தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி பல ஆண்டுகளாக நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையையும் நிறுத்தியது.   இந்தக் கல்லூரியில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் கல்லூரியை முழுமையாக அபகரித்துக்கொள்ள, கல்லூரியின் செயலர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் அவர்மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று சுவடு தளத்தில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். https://naarkaram.com/save-dbj/ அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அக்கல்லூரியின் நிர்வாகக் குழுவை முற்றிலுமாக நீக்கிவிட்டு, முறைகேடுகளைக் களையவும் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நடத்தவும் ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976, பிரிவு  14 A’இன் படி, அக்கல்லூரியை நிர்வகிப்பதற்காக ‘சந்தோஷ் டி சுரானா’ என்பவரை சிறப்பு அலுவலராக (Special Officer) நியமித்தது (அரசாணை எண்:153, தேதி:12.08.2022). தமிழக அரசு நியமனம் செய்த சிறப்பு அலுவலருக்கு எதிராக, அக்கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது. ஆனால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கம்போல் எந்த உத்தரவையும் மதிக்காத கல்லூரி நிர்வாகம், உயர்நீதிமன்ற உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு, கடந்த ஆண்டு (2022-23) மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. மாறாக, நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக, கல்லூரி நிர்வாகம் நடத்தும் சுயநிதிப் பாடப்பிரிவான பி.காம்-இல்  மட்டும் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்துள்ளது. இவ்வாறான தாராள மனப்பான்மையோடும் கல்வி வள்ளலாகவும் இருக்கும் இக்கல்லூரி நிர்வாகத்தினர், கடந்த 2016-17ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு  நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்யாமல் (ரூபாய் 795) சுயநிதிக் கட்டணமாக ரூபாய் 42,000 வரை வசூல் செய்தது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர். நடப்புக் கல்வி ஆண்டில் (2023-24) அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தாமல் கடந்த ஆண்டைப் போலவே சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். கடந்த கல்வியாண்டில் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்த நிர்வாகம், நடப்புக் கல்வி ஆண்டில் அந்தக் கட்டணத்தையும் 7,210 ரூபாயாக உயர்த்தியுள்ளதோடு, பொருளாதாரத்தில்  பின்தங்கியோருக்கு மட்டும் சேர்க்கை நடைபெறும் எனவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகியுள்ளது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 17க்குப் பிறகு, ஏறத்தாழ 10 மாதங்களாக இந்தக் கல்லூரி மீதான வழக்கானது நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வரவில்லை. தொடர்ந்து உயர்கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, வழக்கை விரைவுபடுத்தக் கோரியும் தமிழக அரசு இவ்வழக்கின்மீது அக்கறை காட்டவில்லை. மேலும் தமிழக அரசின் அரசு வழக்கறிஞர்களைச் சந்தித்து முறையிட்டும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இக்கல்லூரி நிர்வாகம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை மறுவிசாரணைக்கு வரவிடாமல்  தடுக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவேளை இக்கல்லூரியைப் பின்பற்றி, தமிழகத்தில் உள்ள 164 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை நிறுத்தினால், தமிழக அரசின் சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் மாணவர்களின் உயர்கல்வியும் கேள்விக்குறியாகும். நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்தாமல், தமிழக அரசின் உத்தரவையும் பொருட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இக்கல்லூரி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டிய உயர்கல்வியைப் பறித்துக்கொண்டுள்ளது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக (2019-20, 2020-21, 2021-22, 2022-23, 2023-24) இக்கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த கட்டணத்தில் உயர்கல்வி பெறவேண்டிய மாணவர்கள், கல்வி கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்கல்லூரியின் முறைகேடுகளைத் தட்டி கேட்டதற்காக, இக்கல்லூரியால்  பழிவாங்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 11 பேராசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பேராசிரியர்களின் பணிநீக்கம் செல்லாது என்றும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டும் கல்லூரி நிர்வாகம் அதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் முடக்கி வைத்துள்ளது. இக்கல்லூரியை மீட்டெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என்று பலரும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் முத்தரசன்,  மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் இக்கல்லூரியை மீட்டெடுக்க வேண்டும் என்று தங்களின் அறிக்கைகள் மூலம் தமிழக அரசை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொண்ட பிறகு, கல்லூரியை முழுமையாக அபகரிக்க நடக்கும் இத்தகைய முயற்சிகளை அரசு கால தாமதமின்றி முறியடிக்க வேண்டும். மேலும் இனி எந்தவொரு அரசு உதவி பெறும் கல்லூரியையும் மூடுவதற்கோ அல்லது சுயநிதிக் கல்லூரியாக மாற்றுவதற்கோ அனுமதிக்காத வகையில், ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976’இல் உரிய சட்டத் திருத்தங்களைத் தமிழக அரசு செய்து, ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதுவே சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான திராவிட மாடல் அரசின் கடமையாகும்.

