மார்க்சின் தோழன்

ஏங்கெல்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை: அக்ரி பரத்வாஜ் பிரெடரிக் ஏங்கல்ஸ் மார்க்சிய மூலவர்களில் ஒருவர். மார்க்ஸ் – ஏங்கல்ஸ் என்ற இரட்டையர்கள் இல்லாது மார்க்சியம் இல்லை. ஒரு திட்டவட்டமான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் இருவரும் பணியாற்றினர். அந்த இரு மேதைகளும் வாழ்நாள் தோழர்களாய் இணைந்து நவீன கம்யூனிச இயக்கத்தின் முதல் சிற்பிகளாய்/மூலவர்களாய் விளங்கினர். மார்க்சைவிட இளம் வயதிலேயே, தனது 24ஆம் வயதிலேயே இன்றும் போற்றப்படும் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ என்ற நூலை எழுதியதில் தொடங்கி, தனது இறுதிக்காலத்தில் மார்க்ஸின் மூலதனத்தை வெளியிடுவது வரை ஏங்கல்ஸ் மார்க்சிய ஞானரதத்திற்கு அளித்திட்ட செல்வங்கள் ஏராளம். ஏங்கல்ஸின் முழுப் படைப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் மார்க்சியத்தைப் புரிந்துகொள்வது என்பது இயலாத ஒன்று. மார்க்ஸ் – ஏங்கல்ஸ் கூட்டு மேதமைகளுக்குள் நுழைந்து பயணப்படாத எவரும் ஒரு மார்க்சியவாதியாக இருக்கமுடியாது. இவர்களது நட்பைப்பற்றி லெனின் கூறும்போது, மார்க்ஸ் – ஏங்கல்ஸ் இருவரிடையே நிலவிய உறவு, முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக்கூடியது என்கிறார். ஏங்கெல்ஸ் என்றும் மார்க்ஸின் தோழன் என்றே அறியப்படுகிறார். பிரெடரிக் ஏங்கல்ஸ் 1820ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி பார்மன் என்ற இடத்தில் பிறந்தார். உப்பர்டால் என்றழைக்கப்பட்ட பார்மன், ஜெர்மனியில் உள்ள ஒரு சிற்றூர். பணக்கார தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த இவர், உழைப்பாளிகளின் ஏழ்மையைக் கண்டு மனம் வருந்தினார். மேலும் இப்பகுதியில் நிலவிய மத ஆதிக்கத்தை – அதன் போலித்தனத்தை வெறுத்தார். இளமையிலேயே அவர் மத எதிர்ப்பாளராக விளங்கினார். இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளை, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியத்தை ஆர்வத்தோடு கற்றவர். ஜெர்மனியை ஆண்ட நான்காம் பிரெடரிக் வில்லியம் என்ற சர்வாதிகாரி, கருத்துச் சுதந்திரத்தை அறவே இல்லாமல் இருக்கச் செய்தார். இதன் காரணமாக மதம் சார்ந்த கருத்துக்கள், மூடநம்பிக்கைகள் வலுவாகச் செயல்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் மதத்தையும் அரசனையும் எதிர்த்து ஏங்கல்ஸ் எழுதத் தொடங்கினார். அவரது தொடக்கக் காலத்தில் அவற்றைக் கவிதை வடிவில் எழுத ஆரம்பித்தார். அந்தக் கவிதைகளில் விடுதலைபற்றிய கருத்துக்களிருந்தன. 1839ஆம் ஆண்டு ‘உப்பர்டால் கடிதங்கள்’ என்ற தலைப்பில் கடிதங்களை எழுதினார். இவை அவர் மதத்தின் பிடியிலிருந்து விலகுவதைக் காட்டுகின்றன. டேவிட் ஸ்ட்ராஸ் எழுதிய ஏசுவின் வாழ்க்கை என்ற நூல், விவிலியம் தெய்வீகத் தன்மை வாய்ந்தது அல்ல என்றும் அது ஆரம்பக்காலக் கிறிஸ்துவக் குழுக்களில் தோன்றிய சில தொல்கதைகளின் தொகுப்பு என்றும் குறிப்பிட்டார். இந்நூல்தான் ஏங்கல்ஸின் மதம் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றியது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தத்துவஞானியான ஹெகலின் உலகம், பொருள் ஆகிய எல்லாவற்றிற்கும் எண்ணம் அல்லது கருத்துதான் முக்கியம் என்பதிலிருந்து ஏங்கல்ஸ் வேறுபட்டார். அதேநேரத்தில் ஹெகல் பயன்படுத்திய இயங்கியலை ஏற்றுக்கொண்டு அதை சமூக வாழ்க்கைக்குப் பயன்படுத்தினார். எல்லாப் பொருள்களும் மாறுகின்றன; காலாவதியானவற்றையும் அறிவுக்குப் பொருத்தமற்றவற்றையும் அகற்ற வேண்டும் என்ற இயங்கியல் கருத்துகளைக் கொண்ட இடதுசாரி மனோபாவம் கொண்ட இளம் ஹெகலியர்களின் தொடர்பு ஏற்பட்டது. மதம் பற்றிய இளம் ஹெகலியர்களின் விமர்சனம், அரசியல் பற்றிய கருத்துகள் ஏங்கல்ஸை அவர்கள்பால் ஈர்த்தன. இவ்வாறாக நாத்திகவாதியாக, இயங்கியல்வாதியாக மாறிய ஏங்கல்ஸ் ‘புனிதக் குடும்பம்‘ (1845), ‘ஜெர்மானியக் கருத்தியல்‘ (1864) ஆகிய இரு நூல்களை மார்க்ஸுடன் இணைந்து எழுதினார். புனிதக் குடும்பம் என்பது புருனோபார் என்பவரையும் அவரது சகாக்களையும் விமர்சனம் செய்து எழுதப்பட்ட நூல். இந்நூலில் ஹெகலின் கருத்து முதல்வாதம் விமர்சிக்கப்படுகிறது. வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் விளக்கப்படுகிறது. நூலில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் பற்றியும் தத்துவத்தின் வரலாறு