ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் காந்தி பிறந்ததினத்தை நேற்று நாடே பெருமையுடன் நினைவு கூர்ந்தது. அவரின் அறவழிப் போராட்டங்கள் குறித்து சிலாகித்துப் பேசப்பட்டது. தமிழ்நாட்டில், காந்தி காட்டிய அறவழியில் ஆசிரியர்கள் போராட்டக் களம் கண்டு வருகின்றனர். காந்தி நடத்திய அறப்போராட்டம் ஆங்கிலேயரின் மனத்தையே மாற்றி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டது. ஆனால் ஆசிரியர்களது அறப் போராட்டம் நமது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழர்களின் நெஞ்சையே தொட மறுக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நடக்கும் பல நிகழ்வுகளைப் பட்டியலிட்டால், அவற்றுள் முதன்மையாக இருப்பது ஆசிரியர்களது போராட்டம். கல்வி கொடுக்கும் பள்ளிகளில் மிக முக்கியமானவர்கள் ஆசிரியர்கள். பிறகுதான் கட்டமைப்பு, வகுப்பறைகள், இன்ன பிற வசதிகள் யாவும். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஏராளமான சிக்கல்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஆசிரியர்கள் நியமனமே இல்லாமல் இருக்கும் பள்ளிகளும் இருக்கின்றன. பெயரளவுக்கு நியமனம் செய்து, அவர்களைப் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற பெயரில் வாரத்தில் மூன்று அரை நாட்கள் – அதாவது மொத்தமாக ஒன்றரை நாட்கள் மட்டுமே வரவழைப்பது; ஒரு மாதத்திற்கு 12 நாட்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிப்பது என்று, சுமார் 16000 ஆசிரியர்களது வாழ்க்கையைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தது அரசு. மத்திய அரசின் வழிகாட்டுதல்தான் இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்  என்றாலும், நம் குழந்தைகள் கல்வி பெற வேண்டுமெனில் முழு நேரமும் ஆசிரியர்களது தேவை பள்ளிகளுக்கு இருக்கிறது என்று மாநில அரசுக்குத் தெரியாதா? அதைக் குறித்து அப்போது முதல் இப்போது வரை எவருக்கும் அக்கறை இல்லை. இருந்திருந்தால் இத்தனை வருடங்களாகத் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிக் குழந்தைகள் இந்த அவலத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். ஆம்; ஒரு பள்ளியின் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதில் முதன்மையாளர் உடற்கல்வி ஆசிரியர்தான். வகுப்பறை ஒழுங்கை வகுப்பாசிரியர் பார்த்துக்கொள்வார் என்றாலும் பள்ளியின் மொத்த ஒழுங்கை, அனைத்து ஆசிரியர்களது உதவியுடன் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் கவனிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அவர்களது பணியும் அதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  மூன்று அரை நாட்கள் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தால், மற்ற மூன்றரை நாட்கள் பள்ளிகளில் ஒழுங்கை யார் கவனிப்பது? அந்த மீதி மூன்றரை நாட்களில் உடற்கல்வி வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளை விளையாட வைப்பது யார்? விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயார் செய்வது எப்படி? இதையே மற்ற துறை பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் எனில், நம் குழந்தைகளுக்கு எத்தனை தூரம் கல்வி மறுக்கப்படுகிறது, அவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்று நாம் உணர முற்படுதல் அவசியம். படைப்பாற்றல் திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் களம் கலை ஆசிரியர்களது கையில்தான் இருக்கிறது. மற்றபடி அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று நாம் பேசலாம். ஆனால் பாட ஆசிரியர்களுக்குத் தேர்வு மதிப்பெண் என்ற வட்டத்துக்குள் நின்று வாளைச் சுழற்றும் அளவிலான இடமே உள்ளது. ‘வானமே எல்லை; நீ உன் திறமையைக் காட்டு’ என்று மாணவர்கள் பார்வையை விசாலமாக்கும்  உத்தியை ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்களால்தான்  செய்ய இயலும். கணினிச் செயல்பாடு  உள்ளிட்ட பல திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் இந்தச் சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிக்குள் இருந்தும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலைமையைக் கடந்த பத்தாண்டுகளில் எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. விளைவு, ஆசிரியர்கள் தேவைப் பட்டியலில்  இவர்கள் பணியாற்றும் எந்தப் பள்ளிக்கும் புதிய ஆசிரியர் நியமனம் கிடையாது. இந்தப் பத்தாண்டு காலமாக எந்தவித ஆசிரியர் நியமனமும் இல்லை என்பது மற்றொரு துக்க வரலாறு. ஆனால், இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தில் மாணவர்கள் நலனுக்கும் கேடு; ஆசிரியர் நலனுக்கும் கேடு. அவர்கள் பெறும் ஊதியம் தற்போது பத்தாயிரம் மட்டுமே.  மாதம் பன்னிரண்டு நாட்களுக்குப் பத்தாயிரம் போதாதா என்ற குரல்களும் இங்கே ஒலிக்கின்றன. அது மிகப்பெரிய தவறு. ஒரு மாதத்தில் மீதி பதினெட்டு நாட்கள் அந்த ஆசிரியர்கள் எங்கே செல்வார்கள்? வேறு இடத்தில் நிரந்தரமாக வேலை செய்ய முடியுமா? வேலை தருவார்களா? இன்றுள்ள விலைவாசியில் இந்த ஊதியத்தை வைத்துக் குடும்பம் நடத்துவது இயலாத காரியம் என்பதை சமூகப் பார்வையுடன் சிந்திக்கும் அனைவராலும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். அத்தோடு பதினோரு மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு ஊதியம்  தரப்படுகிறது. மே மாதத்தில் அவர்களுக்குப் பசி எடுக்காதா? வாடகை வீட்டில் வசிப்போரிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்க மாட்டாரா? அந்த மே மாதத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் யாருக்கும் எந்தப் பணத் தேவையும் இருக்காதா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். இந்த  ஊதியச் சிக்கலைத் தீர்க்கவும் மாணவர் நலன் கருதியும் எங்களை நிரந்தரப் பணியாளர் ஆக்குங்கள் என்று பகுதி நேர ஆசிரியர்கள் இன்று வரை 52க்கும் மேற்பட்ட முறைகள் போராட்டக் களத்தில் நின்றுள்ளனர். அந்தப் போராட்டங்களின் பலனாக முதலில் ஐந்தாயிரமாக இருந்த அவர்களது ஊதியம் தற்போது பத்தாயிரமாக மாறியுள்ளது; அவ்வளவே. ஊதியத்தைக் கடந்து, பணியாற்றும் பள்ளியிலோ சமூகத்திலோ வீட்டிலோ அவர்களுக்கு மரியாதை கிடையாது என்பது மற்றொரு வகை மன உளைச்சல். கடந்த பத்தாண்டுகளில் இறந்தவர், வேலையை விட்டவர், வேறு வேலைக்குச் சென்றவர், ஓய்வு பெற்றவர் என நான்காயிரம் ஆசிரியர்கள் காணாமல் போக, எஞ்சியுள்ளவர்கள் 12000 சொச்சம் ஆசிரியர்கள்தான். செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன.  இந்த நேரத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கி, சில நாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, தற்போது தொடர் போராட்டத்தில் இன்று ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றனர். இதுவரை ஐந்தாயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் நாட்கள் செல்லச் செல்லப் பெண் ஆசிரியர்களுக்கு அங்கு தங்க, உடைமாற்ற, கழிப்பறை செல்ல என்று எதற்கும் இயலாத சூழல். ஆகவே போராடுவோருக்குக் கடும் சிக்கல்கள் நிலவுகின்றன எனவும் சங்கப் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தடைகளை மீறி ஒன்பதாவது நாளாக இன்றும் களத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இதற்கிடையே போராட்டம் தொடங்கியது முதல் நேற்று வரையிலான எட்டு நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கணினி ஆசிரியர் உடல்நலக் குறைவால் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்துள்ளார்.  