ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் சிலர், அதே பள்ளி மாணவர் மீதும் அவர் சகோதரி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது சமூகத்தில் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. மாணவர்களிடம் மிக வேகமாகப் பரவிவரும் மது மற்றும் இதர போதைப் பழக்கங்கள், வகுப்பறையிலும் பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் போன்றவற்றைக் குறித்தெல்லாம், இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் பேசுவதும், பின்னர் வழக்கம்போல அடுத்த சம்பவம் நடக்கும்வரை அவற்றையெல்லாம் மறந்துவிட்டு இருப்பதும் நம் சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.  குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்துக்குமான ஒற்றைக் காரணம் என்று கொரோனாவைக் கைகாட்டிக் கடந்து சென்றுவிடுகிறோம்.   மாணவர்களிடம் நிகழ்ந்துவரும் இந்த மாற்றங்களுக்கு என்னவெல்லாம் பின்னணிக் காரணங்களாக இருக்கின்றன? மாணவர்கள் ஏன் அழிவுப் பாதையில் செல்கிறார்கள்? ஆசிரியர்களால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாதா? முடியும். கண்டிப்பாக ஆசிரியர்களால் நல்வழிப்படுத்த முடியும். அவர்களை ஆசிரியர் பணியை மட்டும் செய்யச் சொன்னால், மாணவர்கள் செய்யும் குற்றங்கள் ஓரளவு குறையும். முன்பெல்லாம் ஆசிரியர்களுக்கு, பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது மட்டுமே வேலையாக இருந்தது. அதனால் அவர்களுக்கு மாணவர்களோடு செலவிட நிறைய நேரம் கிடைத்தது. ஆசிரியர்களால் மாணவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்களின் நிறை குறைகளை, பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் தற்போதைய கல்விச்சூழலில், கற்பித்தல் பணி மட்டுமல்லாமல், மேற்கொண்டு பல்வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. அலுவலர்கள் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அதனால் அவர்களுக்குப் பாடப் புத்தகத்தில் இருக்கும் பாடங்களைச் சொல்லித்தரவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி அவர்கள் மாணவர்களோடு உரையாடி, அவர்களின் நிறை குறைகளைச் சரி செய்ய முடியும்? ஒரு புரிதலுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள், பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல், சுமத்தப்படும் கூடுதல் சுமைகள் ஆகியவை இங்கே தரப்பட்டுள்ளன. மன்றங்கள் 1) தமிழ் மன்றம்2) ஆங்கில மன்றம்3) கணித மன்றம்4) அறிவியல் மன்றம்5) தொன்மை மன்றம் (சமூக அறிவியல்)6) திரைப்படம் காட்சிப்படுத்துதல் மன்றம்7) தமிழ் இலக்கிய மன்றம்8) ஆங்கில இலக்கிய மன்றம்9) வினாடி வினா மன்றம்10) வானவில் மன்றம்11) குழந்தைகள் பாதுகாப்பு மன்றம்12) போக்சோ மன்றம்13) போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம்14) சாலைப் பாதுகாப்பு மன்றம்15) தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம்16) சுற்றுச்சூழல் மன்றம்17) நூலக மன்றம்18) முன்னாள் மாணவர்கள் மன்றம்19) JRC20) SCOUT21) NSS22) NCC நலத்திட்டப் பதிவேடுகள் 1) பாடப்புத்தகங்கள்2) பாடக்குறிப்பேடுகள்3) புத்தகப் பை4) காலணிகள்5) அட்லஸ்6) சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்7) இலவசச் சீருடை விவரங்கள்8) Sanitary Napkin for Girl Students Details9) Geometry Box10) இலவச சைக்கிள்11) மடிக்கணினி கூடுதல் வேலைகள் 1) Student Admission – Register2) Student Transfer