இந்தியாவின் தேவை, சீனாவுடன் போரா? பொருளாதாரக் கட்டமைப்பா?

இந்தியாவின் தேவை, சீனாவுடன் போரா? பொருளாதாரக் கட்டமைப்பா?

உ னையாள்வதே பெரும்பாடம்மா… ஊராள்வது எனக்கேதம்மா… தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான பாடல் வரிகள் இவை. இது யாருக்கு ஒத்துப் போகிறதோ இல்லையோ, இன்றைய நிதர்சன அரசியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கனக்கச்சிதமாகப் பொருந்துகிறது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளைத் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வல்லரசு நாடான அமெரிக்காவே கதிகலங்கிப் போயுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சுயசார்பு இந்தியா எனும் திட்ட வரைவு ஒன்றை அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உள்நாட்டுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் கூறப்பட்டாலும், நடைமுறையில் இது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இந்திய சீன எல்லைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் இந்தச் சூழலில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாராகும் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என பிரதமர் கூறியிருந்தார்.  இந்த அறிக்கை வெளிவந்த சில நாட்களில் நாட்டில் சிலர் சீனப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வணிக உலகத்தின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டி ருக்கும் சீனாவை நம்பித்தான் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை மறந்து தற்போது சீனப் பொருட்களுக்கு எதிரான வர்த்தகப் போராட்டத்தைக் கையாண்டு வருகின்றனர். வரலாறு தெரியாதவர்களுக் காக… சீனாவிடமிருந்து 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதி மதிப்பில் இது 17% ஆகும். சீனாவைப் பொறுத்தவரை அந்நாடு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் இது வெறும் 6% மட்டுமே. இதே காலகட்டத்தில் இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது சுமார் 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் மட்டுமே. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 5 லட்சத்து 84 ஆயிரம் கோடிகள் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒட்டுமொத்த 2019-20 உள்நாட்டு உற்பத்தி 200 லட்சம் கோடியில் நேரடி அந்நிய முதலீடுகள் (FDI) மற்றும் வர்த்தக முதலீடுகளில் சீனாவின் பங்கு மட்டுமே சுமார் 1 லட்சம் கோடி என்று தரவுகள் கூறுகின்றன. இந்தியாவிற்கான உலக வர்த்தகத் தொடர்பு நிறுவனமான கேட்வே ஹவுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள பேடிஎம் மால், ஸ்விகி, ட்ரீம்11 உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் சீன முதலீட்டாளர்கள் சுமார் 580 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 30 சதவீத ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் சீனாவிடமிருந்து வாங்கப்படுவதாக தெரிவிக்கின்றது இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு. தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ள இன்றைய நவீன உலகில் மொபைல் போன்கள் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இந்தச் சூழலில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்றும் பயன்பாட்டில் உள்ள 90 சதவிகித போன்கள் சீன தயாரிப்புகள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட, சுமார் ஏழு மடங்கு இறக்குமதி செய்கிறது. உணவுப் பொருட்கள் முதல் மின்னணுப் பொருட்கள், சைக்கிள், சூரிய மின்கலங்கள், காசநோய், தொழுநோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வரை முழுவதுமாக நம் நாட்டு வணிகர்கள் சீனத்து வர்த்தகத்தையே நம்பி உள்ளனர். குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான முதலாளிகள் சீனாவில் தங்களது அலுவலகத்தை நிறுவி இந்தியாவிற்கான ஏற்றுமதி வர்த்தகத்தை வழி நடத்துகின்றனர்.  