எப்போதும் தேவைப்படும்  பெரியார்

எப்போதும் தேவைப்படும் பெரியார்

பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை 1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும் குறிப்பாக பின்னாளில் ஏற்பட்ட தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மூடநம்பிக்கைகள், அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றை வேரறுக்க விரும்பிய ஈ.வெ.ரா. அதற்கான சரியான மனிதர் சிங்காரவேலு என்பதைக் கண்டறிந்தார். ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளிலும் அறிஞராகத் திகழ்ந்த சிங்காரவேலுவே அதற்குச் சரியானவர் என நினைத்தார்; மதித்தார். அறிவியல் அறிவு பெரிதும் இல்லாத அந்தக் காலத்தில் விஞ்ஞானம் தொடர்பான புத்தகங்களைப் படித்ததுடன் கட்டுரையும் எழுதி மக்களுக்கு அறிவுறுத்தி வந்த சிங்காரவேலுவைப் பெரியார் பயன்படுத்திக்கொண்டார். ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற பன்மொழி அறிஞரான சிங்காரவேலுவின் பன்மொழி அறிவைத் தமது பணிக்குப் பயன்படுத்திக்கொண்டார் பெரியார்.பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கடவுளைப்பற்றியும் சாதி மதங்களைச் சாடியும் அறிவியல் ரீதியான கட்டுரைகளை பெரியாரின் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். பெரியாருக்கு உவப்பான இப்பணி 1931 முதல் 1935 வரை சிறப்பாக நடைபெற்றது. சிங்காரவேலின் தொடர்பால் பெரியார் முழுக்க முழுக்கப் பொதுவுடமைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இதற்கு முழு முதல் காரணம் தோழர் சிங்காரவேலு. தந்தை பெரியார் ரஷ்யாவுக்குப் போய்விட்டு இந்தியா திரும்பிய பிறகு சுயமரியாதை சமதர்ம இயக்கத்தைத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். செல்லுமிடமெல்லாம் குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ், மாஸ்கோ, ரஷ்யா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார. இவருடன் சேர்ந்து தோழர்கள் ஜீவா, கிசன் போன்றவர்கள் இயங்கி வந்தனர். ஈ. வெ. ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டவர் 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் புறக்கணித்துப் புறம் தள்ளினார். இவரைப் பெரியார் என்று முதலில் அழைத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமானவர்களின் ஒருவரான வழக்கறிஞர் நாகர்கோயில் பி. சி. சிதம்பரம் பிள்ளை ஆவார். அவர் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஐந்தாவது நிர்வாகியாவார். 1930களில் அவர் எழுதிய ஆலயப் பிரவேசம் என்ற ஆங்கில நூல் பின்னால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் பெரியார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் பற்றி மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, சாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் விளக்கி 1929இல் செங்கல்பட்டில் நடந்த இயக்கத்தின் முதல் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களில் முக்கியமான ஒன்று பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்கவேண்டும் என்பதாகும். எலியின் விடுதலைக்குப் பூனைகள் எங்காவது முயற்சி செய்யுமா? என்று வேடிக்கையாகப் பெரியார் குறிப்பிட்டு, பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதைவிடத் தங்கள் விடுதலைக்காக, சுயமரியாதைக்காக பெண்களே முன் நின்று உழைப்பதே சிறந்தது என்பார். 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் முற்போக்குப் பெண்கள் சங்க மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்வின்போது ஈ.வெ.ரா.வுக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் பெரியார். அந்தப் பட்டத்தை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். தம் வாழ்நாளில் தாம் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால் பெண்களின் கல்விக்காக மட்டுமே பணத்தைச் செலவழிப்பேன் என்று பேசியுள்ளார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் தன் வாழ்நாளில் அவர் பங்கேற்கவில்லை. பெண் ஏன் அடிமையானாள் ? என்ற புரட்சிகரமான நூலில் பெரியார் கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும், கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாற வேண்டும். கற்புக்காக மனதில் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமை அழிய வேண்டும் என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகிறார். தமிழ்மீது தீராக் காதல் கொண்ட பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதை நாம் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றுமில்லை; மிகப் பழைய பாஷை, சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன் என்கிறார். விஞ்ஞானப் பெருவெளியில் உலகம் விரிந்து விரைந்து கொண்டிருக்க தமிழைப் பிற்போக்குப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக்கொள்ள பெரியார் விரும்பவில்லை. துருப்பிடித்த கருத்துக்களைத் துடைத்து வைத்துக் கொண்டிருப்பதா தமிழ்? எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகிவிட்டது என்று முற்றுப்புள்ளி வைப்பதற்கா தமிழ்? பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது? இந்தப் பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற அறிவுத் துயரத்தால்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறினார். ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக, தமிழ்ப் புலவராக இருக்க நேர்ந்துவிட்டால் அவர்கள் உலகம் அறியாப் பாமரர்களாகவே இருப்பார்கள். தமிழ் மொழி மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதைத் தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாக கூறுகிறேன் என்றார். எழுத்து, சொல், கருத்து, அறிவு, பயன்பாடு, படைப்பிலக்கியம் போன்றவற்றைக் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படி புதுப்பித்துக்கொள்ளாத மொழி காட்டுமிராண்டி மொழிப் பட்டியலில் சேர்ந்து விடுமே என்று கவலை கொண்டார். தமிழ் எழுத்துக்கள் ஒலி வடிவம் சார்ந்தவை. 247 ஒலி வடிவங்களோடு வழங்கி வரும் தமிழ், எழுத்துக்கள் மிகுதியான ஒரு மொழி என்பதால் கற்பதற்குக் கடினம். அறிவியல் கருவிகளில் ஏறுவதற்கு இடர்ப்படுகிறது. சுமைகள் குறைந்த பயணம் எளிதாக இருப்பது போல எழுத்துக்கள் குறைந்த மொழி, பறவைப் பாய்ச்சலில் பயணம் ஆகலாம். தமிழில் 247 ஒலி வடிவங்களை 131ஆகக் குறைத்த பெருமைக்குரிய பெரியார் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை, உண்மை ஆகிய தமது பத்திரிகைகளில் சீர்திருத்த எழுத்துக்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். பண்டிதர்களோ பல்கலைக்கழகமோ செய்யத் துணியாத இந்தச் சீர்திருத்தத்தைச் செய்தவர் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத பாமர மேதை பெரியார். பல துறைகளில் தடம் பதித்த பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாட்கள். 8200 நாட்களை சுற்றுப்பயணத்திற்குச் செலவிட்டார். அது 8 லட்சத்து 20ஆயிரம் மைல்கள் பயணத்திற்குச் சமமாகும். அதாவது பூமியின் சுற்றளவைப் போல 33 மடங்கு சுற்றி வந்ததற்கு ஈடாகும். 21,400 மணி நேரம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து ஓட விட்டால் இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் பதினோரு நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இயற்கை நமக்குத் தேவைப்படுவதுபோல எப்போதும் நமக்குத் தேவைப்படுபவர் பெரியார். தமிழ்வெளியில் பெரியார் என்ற பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