மற்றொரு பகுதி நேர ஆசிரியரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த மணிகண்டன் என்ற ஓவிய ஆசிரியர், கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிருக்கிறார். இருவருக்கும் பணம்தான் பிரச்சனை. அதற்கு இவர்களது ஊதியம் மிக முக்கியமான காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மனிதாபிமானமற்ற முறையில் இப்படி ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுவது கண்டனத்துக்குரியது. இவர்கள் துன்பம் சமூகத்தை அதிர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்த காலங்களில் 2016 தேர்தலின்போதும், 2021 தேர்தலின்போதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்தது. அதை நம்பி குடும்பம் குடும்பமாக இவர்களுக்கு வாக்களித்தோம். ‌எங்கள் உறவினர்கள் குடும்பங்களையும் இவர்களுக்கே வாக்களிக்க வைத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் நாங்கள் பலமுறை போராடிவிட்டோம்.  இப்போதும் எட்டு நாட்கள் ஆகியும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்கள் கல்வி அமைச்சரும் முதல்வரும் என்று வெளிப்படையாகப் புலம்பித் தீர்க்கின்றனர் பகுதி நேர ஆசிரியர்கள். இவர்களின் போராட்ட முழக்கமே 181ஆவது கோரிக்கை என்ன ஆயிற்று? என்பதுதான். இந்த நேரத்தில் பல ஆசிரியர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்குச் செல்வது என்ற சூழலும் நிலவுகிறது. கடந்த எட்டு நாட்களில் ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். பள்ளிக்கல்வி இயக்குனர், கல்விச்செயலர், இணை இயக்குநர், சமக்ஷ்ர சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் வெறும் ஊதிய உயர்வு மட்டும் தருவதாகக் கூறிப் போராட்டத்தை முடித்துவிடப் பார்ப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதியாக நேற்று எட்டாவது நாள் மாலை, கல்வி அமைச்சர் தனது வீட்டிற்குப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் சங்கதினரிடம் கேட்டபோது, “பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இந்நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று மாலை (அக்டோபர் 2) எங்களை அழைத்துப் பேசினார். அப்போது எங்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் பேசிய வகையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன்பும் பலமுறை அமைச்சரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாகப் பேசியுள்ளோம். அப்போதும் அமைச்சரின் பதில் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையின்போது உடனிருக்கும் அதிகாரிகள், அமைச்சர் முன்னிலையில் ஒரு மாதிரியும் அவர்களைத் தனியே சந்திக்கும்போது வேறு மாதிரியும் பேசுகின்றனர். அமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முனைந்தாலும் அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது,  அவர்கள் இந்த அரசுக்கு எதிராகச் செயல்பட எங்களைத் தூண்டி விடுகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டால் ‘உங்கள் கோரிக்கையை நிதித்துறைக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நிதித்துறையைக் கை காட்டுகின்றனர். ஆனால் நிதித்துறையிலிருந்து எங்களுக்குச் சாதகமான எந்த பதிலும் வரவில்லை. பள்ளிக் கல்வித்துறையும் நிதித்துறையும் சேர்ந்து அரசுக்கு எதிராக ஆசிரியர்களைத் திசை திருப்புகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. ‘திமுக அரசு ஆசிரியர்களுக்கானது’ என்ற நிலையை ‘ஆசிரியர்களுக்கு எதிரானது திமுக அரசு’ என்று மாற்ற அதிகாரிகள் முயல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். கல்வித்துறையில் அவுட் சோர்சிங்கில், ஃபெல்லோசிப் நியமனங்களுக்கே அரை லட்சத்திற்கும் அதிகமாக ஊதியம் தரும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமல்  வஞ்சித்து, அவர்களை நிரந்தரமாக்காமல் குழந்தைகளின் வாழ்க்கையையும் சேர்த்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. சம வேலைக்கு சம ஊதியம்  அடுத்து, பகுதி நேர ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கும் அதே டிபிஐ வளாகத்தின் புதிய கட்டிட வாகன நிறுத்துமிடத்தில் நிரந்தர ஆசிரியர்களும் பல ஆயிரக்கணக்கில் இணைந்து கடந்த ஐந்து நாட்களாக நீர் அன்ன ஆகாரம் இன்றிப் போராடி வருவது மற்றொரு வேதனை. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 2009ஆம் ஆண்டு பணியில்

நோட்டாவை நோக்கி ஆசிரியர்கள்?! 

நோட்டாவை நோக்கி ஆசிரியர்கள்?! 

விடியலை நம்பி இருளில் வீழ்ந்தோம் – குமுறும் ஆசிரியர்கள் பொதுவாகவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு எப்போதும் வாரி வழங்குவதாக ஒரு பேச்சு இங்குண்டு. அதிலும் குறிப்பாக, ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளைக் கொட்டிக் கொடுப்பதாகப் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு கருத்து ஆழ வேரூன்றி இருப்பதை மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகவே, அஇஅதிமுக தலைமை உள்ளிட்ட எவருக்கும் ஆசிரியர்கள் மீது எப்போதும் முழுதாக நம்பிக்கை இருப்பதில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் அவர்கள் ஆட்சியிலிருக்கும் காலக்கட்டங்களில் கிள்ளிக் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதன் உச்சகட்டமாக 2003இல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் ஒற்றைக் கையெழுத்தில் ஒருசேரப் பணிநீக்கம் செய்து ஆணை பிறப்பித்த கறுப்பு நாளை யாரும் மறப்பதற்கில்லை. இவர்களால் தமக்கு எந்தவொரு பயனும் இல்லை என்கிற ஆழ்மன வெறுப்புணர்ச்சியே அதற்குரிய காரணமாகக் கருதிக்கொள்ள நிறைய வாய்ப்புண்டு. அரசியல் சார்பற்ற நிலையில், எந்த ஆட்சி குறித்தும் ‘இது நம் ஆட்சி’ என்று கவலை கொள்ளாமல் செயல்படும் பொதுவான ஆசிரியர் இயக்கங்களுக்குள், அடையாள அரசியல் மற்றும் கட்சி சார்பு மனநிலையை விதைத்து, தலைமைப் பதவி ஆசையுடன் ஊசலாடிய நபர்களுக்கு வலைவிரித்து, ஒட்டுமொத்த ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக ஆசிரியர் இயக்கத்தை உடைத்ததில், திமுக மற்றும் இடதுசாரி இயக்கங்களுக்கு நிறையப் பங்குண்டு. தமிழக அளவில், குறிப்பாக திமுகவிற்கு வலுவான இயக்கமாக ஆசிரியர் மன்றம் ஒன்று இருப்பதுபோல் ஆசிரியர்கள் மத்தியில் அஇஅதிமுக சார்புடைய ஓர் இயக்கத்தை வலுவானதாகக் கட்டமைக்க இன்று வரை இயலவில்லை என்பதே உண்மை. அரசு ஊழியர் இயக்கங்கள் பலவும் இன்றும்கூட, தேசிய, மாநிலக் கட்சிகள் சார்புடையவையாக உள்ளது அறியத்தக்கது. அதேவேளையில், ஆசிரியர் இயக்கங்களுக்குள் இந்த நிலை இல்லை. திமுக மற்றும் சிபிஎம் கட்சி சார்ந்த ஒரு சில