மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்ட அமைப்பின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டன. 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை முடிந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் பெறப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி சேர்க்கைக்காகக் காத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான தனியார் கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் என மாணவர்களுக்கான சேர்க்கைப் பட்டியல்களும் வெளிவந்து கொண்டுள்ளன. உண்மையில் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஆனால், இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகாத இந்தச் சூழலில், ‘எங்கள் குழந்தைகளுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?’ என CBSE பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையுடன் கேட்கின்றனர். மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர்களது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல, பெரும்பாலான CBSE பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வராமலேயே, பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் சில பள்ளிகளில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு இடைத்தேர்வுகூட நடத்தி முடிக்கப்பட்டதுவிட்டது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இரண்டுக்குமே MCQ (Multiple Choice Questions) என்றழைக்கப்படும் கொள்குறிவகைத் தேர்வில் எடுத்த முடிவுகளை மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சிபிஎஸ்சி பள்ளிகளைப் பொறுத்தவரை, இருபருவங்களாக நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளில், முதல் பருவத்தின் இந்தத் தேர்வு முடிவுகளை வைத்து பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையை நடத்தி உள்ளனர். மாணவர்களுக்கான பாடப் பிரிவுகளையும் பெற்றோர்களிடம் பேசி அவர்களாகவே தெரிவு செய்து 11 ஆம் வகுப்பு சேர்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசுப் பாடத்திட்டத்திற்கான தேர்வு விடைத்தாட்கள் திருத்தும் பணி, ஜூன் முதல் வாரத்தில் முடிந்து தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் வரக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணி ஜூன் 5 ஆம் தேதியே முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எதற்காகத் தேர்ச்சி முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி, ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்புகளிலிருந்து வருகின்றன. கொரோனா காலத்தில் கடந்த இரண்டு கல்வியாண்டுகளும் மாணவர்களுக்கு முறையான கல்வி கிட்டாத சூழல் நிலவியது. ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தச் சூழலில் மாணவர்கள் சரியான காலத்தில் உயர் வகுப்புகளுக்குச் சென்று முறையான கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் உண்டல்லவா? அதை முறைப்படி செயல்படுத்த வேண்டிய கடமை அரசுகளுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் உண்டல்லவா? ஆனால் இதுவரை, ஒன்றிய அரசோ, மாநில அரசோ, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளோ இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கல்வியில் சமமின்மை நிலவுவது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக நம் தமிழகத்தில், மாநிலப் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று பல்வேறு வகையான, பாடத்திட்டங்கள் சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் வேறுபட்ட மன நிலையை உருவாக்கக்கூடிய கல்விச் சூழலே அதிகரித்து வருகிறது. இங்கு சமத்துவம் பேசுகிறோம்; சமமான கல்வி என்று கூறுகிறோம்; வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கிடையே கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு, பொருளாதாரம் சார்ந்த வியாபாரமாகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட அண்மைக் காலங்களில், கல்விச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதிகப் பணம் செலவழித்துப் படிக்கவைக்கக் கூடிய பள்ளிகள்தான் தரத்தில் உயர்ந்த பள்ளிகள் என்ற மனப்போக்கும் நிலவுகிறது. அதன் அடிப்படையிலேயே பத்தாண்டுகள் முன்பு வரை கோலோச்சிய பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சமச்சீர் கல்வி முறை வந்தபிறகு, தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ள, CBSE பள்ளிகளாக மாறின. இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத சூழலில் இப்பள்ளிகள் CBSE அமைப்புக்கு எதிராக எந்தக் குரலும் எழுப்பாமல், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் மௌனமாக உள்ளனர். தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக, மாணவர்கள் நலனைப் பொருட்படுத்தாமல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கும் தனியார் பள்ளிகள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் CBSE-ஐ எதிர்த்துப் போராட்டம் நடத்தாது ஏன்? ஒரே மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் தேர்ச்சி முடிவுகள் வரப்பெற்று உயர் வகுப்புகளுக்குச் சென்றுவிட்ட சூழலில், சக வகுப்பு சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளை இன்னமும் தேர்வு முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழலில் வைத்திருப்பது, மாணவர்கள் எதிர்காலத்தையும் மனநிலையையும் பாதிக்கும், பாழாக்கும் செயலாகும். எந்தக் கல்வி முறையில் பயின்றாலும், பயிலும் மாணவர்கள் அனைவரும் நமது குழந்தைகளே. இங்குள்ள கல்வி மற்றும் மனித வளத்துறைகள் இது குறித்து உரையாடல் நடத்தி இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-இடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக, CBSE அமைப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும்வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கச் சொல்வது என்ன நிர்வாக முறை? என்பது விளங்கவில்லை. மாநில அரசு எப்போது உறக்கம் கலைக்கும்? இந்தச் சூழலிலாவது, நம் குழந்தைகளுக்கு ஏற்ற பள்ளிகள் அரசுப் பள்ளிகள், ஏற்ற பாடத்திட்டம் மாநிலப் பாடத்திட்டம் என்ற புரிதல் பெற்றோர்களிடம் உருவாக வேண்டும். கல்வி என்பது நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் கேட்டுப் பெற வேண்டியது நம் கடமை. நாம் தொடர்ந்து வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வர வேண்டும். கல்வி உள்ளூர் வளம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கல்வி கற்பார்கள். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, அலங்கார முகமூடிக்கு ஆசைப்பட்டு CBSE பின்னால் ஓடினால், நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும்தான் பாழாகும் என்பதைப் பெற்றோர்களும் இந்த அரசும் உணர வேண்டும். கல்வி முதலாளிகள் தங்கள் மேட்டிமை மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநிலப் பாடத்திட்டத்திற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், நுகர்வோர் உரிமைச் சட்டப்படி, ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது கட்டாயம். பெற்றுக்கொண்ட பயணத்துக்கு உரிய சேவை வழங்காவிட்டால் அந்தந்தக் கல்வி நிறுவனங்கள்தான் குற்றவாளிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அரசும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு CBSE பள்ளிகளில் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். உமா மகேஸ்வரி, கல்வியாளர்