பொன்னியின் செல்வன் 17

பொன்னியின் செல்வன் 17

வானதியை அனுப்பிவிட்டு பழையாறை சிறைச்சாலைக்குச் சென்று வந்தியத்தேவனைச் சந்தித்தாள் குந்தவை. சற்றும் தயங்காமல் தன் மனதை அவனிடம் திறந்து காட்டினாள். அந்தஸ்து பேதத்தைச் சொல்லித் தயங்கிய வந்தியத்தேவனிடம் தன் கரங்களை நீட்டினாள். உணர்ச்சி மேலிட  அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் வந்தியத்தேவன். எதிர்ப்பேதும் இல்லாமல் அவனது கரங்களோடு தன் கரங்களைப்  பிணைத்துக்கொண்டவள்,  “உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒருநாளும் பற்றாது” என உறுதிமொழி கூறியதில் அவன் தன்னைமறந்து நின்றான். அவன்மீதான முதன்மந்திரியின் குற்றச்சாட்டைக் கூறியவள், ஆதித்த கரிகாலனைக் காத்து நிற்க வேண்டுமென வந்தியத்தேவனிடம் கேட்டுக்கொண்டாள். பழுவூர் இளையராணியைப்பற்றி ஆதித்த கரிகாலனிடம் எடுத்துச் சொல்லி, உடன்நின்று நிழல்போலக் காக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட குந்தவையிடம் கரிகாலர் அவ்வளவு சீக்கிரம் அதை நம்பக்கூடியவர் அல்ல என்றும் தன்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்றும் ஆறுதல் கூறினான். அங்கிருந்து கிளம்பிய வந்தியத்தேவன் வழியில் ஆழ்வார்க்கடியானைச் சந்தித்தான். கொள்ளிடத்தில் அவனுடன் வந்து சேர்ந்துகொள்வதாக அவன் கூறிவிட்டுப் போய்விட்டான். போனமுறை இதே வழியில் பயணித்ததற்கும் இப்போது பயணிப்பதற்கும் உண்டான வேறுபாட்டை அசைபோட்டபடிச் செல்ல ஆரம்பித்தான். வழியில் வானதி பல்லக்கில் போவதைப் பார்த்தவன் அவளுடன் நின்று பேச விரும்பாமல் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் சென்றான். முதன்முதலாக இளைய பிராட்டியைப் பார்த்ததைக் காதலுடன் நினைவுகூர்ந்தவன், சோதிடரிடம் தூமகேதுவைப்பற்றியும் இளவரசரைப் பற்றியும் ஆருடம் கேட்டுக்கொண்டிருக்கையில் வானதி அங்கு வந்துசேர்ந்தாள். தன்னைப் பார்த்துவிட்டு நின்று பேசாமல் வந்ததைச் சொல்லிக்காட்டியவள், தான் புத்த பிட்சுணி ஆகப்போவதாகவும் தன்னோடு சூடாமணி விஹாரம்வரை துணைக்கு வந்து விட்டுவிடும்படியும் வந்தியத்தேவனிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். வந்தியத்தேவன்,  இளவரசரின் பேரில் பூங்குழலிக்கு இருந்த அப்பழுக்கற்ற காதலையும் இளவரசருக்கும் அவள்மேல் உள்ள பிரியத்தையும் தெரிந்துவைத்திருந்ததால் ஒருவகையில் வானதியின்மேல் இருந்த லேசான வெறுப்பு அவள் பேசப்பேசக் குறைந்து இல்லாமல் போய்விட்டது. அவள்பால் உள்ளம் கனிந்திருந்தது. முதன்மந்திரியின் ஓலையை எடுத்துக்கொண்டு காஞ்சி செல்வதால் தன்னால் வர இயலாது என்பதைச் சொல்லித் தன்மையாகவே மறுத்தான். வானதி சற்று வருந்தியபோதும் துணிச்சலுடன் தனியாகவே செல்வது என முடிவெடுத்து உடனே கிளம்பிவிட்டாள். அத்தனைக்காலம் பயந்தாங்கொள்ளியாகவே இருந்த பெண் இவ்வாறு மாறியிருந்ததைக்கண்டு வந்தியத்தேவனும் சோதிடரும் வியந்துபோனார்கள். சோதிடர் கொள்ளிடக் கரையில் காளாமுகர்களின் சங்கமம் நடந்துகொண்டிருக்கும் தகவலை அவனிடம் கூறினார். பின் அங்கிருந்து கிளம்பிய வந்தியத்தேவன், வழியில் ஏதோ அபயக்குரலைக் கேட்டுத் திரும்பினான். வானதியின் தோழியைக் கட்டிப்போட்டுவிட்டு வானதியின் பல்லக்கைச் சிலபேர் கடத்திச் செல்வதைக்கண்டு தொடர்ந்தான். இருட்டில் அவர்கள் செல்லும் பாதை தெரியாமல் மறைந்துபோக திகைத்து நின்றுவிட்டான். அப்போது மின்னல் ஒளியில் களத்து மேட்டில் குதிரை ஒன்று ஏறுவது தெரிந்தது. அதன்மேல் இருந்தவர் மதுராந்தகர் என்றும் தெரிந்தது. அங்கிருந்த வீரன் தீவட்டியை உயர்த்தவே, மதுராந்தகரின் குதிரை   மிரண்டு தறிகெட்டு ஓடியதையும் அடுத்த மின்னல் வெளிச்சத்தில் கண்டான். காப்பாற்ற நினைத்துத் தொடர்ந்து போக இருளில் பாதை தட்டுப்படவில்லை. மழை வேறு வலுக்க ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு மண்டபத்தில் ஒதுங்கினான். அப்போது நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தனியே நிற்பதைக்கண்டு பேச்சுக் கொடுத்தான். அந்த குழந்தை குதிரை வேண்டுமென அம்மாவிடம் கேட்டதாகவும் அம்மா தர மறுத்ததால் ஓடி வந்துவிட்டதாகவும் கூறியது. மேலும் மண்டபத்திற்கு வெளியில் வந்தால் புலி கடித்து விடுமென அம்மா கூறியதாகவும் காஞ்சியில் தன் முக்கிய எதிரி இருப்பதாகவும் தான் புலியை விழுங்கும் மகர மீன் எனவும் கூற வந்தியத்தேவன் குழப்பமடைந்தான். அப்போது ஒரு சிறு கூட்டம், ‘சக்ரவர்த்தி’ என அழைத்தபடி அந்தக் குழந்தையைத் தேடி வந்தது. அவர்களில் தேவராளன், ரவிதாசன், இடும்பன் காரி என அனைவரும் இருந்தனர். அவர்கள் வந்தியத்தேவனை அங்கிருந்து திருப்புறம்பியம் பள்ளிப்படைக்கு நந்தினி வர இருப்பதாகச் சொல்லிக் கூட்டிச் சென்றனர். அங்கு சென்று சிலமணி நேரம் காத்திருந்தபொழுது நந்தினி தன் வழக்கமான ஆடை அணிகலன்களைத் துறந்து தலைவிரிகோலமாய் துர்க்காதேவிபோல் பல்லக்கில் வந்து இறங்கினாள். அங்கு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை அவளை ‘அம்மா’வெனக் கட்டிக்கொண்டது. எல்லோரையும் முன்வரச் சொன்ன நந்தினி, அந்த வாளை எடுத்துக் குழந்தையின் கையில் கொடுத்தாள். பின் அனைவரிடமும் ‘நான் நாடகம் ஆடுகிறேன் என்றும் அரண்மனை சுகங்களில் செய்துகொடுத்த சபதத்தை மறந்துவிட்டேன் என்றும் சொன்னீர்கள். சபதம் தீர்க்கும் வேளை வந்துவிட்டது. சம்புவரையர் மாளிகையில் சமரசப் பேச்சு நடைபெற அத்தனைத் திட்டங்களும் தீட்டிவிட்டேன். சிற்றரசர்கள் இனிமேல் எப்போதும் ஒன்றுகூடாவண்ணம் அது நிகழ்ந்தேறும். நம் சபதத்தை யார் முடிக்கப் போகிறார்களோ அவரைச் சக்ரவர்த்தியே வாளெடுத்துக் கொடுத்துத் தீர்மானிக்கட்டும். மிச்சமிருப்பவர்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ எனக் கூறி அந்தக் குழந்தையிடம் ‘சபதத்தை முடிக்க யார் தைரியசாலி எனத் தோன்றுகிறதோ அவரிடம் இந்த வாளைக் கொடு’ என்று கேட்டுக் கொண்டாள். குழந்தை அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாளை நந்தினியிடமே கொடுத்தது. அனைவரும் திகைத்தபோதும் வாளை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட நந்தினி, வீரபாண்டியனின் படுகொலைக்குப் பழிவாங்கும் பாக்கியம் தனக்கே கிடைத்ததாக மகிழ்ந்து கண்ணீர்விட்டாள். தொடரும்

காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது

காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது

முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்களின் காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்கள் பாண்டியர்¸ சேரர் மற்றும் பல்லவர் காலச் செப்பேடுகள் குறித்து மூன்று நூல்களையும் வடகரை, பாதாளி, மதாம் உள்ளிட்ட படைப்புகளையும் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களுடன் இணைந்து வந்தவாசிப் போர் மற்றும் கம்பலை முதல் என்ற வரலாற்றுக் கட்டுரை  நூல்களையும் தந்துள்ளார். முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்களை ஆனந்த ரங்கப்பிள்ளையின் தினப்படி சேதிக் குறிப்பு என்ற மகத்தான பதிப்பு முயற்சியின் பதிப்பாசிரியர்களில் ஒருவராக அறிந்துகொண்ட தருணத்தில்¸ அவரது 1801 நாவலை வாசித்தேன். தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டில் முடிவுக்கு வந்த எல்லாவிதமான சுதந்திர முயற்சிகளையும் அதாவது குறிப்பாக, தென் தமிழகத்தில் சென்ற 18ஆம் நூற்றாண்டின் இறுதி இரு ஆண்டுகளில் மையம் கொண்டிருந்த புரட்சிகரப் போராட்டங்களின் முடிவுக் காலத்தை இத்தனை விரிவாகப் புனைவாக்கம் செய்த முயற்சி இதற்கு முன்பு எனக்குத் தெரிந்து இல்லை. ‘1857இல் நடந்த சிப்பாய்க் கலகத்தை இந்திய அரசு இந்தியாவின் முதல் சுதந்திரக் போர் என ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. அப்படிப் பார்த்தால் டெல்லி சிப்பாய்க் கலகம் நடப்பதற்கு ஐம்பத்து ஓரு வருடங்களுக்கு முன்பே 1806இல் வேலூர்ப் புரட்சி நடந்தது. அதுவும் சிப்பாய்களால் நடத்தப்பட்டதுதான். இந்தியா போன்ற பெரும் ஜனநாயக நாட்டில் மக்களின் விடுதலைக்காகச் சிப்பாய்கள் போராடினர் என்று பெருமையுடன் குறிப்பது ஜனநாயக மாண்பிற்கு இழுக்கு. மக்கள் புரட்சியே ஜனநாயகத்தில் மதிப்புமிக்கது. சீருடை அணிந்து மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, சம்பளம் கொடுப்போரை எதிர்ப்பது எந்த நிலையிலும் விடுதலைப் போராட்டம் ஆகாது. மருது சகோதரர்கள் தலைமையில் நடந்த தென்னிந்தியப் புரட்சியை முதல் சுதந்திரப்போராக அறிவிக்க வேண்டும்’ என்று தென்னிந்தியப் புரட்சி என்ற நூலை வெளியிட்டுள்ள வரலாற்று ஆய்வாளர் திரு.ராஜய்யன் குறிப்பிட்டுள்ளதை 1801 நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் நாவலாசிரியர் இராஜேந்திரன். 1801 நாவலும் அதன் தொடர்ச்சியான காலா பாணி நாவலும் தமிழ்நாட்டின் மகத்தான புரட்சிகர விடுதலைப்போரின் வரலாற்றையும் அதன் பின்விளைவுகளையும் பேசுபவை. 1801 நாவல், 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சாகித்ய அகாதமி விருதுக்கு இறுதிவரை போட்டியில் இருந்தது. அந்த நாவலின் தொடர்ச்சியாக அவர் எழுதிய காலா பாணி நாவலுக்குத்தான் இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. 1799 -1801 புரட்சியின் அடுத்த கட்டத்தைச் சொல்லுகிற நாவல்தான் காலா பாணி. அந்த வகையில் தகுதிமிக்க நாவலுக்கே விருது கிடைத்திருக்கிறது. வரலாற்று நாவல் என்பது வெறும் சாகசக் கதைகள், போர்க்கள வருணனைகள் என்பதாக மட்டுமே அறியப்பட்டிருக்கிற தமிழ்ச் சூழலில், தென் தமிழகத்தில் நடந்த மகத்தான காளையார் கோவில் போரின் முடிவில் வெள்ளையர்களிடம் கைதிகளாகி நாடுகடத்தப்பட்டவர்களின் கதையைச் சொல்கிற காலா பாணி நாவல் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. விருது பெற்ற காலா பாணி நாவலையும், விருதாளர் மு.இராஜேந்திரன் அவர்களையும் சுவடு இதழின் சார்பிலும் சுவடு பதிப்பகத்தின் சார்பிலும் பாராட்டி மகிழ்கிறேன்.