பற்றியும் பேசப்படுகிறது. நியாயவாதிகளின் சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவரையும் கொள்கை அறிக்கை தயாரிக்கும்படி அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கம்யூனிசத்தின் அடிப்படைகள் என்ற துண்டுப் பிரசுரத்தினை கேள்வி – பதில் அடிப்படையில் ஏங்கல்ஸ் தயார் செய்தார். இதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் தயார் செய்தார். அந்த அறிக்கையினை “பாடல்களின் பாடல்” என்றழைத்தார் ஸ்டாலின். மார்க்ஸால் எழுதப்பட்ட தத்துவத்தின் வறுமை என்ற நூலிற்கு ஏங்கல்ஸின் மகத்தான பெரும் பங்கு உண்டு. சொத்து என்பதே திருட்டு என்று கூறிய பிரெஞ்சு சோசலிஸ்ட் புருதானை விமர்சனம் செய்து எழுதப்பட்ட நூலிது. பல நாடுகளிலிருந்து மார்க்ஸின் கொள்கைகளை விளக்கிப் பல நூல்கள் வெளிவந்தபோதிலும் மார்க்சியத்தை விளக்கி முதன்முதலாக எழுதப்பட்ட ‘டூரிங்கிற்கு மறுப்பு‘ என்ற நூல், ஏங்கல்ஸின் நூலாகும். இந்நூல் 400 பக்கங்களைக் கொண்டது. நூலில் டூரிங் என்ற தத்துவவாதி மார்க்ஸின் கருத்துகளைத் திரித்துக்கூறியபோது அவரை எதிர்த்து ஏங்கல்ஸ் எழுதிய நூலாகும். டூரிங், அடிப்படையில் கருத்து முதல்வாதி. சில எண்ணங்களின் அமைப்புகள்தாம் உலகிற்கே அடிப்படை என்றதை மறுத்து வரலாற்றுப் பொருள் முதல் வாதம், இயங்கியல் விதிகள், சோசலிசம் பற்றிய பல விளக்கங்களை நூலில் தருகிறார் ஏங்கல்ஸ். மார்க்சியம் கற்க விரும்புவர்களுக்கு இது விலைமதிக்க முடியாத கையேடெனலாம். மார்க்ஸின் மூலதனம் பற்றி என்ற சிறு நூலில் அதன் சுருக்கத்தை வெளியிட்டார். இதைப் படிப்பதன்மூலம் மார்க்ஸின் மூலதனத்தின் மூன்று பாகங்களில் உள்ளதை அறிந்துகொள்ள முடியும். பாரீசில், கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849இல் செருமனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றித் துயரப்பட்டுக்கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869 சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870, செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் ஏங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். ஏங்கல்ஸ் அரசாங்கம் பற்றிக் கூறும்போது “வர்க்கங்களாக சமூகம் பிரியும்போது அரசாங்கம் ஏற்படுகிறது. இது பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள வர்க்கத்தின் கருவியாகவே மாறுகிறது” என்கிறார். “அரசு பொருளாதாரத் திசையை மாற்றிவிடுகிறது. அரசு பொருளாதார சக்தியாக விளங்குகிறது. அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. ஆனால், அதன் நோக்கம் பொருளாதார விஷயங்களைக் கட்டுக்குள் வைப்பதுதானே ஒழிய, தீர்மானிப்பதல்ல. இது ஒரு வகையான இயங்கியல் உறவு ஆகும்” என்று விளக்கமளிக்கிறார். விவசாய வர்க்கத்துக்குள்ளாக சிறு, நடுத்தர, பெரிய விவசாயிகள் எனப் பல பிரிவுகள் உள்ளன. கூலி விவசாயிகள் தனியானவர்கள். இவர்களில் பாட்டாளி வர்க்கக் கட்சி, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை அணுகவேண்டும். ஏனென்றால் கையளவு நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் நிலத்தை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இயந்திரமயமாகும்பொழுது இந்த விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகிறார்கள். இவர்கள் பாட்டாளிகளாக மாறும் தன்மை உள்ளவர்கள். ஆனால் பரம்பரையாக இவர்களிடம் ஊறியிருக்கும் சொத்துரிமை என்ற உணர்வு, இவர்களை நிலத்துடன் பிணைத்து வைத்துவிடுகிறது. இவர்களைக் கட்டாயப்படுத்தி நிலத்தை விட்டுவிடச் செய்யக்கூடாது. அவர்களாகவே முன்வந்து ஒன்றிணைந்து கூட்டுறவு முறையில் விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம்தான் முதலாளித்துவத்தின் அழிக்கும் செயலில் இருந்து பாதுகாக்க முடியும். இந்த அடிப்படையில்தான் சோசலிசக் கட்சிப் பிரச்சனையை அணுக வேண்டும். பெரும் நிலச்சுவான்தார்கள், அவர்களது குத்தகைதாரர்கள் ஆகியவர்களை மட்டுமே எதிர்த்துப் போராட வேண்டும் என்று விளக்கமளிக்கிறார். மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மார்க்ஸின் இணைபிரியாத் தோழர், விஞ்ஞானபூர்வமான உலகக் கண்ணோட்டத்தை நிறுவிய, தொழிலாளி வர்க்கத்தின் சக்திகளை உலக அளவில் ஒன்று திரட்ட முன்கையெடுத்தவர் பிரெடரிக் ஏங்கல்ஸ்.