது. அருங்குணம் என்னும் கிராமத்து நாற்சந்தியில், வயல் வேலை முடித்து வரும் மக்கள், மந்தை மாடு ஓட்டிவரும் மக்கள், இரவு உணவுக்குக் கடைகளில் பொருள் வாங்கும் மக்கள், தெரு விட்டு தெரு சென்று கதை பேசும் மக்களென, அந்த இடமே வெங்கலப் பானையில் இரும்புக் குண்டை உருட்டியது போன்று கலகலப்பாக இருந்தது. தென்னன்ட தெருவில் ஒரு வீட்டின் நடுக்கூடத்தில், சாய்வு நாற்காலியில் சாய மனமில்லாமல் நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தது ஒரு உருவம். கிட்டத்தட்ட சினிமா நடிகர் செந்தாமரை மாதிரி அதே உருவம், அதே குரல், அதே நடை, அட! பெயர் கூட அதேதான். ஆனால் இவர் அவரல்ல. விசு படத்தின் கதாநாயகி கமலா காமேஷ் மாதிரி ஒரு உருவம். அதே உயரம், அதே ஒல்லி, ஆனால் பெயர் மட்டும் மரகதம். கூடத்தின் ஒரு முனையில் இருந்து ‘டொக்.. டொக்.. டொக்..’ என்று தாள லயத்துடன் ஒரு ஓசை. தவில் வித்துவான் வீட்டிற்கு வந்தால் இருவரும் கச்சேரி வாசிப்பார்கள். சில நேரங்களில் தவில் தாளம் தப்புமே தவிர, பட்டம்மா பாட்டியின் வெற்றிலை இடிக்கும் ஓசை தாளம் தப்பாது. ஒரு அறையின் கதவைத் திறந்து கொண்டு மரகதம்மா அவரசமாக வெளியே ஓடிவந்து சமையலறைக்குள் நுழைந்தார்கள். மரகதம்மா கதவைத் திறந்த அந்த இடைவெளியில் அறைக்குள் இருந்து ஒரு பெண் அலறும் ஓசையும் கதறி அழும் ஓசையும் கலவையாகக் கேட்டது. மரகதம்மா செந்தாமரையைத் தாண்டிப் போகும்போது, “மரகதம் இப்ப எப்படி இருக்கு?” என்று பதற்றத்துடன் கேட்டார் செந்தாமரை. “பயமாதாங்க இருக்கு” என்று பாத்திரத்தில் ஏதோ எடுத்துப் போகும் மரகதம் அழுதபடியே சொல்லிவிட்டுப் போனாள். வெளியில் திண்ணையில் அமர்ந்திருந்த பெரிசுகள், “என்னப்பா செந்தாமரை, என்னாச்சு?” என்று குழுவாகக் குரல் கொடுத்தனர். ஒலிபெருக்கி இல்லாமலே பெரிசுகளின் குரல் தெருவெல்லாம் எதிரொலித்தது. “ஏம்பா உன் மருமவனுக்கு தகவல் சொல்லி விட்டயா?” என்று ஒரு பெரிசு ஏதோ மாபெரும் யோசனை சொன்னமாதிரி சபையைப் பார்த்தார். “ம்..ம்.. மதியமே சொல்லிவிட்டுட்டேன். ஆனா பதில் தகவல்தான் வரல” என்று விரக்தியுடன் சொன்னார் செந்தாமரை. “சீராட்டி, பாராட்டி, தங்கப் பாலாடையில் பாலூட்டி வளர்த்த தங்க மயிலை, மலைக் குரங்கு கையில் பிடிச்சுக் கொடுத்துட்டானே.. இந்த அக்கிரமம் எங்க நடக்கும்?” என்று புலம்பினாள் பட்டம்மா பாட்டி. “ஏய் கிழவி, அனத்தாம சும்மா இரு. இங்க அவனவன் உயிரைக் கையில பிடிச்சிட்டு நிற்கிறான். நீ வேற எசப்பாட்டு பாடிக்கிட்டு..” என்று அதட்டினார் செந்தாமரை. தெருவில் உள்ள பெண்களில் பாதிப்பேர் வெண்கலக் குடத்தை வைத்துக் கொண்டும், பானையை வைத்துக்கொண்டும் தண்ணீர் மோந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் ஓடிவந்து, “நம்ம மரகதம்மா பொண்ணு வலியில் துடிக்குதாமே” என்று தகவல் சொல்ல, பெண்கள் அனைவரும் சிட்டாய்ப் பறந்தனர். செந்தாமரை வீட்டு வாசலில் ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. உள்ளேயிருந்து புனிதா அலறுவது கல்லிலும் நார்வரும் போல், அனைவர் மனதையும் உருக வைத்தது. கூடியிருந்த பெண்கள், “கன்னியம்மா தாயே! புனிதாவ காப்பாத்து” என வேண்டினர். தொடரும்.. சாம்பவி சங்கர்

