பொன்னியின் செல்வன் – 2

பொன்னியின் செல்வன் – 2

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1 – முந்தைய பகுதியைத் தவறவிட்டவர்கள் இந்த இணைப்பில் வாசித்துவிட்டுத் தொடரலாம். பொன்னியின் செல்வன் – 2 பழுவேட்டரையரின் பரிவாரங்கள் ராஜபோகமாக ஆர்ப்பாட்டத்துடன் செல்வதை வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகார ஆக்கிரமிப்பில் பழுவேட்டரையரின் காவலாளிகள், தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவன் குதிரையுடன் வம்புக்குச் சென்றார்கள். அவர்களால் சீண்டப்பட்ட குதிரை கூட்டத்தில் குழப்பம் விளைவித்தபடியே தப்பித்து ஓடியது. அதனைத் தடுக்க முடியாமல் வாடி நின்ற வந்தியத்தேவனைக் கண்ட ஆழ்வார்க்கடியான் அவனிடம், ‘என்னிடம் காட்டிய வீரத்தை அவர்களிடம் காட்டக்கூடாதா?’ என்று வேறு  குத்திக் காட்டினான். உள்ளூரக் கோபத்திலிருந்த வந்தியத்தேவன், பழுவேட்டரையருடைய வீரர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சண்டைக்குப் போகாமல், தள்ளிப் போய் பாவமாக நின்று கொண்டிருந்த குதிரையைத் தட்டிக் கொடுத்துக் கூட்டி வந்தான். ‘இந்த வீரர்களுக்கு என்றேனும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்’ என்றும் எண்ணிக் கொண்டான். ஆழ்வார்க்கடியான் காத்திருந்ததைக் கண்டபோது இன்னும் எரிச்சலாயிருந்தது. போதாதற்கு  ஆழ்வார்க்கடியானும் நோட்டம் பார்ப்பது போல், ‘எங்கு தங்குகிறாய்?’ எனக் கேட்டதும் இடக்காகப் பதில் சொன்னான். ஆழ்வார்க்கடியான் விடாமல், ‘நீ கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்குவதாயிருந்தால் எனக்கு உன்னிடம் ஒரு உதவி தேவைப்படுகிறது’ எனக் கூறினான். தான் செல்லப் போகுமிடம் அவனுக்குத் தெரிந்திருந்தது வந்தியத்தேவனுக்குத் திகைப்பாக இருந்தது. அதைக் குறித்து அவன் எப்படி எனக் கேட்க,  ‘பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சம்புவரையரின் மரியாதை வழங்கப்பட்டு  அங்குதான் செல்கின்றன;  மேலும், நாடெங்கிலும் இருந்து விருந்தாளிகள் இன்று இங்கு வரப்போகிறார்கள்’ என்று ஆழ்வார்க்கடியான் கூறவும், பழுவேட்டரையர் போன்ற மாவீரரை இன்று அந்த மாளிகையில்  சந்தித்துப் பழக வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுக்கு ஏற்பட்டாலும், அவருடைய படைவீரர்களின் அதிகார அலட்சியம் அவனுக்குக் கசந்தது. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், அன்றிரவு சம்புவரையர் மாளிகையில் நடக்கும் குரவைக்கூத்து, களியாட்டம் போன்றவற்றைப் பார்க்க வேண்டுமென்றும், தன்னை ஒரு பணியாள் போலப் பொய் சொல்லி அவனுடன் அங்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்டான். வந்தியத்தேவன் அவ்வாறெல்லாம் மோசடிக் காரியத்துக்கு உடன்பட மறுத்து, தான் தன்னுடன் படித்த சம்புவரையர் மகனான கந்தமாறவேளின் நண்பன் என்ற உரிமையில் போவதாகக் கூறினான். அப்படியென்றால் அவனுக்கே இன்றைக்கு அங்கு தங்குவது சிரமம்தான் எனக் கூறினான், ஆழ்வார்க்கடியான். பேசிக்கொண்டே தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான், வீர நாராயண ஏரியை ஒட்டியிருந்த வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்தியத்தேவனை அழைக்க, அவனும் உடன் சென்றான். வீர நாராயணர் கோவிலைப் பற்றிய ஒரு அறிமுகம்: முதலாம் பராந்தகச் சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில், இராஷ்டிரகூட மன்னர்கள் படையெடுத்து வருவார்கள் என எதிர்பார்த்து, பாதுகாப்புக்காகத் தன் மகன் இராஜாதித்தன் தலைமையில் ஒரு பெரிய சைன்யத்தைத் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். படைவீரர்கள் வேலையின்றி இருப்பதைக் கண்ட இராஜாதித்தன், குடிமக்களுக்கு உதவும் வகையில் கொள்ளிடத்திலிருந்து வீணாகும் வெள்ள நீரின் ஒரு பகுதியைச் சேமிக்க ஒரு ஏரியை உருவாக்கி, அதற்கு தன் தந்தையின் இன்னொரு விருதுப் பெயரான வீர நாராயணன் ஏரி எனப் பெயரிட்டான். ஏரிக் கரைகளைக் காக்க அந்நாளில் பெருமாளுக்குக் கோயில் கட்டுவது வழக்கம். அந்தக் கோவிலுக்குத்தான் இப்பொழுது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் வந்திருக்கிறார்கள். ஆழ்வார்க்கடியான் பக்திப் பரவசத்தில் கண்ணீர் வழிய உருகி, பாசுரங்களைப் பாடுவதைக் கண்ட வந்தியத்தேவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது மதிப்பு உண்டாகியது.  அர்ச்சகர் ஈசுவர பட்டரிடம் தீர்த்தம் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தவுடன் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானிடம் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டான். பதிலுக்கு ஆழ்வார்க்கடியான் கேட்ட உதவி வந்தியத்தேவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பழுவேட்டரையருடன் மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஒரு சீட்டு தருவதாகவும், அதை சம்புவரையர் மாளிகையில் தங்க நேர்ந்தால் அந்தப் பெண்ணிடம் சேர்த்து விடுமாறும் ஆழ்வார்க்கடியான் கூறியதைக் கேட்ட வந்தியத்தேவன், படபடப்படைந்து கோபப்பட்டான். ஆழ்வார்க்கடியான் அதைப் பொருட்படுத்தாமல், ‘முடியாது என்றால் பரவாயில்லை; நீ இந்த உதவியை எனக்குச் செய்திருந்தால், பின்னால் நானும் உனக்கு உதவ வசதியாய் இருக்கும்’ எனக் கூற, வந்தியத்தேவன் எரிச்சலில் உடனே அங்கிருந்து குதிரையிலேறிக் கிளம்பி விட்டான். சம்புவரையரின் மாளிகையை வேகமாய் நெருங்கியவன், பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்தான். தயங்கி நின்றால் விசாரிப்பார்கள் என்று எண்ணி, குதிரையைத் திறந்திருந்த பெரிய கோட்டையின்  வாசலுக்குள்  வேகமாக இட்டுச் சென்றான். ஆனால் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி அவன் துடுக்குத்தனத்தை விசாரிக்க ஆரம்பித்தனர். அவன் யார் என விசாரித்ததற்கு, ‘என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்; என் நாடு திருவல்லம்; என் குலத்து முன்னோர்களின் பெயர்களை உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள், தெரிந்ததா?’ என வீரமாகக் கூறினான். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் ஏற்கனவே சீண்டிய குதிரையையும் அவர்கள் ஏளனமாய்ப் பேசுவதைக் கண்ட வந்தியத்தேவன் சட்டென ஒரு யுக்தியைச் செயல்படுத்தினான்.   குதிரையை விட்டால் திரும்பிப் போவதாக அமைதியாக வந்தியத்தேவன் கூறினான். கயிற்றை வீரர்கள் விட்டவுடன், உடைவாளை உருவிக் கொண்டு பெரும் வேகத்துடன் கோட்டைக்குள்ளே சென்றான். தடுத்த வேல்கள் விழுந்தன. சுற்றியும் வந்த வீரர்கள் சிதறினர். கோட்டைக்கதவு சாத்தப்பட்டது. வீரர்கள் ‘பிடி.. பிடி..’ என சுற்றி வளைத்தனர். எல்லோரும் சுற்றி வளைத்ததும், வந்தியத்தேவன் குதிரையிலிருந்து தாவிக் குதித்தான். ‘கந்தமாறா.. கந்தமாறா.. என்னைக் கொல்கிறார்கள்’ என சத்தம் போட, நெருங்கி வந்த வீரர்கள் அவன் தங்கள் எஜமானனின் மகன் பெயரைக் கூறவும் தயங்கி நின்றனர். மேல் மாடத்திலிருந்து செங்கண்ணன் சம்புவரையர், தன் மகன் கந்தமாறனை அழைத்து ‘என்ன கலகம்?’ என்று பார்த்து வரச் சொன்னார். கந்தமாறன் வரும்வரை அனைவரும் அப்படியே நின்றிருந்தனர். பிடித்த கத்தியுடன் தனியொரு வீரனாக நின்றிருந்த வந்தியத்தேவனைப் பார்த்ததும், “வல்லவா.. நண்பா.. நீதானா?” என வியந்து கட்டிக் கொண்டான் கந்தமாறன். “இதுதான் நீ எனக்களித்த வரவேற்பா?’ என வந்தியத்தேவன் கூறவும், சுற்றி இருந்த வீரர்களைக் கடிந்துகொண்டு, வந்தியத்தேவனை அணைத்தபடி வெகு உற்சாகமாக உள்ளே கூட்டிச் சென்றான் கந்தமாறன். (கல்கியின் வார்த்தைகளில்: இளம்பிராயத்தில் நட்பும் காதலும்தான் பரவசப் படுத்தக் கூடியவை. காதலுக்காவது சில துன்பங்கள் உண்டு; நட்புக்கு அதுவும் கிடையாது) கந்தமாறன் வந்தியத்தேவனை, தன் தந்தை சம்புவரையரிடம், உற்சாகமும் பெருமையுமாகத் ‘தன் நண்பன்’ என அறிமுகப்படுத்த, அவர் அத்தனை மகிழ்ச்சியாகப் பேசவில்லை. ‘கலவரத்திற்கு காரணம் இவன்தானா?’ என்றும், இருட்டியதற்குப் பிறகு இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்ததையும் அவர் குறை கூறியது கந்தமாறனுக்கு வருத்தமாய் இருந்தது. அடுத்து வந்தியத்தேவனைப் பழுவேட்டரையரிடம் கூட்டிச் சென்றான். பழுவேட்டரையரின்பால் வந்தியத்தேவன் கொண்டிருந்த ஈடுபாட்டைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு, ‘மாமா. இவன் என் நெருங்கிய நண்பன். வாணர் குலத்தவன். நாங்கள் எல்லைக்காவல் புரிந்தபோது உங்களைப் பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டே இருப்பான். தங்கள் உடம்பில் போரினால் ஏற்பட்ட அறுபத்து நான்கு காயங்கள் இருப்பது உண்மைதானா என எண்ணிப் பார்க்க வேண்டுமென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான்’ எனப் பெருமையாகக் கூறினான். பழுவேட்டரையர் குதர்க்கமாக, ‘எண்ணிப் பார்க்கவில்லையென்றால் நம்ப மாட்டாயா? வாணர் குலத்துக்கு மட்டும்தான் வீரம் சொந்தமா?’ என்று கேட்கவும், இருவரும் எரிச்சலும் வருத்தமும் அடைந்தார்கள். வந்தியத்தேவன் சுதாரித்தபடி, ‘ஐயா, பழுவேட்டரையரின் புகழ் குமரி முதல் இமயம் வரை பரவியிருக்கிறது. சந்தேகிப்பதற்கு நான் யார்?’ எனப் பொறுமையாகக் கூறவும், ‘நல்ல மறுமொழி’ என பழுவேட்டரையர் அமைதியாகி விட்டார். சம்புவரையர் வந்தியத்தேவனுக்கு உணவளித்துவிட்டு சீக்கிரம் படுக்க வைத்துவிட்டுத் திரும்புமாறு கந்தமாறனுக்குக் கட்டளையிட்டார். அந்தப்புரத்துக்கு வந்தியத்தேவனைக் கூட்டிச் சென்ற கந்தமாறன், தன் அன்னையை அவனுக்கு அறிமுகப் படுத்தினான். அன்னையை வணங்கிய வந்தியத்தேவன் அவருக்குப் பின்னால் ஒளிந்ததுதான் கந்தமாறன் முன்பு தன்னிடம் சொல்லியிருந்த அவனது தங்கை மணிமேகலையாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். பின், அங்கிருந்த பெண்களின் கூட்டத்தில், ‘பல்லக்கில் வந்த பெண் இருக்கிறாளா?’ என்று கண்களால் தேடினான். தொடரும். சவிதா

பொன்னியின் செல்வன் – முன்னுரை

பொன்னியின் செல்வன் – முன்னுரை

பொன்னியின் செல்வன் – என்றைக்குமே சுவையூட்டும் ஒரு புதினம்தான். பல நடிகர்களும் இயக்குனர்களும் திரைப்படமாக எடுக்க விரும்பிய ஒரு கலைப் படைப்பு. எத்தனை விமர்சனங்கள் இருந்தபோதும், ‘படிக்க முடியவில்லை’ எனப் புலம்புவர்கள் அதிகம். வாசிப்புப் பழக்கமில்லாதவர்கள், நீண்ட நெடிய நாவலைச் சுவைக்க முடியாமல், அலமாரியில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வெளியாகிப் பல பத்தாண்டுகள் கடந்தும், இன்னமும் அதிகமான அளவில் விற்பனை ஆவது பொன்னியின் செல்வன்தான் என்பது வெளிப்படை. பொன்னியின் செல்வனை வாசிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் நிறைய செயலிகளும் ஒலிப் புத்தகங்களும் இருக்கின்றன. ஆனபோதும் பலருக்கு இது அடைய முடியாத ஆடம்பரம். படிக்க முயல்பவர்களில் சிலர், நீண்ட வர்ணனைகள், கிளைக்கதைகள், நாவலின் நீளம் போன்றவற்றால் அயர்ச்சியுற்று, பாதியில் விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் பொன்னியின் செல்வனை முப்பது முறைக்கு மேல் படித்திருக்கிறேன். எல்லாக் கதாபாத்திரங்களும் என் மனதில் அழுந்தப் பதிந்தவை. என் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு ஏற்றவாறு அவர்களுடைய மொழியில் தினமுமே படுக்கப் போகும் முன் கதையாகச் சொல்லியிருக்கிறேன். இருவரும் அதை ஒரு வரிகூடப் படித்ததில்லை என்றபின்னும், இன்னமும் கதாபாத்திரங்களை மேற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த முயற்சியைத் தொடங்கி இருக்கிறேன். திரைப்படமாகப் பார்த்தால் இன்னமும் நன்றாகப் புரியக்கூடும்தான். ஆனால், எழுத்துலகத்துக்கே சம்பந்தப்பட்ட சில விவரணைகளைக் காட்சிப் படுத்துதல் மிகக் கடினம் அல்லது முடியாது. எனவே, வாசிக்க ஆசைப்பட்டும், நேரமோ பொறுமையோ வாய்க்காதவர்களுக்காக சுருக்கப்பட்ட வடிவில் பொன்னியின் செல்வன் புதினத்தைத் தருகிறேன். இயன்றவரை எல்லா நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறேன். சில சுவையான கட்டங்களைத் தற்காலத்துடன் பொருத்திச் சொல்லியிருக்கிறேன். கல்கியின் நகைச்சுவை உணர்வை அங்கங்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. சுவை கெடாத வண்ணம் எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அறிமுகமாகக்கூட இதைக் கருதலாம்.  