ஆசிரியர் இயக்கங்களைத் தவிர, பெரும்பாலான  ஆசிரியர் இயக்கங்கள் இப்போது வரை கட்சி சார்பற்று, பொதுவானவையாக, துணிந்து திடமுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இதுபோன்ற கட்சி சார்புடைய இயக்கங்கள், தமிழக அரசியல் வரலாற்றில் பெரிதாக எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. நம்பும்படியாக எதையெதையோ சொல்வார்கள். ஆனால் எதுவும் உண்மையல்ல. எந்த மயிலாவது தாமாக இறகொன்றை இரந்து கேட்பவருக்குக் கொடுத்துவிடுமா என்ன? தன்னலத்திற்காகப் பொதுநலத்தைப் பணயம் வைத்த துரோக வரலாறே ஆசிரியர் போராட்டக் களங்களின் வழிநெடுகிலும் காணப்படுவது வருந்தத்தக்கது. வேதனைக்குரியதும்கூட. இந்த ஆசிரியர் இயக்க உடைப்பு வேலை, இன்றும் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் ஒவ்வொரு நிலையிலும் தொடர்வதைக் காணச் சகிக்கவில்லை. கடந்த காலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்த போராட்டக் களங்கள், அண்மைக்காலமாகப் பிசுபிசுத்து, வெறும் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் போக்கிடமாக ஆகிப்போனதற்கு, தனிமனிதப் பதவி வெறியும் கண்மூடித்தனமாக நம்பும் கட்சி மோகமும் முக்கியக் காரணங்கள் ஆகும். திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக, வாய்விட்டுச் சொல்லவும் முடியாமல், கட்சி அபிமானத்திலிருந்து விலகவும் இயலாமல், தணலில் மாட்டிய பிஞ்சு உயிராக அண்மைக்காலத்தில், கட்சி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் நிலையுள்ளது. இஃது ஆசிரியர்களின் பெரும் துயரம் ஆகும். வெறுப்பு மிகுந்த எதிரியை எதிர்த்து, ‘இழப்பதற்கு இனி எதுவுமில்லை; அடைவதற்கு ஓர் இலக்கு இருக்கிறது’ என்று உயிரைக் கொடுத்துப் போராட முடியும். அன்பிற்கினிய பச்சைத் துரோகியுடன், இனி எவ்வளவு காலத்திற்கு மறத்துப்போன ஆன்மாவுடன் கைகோர்த்து நடைபோடுவது என்று அல்லாடித் தவிக்கும் ஆசிரியர் இயக்கவாதிகள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாக இருப்பது கொடுமையானது. முன்பு போல், இப்போது யாரையும் அவ்வளவு எளிதாக அதிகக் காலம் ஏமாற்ற முடியாது. எளிய அணுகுமுறையையும் தியாக உணர்வையும் கட்சி சார்பில்லாத போராட்டக் குணத்தையும் காலில் போட்டு மிதித்து, பக்கா பகட்டுக் கட்சிக்கார அரசியல்வாதிபோல் ஆகிவிட்ட, வெள்ளையும் சொள்ளையும் பளிச்சிடும் ஆசிரியர் இயக்கத் தலைமைகள் இதை உணருதல் அவசியம். முகத்திற்கு நேராக எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிவற்ற பலரும் தம் முதுகிற்கு பின் காறித் துப்புவது குறித்துச் சிந்திப்பது நல்லது. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட நிலையில் இன்றைய ஆசிரியர்கள் நிலையுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தகால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ஆசிரியர் விரோத வடுக்களுக்குத் தீர்வாக, விடியல் அரசைத் துணையாகக் கொண்டது மறைப்பதற்கில்லை. பழைய ஓய்வூதியம், சம வேலைக்குச் சம ஊதியம், ஊதிய முரண்பாடுகள் களைதல், பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த காலத்தைப் போன்று காலமுறை ஊதியம் வழங்குதல், பழைய ஊக்க ஊதியம், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் விடுவித்தல் முதலானவற்றிற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பி இருந்தவர்களுக்கு, கிடைத்தது என்னவோ பெருத்த ஏமாற்றம் மட்டுமே என்றால் மிகையில்லை. அதாவது, இருண்ட வாழ்விலிருந்து மீள முடியா நரக வாழ்வில் தாமாகவே போய்விழுந்த குற்ற உணர்வில், ஒவ்வொருநாளும் ஒவ்வோர் ஆசிரியரும் உழல்வதாக அறியப்படுகிறது. விளம்பரங்கள் பள்ளிக்குத் தேவைதான். ஆனால், வெற்று விளம்பரங்களால் கல்வி பாழாக்கப்படுவதை எவராலும் ஏற்கவியலாது. கற்பித்தலை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, இணையத்தோடும் பதிவேடுகளோடும் நொடிகள்தோறும் மல்லுக்கட்டும் முழுநேர வேலையில் ஆசிரியர்களின் ஆவி போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அனைவரின் முழுமுதற் கடமையாக உள்ளது. முதன்மையானதும் பயன்மிக்கதும் ஆசிரியர் நலனுக்கு உகந்ததுமான பல்வேறு கோரிக்கைகளும் ஆழ்கடலில் கொண்டுபோய் போடப்பட்டவையாகவே இன்றுவரை காணப்படுகின்றன. ‘ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு; வந்த பிறகு வேறு பேச்சு’ என்பதில் ஆசிரியர்களுக்கு எப்போதும் உடன்பாடில்லை. பழைய கொடிய பிசாசுகளுடன் போராடிக்கொண்டிருக்கும் அப்பாவி ஆசிரியச் சமூகத்தை அதிலிருந்து விடுவிக்காமல், மேலும் புதிய புதிய பேய்களை ஏவிவிட்டு வேடிக்கை பார்ப்பது என்பது கொடுமையானது. ஆம். எண்ணும் எழுத்தும், கிணற்றைத் தேடி அலைந்த கதையாக உயிரை மாய்க்கும் இணைய வழி மதிப்பீட்டு முறைகள் மற்றும் ஆய்வுப் படையெடுப்புகள், பதவி உயர்வுகள் கலந்தாய்வைக் கொள்கை முடிவெடுத்து நடத்துவதில் காலம் தாழ்த்துதல், அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் தற்காலிக, தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அறிவுறுத்துதல், காலை உணவுத் திட்டம் வாயிலாக, மறைமுகமாக ஆசிரியர் பெருமக்களை 12 மணிநேரம் உழைக்க வைக்க, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை ஏவிவிடுதல் முதலான, புத்தம் புதிய பிசாசுகளுடன் போராடி, உடல் மற்றும் உள நலன் கெட்டு, சுயமரியாதை இழந்து, அகால மரணம் அடையும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது இன்றியமையாதது. இத்தகைய சூழலில், இந்தியத் துணைக்கண்ட ஒன்றிய அளவில், திராவிட மாடல் அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்கள் நலத்திட்ட உதவிகளையும் தொலைநோக்குச் சிந்தனைகளையும் முன்னெடுக்கும் முன்முயற்சிகள் அனைத்திலும் உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன்கள் காக்கப்படத் தோள்கொடுப்பது அரசின் கடமையாகும். இன்றைய பாசிச, மதவாத, வெறுப்பு அரசியல் மற்றும் அவற்றின் அனைத்து மக்கள் விரோத மற்றும் குரோதச் செய்கைகளுக்குத் தவழ்ந்து தலையாட்டும், திராணியற்று திராவிடத்தை முழுக்குப் போட்டு, தலைமை குழப்பம் நிலவும் கைப்பாவை அரசியல் மீது பின்தொடரும் நோக்கும் போக்கும் ஆசிரியர்கள் மத்தியில் இருப்பதாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் திமுகவை விட்டாலும் ஒர் அமைதியும் இணக்கமும் குறைந்தபட்ச மகிழ்ச்சியும் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்திட வேறு கதியில்லை என்பதே நடப்பியல் ஆகும். அதேவேளையில், நம்பகமும் நம்பிக்கையும் நிறைந்த விடியல் அரசு கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 100 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதை நினைத்து ஆசிரியர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கத்தான் வேண்டியுள்ளது. தம் நியாயமான எதிர்ப்பை விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட, தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவை நாடிப்போகும் அபாயகரமான சூழலைத் தடுத்து நிறுத்தி, நம்பிக்கை இழந்து மடியும் நிலையிலுள்ள எஞ்சிய கடைசி வேரில் உயிர்நீர் ஊற்ற முன்வருமா முன்மாதிரி அரசு?