நெடுங்கணக்கு – பகுதி 2

நெடுங்கணக்கு – பகுதி 2

https://naarkaram.com/p-2022-0605/ நெடுங்கணக்கு பகுதி 1 – ஐ இந்த இணைப்பில் வாசிக்கலாம். தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகள்:தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகளாக கீழ்க்கண்டவற்றை கால்டுவெல் அவர்கள் குறிப்பிடுகிறார் : தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகளைப் போன்றே தமிழும், ‘எ’ மற்றும் ‘ஒ’கரத்தின் குறில், நெடில்களைக் குறிக்க தனித்தனி வடிவெழுத்துக்களைப் பெற்றிருக்கிறது. இந்த குறில், நெடில் வடிவெழுத்துக்களைப் பிரித்துக்காட்டும் குறிகள் முதன்முதலாக பெச்சி பாதிரியாரால் இணைக்கப்பட்டன. ‘ழ்இ’, ‘ல்ழ்இ’ என்ற அரை உயிர்களைக் குறிக்கும் சமஸ்கிருத ஒலிகளை யொத்த ஒலிகளை குறிக்கும் வரிவடிவ எழுத்துகள் தமிழில் இல்லை என்கிறார் கால்டுவெல். மேலும் சமஸ்கிருத அனுஸ்வரா ஒலிகளையும் தமிழ் நெடுங்கணக்கு மேற்கொள்வதில்லை என்கிறார். தமிழில் மூக்கெழுத்துகள் மிகவும் உறுதியானவை. தனித்தியங்கும் ஒலிகளை உடையவை. இவற்றில் இயற்கையான ஒலியை உடையது ‘மகர ஒலி’ ஒன்றே என்கிறார் கால்டுவெல். ‘ம’கரத்தைத் தொடர்ந்து, ‘க’ வரும் போது, ‘ம’கரம் மெல்லின மெய்யாகிய ‘ங’ வாக மாறுகின்றது என்கிறார். மகரத்தைத் தொடர்ந்து ‘ச’வும், ‘ட’வும், ‘த’வும் வந்தால் அம்மகரம் முறையே ‘ஞ’ வாகவும், ‘ண’ வாகவும், ‘ந’ வாகவும் மாறுகின்றது; இதில் ‘ச’ வை ‘அண்ண எழுத்து’ என்றும், ‘ட’ வை ‘நாவெழுத்து’ என்றும் ‘த’வை ‘பல்லெழுத்து’ என்றும் குறிப்பிடுகிறார் கால்டுவெல். தெலுங்கு மொழிக்கே உரிய ‘அரை அனுஸ்வரா’ எழுத்தையொட்டிய எழுத்து எதுவும் தமிழில் இல்லை என்றும் வல்லின மெய் எழுத்துகளின் முன், அவற்றிக்கினமான மெல்லின மெய் எழுத்துகளை அமைத்து, அவ் வல்லின மெய் எழுத்துகளின் வன்மையொலியைக் குறைத்து இனிய ஒலியாக மாற்றுவதே அரை அனுஸ்வார ஒலித் தோற்றம்; அம்முறை தமிழில் பெரிதும் மேற்கொள்ளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். சமஸ்கிருதத்தில் காணப்பெறும் வலிய ஒலிகளுள் எதையும் கடன் வாங்கியது கிடையாது. தனித்து இயங்கும் இயல்புடைய ‘ஹகர’ ஒலியையும் தமிழ் ஏற்றுக் கொள்வதில்லை என்கிறார். சமஸ்கிருத ‘விஸர்க்க’த்தை ஒத்த அரை உயிரும், அரை மெய்யுமாகக் கருதப்படும் ஆய்தம் என்ற எழுத்தைத் தமிழ் கொண்டுள்ளது. மேலும், சமஸ்கிருத மிடற்றுஒலி, ‘ஹ’கரம் போல ஒலிக்கப்பெறுகின்றது. அது பெரும்பாலும் செய்யுள்களில் மட்டும் இடம் பெறுகின்றது. அது புலவர்களுக்காக, பயனின்றித் தோற்றுவிக்கப்பட்ட எழுத்து (விஸர்க்கம்) என்கிறார். சமஸ்கிருதம், தன் மெய் எழுத்துகளை தேவநாகரி வர்க்க முறையைக் கையாண்டு வகைப்படுத்தி வரிசைப் படுத்தியுள்ளது. அதே முறையையே தமிழும் கையாண்டுள்ளது என்கிறார் கால்டுவெல். தமிழ் நெடுங்கணக்கு, முதல் வரிசையாகிய மிடற்று எழுத்துகளில், ‘க’ வையும், அதற்கு அடுத்து மூக்கெழுத்தாகிய ‘ங’ வையும் மேற்கொண்டு, இடையில் உள்ள ‘கஹ’,‘க’, ‘கஹ’ என்ற எழுத்துகளை நீக்கிவிட்டது. இரண்டாம் வரிசையாகிய அண்ணவெழுத்துகளில் ‘ச’ வையும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ஞ’வையும் மேற்கொண்டு, ‘சஹ’,‘ ஐ’, ‘ஐஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. மூன்றாவது வரிசையாகிய தலைவளி எழுத்துகளில் ‘ட’வும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ண’வையும் மேற்கொண்டு, ‘டஹ’,‘ ட’, ‘டஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. நான்காவது வரிசையாகிய வல்லெழுத்துகளில் ‘த’வையும், அதற்கின மூக்கெழுத்தாகிய ‘ந’ வையும் மேற்கொண்டு, ‘தஹ’, ‘த’, ‘தஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. ஐந்தாவது வரிசையாகிய இதழ் எழுத்துகளில், ‘ப’ வையும் அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ம’வையும் மேற்கொண்டு, ‘பஹ’, ‘ப’, ‘பஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. இவ்வாறு தேவநாகரியின் ‘ஹகர’ ஒலி மெய் எழுத்துகளை அறவே தமிழ் நீக்கிவிட்டது என்றும் அந் நெடுங்கணக்கின் மெல்லொலி மெய் எழுத்துகளையும் நீக்கிவிட்டது என்றும் கூறும் கால்டுவெல், தமிழில் வடிவெழுத்து ஒன்றே ஓர் இடத்தில் வல்லொலி உடையதாகவும் மற்றொர் இடத்தில் மெல்லொலி உடையதாகவும், தமிழுக்கே உரிய ஒலி முறைப்படி குறிக்க மேற்கொள்ளப்படுகின்றது என்றும், அவ்வடிவெழுத்து தேவநாகரி வர்க்கத்தின் முதல் எழுத்தாகிய வல்லொலி எழுத்து என்றும் கூறுகிறார் கால்டுவெல். தேவ நாகரி எழுத்துகளோடு வேறு நான்கு எழுத்துகளையும் தமிழ் இணைத்துக் கொண்டுள்ளது என்று கூறும் கால்டுவெல், இடையின ‘ழ’, வல்லின ‘ற’, லகர, ரகர ஒலிக்கலவை என்று கருதப்படும் இடையின ‘ள’, மெல்லின ‘ன’ ஆகிய நான்கு எழுத்துகளையும் குறிப்பிடுகிறார். ‘இஸ்’ என்ற ஒலியைத் தரும் சமஸ்கிருத எழுத்துகள் எவையும் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெறவில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஒலிக்கும் போதும், எழுதும் போதும் தமிழ், ‘ஷ­’, ‘ஸ’ என்ற ஒலிகளை மேற்கொண்டாலும் இவ்வெழுத்துகள் பழந்தமிழ் இலக்கணத்திலோ, இலக்கியத்திலோ இடம் பெறவில்லை என்றும் தமிழ் நெடுங்கணக்கிலும் இடம் பெறவில்லை என்றும் கூறுகிறார் கால்டுவெல். சமஸ்கிருத ‘ஸ’ என்ற எழுத்து தமிழில் என்றும் இடம் பெற்றதில்லை என்றும் சமஸ்கிருத ‘ச’ என்ற ஒலியோடு ஒத்த ஒலியை உடையதும் தனித்து எழுதினால் ‘ஸ’ எனவும், இணைத்து எழுதினால் ‘ச’ எனவும் ஒலிக்கப் பெறும் ‘ச’கரமே தமிழில் ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். திராவிட ஒலிப்பு முறைதமிழ் நெடுங்கணக்குகளின் வரிசை, அமைப்பு முறை விளக்கிய கால்டுவெல் திராவிட வடிவெழுத்துகளின் ஒலிப்பு முறைகளை உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்ற பகுப்பு முறையில் விரிவாக விளக்குகிறார். உயிர் எழுத்துகள் : தமிழ் உயிர் எழுத்துகளில் ‘அ’கர ஒலியே கடினமான ஒலி என்றும் அதனால் அது பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. சில இடங்களில் ‘எ’ எனவும் மாறுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். அதற்கு எடுத்துக் காட்டாக, சமஸ்கிருத ‘பலம்’, தமிழில் ‘பெலம்’ எனவும், ‘ஜபம்’, ‘செபம்’ எனவும் மாறுவதை கூறுகிறார். ஈற்றில் வரும் ‘அ’கரம் தமிழில் ‘ஐ’ காரமாக மாறுகிறது. கன்னடத்தில் அது பொதுவாக ‘எ’கரமாக மாறுகிறது என்கிறார். மலையாளத்தில் இன்றும் ‘அ’கரம், வழக்குத் தமிழில் பெரும்பாலும் ‘ஐ’காரமாகவும், தெலுங்கில் ‘இ’கரமாகவும், கன்னடததில் ‘உ’கரமாகவும் மாறுகிறது என்கிறார் கால்டுவெல். ‘அவ’ என்னும் சுட்டு, தமிழில் ‘அவை’ எனவும் தெலுங்கில் ‘அவி’ எனவும், கன்னடத்தில் ‘அவு’ எனவும் மலையாளத்தில் ‘அவ’ என்றே வருகிறது என்கிறார். இதுதான் ‘ஈற்று அ’ என்று ஒலிப்பு முறை எப்படி மாறுகின்றது என்பதை விளக்குகிறது. குறில் ‘அ’ இரண்டு இணைவதால் ‘ஆ’ தோன்றுகிறது. அது செய்யுளில் ஒ என மாறுகிறது. எடுத்துக்காட்டாக, விண் + அ+வ்+அர் = விண்ணவர், விண்ணோர். கன்னடத்தில் குறில் ‘அ’கரமும் ‘ஒ’கரமாக மாறும். சமஸ்கிருத உயர்திணைப் பெண்மையைக் குறிக்க வரும் ‘ஈற்று ஆ’, தமிழில் ‘ஐ’ என மாறும் என்கிறார் கால்டுவெல். எடுத்துக்காட்டாக, விருப்பம் என்ற சொல் சமஸ்கிருத்தில் ‘ஆஸா’, தமிழில் ‘ஆசை’ என்று மாறுகின்றது. சமஸ்கிருத ‘சித்ரா’, தமிழில் ‘சித்திரை’ என்று திங்கள் ஒன்றின் பெயராக வருகிறது என்றும் எடுத்துக் காட்டுகிறார். இதே ‘ஆ’, கன்னடத்தில் ‘எ’என மாறும். எடுத்துக்காட்டாக சமஸ்கிருத ‘கங்கா’ தமிழில் ‘கங்கை’ என்றும், கன்னடத்தில் ‘கங்கெ’ அல்லது ‘கங்கெயு’ என்றும் மாறும் என்கிறார் கால்டுவெல். தமிழ் ‘ஐ’ காரம் ‘அ’கரத்தில் இருந்து தோன்றுகின்றது என்றாலும் இவ் ‘ஐ’ கார ஒலி ஒலிக்கும் பொழுது அவ் ‘அ’கர ஒலி அடியோடு மறைந்துபோதல் வியப்பாக உள்ளது என்று நுட்பமாக எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். இவ்வொலி, கிரந்த , மலையாள நெடுங்கணக்குகளில் ‘எஎ’ என இரண்டு ‘எ’கர எழுத்துகளாலும், கன்னட நெடுங்கணக்கில் ‘எ’, ‘இ’ என்று ஒலிகளின் கூட்டொலியை அறிவிக்கும் எழுத்து ஒன்றாலும் எழுதப்படுகிறது என்கிறார் கால்டுவெல். இரண்டாம் வேற்றுமை உருபு, மலையாளத்தில் ‘எ’ என இருக்க, அது தமிழில் ‘ஐ’ ஆக இருப்பது குறிக்கத் தக்கது என்கிறார் கால்டுவெல். தொழிற் பெயர்களின் இறுதி, கன்னடத்தில் ‘எ’ என இருக்க, தமிழில் ‘ஐ’ என இருப்பதும் ஆராயத்தக்கது என்கிறார் கால்டுவெல். ‘இ’,‘ ஈ’ இவை குறித்து கூறத்தக்கன எதுவும் இல்லை என்று கூறும் கால்டுவெல், திராவிட மொழிகளில் ‘ஊ’ காரம் நிலைத்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தது என்றாலும், குறில் ‘உ’, உயிர் எழுத்துகள் எல்லாவற்றிலும் மிக மிக மென்மையானதும் எளிமையானதும் ஆகும் என்கிறார். ஒலித்துணை, ஒலி நயம் காரணமாக, பெரும்பாலும் சொற்களின் ஈற்றில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். தெலுங்கு இலக்கண நடையில் ஒவ்வொரு சொல்லும் ‘உயிர் ஈறாகவே’ முடிதல் வேண்டும். உயிர் ஈற்று இல்லாமல் போகின்றபோது, ஈற்று மெய்யெழுத்துடன் ‘உ’கரம் இணைக்கப்படும் முறை சமஸ்கிருத்தில் இருந்து வந்த முறை என்கிறார் கால்டுவெல். ‘மகர’ ஈற்றுச் சமஸ்கிருத அஃறிணைப் பண்புப் பெயர்கள், தெலுங்கில் ‘மு’ என்றே முடிகிறது. எழுதும்போது உகரம் எழுதப்பட்டாலும் ஒலிக்கும் பொழுது பெரும்பாலும் ஒலிக்கப்படுவதில்லை என்கிறார் கால்டுவெல். கன்னடத்தில் ‘அ’கர ஈறாக முடியும் சொற்களின் ஈற்றிலும் ‘உ’கரம் சேர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக ‘சில’, ‘பல’ என்ற தமிழ்ச் சொற்கள், கன்னடத்தில் ‘கெலவு’, ‘பலவு’ என வருகிறது என்று எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல். க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற வல்லின மெய் எழுத்துகளை ஈறாக உடைய சொற்களோடு உகரத்தை இணைக்கும் தமிழ் முறை, கன்னட முறையோடு ஒத்துள்ளது என்கிறார் கால்டுவெல். இவ்வாறு இணைக்கப்படும் உகரம் அளவில் மிகவும் குறைந்து கால் கூறு அளவே ஒலிக்கிறது என்றும் கூறுகிறார். தமிழின் இக் ‘குறை உகரம்’ வட மலையாள மொழிகளில் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘கிழக்கு’ என்பது மலையாளத்தில் ‘கிழக்க’ என்று ஒலிக்கப்படுகிறது. துளு மொழியில் மேலும் விரிவாக ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். தன்னை அடுத்து, குறை உகரமோ அன்றி, ‘அ’கரமோ இணைக்கப்பட்ட ஈற்று வல்லின மெய்கள், சில வேளைகளில் இரட்டிப்பாக ஒலிக்கும் என்றும், ‘சொல்’ என்று பொருள் தரும் சமஸ்கிருத ‘வாக்’, தமிழில் ‘வாக்கு’ என்றும் ‘நீர்’ என்று பொருள்படும் சமஸ்கிருத ‘அப்’, தமிழில் ‘அப்பு’ என்றும் ஒலிக்கும் என்கிறார் கால்டுவெல். திராவிட மொழிகள், ‘எ’கர, ‘ஒ’கரக் குற்றுயிர் ஒலிகளைப் பெரும் அளவில் மேற்கொள்கின்றன என்கிறார் கால்டுவெல். எகர, ஒகரங்களின் நெடில்களான, ‘ஏ’கார, ‘ஓ’கார ஒலிகளிலிருந்து குற்றுயிர் ஒலிகளைப் பிரித்து, தனி வடிவெழுத்துகளை கொண்டுள்ளது. இவ்வாறு தனிக்குறில்கள் சமஸ்கிருதத்தில் கிடையாது என்கிறார். சமஸ்கிருத மொழியில் அறவே இடம் பெறாத இவ்விரு ஒலிகளும், திராவிட மொழிகளில் பெற்றிருக்கும் இன்றியமையாப் பெருநிலை, திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியின் தொடர்பற்ற தனி மொழிகளாகும் என்ற உண்மையை உறுதி செய்யத் துணை புரிவதாகும் என்கிறார். எகர, ஒகரக் குறில்கள் வரும் இடங்களில் அவற்றிற்கு ஈடாக, ஏகார, ஓகார நெடில்கள் அமைந்த சொற்கள் வந்தால் அவ்விரு சொற்களுக்கும் இடையே தோன்றும் வேற்றுமை, ஒலி நயம் குறித்து வந்ததாக இல்லாமல், சொற்களின் அடிப்படையையே, அச் சொற்களின் பொருளையே

