பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழகப் பள்ளிக் கல்வியில் நாம் எதிர்பார்க்காத அளவில் பல மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம் கல்வியைச் சீர்திருத்தம் செய்து, அடுத்த கட்ட நகர்வை நோக்கி வளர்க்கும் செயல்முறைகளா என்று பார்த்தால், அதுதான் இல்லை. புதிய தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தன்னார்வலர்களைப் பள்ளிக்குள் அனுமதித்தல் என்ற கருத்துதான், தொடர்ந்து தமிழகத்தில் பல விதங்களில் செயல்பாட்டில் வந்துகொண்டே உள்ளது. இல்லம் தேடி கல்வியில் ஆரம்பித்து, தற்போது பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பிக்கக் கூறியுள்ள ஃபெல்லோஷிப் தன்னார்வலர்  திட்டம் வரை அனைத்து நிலையிலும் தன்னார்வலர்கள்தான்.   நிகழ்காலக் கல்வியை நாம் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தால், இன்றைய பள்ளிக்கல்வி மிகுந்த ஆபத்தில் உள்ளது என்பதனை நாம் உணர முடியும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களின் பள்ளிகளில் நிகழ்ந்த அதிர்ச்சி தரும் நிகழ்வுகளே. திருப்பூர், சேலம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில், வட இந்தியாவிலிருந்து வந்துள்ள சில நபர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, கைவினைப் பொருட்கள் செய்யும் முறை குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகின்றனர். இந்த நபர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்ற அறிவிப்பை, முதன்மைக் கல்வி அலுவலர்களே வெளியிட்டுள்ளனர். இதற்காக மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் கொண்டு வந்துள்ள புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனராம். ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் தமிழ் மொழியாக்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். ஏற்கனவே, கொரோனா காலக் கற்றல் இடைவெளியால் வாசிக்கும் திறனில் குறைந்துள்ள மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், மாணவர்களின் மொழியறிவு முற்றாக அழிந்துவிடும் என்று புலம்புகிறார்கள். நாமும் பார்த்திருப்போம், நாம் படித்த காலத்தில்கூட, இதைப்போல ஒரு மனிதர் பள்ளிக்கு வருவார். மிகவும் நலிந்த பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது அவரது தோற்றத்திலேயே வெளிப்படும். காகிதத்தில் பூ, மரம், தொப்பி, மெழுகுவர்த்தி ஸ்டேண்டு போன்றவற்றைச் செய்து காட்டுவார். பின்னர், அதைப்போன்ற செயல்முறைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை மாணவர்களிடம் காண்பித்து, 2 ரூபாய் கொடுத்து விருப்பப்படுபவர்கள் வாங்கலாம் என்பார். ஒருசிலர் வாங்குவார்கள். அப்போது வந்தவர்கள் எல்லாம்   வேலை இல்லாத காரணத்தால், இதைப்போல ஒரு தொழிலை மேற்கொண்டு, அன்றாடம் பிழைப்பு நடத்த வருபவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில், நாம் புதிய தேசிய கல்விக் கொள்கையை வலிமையாக எதிர்த்து வரக்கூடிய சூழலில், நமது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் இரண்டு வடநாட்டு மனிதர்கள் வட இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். ஹிந்தி மொழி மட்டுமே பேசக் கூடிய இவர்கள் தமிழ் மொழியே தெரியாமல், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில், மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளின் நலனின் அக்கறையுள்ள ஆசிரியர்கள், தங்கள் எதிர்ப்புக்  குரலைக் கவலையுடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய பாடப்பிரிவேளைகளில் (Periods) மாற்றம் செய்துள்ளனர். அதில் தமிழ், ஆங்கிலம்,  சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஏற்கனவே  வழக்கில் இருந்த ஏழு பிரிவேளைகள் ஆறாகக்  குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு பிரிவேளையில் கல்வி இணைச் செயல்பாடுகள்  என்ற வகுப்புக்கான செயல்பாட்டை சேர்த்துள்ளனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து பெறப்பட்டு, பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக  ஒதுக்கப்பட்ட பிரிவேளைகளில் செய்யக்கூடிய பணிகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது.  காகிதம் மடித்தல், தொப்பிகள்  செய்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்தல் என ஏராளமான பட்டியலைக் கொடுத்துள்ளது.  அதற்கான ஆசிரியர்கள் ஏற்கனவே பள்ளிகளில் இருக்கின்றனர். பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று  கலை  ஆசிரியர்கள், சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களே குழந்தைகளுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால் அதை விடுத்து, பள்ளிக்குச் சற்றும் தொடர்பில்லாத வெளி நபர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதித்து செயல்முறைகள் வெளியிட்டு இருக்கின்றனர் கல்வி அலுவலர்கள், இதற்கு ஆணையர் கடிதமும் கூடுதல் பலமாம்.  மேலும்  கலை ஆசிரியர்களாக இல்லாத பிற ஆசிரியர்களும் சிறப்பாசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் கூட இச்செயல்பாடுகளை நேர்த்தியாகக் கையாள முடியும். காரணம்  இன்று இணையத்தில், வலையொலி (YOU TUBE)யில்  தேடினால் ஏராளமான காணொலிகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளே காணொலியைப் பார்த்து மிக அழகாகக் கைவினைப் பொருட்களைச் செய்து வருகின்றனர். குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும் என்றால், எந்த ஆசிரியரும் இந்தக் கல்வி இணைச் செயல்பாடுகள் பிரிவேளையை அணுகும்போது, குழந்தைகளுக்கு அவர்களாகவே  வழிகாட்டுவார்கள். ஏராளமான பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இருக்கின்றது. அங்கும் காணொளிகளைக் காட்டிப் பயிற்சி தரலாம்.  எல்லாமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது .குழந்தைகளது பெற்றோர்கள் பெரும்பாலும் அலைபேசிகளை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் அந்தச் செயல்பாடுகளின் இணையப்பக்கத்தை நாம் கூறினால் அவர்களாகவே தேடுவார்கள் அல்லது ஆசிரியர் அதைப் பார்த்து வந்து வகுப்பறையில் கற்றுத் தரலாம். இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது வட இந்தியாவிலிருந்து வந்துள்ள தன்னார்வலர்களை??!! அதாவது, வெளி நபர்களை முறையாகப் பள்ளிக்குள் அனுமதித்து, அவர்களுக்குப் புத்தகங்களை விற்கும் உரிமையையும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சில மாவட்டங்களில் ஆணை மூலமாக வழங்கியுள்ளது தெரியவருகிறது. அவர்களுடைய ஆணையின் செயல்முறைக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்வையில், ஆணையரின் கடித எண்ணையும் இணைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது, தமிழக பள்ளிக்கல்வித் துறை வடமாநிலங்களில் இருக்கக்கூடிய தனிநபர்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் கூடாரமாக மாறுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதனால், இங்கே பலன் அடைபவர்கள் யார்? என்ற கேள்வியும் எழுகிறது. சராசரியாக ஒரு பள்ளியில் சில நூறு புத்தகங்களை அவர்கள் விற்றாலும்கூட, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகங்களை விற்கும்பொழுது பல கோடி ரூபாய் பகல் கொள்ளை அடிக்கப்படும். இந்தத் தனி