பொன்னியின் செல்வன் 16

பொன்னியின் செல்வன் 16

பழையாறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வந்தியத்தேவன் தனது குதிரையின் காலில் அடிப்பட்டிருந்ததை அறிந்தான். அராபியர்கள்போல் அதன் குளம்புகளில் லாடம் அடிக்கலாம் என்று கருதி ஒரு கொல்லுப்பட்டறையை அணுகினான். அந்தக் கொல்லன் மீன் முத்திரை பதிக்கப்பட்ட அபூர்வமான வாள் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தான். அந்த மீன் முத்திரையை அழிக்கும் வேலை அதுவென்று வந்தியத்தேவன் புரிந்துகொண்டான். கொல்லன் தான் செய்துகொண்டிருக்கும் பணியை முடித்துவிட்டு லாடம் செய்துதருவதாகக் கூறினான். வந்தியத்தேவன் பெரிதும் களைத்திருந்தபடியால் ஓரமாய்ப் படுத்து உறங்கலானான். உறக்கத்தில் பல்வேறு கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டு உளறினான். விழித்து எழுந்ததும் கொல்லன் அவன் உறக்கத்தில் உளறியதைச் சொல்லி எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினான். மேலும் இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி அங்குவரை பரவியிருப்பதையும் சற்றுமுன் இவ்வழியே சென்ற பழுவேட்டரையரின் பரிவாரங்கள்மூலம் அந்தச் செய்தி வந்துசேர்ந்திருந்தது என்பதையும் கொல்லன்மூலம் அறிந்தான். குளம்புகளில் லாடம் அடித்துக்கொடுத்த கொல்லனுக்கு நன்றி கூறிவிட்டுப் பழையாறை வழியில் செல்ல ஆரம்பித்தான். வழியில் ஆபத்துதவி தேவராளன் குறுக்கிட்டு, ரவிதாஸனைப்பற்றியும் இளவரசரைப்பற்றியும் கேட்க, வந்தியத்தேவன் கவனமாகப் பதிலளித்தான். ஒரு மூடுபல்லக்கைச் சுட்டிக்காட்டி அதில் இருக்கும் நந்தினி வந்தியத் தேவனிடம் பேசவிரும்புவதாகக் கூறி அழைத்தான் தேவராளன். இவனும் பல்லக்கின் அருகே செல்ல, சுற்றி மறைந்திருந்த வீரர்கள் அவனைத் தாக்கிப் பல்லக்கிற்குள் கட்டிப்போட்டுப் பல்லக்கைத் தூக்கிச்சென்றனர். சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன் பல்லக்குப் பயணத்தின் நோக்கத்தையும் முடிவையும் அறியும்பொருட்டு அமைதியானான். அப்போது பல்லக்கில் ஏதோ மயக்கும் புகை எழவும் அதில் நினைவிழந்தான். கண் விழித்தபோது ஒரு அறையில் இருந்தான். திறந்த கதவின் வழியாக நந்தினி வரவும் இலங்கையில் கண்ட ஊமை ராணியின் தோற்றத்தை ஒப்பிட்டு அவள்தான் ஆடை, ஆபரணங்கள் அணிந்து வந்துவிட்டாளா என்று அதிசயித்தான். பொக்கிஷ நிலவறையில் இருந்து அவள்தான் அவனைத் தப்பிக்கவிட்டதாகவும் அவன் ஒரு நன்றிகெட்டவன் எனவும் பல்வேறு வார்த்தைகளால் அவனை வெறுப்பேற்றினாள் நந்தினி. பிறகு  அருள்மொழிவர்மரைப்பற்றிக் கேட்டாள். குந்தவையையும் பூங்குழலியையும் எள்ளி நகையாடினாள். வந்தியத்தேவன் அத்தனைக்கும் அசைந்துகொடுக்காது அவளை அமைதியுறுமாறு வேண்டினான். அப்போது வந்தியத்தேவன் முன்பு கொல்லுப்பட்டறையில் கண்ட வாளைக் கைகளில் எடுத்து ஆசையுடன் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் நந்தினி.  ’ஆடை, ஆபரணங்களால் அலங்கரிந்த என்னுடைய உடம்பிலோ நெஞ்சத்தில் வஞ்சம்கொண்ட கொடியவன் ஒருவனின் விஷநெஞ்சத்திலோ இந்த வாளைச்செலுத்திக் குபுகுபுவெனப் பெருகும் இரத்தத்தைப் பூசிக்கொண்டு சாகவேண்டுமென்பது தெய்வத்தின் ஆக்ஞை’ என்றெல்லாம் ஆவேசம் வந்தவள்போலப் பேசிக்கொண்டுபோனாள். அவளை அமைதிபடுத்தும் வழி தெரியாது, ‘பழுவேட்டரையர் எங்கே?’ என வந்தியத்தேவன் பேச்சைத் திருப்பினான். அவரும் பார்த்திபேந்திரனும் வெறியாட்டக்காரனிடம் இளவரசர்பற்றிக் குறிகேட்கப் போயிருப்பதாகச் சொல்லி, அதற்கும் பெரிதாய்ச் சிரித்து, பெரிய பழுவேட்டரையர், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், ஏன் ஆதித்த கரிகாலனும்கூடத் தன்முன் வர அஞ்சுவதைக் கூறினாள்.. ஆதித்த கரிகாலனை கண்டு தன்னைப்பற்றி  அஞ்சவேண்டாம் என்ற செய்தியைச் சொல்லுமாறு நந்தினி கேட்க வந்தியத்தேவன் மறுத்தான். இளவரசரைப்பற்றிக் கேட்க, அதுவும் தனக்குத் தெரியாது என்று கூறி அவளின் முத்திரை மோதிரத்தைத் திருப்பியளித்தான். அதை அவனையே வைத்துக்கொள்ளச்சொன்னவளிடம் ஊமை ராணி அவள்தானா என்ற சந்தேகத்தை வந்தியத்தேவன் கேட்டான். நந்தினி இல்லையென மறுத்துவிட்டு மறுமுறை அவளைக்கண்டால் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்குமாறும் இல்லையெனில் தன்னையாவது அவளிடம் கூட்டிச்செல்லுமாறும் கேட்டு அவனைத் தன் ஆட்களிடமிருந்து விடுவித்தாள். தன்னைக் கடத்திப்போன இடத்திலிருந்து பழையாறைக்குப் பயணம் செல்லும் வழியில் சென்றவன் இருளடையவும் சிறிதுநேரம் உறங்கிக்கொண்டிருந்தபொழுது இரண்டு காளாமுக வீரசைவர்கள் அவனைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் பேசிக்கொண்டு கடந்துசென்றனர். ஆதித்த கரிகாலனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பேசிக்கொண்டதை மறைந்திருந்து வந்தியத்தேவன் கேட்டபொழுது, விரைவில் தன் எஜமானருடன் சென்றுசேர்ந்துவிடவேண்டுமென நினைத்துக்கொண்டு பழையாறையை நெருங்கினான். எப்படி பாதுகாப்பைத் தாண்டி உள்ளே நுழைவது என்று கவலைப்பட்ட பொழுது, மதுராந்தகர் தன் பரிவாரங்களுடன் வருவது தெரிந்தது. செம்பியன் மாதேவி முக்கியமான விஷயம் பேசவருமாறு அனுப்பிய அழைப்பை ஏற்று மதுராந்தகர் கிளம்பியபொழுது அவர் மாமனாரான சின்ன பழுவேட்டரையர் அன்னையிடம் பட்டம் குறித்தும் பேசுமாறு அறிவுறுத்தியிருந்தார்.  வந்தியத்தேவன் வேண்டுமென்றே பரிவாரங்கள் நடுவே நுழைந்து  நிமித்தம் கூறுவோன்போல, கடம்பூரில் மூடு பல்லக்கில் வந்த நிகழ்ச்சியைக்கூறி நடிக்க, மதுராந்தகன் அவனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு பழையாறை கோட்டைக்குள் நுழைந்தார். சிவ சீல சிரோன்மணியான செம்பியன் மாதேவி திருநாரையூர் நம்பி எனும் சிவக்கொழுந்தை மரியாதையுடன் வரவேற்று சபையில் பாடச்செய்து சிறப்பு செய்துகொண்டிருந்தார். மதுராந்தகருக்கு அதையெல்லாம் காணக்காண எரிச்சலாய் இருந்தது.  தனியிடத்தில் வந்து வந்தியத்தேவனை நிமித்தம் சொல்லுமாறு கேட்க, அவன் ஆ..