செலக்டிவ் பாலிடிக்ஸ்

செலக்டிவ் பாலிடிக்ஸ்

இது சமூக வலைத்தளங்களின் காலம். சமூகத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்வையும் சமூக வலைத்தளவாசிகள் நினைத்தால், ஆதரவாக அல்லது எதிர்ப்பாக, பெரும் வைரலாக மாற்ற முடியும் எனும் காலம். சமூக வலைத்தளங்களால் உலகெங்கும் அரசுகளே தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் இளைஞர் புரட்சியாகக் கருதப்படும் 2011 எகிப்துப் புரட்சியும் சரி, 2017 மெரினா ஜல்லிக்கட்டு புரட்சியும் சரி, சமூகவலைதளங்களின் சக்தியால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி நிகழ்த்திக் காட்டப்பட்ட பெரும் புரட்சிகள். இதைப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகளும், கட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தி, தனி அணிகளையே உருவாக்கி நடத்தி வருகின்றனர். மறுபக்கம் அச்சு ஊடகங்கள் வர்த்தக ரீதியாக சவால்களைச் சந்தித்து வரும் நிகழ்காலத்தில், சேட்டிலைட் சேனல்களுக்கே கடும் போட்டியைக் கொடுக்கும் விதமாக யூ-டியூப் சேனல்கள் பல்கிப்பெருகி வருகின்றன. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் எதுவாகட்டும், அவற்றின் கடமை, அறம் என்னவாக இருக்க வேண்டும்? நீதியின் குரலாக, பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தரப்பு நியாயத்தையே பேசுபொருளாக்க வேண்டும். அதுதான் அறம். ஊடங்கங்களுக்கு மட்டுமல்ல; மக்களைக் காப்பாற்றுவாதற்காகவே அவதாரம் எடுத்து வந்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அறம். இந்தச் சூழலில், அண்மைக்காலத்தில் நடந்தேறிவரும் சில நிகழ்வுகளைக் காண்போம். நிகழ்வு 1அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் செய்த குற்றங்களுக்கு வழக்குப் பதிவு செய்யட்டும். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டனைகள் வழங்கப்படட்டும். அதில் தவறு இல்லை. ஆனால் உ.பி. அரசு இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு புதிய நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. அதாவது, போராட்டங்களை முன்னின்று நடத்துவோர் மற்றும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டோரது வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் அல்லது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக கூறி, காலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. மதியம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. உ.பி இந்தியாவின் ஒரு அங்கம்தானே? இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மாநிலம்தானே? அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நாடாளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இருக்கிறது அல்லவா? அந்த அமைப்புகள் கடமையைச் செய்யாவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அந்தக் கடமையைச் செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதுதானே? நிகழ்வு 2தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 7 விசாரணைக் கைதிகள் காவல்நிலையத்தில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கடுமையாகத் தாக்கப்பட்டதால் மரணமடைந்த்தாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதற்குள், முதலமைச்சர் சட்டமன்றத்தில், அந்த நபர் உணவு ஒவ்வாமையால் மரணித்ததாக தவறான தகவலைச் சொல்கிறார். நிகழ்வு 3குடந்தையைச் சேர்ந்த பட்டியல் சமூகப் பெண்ணும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞரும் பெண்வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் அண்ணன், தான் மனம்மாறி அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி விருந்துக்கு அழைத்து, இருவரையும் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். நிகழ்வு 4கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல் கட்சிகளும் சரி, ஊடகங்களும் சரி, எல்லாவற்றையும் டிரெண்ட் ஆக்கும் சமூக வலைத்தளங்களும் சரி, பெரிதாகப் பொருட்படுத்தவே இல்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த லாக்அப் மரணத்தை மிகப்பெரிய அளவில் வைரலாக்கின சமூக வலைத்தளங்கள். அந்தச் செய்தியைத் திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, மக்களைக் கொதிநிலையிலேயே வைத்திருந்தன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டங்கள் நடத்தின. கடந்த காலங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தபோது ஊடகங்களும் கட்சிகளும் இடைவிடாது பேசுபொருளாக்கி, போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், தற்போது குடந்தையில் நடந்த படுகொலையை சாதி ஆணவப்படுகொலை என்று குறிப்பிடவே மறுக்கின்றன. சாதிவெறி என்பது, சாதியப் படிநிலையின் எந்த அடுக்கில் இருந்தாலும் அது சமூக இழிவே என்ற உண்மையைப் பேசாமல் மூடி மறைக்கின்றன. அவ்வாறு உடைத்துப் பேசாமல், இத்தகைய படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இவர்கள் சாதியை ஒழிக்கப் போராடுவதாகக் கூறுவது ஏமாற்று வேலை அல்லது நகைப்புக்குரியது. கடந்த காலங்களில் டெல்லியிலும் கஷ்மீரிலும் பெண் பாலியல் வன்கொடுமைகள் நடந்தபோது பொங்கி எழுந்து, “ஜஸ்டிஸ் ஃபார்_____” என்று பதாகைகள் ஏந்தியும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கியும் இவர்கள் எவ்வளவு பெரிய சமர் புரிந்தனர்? இங்கே நம் மண்ணில் நம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது ஊடகங்களும் அன்று போராடிய கட்சிகளும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டுள்ளன. ஏன் இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள்? நடந்த குற்றத்தைப் பாரபட்சமின்றிக் கண்டிக்க வேண்டுமே தவிர, குற்றம் புரிந்தவர் யார் என்று பார்த்து, கண்டிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது, அந்தக் குற்றத்தை விட மோசமானது. எத்தகைய அரச பயங்கரவாத்தையும் எதிர்க்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டப்பட்ட அரசாக இருந்தால் கண்டுகொள்ளாமலும், நமக்கு எதிர்ப்பான அரசாக இருந்தால் பொங்கியெழுந்து போராட்டம் நடத்துவதும் மிகமிக ஆபத்தான போக்கு. இப்படியெல்லாம் ஊடகங்களும் முன்னால் எதிர்க்கட்சிகளும் செலக்டிவ் நிலைப்பாடுகளை எடுப்பதால்தான், திரு.ஆர்.எஸ்.பாரதி, திரு.அண்ணாமலை போன்றவர்கள் இவர்களை ஏலம்போட்டு இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல, சிறிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள், அந்தந்த நேரங்களில் பெரிய கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆதரிக்கின்றன அல்லது எதிர்க்கின்றன என்ற விமர்சனங்கள் பலதரப்பிலும் வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதியை நிலைநாட்ட எப்போதும் தயங்காமல் முன்வர வேண்டும். இதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களுக்கும் நீதி கிடைக்கும். இவர்களும் மேற்சொன்ன விமர்சனங்களில் சிக்காமல் சுயமரியாதையுடன் நேர்மைக்கே உரித்தான கம்பீரத்துடன் பயணிக்கலாம். செய்வார்கள் என்று நம்புவோம். தஞ்சை ராஜேஷ்

அஸ்கர் அலி இன்ஜினியரின் பெண்ணியம்

அஸ்கர் அலி இன்ஜினியரின் பெண்ணியம்

‘ஆண்களைப் போலவே சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்று பெண்கள் தங்கள் கருத்துக்களை, அவர்கள் அனுபவத்தில்  கண்ட அடக்குமுறையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வாதிடுவது இயல்பான ஒன்று. குர்ஆன் மற்றும் பல்வேறு தீர்க்கதரிசனங்கள் பற்றிய விளக்கங்கள் அளித்துள்ள பாகிஸ்தானின் ரிஃபத் ஹாசன் (1943), அமெரிக்காவின் அமினா வதூத்-முஹ்சின் (1952), மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா மெர்னிஸ்ஸி (1940), எகிப்து நாட்டின் நவல் எல் சாதவி (1931) போன்ற பெண்ணியவாதிகளின் எழுச்சி, இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் இயக்கம் இன்னும் உறுதியாக உள்ளது என்பதற்குச் சான்று. ஆனால் இஸ்லாமிய ஆண் பெண்ணியவாதிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?  சமகால இஸ்லாமிய உலகின் சீர்திருத்தச் சிந்தனையாளரான ஆண் பெண்ணியவாதிகளில் ஒருவரான அஸ்கர் அலி இஞ்ஜினியர், ஆண்-பெண் சமத்துவம், திருமண உரிமைகள், ஹிஜாப் போன்ற பல விஷயங்களில் குர்ஆனின் அடிப்படையில், விளக்கங்கள் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர். இஸ்லாமிய சமுதாயத்தில் அதற்குப் பெரும் பங்கு வகித்தவர் அஸ்கர் அலி இஞ்ஜினியர். முனைவர். அஷ்கர் அலி இன்ஜினியர், 1939 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் உதய்பூருக்கு அருகிலுள்ள சலும்பரில் பிறந்தார். அவர் தனது தந்தையிடமிருந்து இளம் பிராயத்திலேயே இஸ்லாமியக் கல்வியில் ஆரம்பப் பயிற்சி பெற்றார். அரபு மற்றும் பாரசீக மொழிகளையும் இதற்காகக் கற்றுக்கொண்டார். மேலும் இந்த இரு மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தார். அவரது இளம் வயதிலிருந்தே, அறிவார்ந்த பகுத்தறிவுச் சிந்தனையை வெளிக் காட்டினார். அவர் ‘ஆசியாவின் எஸ்பினோசா’ (Espinoza) என்று மேனாள் இந்தியத் துணை ஜனாதிபதி முனைவர் ஹமீத் அன்சாரியால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் மற்றும் அது கூறும் மனிதாபிமான விழுமியங்களைப் பற்றி எப்பொழுதும் அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் சிவில் இன்ஜினியர் பட்டம் பெற்று, பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷனில் பொறியாளராக தனது பணியைத் தொடங்கினார். இருபது ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றார். அஷ்கர் ஒரு எழுத்தாளராக நாட்டில் அமைதி, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, அசாத்தியத் துணிச்சலுடன் செயல்பட்டவர். சமூகம் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய ஆய்வு மையத்தின் நிறுவனத் தலைவர். அவர் உரை நிகழ்த்த அழைக்கப்பட்ட பல நாடுகளில் இருந்து உலக மதச்சார்பின்மையின் போக்குகளைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். அவரது சுயசரிதை நூலான ‘A Living Faith: My Quest for Peace, Harmony and Social Change’ 2011 ஆம் ஆண்டில் அன்றைய இந்தியத் துணை ஜனாதிபதியான ஹமீத் அன்சாரி அவர்களால் வெளியிடப்பட்டது. அவரது அரும்பணி அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. மத நல்லிணக்கத்திற்கான அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒன்றிய அரசாங்கம் 1997-இல் அவருக்கு ‘வகுப்புவாத நல்லிணக்க’ விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அவர் வகுப்புவாத வன்முறை மசோதாவை உருவாக்கிய தேசிய ஆலோசனைக் குழுவின் ஒரு அங்கத்தினராகவும் தம் பங்களிப்பைச் செலுத்தினார். “அஸ்கர் சமகால இஸ்லாமிய உலகில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட, அதே சமயத்தில் எளிதில் அணுகக்கூடிய சீர்திருத்த சிந்தனையாளர்களில் ஒருவர்” என்று பன்முகக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் எழுத்தாளர், மொஹமத் இம்ரான் மொஹமத் தயிப் மேற்கோள் காட்டியுள்ளார். இஸ்லாமிய சமூகத்தில் சீர்திருத்தம் குறித்த பிரச்சனைகள் பற்றிய அவரது கருத்துக்கள், முஸ்லீம் சட்டம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை மறுபரிசீலனை செய்வதற்கான முக்கியப் பங்களிப்பாகும். ஆயினும், அவை உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களில் காணப்படும் அடிப்படைவாத மீளுறுதிப்பாட்டின் கருத்தாடலினால் முட்டுக்கட்டை ஏற்பட்டு, மேற்செல்ல முடியாத நிலையை அனுபவித்துள்ளது. இஞ்ஜினியர், உலகெங்கிலும், அனைத்து சமூகங்களுக்கிடையில்  பெண்-நிலை பெற்ற முக்கியத்துவம் குறித்துத் தனது மிகுந்த கவனத்தை செலுத்தினார். ​​அஸ்கரின் கூற்றுப்படி பல விஷயங்கள், குறிப்பாக சமூகத்தின் நிலை மாறியுள்ளன. எனவே, மதநூல்களின் வசனங்களையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் கருதினார். மற்றொரு அர்த்தத்தில் சொல்ல வேண்டுமென்றால், அடிமை நிலைக்கு தெய்வீக சட்டங்களின் தத்துவங்கள் இனி பொருந்தாது என்று அவர் தீர்ப்பளித்தார். இவ்வாறாக, சமய மறைகள் கைவிடப்பட்டு, மதச்சார்பற்ற அடிப்படையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், அல்லது நவீன நிலைக்கு ஏற்றவாறு அவற்றை மீள் வாசிப்பு செய்து மறுவிளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.  அதே சமயத்தில், ‘அர்ரிஜாலு கவ்வாமுனா அலனிசா’ (arrijaalu qawwamuuna alannisaa) என்ற குர்ஆனின் வசனம் பெண்களை ஒடுக்கி ஆண்களின் கீழ் நிலையில் வைக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, அந்த வசனம், பெண்கள் மீது கடுமையாக உள்ளதாக அவர் கருதினார். ஆனால் ‘பெண்கள் தங்கள் வீடுகளில் பிணைக்கப்பட்டிருந்த காலங்களில், ஆண்களே அவர்களுக்குத் தேவைகளை வழங்குபவர்களாக இருந்தனர்’ என்கிற அக்காலச் சூழலையும் பார்க்கிறார். எனவே, குர்ஆன் அத்தகைய சமூக அமைப்பை மகிமைப்படுத்தவோ அல்லது அதை நெறிமுறையாக அறிவிக்கவோ இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். சமூகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் நிகழும்போது, பெண்கள் ஆண்களுடன் இணைப் பங்காளிகளாகும்போது, பெண்கள் ஆண்களுக்கு சமமாகவோ அல்லது உயர்ந்தவளாகவோ ஆக வேண்டும்; மேலும் ஆண்களைப் போலவே குடும்பத்தில் மேலோங்கிய பாத்திரத்தை வகிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றுரைக்கிறார். இன்னொரு எடுத்துக்காட்டாக, திருமண விஷயத்தில் ஆடவர் மற்றும் பெண்டிர், இருவருடைய நிலையைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு பெண்களை விட சிறப்புரிமை ஏதுமின்றி, மாறாக, ஆண்களை விடவும் பெண்களுக்கும் எவ்விதச் சலுகையுமின்றி, சமமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கடவுளால் வேண்டப்படுவனவற்றை மீறாதவரை, ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பியபடி மண ஒப்பந்தத்தை வைத்திருக்க உரிமை உண்டு. விவாகரத்து உரிமை (talaq tajwiz) உட்பட, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்துடன் அவள் அந்த உடன்பாட்டில் ஈடுபடலாம். உண்மையில், பாதுகாவலர் (guardian) என்ற கருதுகோளையே குர்ஆன் அங்கீகரிக்கவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார்; ஒரு பெண் அவள் தெரிவு செய்யும் பட்சத்தில், ‘பாதுகாவலர்’ யாருமின்றி மணம் செய்து கொள்ளச் சுதந்திரம் உள்ளது என்கிறார். ‘இஸ்லாமிய அமைப்பு, அதன் சட்டதிட்டங்களின் படி, பெண்களின் நிலைக்கு ஒரு சாபம்’ என்று சொல்லும் மதச்சார்பற்ற பெண்ணியவாதிகள், இஸ்லாத்தை ஒரு ஒடுக்குமுறையாகச் சித்தரித்து, மேற்கத்திய மதச்சார்பற்ற மாற்றுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பெண்கள் தங்களை மதக்கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வலியுறுத்துகிறார்கள். குர்ஆனின்  முறையான விளக்கத்தைப் பார்க்கும்போது, பெண் விடுதலையைப் புரிந்துகொள்வது உண்மையில் ஒரு பிரச்சனையா அல்லது தேவையா? பெண் விடுதலை இஸ்லாத்திற்கு இயைந்ததா? இல்லையா? என்கிற வினாக்களுக்கு விடை கிடைக்கிறது.   இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, இஸ்லாத்தின் பார்வையிலிருந்து, பெண் விடுதலையைக் காண்பதற்கான விளக்கங்கள், பெண் விடுதலைக்கான சிந்தனை எழுப்பப்பட்ட அதே காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளன என்கிறார். இன்றைய சமூகம் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக, பெண் விடுதலை தொடர்பான சமகாலப் பிரச்சனை இஸ்லாமிய சமூகம் முழுவதும் பரவலாகப் பரவியுள்ளது. எனவே, இந்த நவீன யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஏற்ற விளக்கத்தை, அந்தச் சமூகமே பயன்படுத்திக்கொள்ள, மதிப்புமிக்க பங்களிப்பை அஸ்கர் அலி இஞ்ஜினியர் வழங்கிவிட்டு, அழியாச் சுவடுகள் பதித்துச் சென்றிருக்கிறார். ஆனந்த் பாசு