கடந்த 2017-18ல் மட்டுமே இந்தியாவின் மின்னணு உபகரணத் தேவையில் ஏறத்தாழ 60 சதவீதமும், விளையாட்டு பொம்மைகளில் 90 சதவீதமும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக அதிகமாக விற்பனை செய்யப்படும் ஐந்து ஸ்மார்ட் போன் பிராண்டுகளில் முதல் நான்கு சீனாவைச் சேர்ந்தவை. இந்த நான்கு பிராண்டுகளும் இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் 70%ஐ ஆக்கிரமித்துள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 40 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீடுகள் மூலமாக சீன நிறுவனங்களின் துணையோடு இந்தியப் பொருளாதாரம் இயங்கிவரும் இந்த வேளையில் சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் சுற்றி வருகின்றனர். அவர்களை நோக்கி தான் இந்தக் கட்டுரையின் முதல் வரியில் வரும் பாடலைப் பிரதமர் பாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்.. உங்களை ஆள்வதற்கே எனக்கு நேரம் போதவில்லையே! ஓட்டுப் போட்ட மக்களுக்குப் பணி செய்ய நேரம் எங்கே உள்ளது? எனப் பிரதமர் வருத்தம் கொள்ளும் அளவிற்கு ஆளுங்கட்சி ஆதரவாளர்களின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளன. அந்நிய நாட்டு வணிகப் பொருட்களை நிராகரிப்பதற்கான அறைகூவல் ஒன்றும் நமக்கு புதுமையோ தனித்துவமோ அல்ல. மேலும் இந்தியா ஒரு சுயசார்பு நாடாகத் திகழ வேண்டும் என்பது இன்றைய ஆட்சியாளர்களின் கண்டுபிடிப்பும் அல்ல. காந்தி காலத்திலிருந்தே இது பற்றி நாம் பேசி வருகிறோம். காந்தி காலத்தில் அறிவுறுத்தப்பட்ட அந்நியப் பொருட்கள் எதிர்ப்பு முழுக்கம் மற்றும் சுதேசிப் பொருட்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் பின்னணியில் ஒரு தெளிவான செயல்திட்டமும், தனிப்பட்ட உறுதியும் இருந்தது. சுதந்திரம் அடைந்த கையோடு, காந்தியோடு அவருடைய கொள்கைகளையும் சேர்த்தே கழற்றிவிட்ட இந்தியாவினுடைய எந்த ஒரு கட்சியும் இன்றைய சுயசார்பு இந்தியாவிற்கான தனித்துவமான செயல்திட்டங்களை கொண்டிருப்பதாக சொல்லவில்லை. இப்படியான சூழலில் வெறும் சுயசார்பு தொடர்பிலான முழக்கத்தை எப்படிப் பார்ப்பது என்ற கேள்வியை வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்காச்சாரி. உலகின் பல நாடுகளில் இது போல நடைபெற்ற சுயசார்பு வர்த்தகப் போராட்டங்கள் கடைசியில் தோல்வியில் முடிவடைந்ததாகவே வரலாறுகள் சான்றளிக்கின்றன. 1930களின் முற்பகுதியில் சீனா ஜப்பானியப் பொருட்களை நிராகரிக்க முயன்றதும். 9/11 சம்பவத்துக்குப் பிறகு ஈராக்கிற்குத் தனது துருப்புக்களை அனுப்ப பிரான்ஸ் மறுத்தபோது அமெரிக்கக் கூட்டு நாடுகள் 2003 வாக்கில் பிரான்சின் பொருட்களை நிராகரிக்க முயன்றதும்.  பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய, அமெரிக்க நிலைப்பாட்டின் காரணமாகப் பலமுறை ஆப்பிரிக்க தேசங்களும் அவற்றின் பொருட்களை நிராகரித்துள்ளதும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளது. இந்த போராட்டங்களில் பொதுவான அம்சம் என்னவெனில் மேற்கண்ட எந்த சுயசார்பு வர்த்தக போராட்டமும் வெற்றி பெறவில்லை என்பதுதான். மேலும் போராட்டம் ஆரம்பித்த சில வாரங்களிலேயே இந்தப் புறக்கணிப்புக் கோசங்கள் நீர்த்துப் போய்விட்டன. உணர்ச்சிகளாலும், தனி மனிதத் தூண்டுதல்களாலும் அந்நிய நாட்டின் பொருட்களைப் புறக்கணிப்பது என்பது வெறும் அறைகூவலாகத்தான் இருக்குமே தவிர, நமக்கு சுயசார்புப் பொருளாதாரத்தையோ ‘ஆத்மநிர்பார்’ பாரத்தையோ பெற்றுத் தந்து விடாது. இந்த நாட்டின் நிலைமைக்குத் தகுந்த செயல்திட்டம் முன்வைக்கப்படுவது அவசியம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மக்களையும் நாட்டின் சுதந்திரத்திற்குப் போராட உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றிணைத்தது வந்தே மாதரம் எனும் சுதந்திர முழக்கம். இனம், மதம், மொழி, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி ஒட்டுமொத்த இந்தியர்களின் உணர்ச்சிகளையும் தீப்பிழம்பாக