பேராசிரியரைப் பெயர் சொல்லி அழையுங்கள்

பேராசிரியரைப் பெயர் சொல்லி அழையுங்கள்

ஐரோப்பாவில் உள்ள பல்கலையில் வருகை தரு ஆராய்ச்சியாளராகச் சேர்ந்த புதிதில், பேராசிரியரை வழக்கம்போல் Sir என்று கூப்பிடத் தொடங்கினேன். முதல்முறை ‘அவ்வாறு அழைக்க வேண்டாம்’ என்று கூறிய அவர், இரண்டாம் முறையும் தவறி அழைத்தபோது சார் என்று சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி, அவர் பெயரைச் சொல்லி அழைக்கும்படி கூறினார். ஆங்கிலத்தில் பெயர் சொல்லி அழைத்தலே மரியாதைக்கு உரியதுதான் என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. நம்மவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது அவர்களை Sir என்று அழைக்க ஆரம்பித்து, பிற்பாடு அக்கலாச்சாரம் அனைத்து மட்டத்திலும் வேரூன்றி விட்டது. சார் என்று தங்களை அழைத்தலை எந்த ஐரோப்பிய, அமெரிக்க அல்லது வளர்ந்த நாடுகளின் பல்கலைப் பேராசிரியர்களும்/ஆராய்ச்சியாளர்களும் சற்றும் விரும்புவதில்லை. உளவியல் ரீதியாகவே தாங்கள் இவ்வாறு அழைக்கப்படுவதை அவர்கள் வெறுக்கிறார்கள். தங்கள் அறைக்கு எந்த மாணவர் வந்தாலும் சரிசமமாக அமர வைத்தே பேசுகிறார்கள் /விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் எந்த இடத்திலும் அடிமைத்தனம் இருக்காது. சர்வதேசப் பல்கலையில் பி.எச்டி / முதுமுனைவர் ஆய்வுப் பணியிடங்களுக்குப் பேராசிரியர்களைத் தொடர்பு கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். உயர்கல்வி மற்றும் அயலகப் பணிகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு இந்தத் தகவல்கள் பயன்படும் என்று நம்புகிறேன். மின்னஞ்சலின் துவக்கத்தில் ‘Dear Sir/Madam, Respected Sir/Madam’ என்று துவக்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.. எனவே, இ-மெயிலில் Sir என்று தொடர்ந்து பயன்படுத்துவது நமக்கான வாய்ப்பை நாமே கெடுத்துக்கொள்வது போன்றதாகும். Dear Prof. XXX அல்லது Dear Dr. XXX என்று பெயருடன் இ-மெயில் ஆரம்பித்தல் நலம். இதைப்போலவே இ-மெயிலின் இறுதியில் Thanking you sir என்பதையும் தவிர்க்க வேண்டும். மெயிலின் எந்த ஒரு இடத்திலும் Sir என்பது கட்டாயம் இருத்தல் கூடாது. சுருக்கமான சுய அறிமுகத்துடன் எத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளோம்/பெற விண்ணப்பித்துள்ளோம் என்பதைக் கூறி விண்ணப்பிக்கும் பதவிக்கு/படிப்பிற்கு அப்பேராசிரியரின் ஆய்வுக் குழுவைத் தேர்ந்தேடுத்த காரணத்தையும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். அதற்கு முன்னர் அக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் தகுதி நமக்கு ஓரளவேனும் இருக்கிறதா என்ற சுய பரிசோதனை செய்வது சாலச் சிறந்தது. அக்குழுவினர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஈடுபடும் ஆய்வுத்துறை பிரிவுகள், பெற்றுள்ள நிதியுதவி, பேராசிரியரின் அனுபவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தொடர்பு கொள்ள வேண்டும். அப்பேராசிரியரின் சிறப்புரைக் காணொளி ஏதேனும் Youtube போன்ற ஊடகங்களில் இருந்தால் அவற்றைக் கண்டும் அவரது ஆராய்ச்சி ஈடுபாட்டை, மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை அறியலாம். அப்பேராசிரியரின் குழு வெளியிட்டுள்ள ஓரிரு சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சொல்லி அவற்றின் உள்ள ஆய்வு முடிவுகள் நம்முடைய ஆராய்ச்சி ஆர்வத்துடன் ஒத்துப்போவதைச் சுருக்கமாக குறிப்பிடலாம்.. நம்முடைய தனித்திறன்களையும் (skills) குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையிலான சுருக்கமான ஆராய்ச்சி சுய விவர அறிக்கையை (CV) கட்டாயம் இ-மெயிலில் இணைக்க வேண்டும். அதில் பக்கம் பக்கமாகக் கதை எழுதாமல், முக்கிய ஆய்வுக் கட்டுரை வெளியீடுகள், வாங்கிய விருதுகள், பங்கேற்ற கருத்தரங்குகள் (conference) மற்றும் செமினார் நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு கல்வித் தகுதி போன்ற பொதுவான பிற தகவல்களை இணைத்தால் போதுமானது. இதற்கான மாதிரி CV-க்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பி.எச்.டி-க்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் தன்னுடைய உத்தேச ஆராய்ச்சித் திட்டம் (Proposed research work) குறித்த ஒரு பக்க அறிக்கையை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். தாங்கள் முதுகலை படிக்கும்போது ஏதேனும் ஆய்வுக் கட்டுரை (Research article) /காப்புரிமை (Patent) எழுதி வெளியிட்டிருந்தால் அதன் Soft copy-யை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். இது அவர்களின் தேர்வை இன்னமும் உறுதிப்படுத்தும். இ-மெயிலின் Subject மற்றும் எழுத்துப் பிழைகள், ஆங்கில இலக்கணக் குறைபாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, பிழையின்றி அனுப்ப வேண்டும். இது மிக முக்கியமானது. ஒரே இ-மெயிலை காப்பி செய்து பல பேராசிரியர்கள்/ ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும். இது தனிப்பட்ட ஆய்வு/ வேலை வாய்ப்பு என்பதால் ஒவ்வொரு பேராசிரியர்/ ஆராய்ச்சியாளருக்கு அனுப்பும்போதும் அதீத கவனம் கொண்டு நேரம் செலவழித்து அனுப்புவதில் தயக்கம் காட்டுதல் கூடாது. பி.எச்.டி-க்கு விண்ணப்பிக்கையில் ஒரு பேராசிரியர் /ஆய்வாளர் தன் ஆய்வகத்தில் காலிப் பணியிடம் இல்லை பதில் என்று சொன்னாலும் அவரது இ-மெயில் முகவரியை தவறாது சேமித்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் முது முனைவர் (Post-doctoral) ஆராய்ச்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கையில் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள அது வசதியாக இருக்கும். அனைத்துப் பேராசிரியர்களும் நாம் அனுப்பும் இ-மெயிலுக்கு பதில் கூறுவது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலும் சர்வதேசப் பேராசிரியர்கள் மாணவர்களை Skype போன்ற ஊடகங்கள் மூலமே தொடர்பு கொள்வார்கள் என்பதால், நேர்முகத் தேர்விற்காக அவர்கள் தொடர்பு கொள்ளும் முன்னர் யாரேனும் நண்பருடன் இணைந்து மாதிரி Skype உரையாடலை மேற்கொள்வது பதற்றமடைதலைக் குறைக்கும். தட்டுங்கள் திறக்கப்படும், தன்னம்பிக்கையோடு தட்டுங்கள் வாய்ப்புகள் தானாகவே வழி திறக்கும். ஆனந்தகுமார் சூசைமாணிக்கம், நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி அறிவியலாளர், மாட்ரிட், ஸ்பெயின்.

அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

கல்லூரி வரலாறு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் அரை நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டுவரும் கல்லூரி ஒன்றை அபகரிக்க தனிநபர் ஒருவர் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தாமல், அரசு உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகம், அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை முழுமையாக அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் நிரம்பியுள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் 1972ஆம் ஆண்டில் அரசு உதவி பெறும் கல்லூரியாகத் தொடங்கப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது டி. பி. ஜெயின் கல்லூரி. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் உள்ள ஒரே அரசு உதவி பெறும் கல்லூரி இது மட்டுமே. இதனால் மிகக் குறைந்த கட்டணத்தில் ஏராளமானோர் உயர்கல்வி பெறமுடிந்தது. மேலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால் சமூக நீதியும் பாதுகாக்கப்பட்டது. இந்தச் சூழலில் இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்தாததால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் சமூக நீதியும் கேள்விக்குறியாகியுள்ளது.   மேலும் பல ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத எந்த ஒரு பணிக்கும் கல்லூரி நிர்வாகம் உரியவர்களை நியமிக்காமல், சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றுபவர்களைக் கொண்டே கல்லூரியை நடத்தி வந்திருக்கிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுத்தியதுடன் அதிலும் சமூக நீதியைப் பலி கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். பல ஆண்டுகளாகவே காலிப்பணியிடங்களில் உரியவர்களை நியமிக்காமல் இருந்ததே, அவர்கள் திட்டமிட்டே கல்லூரியை அபகரிப்பதற்கான சான்று ஆகும். அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை மூடும் முயற்சி இந்நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மற்றும் பணியிடங்களைத் திரும்ப ஒப்படைப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் கல்லூரியின் செயலர் ஹரீஷ் L மேத்தா கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தின்மீது இயக்குனர் முடிவெடுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். கல்லூரி செயலர் கொடுத்த விண்ணப்பம், முறைப்படி இல்லாததால் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976-ன் படி முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்படியும் அது குறித்து மூன்று மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகம் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அந்த அடிப்படையில் மீண்டும் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த கல்லூரிக் கல்வி இயக்குனர், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவை பாதிக்கப்படும் என்பதாலும், அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை திரும்ப ஒப்படைப்பதற்காக சொல்லப்பட்ட காரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெற்ற நிதி மற்றும் அந்த நிதி செலவு செய்யப்பட்டதற்கான சான்றுகள் ஆகியவை இல்லாததாலும், 2015-16 கல்வி ஆண்டு முதல் அரசு வழங்கிய நிதியுதவி தொடர்பான தணிக்கை நடைபெறாததாலும், கல்லூரி மீதான பஞ்சமி நிலம் அபகரிப்பு, மாணவர் சேர்க்கை முறைகேடுகள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் இருப்பதாலும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளைத் திரும்ப ஒப்படைக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனாலும், கல்லூரி நிர்வாகம் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தாமல், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கு  அரசிடம் ஆணை பெற்றுவிட்டதாக பொய்யான தகவல்களைப் பரப்பபுவதோடு சுயநிதிப் பிரிவில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. முன்னறிவிப்பில்லாத பணிநீக்கங்கள் இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடும் நடவடிக்கைக்கும் துணைபோக மறுத்த பத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால அவகாசம் எதுவும் கொடுக்காமலும் காரணங்கள் எதுவும் தெரிவிக்காமலும்  கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது. அதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தங்கள் தரப்பு நியாயத்தையும் கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனருக்கு மனுவாக அளித்ததன் அடிப்படையில், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால் அந்த ஆணையையும் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் செயலர் ஆகியோர் மதிக்காமல், மூன்று ஆண்டுகளாக வேலை மற்றும்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களைப் பணியில் சேர்க்க மறுத்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டங்கள்   