ஊ எனக் கத்திக்கொண்டு நடித்தான். பின் அவர் பட்டம்சூட்ட ஒரு பெண் தலைவிரிக்கோலத்தில் தடையாக இருப்பதாக இட்டுக் கட்டினான். பின் தலைவலியால் துடிப்பதாகக் கூறி நகர்வலம் போய்விட்டு வருவதாகச் சொல்லி மாளிகையிலிருந்து வெளியேறினான். மதுராந்தகரை அவரது அன்னை அழைப்பதாகச் செய்தி வரவும் ஆத்திரத்துடன் கிளம்பிச்சென்றார். கோடியக்கரையில் வந்தியத்தேவனுடன் மூலிகை பறிக்க வந்துவிட்டு, பின்பு பழுவேட்டயர்களிடம் காட்டிக்கொடுத்த வைத்தியர் மகன் பினாகபாணியிடம், வந்தியத்தேவன் பழையாறைக்கு வந்தால் தன்னிடம் தகவல் சொல்லுமாறு நந்தினி சொல்லியிருந்தாள். அதனை ஏற்றுக் காத்திருந்தவன் வெளியேவந்த வந்தியத்தேவனைக் கண்டான். அப்போது மக்களிடம் குற்றவாளி, ஒற்றன் என்றெல்லாம் கூறி வந்தியத்தேவனை மாட்டிவிட, அங்குவந்த ஆழ்வார்க்கடியான் அவனை சாமர்த்தியமாகத் தப்பிக்கவைத்தான். பின்பு குந்தவையைச் சந்திக்க அனுப்பிவைத்தான். இளவரசரைக் கடல்கொண்ட துக்கச் செய்தியை அப்போது தூதர்கள் கொண்டுவந்திருந்தனர். செம்பியன் மாதேவி மதுராந்தகரிடம், தன் கணவர் கண்டராதித்தருக்கு மண்ணாளும் ஆசை இல்லாததோடு, சுந்தரசோழரின் பரம்பரையே தனக்குப்பின் ஆளவேண்டுமென்றும், அதற்குத் தன் வாரிசு தடையாக இருக்கக்கூடாது என்றும் வாக்குப் பெற்றுக்கொண்டு சிவபதம் அடைந்ததாகக்கூறி, மதுராந்தகர் தந்தையின் விருப்பம்போலவே நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். மதுராந்தகர் பொறுமை இழந்து செம்பியன் மாதேவியைக் கண்டபடி ஏசினார். ஆத்திரத்தில் கழுத்திலிருக்கும் உருத்திராட்ச மாலையைக் கழற்றியெறிய முயல, கழுத்தைவிட்டு அது நகரவில்லை. தன் மகன் பட்டத்தை அடையத் தடையாக இருக்கும் நீயெல்லாம் ஒரு தாயா?  என்றெல்லாம் கேட்க, தன் மகன் உயிருடன் இருப்பதும் தனக்கு முக்கியம் என செம்பியன் மாதேவி விளக்க, அவன் கோபம் சற்றுத் தணிந்தது. தனக்குப் பல சிற்றரசர்கள் உதவுவார்கள் என்றெல்லாம் சொல்லி தாயைச் சமாதானப்படுத்த தொடங்கினான். அவர்களையெல்லாம் நம்புவதில் பயனில்லை என்று பெரிய பிராட்டி அறிவுரை சொல்லத்தொடங்கியபொழுது அரண்மனை வாசலில் பெரும் ஓலமும் சாபக்குரல்களும் கேள்விக் குரல்களும் பயங்கரப் பேரொலியாக கேட்டன. மதுராந்தகரை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு செம்பியன் மாதேவி மாடத்தைநோக்கி விரைந்தார். வந்தியத்தேவன் ஓடத்தில் குந்தவையைச் சந்தித்தான். சில நொடிகள் பேச்சிழந்து நின்றபிறகு நடந்தவை அனைத்தும் சொல்லும்படி குந்தவை கேட்க, எல்லாவற்றையும் சொல்லலானான். இளவரசருக்குக் கடும் சுரம் ஏற்பட்டதையும் சேந்தன் அமுதனும், பூங்குழலியும் சூடாமணி விஹாரத்துக்கு அழைத்து சென்றதையும் கூறிக்கொண்டிருந்தபொழுது வானதி தோட்டத்திலிருந்து ஓடிவந்து தண்ணீருக்குள் விழுந்தாள். இளவரசர் இறந்துவிட்டதாக நினைத்து வானதி தன் உயிரையும் விட்டுவிட வேண்டுமென நீரில் பாய்ந்திருந்தாள். அவளைக் காப்பாற்றி, குந்தவை தன் மடியில் வைத்து மயக்கத்தைத் தெளியவைத்துக் கொண்டிருந்தபொழுது வந்தியத்தேவன் பூங்குழலியின் மீதான இளவரசரின் எண்ணம் குறித்தும் பூங்குழலி இளவரசருக்காகத் தன்னுயிரையும் பணயம் வைப்பாள் என்பதையும் கூற, குந்தவை ஆத்திரமுற்றாள். மயக்கம் தெளிந்துவிட்ட வானதியும் இந்தச் செய்தியைக்கேட்டு, ‘இளவரசர் உயிருடன் இருக்கிறார்’ என்ற ஆறுதலையும் ‘பூங்குழலியை விரும்புகிறார்’ என்ற துயரத்தையும் ஒருசேர அடைந்தாள். வந்தியத்தேவன் ஊமை ராணியைப்பற்றிக்கூற குந்தவை பரபரப்படைந்தாள். நந்தினிக்கும் அவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையைப்பற்றிக் கூறவும் நந்தினி தன் தமக்கையென்று முன்னமே தனக்குச் சந்தேகம் இருந்ததையும் கூறி வருந்தினாள். ஓடக்காரப் பெண்ணான பூங்குழலியை இளவரசர் மணக்கமுடியாது என குந்தவையும் குலம், கோத்திரமெல்லாம் அந்தப் பெண்ணின் அன்புக்கு முன்னால் ஒன்றுமில்லை என வந்தியத்தேவனும் நடத்திய வாக்குவாதத்தில் வானதி மயக்கம் பூரணமாகத் தெளிந்து எழுந்தாள். ஆழ்வார்க்கடியான் விரைந்து வந்து, ‘இளவரசர் கடலில் மூழ்கிவிட்டதுபற்றி ஆத்திரமாயிருப்பதாகவும் வந்து சமாதானம் செய்யும்படியும் குந்தவையை அழைத்தான். குந்தவையும் செம்பியன் மாதேவியும் மாடத்தில் வந்து நின்றவுடன் கூட்டத்தில் அனைவரும் அவர்களை நோக்கி முறையிட்டனர். பழுவேட்டரையர் சூழ்ச்சியால்தான் ஏதோ நடந்துவிட்டது என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, குழப்பமும் ஆத்திரமும் மிகுந்து அந்த இடம் களேபரமாகக் காணப்பட்டது. அப்போது குந்தவை குறிப்புணர்த்த, ஆழ்வார்க்கடியான் பெரிய குரலில், இளவரசருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நிமித்தக்காரன் சொல்வதாகக் கூற, நிமித்தக்காரனாக வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனும் அதை  ஆமோதித்தான். வைத்தியர் மகன் அவனைப் பார்த்து ஒற்றன் எனக் கத்த, ஆத்திரமுற்று மேலிருந்து குதித்து வந்தியத்தேவன் அவனோடு சண்டையிடத் தொடங்கினான். அதற்குள் அநிருத்த பிரும்மராயர் அங்கே வருகைதந்து அவர்கள் இருவரையும் கைதுசெய்யுமாறு ஆணையிட்டுவிட்டு கூட்டத்தையும் அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு செம்பியன் மாதேவியைத் தனியே சந்தித்தார். சுந்தர சோழச் சக்கரவர்த்தி மதுராந்தகருக்குப் பட்டம் சூட்ட இருப்பதாகவும் அதற்குச் சம்மதம் தருமாறும் கேட்க, செம்பியன் மாதேவி தன் கணவரின் ஆணையை மீறமாட்டேன் என்று மறுத்தார்.  அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக முதன்மந்திரி சொல்ல வர, மதுராந்தகர் உள்ளே வரவே அதைச் சொல்லாமலேயே விடைபெற்றார். மதுராந்தகர் அநிருத்தரை தன் முக்கிய எதிரியாக கருதுவதாகத் தன் தாயாரிடம் கூறினான். குந்தவையைச் சந்தித்த அநிருத்தர், நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறினார். அவர் அனைத்தையும் அறிந்து வைத்திருந்ததைத் தெரிந்துகொண்டு வியந்துவிட்டு வந்தியத்தேவனை விடுவிக்கும்படி கோரினாள். ஆனால், வந்தியத்தேவன் நந்தினியைச் சந்தித்ததை அநிருத்தர் சொல்லி அவன் நந்தினியின் ஒற்றனாய் இருக்கலாம் எனச் சந்தேகப்பட, குந்தவை மறுத்தாலும் அவன் மறைத்ததை நினைத்துக் குழம்பினாள். இளையராணியின் சூழ்ச்சிக்குப் பழுவேட்டரையர்கள் மட்டுமல்லாது, மதுராந்தகர், கந்தன்மாறன் மற்றும் பார்த்திபேந்திரன் அனைவரும் மயங்கி அவள் பேச்சுக்கு ஆடுவதையும் ஆதித்த கரிகாலனைக் கடம்பூருக்கு வரவழைத்து சம்புவரையர் மகள் மணிமேகலையை திருமணம் செய்து கொடுக்கத் திட்டம் தீட்டியுள்ளதையும் கூறினார். ஆனால் அது வெளிப்பேச்சுதான் எனவும், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடன் அவளுக்குத் தொடர்பிருப்பதால் இதன் பின்னால் வேறு சூழ்ச்சி இருக்கலாம் என்று கூற, குந்தவை பயந்தாள். அநிருத்தர் வந்தியத்தேவனைத் தான் விடுவிப்பதாகவும், அவன் உடனே காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவிடாமல் தடுக்குமாறும், தடுக்க முடியாது போனால் நிழல்போல ஆதித்தரைப் பிரியாமல் காக்குமாறும் ஆணையிடச் சொல்லி குந்தவையிடம் சொல்லி முடித்தார். வந்தியத்தேவன் பக்குவமற்று நடந்து கொள்வதால் ஆழ்வார்க்கடியானையும் உடன் அனுப்புவதாக முடிவெடுத்தனர். நடுவே வந்த வானதி பிடிவாதமாகக் கொடும்பாளூர் போவதாகக் கூற தடுக்க முயன்று முடியாமல் போக, குந்தவை அவளுக்கு விடை கொடுத்தாள். தொடரும்.