உசுப்பேற்றி நாட்டையே போராட்டக் களமாக மாற்றியது அன்றைய தேசிய ஒற்றுமை. ஆனால் இன்று காணப்படும் முரட்டு தேசபக்தியும், அதீதமான அரசியல் சித்தாந்தமும்தான் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்குப் பெரும் காரணமாக இருக்கின்றன. உலகமயமாக்கல் பரிணாமத்தில் இயங்கி வரும் இந்தக் காலத்தில் உலக வர்த்தக நிறுவனங்களின் விதிகளாலேயே ஒட்டுமொத்த தேசங்களும் நிர்வகிக்கப்படுகின்றன. தேசங்களுக்கிடையே எளிதான வர்த்தக நடைமுறைகளை வெறும் மலிவான வார்த்தை ஜாலங்களால் தடை போட முயன்றால், அது இன்னொரு வழியில் எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விடுகிறார்கள் போலும். சீனா இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகப் பங்காளி என்பதையும் தாண்டி உலக வர்த்தகச் சந்தை சீனாவுக்கு ஆதரவாகவே இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  இந்தியாவின் உற்பத்தித் திறன் வரம்புக்குட்பட்ட அளவிலேயே இருக்கும்போது, சுயசார்புப் பொருளாதாரம் எனத் தனிப்பட்ட முறையில் வர்த்தகப் போரில் இறங்குவது நமக்கு பலன் தராது. இந்த உலக வர்த்தக அசுரனுக்கு எதிராகப் பேசுவதற்கு முன் நாம் உள்நாட்டுத் தொழில் துறை வளர்ச்சியில் எந்த நிலையில் இருக்கிறோம் என்று சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சமீபத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மருந்தாகக் கருதப்படும் ஹைட்ராக்சி குளோரோகுவினை அதிகப்படியாக நாம் ஏற்றுமதி செய்தாலும், அதனை உற்பத்தி செய்யத் தேவையான செயல்பாடுள்ள மருந்துப் பொருட்களை (Active Pharmacheutical Ingredients –API) உற்பத்தி செய்யும் கச்சாப் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது சீனா. சீனப் பொருட்களை நிராகரிப்பதற்கு முன்னதாக இதற்கு மாற்று ஏற்பாடு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இதுவரை எவரும் எழுப்பாதது வியப்பாக உள்ளது. நிதர்சனமான உண்மை என்னவென்றால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் இந்தியாவில் இன்னும் தொடங்கப்படவில்லை என்றே கூற முடிகிறது. சீனப் பொருட்களுக்கு மாற்றாக அதன் தரம் மற்றும் விலையுடன் போட்டி போடும் விதமாக உள்ளூர் பொருட்களை உருவாக்கவும், இறக்குமதி செய்யவுமான வழிமுறைகள் இங்கு இன்னும் உருவாக்கப்படவில்லை.  ஆராய்ச்சிகள் மற்றும் அதன் வளர்ச்சிக்குச் செலவிடப்படும் குறைவான நிதி ஒதுக்கீடுகள் தான் இந்தியாவின் கண்டுபிடிப்புச் சூழலுக்குப் பெரும் சவாலாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ‘தேசிய அறிவியல் தொழில்நுட்ப நிர்வாகத் தகவல் அமைப்பு (NSTMIS)’ அளிக்கும் சமீபத்திய ஆராய்ச்சி வளர்ச்சி புள்ளி விவரத்தின்படி 2004-05 இலிருந்து 2014-15 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செலவினம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. எனினும் இது ஜி.டி.பி.யில் வெறும் 0.7% மட்டுமே.  இதுவே சீனா அதன் ஜி.டி.பி.யில் 2 சதவிகிதமும், பிரேசில் 1.2 சதவிகிதமும்,  இஸ்ரேல் தனது ஜி.டி.பி.யில் 4.3சதவிகிதமும் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு வளர்ச்சிகளுக்காக செல விடுகின்றன. இந்தக் கொரோனா காலத்தில் சீனாவிலிருந்து இடம் பெயரும் அமெரிக்க நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் இழுக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயரும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.  ஏனெனில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க சீன வர்த்தகப் போர் தொடங்கிய பிறகு 5%க்கும் குறைவான நிறுவனங்கள்தான் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தன.  அவை அப்படியே இடம் பெயர்ந்தால் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அவை உறுதிப்படுத்தாது.  ஏனெனில் உள்நாட்டு வர்த்தக சந்தையை புதிதாக தொடங்குவதால் அடுத்த சில ஆண்டுகளுக்குச் சர்வதேசச் சந்தையில் இந்தியப்

தனித்து விடப்படுகிறதா தமிழகம்?