ஆளரவமற்ற கட்டடங்களுக்கு உயிர் உண்டா?

ஆளரவமற்ற கட்டடங்களுக்கு உயிர் உண்டா?

மேப்படியான் திரைப்படத்தில் ஒரு காட்சி. வாழ்ந்த வீட்டை சந்தர்ப்ப சூழ்நிலையால் விற்றுவிட்டு வெளியேறுவார் நாயகன்.  வீட்டைக் காலி செய்து மூட்டை முடிச்சுகள் கட்டி, டெம்போ, ஜீப் வெளியேறும்.  அந்த ஜீப்பின் பின்பக்கம்,  உள்ளிருந்து நாய் அந்த வீட்டையே பார்த்துக்கொண்டு செல்லும்.  அந்த  நாயின் கோணத்தில் இருந்து காட்சிப்படுத்தி இருப்பார்கள்.  நாயகன் வருத்தத்துடன் அப்படியே பார்த்துக்கொண்டு சற்று நேரம் நிற்பார்.  அதன் பின் பைக்கில் ஏறிக் கிளம்புவார். அன்றைய திரைப்படங்கள் முதல், இன்று வரை பல திரைப்படங்களிலும் சூழ்நிலை காரணமாக, நாயகனின் சோதனை காலங்களில், அவர்கள் வாழ்ந்த வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிகளில் இதுபோலவே வீட்டை உற்றுநோக்கி விட்டுத்தான் வெளியேறுவது நடக்கும். கூடவே கனமான அல்லது சோகமான பின்னணி இசையும் ஒலிக்கும். பல படங்களில் அது மனதை உருக்கும் சென்டிமென்ட் நிறைந்த க்ரிஞ் காட்சிதான். அந்த வீடுகளுக்கு அல்லது கட்டிடங்களுக்கு உயிர் உண்டா?  என்ற பெருங்கேள்விக்கான பதில்: மனிதர்களின் நிரம்பி வழிந்து உரையாடல்கள் வழி மென் உணர்வுகள் கடத்தப்படும்போது அந்தக் கட்டிடங்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு விடுகிறது.   அந்த இடங்களுக்கு, கட்டிடங்களுக்கு மீண்டும் செல்லும்பொழுது, தேங்கிக் கிடந்த நினைவலைகளுக்கு மீண்டும் உயிர் வந்து, சிறகடிக்க ஆரம்பித்து விடுகின்றன. அதற்காகவே மனம் அந்தப் பழைய இடங்களுக்குச் சென்று, அந்த நினைவலைகளில் பயணித்து, வாழ்வை உயிர்ப்பித்து, மனதைப் பரவசப்படுத்திக் கொள்ள நினைக்கின்றது.  5 வருடங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் ITPL அலுவலகம் சென்றேன் அல்லது வரவழைக்கப்பட்டேன்.  எப்போதும் மூன்று, நான்கடுக்குப் பாதுகாப்பு சோதனைகள் நிறைந்த அலுவலகம் இந்த  ITPL .  அடர் நீல நிறப் பேண்ட்டும்,  வெளிர் நீல நிறச் சட்டையும் அணிந்த இறுக்கமான பாதுகாப்புப் பணியாளர்கள்/அதிகாரிகள், வட கிழக்கு மாநிலத்தில் இருந்த இறக்குமதி ஆனவர்கள். வழக்கமாகக் கூட்டமாக இருப்பவர்கள், அன்று ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள்.      பைக்கில் உள்ளே சென்றால் துப்பாக்கி போன்ற ஒரு சோதனைக் கருவியை வைத்து பின்புறம் மாட்டியுள்ள பையை ஸ்கேன் செய்யும் பாதுகாப்பு சோதனை இல்லை.  உள்வரும் வாகனனங்களை வரிசையாக  ரேஸ் விடுவதுபோல நிறுத்தி, அதற்கு முன்னால் ஒரு கம்பியை நீட்டிக்கொண்டு செல்லும் சோதனையும் இல்லை.  சில சோதனைகள் எல்லாம் எதற்கு செய்கிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது; நமக்கும் தெரியாது.  அந்த வகை சோதனைகளில் இதுவும் ஒன்று.   ஆரம்பத்தில் புதிதாக உள்ளே சென்றபோது நிறுவன ஸ்டிக்கர் இல்லாமல் இவர்களிடம், தங்லீஷ் ஹிந்தியில் பேசி விருந்தினர் அட்டை வாங்கி  உள்ளே நுழைந்தது  தனிக்கதை.   இன்று அடையாள அட்டையை மட்டும் சோதனை செய்து அதில் ITPL ஸ்டிக்கர் உள்ளதா என்று பார்த்து அனுப்புகிறார்கள்.  அவர்களுக்குத் தேவை, அந்த குறிப்பிட்ட ஸ்டிக்கர்தானே தவிர, நமது முகம் அல்ல.  புதிய சோதனையாக, காய்ச்சல்  சோதிக்கும் கருவியைக் கையில் காண்பித்து  சோதனை செய்கிறார்கள். உள்ளே நுழைந்தாயிற்று.   ‘பார்க்கிங் காசு வாங்குவார்களே, எங்கு நிறுத்தலாம்?’ என யோசிக்கும் பொழுது, காசு வாங்கும் அறை காலியாக இருந்தது.  ஒவ்வொரு வண்டியாகத் தடுத்து நிறுத்தும் ஆட்டோமேட்டிக் குச்சியைக் காணோம்.  நிரம்பி வழியும் இரு சக்கர வாகன நிறுத்துமிடம், புல் முளைத்துக்  கிடந்தது.  மரங்களின் சருகுகள் சற்று அதிகமாவே கிடந்தன. மரங்ககளின் நிழல்களில் அங்கங்கு சில பழைய வாகனங்கள், சிலந்திகள் கூடு கட்டி சமூக இடைவெளியில் இளைப்பாறிக்  கொண்டு இருந்தன.  காலியாகக் கிடந்த பைக் நிறுத்தத்தைப் பார்க்கும்பொழுது, ‘எத்தனை கொள்ளை எங்க கிட்ட அடிச்சிருப்பீங்கடா?’ என்றுதான் தோன்றியது. பார்க்கிங்கின் வெளியே அங்கங்கு சொற்ப பணியாட்கள்.  இவை அனைத்தும் இன்னும் அலுவலகங்களுக்கு மக்கள் வரவில்லை என்பதை அழுத்திச் சொன்னது. ஏதோ யாருமில்லாத உலகத்துக்குள் பயணிப்பது போல ஒரு மயான அமைதி.  கல்லூரி போல குழுமம் குழுமாகச் சாலையில் நடந்துகொண்டே இருக்கும் பட்டாம்பூச்சிகளைக் காணவில்லை.  டவுன் பஸ் ஏறும் கூட்டம் போல  இருக்கும் லிப்ட் லாபிகள், காலியாக இருந்தன. புதிதாக வெளிவரும் திரைப்படத் தியேட்டர் போல எந்நேரமும் கூட்டமாக இருக்கும் கா∴படீரியா, மொக்கைத்  திரைப்படத்தின் பகல் காட்சி போல யாருமின்றி இருட்டடித்துக் கிடந்தது. ஏதோ யாருமற்ற இடத்திற்குள் நுழைந்து போன்ற ஒரு பிரம்மை.    மனிதர்கள் இல்லாத இந்தக் கட்டிடங்கள், ஏதோ வாழ்ந்து கெட்ட  குடும்பத்தைப் போலத்தான் காட்சி அளிக்கின்றன. நகரமோ, கிராமமோ, இடங்களோ, கட்டிடங்களோ, மனிதர்கள் இல்லாவிடில்  அவை தொல்பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட இடம் போலத்தான்.  மூடப்பட்ட அன்றைய மில்களும், தியேட்டர்களும் கடத்தும் வலிகள் அசாதாரணமானவை.  ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ராயல் தியேட்டரைக் கடக்கும் போதும் இதேதான் தோன்றும்.  ஆயிரம் ஆயிரம் மக்களைச் சுமந்து அவர்களைக் குதூகலப் படுத்திய  ஒரு அரங்கம்.  முண்டி அடித்துக்கொண்டு கம்பிகளின் இடையே கூட்டம் இருக்கும்.  பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக 100 நாள் கடந்து ஓடிய கட்டிடம்.  மேலே குறிப்பிட்ட, நாயகன் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போகும் காட்சி, அதில் ஓடிய திரைப்படங்களில் ஏதேனும் ஒன்றிலாவது வந்து இருக்கும். நிழல் உலகம் போல, நிகழ் காலங்களில் யாரும் பின்னணி இசை வாசிப்பது இல்லை.  இன்றைக்கு சண்டைக்காட்சிகள் எடுக்கப்படும் பின்னி மில் கூட இதுபோலத்தான் ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்திருக்கும்.   பலமாடிகளில் பகல் போல மின்னும் IT  நிறுவனக் கட்டிடங்களுக்கும் அந்த நிலைமை வருமா? தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் நம் ஊருக்கு வந்த 2000 களின் ஆரம்பத்தில், ‘5000 பேர் கொண்ட xy நிறுவனம் பழைய மஹாபலிபுரம் சாலையில் தொடங்க உள்ளார்கள்’ எனும் செய்தி செய்தித்தாள்களில் அவ்வப்போது வரும்.  இது மறைமுகமாக ஒரு 500 பேருக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் எனும் ஒரு வரியும் அந்தச் செய்தியில் சேர்ந்து இருக்கும்.  அந்த ‘மறைமுகமான வேலைவாய்ப்பு’ என்பது அங்குள்ள கா∴படீரியா, அட்மின் துறை, கட்டிடங்களைப் பராமரிக்கும் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலகப் பேருந்தை இயக்குபவர்கள் என இன்னும் பலரும் அடங்குவார்கள்.  அது தவிர அந்தந்த அலுவலகங்களின் வெளியே உள்ள சின்னச் சின்ன பெட்டிக்கடைகள், இளநீர், பஜ்ஜி, பஞ்சர் கடைகள் என இன்னும் பலவும் சேரும்.    இந்த இரு வருடங்ககளாக அவர்கள் அப்படியேவா இருப்பார்கள்?  தெரியவில்லை. மீண்டும் இதுபோன்ற அலுவலகம் திறப்பார்கள், உலகம்  திரும்ப வரும் எனப் பலர் காத்துக்கொண்டு கூட இருக்கலாம். ஏனெனில் நம் கடந்த காலம் அப்படி.  தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் இனி பழைய முறையில், அனைத்து நாட்களும் அனைவரும் அலுவலகம் வந்து இயங்குமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.  பல நிறுவனங்களும் ஹைபிரிட் என்று சொல்லக்கூடிய சில நாட்கள் அலுவலகம், பல நாட்கள் வீட்டிலிருந்து எனும் முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவே வழக்கமான முறையாக மாறக்கூடும்.  இது ஒரு வகையில் பெரு நகரங்களை, குறிப்பாக சென்னை, பெங்களூரை மூச்சு விட வைக்கும். ஆனாலும் நேரில் பார்க்கும்பொழுது வரும் தொடர்பு, உரையாடல், நெருக்கம்,  என்னதான் இணைய வழியே வேலை பார்த்தாலும் வருவது இல்லை.    இன்னும் திறக்கப்படாத டீக்கடைகள், பூட்டிக்கிடக்கும் பெட்டிக் கடைகளுக்காகவேனும் மீண்டும் இந்தக் கட்டிடங்களுக்கு மனிதர்களின் மூலம் உயிர் வர வேண்டும்.    க்ருஷ்