பேசாத காரியம்

பேசாத காரியம்

பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பாரதியை எத்தனைமுறை எழுதிப்பார்த்தாலும் சலிக்காது. இன்று அவனது நூற்றுநாற்பதாவது பிறந்தநாளில் அவனுடைய குருமணி நிவேதிதா தேவியுடனும் பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத அவனுடைய பாடல் ஒன்றுடனும் பாரதியைக் கண்டு மகிழ்வோமா? சகோதரி நிவேதிதா அயர்லாந்து தேசத்துப் பெண்மணி. சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக ஆளுமையால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தவர். பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்ட விவேகானந்தரின் முயற்சிக்கு உதவியாக இருப்பதற்காக விவேகானந்தரால் அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். 1902இல் விவேகானந்தரின் மறைவுக்குப்பிறகு தேச விடுதலைக்கான புரட்சிகர ரகசிய இயக்கங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். 1905இல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்த நிகழ்ச்சி வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் தேச பக்தர்களை ஆவேசத்தில் தள்ளியது. சுதேசி இயக்கம் வங்கத்தில் தொடங்கி தேசம் முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தளபதியாக வ.உ.சி.யும் இயக்கத்தின் பரப்புரையாளனாக மகாகவி பாரதியும் விளங்கினர். 1905 டிசம்பரில் காசி நகரில் நடந்த காங்கிரசுக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேசபக்தனாகவும் பத்திரிகையாளனாகவும் பாரதி சென்றிருந்தான். திரும்பும்வழியில் கல்கத்தாவில் டம்டம் பகுதிக்கு வந்திருந்த நிவேதிதாவை முதன்முதலாகச் சந்தித்தான். இந்த நிகழ்ச்சியை பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் தங்கள் படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரதி தனது வாழ்நாளில், தானே அச்சிட்டு வெளியிட்ட நூல்களில் முதல் நான்கு நூல்களை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார் வரலாற்றை ‘பாரதியார் சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் அவரது மனைவி செல்லம்மா பாரதி. தமது குருமணியாக பாரதியார் வரித்துக்கொண்ட சகோதரி நிவேதிதாவைப்பற்றியும் அவரை பாரதி சந்தித்த வரலாற்றையும் சொல்லவந்த செல்லம்மா பாரதி அந்தக் கட்டுரைக்கு ‘குரு உபதேசம்’ என்று தலைப்பிட்டதோடு அக்கட்டுரையின் முடிவில், அந்தச் சந்திப்பை ‘ஆனந்தக் களிப்பு மெட்டில்’ பாரதியார் பாடியிருப்பதாகச் சொல்லி இந்தக் கவிதையை நமக்குத் தந்துள்ளார். ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் – எனைச்சூதாய் தனிக்கவே சும்மா யிருத்திமுன்னே ஏதுமில்லாதே – சுகமுற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப்பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தேபெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்பேசாத காரியம் பேசினார் தோழி’ செல்லம்மா பாரதி எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ நூலில் அவர் தந்திருக்கிற இந்தக் கவிதை, பெரும்பாலான பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை நம் கவனத்திற்கு வராத தொகுப்பு வேறெதிலும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.   இந்தக் கவிதையில் ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்?’ என்று செல்லம்மாவிடம் வியப்போடு தொடங்குகிற பாரதி, ‘பெற்றதை ஏதென்று சொல்வேன்?’ என்ற மர்மத்துடன் தொடர்ந்து, ‘பேசாத காரியம் பேசினார் தோழி’ என்று முடிக்கிற அழகைப்பாருங்கள். மனைவியைத் ‘தோழி’ என்றழைக்கிற சமத்துவப் பாங்கினை பாரதியார் கற்ற இடம் சகோதரி நிவேதிதாவின் சந்நதியில்தான். காரியம் என்ற சொல்லுக்குச் செயல் என்றோ வேலை என்றோ பொருள் கொள்கிறோம். ‘பேசாத காரியம்’ என்பதும் அந்தச் சொல்லாடலைப் ‘பேசினார்’ என்று முடிப்பதும் எங்ஙனம்? தனது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை (1909 ஜனவரி) சமர்ப்பணம் செய்கிறவேளையில் அந்தப் ‘பேசாத காரிய’த்தின் சாயல் தொனிக்க பாரதி எழுதுவதைப் பார்க்கலாம். ‘எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு’ என்று எழுதுகிறார். ‘பேசாத காரியம்’ எதுவென்று மேற்கண்ட வரிகளில் நமக்குப் புலனாகிவிடுகிறது. அது ‘சொல்லாமல் உணர்த்துவதாம்’. மீண்டும் செல்லம்மா பாரதியிடம் வருவோம். பாரதியார் நிவேதிதா தேவியிடத்து என்ன உபதேசம் பெற்றார் என்பதைத் தன்னிடம் ‘ரொம்பவும் உணர்ச்சியுடன்’ விவரித்ததாகவும் ஆனால் அச்சம்பவத்தைத் தன்னால் ‘விரித்துக்கூற முடியவில்லை’ என்றும் செல்லம்மா எழுதியிருக்கிறார். நிவேதிதாவிடம் பாரதி பெற்ற உபதேசம் எத்தகையது என்றும் அவரது வாக்கின் மூலமாகவே அறியலாம். 1908 ஜனவரியில் தனது முதல் நூலை வெளியிட்டு, அதனைச் சகோதரி நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பிக்கிறபோது, ‘ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதற்கொப்ப, எனக்கு பாரத தேவியின் சம்பூர்ண ரூபத்தைக்காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார். நாம் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கவிதையில், ‘முன்னே ஏதுமில்லாதே – சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார். பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப் பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற வரிகளில் அடங்கியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தின் பொருளை இப்போது தெரிந்துகொள்ளமுடிகிறது. பாரதி, தனது குருமணி சந்திப்பின் வருணிப்பில் அதைக் கீதைக் காட்சியுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ‘பாரத மாதாவின் சம்பூர்ண ருபத்தைக் காட்டி’ என்ற சொல்லாட்சியையும் நாம் தேர்ந்துகொண்ட கவிதையின் ‘பார்த்த விடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொற்றொடரையும் இணைத்துப் பார்க்குமிடத்து அந்தக் காட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. அந்தச் சந்திப்பை, பாரதியார் பற்றிய ஆய்வு நூல்களில் ஆங்காங்கே பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிற செய்திகளின் அடிப்படையில் நாம் இந்த கட்டுரைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கவிதை வரிகளின் பேசுபொருளைத் தாண்டிவிடாத எல்லைக்குள் நின்றுகொண்டு சுவைத்துப் பார்க்கலாம். சமூகப் பிரக்ஞைமிக்க கவிஞன், தான் வாழ்ந்தகாலத்தின் பிரதியைத் தனது படைப்புகளில் பதிந்துவைக்கின்றான். தனது காலத்தில், தான் இயங்கும் கருத்துவெளியில் துலங்கித்தெரிந்த தன் சமகால ஆளுமையான சகோதரி நிவேதிதாவால் பாரதி ஆகர்சிக்கப்பட்டிருந்ததை இந்தக் கவிதையும் நிவேதிதாவுக்கு பாரதியின் ஆக்கங்களில் செய்யப்பட்டிருக்கும் சமர்ப்பணங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்தக் கவிதை, உள்ளடக்கத்தில் ஒரு சம்பவத்தை விவரிப்பதுபோலத் தோன்றுவதைத் தாண்டி, பாரதி என்ற ஆளுமை செதுக்கப்பட்டதின் வரலாற்றையே பிணைத்துக்கொண்டுள்ள கதையை பாரதியே சொல்வதாகும்.  