தனித்து விடப்படுகிறதா தமிழகம்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு முழுவதுமாக 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் கொரோனா தடுப்புக்கான மாநில அரசின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசிடமிருந்து தமிழகம் கோரிய நிதி இதுவரை கிடைத்தபாடில்லை. ஆனால் பொருளாதார மந்தத்தால் இந்திய மாநிலங்கள் அனுபவித்து வரும் நிதி நெருக்கடிகளைக் கண்டு கொள்ளாத மாதிரி கடந்து செல்கிறது மத்திய அரசு. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும், வருவாய் பற்றாக்குறையாகவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்நிலையில்,  2020-21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் வரிவருவாய் ரூ.1,33,530.30 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில். கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசுக்கு ரூ.11,127.30 கோடி வருமானம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில்  நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் வெறும் 10% மட்டுமே வருவாயாக கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. அதாவது 2020-21 நிதியாண்டின் முதல் மாதத்தில் வரவேண்டிய வருவாயில் 90% அளவிற்கு இழப்பைச் சந்தித் துள்ளது தமிழக அரசு. ஆட்குறைப்பு, வேலையின்மை காரணமாக வருமானம் இழந்து தவிக்கும் மக்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதற்காக தமிழக அரசின் சார்பில் மாநில தொகுப்பு நிதியாக ரூ.16,000 கோடி, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் 1000 கோடி ரூபாயைத் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி உதவி கோரியிருந்தார் முதலமைச் சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் கொரோனா நிவாரண நிதியாக வட மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு. கொரோனா பாதிப்பில் நாடு தழுவிய அளவில் 2வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.510 கோடியும் மகாராஷ்ட்ராவுக்கு ரூ.1,611 கோடியும் அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 10 வரை 361 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.966 கோடியும் கொரோனா தாக்குதல் பட்டியலில் குறைந்த பாதிப்பு விகிதத்தில் உள்ள மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு முறையே ₹910 கோடி, ₹708 கோடி என அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் தென்னிந்திய மாநிலங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. எல்லா மாநிலங்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அரசாங்கம் தற்போது பாரபட்சம் பார்ப்பது நியாயமானதா என்ற கேள்வி எழுகிறது. மேலும் உணவு தானிய கொள்முதலுக்காக ரூ.1321 கோடியும், மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காக  தேசியப் பேரிடர் நிதியிலிருந்து ரூ.1000 கோடியும் வழங்கும்படி மத்திய அரசைக் கோரியிருந்த நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பில் இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என்றே அறிய முடிகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி  நிலுவைத் தொகை ரூ.6,420 கோடியை கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்து விட்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதி இது தான் என்று கூறுகிறது மத்திய அரசு. ஏற்கனவே கஜா புயலுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி  இதுவரை வந்து சேரவில்லை என்பது கொசுறுச் செய்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாடே கதறிக் கொண்டி ருந்த வேளையில், நான் வெங்காயமும் பூண்டும் அதிகம் சாப்பிடு வதில்லை என்று புளகாங்கிதம் அடைந்த‌ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதைய நிதிப் பற்றாக்குறை நிலைக்கு என்ன காரணம் சொல்லப்போகிறார் என்று ஒட்டு மொத்த தேசமும் விரக்தியுடன் காத்துக் கொண்டிருக் கிறது. அனைவருக்கும் கல்வித் திட்டம், பள்ளி-கல்லூரி மாணவா் களுக்கான உதவித் தொகைத் திட்டம் உள்பட கடந்த பிப்ரவரி மாதக் கணக்கின்படி தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய மானிய நிதி மொத்தமாக ரூ.12 ஆயிரத்து 263 கோடி இதுவரை வழங்கப் படவில்லை. மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பித் தரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, பேரிடர் கால நிதி, மருத்துவ சேவைகளுக்கான நிதி என இதுவரை எதையும் வழங்காத காரணமாக தற்போதைய நிலைமையைச் சமாளிக்க தமிழக அரசு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.8,000 கோடிக்கு பத்திரம் வெளியிட்டு கடன் திரட்டியிருக்கிறது. பற்றாக்குறையை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளது, மேலும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதன் உண்மையான காரணம் இதுதான். தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட நிதிகளை வைத்து கொரோனா பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக அரசின்  கடன் 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பினை ஈடுகட்ட தமிழகம் ஒட்டுமொத்தமாக மேலும்1 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமை யிலான தமிழக பொருளாதார மேம்பாடு ஆலோசனைக் குழு. கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் காய்கறிகளின் விலை 60 சதவீதமும், பருப்பு வகைகள் 20 சதவீதமும், மீன், இறைச்சி உள்ளிட்டவை 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளன. இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு முற்றிலுமாக மத்திய அரசுக்குப்  போய் விடுவதால் மாநில அரசுகள் விழிபிதுங்கிப் போயுள்ளன. மேலும் நாடு முழுவதும் திரட்டப்பட்ட ஜி.