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் சிலர், அதே பள்ளி மாணவர் மீதும் அவர் சகோதரி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது சமூகத்தில் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. மாணவர்களிடம் மிக வேகமாகப் பரவிவரும் மது மற்றும் இதர போதைப் பழக்கங்கள், வகுப்பறையிலும் பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் போன்றவற்றைக் குறித்தெல்லாம், இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் பேசுவதும், பின்னர் வழக்கம்போல அடுத்த சம்பவம் நடக்கும்வரை அவற்றையெல்லாம் மறந்துவிட்டு இருப்பதும் நம் சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.  குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்துக்குமான ஒற்றைக் காரணம் என்று கொரோனாவைக் கைகாட்டிக் கடந்து சென்றுவிடுகிறோம்.   மாணவர்களிடம் நிகழ்ந்துவரும் இந்த மாற்றங்களுக்கு என்னவெல்லாம் பின்னணிக் காரணங்களாக இருக்கின்றன? மாணவர்கள் ஏன் அழிவுப் பாதையில் செல்கிறார்கள்? ஆசிரியர்களால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாதா? முடியும். கண்டிப்பாக ஆசிரியர்களால் நல்வழிப்படுத்த முடியும். அவர்களை ஆசிரியர் பணியை மட்டும் செய்யச் சொன்னால், மாணவர்கள் செய்யும் குற்றங்கள் ஓரளவு குறையும். முன்பெல்லாம் ஆசிரியர்களுக்கு, பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது மட்டுமே வேலையாக இருந்தது. அதனால் அவர்களுக்கு மாணவர்களோடு செலவிட நிறைய நேரம் கிடைத்தது. ஆசிரியர்களால் மாணவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்களின் நிறை குறைகளை, பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் தற்போதைய கல்விச்சூழலில், கற்பித்தல் பணி மட்டுமல்லாமல், மேற்கொண்டு பல்வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. அலுவலர்கள் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அதனால் அவர்களுக்குப் பாடப் புத்தகத்தில் இருக்கும் பாடங்களைச் சொல்லித்தரவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி அவர்கள் மாணவர்களோடு உரையாடி, அவர்களின் நிறை குறைகளைச் சரி செய்ய முடியும்? ஒரு புரிதலுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள், பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல், சுமத்தப்படும் கூடுதல் சுமைகள் ஆகியவை இங்கே தரப்பட்டுள்ளன. மன்றங்கள் 1) தமிழ் மன்றம்2) ஆங்கில மன்றம்3) கணித மன்றம்4) அறிவியல் மன்றம்5) தொன்மை மன்றம் (சமூக அறிவியல்)6) திரைப்படம் காட்சிப்படுத்துதல் மன்றம்7) தமிழ் இலக்கிய மன்றம்8) ஆங்கில இலக்கிய மன்றம்9) வினாடி வினா மன்றம்10) வானவில் மன்றம்11) குழந்தைகள் பாதுகாப்பு மன்றம்12) போக்சோ மன்றம்13) போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம்14) சாலைப் பாதுகாப்பு மன்றம்15) தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம்16) சுற்றுச்சூழல் மன்றம்17) நூலக மன்றம்18) முன்னாள் மாணவர்கள் மன்றம்19) JRC20) SCOUT21) NSS22) NCC நலத்திட்டப் பதிவேடுகள் 1) பாடப்புத்தகங்கள்2) பாடக்குறிப்பேடுகள்3) புத்தகப் பை4) காலணிகள்5) அட்லஸ்6) சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்7) இலவசச் சீருடை விவரங்கள்8) Sanitary Napkin for Girl Students Details9) Geometry Box10) இலவச சைக்கிள்11) மடிக்கணினி கூடுதல் வேலைகள் 1) Student Admission – Register2) Student Transfer Certificate – Register3) Potential Dropout Details4) OOSC Details5) X, XII STD – Nominal Roll6) Health & wellbeing ( Students Height, Weight, Eye Power issues, …etc – 48 questions)7) School Timetable8) இல்லம் தேடிக் கல்வி9) நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பிள்ளை10) புதுமைப் பெண்11) 7.5% இட ஒதுக்கீடு12) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், பதிவேடு பராமரித்தல்13) எண்ணும் எழுத்தும்14) மாணவர்களின் பேருந்துப் பயண அட்டை15) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு16) மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல்17) RBSK & IEDSS18) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டப் பதிவேடு கல்வி உதவித்தொகைப் பணிகள் 1) Pre Matric SC/ST Scholarship2) Post Matric SC/ST Scholarship3) Minority Scholarship4) பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை5) சுகாதாரத்துறை பெற்றோரின் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை6) MBC Scholarship இதர பணிகள் 1) SSLC / HSC (+1, +2) Exam Duty2) Online Entry NR for 10th Students3) Supplementary Exam (June, September)4) NMMS (VIII STD) Exam5) NTSE (X STD) Exam6) ஊரகத் திறனாய்வுத் தேர்வு7) ESLC (VIII STD) Exam8) TNPSC Exam9) Election Duty10) BLO Duty11) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு12) Stock Register Maintain Duty13) Treasury / Pay Bill work14) TRI certificate15) Acutance Register for Regular Teachers / Part Time Teachers / Non-Teaching Staff16) Sports competitions17) Over all Competitions18) கலைத் திருவிழா19) CRC & BRC Training / RP Training இன்னும் இதுபோலப் பல வேலைகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்குவதால், அவர்களின் கற்பித்தல் பணி பெருமளவில் பாதிக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனும் பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் தேவையான – அவசியமான செயல்களாக இருந்தாலும், இந்தப் பணிகளுக்கென ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை – பணியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கு பாடத்திட்டங்களை நடத்துவதற்கு நேரம் போதாத காரணத்தால், அவர்களால் நலத்திட்டச் செயல்பாடுகளிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. இதுபோன்ற இரட்டைக்குதிரைச் சவாரி நிலையால் பெரும்பாலான திட்டங்கள் பெயரளவிலேயே இருக்கின்றன. நல்ல திட்டங்கள்கூட ஏட்டளவில் நின்றுவிடுகின்றனவே தவிர, செயல்பாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது. இதற்கிடையில், மாணவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக மாற்றும் சூழலும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏன் உங்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது, ஏன் மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளது போன்ற உயரதிகாரிகளின் கேள்விகளால் ஆசிரியர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. அந்த அழுத்தமானது ஒரு மாணவனை எப்படியாவது 35 மதிப்பெண் எடுக்கவைத்து, தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்பட வைக்கிறதே தவிர, அந்த மாணவன் பாடத்தைப் புரிந்துகொண்டாரா? என்பதில் கவனம் செலுத்த முடிவதில்லை. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதை ஆசிரியர்கள் முழுமனதோடு ஏற்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிக்கக்கூட ஆசிரியர்களுக்குத் தற்போது உரிமை இல்லை என்பதே உண்மை. கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்களே தாக்குவது, பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்குவது, மாணவர்கள் உடனுக்குடன் உணர்வுவயப்பட்டு விபரீத முடிவுகளை எடுப்பதால் நேரிடும் பேரிழப்பு மற்றும் அதன் பின்விளைவுகள் என்று, ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லாத சூழலும் சேர்ந்தே நிலவுகிறது. இத்தனை அழுத்தங்களுக்கு இடையில்தான் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி என்பது வெறும் பாடங்களை மட்டும் கற்பித்து, மாணவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாக உருவாக்கும் செயல்பாடு அல்ல. நல்லவை, அல்லவை, சமூக அக்கறை, தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் துணிவு உள்ளிட்ட ஏராளமான வாழ்வியல் கூறுகளை இளைய தலைமுறைக்குக் கடத்தவேண்டிய இடங்களே பள்ளிக்கூடங்கள். ஆனால், தற்கால பொருளாதாரமய வாழ்க்கைச்சூழலில், மாணவர்களை வெறுமனே மதிப்பெண் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வேலையை, தனியார் பள்ளிகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் நமது கல்வித்துறை செயல்படுத்தி வருவது வேதனைக்குரியது. தெருக்கள்தோறும் திறந்து வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள், மதுப் பழக்கத்துக்கு ஆளான பெற்றோர் மற்றும் சுற்றத்தார், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி, மாஸ் ஹீரோ மன நிலையை விதைக்கும் திரைப்படங்கள், உள்ளங்கையில் தவழும் சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் என மாணவர்களின் கவனம் மற்றும் நடத்தைச் சிதைவுகளுக்கு ஏராளமான காரணிகள் இருந்தாலும் அவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வெறும் ஆவண எழுத்தாளர்களாகவும் பதிவேடு பாராமரிப்பாளர்களாகவும் மட்டுமே ஆசிரியர்களை மாற்றி வைத்துள்ளது இன்றைய கல்வித்துறை. கொரோனா இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமனம் தேவை என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. வழக்கம்போலவே அந்தக் கோரிக்கை அரசின் கவனம் பெறாமல் போக, ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கேட்டுக்கேட்டு ஓய்ந்துபோனதால் தற்போது அவர்களும் அந்தக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டனர். முன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருந்தது. அந்த வகுப்பில் மாணவர்களுக்கு நீதிக் கருத்துகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. தற்போது அந்த வகுப்புகள் இல்லை. திருக்குறளில் இல்லாத நீதி போதனைகள் இல்லை. ஆனால் தற்போதைய கல்விமுறை ஒவ்வொரு திருக்குறளுக்கும் முழுமையான விளக்கத்தைக்கூடச் சொல்லித்தருவதில்லை. ஒரு குறளுக்கு இரண்டு வரிகளில் விளக்கம் கொடுக்கப்பதோடு முடிந்துவிடுகிறது. அந்த விளக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மாணவர்களுக்குப் பொருள் தெரிவதில்லை. பெரும்பாலான ஆசிரியர்களும் தங்களின் வேலைப்பளுவால் விரிவான விளக்கத்தைச் சொல்லித் தருவதில்லை. மொத்தத்தில் இளைய தலைமுறையோடு உரையாட பெற்றோர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. ஆசிரியர்களுக்கும் நேரம் தரப்படுவதில்லை. இதனால், சமூகத்திலும் இணையத்திலும் தாங்கள் காணும் நிகழ்வுகளின் தாக்கத்தில் எதிர்காலத் தூண்கள் துருப்பிடித்துச் சிதைந்துகொண்டுள்ளன.   இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டுவந்து சீர்திருத்தவில்லை என்றால் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

பள்ளி திறந்து சில நாட்கள் ஆகின்றன. ஜூன் முதல் தேதி பள்ளி திறந்தாலே பாடத்திட்டங்களை முழுவதுமாக முடித்துவிட முடியாது என்கிற சூழலில் 11 நாட்கள் தாமதமாவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் வெயிலின் தாக்கம்  காரணமாக இந்தத் தாமதம் இருந்தாலும் களத்தில் வேறுவகையான பிரச்சனைகளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டின் பள்ளிகளில் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத மாணவர்கள் எல்லா இடங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும்  இருப்பார்கள். தனியார் பள்ளிகளில் இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போதும் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், மொழி ஆசிரியர் என முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களைக் கையாளும்போதும் இப்பிரச்சினைகள் களையப்படலாம். அப்படியான சூழல் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலோ கடந்த பல பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதத் தெரியாதவர்கள், வாசிக்கத் தெரியாதவர்கள், அடிப்படைக் கணக்குத் திறன்கள் இல்லாதவர்கள் என ஆறாம் வகுப்பிலிருந்து  பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் காணலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளிலிருந்து அல்லது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து  வெளிவரக்கூடிய மாணவர்கள் எழுத்துகளை வாசிக்கவும் எழுதவும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பர். ஆனால் சமீப காலங்களில் இதுபோன்று இல்லாமல், மிக மோசமான கற்றல் அடைவுடன், அடிப்படை எழுத்துகள் அறியாமலும் வாசிப்பின்றியும்தான் மாணவர்கள் வெளிவருகின்றனர். கணக்குப் பாடத்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வாய்ப்பாடு தெரியாமலும்தான் இருக்கின்றனர். இவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல; தனியார் பள்ளிகளிலிருந்தும் வருகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பில் அல்லது ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில்  சேர வரும் மாணவர்களை நாம் தனியார் பள்ளிகளைப்போல நுழைவுத்தேர்வு வைத்துப் புறக்கணிக்கவோ அல்லது இது உங்களுக்கான பள்ளி இல்லை எனத் திருப்பி அனுப்பவோ முடியாது; அனுப்பவும் கூடாது. சட்டப்படியும் அது ஏற்புடையதல்ல. ஏனெனில் அரசுப் பள்ளிகள் எல்லாருக்குமான பள்ளிகள். மேற்குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளுடன் அரசுப் பள்ளிகளை வந்தடையும் மாணவர்கள் எண்ணிக்கை  ஒவ்வொரு வருடமும்  ஏறத்தாழ 50 சதவீதத்தைத் தாண்டிவிடுகிறது. வகுப்பறையில் பெரும்பான்மைக் குழந்தைகள் மேற்கூறிய பிரச்சனைகளுடன்தான் இருக்கின்றனர். இவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனம் எடுத்துதான் இந்தச் சிக்கலைச் சரி செய்ய முயற்சி செய்கிறார்கள். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களில் வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பது நடக்கும். அல்லது வகுப்பாசிரியர் கவனித்து கூடுதல் நேரம் எடுத்து எழுத்துகளைக் கற்பித்தல், பயிற்சி தருதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இவற்றைச் செயல்படுத்துகிறதா என்பது குறித்துத் தனியாக ஆய்வு செய்துதான் அறிந்துகொள்ள முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, பல மாவட்டங்களில் அல்லது அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் இப்பிரச்சனையை முன்வைத்து , வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்கின்றனர்.  பெரும்பாலும்  இந்த  ஆணை வாய்மொழி உத்தரவவாகத்தான் இருக்கும். இது வருடத்திற்கு வருடம் கூடுதல் அழுத்தங்களுடன் நடந்தேறி வருகிறது. இதற்காகத் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று EMIS வரை எடுத்துச் சென்றனர். உண்மையாகவே கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மேம்படுகின்றனரோ இல்லையோ, பதிவேடு தயாரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.  இந்தக் கல்வி ஆண்டில், சில தினங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், ‘இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, அடிப்படைக் கற்றலை மேம்படுத்தும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத, அடிப்படைக் கணிதக் கணக்குகள் மற்றும் வாய்ப்பாடு தெரியாத, கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனியாக ஒரு பிரிவை (section) உருவாக்கி, பள்ளி திறந்த நாளிலிருந்து (12/06/2023) முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கென கால அட்டவணை‌ (Time Table) தனியாகப் பின்பற்றி, மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்தி, மீண்டும் அதே வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் அவர்களை சேர்த்துக் கல்வி பயில அனுமதிக்குமாறு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்  6 முதல் 8 வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான முயற்சியைப் போர்க்கால அடிப்படையில் எடுத்துள்ளது  வரவேற்கத்தக்கது. ஆனால் இதைத் தொடக்கப் பள்ளிகளிலேயே நடைமுறைப்படுத்தி, எழுத்துகளைக் கற்றுக் கொடுத்தபிறகு  உயர்நிலை வகுப்புகளுக்கு ஏன் அனுப்பக்கூடாது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம். தொடக்க வகுப்புகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்ன நடக்கிறது? எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கற்றல் அடைவுகளுக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, ‘தொடக்கக்கல்வி முடித்து வரும் குழந்தைகள் ஏன் அடிப்படைத் திறன்களைப் பெறாமல் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்கின்றனர்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களைக் கல்வி அலுவலர்கள் கேள்வி கேட்காமல், அதே குழந்தை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும்போது, அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர் என்ற புலம்பல் ஆசிரியர்களிடம் இருப்பதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், அரசியல் சட்டத்தின்படி எல்லாருக்குமான சமமான கல்வி கிடைக்கிறதா என்று சிந்திக்கத் தோன்றும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதாலும் வெறும் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களை நாம் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்குவதில்லை என்றும் அறிந்துகொள்ள முடியும். அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களை அவர்கள் எப்போது படிப்பார்கள்? மேற்சொன்ன சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலத் தனி  வகுப்பு என்பது  மாணவர்களுக்கு மிக முக்கியமான காலம். பள்ளி திறந்து முதல் மூன்று மாதங்களில்தான்  முதல் பருவப் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். முதல் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த மாணவர்கள் எப்போது கற்றுக்கொள்வார்கள்? இப்படியாக ஒரு வகுப்பில் படிக்கவேண்டிய பாடங்களைத் தவறவிட்டு, தவறவிட்டு பத்தாம் வகுப்பு வரும்போது வெறும் 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இதில் எங்கே நாம் அனைவருக்குமான கல்வியை, சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குகிறோம்? ‘ஒரு மாணவனுக்கு வெறும் எழுத்துக் கூட்டிப் படிக்க, எழுத மட்டுமே கற்றுத் தருவதற்கு, எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் தற்காலிக ஆசிரியர்களைக் குறைந்த ஊதியத்திற்கு அரசு நியமனம் செய்துகொள்கிறதோ?!’ என்ற எண்ணம் தோன்றுகிறது. நுண்திறன்களைக் கற்றுக்கொள்ள நம் மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது? ஆகவேதான் தொழிற்கல்வி பற்றியும் திறன் மேம்பாடு என்று சொல்லி, வேலைக்காக ஆட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே பள்ளிகளைத் தயார்படுத்தி வருகிறது அரசு. நவீன அறிவியலையும் கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படித்து ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகாமல் போவதற்கு தொடக்க வகுப்புகளில் சரியாகக் கற்றுத்தராதது மிக முக்கியமான காரணம். கல்வி அலுவலர்கள் என்ன செய்கின்றனர்? தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அடிப்படை வாசிப்பை மாணவர்களிடம் உருவாக்கி எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியதை ஏன் கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதில்லை? எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வியும் எட்டாம் வகுப்புவரை செயல்பட்டது. இத்தனை இருந்தும் ஏன் அனைத்துக் குழந்தைகளையும் எழுத்துகளை வாசிக்கவைக்கக்கூடச் செய்ய முடியவில்லை?   தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறுதலாகி வந்துசேரும் 60% குழந்தைகள் அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத நிலையில் இருக்கும் போக்கும் நிலவுகிறதே, அந்தப் பள்ளிகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? BRT எனப்படும் கல்வி அலுவலர்கள், வருடந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்கின்றனரே! ஏன் முழுமையான வாசிப்புத் திறனைக்  கொண்டுவர இயலவில்லை? உளவியல் சிக்கல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைத் தனியாகப் பிரித்து உட்கார வைக்கும்போது மனதளவில் தாழ்வு மனப்பான்மை உருவாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.  குழந்தைகள் உரிமை, சமத்துவம் எதுவும் இங்கே காக்கப்படுவதில்லை. குழந்தைகளிடம் கற்றல் திறனில் வேறுபாடு இருக்கலாமே தவிர, எழுத்துகளை, அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், குற்றத்தைக் குழந்தைகள் மீதே போடும் போக்கு வரவேற்கத்தக்கதல்ல. அவர்களை எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்து, எட்டாம் வகுப்பு வரை கடைசி பெஞ்ச் மாணவர்களாக மாற்றி, சமூகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கைப் பொதுச்சமூகம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், சிறார்களுக்காக இயங்குவோர் என அனைவரும் இவை பற்றியெல்லாம் சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. குழந்தைகள் உரிமையைத் தட்டிப் பறிக்கும் போக்கு இங்கே நிலவுகிறது. அடித்தட்டு மக்கள், முதல் தலைமுறைக் குழந்தைகள் ஆகியோருக்கு தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை எழுத்து, வாசிப்பு, கணக்குத் திறன்களைக் கொடுக்காத சூழலில், அவர்களை அவையில் முந்திய இருக்கச் செய்வது எப்படி? சிறார்களின் மன, உளவியலைக் கணிக்கிறோமா, காக்கிறோமா என்று ஆய்வு செய்யுங்கள். தரமான கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் எனில், அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இங்குள்ளோருக்கு வேண்டும். அப்போதுதான்  ஐந்தாம் வகுப்பிலேயே சரளமாக எழுதப் படிக்க, அடிப்படைக்  கணக்குகளைச் செய்ய மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பவேண்டும் என்ற கருத்து வலுப்பெறும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் பெரிய பாடப் புத்தகங்களை வாசித்து உள்வாங்கி, தனக்கான வாழ்க்கையை நோக்கி  நகரும் சூழல் உருவாகும். ஆகவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எழுத்துகள் கற்றுத்தரும் வேலையை மட்டும் ஆசிரியர்கள் செய்யாமல், அவரவர் பாடங்களைக் கற்பிக்கும் பணியை உருவாக்க வேண்டும். முக்கியக் காரணமும் உரிய தீர்வும் என்ன? அரசு தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை, ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் ஏராளமாக இருக்கும் சூழலில், ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் மட்டுமே கவனித்துக்கொள்ளும் சூழல் இருப்பதால், அவர்களால் ஒரே நேரத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் எவ்வாறு கற்றல் பணியை மேற்கொள்ள இயலும்? எனவே ஒரு வகுப்புக்கான பாடங்களை எடுக்கும்போது, மற்ற நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் – கற்றல் நிகழ்வதில்லை. ஐந்தில் ஒரு பங்கு கற்பித்தல் மட்டுமே நிகழ்வதால், இறுதியாக அவர்கள் ஐந்து வகுப்புகளை முடித்து வெளியே வரும்போது ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புக்கான மாணவர்களின்

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, 2021இல் திமுக அரசு கொடுத்த தேர்தல் அறிக்கையை உற்று கவனிப்போமானால், கல்வித்துறையைப் பொறுத்தவரை முதல் வாக்குறுதியாகக் காணக் கிடைப்பது  அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்ததாக, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சமூக நீதி மற்றும் மொழிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை முற்றிலும் நிராகரிக்கிறது என்பது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் அதீத நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றதென்னவோ உண்மைதான். ஆனால் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர என்ன மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தெரியவில்லை; தெளிவுமில்லை. கல்வித்துறையைப் பொறுத்தவரை அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தாலும்  நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா எனில் அது ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது. ஏனெனில் கல்விக்காகப் பல நல்ல திட்டங்களை இந்த அரசு  கொண்டு வந்ததாகக் கூறினாலும் அந்தத் திட்டங்கள் பலவும் ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை மையப்படுத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தற்போதைய தமிழ்நாடு அரசு செய்வதென்ன?  கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் அதே தேசிய கல்விக் கொள்கையின் உட்கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதோ, இந்தக் கல்வியாண்டின் முதல் பயிற்சி. ஆசிரியர்கள் அனைவருக்கும் CPD பயிற்சி, வரும் சனிக்கிழமை (10/06/2023) தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கல்வியாண்டுக்கு முன்புவரை, 1-10 வகுப்புகளுக்கான 5 பாடம் கற்பிக்கும்  இடைநிலை ஆசிரியர்கள் (SGT) மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (B.T) மட்டும் இந்தப் பயிற்சிகள் இருக்கும். கடந்த கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்களுக்கும் (PG Teachers) பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி,  பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காலமுறை ஊதியம் (Regular Pay) வாங்கும் அனைவருக்கும் இந்தப் பயிற்சி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர என்று குறிப்பிட்டுள்ளனர்.  அதாவது விளையாட்டு ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், பாட்டு ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே ஊதியம் சார்ந்து ஏதோ மாற்றம் வரப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2019இலிருந்து, புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு கூறாக தமிழ்நாடு கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று நாம் கரடியாகக் கத்துகிறோம். ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தினரில் பெரும்பகுதி அதைக் கண்டுகொள்ளவில்லை. பள்ளிக் கல்வி ஆணையர் நியமனம்இல்லம் தேடிக் கல்விஎண்ணும் எழுத்தும்இணையவழி மதிப்பீட்டு முறைகள்கல்வியில் தொழில்நுட்பம்EMIS developmentநம்ம ஸ்கூல் பவுண்டேஷன்தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்நான் முதல்வன் திட்டம்ஃபெல்லோஷிப் நியமனங்கள்பள்ளிகளில் தன்னார்வலர்களை முழுவதும் நுழைத்தல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கல்வி இப்படியாக NEP-2020இன் எல்லாப் பகுதிகளும் மிக அழகாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு பதிலாக மீண்டும் இயக்குநர் நியமனம் மட்டும் நடந்துள்ளது. மேற்சொன்னவற்றின் நீட்சியாக, கல்விக்கொள்கையில் ஆசிரியர்கள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தரவுகளின்படி அவர்களுக்குத் தரப்படும் பயிற்சிகளுக்கு CPD என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை குறுவள மையப் பயிற்சி (CRC- Cluster Resource Centre) என்று அழைக்கப்பட்டு வந்தது, தற்போது CPD ( Continuous Professional Development) தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடு என்று மாற்றப்பட்டுள்ளது. கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி தேவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது ஊக்க ஊதியம், பதவி உயர்வு என அடிப்படை வாழ்வாதாரத்தில் கை வைப்பதாக மாறப்போகிறது என்பதைத்தான் நாம் இங்கு கேள்விக்கு உட்படுத்துகிறோம். NEP வரைவு 2019இன் படி CPD என்பது, ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வருடமும் 50 மணி நேரம் திறன் மேம்பாடு பற்றிய பாடங்களை நேரடி வகுப்பாகவோ அல்லது இணைய வழியாகவோ கட்டாயம் கற்க வேண்டும். இந்தப் பாடங்களில் தொடர்ச்சியான மதிப்பீடு இருக்கும். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு 5 வகையான தர மதிப்பீடு (RANK) வழங்கப்படும். Early Teacher (without tenure), Early Teacher (with tenure), Proficient Teacher, Expert Teacher and Master Teacher ஆகிய ஐந்து பிரிவுகளாக ஆசிரியர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். இதன் விளக்கத்தை அறிந்துகொள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை இங்கு தருகிறோம். வரைவு தேசிய கல்விக் கொள்கையில், (பகுதி I) பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் (5) ஆசிரியர்கள் என்ற உபதலைப்பில் (5.4) பணி மேலாண்மை என்ற உட்பிரிவு உள்ளது. அதில், 5.4.3இன் படி,   தொழில் சார் திறமைகளுக்கு ஏற்ப பதவி மற்றும் ஊதிய உயர்வு, தங்களது நிலை சார்ந்து இல்லாமல் தகுதி உள்ள ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகுதி IIIஇல் முக்கிய கவனம் பகுதியில், (எண் 19.3) ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முன் தயாரிப்பு மற்றும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாடு என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை (NEP 2020) நடைமுறைப்படுத்துவது வெற்றிபெற வேண்டுமானால் ஆசிரியர்களின் CPDயை நோக்கிய மிகப்பெரிய முயற்சி தேவைப்படும். இவை 2019இல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளவை. அடுத்து, தேசிய கல்விக் கொள்கை இறுதிப்படுத்தப்பட்ட பிறகு வெளியிட்ட கொள்கைக் குறிப்பில் பின்வரும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 5.15 தொடர்ச்சியான தொழில் சார் மேம்பாடு (CPD- Continuous Professional Development) என்ற பகுதியில், மிகச் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் மற்றும் ஊக்கப்படுத்தப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்படும் இவற்றை வழங்க செயல்திறன் அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 5.17. மிகச் சிறப்பான பணிகளைச் செய்யும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். 5.20. ஆசிரியர்களுக்கான தொழில்சார் தர நிலைகள் என்ற தலைப்பின் கீழ், ஆசிரியர்களுக்கான தேசிய தொழில் முறை தர நிலைகளின் (NPST- National Professional Standards for Teachers ) ஒரு பொதுவான வழிகாட்டல் 2022இல் உருவாக்கப்பட்டு, தேசிய கல்விக் கவுன்சில் அதன் மறுசீரமைக்கப்பட்ட புதிய வடிவத்தில் பொதுக் கல்விக் கவுன்சிலின் (GCE- General Education Council) கீழ் ஒரு தொழில் முறை தர நிர்ணய அமைப்பாக (PSSB- Professional Standard Setting Body)  உருவாக்கப்படும். NCERT மற்றும் SCERTகள், பிராந்தியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்களை உருவாக்கும் மற்றும் வளர்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற அமைப்புகள், தொழிற்கல்வியில் நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் ஆலோசனை மேடையில் வெவ்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் பங்கு பற்றிய எதிர்பார்ப்புகளையும் அந்த நிலைக்குத் தேவையான திறன்களையும் தர நிலைகள் உள்ளடக்கும். ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தர நிர்ணய அமைப்பானது ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைக்கும். இது மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசிரியர் தொழில் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கலாம். இதில் பதவிக்காலம், தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் பிற அங்கீகாரங்கள் அடங்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவை பதவிக்காலம் மற்றும் மூப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட மாட்டாது ஆனால் தர நிர்ணய அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்சொன்ன அனைத்தும்தான் தற்போது நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. எனில் தமிழக அரசு NEP 2020ஐ நிராகரிக்கிறது என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகவே நமக்கு உணர்த்திவிடலாம். புதிய தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கிறோம் என்று அறிவித்து விடலாம். கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசின் மேற்சொன்ன நிலைப்பாடு குறித்துத் தெரியவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அறியமுடியவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இருவரும் வெளிப்படையாகக் கூறிய நல்ல விஷயங்களில் இவையும் அடங்குமா எனத் தெரியவில்லை. 2022இல் இதற்கான NPST உருவாக்கப்பட்டுள்ளது. வரைவறிக்கையிலேயே (2019) இதுபற்றி முன்னறிவிப்பு செய்துவிட்டது ஒன்றிய அரசு. எனில் நடவடிக்கை எடுக்காமல், விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது  தமிழ்நாட்டு ஆசிரியர் இனமே. நாம் நமது பணிக்காலத்தை முடித்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்களாக ஆசிரியர்கள் இருப்பதும் எதிர்காலச் சந்ததியினர் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக நியமனம் ஆகவேண்டும் என்ற வேட்கையும் இல்லாதவர்களாக, இயங்காத அமைப்புகளாக சங்கங்கள் மாறியுள்ளது பெரும் சாபக்கேடு.  அரசியல் கட்சிகளுக்கு அடிவருடும் வேலை செய்யும் நபர்களாகவும் சில சங்கவாதிகள் மாறியுள்ளது வெட்கக்கேடு.  ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் அரசுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துள்ளனரா எனவும் சாமானிய ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில்  சங்க நிர்வாகிகள் 2019இல் வந்த தேசிய கல்விக் கொள்கை வரைவை வாசித்தார்களா அல்லது அதன்மீது விவாதம் எதுவும் நடத்தினார்களா என்ற கேள்வி எழுகிறது. சங்கம் என்பது ஆசிரியர்கள் சமூகத்தின் மிக முக்கியமான  ஆயுதம். ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் வேண்டிய முக்கியக் கடமை சங்கங்களுக்கு உண்டு. இன்றைய ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி எதிர்கால ஆசிரியர்களுக்கும் நம்பிக்கை தரும் அமைப்புகளாக அவை இருக்க வேண்டும். ஆனால் நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் வெற்று அமைப்புகளாகவே அவை இருக்கின்றன. ஆசிரியர்களோ எதற்காகவும் மறுப்போ எதிர்ப்புக்குரலோ பதிவு செய்ய முன்வராத மிக நல்ல மனிதர்கள். மாணவர்களிடம் எப்படி கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்களோ அதேபோல, அவர்களும் அதிகார அடுக்குகளுக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் நற்குணம் பெற்றவர்கள் அவர்கள்.  புதிய தேசிய கல்விக் கொள்கைதான் நமது மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையை, மாண்புமிகு கல்வி அமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியோ அல்லது அறிக்கை வெளியிட்டோ சுற்றறிக்கை மூலமாகவோ வெளிப்படையாகவே அறிவித்துவிடலாம்.  ஆசிரியர்கள் தங்களைத் தேர்வுகளுக்கும் துறையின் கட்டளைகளுக்கும் தயார் செய்ய ஆரம்பிக்கட்டும். ஐந்து வகையான தர மதிப்பீடு (Rank) அவர்களுக்கு வழங்கப்படட்டும். அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, இன்னபிற அங்கீகாரங்கள் வழங்கப்படட்டும். CPD என்ன செய்யும்? பணி மூப்பின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படை என்றால், அதை நிர்ணயிப்பவர்கள் யார்? இங்கு தகுதி என்பது எது? ஆசிரியர்கள் பெறும் மாநில, தேசிய விருதுகள் போல இதிலும் ஊழல் நிலவுவதா? அதோடு இணைய வழியில் தேர்வு என்பது எத்தனை தூரம்

சங்கங்களைக் கலைத்துவிடுங்கள் – ஆசிரியர்கள் குமுறல்

சங்கங்களைக் கலைத்துவிடுங்கள் – ஆசிரியர்கள் குமுறல்

உள்ளாட்சித் தேர்தல் வருவதை ஒட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இந்தச் சூழலில், உடல் நலம் குன்றி மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளது. உடல் நலம் குன்றி இருப்பவர்களை தேர்தல் பணியில் ஈடுபடக் கூறி கட்டாயப் படுத்தப்படுவதாக ஆசிரியர்கள் சிலர் வருந்தினார்கள். இந்தச் சிக்கல் குறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்த சில செய்திகள் அதிர்ச்சி அளிப்பாவையாக இருந்தன. அண்மையில் விபத்துக்குள்ளாகி, அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர் மருத்துவச் சான்று பெற்று பள்ளியில் வழங்கி மருத்துவ விடுப்பில் இருக்கிறார். தொலைபேசியில் அவரை அழைத்து, “உங்களுக்கு தேர்தல் பணி ஆணை வந்துள்ளது. என்னைக் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்ளும்படி தலைமை ஆசிரியர் கூறுகிறார். உங்களிடம் கேட்ட பிறகு கையெழுத்திடலாம் என்று அழைத்தேன்” என உடன் பணியாற்றும் ஆசிரியர் சொல்ல, மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியரோ, எனது உடல் நிலை தேர்தல் பணி செய்யும் நிலையில் இல்லை.  ஆகவே நீங்கள் கையெழுத்திட வேண்டாம்” எனக் கூறி விட்டார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அலுவலக ஊழியர் வழியாக அலைபேசி அழைப்பு. “மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சான்று அளிக்க வேண்டும். எப்போது வந்து தேர்தல் ஆணையைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?” எனக் கேட்கிறார்கள். தலைமை ஆசிரியரை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “நான் மருத்துவமனையில் இருக்கிறேன். ஏற்கனவே தங்களிடம் மருத்துவ விடுப்பு தந்துள்ளேன். நீங்கள்தான் இதை மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்” என்கிறார் அந்த ஆசிரியர். ஆனால், தலைமை ஆசிரியர் உடனடியாக மறுத்து, “இதில் நானோ, மாவட்டக் கல்வி அலுவலரோ எதுவும் செய்வதற்கில்லை. வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆணையை ரத்து செய்து கொள்ளுங்கள்” என்கிறார்.  