இனி என்னவாகும் கூட்டுறவு வங்கிகள்?
இந்திய நாட்டின் அனைத்து வங்கிகளின் வங்கியாகச் செயல்பட்டு வருவது RBI என அழைக்கப்படும் பாரத ரிசர்வ் வங்கியாகும். இது நாட்டின் மைய வங்கி. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் இதன் நேரடி கட்டுப்பாடு மற்றும் விதிகளின்படியே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முறைப்படுத்துவது இதன் முக்கியப் பணியாகும். கடந்த 25/06/2020 அன்று இந்திய அரசு, “நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (RBI) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்” என்ற அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது. மேலும் 28/06/2020 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. மத்திய அரசின் இம்முடிவின் தாக்கம் எந்த மாதிரியான விளைவுகளைப் பொது மக்களிடம் ஏற்படுத்தும் என்று வங்கிப் பணியாளர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகள்: கூட்டுறவு நிறுவனம் மற்றும் கூட்டுறவு வங்கிகள் என்பவை கிராமம் மற்றும் உள்ளூர் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளால் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு சங்கங்களின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பு ஆகும். குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான விவசாயக் கடன், நகைக் கடன் மற்றும் இடுபொருள் கடன்கள் வழங்குவது போன்ற பெரும் பணிகளை துரிதமாக செய்து வருகின்றன. மாநில அரசுகளின் கீழ் ஓரளவு சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தன. இனிவரும் காலங்களில் கூட்டுறவு வங்கிகளின் நிலைமை எவ்வாறு அமையும் என்று விவசாயிகள் பெரும் குழப்பத்தில் உள்ளார்கள். இந்தப் புதிய மாற்றத்தினால், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் அதிகாரத் தலையீடு தவிர்க்கப்படும். கணக்கு வழக்குகள் ஒழுங்கு முறைப் படுத்தப் படும். கையூட்டு, மோசடி மற்றும் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும். அதேவேளை விவசாயி களுக்கான பயிர்க்கடன், மற்றும் நகைக் கடன் பெறுவதில் மிகுந்த சிரமங்கள் உண்டாகும். கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடையலாம். மேலும் விவசாயிகளின் நலன் சார்ந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆகாமலும் போகலாம். மிக முக்கியமாக இது மாநில அரசின் அதிகாரத்தை ஒடுக்குவதற்கு சமமாகும். மேலும் மாநிலத்தின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும். கூட்டுறவுத்துறை சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டுக்கு இந்த உரிமைப் பறிப்பு பேரிழப்பு என்கிறார் அவர். கரையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல், கூட்டறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவருவதன்மூலம் மத்திய அரசு மக்களின் பணத்தையும் மாநில உரிமைகளையும் அபகரிக்கிறது.