அது என்ன? 1903லேயே தேசபக்த இயக்கத்திற்கு பாரதி வந்துவிட்டதை அவன் வார்த்தைகளாலேயே அறிகிறோம். 1909இல் தான் வெளியிட்ட ‘ஜென்ம பூமி’ நூலுக்கு அவன் எழுதிய முகவுரையில் ‘சென்ற சுபகிருது வருஷத்திலே’ தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியதாகவும் தான் அதில் ஈடுபட்டதாகவும்’ கூறுகிறான். சென்ற சுபகிருது வருஷம் என்று அவன் குறிப்பிடுவது 1902 ஏப்ரல் முதல் 1903 மார்ச்வரையிலான காலமாகும். இந்தக் காலத்தில் 1902 ஜனவரிவரை பாரதி காசியில் இருந்தார். ஆகவே இந்த நவீனமார்க்கத்தில் 1903 முதலே ஈடுபட்டிருந்த தேசபக்தன் பாரதி, 1905இல் வங்கத்தில் தொடங்கிய சுதேசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த விவேகானந்தரின் சீடர்கள் உள்ளிட்ட பல தேசபக்தத் தலைவர்களை நேரடியாகவும் பத்திரிகையாளனாகவும் அறிந்திருந்தான். தமிழகத்தில் அந்த சுதேசிய இயக்கத்தின் பரப்புரையாளனாக பாரதி மாறியிருந்த காலத்தில் வங்கத்தில் அந்தத் தலைவர்களில் ஒருவராக இயங்கிய நிவேதிதா தேவியை ஆர்வமுடன் சந்தித்திருக்கிறான். அந்தச் சந்திப்புபற்றி செல்லம்மா பாரதியின் கருத்துக்களை ஒட்டியே பாரதியார் வரலாற்றை எழுதிய இரா.அ.பத்மநாபன் தனது ‘சித்திர பாரதி’யில் குறிப்பிடுகிறார். பாரதியே தம்மிடம் சொன்னதாக திரு.வி.எஸ்.குஞ்சிதபாதம் என்ற பாரதி அன்பர், பாரதி – நிவேதிதா சந்திப்பை ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இவரது கட்டுரை திரு.கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்கள் பதிப்பித்த ‘பாரதி விஜயம்’ தொகுப்பில் படிக்கக்கிடைக்கிறது. 1905 காசிக் காங்கிரசிலும் 1906 கல்கத்தா காங்கிரசிலும் சகோதரி நிவேதிதா அழைக்கப்பட்டு பார்வையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஏனெனில் தீவிர இரகசிய இயக்கங்களில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு காங்கிரசில் நேரடிப் பங்கேற்பு அக்காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. டம்டம் நகரில் ஒரு மாளிகையில் இரகசியக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்குச் சகோதரி நிவேதிதாவும் வந்திருந்து பேசுகிறார். பாரதியும் அவரது நண்பர்களும் அவரைச் சந்திக்கின்றனர். பாரதி சில பாடல்களைப் பாடுகிறார்.  நிவேதிதாவும் பாரதியும் உரையாடுகின்றனர். பாரதி திருமணமானவர் என்று தெரிந்துகொண்டதும் மனைவியை அழைத்து வராததன் காரணத்தைக் கேட்கிறார் நிவேதிதா. ‘அவ்விதம் பொது இடங்களில் சரிசமமாக மனைவியை அழைத்துவரும் வழக்கம் இல்லை’ என்றும் அவ்வாறு ‘மனைவியைக் காங்கிரசுக்கு அழைத்துவருவதால் பயன் என்ன கிடைக்கப்போகிறது?’ என்றும் பாரதி மிக இயல்பாகப் பதிலளிக்கிறார்.  சகோதரி நிவேதிதா கொதித்துப்போகிறார். ‘சமூகத்தில் பாதியான பெண்களை அடிமையாக வைத்துக்கொண்டே மறுபாதிமட்டும் விடுதலைபெறமுடியாது. உன்னைப்போன்ற படித்தவர்களே பெண்களோடு சமத்துவம் பேணவில்லையெனில் எப்படி இந்தத் தேசத்தில் சமூகச் சீர்திருத்தங்கள் மலரும்? பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் பொது இயக்கங்களில் வராதவரை இந்தத் தேசத்தின் விடுதலை சித்திக்கப் போவதில்லை’ என்றெல்லாம் பாரதியைக் கண்டித்துப் பேசுகிறார். ‘இனியேனும் மனைவியை உன் இடதுகையெனக் கருது. மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி வா’ என்கிறார். இதைத்தான் பாரதி, ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்’ என்று குறிப்பிடுகிறார். பிறகு நடந்ததை திரு.குஞ்சிதபாதம், பாரதி தம்மிடம் கூறியதாகத் தாம் எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார். ஒரு தருணத்தில் பாரதியைக் கைப்பிடித்து மாளிகைக்கு வெளியே தனியே அழைத்து வந்த நிவேதிதா, பாரதியை அங்கிருந்த ஒரு ஆலமரத்தடியில் நிறுத்தி பாரதியிடம், ‘அதோபார், பாரதமாதாவின் அற்புத தரிசனத்தை’ என்றாராம். பாரதியார் அவர் காட்டிய திசையில் பார்க்கிறார். நிவேதிதாவின் வார்த்தைகள் அத்தனைச் சக்தி மிக்கவையா என்ன! பாரதி பாரதமாதாவின் சம்பூர்ண ரூபத்தைக் காண்பதாகப் பிரமை கொள்கிறார். ‘எனைச் சூதாய் தனிக்கவே சும்மா யிருத்தி முன்னே ஏதுமில்லாதே –  சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்.’ ‘பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொல்லாடல் இந்த ஆவேசப் பரவசத்தையே நம் கண்முன் நிறுத்துகிறது. ‘பாரத மாதாவின் ஆணையைக் கேட்டுக்கொள். உன் கவியாற்றலை அன்னையின் சேவைக்கே அர்ப்பணிப்பாயாக’ என்ற நிவேதிதாவின் குரல் பாரதியின் உள்ளத்தின் உள்ளே ஒலிக்கிறது. சகோதரி நிவேதிதா பாரதியைத் தொட்டுப் பிரமை கலைக்கிறார். அந்த ஆலமரத்தின் இலை ஒன்றைப் பறித்து பாரதியிடம் கையளித்தார். தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரததேவியின் தொண்டிற்கே என்ற சங்கல்பம் போல பாரதி அதை வாங்கிக்கொண்டார். அந்த ஆலிலைப் பிரசாதத்தை வெகுகாலம் பாரதி பொக்கிஷம்போல் பாதுகாத்துவந்தார் என்று செல்லம்மா கூறுகிறார். ‘சற்றும் பேசாத காரியம் பேசினார் தோழி’ என்ற சொற்றொடரால் பாரதி ‘குருமணியின் தரிசன’த்தைப் பேசுகிறார். ‘அதன்பிறகு தம் உள்ளத்திலிருந்து தேசபக்தி ததும்பிக்கனிந்த பாடல்கள் வெள்ளமாய்க் கொட்டலாயிற்று’ என்றாராம் பாரதியார். நிவேதிதா தேவியுடனான சந்திப்புக்குப்பிறகு மகாகவி பாரதி தனது பாடல்களிலும் கட்டுரைகளிலும் பெண்ணியக் கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். 1906இல் அவர் பேசியதன் வீச்சு பின்னாளில் 1920களில் பெரியாரியத்தில் பூரணம்பெற்றது என்பதை அறிகிறோம். சாதி மறுப்பு மற்றும் பெண்ணியக் கருத்துகளின் ஆரம்பம் இந்தச் சந்திப்பு என்பதை இந்தத் தருணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.

அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்?

அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்?

தமிழக அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்காக வானவில் மன்றம் என்ற புதிய முயற்சியை தமிழக அரசு இந்த ஆண்டு உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 13210 அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தைத் தொடங்கிவைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் அரசு ஆதி திராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.  வானவில் மன்றம் என்பது அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின்மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு வரும்படியாக அவர்களைத் தயார்படுத்தும் ஒரு புதிய முயற்சி என்ற செய்தி நிலவிவருகின்றது. அதனை நாம் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுவது கல்விதருவதன் ஒரு பகுதியே. ஆனால் இந்தத் திட்டம் புதிது அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது  ஒன்றிய அரசுத் திட்டத்தின் வழியாக நிதி ஒதுக்கப்படக்கூடிய ஒரு  திட்டம்தான். பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள STEM (Science Technology Engineering and Mathematics) என்ற திட்டமே புதிய பெயரில் மீண்டும் வருகிறது. இதே திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளிகளுக்கும் அதற்கான கருவிப்பெட்டிகள் (KIT) வழங்கிய நடைமுறை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது. அப்போது தன்னார்வலர்கள் என்றோ தொண்டு நிறுவனங்கள் என்றோ பள்ளிக்குள் எவரும் ஊடுருவவில்லை. ஆனால் தற்போதைய வானவில் மன்றம் திட்டத்தில், வெளியிலிருந்து கார்ப்பொரேட் கல்வி நிறுவனங்களை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துவந்து நுழைக்கும் வேலையை பிராதானமாகச் செய்கின்றனர் அதிகாரிகள்.  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனரான சுதன் ஐஏஎஸ் அவர்கள் இதற்கான சுற்றறிக்கையை மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அரசுப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம்  செயல்படுத்தப்படப் போவதாகவும் இதற்காக சிறந்த நிபுணர்கள் வந்து செயல்முறைகளைச் செய்துகாட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். யார் அந்தச் சிறந்த நிபுணர்கள்?  பள்ளிக்குள்  அறிவியலைக் கற்று உயர்கல்வி பயின்று தேர்வு எழுதி ஆசிரியராக வருபவர்களிடம் இந்தத் திறன் இல்லையா என்று நாம் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். சிறந்த நிபுணர்கள் என்ற அடையாளத்துடன் பள்ளிகளுக்கு உள்ளே நுழைபவர்கள் கார்ப்பொரேட்டுகள் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த நிறுவனங்கள் அனைத்துமே நிதி பெற்றுக்கொண்டு பணியாற்றும் கார்ப்பரேட் அமைப்புகள். இந்த அமைப்புகளில் பயிற்சி பெற்றுள்ள ஊழியர்கள்தான் (தன்னார்வலர்கள் என்பது தவறு) சிறப்புப் கருத்தாளர்களாம். இந்த அமைப்புகளின் லோகோக்களைத் தாங்கித்தான் வானவில் மன்றங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துள்ளனர். இவர்களைத் தேர்வுசெய்ய கல்வித்துறையினருக்கு வழிகாட்டுவது யார் என்ற கேள்வியை நாம் எழுப்புவதே எழுவதேயில்லை. திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு, கார்ப்பொரேட்டுகளை பள்ளிக்கல்வியில் நுழைக்கும் முறைக்குப் பெயர் என்ன? கல்வித்துறையில் பணியாற்றும்   இளங்கலை முதுகலை பயின்ற திறமையான ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டதுதான் தமிழக பள்ளிக்கல்வித் துறை. 12000 ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து இத்திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியதாகவும் செய்திக்குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. அப்படியிருக்க ஆசிரியர்களைத் தயார்படுத்தும் பணியைச் செய்யாமல்  அவர்களிடம் உள்ள திறமையை மாணவர்களுக்குக் கடத்த நினைக்காமல், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத ஏராளமான பணிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மறுபுறம் தன்னார்வலர்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களைக் கொண்டு பள்ளிகளுக்குள் மாணவர்களிடையே பரிசோதனைகள் நடக்கும் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ளன. அங்கு ஆராய்ச்சிப் படிப்பு முடித்த பேராசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி மாவட்டந்தோறும் ஒன்றிய அளவில் அறிவியல் கணக்கு படித்த ஆசிரியர் பயிற்றுனர்கள் (BRT) ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை எல்லாம் புள்ளிவிவரக் கணக்குகளை எடுக்கவைத்துவிட்டு, பள்ளி ஆசிரியர்களையும் தகவல் சேகரிப்பு, புள்ளி விவரங்கள் சேகரிப்பு என திசைமாற்றி அனுப்பிவிட்டு கார்ப்பரேட்டுகளைப் பள்ளிக்குள் திட்டமிட்டு நுழைப்பதன் பின்னணி என்ன? அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் ஏற்படுத்துவதுதானே அறிவியல் ஆசிரியர்களின் பணி? அதை அவர்கள் செய்யட்டுமே? கணக்குப் பாடத்தைக் கற்பிப்பதுதானே கணக்கு ஆசிரியர்களின் வேலை? அதையெல்லாம் அவர்கள் செய்யட்டுமே? அதைவிடுத்து தன்னார்வலர்கள் ஏன் இந்த இடங்களுக்கு வரவேண்டும்? இதற்காக வருபவர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட தொகை நிச்சயமாக வழங்கப்படும். இதற்காக 1.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம்.  ஒவ்வொரு பள்ளிக்கும் முதல்கட்டமாக ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் சோதனைகள் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து வாரந்தோறும் அந்தப் பாடத்தில் உள்ள தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கான உபகரணங்களை வாங்குவதாகவும் அவற்றைப் பயன்படுத்தி சோதனைகளை விளக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கற்பித்தல் பணியை ஆசிரியர்களிடம் விட்டுவிட்டு, எழுத்தர், கணக்கர், புள்ளிவிவரங்கள் சேகரிப்பவர், ஆதார் எண் இணைப்பவர் போன்ற பணிகளுக்கு இவர்களைப் போன்ற கார்ப்பொரேட் நிறுவங்களை அரசு பயன்படுத்தலாமே? நமக்கு எழக்கூடிய சில ஐயங்களை இங்கே பட்டியலிடுகிறோம். ஆகா குரு (Aha Guru) என்பது எந்த அமைப்பு? (நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பு இது என்பது வெளிப்படை) Parikshan, AID INDIA மற்றும் சுடர் அமைப்பு இவர்களெல்லாம் யார்?  எல்லோருமே கார்ப்பரேட் அமைப்புகள். கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் இவை. இந்தக் குறிப்பிட்ட அமைப்புகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்த அரசு யாரிடம் ஆலோசனை கேட்டது? எந்த அடிப்படையில் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? இந்த நிறுவனங்கள் பள்ளிகளுக்கு அனுப்புகின்றவர்கள் அறிவியல் மற்றும் கணக்குத் துறையில் பெற்றுள்ள நிபுணத்துவம் என்ன? தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் (Tamilnadu Science and Technology Centres), ‌‌‌கோளரங்குகள் போன்ற அரசு  அறிவியல் நிறுவனங்கள் இருக்கின்றனவே! அவர்களை ஏன் இந்தத் திட்டங்களில் ஈடுபடுத்தவில்லை? சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், கோவை, திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அறிவியல் மையங்கள் இந்த வானவில் திட்டச்செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படாதது ஏன்? இந்த அரசு நிறுவனங்களின் லோகோக்கள் இல்லை வானவில் மன்றத் திட்ட அறிவிப்புகளில் இல்லை. ஆனால் கல்வி வியாபாரக் கார்ப்பொரேட்டுகளின் லோகோக்கள்தான் வானவில் மன்றம் செயல்திட்டங்களின் முகப்பில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அறிவியல் இயக்கம் என்ற அமைப்பு அரசுப் பள்ளிகளுடன் நல்ல புரிதலையும் இணக்கத்தையும் பின்பற்றி அறிவியல் மனப்பான்மையைக் கொண்டுசேர்க்கும் விதமாகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. அதில் ஆயிரக்கணக்கான உண்மைத் தன்னார்வலர்கள் இயங்கி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பரிசோதனை முயற்சிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பல பத்தாண்டுகளாக அந்த அமைப்பினர் செய்துவருகின்றனர். அதைப்போன்ற அமைப்புடன் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்சிபெற்று வானவில் மன்றங்களை நிதிச்சுமையின்றிச் செயல்படுத்தலாம். இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கும் நிதியைப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். இத்திட்டம் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது எனில் இதற்கான நிதி மாநில அரசால் வழங்கப்படுகிறதா? முதல்வர் உருவாக்கிய திட்டம் எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டமா? அரசுப்பள்ளிகளில் கல்வி வியாபார நிறுவங்களை உள்ளே நுழைத்து, அந்த நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை இழுக்கத் தூண்டில் போடவும் அதற்கான புள்ளிவிவரங்களை அந்த நிறுவனங்களுக்கு வழங்கவும் அரசே வாசல் திறந்து வைக்கிறதா? இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்ற கேள்விகளையும் முன்வைக்கிறோம். ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

மனிதர்களை அடிமைப்படுத்தி, சந்தையில் அவர்களை நிறுத்தி விற்பனை செய்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். கிளர்ந்தெழுந்த அடிமைகள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட கதைகளைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அடிமை வணிகங்கள் இல்லாததாக இன்றைய உலகம் மாறிவிட்டது என்று நிம்மதியாகப் பெருமைப்படுகிறோம். ஆனால் உண்மையில் அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா? நவீன காலத்து அடிமைமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு பதிவு செய்திருக்கிறது. பாலியல் தொழில், கொத்தடிமை, கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை இவற்றில் குறைந்தது 4 கோடிப் பேர் சிக்கியிருக்கிறார்கள். நாடுவிட்டு நாடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டுக்குள்ளேயே மனிதக் கடத்தல் நடக்கிறது. இவற்றுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதில் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. உலக அளவில் சுமார் 12.16 லட்சம் கோடி ரூபாய் லாபம் குவிக்கப்படுகிறது. உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்மம் மட்டுமின்றி இவர்கள் அனுபவிக்கிற உடல் நோய்கள் உள்ளிட்ட துயரங்களும் அவமதிப்புகளும் ஏராளம். மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையாக இருக்கக்கூடிய பழங்குடியினர், பூர்வ குடியினர், ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட, வஞ்சகங்களுக்கு எளிதில் இரையாகக்கூடிய மக்கள் நவீன அடிமை வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், மனநலம் குன்றியோர், உடல் ஊனங்களுக்கு உள்ளானோர் போன்ற எதிர்த்துநிற்க முடியாதவர்கள் வலுக்கட்டாயமாகவோ, பணத்தைக் காட்டியோ, சூழ்ச்சி செய்தோ கடத்தப்படுகிறார்கள். குழந்தைகளில் நான்குக்கு ஒரு குழந்தை வீதம் கடத்தப்படுகிற தகவல் நெஞ்சை உறைய வைக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? அடிமைத்தனத்தை ஒழிப்பது என்பது அ, டி, மை என்ற மூன்று எழுத்துக்களை அழிப்பதல்ல. நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கச் செயல்படுவோம். அவ்வாறு செயல்படுகிறவர்களோடு சேர்ந்தாவது நிற்போம். இந்தத் தகவல்களை சக மனிதர்களுக்குச் சொல்வோம். நவீன பொருளாதார அடியாட்களான அரசாங்கங்களின் கொள்கைகளும் பாராமுகங்களும் இதற்கொரு காரணம் என்பதையும் சேர்த்தே சொல்வோம். அழகுக்கு அடிமை, அன்புக்கு அடிமை, கவிதைக்கு அடிமை, காதலுக்கு அடிமை… என்பதாகவெல்லாம் உணர்ச்சி மிகுந்து பேசுவோமே, அதை நிறுத்திக்கொள்வோம். எதற்காகவும் யாரும் யாருக்கும் அடிமையாவதை மறுப்போம். இன்று (டிசம்பர் 2) உலக அடிமைத்தன ஒழிப்பு தினம்.