அடுத்து மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு சூழலை விளக்க, அவரும்  அதே பதிலைக் கூறுகிறார். “இந்த ஆணைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்துள்ளது. நீங்களே சென்று உங்கள் மருத்துவச் சான்றை இணைத்து, கடிதம் எழுதித் தெரிவித்து ஆணையை ரத்து செய்து கொள்ள வேண்டும்” என்கிறார். மீண்டும் மறுநாள் காலை பள்ளியிலிருந்து விடாமல் அலைபேசி அழைப்பு. “இன்று மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சீட்டை ஒப்படைத்தாக வேண்டும், நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வற்புறுத்த, அந்த ஆசிரியரும் வேறு வழியின்றி, “ஏற்கனவே இருக்கும் உடல் உபாதைகளுடன் உளவியல் ரீதியான சிக்கலையும் இவர்கள் உருவாக்குகிறார்களே” என வருந்தியதுடன், மருத்துவமனையிலிருந்து பள்ளிக்குச் சென்று அன்றைய தேதியில் கையெழுத்திட்டு ஆணையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் திரும்பி மருத்துவமனை சென்று சிகிச்சையைத் தொடருகிறார்.  ஒப்புகைச் சீட்டில் அவர் கையெழுத்திட்ட தேதி ஏற்கனவே மருத்துவ விடுப்பில் இருக்கும் தேதி என்ற முரண்பாடு குறித்துக்கூட எண்ணாமல், தேர்தல் ஆணையைப் பெற வற்புறுத்தித் தினித்துள்ளார்கள் மாவட்டக் கல்வி அலுவலரும் பள்ளித் தலைமை ஆசிரியரும். “ஒப்புகைச்சீட்டு மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களின் தேர்தல் பணி ஆணையை நீக்குவதற்கும் பள்ளித் தலைமை ஆசிரியரும் மாவட்டக் கல்வி அலுவலரும்தானே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அந்த ஆசிரியர். குழந்தைப் பேறுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு மருத்துவ விடுப்பில் இருக்கும் ஒரு பெண் ஆசிரியர், இவ்வாறான தொடர் வற்புறுத்தல் காரணமாக அவரது கணவரை பள்ளிக்கு அனுப்பி ஆணையைப் பெற்றுச் சென்றிருக்கிறார்.  தேர்தல் பணிக்கான ஆணைகள்  அனுப்புவதற்கு முன்பு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விபரங்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வழியாக கேட்டுப் பெறுவார்கள். அப்படி ஒரு பள்ளியில், பெண் ஆசிரியர் உடல் நலமின்மையால் மருத்துவ விடுப்பில் இருந்தார். பள்ளிக்கு வந்தோ அல்லது வேறு யாரையாவது அனுப்பியோ அந்தப் படிவத்தை நிரப்பித் தர வேண்டும் என்று அந்த ஆசிரியரை வரவழைத்து படிவத்தை வற்புறுத்தி வாங்கியிருக்கிறார் ஒரு தலைமை ஆசிரியர். கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக உடலெங்கும் மயிர் நீக்கிக் கொண்டிருக்கும்போது தலைமை ஆசிரியரிடமிருந்து போன் வருகிறது. “ஆர்டரை வாங்குங்கள், இல்லையெனில் உங்கள் கணவரை கலெக்டர் அலுவலகம் போகச்சொல்லுங்கள்” என்கிறார் தலைமை ஆசிரியர். ‘ஆபரேசன் தியேட்டர் உள்ளே போகும்வரை போனில் பேசிக்கொண்டே போனேன்’ என்கிறார் ஒரு பெண் ஆசிரியர்.  “எங்கள் பள்ளியின் ஆங்கில ஆசிரியரின் உண்மையான நிலைமை இது. ஆசிரியர் தவறிக் கீழே  விழுந்து தண்டுவடத்தில் பிரச்சினையின் காரணமாக ஆபரேசன் செய்து ஒரு வாரம்தான் ஆகிறது. மருத்துவர் ஆலோசனையின்படி அவர் அதிக நேரம் உட்காரவே கூடாது. ஆனால், கலெக்டர் உத்தரவு, தற்போது எதுவும் செய்ய முடியாது. பயிற்சி நாளில் கடிதம் எழுதி கேன்சல் செய்து விடுங்கள் எனக் கல்வித்துறையில் கூறிவிட்டனர்” என்று உடன் பணிபுரியும் ஆசிரியருக்காக வருந்துகிறார் மற்றொரு ஆசிரியர். இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு விதமான சோகக் கதைகள். தலைமை ஆசிரியர்களும், உயர் அதிகாரிகள் பலரும் எங்களைப் போல ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள், சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்கள்தானே? ஆனால், உயர் பொறுப்புக்கு வந்ததும் இவ்வாறு உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் அடிப்படை மனித நேயம்கூட இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் எனக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள், பல நிலைகளில் பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார்கள், துன்பத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு அரசு ஊழியர் அவருடைய பிரச்சனைகளை, தனது உடனடி உயர் அலுவலரிடம் (Immediate Superior) தான் அதற்கான சான்றுகளுடன் முறையிட முடியும். தனக்குக் கீழே பணியாற்றும் ஊழியரின் உடல் மற்றும் மன நலனில் சிறிதும் அக்கறையின்றி, எதற்கெடுத்தாலும் “இது தேர்தல் அவசரம், இதற்கு நான் பொறுப்பல்ல” என்று தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்  தலைமைப் பொறுப்புள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளால் கீழ் மட்ட ஊழியர்கள் மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாவது நிகழ்கிறது.  ஊழியரது உடல்நலப் பிரச்சனையை உறுதி செய்து அரசு மருத்துவர்கள் சான்றளித்தாலும்கூட, அதையும் நம்பாமல் அல்லது தங்கள் பொறுப்பை உணராமல் விலகிச் செல்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மிகச் சில ஆசிரியர்களே இவ்வாறான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்யக்கூடிய நிலையில் கூடவா அதிகாரிகள் இல்லை? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். வாக்குச் சாவடி அலுவலராகவும் பொறுப்பு வகிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தற்போது தேர்தல் பணிக்கான ஆணையையும் பெற்றுள்ளனர்.  ஏற்கனவே 6-8 வகுப்புப் பாடங்களை இணைய வழியிலும் 9 , 10 வகுப்புகளுக்கு நேரடியாகவும் கற்பித்து வரும் ஆசிரியர்கள், தற்போது புதியதாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள கருடா  அலைபேசி செயலியையும் பதிவிறக்கம் செய்து, களத்தில் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் BLO எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள், எல்லோருக்கும் ஸ்மார்ட் போன் அவசியமாக இருப்பதில்லை. ஆனாலும் அந்தப் பணிக்காகவே வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. போன் பழுதானாலோ அல்லது பழைய மாடல் போன் வைத்திருப்பவர்கள் ஸ்டோரேஜ் பிரச்சினை காரணமாகவோ, பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தாலும் உடனடியாக புதிய ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். சில நேரங்களில் வழக்கமான டேட்டா பேக் தீர்ந்துவிட்டால், கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே இணைய வழிக் கல்விக்காகவும் சொந்தப் பயன்பாட்டுக்கான போனைப் பயன்படுத்தி வருகிறோம். Activities, assignments என ஏராளமான இடவசதி போனில் தேவைப்படுகிறது. தேர்தல் பணிக்காகவும் அதே போன் பயன்படுத்தும்போது சில நேரங்களில் முற்றாக செயலிழந்துவிடுகிறது.   எனவே, இதைக் கருத்தில்கொண்டு தேர்தல் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான கருவிகளை வழங்கினால், வேலையும் எளிதாகும்; தேர்தல் தொடர்பான தகவல்களும் பாதுகாப்பாகவும் அழிந்து விடாமலும் இருக்கும் என்ற கருத்தையும் ஒரு சில ஆசிரியர்கள் முன் வைக்கிறார்கள். “தலைமை ஆசிரியர்களும் தட்டிக் கழிக்கின்றனர், கல்வி அலுவலர்களும் பொறுப்பிலிருந்து நழுவுகின்றனர். இந்தச் சூழலில் ஆசிரியர்கள் பக்கம் நிற்க வேண்டிய ஆசிரியர் சங்கங்கள் என்ன செய்கின்றன? என்று கேட்டோம். “ஆசிரியர் நலன் சார்ந்து சங்கங்கள் செயல்பட்ட காலம் போய் பல ஆண்டுகள் ஆயிற்று” என ஒரே குரலில் பதிலளிக்கிறார்கள் ஆசிரியர்கள். “ஏற்கனவே பள்ளிகள், மாணவர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையையும் ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுப்பதில்லை. ஆசிரியர்கள் பிரச்சினைகளைக் கூட கண்டுகொள்ளாத இந்தச் சங்கங்களால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஆசிரியர் சங்கங்கள் இருப்பதை விட அவற்றைக் கலைத்து விடலாம்” என்கின்றனர். தேர்வு நிலை (Selection grade) வாங்க 2 1/2 ஆண்டு காத்திருப்பு, 10, 12 -ஆம் வகுப்புகளது  சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை விண்ணப்பித்து இரண்டரை  ஆண்டுகள்  காத்திருப்பு என்பதோடு இன்னும் பலப்பல சிரமங்கள் என்று புலம்புகின்றனர் ஆசிரியர்கள். அலுவலகப் பணியான, பணிப் பதிவேடுகளை  (SR) scan & upload செய்யும் பணியும் தற்போது ஆசிரியர்கள் தலையில் விழுந்துள்ளது என்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் சூழலில், வாக்காளர் கணக்கெடுப்புப் பணி உள்ளிட்ட, தொடர்ச்சியான தேர்தல் ஆணையப் பணிகளுக்காக தனியே ஆட்களைத் தேர்வு செய்து அவர்களைப் பயிற்றுவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் புதிய வேலை வாய்ப்பும் உருவாகும். தேர்தல் காலத்தில் கூடுதலாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் இதர துறையிலிருந்து பணியமர்த்திக் கொள்ளலாம். முக்கியமாக, உண்மையாகவே உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி தேர்தல் பணியாற்ற இயலாதவர்களுக்கு இப்பணியிலிருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடைமுறைகளை இந்த அரசு முன்னெடுக்க வேண்டியது அவசியம். மாறுமா ஆசிரியர்களின் அவல நிலை? படங்கள்: இணையத்திலிருந்து