Certificate – Register3) Potential Dropout Details4) OOSC Details5) X, XII STD – Nominal Roll6) Health & wellbeing ( Students Height, Weight, Eye Power issues, …etc – 48 questions)7) School Timetable8) இல்லம் தேடிக் கல்வி9) நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பிள்ளை10) புதுமைப் பெண்11) 7.5% இட ஒதுக்கீடு12) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், பதிவேடு பராமரித்தல்13) எண்ணும் எழுத்தும்14) மாணவர்களின் பேருந்துப் பயண அட்டை15) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு16) மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல்17) RBSK & IEDSS18) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டப் பதிவேடு கல்வி உதவித்தொகைப் பணிகள் 1) Pre Matric SC/ST Scholarship2) Post Matric SC/ST Scholarship3) Minority Scholarship4) பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை5) சுகாதாரத்துறை பெற்றோரின் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை6) MBC Scholarship இதர பணிகள் 1) SSLC / HSC (+1, +2) Exam Duty2) Online Entry NR for 10th Students3) Supplementary Exam (June, September)4) NMMS (VIII STD) Exam5) NTSE (X STD) Exam6) ஊரகத் திறனாய்வுத் தேர்வு7) ESLC (VIII STD) Exam8) TNPSC Exam9) Election Duty10) BLO Duty11) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு12) Stock Register Maintain Duty13) Treasury / Pay Bill work14) TRI certificate15) Acutance Register for Regular Teachers / Part Time Teachers / Non-Teaching Staff16) Sports competitions17) Over all Competitions18) கலைத் திருவிழா19) CRC & BRC Training / RP Training இன்னும் இதுபோலப் பல வேலைகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்குவதால், அவர்களின் கற்பித்தல் பணி பெருமளவில் பாதிக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனும் பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் தேவையான – அவசியமான செயல்களாக இருந்தாலும், இந்தப் பணிகளுக்கென ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை – பணியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கு பாடத்திட்டங்களை நடத்துவதற்கு நேரம் போதாத காரணத்தால், அவர்களால் நலத்திட்டச் செயல்பாடுகளிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. இதுபோன்ற இரட்டைக்குதிரைச் சவாரி நிலையால் பெரும்பாலான திட்டங்கள் பெயரளவிலேயே இருக்கின்றன. நல்ல திட்டங்கள்கூட ஏட்டளவில் நின்றுவிடுகின்றனவே தவிர, செயல்பாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது. இதற்கிடையில், மாணவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக மாற்றும் சூழலும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏன் உங்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது, ஏன் மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளது போன்ற உயரதிகாரிகளின் கேள்விகளால் ஆசிரியர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. அந்த அழுத்தமானது ஒரு மாணவனை எப்படியாவது 35 மதிப்பெண் எடுக்கவைத்து, தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்பட வைக்கிறதே தவிர, அந்த மாணவன் பாடத்தைப் புரிந்துகொண்டாரா? என்பதில் கவனம் செலுத்த முடிவதில்லை. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதை ஆசிரியர்கள் முழுமனதோடு ஏற்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிக்கக்கூட ஆசிரியர்களுக்குத் தற்போது உரிமை இல்லை என்பதே உண்மை. கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்களே தாக்குவது, பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்குவது, மாணவர்கள் உடனுக்குடன் உணர்வுவயப்பட்டு விபரீத முடிவுகளை எடுப்பதால் நேரிடும் பேரிழப்பு மற்றும் அதன் பின்விளைவுகள் என்று, ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லாத சூழலும் சேர்ந்தே நிலவுகிறது. இத்தனை அழுத்தங்களுக்கு இடையில்தான் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி என்பது வெறும் பாடங்களை மட்டும் கற்பித்து, மாணவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாக உருவாக்கும் செயல்பாடு அல்ல. நல்லவை, அல்லவை, சமூக அக்கறை, தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் துணிவு உள்ளிட்ட ஏராளமான வாழ்வியல் கூறுகளை இளைய தலைமுறைக்குக் கடத்தவேண்டிய இடங்களே பள்ளிக்கூடங்கள். ஆனால், தற்கால பொருளாதாரமய வாழ்க்கைச்சூழலில், மாணவர்களை வெறுமனே மதிப்பெண் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வேலையை, தனியார் பள்ளிகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் நமது கல்வித்துறை செயல்படுத்தி வருவது வேதனைக்குரியது. தெருக்கள்தோறும் திறந்து வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள், மதுப் பழக்கத்துக்கு ஆளான பெற்றோர் மற்றும் சுற்றத்தார், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி, மாஸ் ஹீரோ மன நிலையை விதைக்கும் திரைப்படங்கள், உள்ளங்கையில் தவழும் சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் என மாணவர்களின் கவனம் மற்றும் நடத்தைச் சிதைவுகளுக்கு ஏராளமான காரணிகள் இருந்தாலும் அவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வெறும் ஆவண எழுத்தாளர்களாகவும் பதிவேடு பாராமரிப்பாளர்களாகவும் மட்டுமே ஆசிரியர்களை மாற்றி வைத்துள்ளது இன்றைய கல்வித்துறை. கொரோனா இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமனம் தேவை என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. வழக்கம்போலவே அந்தக் கோரிக்கை அரசின் கவனம் பெறாமல் போக, ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கேட்டுக்கேட்டு ஓய்ந்துபோனதால் தற்போது அவர்களும் அந்தக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டனர். முன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருந்தது. அந்த வகுப்பில் மாணவர்களுக்கு நீதிக் கருத்துகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. தற்போது அந்த வகுப்புகள் இல்லை. திருக்குறளில் இல்லாத நீதி போதனைகள் இல்லை. ஆனால் தற்போதைய கல்விமுறை ஒவ்வொரு திருக்குறளுக்கும் முழுமையான விளக்கத்தைக்கூடச் சொல்லித்தருவதில்லை. ஒரு குறளுக்கு இரண்டு வரிகளில் விளக்கம் கொடுக்கப்பதோடு முடிந்துவிடுகிறது. அந்த விளக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மாணவர்களுக்குப் பொருள் தெரிவதில்லை. பெரும்பாலான ஆசிரியர்களும் தங்களின் வேலைப்பளுவால் விரிவான விளக்கத்தைச் சொல்லித் தருவதில்லை. மொத்தத்தில் இளைய தலைமுறையோடு உரையாட பெற்றோர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. ஆசிரியர்களுக்கும் நேரம் தரப்படுவதில்லை. இதனால், சமூகத்திலும் இணையத்திலும் தாங்கள் காணும் நிகழ்வுகளின் தாக்கத்தில் எதிர்காலத் தூண்கள் துருப்பிடித்துச் சிதைந்துகொண்டுள்ளன.   இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டுவந்து சீர்திருத்தவில்லை என்றால் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.

