திருப்பூர் எனும் திருப்புமுனை -11
தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஆய்வுமுறை நெருக்கடிகள் கடந்த அத்தியாயத்தில் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆய்வுகள் மற்றும் சர்வதேசச் சான்றிதழ்கள் குறித்துப் பார்த்தோம். பின்னலாடைகளுக்கான தர ஆய்வுகள் மற்றும் அதன் சான்றிதழ்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். பின்னலாடைத் தயாரிப்பு என்பது பல உற்பத்திப் படிநிலைகளைக் கடந்து வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இறக்குமதியாளர்கள் இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்களை வழங்கும்போதே அதற்குரிய தரக்கட்டுப்பாடுகளை உறுதி செய்வர். இதில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமே தங்களின் சொந்தத் தரக் கட்டுப்பட்டுப் பிரிவைக்கொண்டு தர ஆய்வு செய்து அனுப்புவது ஒரு வகை. பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும் தரக் கட்டுப்பாட்டுச் சேவை வாயிலாக, ஏற்றுமதி நிறுவனங்களில் தயாரான சரக்குகளை, ஏற்றுமதிக்கு முன்பாக, இறக்குமதி நிறுவனம் எந்தத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தை நியமிக்கிறதோ அந்த நிறுவன ஊழியர்கள், ஏற்றுமதிக்குத் தயாராகப் பெட்டிகளில் பேக்கிங் செய்து வைக்கப்பட்ட ஆடைகளை, குறிப்பிட்ட வரையறைகொண்ட கணக்கின் அடிப்படையில், பெட்டிகளைத் திறந்து ஆடைகளைத் தர ஆய்வு செய்து, அந்த ஆடைகள் இறக்குமதி நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்தில், தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, அந்த அறிக்கையை இறக்குமதி நிறுவனத்திற்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின் ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பர். முதல் வழிமுறையில் இறக்குமதி நிறுவனம் சரக்குகளைப் பெற்ற பின், அவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதை ஏற்றுமதி நிறுவனத்திற்குத் தெரிவித்து, உரிய நிவாரணங்களை பெறுவர். இதில், ஏற்றுமதி நிறுவனம் வர்த்தக வாய்ப்புகளை இழப்பதும் பெரும் பொருள் இழப்பைச் சந்திப்பதும் நிகழ்வது உண்டு. இரண்டாவது முறையில், இறக்குமதி செய்யப்பட்டபின் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது. அப்படியே எழுந்தாலும் அதற்குரிய பொறுப்பு ஆய்வு செய்த நிறுவனத்திற்கு இருந்தாலும், இறுதியில் பொருள் இழப்பு என்னவோ ஏற்றுமதி நிறுவனத்திற்கே. தயார் செய்த ஆடைகளில் அப்படி என்ன தர ஆய்வுகள் நடைபெறும் என இந்தத் தொழிலைச் சாராதவர்களுக்குக் கேள்வி எழலாம். தர ஆய்வு என்பது இரு வகைப்படும். முதல் வகை, ஆடைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பன்னாட்டு நிறுவனத்திடம் துணியின் தன்மைகள், அதன் நெகிழும் தன்மை, சாயத்தின் தரம், குறிப்பிட்ட அளவுக்கு ஆடையைத் துவைத்த பின் ஏற்படும் மாற்றங்கள், உபயோகித்த ரசாயனங்களில் உள்ள நச்சுத்தன்மை, சர்வதேசக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளனவா என்பன உள்ளிட்ட பல்வேறு அளவீடுகள் சோதிக்கப்பட்டு, சோதனை முடிவுகள் இறக்குமதி நிறுவனங்களுக்கு அறிக்கையாக அனுப்பப்படும். இரண்டாம் வகையில், ஆர்டர்களை வழங்கும் இறக்குமதி நிறுவனம் ஆடைகளின் வடிவமைப்பு, அளவுகள், அதில் உள்ள வண்ணங்கள், பிரிண்டிங் மற்றும் எம்பிராய்டரி இருந்தால் அதன் வடிவம் மற்றும் அதன் வண்ணங்கள் மற்றும் அதன் தரம் உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாக கொடுத்துவிடுவர். ஆடை உருவாக்கத் துணியின் வகை, அதன் தன்மை, ஆடைகளில் தைக்கப்படும் லேபிள்கள், பிராண்ட் டேக், சில்லறை விலை உள்ள டேக், ஆடையைப் பேக் செய்ய பயன்படுத்தும் பாலிபேக் உள்ளிட்டவற்றைப் பற்றிய விவரங்களும் அளிக்கப்பட்டுவிடும். இந்த விவரங்கள் அனைத்தும், அந்தக் குறிப்பிட்ட ஆர்டருக்கு உகந்த மாதிரியுடன் தர ஆய்வினைச் செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கும் முன் அதன் மாதிரியை (ப்ரொடக்சன் சாம்பிள்) இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றபின் உற்பத்தியைத் தொடங்கும். ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு ஆடையை இறக்குமதி நிறுவனம், ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பும். ஆய்வு நிறுவனத்தினர் இதனைக் கொண்டு, தயாராக இருக்கும் ஆடைகளை ஆய்வு செய்து, அவற்றில் உள்ள குறைகளைப் பட்டியலிட்டு இறக்குமதி நிறுவனத்திற்கு அனுப்புவர். ஏற்றக்கொள்ளக்கூடிய அளவுகளில் குறைகள் இருப்பின் அதனை ஏற்றுக்கொண்டு தயாரான ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பர். குறைகள் அதிகம் இருப்பின் அவற்றைச் சரிசெய்து மறு ஆய்வுக்கு உட்படுத்தும்படி அறிவுறுத்தப்படுவர். ஏற்றுமதி நிறுவனமும் மீண்டும் ஆடைகளைச் செப்பனிட்டு மறு ஆய்விற்கு உட்படுத்தி ஏற்றுமதி செய்வர். இதில் ஆய்வு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து, இறக்குமதி நிறுவனங்களின் அலுவலகமும் இதற்கென்று தரக்கட்டுப்பாட்டுப் பிரிவைக் கொண்டிருக்கும். அந்தப் பிரிவு, மேற்சொன்ன இரண்டாம் வகை ஆய்வுடன், துணி முதற்கொண்டு உற்பத்தியின் ஒவ்வொரு நிலையையும் கட்டுப்படுத்தும். இதன்வாயிலாக, உற்பத்தியாகும் ஆடைகளின் தரத்தை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முதல் தர ஆய்வினை அதற்குரிய பன்னாட்டு நிறுவனங்களின் பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே செய்வர். இறக்குமதி நிறுவனங்களோ, அவர்களின் கிளை அலுவலகங்களோ இந்த வசதிகளை வைத்துக்கொள்வதில்லை; முற்றிலும் மற்ற நிறுவனங்களையே சார்ந்து இருக்கும். இதில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு என்ன சிக்கல்? முதலில் சொன்ன ஆய்வுகளை மேற்கொள்ள, இங்குள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களிடத்தில் வேண்டிய வசதிகளைக் கொண்ட ஆய்வுக்கூடத்தை அமைந்துள்ளதால், ஒவ்வொரு உற்பத்தி நிலையிலும் சரியான சோதனைகளை மேற்கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் சோதனைகளை எளிதாகக் கடந்து ஒப்புதல் பெறுவர். சிறு நிறுவனங்களிடம் இதுபோன்ற கட்டமைப்பு வசதி இல்லை என்பதால், உற்பத்தி நிலையில் எங்கு தவறு நேர்ந்தாலும் சோதனையில் தோல்வியடைந்தால் ஆர்டர்கள் ரத்தாகும் நிலை அளவுகக்குச் செல்லும் அல்லது தள்ளுபடியுடன் ஆர்டர்களை அனுப்ப நேரிடும். இதனால் அந்தச் சிறு நிறுவனத்தின் நிதிச் சுமை அதிகரித்து, ஒரு கட்டத்தில் நிறுவனத்தை நடத்த மேலும் கடன்களை வாங்கிப் பயணிக்கவேண்டிய நிலை உருவாகும். ஒருமுறை தவறு நேர்ந்ந்தாலும் வர்த்தக வாய்ப்புகள் சிறு நிறுவனங்களை விட்டு, வேறு நிறுவனங்களுக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், வாங்கிய கடன் சுமை அதிகரிக்க, ஒருகட்டத்தில் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படும். இதில் தவறு யாருடையது? சிறு நிறுவனமோ பெரிய நிறுவனமோ, ஒரு ஆர்டரை ஒப்புக்கொண்டு வாங்கிவிட்டால், நிச்சயமாக அதற்கு நியாயம் செய்யவேண்டும். ஒவ்வொரு உற்பத்தி நிலையிலும் ஆடையின் தரம் மற்றும் தன்மைகள் அனைத்தும் இறக்குமதியாளர் குறிப்பிட்ட வரையறைக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். வர்த்தகப் போட்டியில் விலையைக் குறைத்து ஆர்டர்களை எடுப்பதன் காரணமாகத் தரத்தில் உடன்பாடு செய்துகொள்ளும் செயல்களால் ஆய்வுகளில் தோல்வியுற்று, அந்தக் குறிப்பிட்ட நிறுவனம் பாதிப்புக்கு உள்ளாவது மட்டுமின்றி, அதே இறக்குமதியாளர்களிடம் வர்த்தகம் செய்யும் மற்ற ஏற்றுமதி நிறுவனங்களிடத்திலும் அடுத்தடுத்து அந்த நிறுவனம் ஆடைகளுக்கான விலையைக் குறைத்துக் கேட்கும். இந்தச் சூழலில் ஏற்றுமதியாளர்களால் உடனடியாக வேறு இறக்குமதி நிறுவனங்களுக்குச் சென்று ஆர்டர்களை எளிதாகப் பெற்றுவிட முடியாது. ஒரு ஆர்டரைப் பெருவதற்குக் குறைந்தது 4 முதல் 6 மாதங்கள் ஆகும். இந்தச் சூழலில் லாபத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டு வர்த்தகம் செய்யவேண்டிய நிலைக்கு, நல்ல நிலையில் செயல்படும் நிறுவனமும் தள்ளப்படும். இதனால் லாப விகிதங்கள் குறைந்து, அடுத்து வேறொரு இறக்குமதி நிறுவனம் சரியான உற்பத்தி விலைக்கு ஆர்டர்கள் வழங்கும்வரை இந்தச் சிரமத்தை ஏற்றுக்கொண்டே பிற நிறுவனங்களும் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்படும். தரக் கட்டுப்பாடுகள், ஆய்வுகள், மற்றும் அதன் சிக்கல்கள் குறித்துப் பார்த்தோம். இந்தத் தரக்கட்டுப்பாடுகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்களின் போக்கு குறித்துத் தனி அத்தியாயம் ஒன்றை அடுத்து வரும் வாரங்களில் எழுதுகிறேன். ஏற்றுமதி நிறுவனங்களின் போக்கினைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம். மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம்.