எஸ்.டி வருவாயில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி பங்கையாவது கொடுங்கள் என்று மாநில அரசுகள் மன்றாடி வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்யும் தேதியை மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள தாக வளர்ந்துள்ள தகவலை அடுத்து. தமிழகத் திற்குக் கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி பங்கு முடங்கியுள்ளது. கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய நிதியைக் கூட மத்திய அரசு வழங்காத காரணமாகவே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணி சுணக்க மடைந்து இன்று சென்னை மாநகரமே சுடுகாடாக மாறி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய பழிவாங்கும் போக்கிற்கு மாநில அரசு தலைசாய்த்து நிற்பதைக் கண்டு திகைத்து நின்றனர் இவர்களுக்கு வாக்களித்த பொதுமக்கள். ஏற்கனவே 2020 – 21ஆம் நிதியாண்டுக் கான தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசின் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு வாங்கி யுள்ள கடன் தொகைக்கு ஆண்டுக்கு 37 ஆயிரத்து 120 கோடி ரூபாய் வட்டியாக மட்டுமே செலுத்துவதால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.59 ஆயிரத்து 346 கோடி என்று கணிக்கப்பட்டிருந்த வேளையில். தற்போதைய ஊரடங்கு காலத்தில் அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தும் போது ஒருங்கிணைந்து செயல்படுவோம், ஒரே நாடு, ஒரே வரி என்று கூறிய மத்திய அரசு; தற்போது தென்மாநிலங்களுக்கு வஞ்சனை செய்து வருகிறது. அதை நம்பிக் கையெழுத்து போட்ட தன் விளைவு, இப்போது ஏதாவது பார்த்துப் போட்டுக் கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன மாநில அரசுகள். ஏற்கனவே ஒட்டுமொத்த பொருளாதாரமும் தலைகீழ் மாற்றத்திற்கு ஆளாகி உள்ளதால் தேசிய அளவில் வேலையிழப்பைச் சந்தித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி வேலையிழப்பு விகிதம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 43.5 சதவீதம் உயர்ந்து தற்போது 49.8 சதவீதமாக உள்ளது. ஜார்கண்ட், பீகார் மாநிலங்களை விட தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு நெருக்கடியானச் சூழலிலும் டிசம்பர் – ஜனவரி மாதத்துக்கான பங்கீடு தமிழக அரசுக்கு 2,400 கோடி கடந்த பிப்ரவரி மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாநிலங் களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி பாக்கியை மத்திய அரசு கடந்த 4 மாதங்களாக தராமல் உள்ளது. இந்தத் தொகையை தரவில்லை என்றால் மாநில அரசு எப்படி இந்த பிரச்னையைச் சமாளிக்கும்? கொரோனாவுக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் இருக்கும் குளறுபடி களைப்போலவே, நிதி திரட்டுவதிலும் மத்திய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. தற்போதுள்ள நிதி நெருக்கடி சூழலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகைகளை ரத்து செய்து, அவர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிதியை முழுமையாக வசூலித்தாலே சுமார் 8 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கும். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற இந்த ஒரு வருடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரித் தள்ளுபடி மட்டுமே 2 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும். மேலும்  அமெரிக்காவோடு 21,000 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்தம், கடும் பொருளா தாரச் சீரழிவில் உள்ள உலக நாடுகள் அனைத்துமே போரிடும் நிலையில் இல்லாத இந்த வேளையில் ராணுவத்துக்குப் புதிய கருவிகள் வாங்குவதை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தினாலே சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவினங்களை கட்டுப்படுத்த முடியும். தற்போது நம் நாடு மிகப்பெரிய இக்கட்டில் சிக்கியுள்ளது. முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றாலும், கூட்டாட்சித் தத்துவத்தின்படி மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் மத்திய அரசு செவிகொடுக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்துக்கே சவால் மிகுந்ததாக உள்ள இந்தச் சூழலில் தற்போதைய நெருக்கடி நிலையைச் சமாளிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அளிக்கும் யோசனைகளையும் கேட்டு, அவற்றில் சிறந்த யோசனைகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதே பொருளாதார அறிஞர்கள் பலரின் கருத்தாகும். அண்டை நாடுகளுடனான உறவு எவ்வளவு முக்கியமோ அதேபோல, அனைத்து மாநில அரசுகளுக்கும் பொதுவாக நடந்துகொண்டு நல்லுறவைப் பேணுவதும் மத்திய அரசின் கடமை. நேரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டு ‘வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது’  என்று உரிமைக்குரல் எழுப்பியது அன்றைய அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆனால் இன்று அவரின் பெயரில் செயல்படும் கட்சியோ மத்திய அரசின் பாரா முகத்தை எதிர்க்கவும் முடியாமலும் மாநில வருவாயைக்