மாமன்னன்

மாமன்னன்

திரை விமர்சனம் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குப் பழகிய சமூகத்தைச் சார்ந்த, தன் இயற்பெயரே மறந்த, மறக்கடிக்கப்பட்ட மண்ணு, தனது அடுத்த தலைமுறையான மகன் அதிவீரனால் ஆதிக்கச் சமூகத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி, மாமன்னனாக நிமிர்ந்த கதைதான், மாரி செல்வராஜ் எழுதி இயக்கி, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீரத்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘மாமன்னன்’ படத்தின் கதைச்சுருக்கம். “பன்னி மேய்க்கிற பசங்க கோவில் குளத்துல குளிக்கிறாங்களாம்… அவன்கள இன்னிக்கு விடக்கூடாது” என்று அந்த கிராமத்துப் பெரியவர்கள்(!) செய்யும் செயலிலேயே தெறிக்கிறது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடூரம். அடுத்து, நல்லிணக்கத்தைப் ‘பாதுகாக்கும்’ பொருட்டு, ‘கோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து நான்கு சிறுவர்கள் மரணம்’ என்கிற பத்திரிகைச் செய்தியோடு முடித்துக்கொள்வது, உச்சபட்சக் கொடூரம். நியாயம் கேட்கும் மண்ணுவை அப்போதைய எம்.எல்.ஏ சுந்தரம் மன்னித்துவிட நிர்ப்பந்திக்கிறான். இதிலிருந்து தப்பிப் பிழைத்தும், அப்பாவின் மௌனத்தைச் சகியாமலும் அந்த ஊரைவிட்டு ஓடிய அதிவீரன், ஊருக்குத் திரும்பியபின் தன் ஆசானிடம் கற்றுக்கொண்ட ‘அடிமுறை’ தற்காப்புக் கலையைக் கற்பிக்கும் பயிற்சிப் பள்ளி நடத்துகிறான். ஒரு கட்டத்தில், அதே ஊரைச் சேர்ந்த லீலா நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புக்கும் அங்கு இடம் அளிக்கிறான். இதனால் பாதிக்கப்படும் சுந்தரம் கல்விக் குழுமம், ஆட்களை அனுப்பி அந்தப் பயிற்சி வகுப்பை அடித்து நொறுக்குகிறது. கொதித்தெழுந்த அதிவீரன், இளைஞர்களோடு சென்று அக்கல்விக் குழுமத்தை நாசம் செய்கிறான். தற்போதைய மாவட்டச் செயலாளரான சுந்தரத்தின் மகன் ரத்தினவேலு, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, எம்.எல்.ஏ. மண்ணுவையும் அதிவீரனையும் அழைக்கிறான். கட்சித் தொண்டனாக அன்று சுந்தரத்தின் எதிரில் நின்ற மண்ணு, அவன் மகன் ரத்தினவேல் தற்போது உட்கார்ந்திருக்க, எம்.எல்.ஏ. மாமன்னனாக இன்றும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துப் பொங்குகிற அதிவீரன், அவரை உட்காரச் சொல்கிறான். திடுக்கிட்ட ரத்தினவேலு, “யார் சொன்னாலும் அப்பா உட்கார மாட்டாருப்பா..” என்று சொல்ல, ‘நீ உட்காரச் சொன்னியா?’ என்று ரத்தினவேலுவிடம் கேட்பதோடு, மாமன்னனை நிர்பந்தப்படுத்தி உட்கார வைத்துவிடுகிறான் அதிவீரன். சகிக்க முடியாத ரத்தினவேலு அதிவீரனைத் தாக்க, அவன் திருப்பித் தாக்க, மிகப்பெரிய கைகலப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் இதில் தலையிட, அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை, தேர்தலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கட்டும் என்று முடிவாகிறது. “நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கு” என்கிற அதிவீரன், அதை அடைந்தாரா என்பதுதான் ‘மாமன்னன்’ படத்தின் மீதிக் கதை. பார்த்ததும் சிரித்தே பழக்கப்பட்ட நம்மைக் கண்கலங்க வைக்கிறார் வடிவேலு. “இனிமேலாவது யாருக்கும் எங்கயும் இது