இதைப் படித்துவிட்டு மூலத்தைத் தேடிப் படிக்கும் எண்ணம் வர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.   பொன்னியின் செல்வன், கல்கி இதழில் தொடராகத்தான் வெளிவந்தது. போலவே, இந்தச் சுருக்கப்பட்ட வடிவமும் சுவடு இதழில் தொடராகவே வெளியாகவுள்ளது. இந்தத் தொடர் குறித்தான அறிவிப்பு வெளியான உடனே, சுவடு வாசகர்கள் காட்டிய ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. கதையைத் தொடங்குவதற்கு முன் சில வரிகள்: பெரும்பாலானவருக்கு இந்தத் தலைப்பு, மன்னன் இராஜராஜ சோழனைக் குறிக்கிறது என்பதுகூடத் தெரியாது. இந்தக் கதை ஒரு மனிதனின் – மன்னனின் முழுமையான வாழ்நாள் வரலாறு அல்ல. மிக முக்கியமான அரசனாக வரலாற்றில் பதியப்பட்டவரின் வாழ்க்கைத் தொகுப்பு அல்ல. அவன் அரசனாவதற்கு முன்பான ஒரு சிறிய காலகட்டத்தை மட்டுமே இது விவரிக்கிறது. அதில் நடந்த துரோகங்கள், நம்பிக்கை, போர், இயற்கைச் சீற்றம், சோழ மண்ணின் பெருந்தன்மை, ராஜாங்க அலசல்கள், அரசியல், உயர்ந்த மனிதர்களின் அறம் என எல்லாவற்றையும் தொட்டுப் போகிறது. காலமும் இடமும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. என்னதான் தலைப்பு இராஜராஜசோழனைச் சொல்லியிருந்தாலும், இந்தப் புதினத்தின் முக்கிய நாயகன் வந்தியத்தேவன்தான். அவனைச் சுற்றித்தான் கதைக்களம் நகரும். தஞ்சையையும் சுற்றுப்புறத்தையும் தெரிந்தவர்களுக்கு, இதில் இடம்பெறும் இடங்களும், நடந்த விஷயங்களையும்  தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்வது எளிது. மற்றவர்கள் வரைபடத்தின் உதவியோடு அந்த ஊர்களைப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் இணையும் இடம், கதாபாத்திரங்கள் சந்திக்கும் நிகழ்வு, அனைத்தும் ஒரு நேர்கோடாய், தொய்வில்லாமல் போகக்கூடிய நாவல் இது. கல்கியின் வர்ணனைகள், விவரணைகள் நம்மை அந்தக் காலத்திற்கே கொண்டு போய் விடக்கூடியன. அந்த வசனங்களும், நகைச்சுவையும், நடையும் வெகு சுவாரசியம்தான். ஆனாலும் அவசர உலகமாகிவிட்ட காலத்தில், ஆர்வம் உள்ளவர்கள் சுருக்கமாகவேணும் வாசிக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, சுவை கெடாமல் சுருக்க முயன்றிருக்கிறேன். மீண்டும் நினைவூட்டுகிறேன், வர்ணனைகளோ, மேலதிகமான விவரங்களோ, கல்கியின் பகடியும் எள்ளலுமான நடையோ இதில் வாய்க்காது. சுமார் பத்து அத்தியாயங்களோ அதற்கும் மேலோ  ஒரே அமர்வில் படிக்கும் வண்ணம் சுருக்கி எழுதப்பட்டது. புது வெள்ளம், சுழல் காற்று கொலைவாள் மணிமகுடம் தியாக சிகரம். என ஐந்து பாகங்கள் கொண்ட புதினத்தை, கிட்டதட்ட ஒரு பாக அளவில் சுருக்கப்பட்டுள்ளது. ஆடி 18 முதல் புதுவெள்ளம் பொங்கிப் பெருக்கெடுக்க உள்ளது. வாசிக்கத் தயாராகுங்கள் – பொன்னியின் செல்வன் – சுருங்கிய வடிவில் – சுவடு இணைய இதழில். சவிதா