நபர்களுடைய முதலாளி யார்? எங்கிருக்கிறார்? அவர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கும் என்ன தொடர்பு? யாரோ சிலர் வருமானம் ஈட்டும் இடமாக தமிழகப் பள்ளிகளை மாற்றுவது ஏன்? இவற்றையெல்லாம் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சந்தேகக் கண்ணோடு நோக்கவேண்டும். இத்தகைய செயல்பாடுகளை ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது, பள்ளிகள் இது போன்ற வெளி நபர்களைக் கட்டாயமாக உள்ளே அனுமதிக்கக்கூடாது, அலுவலர்கள் உத்தரவு கொடுத்தாலும் அதை மறுப்பதற்கான உரிமை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இதில் தலையிட்டு நிராகரிக்க முடிவு செய்ய இயலும்.   இவர்களைப் போன்ற வெளிநபர்கள் எதற்காக நம் பள்ளிகளை நாடி வரவேண்டும்? பள்ளிக்குத் தொடர்பில்லாத நபர்களைப் பள்ளிக்குள் அனுமதிப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? இதைப்போன்ற செயல்பாடுகளைக் கற்பிக்கப் பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஆசிரியர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இல்லையெனினும் நியமனம் செய்ய வேண்டியது அரசின் கடமை.  நமது ஆசிரியர்களுக்கு இல்லாத திறன் ஒன்றும் அவர்கள் எடுத்து வரவில்லை. ஆகவே, தன்னார்வலர்களைப் பள்ளிக்குள்  அனுமதிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கத்தையும் அதனைக் கொல்லைப்புற வழியே அனுமதிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாட்டையும்  உறுதியுடன் நாம் நிராகரிக்க வேண்டும். சு. உமாமகேஸ்வரி 

கல்வித் துறையில் குழப்பங்கள் – தவிர்க்கப்பட வேண்டாமா?

கல்வித் துறையில் குழப்பங்கள் – தவிர்க்கப்பட வேண்டாமா?

தமிழக கல்வித்துறையின் அறிவிப்புகள் நாள்தோறும் ஒன்றாக வந்து ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் எப்போதும்  மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எதுவென்றால், ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகங்களில் ஏற்படுத்தப்பட்ட மழலையர் வகுப்புகளை மூடுவதாகவும் குழந்தைகளைத் திரும்ப அங்கன்வாடிகளுக்கு அனுப்பிவிட்டு பள்ளிக்கல்வித்துறையில் மழலையர் கல்விக்கான வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும் அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசின் குழப்பமான அறிவிப்புகள் தமிழகம் முழுவதிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்ப, அடுத்த நாளே முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கல்வி அமைச்சர் அறிவிப்பு வெளியீட்டுள்ளதாக மீண்டும் அரசு அறிவிப்பு வருகிறது.  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியாளர்கள்தான் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று  பள்ளிக் கல்வித் துறையிலிருந்து மழலையர் வகுப்புகளைத் திரும்ப அங்கன்வாடிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஒன்று கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அங்கன்வாடிகளில் இருந்து பள்ளிக்குள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கக் கூடிய இந்த அங்கன்வாடி மையங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஐந்து வயது வரை பராமரிக்கும் பணி நடக்கிறது. 5 வயது முடிந்த பின்னர் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் வந்து சேரக் கூடிய சூழல் பல ஆண்டு காலமாக நிலவி வந்தது. ஆனால் சமீப  பல ஆண்டுகளாக பொதுமக்களுக்குத் தனியார் பள்ளிகளின் மீதான விருப்பம் அதிகரித்தது.  அதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதை விரும்பவில்லை. இந்தச் சூழலில்தான் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தின் 2019ஆம் ஆண்டில் மழலையர் கல்விக்கான வகுப்புகள் 2381 அரசு நடுநிலைப்பள்ளிகளில் (வளாகத்திற்குள்ளேயே  அங்கன்வாடி மையங்கள் இருக்கும் பட்சத்தில்) முதற்கட்டமாகத் துவங்கப்பட்டன. அதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.  முன் மழலையர் கல்வி (ECCE) என்பதற்கான ஒரு பகுதி, புதிய தேசியக் கல்விக் கொள்கையில் கொடுக்கப்பட்டு இருப்பதனாலேயோ, NEP 2020-ஐ நாம் விமர்சிப்பதாலேயோ, மழலையர் கல்வி வகுப்புகளை வேண்டாம் எனக் கூறிடவோ தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணையை நாம் வரவேற்கவோ முடியாது. ஏனெனில் களத்தில் என்ன நிகழ்கிறது என்பதே முக்கியம்.  இன்று,  அரசுப் பள்ளிகளின் பக்கம் பொதுமக்கள் தங்கள் பார்வையைத் திருப்பியதற்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று, அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதுமாகும்.  அதைத் திடீரென வேரோடு பிடிங்கிப் போட்டால் என்ன நிகழும்? அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் படிக்கும், படிக்கக் காத்திருக்கும்  பல ஆயிரம் குழந்தைகளில் 30% மட்டுமே அங்கன்வாடிகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. மீதி 70% குழந்தைகள் நிச்சயமாகத் தனியார் பள்ளிகளின் ஆளுகைக்குள்தான் சரணாகதி அடைவார்கள்.  அங்கன்வாடி மையங்கள் குறித்துச் சிந்தித்தால், அங்கு இருக்கக்கூடிய பொறுப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் குழந்தைகளிடம் கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பள்ளிகளில் நடைபெறக்கூடிய அளவிற்குத் தரமான கல்வியும், பாதுகாப்பான சூழ்நிலையும், கற்பித்தல் அணுகுமுறையும் கடந்து, குழந்தைகளுடனான உறவும் அங்கு கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. உடனே நாம் மழலையர் வகுப்பில் கற்பித்தலா? என்ற புரிதலுக்குள் செல்ல வேண்டியதில்லை. விளையாட்டு முறையிலான கல்வியாக இருந்தாலும் பள்ளிக்கல்வி முறைக்குள் வரும்போது அங்கன்வாடியைக் காட்டிலும் சிறப்பாகவே இருக்கும் என்பது கண்கூடு.   ஆசிரியர் நியமனம் இல்லை 2019ஆம் ஆண்டில்  திடீரென மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான ஆணையைப் பிறப்பித்து, தொடக்கப்பள்ளிகளில் 1-5 வகுப்புகள் கற்பித்த  இடைநிலை ஆசிரியர்களையே வேறு பள்ளிகளில் இருந்து பணி நிரவல் வழியாக மாற்றி, மழலையர் வகுப்புகளில்  நியமித்தது அப்போதைய அரசு. ஆனால் தொடர்ச்சியாக இதில் சீர்திருத்தம் கொண்டு வந்து, இதற்கான பிரத்யேகக் கல்வி கற்ற ஆசிரியர்களை நியமனம் செய்திருக்க வேண்டும். முந்தைய அரசு அதைச் செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒப்பந்த அடிப்படையிலாவது ஆசிரியர்களை நியமிக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கவேண்டும். அவற்றையெல்லாம் அப்போதைய அரசு புறந்தள்ளிவிட்டது. 2020-க்குப் பிறகு கொரோனா பெருந்தொற்றுக் காலம் வந்தது; பள்ளிகள் இயங்கவில்லை. இப்படியான சூழல்களில் மழலையர் வகுப்புகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் அப்படியே விட்டிருந்தனர்.  மீண்டும் தலைதூக்கிய பிரச்சினை தற்போதைய புதிய அரசு அமைந்தவுடன், கடந்த இரு கல்வி ஆண்டுகளில்  ஏராளமான குழந்தைகள் (சுமார் 6 லட்சம்) அரசுப்  பள்ளிகளுக்குப் புதிதாக வந்திருக்கின்றனர். ஆனால், புதிய ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை. புதிய அரசு அமைந்த பிறகு, கடந்த கல்வி ஆண்டின் 2021 – 2022 இறுதிப்பகுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது, ஏற்கனவே பணிநிரவலில் மழலையர் வகுப்புகள் கற்பிக்கப் பணியமர்த்தியிருந்தவர்களைத் திரும்ப தொடக்கப்பள்ளிகளுக்கே அனுப்பியது. ஆனால் அப்போது இது அரசியல் பிரச்சனையாக மாறவில்லை.  