நடக்கக் கூடாது” என்று முதல்வரிடம் நா தழுதழுக்கக் கோரும் மாமன்னனாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் வடிவேலுவின் மாறுபட்ட அசத்தலான நடிப்பு, “அவங்கள நிக்க வைக்கிறது என்னோட அடையாளம். இவன உட்கார வைக்கிறது என்னோட அரசியல்” என்று, கழுத்து நரம்பு புடைக்க, சாதிய ஆதிக்கமும் அரசியல் அதிகார வெறியும் கொப்பளிக்கும் இரத்தினவேலுவாக ஃபகத் பாசிலின் மிரட்டலான பங்களிப்பு,  “என்னடா பண்ணுவீங்க? உங்க ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களா? கொன்றுவீங்களாடா..?” என்று கொந்தளிக்கும் அதிவீரனாக உதயநிதி ஸ்டாலினின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டதான நடிப்பு, “இங்கு மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்குப் பைத்தியமே பிடிச்சுடும்…” என்று பொருமும் நீலாவாக, கிடைத்த வாய்ப்பில் பழுதில்லாமல் செய்த கீர்த்தி சுரேஷ்,  பாடல்களிலும் பின்னணியிலும் கதைக்கருவுக்கு நெருக்கமாக, இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ள ஏ.ஆர்.ரகுமான், வேட்டை நாய்கள், குதிரை, புத்தர்,  அம்பேத்கார், பெரியார் போன்ற வழக்கமான குறியீடுகள் இருந்தாலும் பிரச்சார நெடி வீசாமல், இன்னும் பரவலாக நிலவும் சாதிக் கொடுமையை, அது ஏற்படுத்தும் வலியை, செதுக்கியது போன்ற அழுத்தமான பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள மாரி செல்வராஜ் என, ‘மாமன்னன்’ பலவகையில் ஒரு மாறுபட்ட படம். அழகம்பெருமாள் (சுந்தரம்), கீதா கைலாசம் (மாமன்னனின் மனைவி வீராயி), லால் (முதல்வர் சிந்தனை ராஜன்), சுனில் ரெட்டி (ரத்தினவேலுவின் சகோதரன்), ரவீனா ரவி (ரத்னவேலுவின் மனைவி) போன்ற துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். இசை போன்று, கதைக்கருவுக்கு நெருக்கமாகவே வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலும் காட்சிகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ள தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பும் கவனம் பெறுகின்றன.  யுகபாரதியும் அறிவும்  எழுதியுள்ள பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. வடிவேலு பாடிய ‘ராசாக் கண்ணு’ அருமை. எம்.எல்.ஏ.வைச் சுற்றி, ஒரு பத்து பேராவது எப்போதும் இருப்பது எங்கும் நடப்பதுதான். எப்போதும் மாமன்னன் ஒத்தையாகவே நிற்பதும் அந்தத் தொகுதி மக்களுக்கு சாதி வித்தியாசமின்றி நேர்மையாக உழைத்த, அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை, ஒட்டுமொத்த கிராமங்களும் உள்ளே வரக்கூடாது என்று கூறுவதும்,  திடகாத்திரமான சங்க நிர்வாகிகளில் ஒருவரை, ரத்னவேலு  நாயைக் கொன்றதுபோல அடித்துக் கொன்றது குறித்து எவருமே கேள்வி எழுப்பாததும் நம்பக் கூடியவையாக இல்லை. இறுதிக் காட்சியில், வடிவேலு உள்ளே நுழைய, முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நிற்பதில், ரத்தினவேலுவின் மனைவியைக் குறிப்பிட்டு காட்டுவது, நயம். இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், அவர் சார்ந்துள்ள கட்சி, தலித் சமூகம், சமூக நீதி, வேங்கை வயல், முன்னாள் சபாநாயகர் தனபால் போன்றவற்றையெல்லாம் மறந்து, மறைத்து, ‘இப்படி எல்லாம் இப்போது எங்கு நடக்கும்? யார் சாதி பார்க்கிறார்கள்?’ என்று கேட்கிற, சுயசாதிப் பெருமை பேசுகிற மனநிலை கொண்டவர்கள், மாமன்னன் படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். இல்லையெனில், மனத்தளவில் அதற்கான பொறுப்புத் துறப்புடனும் திறந்த மனத்துடனும் படத்திற்கு வரலாம். அப்படி வந்தால் மட்டுமே, யாதொரு மனப்புழுக்கமும் இல்லாமல் திரைப்படத்தில் லயிக்கவும் முடியும். சாதிய இழிவுகள், ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய, முன்னெடுத்துச் செல்லும் தொடர்ப் பயணத்தில் ‘மாமன்னன்’ ஒரு சிறு பங்களிப்பு. மதிப்பெண்: 7.5/10