இருபத்து ஒரு கிராம்

இருபத்து ஒரு கிராம்

திரைவிமர்சனம் உள்ளார்ந்த அர்த்தத்தில் ஒரு சிலர் சற்று ஆணவமாகக்கூட “என் வெயிட் தெரியாம பேச வேண்டாம்” என்று கூறுவதைக் கேட்டு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் தெரியாத ஒன்றுதான், அவர்களுடைய உயிரின் வெயிட்! அதைக் கண்டுபிடித்து, மர்ம முடிச்சுகளுடன் கூடிய விறுவிறுப்பான கதையை, பிபின் கிருஷ்ணா அறிமுக இயக்கத்தில் பெயரிட்டு, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான்,  ‘இருபத்து ஒரு கிராம்’. பெருநிறுவன மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் அஞ்சலி (மானசா ராதாகிருஷ்ணன்) கொலை செய்யப்படுகிறார். வழக்கு விசாரணை கிரைம் பிரான்ச் டி.எஸ்.பி நந்த கிஷோர் (அனூப் மேனன்) வசம் வருகிறது. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சன்னி (அனு மோகன்) தலைமையிலான சிறப்புப் படையுடன் விசாரணை சென்று கொண்டிருக்கும் போதே, அயல்நாட்டில் இருந்து திரும்பும் அஞ்சலியின் சகோதரன் மார்ட்டின் (சந்து நாத் ஜி நாயர்) எரித்துக் கொல்லப்படுகிறார். சந்தேக ரேகை படிந்த மார்ட்டின் நண்பன் ஜிம்மி (அஜி ஜான்), ஃபாதர் ஜோசப் (நந்து) தவிர்த்து,  டிப்பர் டோனி (பினெஷ் பாஸ்டின்)  நிகில் (ஜீவா ஜோசப்) அடுத்தடுத்து கொலை செய்யப்பட, வழக்கு முட்டுச் சந்தில் நிற்க, எதிர்பாராமல் கிடைத்த ஒரு துப்பில், வேகமெடுத்துக் குற்றவாளியை நெருங்க, அவனே கொலையாகி வழக்கு மீண்டும் இடியாப்பச் சிக்கலாகி விடுகிறது. என்றாலும் சலைக்காமல், நுணுக்கமாக ஆய்ந்து, விடாமல் துரத்தும் நந்த கிஷோர், குற்றவாளியைப் பிடித்தாரா, குற்றவாளியைத்தான் பிடித்தாரா என்பதுதான், திருப்பங்களோடு சுவையாகச் செல்லும், ‘இருபத்து ஒரு கிராம்’ படத்தின் கதை. அருமையான மகளை இழந்து, விளைவாக மனைவியை (லினா லிஷாய்) இழந்து விடக்கூடாது என்கிற சோகம் ஒரு புறம் இருக்க, சவாலான இந்தத் தொடர் கொலை வழக்கைக் கையாள வேண்டிய நந்த கிஷோர் பாத்திரத்தில் அனூப் மேனன் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஷூட்டிங், சேசிங், பைட்டிங் இல்லாமல், விசாரணை, துப்பு, தடயவியல் முடிவுகள், நுணுக்கமான புலனறிவு என அப்பாத்திரமாக இயங்குவதில் அனூப்  தனது பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்குகிறார். மானசா ராதாகிருஷ்ணன், அனு மோகன், லினா லிஷாய், அஜி ஜான், ஜீவா ஜோசப், லினா, நந்து, ரஞ்சித், ரெஞ்சி பணிக்கர், விவேக் அனிருத் ஆகியோரும் ஏற்ற  பாத்திரங்களில் நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குழப்பமில்லாத திரைக்கதை. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவும், தீபக் தேவ் இசையும், அப்பு என் பட்டாத்ரி படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, இயக்குநருக்குப் பக்க பலமாக உள்ளன. ஒரு வழக்கில் சந்தேகத்திற்கு உள்ளான ஒருவரை, குற்றவாளியாக  நிறுவுவதற்கு அடிப்படைத் தேவை, குற்றத்தின் நோக்கம். அதனைச் சந்தேகத்துக்கிடமின்றி அணுகுவதிலுள்ள காவல்துறையினரின் பல்வேறு கஷ்டநஷ்டங்களையும், சிரமங்களையும், ஏன், அழுத்தங்களையும்கூட உணரச் செய்யும் விபின் கிருஷ்ணாவின் ‘இருபத்து ஒரு கிராம்’,  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் விரும்பிகளுக்கு விருந்துதான். மதிப்பெண்: 7/10 மது ராஜேந்திரன்

