பாரதி கவிதா மண்டலத்தின் மூன்றாம் தலைமுறை

கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக கவிதையில், புதுப் பாதைகளை உருவாக்கி, தமிழ் மக்களின் சிந்தனைப் போக்கில் முழுமையான மாறுதலுக்கு அடித்தளமிட்ட பாரதி முதல் தலைமுறை என்றால், பாரதி விட்டுவைத்துப்போன சொத்து என்று புதுமைப்பித்தனால் புகழப்பட்டவரும் பாரதியின் கருத்துகளால் ஈர்ப்புற்று எளிய பாடல்களை எழுதியவருமான பாரதிதாசன் இரண்டாம் தலைமுறை. இருவரும் வகுத்துச் சென்ற வழியை மேலும் செம்மைப்படுத்திய கவிஞர் தமிழ் ஒளி மூன்றாம் தலைமுறை. பாரதி கவிதா மண்டலத்தில் முத்திரை பதித்தவர் கவிஞர் தமிழ் ஒளி. இவரது இயற்பெயர் விஜயரங்கம். குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூரில் 21.09.1924இல் பிறந்த இவர், மாணவப் பருவத்திலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். பாரதி, பாரதிதாசன் ஆகியோரால் உந்தப்பட்டு, உணர்வுத் தாகமும் சிந்தனை வீச்சும் நிறைந்த கவிதைகளை எழுதி மக்களின் கவனத்தைப் பெற்றவர். பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் போன்வேன் (Bonvan) என்ற ஆளுநரின் மகளின் ஆணவத் திமிரைக் கண்டு ஆத்திரம் அடைந்த தமிழ் ஒளி, அவளது அதிகாரத்தைப் பற்றித் துண்டுப் பிரசுரம் எழுதி நகரெங்கும் பரப்பினார். இதனால் அவரால் பாண்டிச்சேரியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு வாரங்கள் புதுவையில் சிறைவாசம். விடுதலை செய்யப்பட்ட பிறகு பாரதிதாசனின் முயற்சியால் தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அங்குதான் தன்னுடைய பெயரை தமிழ் ஒளி என மாற்றிக்கொண்டார். பிறர் துன்பம் கண்டு பொங்கி எழுபவர், வேதனைப்படுபவர், தான் வாழும் சமுதாயத்தில் மக்கள் படும் இன்னல்களைக் கண்டு மக்களைப் போலத் தானும் கவலை கொள்ள வேண்டும்; இன்னல்களையும் தடைகளையும் எதிர்த்து நிற்கும் வல்லமையைப் பெறுவதற்குப் பாடுபட வேண்டும்; அவனே உண்மையான கவிஞன் என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டியவர். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லவற்றை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். ‘பொதுவுடைமைப் போர்க்களத்தில் வீரக் கவிஞனாக விளங்கியவர் தமிழ் ஒளி’ என்று இவரைப் பற்றிப் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை சரியாகவே கணித்துள்ளார். அது உண்மையே. தனது காலத்தின் பொதுவுடைமை இயக்கத்தின் சாதனைகளையும் மக்கள் எழுச்சியையும் தமிழ் ஒளியைப்போல எந்தக் கவிஞனும் வீறுடனும் கவித் திறத்துடனும் வெளிப்படுத்தவில்லை. இவர் கவிதையையே வாழ்வாகக் கொண்டவர். வாழ்க்கையையும் கவிதையாக மாற்றியவர். தனக்கென்று வேறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதவர். கவிஞனாகவே வாழ்ந்து முடிந்தவர். வங்கக் கவிஞன் நஸ்துலைப் போல, உலகப் புகழ்பெற்ற கவிகளான ஷெல்லி, பைரனைப் போல, தமிழ் ஒளியும் கவிதையையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். ‘பாரதி பரம்பரை’ என்ற கவிதையில் அவர் தன்னை யார் என்று அடையாளம் காட்டி, பெருமிதமும் அடைகிறார்.‘கண் வழி சொட்டுங் குருதியொடுங் கானில் வழிதடவி – தமிழ்ப்பண் வழி சென்று பழம் புகழ் சேர்த்தவன் பாரதி’ என்கிறார். சேரியில் வாழ்ந்த வீராயி, பிறந்த நாட்டிலும் வாழ முடியாமல், கடல் கடந்து ஆப்பிரிக்க நாட்டுக்குச் சென்று பிழைத்தாலும் அங்கும் எமனாகத் திரிந்து சுரண்டும் முதலாளித்துவக் கொடுமைகளை, ‘வீராயி’ என்ற காவியத்தில் கொதிப்போடு எடுத்துக்கூறியிருக்கிறார் கவிஞர் தமிழ் ஒளி. முத்தியாலுப்பேட்டை கல்வே கல்லூரியில் பாரதிதாசன் ஆசிரியராகப் பணியாற்றியபோது தமிழ் ஒளி அவரது மாணவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை தினமான மே தினத்தை, ‘கோழிக்கு முன் எழுந்து கொத்தடிமைபோல் உழைத்து, பாடுபட்ட ஏழை முகம் பார்த்துப் பதைபதைத்து, கண்ணீர் துடைக்க வந்த காலமே, நீ வருக! மே தினமே நீ வருக!’ என முதன்முதலில் தமிழில் பாடியவர் தமிழ் ஒளியே. ‘சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?’ என்னும் நூலில், ‘பல்வேறு கலை வடிவங்களைக் குறிக்கும் பல்வேறு சொற்களும் இயற்கையே என்பதை உணராமல், ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்களும் உள்ளன என்று கருதி அரைத்த மாவை அரைத்தும் சுற்றியசெக்கையே சுற்றியும் தமிழ் உலகம் புதுமையைக் காணவும் இல்லை; பழமையைப் பேணவும் இல்லை; நாணவும் இல்லை. இதுவே இன்றைய நிலை’ என்று ஆதங்கப்படுகிறார். ‘மூன்று காண்டங்களும் 30 காதைகளும் அடங்கிய சிலம்பு கதை, பாடுவோனால் அரங்கில் பாடப்பெறவும் ஆடுவோரால் கூத்துகள் ஆடப் பெறவும் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி ஆகியன கூடப் பெறவும் சிறந்து விளங்கும் இசை நாடகமாகத் திகழ்கிறது’ என்று கூறுகிறார். தமிழகத்தில் பண்டு பெருகியிருந்த இசை நாடகங்களின் கடைசிச் சுடரே சிலப்பதிகாரம். அது கடைசிச் சுடர் ஆகையினாலேதான், இளங்கோவடிகள் இசை நாடக இலக்கணத்தையும் சிலம்பினுட் பொதிந்து வைத்தார். ‘நிலை பெற்ற சிலை’யில் காதலன் மருதவாணன், காதலி வஞ்சி இருவரும் ஊரின் எதிர்ப்புக்கு மத்தியில் தனியாகச் சந்திக்கிறார்கள். காதலனைக் கண்டதும் வஞ்சி நாணமும் அதிர்ச்சியும் கொண்டு பேசாது ஒதுங்கி நிற்கிறாள். ‘நீ எட்டப் போய் நிற்கலாமா?’ என்று கேட்டு வஞ்சியை வாரி அணைத்துவிடுகிறான். அதற்கு வஞ்சியும் ‘தங்கள் காதல் ஏவி வரும் உணர்ச்சியினை, என்றன் உள்ளம் எட்டி அணைக்காமல் இருந்திடுமோ அத்தான்?’ எனக் கேட்க, ‘இருவரும் நீ நான் என்றில்லாமல் ஒன்றிவிட்டார் இருள் கிழித்தே; நிலவோடு வான் தழுவ நிறைந்தது இன்பம்’ என்று, காதலர் கூடுவதை இயற்கை இன்பத்தோடு இணைத்துக் கற்பனையாக கூறும் அழகே காதலரின் அன்பை உயர்வுபடத் தெரிவிக்கிறது. ‘தமிழர் சமுதாய நிலை’ நூலில் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் தொழில் மாற்றங்கள், இறை வணக்கம் பற்றிய செய்திகளைப் புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்திருக்கிறார். நிலப் பிரபுத்துவச் சமுதாயம், கற்பனைகளையும் புராணங்களையும் ஏற்றுக்கொண்டதன்மூலம், தன் பண்டைய மரபான பொருண்முதன்மைக் கருத்தை வளர்க்கத் தவறிவிட்டது என்கிறார். வீரவணக்கம் கடவுள் வணக்கமாய் மாறியபோது, அதாவது சமயங்கள் முகிழ்த்தபோது அச்சமயங்களில் எண்ண முதல் கருத்துகளே தலைமை வகித்தன என்கிறார். 40 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ் ஒளி, பல துறைகளில் தனது தமிழ் அறிவைப் பயன்படுத்தி, அரிய பல நூல்களை இயற்றினார். ‘தனிப்பட்ட முறையில் எனது தோழராகவும் ஆசானாகவும் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ் ஒளி. தமிழ் மொழியில் அவர் அறியாத துறை இல்லை’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்களில் குறிப்பிடுகிறார். ‘தமிழ் வானத்தில் விளங்கிய ஒரு விண்மீன்! அதன் மங்காத கவிதை ஒளியைப் போற்றுவோமாக!’ என்று சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் மு. வ. தமிழ் ஒளி கவிதைகள் வெளியீட்டுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு விண்வெளிப் பயணம் வந்த நேரத்தில், ‘அந்தரத்தில் மேடை அமைத்தான்’ என்ற பாடலை எழுதியிருக்கிறார். சந்திர மண்டலத்தில் மனிதன் போய் தரையிறங்கிய நேரத்தில், ‘சரித்திரத்தையும் மாற்றியது மனித சக்தி; சாத்திரத்தை மாற்றுவது மனித சக்தி’ என்று பாடினார். பாரதி, பாரதிதாசன், தமிழ் ஒளி, பட்டுக்கோட்டை என்று நேர் செய்ய வேண்டிய தேவை அவரது நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கிறது. திருக்குறளில் பேசப்படும் இயற்கை நெறி சார்ந்த கடவுள் மரபு, வைதீக நெறி சார்ந்த கடவுள் மரபாகக் கட்டமைக்கப்படுவதை தமிழ் மொழி மறுக்கிறார். திருக்குறளின் மொழி அமைப்பு, சொற்களின் பொருள் ஆகியவற்றை விவாத முறையில் அணுகியவர் அவர். 25 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் காமத்துப்பாலை, தனது கண்ணோட்டத்தில் உரைநடையில் எழுதியுள்ளார். அவரது படைப்புகள், தொழிலாளி வர்க்கத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஊக்கம் தந்து உற்சாகம் ஊட்டக்கூடியவை ஆகும்.