தேரி

தேரி

நூல் விமர்சனம் தேரி எனக்கு நெருங்கிய பூமி. பிறந்து வளர்ந்த பூமி. அந்த மண்ணின் மணத்துடன் ஒரு நாவல். அம்மன்புரம் சுனையும் முந்திரிக் காடுகளும் என் மனக்கண்ணில் இப்பவும் தோன்றுகின்றன. திருச்செந்தூர், திருவைகுண்டம் தாலுகாக்களின் மணற்பரப்பின் பொதுப் பெயர் தேரி.கடற்கரை மணலும் தேரி. சற்று உள்ளே வநதால் தாமிரபரணிக் கரைச் சரிவின் செம்மாந்த மணலும் தேரி. மணப்பாடு தாண்டியவுடன் கடலோரச் சாலையில் விரிந்து சிவந்திருக்கும் மணற்பரப்பும் தேரி. நெய்தலாயினும் மருதமாயினும் இரண்டுக்கும் இடையிலான இந்தத் தேரியானாலும் வளர்ச்சி என்ற சூத்திரத்தின் முன்பு திணைகளின் மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள். தான் நேசித்து உழைத்த தேரி நிலம், விமான நிலையத்திற்கு போகப்போகிற அதிர்ச்சியில் உறைந்துபோகிற எளிய மனிதன் மீது, ஒரு நேர்மறையான நம்பிக்கையை ஏற்றுகிற நாவலின் முடிவு நேர்த்தி. ஏற்ற இறக்கம் நிறைந்த செல்லக்குட்டியின் வாழ்க்கைப் பயிர், இந்தத் தேரியின் இன்னொரு நுனியைப் பிடித்துக்கொண்டு வளர்ந்துவிட முடியும் என்கிறார் ராஜேஷ் வைர பாண்டியன். கூட்டாம்புளி, சாயர்புரம், ஏரல், குரங்கணி, தென்திருப்பேரை, குரும்பூர், கானம், நாசரேத் என்று விரிந்து பரந்த இந்தச் செம்மண் தேரியின் மனிதர்கள், சீர்திருத்தக் கிறித்தவத்தின் உதவியால் கல்வியில் மலர்ந்த வரலாறு உண்டு. அநேகமாக சாதிவெறியை, மிக விரைவில் தங்கள் கல்வியினாலும் வணிகத்தில் இறங்கியதாலும் கடந்து வந்த மனிதர்கள் இவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் எத்தனைக் கல்வி அவர்களிடம் சேர்ந்திருந்தாலும் சாதிப் பெருமையும் தீண்டாமைக் கீழ்மையும் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதை இந்தத் ‘தேரி’ நாவல் சுட்டிக் காட்டுகிறது. இரண்டு தலைமுறைக் கதைகள், இருபது வருட இடைவெளியில் சொல்லப்படுகின்றன. தலைமுறை தாண்டியும் சாதிப் பெருமையும் தீண்டாமையும் அகன்றபாடில்லை. இந்த நாவலின் காலம் 90களில் முடிவதாகக் கூறலாம். அதற்குப் பிறகு 30 வருடங்கள் ஓடியபிறகும் தேரிக்காட்டில் சாதிவெறி இருக்கக்கூடும். முந்திரிக் காட்டு மறைவில் ஏதேனும் காதல் கதைகள் தோன்றி, தேரி மண்ணில் சாதி வெறியினால் புதைந்து போய்க்கொண்டிருக்கக் கூடும் என்பதே நாவலின் செய்தி. ஆனால் சாதிவெறி, குடும்ப மரபின் வழியாக வருகிறதெனச் சொல்ல முயல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. நிலஉடமையின் எச்சங்களான சாதியையும் மதத்தையும் 90களில் வேகமாக வளர்ந்து வந்த முதலாளியம் தனது பாதுகாவலாகப் பேணியதையும் இன்றைய தாராளமய உலகிலும் அதை வசதியாக, தனது நலன்களை வளர்த்துக் கொள்வதற்கான ஆயுதமாக வைத்துக்கொண்டிருக்கிறது அல்லவா? செல்லக்குட்டி சலவைத் தொழிலாளி. பட்டம் பெற்றிருந்தாலும் குலத்தொழிலைத் தொடருகிறான். மேல்தட்டுப் பெண் தங்கராணியுடன் அவனுக்குக் காதல். காதல் அவர்களுக்கு கனியவில்லை; காரணம் சாதி இழிவுதான். ஆனால் இன்னொன்றும் இருக்கிறது. தங்கராணியின் தாயார் செவ்வந்தியின் காதலின் விளைச்சலில் அந்தக் காரணம் இருந்தது. ஆனால் அந்தக் காதலும் சாதியால் தோற்றதுதானே? வெக்கை பாய்ந்த