நெடுங்கணக்கு

நெடுங்கணக்கு

கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலைப் படிக்க முயல்வது எவ்வளவு கடினமானது என்பதையும் அதனை வாசிக்க எவ்வளவு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன். தோற்றுவாய்ப் பகுதியையும் முதற் பாகத்தையும் இயன்றளவு படித்து முடித்துவிட்டேன். இரண்டாம் பாகம் படிக்கும்போது திணறிவிட்டேன். படித்ததில்சில குறிப்புகள்: துளு மொழி, மலையாள வரிவடிவத்தில் எழுதப்பட்டு வந்தன என்றும் தற்போது மங்களுர், ஜெர்மன் மி­ன் பதிப்பகத்தில் வரும் துளு மொழி நூல்கள் கன்னட வரிவடிவுகளைப் பயன்படுத்துகின்றன என்றும் பிரைகில் என்பவர் எழுதிய துளுமொழி இலக்கண நூலும் கன்னட வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். கூ (கோண்டு) மொழி இலக்கண நூல் ஒரியா வரிவடிவத்தில் காணப்பட்டாலும் தெலுங்கு வரிவடிவே ஏற்புடையது என்கிறார் கால்டுவெல். ஏனைய திருந்தா மொழிகள் அனைத்தும் உரோமன் வரிவடிவங்களைப் பயன்படுத்துகின்றன என்றும் கூறுகிறார். திராவிட வரிவடிவங்கள் மாற்றம் பற்றி பீம்ஸ் என்பவர், ஒரிய மொழிகளின் வரிவடிவங்கள் ஆரியரல்லாத இனமொழிகளின் வடிவெழுத்துக்களோடு (தெலுங்கு, மலையாளம், தமிழ், சிங்களம், பர்மிய மொழிகள்) ஒத்துள்ளன என்றும் பர்மிய வரிவடிவங்கள் வட்டமாக மட்டுமே உள்ளன என்றும் நேர்க்கோடு என்பது கிடையாது என்றும், அசோகன் கையாண்ட வரிவடிவ எழுத்துக்கள் நேர்க்கோடுகளும், கோணங்களும் உடையனவாய் உள்ளன என்றும், அவை சியோனி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார். இதனுடைய தொடர்ச்சி கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி என்ற இடத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதில் சதுரங்களாக இருந்த வரிவடிவங்கள் அரை வட்டங்களாக மாற்றம் பெறுகின்றன. இம்மாற்றங்களிலிருந்தே திராவிட, சிங்கள மொழிகளின் நெடுங்கணக்குகள் தொடங்கப்பட்டன. ஜாவா நாட்டு அழகிய வரிவடிவங்களும் அவ்வாறே தோன்றின என்கிறார் கால்டுவெல். அடுத்து ஒரிய மொழி குறித்துக் கூறும் கால்டுவெல், எழுதும் ஆற்றலை ஒரியர்கள் வங்காளத்திலிருந்து பெற்றனரா அல்லது மத்திய இந்தியாவிலிருந்து பெற்றனரா என்று தெரியவில்லை என்கிறார். மேலும், ஒரியர்களும், வங்காளக் கரையோரப் பகுதியில் வாழும் பிற மொழியாளர்களும், தாலிப்பனை, விசிறிப் பனை, பனை இவற்றின் ஓலைகளில் எழுதுகின்றனர். நீண்ட நேர்க்கோடுகளால் ஆன தேவநாகரி எழுத்துக்கள், இப்பனையோலையில் எழுத இயலாது. எழுதினால், எழுத்தாணி பனையோலையைப் பிளந்து விடும் என்கிறார் கால்டுவெல். எழுத்தாணி வலது கையிலும், ஓலை இடக்கையிலும் வைத்து, இடது கைப்பெருவிரல் எழுத்தாணியின் அசைவிற்குக் காரணமாக இருப்பதால் வட்டவடிவ எழுத்துக்களை எழுதுவதற்கு ஏதுவாக இருக்கிறது என்றும் பீம்ஸ் அவர்களின் குறிப்புகளை எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைக்கவில்லை என்கிறார் கால்டுவெல். பிராமணர்கள் தமிழ்நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே, பண்டைத்தமிழர்கள், எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர் என்றும், அப்பிராம்மணர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த போது, தமிழ் வரிவெழுத்துக்களை தங்கள் மொழியாகிய சமஸ்கிருதத்திற்குரிய ஒலிகளை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த சில வடிவெழுத்துக்களையும் சேர்த்து, தமிழ் எழுத்துக்களையும் சீர்திருத்தினர் என்றும் கிரந்த லிபி அல்லது நூல் எழுத்துக்கள் என்று அவர்களால் அழைக்கப்பட்ட அவ்விணைப்பு எழுத்துக்களில் இருந்தே இன்றைய தமிழில் வழங்கும் வரிவெழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் எல்லீஸ் கூறியதையும் இங்கு எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். அடுத்து பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார் கால்டுவெல். அதில், பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவங்களும், கூட்டு எழுத்துக்களில் இரண்டாவது எழுத்திற்குத் தனிவடிவம் தரும் பஸங்கன் முறையும், உயிர் எழுத்துக்களின் வேறுபாட்டைக் குறிக்க, வேறுபாட்டுக்குறிகளை வழங்கும் சந்தங்கன் முறையும், இம்மொழிகள் ஆரிய மொழியின் வழி வந்தன என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது என்கிறார். ‘சமஸ்கிருதத்திற்கு முந்திய தமிழ் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பது குறித்து ஐயப்பாடு இருக்கிறது. தாய் மொழியில் எழுத்தையும், நூலையும் குறிக்க வழங்கும் தனித்தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பது உண்மையே எனினும், பிராம்மணர்கள் இந்நாட்டில் முதன் முதலாகக் குடியேறியதற்கு முற்பட்ட காலத்தில், தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைத்தில’ என்கிறார் கால்டுவெல். மேலும், பழைய காலத்துக் கல்வெட்டுகளில் தமிழ் மொழியை வழங்க மேற்கொண்ட பல்வேறு வகை வடிவெழுத்துகள் தொடக்கத்தில் சமஸ்கிருத எழுத்துகளை வழங்க மேற்கொண்ட நெடுங்கணக்கு முறையின் அடிப்படை மீது அமைந்துள்ளனவாகவே தோன்றுகிறது என்கிறார் கால்டுவெல். இது தொடர்பாக மீண்டும் எல்லிஸ் அவர்களை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். ‘திருவாளர் எல்லீஸ் அவர்களின் கருத்தோடு ஒத்த கருத்து அல்ல என்றாலும் அவர் கருத்தோடு தொடர்புடைய கருத்து ஒன்றைத் திருவாளர் எட்வர்டு தாமஸ் என்பார் வெளியிட்டுள்ளார்’ என்று கூறும் கால்டுவெல், ‘அசோகன் கல்வெட்டுகளில் காணப்படுபவையும், சமஸ்கிருதம் அல்லது பிராகிருத மொழிகளை வழங்க மேற்கொள்ளப் பயன்பட்டவையும் ஆன மிகப் பழைய வடிவெழுத்துக்கள், திராவிட இனப்பிறப்பை அடிப்படையாகக் கொண்டன என்றும் அவை துரேனியர் (திராவிடர்) மொழிகளின் தேவைகளுக்காகவே தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவை வடமொழி ‘ஹகர’ வொலிகளை ஒலிக்க மேற்கொள்ளப்பட்ட பிராகிருத அல்லது லாட் நெடுங்கணக்குகளாய் பழைய திராவிட வடிவெழுத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட காலத்தில்தான் அவற்றில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது’ என்றும் எட்வர்டு தாமஸ் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். லாட் மொழியில் ‘ஏ’காரத்தைக் குறிக்க வழங்கும் வடிவெழுத்தே ‘ஐ’காரத்தைக் குறிக்கவும் வழங்கப்படுகிறது என்றாலும் அந் நெடுங்கணக்கில், ‘எ’கர, ‘ஏ’கார ஒலிகளைக் குறிக்க வரும் வடிவெழுத்துக்களிடையே வேறுபாடு உள்ளது என்கிறார் தாமஸ் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். கொச்சியில் வாழும் யூதர்களிடத்தும், மலபார் கடற்கரையில் வாழும் சிரியன் கிறித்தவர்களிடத்தும் உள்ள அரசப் பரிசுகள் அடங்கிய பட்டயங்கள் போலும் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்பெறும் தமிழ் வடிவெழுத்துகள் தனியாக ஆராயத் தக்க தகுதியுடையன என்கிறார் கால்டுவெல். அக்கல்வெட்டுகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, சென்னை இலக்கியக் கழக வெளியீட்டில் வெளியிடப்பெற்று ஆராயப்பட்டுள்ளன. அவற்றில் மலையாள வாடை சிறிது வீசுகிறது எனினும், அவை தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் சென்னை மாநில அரசியல் அலுவலில் இருந்த, பேராசிரியர் பர்னல் என்பவரால் பம்பாயினின்றும் வெளியாகும் இந்தியன் ஆண்டிகுவரி என்னும் வெளியீட்டின், 1872 ஆம் வெளியீட்டில் அச்சிடப் பெற்றுள்ளன என்ற செய்தியையும் தருகிறார் கால்டுவெல். இந்தப் பேராசிரியர் பர்னல்தான், தான் கண்டு வெளியிட்ட மிகப் பழைய திராவிட நெடுங்கணக்கு, எகர, ஏகார ஒலிகளை அறிவிக்கும் வடிவெழுத்துகளில் எவ்வித வேறுபாடும் காட்டுவதில்லை என்றும் அந்நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டில் காணப்பெறும் சமஸ்கிருத நெடுங்கணக்கிலிருந்து தோன்றியது என்பதற்குச் சான்றாகவும் இதை எடுத்துக் காட்டியவர் என்கிறார் கால்டுவெல். அவ்வடிவெழுத்துகள், கொச்சியைச் சேர்ந்த யூதர்களும் கிறித்துவர்களும் வைத்திருந்த செப்புப் பட்டயங்களிலிருந்து பெயர்த்தெடுத்த படிகளிலிருந்து எடுக்கப்பட்டன என்றும் அப்பட்டயங்களில் காணப்பெறும் வானநூல் பற்றிய செய்திகளைக் கொண்டு, அப்பட்டயங்களில் ஒன்று கி.பி. 774 ஆம் ஆண்டைச் சேர்ந்ததென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் செய்தியையையும் தருகிறார் கால்டுவெல். தென்னாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கல்வெட்டுகள், இப்பட்டயங்களே யாதலாலும், தமிழ் வடிவெழுத்துகளின் தொன்மை வடிவம் இஃது எனத் தெரிவிப்பன அவையே ஆதலாலும் அப்பட்டயங்கள் வடிவெழுத்தாராய்வார்க்குப் பெரும்பயன் அளிப்பவாகும் என்பதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். எட்டாம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டுகள்தான் கால்டுவெல் போன்றவர்களுக்கு கிடைத்த மிகத் தொன்மையான கல்வெட்டுகளாகத் தெரிந்திருக்கிறது என்பதிலிருந்து, அவர்களுக்கு தமிழின் தொன்மை குறித்து அறிவதில் உள்ள நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ‘யூதர்களிடத்தும் சிரியன் கிறித்துவர்களிடத்தும் கிடைக்கும் பட்டயங்களில் காணப்பெறும் தமிழ், மலையாள வடிவெழுத்துகளே, அசோகன் கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்துகளின் பிறப்பிடமாம் என்று முடிவு செய்வதோடு,தென்னாட்டுக் கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் பொய்னீஷ்யாவிலிருந்து செங்கடல் வழியாக வந்த வாணிப மக்களால் கொண்டுவரப்பட்டவை என்பதால், அவை எகிப்து மொழி எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், பழைய தமிழ் நெடுங்கணக்கு, யேமன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப் பெற்ற கல்வெட்டுகளில் காணப்பெறும் தென் கிழக்கு அரேபிய மொழியாகிய ஹிம்யாரிடிக் மொழி நெடுங்கணக்கோடு ஒத்துள்ளது என்றும், மெய்யெழுத்துகளின் வடிவம், உயிர் எழுத்துகளின் சேர்க்கைக்கேற்ப மாற்றப்படும் இயல்பால், தமிழ் நெடுங்கணக்கு, ஒருவகையில் அந்த ஹிம்யாரிடிக் மொழியோடு பெரிதும் மாறுபட்டு, அபிசீனியாவில் வழங்கும் செமிடிக் இன மொழிகளுள் ஒன்றாய எதோபிய மொழியின் நெடுங்கணக்கோடு ஒற்றுமை கொண்டுள்ளது என்றும் கருதுகின்றார் பேராசிரியர் பர்னல்’ என்கிறார் கால்டுவெல். ‘இம்முடிவுகள் மேலும் ஆராய்ந்து நோக்கத்தக்க சிறப்பு வாய்ந்தனவே எனினும், நாமறிந்த இந்தியப் பண்பாட்டு வரலாற்றினை அறிவிக்கும் நிகழ்ச்சிகளோடு தொடர்பற்றனவாகத் தோன்றுகின்றன’ என்று பேராசிரியர் பர்னல் அவர்களோடு முரண்படுகிறார் கால்டுவெல். ஆரியர்கள் தோன்றிய இடத்திலேயே தானும் தோன்றி, தென்கோடி வரை பரவி வளர்ந்த இலக்கிய வளத்தைப் போன்றே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வழங்கிய அசோகன் கல்வெட்டிற் காணப்பெறும் வடிவெழுத்துகளே, பல நூற்றாண்டு காலமாகச் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று, கி.பி. 774 இல் வழக்கில் இருந்ததாக அறியப்பட்ட தமிழ்-மலையாள எழுத்துகளாக மாறின என்ற கொள்கை, அவ்வசோகன் கல்வெட்டெழுத்துகள், தமிழ்-மலையாள வடிவெழுத்துகளிலிருந்து தோன்றியன அல்லாமல் வேறு இல்லை என்ற கொள்கையிலும் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது’ என்று முடிக்கிறார் கால்டுவெல். ‘தமிழ்-மலையாள வடிவெழுத்துகள், இப்பொழுதுள்ள வடிவினும் வேறுபட்ட வடிவங்களைப் பண்டு பெற்றிருந்தன என்பதை ஒப்புக் கொண்டாலும் அவற்றை நிலைநாட்டும் சான்று எதுவும் கிடைக்கவில்லை’ என்றும் கூறுகிறார் கால்டுவெல். ‘பழைமையுடையவாக அறியப்பட்ட தென்னிந்திய நெடுங்கணக்குகள், அகர, ஆகார, இகர, ஈகார, உகர, ஊகாரம் இவற்றின் குறில், நெடில்களைக் குறிக்கத் தனித்தனி வடிவெழுத்துகளைப் பெற்றிருக்கவும், சமஸ்கிருதம், இன்றைய மலையாளம் ஆகிய மொழிகளைப் போல, எகர, ஏகாரங்கள், ஒகர, ஓகாரங்கள் இவற்றின் குறில் நெடில்களைக் குறிக்க, தனித்தனி வடிவெழுத்துகளைப் பெறாது, இரு ஒலிகளையும் குறிக்க ஒரே வடிவெழுத்தைப் பெற்றிருப்பதை நோக்கும் போது, அந்நெடுங்கணக்கு, சமஸ்கிருத ஒலிகளை அறிவிக்கத் தோற்றுவிக்கப்பட்டவையே அல்லாமல் திராவிட மொழி ஒலிகளைக் குறிக்கத் தோன்றியவை அல்ல என்றே தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால், இந்திய வடிவெழுத்துகளின் தோற்றம் – அஃதாவது, அசோகன் நெடுங்கணக்கு, திராவிட நெடுங்கணக்கினின்றும் தோன்றியதா அல்லது திராவிட நெடுங்கணக்கு அசோகன் நெடுங்கணக்கிலிருந்து தோன்றியதா என்பது இன்னமும் முடிவாக உறுதி செய்யப்படவில்லை என்பதே என் கருத்து’ என்று கூறிய கால்டுவெல்,‘என்றாலும் இப்போதுள்ள நிலையில் திருவாளர் பீம்ஸ் அவர்கள் கொள்கையோடு இணைந்து, பின் முடிவை ஏற்றுக்கொள்ளவே நான் விரும்புகிறேன்’ என்கிறார். எட்வர்டு தாமஸ் அவர்கள் வெளியிட்ட ‘இந்தியப் பழமை பற்றி பிரின்செப் அவர்கள் எழுதிய கட்டுரைகள்’ என்ற நூலில் இந்திய நெடுங்கணக்குகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன என்ற குறிப்பையும் தருகிறார் கால்டுவெல். ‘தமிழ் வடிவெழுத்துகள், தேவநாகிரி எழுத்துக்களோடு எத்துணை வேற்றுமையுடையவாக இருந்தாலும் அதனினும் பன்மடங்கு அதிகமாக