மாணவர் இல்லையேல் பள்ளிகள் இல்லை மழலையர் வகுப்புகள் நடத்தும் பல தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் தங்களிடமிருந்த குழந்தைகளை இழக்க மனமின்றி, அவர்களை கவனித்துக்கொள்ளத் தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஊதியம் தர முன்வந்து, உள்ளூர்ப் பகுதிகளிலிருந்து ஆசிரியர்களை நியமித்துக் கொண்டனர். இது தமிழகம் முழுவதும் பரவலாக நடந்த எதார்த்தம். ஏனெனில் அங்கு சுணங்கினால் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கை குறையும்; இருக்கும் ஆசிரியர் பணியிடத்துக்கு ஆபத்து நேர்ந்துவிடும்.  அப்பொழுதும் அரசு மழலையர்  கல்விக்காக எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை; ஆசிரியர் நியமனமும் செய்யவில்லை. ஆனால், தற்போது புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.  மொத்தமாக மழைலையர் கல்வியை அங்கன்வாடிக்கு அனுப்புவது என்பதுதான் இந்த நிலைப்பாடு. இது முழுக்க முழுக்க தனியாருக்கே சாதகமாக முடியும். கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? என்பதைப் போல, இதன் பின் விளைவுகள் தெரிந்தாலும் ஏன் இந்த முடிவை எடுத்தனர் என்ற ஐயம் எல்லாத் தரப்புகளிலும் உண்டு.  ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கப்பள்ளிகளுக்கு கற்பித்தல் பணியில் ஈடுபட இடைநிலை ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படும்.  அதனால் அவர்கள் அப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டனர் என்ற ஒரு காரணத்தை அரசு முன்வைக்கிறது. எனில், சிக்கல் என்ன என்று நன்றாகவே தெரிந்துவிட்ட பிறகு, ஆட்சியாளர்கள் ஏன் தீர்வை நோக்கி நகர மறுக்கின்றனர்? எனவே அரசு தூரிதமாகச் செயல்பட்டு, மழலையர் வகுப்பு மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனத்தை உடனே தொடங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த லட்சக்கணக்கானவர்கள் வரிசை கட்டிக் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களை உடனடியாகப் பணியில் அமர்த்தலாம். நிதிப் பிரச்சினை காரணம் எனில், குறைந்தபட்சம் ஒப்பந்த ஊதியத்திலாவது அனைத்துப் பணி இடங்களையும் நிரப்பலாமே? எல்லோரும் இணைந்து குரல் கொடுப்போம் கல்வித் துறையின் உயர் மட்டப் பதவியில் இருப்பவர்கள், தங்கள் அலுவலுகப் பணிகளில்  காலியாக எந்த இருக்கைகளையும் வைத்துக் கொள்வதில்லை. கார் ஓட்டுநர், உதவியாளர், அலுவலகப் பணியாளர் உட்பட எல்லா நிலைகளிலும் வசதியாக மாற்றிக் கொள்ளும் நீங்கள், துறைக்கு  ஆதாரமான குழந்தைகளுக்குக் கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்காமல் வஞ்சிப்பது ஏன்? ஏனெனில் குழந்தைகளுக்காகக் கேட்க எவருமில்லை; பெற்றோருக்கும் விபரம் தெரியாது; விபரம் தெரிந்த ஆசிரியர்களுக்கு, குரல் கொடுக்கத் துணிவு வராது. குரலற்றவர்களின் குழந்தைகள் எப்படிப் போனால் என்ன? என்ற வகையிலேயே எந்த அரசு வந்தாலும் நடந்து கொள்கிறது. மக்களுக்காகச் சிந்திக்கும் பாதையிலிருந்து விலகுகிறது. ஆகவேதான் இப்படியான குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கல்வியே நாட்டின் முதுகெலும்பு. உங்கள் குழப்பமான முடிவுகளால் அதைச் செல்லரிக்க வைத்து விடாதீர்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, களத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களிடம் அரசு உரையாடி தெளிவாகத் திட்டமிட வேண்டும். காத்திருக்கிறோம். உமா