செம்மண் தேரியைக் களமாகக் கொண்டு, சுவையாக நகரும் இரண்டு காதல் கதைகளை வெகு இயல்பாகவும் வேகமாகவும் சொல்லியிருக்கிறார் ராஜேஷ் வைர பாண்டியன். இரண்டு கதைகளும் இணைகிற புள்ளியில் இன்னுமொரு எதிர்பாராத திருப்பத்தை வைத்து நாவலை சுவாரசியமாக்கியிருக்கிறார் நாவலாசிரியர். பாத்திரங்கள், அவற்றின் இயல்பு மாறாமல் படைக்கப் பட்டுள்ளன. மொழி நடை எளிய நெல்லை கிராமப் பகுதியின் வட்டார வழக்கில் மிளிர்கிறது. சாதிப் பெருமை பேசுகிற ஊரிலும் அதற்கெதிரான நல்லிணக்கம் பேசுவதற்கு ஒரு சிவப்புச் சட்டை அண்ணாச்சி வருகிற அழகு ரசிக்க வைக்கிறது. கதையாக்கம் மிக வழமையான முறைதான் என்றாலும் சொல்லியிருக்கும் முறை சுவையாக அமைந்திருக்கிறது. தேரிக் காட்டின் அத்தனை வாழ்வியலும் பொருந்துவதாக பாத்திரப் படைப்பையும் கதை நகர்வையும் அமைத்திருக்கிறார் நாவலாசிரியர். பணம் படைத்த முதலாளிகளின் பேராசையில், செழுமையான தேரி மணல் லாரிகளில் அள்ளப்பட்டுக் கொள்ளை போவதும் தேரி நிலத்தின் சுவையான நீராதாரம் உறிஞ்சப்பட்டு நகரங்களுக்குக் கடத்தப்படுவதும் சட்டமும் காவலும் பண முதலைகளின் பக்கமே சாய்வதும் நாவலின் கதையோடு உறுத்தாமல் சொல்லப்படும் நேர்த்தியை வாசகன் ரசிக்க முடியும். மண்ணில் கொள்ளையிட்டதை வாழையில் போட்டும் தோட்டத்தின் விளைச்சலை உப்பளத்தில் போட்டும் முதலாளியம் உபரியில் கொழிப்பதைப் போகிற போக்கில் சொல்கிற ஆசிரியர், தேரிக்காட்டு மனிதர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளாக இவை பார்க்கப்படுவதை முத்தாய்ப்பாகச் சொல்லி விடுகிறார். எளியவர்கள் வர்க்கமாகத் திரண்டுவிடாமல் பார்த்துக்கொள்கிற சாதுர்யத்தை, வளர்ந்து வரும் நாடுகளில் ‘வளர்ச்சி, வேலைவாய்ப்பு’ என்ற இரண்டு வேப்பிலை அடிப்புகளால் முதலாளியம் பாதுகாத்துக்கொள்கிறது அல்லவா? கலையும் பொருளியல் நோக்குகளும் கலவையாக நாவலின் கதையாடலில் ஊடுபாய்ந்திருப்பதை அனுமானிக்க முடிகிறது. செவ்வந்தி பாத்திரம் வித்தியாசமான படைப்பு. காதலில் தோற்றவள், தன் தோழியின் கொலைக்காகப் பழி வாங்கும் வன்மமும் தன் சொந்த மகளின் காதலில் குறுக்கே வரும் உறவுச் சிக்கலுக்கு தன் மகளைப் பலியாக்கும் பரிதாபமும் வியக்கவைக்கிறது. தங்கராணியின் பாத்திரம் பரிதாபம் நிறைந்தது. ஒருவகையாக அவள் பாதுகாப்பான கரங்களில் சேர்வதில் வாசகன் நிம்மதி அடைகிறான். சித்திரப்பூ, சாதி ஆணவத்திலும் ஆண்மைத் திமிரிலும் கசங்கிய மலர். செவ்வந்தி போல அவள் அரிவாள் தூக்க முடியவில்லையே. அவளுக்கு எந்த நியாயமும் கிடைக்காமல் போவதின் சமூக யதார்த்தத்தை நாவலின் பிற பாத்திரங்களில் யாருமே கேள்விக்குள்ளாக்காமல் போவது நாவலில் சிறிய குறைபாடு. வெட்சி, சற்றே காவியத் தன்மை பூசப்பட்ட பாத்திரம். அவளின் சுயநலமற்ற அன்பு செல்லக் குட்டியை மட்டுமல்ல; நம்மையும் வசப்படுத்துகிறது. இந்தத் தேரிக் காட்டின் இன்னோரு அழகு அசரியா, பாதாளமுனி மற்றும் செல்லக்குட்டியின் நட்பு. வாலிபமும் முதிர்ச்சியும் சேர்ந்த கலவையாக, படிக்கும் வாசகனை சொந்த வாலிப நினைவுகளுக்கு இட்டுச் செல்கிற வாசிப்பு அனுபவத்தைக் கடத்துகிறது. சுமார் 300 பக்கங்கள் கொண்ட நாவலை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கும் ராஜேஷ் வைர பாண்டியனுக்குப் பாராட்டுகள். இனி தூத்துக்குடி விமானநிலையச் சாலையைக் கடந்து செல்கையில் செல்லக்குட்டி நினைவுக்கு வருவான். நூல் பெயர் : தேரிஆசிரியர் : ராஜேஷ் வைர பாண்டியன்வகைமை : நாவல்வெளியீடு : உதிரிகள் பதிப்பகம்பக்கங்கள் : 291விலை : 440 ரூபாய்கள்