மேலும், கல்லூரியில் நடைபெற்றுவரும் நிதி மற்றும் மாணவர் சேர்க்கை முறைகேடுகள், அரசு உதவி பெறும் கல்லூரியை சுயநிதிக் கல்லூரியாக மாற்றும் முயற்சி, உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் மீதான அடக்குமுறை இவற்றை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்வேறு மாணவர் அமைப்புகள், ஜெயின் கல்லூரி முன்னாள் இந்நாள் மாணவர்கள், தமிழ்நாடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக SC/ST ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஏராளமான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். பட்டியல் இனத்தவர் மீதான தாக்குதல் இந்தக் கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்மீது நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேசிய பட்டியல் வகுப்பினர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணையும் நடந்துவருகிறது. கூடுதல் கட்டணக் கொள்ளை அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு முதல், அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக மாணவர்களிடம் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ஒரு வங்கிக் கணக்கிலும் கூடுதல் கட்டணத்தை வேறொரு வங்கிக்கணக்கிலும் பெற்றுள்ள தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் யு.ஜி.சி. வழங்கிய நிதியிலும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதும் புகார்களாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் நிலுவையில் உள்ளன.   கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின்  அனுமதி பெறாமலே நிர்வாக அறக்கட்டளையின் பெயரை மாற்றியது, தற்காலிக முதல்வரைக் கொண்டே ஐந்து ஆண்டுக்கும் மேலாகக் கல்லூரி நடத்துவது, அதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியரைத் துணை முதல்வராக நியமித்தது, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை நிறுத்திவிட்டு சுயநிதிப் பிரிவுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் அதன் செயலர் ஹரீஷ் மேத்தா மீதும் குவிகின்றன. யார் இந்த ஹரீஷ் மேத்தா? கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் கல்லூரியை நிர்வகிக்கும் அறக்கட்டளை உறுப்பினராகவும் கல்லூரி செயலராகவும் இருந்த C.L.மேத்தா என்பவரின் மகனான ஹரீஷ் மேத்தா, தந்தையைத் தொடர்ந்து அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் கல்லூரியின் செயலராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.   பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் காரணமாக இந்திய உணவுக் கழகம், சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றில் உறுப்பினர்  அல்லது தலைவர் பதவிகளையும்  அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் சிண்டிகேட் உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் பெற்றுள்ளார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்லூரிப் பணியாளர்கள். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத இவர், தமிழ்நாடு சமச்சீர் கல்வி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் புகாரில் சிபிஐ விசாரணையின் கீழ் கல்லூரியின் செயலர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த இவர்மீது சி.பி.ஐ.இல் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் அலுவலகச் செயலாளர் அளித்த ஊழல் புகார் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இவர், தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களை வைத்துக்கொண்டு, அவர்களோடு நெருங்கிய நட்பு இருப்பதாகச் சொல்லி கல்லூரியில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. உடனடித் தேவை அரசின் தலையீடு தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி, கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் செயலர் மீதான குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை முடக்க நினைக்கும் நிர்வாகத்திடம் இருந்து கல்லூரியை மீட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்துவதைப்போல டி.பி.ஜெயின் கல்லூரியையும் அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும். மேலும், உடனடியாக இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுடைய குழந்தைகளின் மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு சமூக நீதியை நிலைநாட்டும் முடிவாகவும் இருக்கும். சட்டத்திருத்தம் தேவை ஒருவேளை, இந்தக் கல்லூரி அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டால், அதையே பின்பற்றி மற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது என்பதால், இனி வரும் காலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அந்த இடங்களைத் திரும்ப ஒப்படைக்கவோ அக்கல்லூரிகளை முழுநேர சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றவோ இயலாதவாறு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.