நடுகற்கள் – வரலாற்றின் சுவடுகள்

நடுகற்கள் – வரலாற்றின் சுவடுகள்

நடுகற்கள் என்றால் என்ன? மனிதன் காடுகளில் வாழ்ந்த ஆதி காலம் தொட்டே இயற்கையை வணங்கியும், மரணத்தைக் கண்டு பயந்தும் வாழ்ந்துள்ளான். அப்படி இறந்து போகும் மனிதன் எங்கு செல்வான் என்ற கேள்வி அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இறந்தவர்களுக்காக ஈமச்சின்னங்களை ஏற்படுத்தவும் பழகிக்கொண்டான். அவற்றில் ஒன்று கல்திட்டை. இவை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்தக் கல்திட்டைக்குள் வேட்டைக் காட்சிகளும், மனிதன் மற்றும் விலங்குகளின் உருவங்களும் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்தப் பாறை ஓவியங்களே நடுகற்களின் முன்னோடியாக இருக்கலாம். சங்க இலக்கியங்களில் நடுகற்களைப் பற்றிக் குறிப்பு இருந்தாலும் அவை இப்போது நம்மிடையே இல்லை. கால வெள்ளத்தில் அழிந்துபட்டன. விலங்குகளுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக வரையப்பட்ட ஓவியங்கள் தொன்மை வாய்ந்தவை. பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு உலகமெங்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டாலும் போரில் இறந்தவர்களுக்கு வீரக்கல் எனப்படும் நடுகல் எடுப்பது சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது. விலங்குகளுக்கும் கோழிக்கும்கூட நடுகல் எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆநிரைப்போரில் இறந்தவர்களுக்கு பல்லவர், பாணர், கங்கர்களின் காலத்தில் நிறைய நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. நடுகற்களின் வகைகள்:நடுகற்களின் அமைப்பு, உருவங்கள், கருவிகள் கொண்டு அவற்றை சிலவாராக நாம் வகைப்படுத்தலாம். நினைவுக்கல் வீரக்கல் நவ கண்டம் அரிகண்டம் சதிகல் புலிக்குத்திப்பட்டான் கல் யானைகுத்திப்பட்டான் கல் காட்டுப்பன்றி குத்திபட்டான் கல் கோழிக்கற்கள் ஏறுதழுவல் வீரக்கல்என்றவாறாக வகைப்படுத்தலாம். நினைவுக்கல் ஆதிமனிதன் தன் கூட்டத்தில் இறந்தவர்களைப் புதைத்த இடத்தை அடையாளப்படுத்த, அந்த இடத்தில் கற்களை நட்டுவைத்தான். அதுவே உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் குத்துக்கற்கள், கற்பதுகை, கல்வட்டம், கற்குவை, கற்திட்டை எனப் பல வகைகளில் மாற்றமடைந்து வந்தது. போரில், மற்றும் விலங்குகளை வேட்டையாடி இறந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. தற்போதும் கூட கிராமங்களில் உள்ள அய்யனார், செல்லியம்மன், கருப்பையா கோயில்களில் இறந்தவர்களுக்கான நினைவுக் கற்களைக் காணலாம். பிரசவத்தில் இறந்த பெண்கள் கைக்குழந்தையுடன் காட்டப்பட்டுள்ளனர். இன்றும் கூட இந்தப் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. வீரக்கல் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களை நாம் வீரக்கல் எனக் கூறலாம். பல்லவர் காலம் துவங்கி நாயக்கர் காலம் வரை இது போன்ற வீரக்கற்கள் தமிழகம் முழுக்கக் காணக் கிடைக்கின்றன. நவகண்டம் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும்போது, தன்னுடைய நாடு வெற்றியடைய தன் உயிரைக் கொற்றவைக்குப் பலி கொடுப்பது நவகண்டம் எனப்படும். தன்னுடைய உடலில் எட்டு பாகங்களை அரிந்து கொற்றவைக்குப் படையல் இட்டு கடைசியாகத் தன் தலையைத் தானே அரிந்து கொற்றவைக்குப் பலி கொடுத்துக் கொள்வது நவகண்டம் எனப்படும். இத்தகைய சிற்பங்களை அடையாளப்படுத்த, சிற்பத்தில் உள்ள வீரன் கையில் உள்ள கத்தியானது வீரனின் கழுத்துக்கு நடுவே காட்டப்பட்டிருக்கும். நோய்வாய்பட்ட தன் மன்னன் நலமடையவும், நீண்ட நாட்களாய் நின்றிருந்த திருவிழா நடை பெறவும் இது போன்று நவ கண்டம் கொடுத்துக் கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டம் ஆறகழூரில் இது போன்று 5 நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. அரிகண்டம் நவகண்டத்துக்கும் அரிகண்டத்துக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. அரி கண்டத்தில் ஒரே வெட்டில் தலை துண்டாகும்படி வெட்டிக்கொள்வார்கள். தலை முடியை வளைவான ஓர் மூங்கிலில் இணைத்து, தன் தலையைத் தானே வெட்டிக்கொள்வார்கள். தமிழகம் முழுக்க இது போன்ற அரிகண்டச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தன் தலைமுடியைத் தானே பிடித்திருப்பது போல் இச்சிற்பங்கள் காட்டப்பட்டிருக்கும். கொற்றவைக்கு தன்னைத் தானே பலி கொடுத்துக்கொள்ளும் நிகழ்வு இது. ஆரம்பக் காலகட்டத்தில் தானே விரும்பி இச்செயலைச் செய்தாலும், பிற்காலத்தில் வற்புறுத்திப் பலி கொடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதிரப்பட்டி நிலம் தானமாக கொடுக்கப்பட்டதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆறகழூரில் இது போன்ற உதிரப்பட்டி கல்வெட்டு ஒன்று உண்டு. சதிகல் போரிலோ அல்லது வேறு காரணங்களாலோ கணவன் இறந்தவுடன் மனைவி உடன் கட்டை ஏறுதல் அல்லது சில வாரங்கள் கழித்து சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, தீயில் புகும் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நடுகற்கள் சதிகற்கள் எனப்பட்டன. இவர்கள் தீப்பாஞ்சாயி என்ற பெயரில் அவரின் வம்சத்தால் வழிபடப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தீப்பாஞ்சாயி கோயிகள் பரவலாக உள்ளன. ஆறகழூரில் உள்ள அய்யனார் கோயிலில் தீப்பாஞ்சாயிக்கு சிறு கோயில் உள்ளது. ஆரம்பக் காலகட்டத்தில் விரும்பி மேற்கொள்ளப்பட்ட உடன் கட்டை ஏறுதல், பிற்காலத்தில் வற்புறுத்தி செய்விக்கப்பட்டது. இந்தியாவில் ராஜாராம் மோகன்ராய் அவர்களின் முயற்சியின் பேரில் அரசியல் சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுதல் தடை செய்யப்பட்டது. புலிக்குத்திப்பட்டான் கல் மனிதன் காடுகளை ஒட்டிய கிராமங்களில் வாழ்ந்தபோது, அவனையும் அவன் வளர்க்கும் கால்நடைகளையும் புலிகள் தாக்கிக் கொன்று வந்தன. அத்தகைய கிராமங்களில் வசிக்கும் இளைஞன் ஒருவன் புலி வேட்டைக்குச் சென்று அந்தப் புலியைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்திருப்பான். அந்த இளைஞனின் வீரத்தைப் போற்றி வைக்கப்பட்ட நடுகற்களே புலிக் குத்தி நடுகல். சேலம் அருங்காட்சியகத்தில் சேந்தமங்கலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இரு புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. தமிழகம் முழுக்க இது போன்ற புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. சேலம் குகை பகுதியில் புலிக்குத்தி தெரு என ஒரு தெருவின் பெயரே உள்ளது. யானை குத்திப்பட்டான் கல் வரலாற்றுக் காலம் தொடங்கியே போரில் யானைகளைப் பயன்படுத்தும் வழக்கம் தமிழ் மன்னர்களிடையே இருந்து வந்தது. காட்டு யானைகளைப் பிடித்து போர்ப் பயிற்சி கொடுத்து போரில் பயன்படுத்தினர். காடுகளின் அருகே உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்தும் மனிதர்கள் மற்றும் அவர்கள் வளர்க்கும் விலங்குகளையும் கொன்று வந்தன. இப்படி போரில் அல்லது யானை வேட்டையின் போது இறந்த வீரர்களுக்கு வைக்கப்பட்ட நடுகற்களே யானை குத்திப்பட்டான் கல் எனப்படும். காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் விளை நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, தானும் இறந்த வீரனுக்காக வைக்கப்படும் நடுகல் காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் ஆகும். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வராயன் மரபுநடையில் இத்தகைய நடு கல் ஒன்றைக் காணலாம். கோழிக்கற்கள் மனிதனுக்கு மட்டுமல்லாமல் தான் வளர்க்கும் நாய், கோழி போன்றவற்றுக்கும் நடுகல் எடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அரசலாபுரம் என்ற ஊரில் கோழிக்கான நடுகல் கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மைத்தின் விழுப்புரம் வீரராகவன் அவர்கள் கண்டறிந்துள்ளார். இந்தளூர் என்ற ஊரில் கோழிக்கான நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அச்சிறுப்பாக்கம் தாமரைக்கண்ணன் அவர்கள் இதைக் கண்டறிந்துள்ளார். கோழிச்சண்டையில் இறந்த கோழிக்காக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். ஏறுதழுவதல் வீரக்கல் ஏறுதழுவுதல் என்பது தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. கருமந்துறையில் கிடைத்த இந்த ஏறுதழுவல் நடுகல், தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது ஆறகழூர் பொன் வெங்கடேசன்

கல்வித் துறையில் குழப்பங்கள் – தவிர்க்கப்பட வேண்டாமா?

கல்வித் துறையில் குழப்பங்கள் – தவிர்க்கப்பட வேண்டாமா?

தமிழக கல்வித்துறையின் அறிவிப்புகள் நாள்தோறும் ஒன்றாக வந்து ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் எப்போதும்  மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எதுவென்றால், ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகங்களில் ஏற்படுத்தப்பட்ட மழலையர் வகுப்புகளை மூடுவதாகவும் குழந்தைகளைத் திரும்ப அங்கன்வாடிகளுக்கு அனுப்பிவிட்டு பள்ளிக்கல்வித்துறையில் மழலையர் கல்விக்கான வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும் அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசின் குழப்பமான அறிவிப்புகள் தமிழகம் முழுவதிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்ப, அடுத்த நாளே முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கல்வி அமைச்சர் அறிவிப்பு வெளியீட்டுள்ளதாக மீண்டும் அரசு அறிவிப்பு வருகிறது.  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியாளர்கள்தான் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று  பள்ளிக் கல்வித் துறையிலிருந்து மழலையர் வகுப்புகளைத் திரும்ப அங்கன்வாடிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஒன்று கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அங்கன்வாடிகளில் இருந்து பள்ளிக்குள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கக் கூடிய இந்த அங்கன்வாடி மையங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஐந்து வயது வரை பராமரிக்கும் பணி நடக்கிறது. 5 வயது முடிந்த பின்னர் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் வந்து சேரக் கூடிய சூழல் பல ஆண்டு காலமாக நிலவி வந்தது. ஆனால் சமீப  பல ஆண்டுகளாக பொதுமக்களுக்குத் தனியார் பள்ளிகளின் மீதான விருப்பம் அதிகரித்தது.  அதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதை விரும்பவில்லை. இந்தச் சூழலில்தான் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தின் 2019ஆம் ஆண்டில் மழலையர் கல்விக்கான வகுப்புகள் 2381 அரசு நடுநிலைப்பள்ளிகளில் (வளாகத்திற்குள்ளேயே  அங்கன்வாடி மையங்கள் இருக்கும் பட்சத்தில்) முதற்கட்டமாகத் துவங்கப்பட்டன. அதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.  முன் மழலையர் கல்வி (ECCE) என்பதற்கான ஒரு பகுதி, புதிய தேசியக் கல்விக் கொள்கையில் கொடுக்கப்பட்டு இருப்பதனாலேயோ, NEP 2020-ஐ நாம் விமர்சிப்பதாலேயோ, மழலையர் கல்வி வகுப்புகளை வேண்டாம் எனக் கூறிடவோ தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணையை நாம் வரவேற்கவோ முடியாது. ஏனெனில் களத்தில் என்ன நிகழ்கிறது என்பதே முக்கியம்.  இன்று,  அரசுப் பள்ளிகளின் பக்கம் பொதுமக்கள் தங்கள் பார்வையைத் திருப்பியதற்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று, அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதுமாகும்.  அதைத் திடீரென வேரோடு பிடிங்கிப் போட்டால் என்ன நிகழும்? அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் படிக்கும், படிக்கக் காத்திருக்கும்  பல ஆயிரம் குழந்தைகளில் 30% மட்டுமே அங்கன்வாடிகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. மீதி 70% குழந்தைகள் நிச்சயமாகத் தனியார் பள்ளிகளின் ஆளுகைக்குள்தான் சரணாகதி அடைவார்கள்.  அங்கன்வாடி மையங்கள் குறித்துச் சிந்தித்தால், அங்கு இருக்கக்கூடிய பொறுப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் குழந்தைகளிடம் கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பள்ளிகளில் நடைபெறக்கூடிய அளவிற்குத் தரமான கல்வியும், பாதுகாப்பான சூழ்நிலையும், கற்பித்தல் அணுகுமுறையும் கடந்து, குழந்தைகளுடனான உறவும் அங்கு கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. உடனே நாம் மழலையர் வகுப்பில் கற்பித்தலா? என்ற புரிதலுக்குள் செல்ல வேண்டியதில்லை. விளையாட்டு முறையிலான கல்வியாக இருந்தாலும் பள்ளிக்கல்வி முறைக்குள் வரும்போது அங்கன்வாடியைக் காட்டிலும் சிறப்பாகவே இருக்கும் என்பது கண்கூடு.   ஆசிரியர் நியமனம் இல்லை 2019ஆம் ஆண்டில்  திடீரென மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான ஆணையைப் பிறப்பித்து, தொடக்கப்பள்ளிகளில் 1-5 வகுப்புகள் கற்பித்த  இடைநிலை ஆசிரியர்களையே வேறு பள்ளிகளில் இருந்து பணி நிரவல் வழியாக மாற்றி, மழலையர் வகுப்புகளில்  நியமித்தது அப்போதைய அரசு. ஆனால் தொடர்ச்சியாக இதில் சீர்திருத்தம் கொண்டு வந்து, இதற்கான பிரத்யேகக் கல்வி கற்ற ஆசிரியர்களை நியமனம் செய்திருக்க வேண்டும். முந்தைய அரசு அதைச் செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒப்பந்த அடிப்படையிலாவது ஆசிரியர்களை நியமிக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கவேண்டும். அவற்றையெல்லாம் அப்போதைய அரசு புறந்தள்ளிவிட்டது. 2020-க்குப் பிறகு கொரோனா பெருந்தொற்றுக் காலம் வந்தது; பள்ளிகள் இயங்கவில்லை. இப்படியான சூழல்களில் மழலையர் வகுப்புகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் அப்படியே விட்டிருந்தனர்.  மீண்டும் தலைதூக்கிய பிரச்சினை தற்போதைய புதிய அரசு அமைந்தவுடன், கடந்த இரு கல்வி ஆண்டுகளில்  ஏராளமான குழந்தைகள் (சுமார் 6 லட்சம்) அரசுப்  பள்ளிகளுக்குப் புதிதாக வந்திருக்கின்றனர். ஆனால், புதிய ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை. புதிய அரசு அமைந்த பிறகு, கடந்த கல்வி ஆண்டின் 2021 – 2022 இறுதிப்பகுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது, ஏற்கனவே பணிநிரவலில் மழலையர் வகுப்புகள் கற்பிக்கப் பணியமர்த்தியிருந்தவர்களைத் திரும்ப தொடக்கப்பள்ளிகளுக்கே அனுப்பியது. ஆனால் அப்போது இது அரசியல் பிரச்சனையாக மாறவில்லை.  மாணவர் இல்லையேல் பள்ளிகள் இல்லை மழலையர் வகுப்புகள் நடத்தும் பல தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் தங்களிடமிருந்த குழந்தைகளை இழக்க மனமின்றி, அவர்களை கவனித்துக்கொள்ளத் தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஊதியம் தர முன்வந்து, உள்ளூர்ப் பகுதிகளிலிருந்து ஆசிரியர்களை நியமித்துக் கொண்டனர். இது தமிழகம் முழுவதும் பரவலாக நடந்த எதார்த்தம். ஏனெனில் அங்கு சுணங்கினால் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கை குறையும்; இருக்கும் ஆசிரியர் பணியிடத்துக்கு ஆபத்து நேர்ந்துவிடும்.  அப்பொழுதும் அரசு மழலையர்  கல்விக்காக எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை; ஆசிரியர் நியமனமும் செய்யவில்லை. ஆனால், தற்போது புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.  மொத்தமாக மழைலையர் கல்வியை அங்கன்வாடிக்கு அனுப்புவது என்பதுதான் இந்த நிலைப்பாடு. இது முழுக்க முழுக்க தனியாருக்கே சாதகமாக முடியும். கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? என்பதைப் போல, இதன் பின் விளைவுகள் தெரிந்தாலும் ஏன் இந்த முடிவை எடுத்தனர் என்ற ஐயம் எல்லாத் தரப்புகளிலும் உண்டு.  ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கப்பள்ளிகளுக்கு கற்பித்தல் பணியில் ஈடுபட இடைநிலை ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படும்.  அதனால் அவர்கள் அப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டனர் என்ற ஒரு காரணத்தை அரசு முன்வைக்கிறது. எனில், சிக்கல் என்ன என்று நன்றாகவே தெரிந்துவிட்ட பிறகு, ஆட்சியாளர்கள் ஏன் தீர்வை நோக்கி நகர மறுக்கின்றனர்? எனவே அரசு தூரிதமாகச் செயல்பட்டு, மழலையர் வகுப்பு மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனத்தை உடனே தொடங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த லட்சக்கணக்கானவர்கள் வரிசை கட்டிக் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களை உடனடியாகப் பணியில் அமர்த்தலாம். நிதிப் பிரச்சினை காரணம் எனில், குறைந்தபட்சம் ஒப்பந்த ஊதியத்திலாவது அனைத்துப் பணி இடங்களையும் நிரப்பலாமே? எல்லோரும் இணைந்து குரல் கொடுப்போம் கல்வித் துறையின் உயர் மட்டப் பதவியில் இருப்பவர்கள், தங்கள் அலுவலுகப் பணிகளில்  காலியாக எந்த இருக்கைகளையும் வைத்துக் கொள்வதில்லை. கார் ஓட்டுநர், உதவியாளர், அலுவலகப் பணியாளர் உட்பட எல்லா நிலைகளிலும் வசதியாக மாற்றிக் கொள்ளும் நீங்கள், துறைக்கு  ஆதாரமான குழந்தைகளுக்குக் கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்காமல் வஞ்சிப்பது ஏன்? ஏனெனில் குழந்தைகளுக்காகக் கேட்க எவருமில்லை; பெற்றோருக்கும் விபரம் தெரியாது; விபரம் தெரிந்த ஆசிரியர்களுக்கு, குரல் கொடுக்கத் துணிவு வராது. குரலற்றவர்களின் குழந்தைகள் எப்படிப் போனால் என்ன? என்ற வகையிலேயே எந்த அரசு வந்தாலும் நடந்து கொள்கிறது. மக்களுக்காகச் சிந்திக்கும் பாதையிலிருந்து விலகுகிறது. ஆகவேதான் இப்படியான குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கல்வியே நாட்டின் முதுகெலும்பு. உங்கள் குழப்பமான முடிவுகளால் அதைச் செல்லரிக்க வைத்து விடாதீர்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, களத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களிடம் அரசு உரையாடி தெளிவாகத் திட்டமிட வேண்டும். காத்திருக்கிறோம். உமா