பொன்னியின் செல்வன் – 15

பொன்னியின் செல்வன் – 15

மூன்றாம் பாகம் – கொலை வாள் நாகப்பட்டின புத்த பிட்சுகள் சுந்தர சோழரைச் சந்திக்க வந்தபொழுது, ‘இலங்கை அரசுரிமையை அத்தீவின் புத்த சங்கம் ஒன்று இளவரசர் அருள்மொழி வர்மருக்குக் கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறியதைச் சாதகமாக்கி, பெரிய பழுவேட்டரையர் இளவரசரைக் கைது செய்யும் ஆணையை வாங்கியிருந்தார். அரசரும் அருள்மொழியிடம், ‘மதுராந்தகருக்கே பட்டத்தைக் கொடுத்து விடலாம்’ என்ற தன் விருப்பத்தை நேரில் சொல்லி ஏற்கச் செய்யலாம் என்ற காரணத்தினால்தான் அதற்குச் சம்மதித்தார். அருள்மொழிக்கு மக்களின் ஆதரவு அதிகமாய் இருந்ததால் அவரைக் கைது செய்து கொண்டுவரும்பொழுது, அது தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சம் பெரிய பழுவேட்டரையருக்கு இருந்தது. மேலும், வந்தியத்தேவன் மூலம் குந்தவை ஓலை அனுப்பியதும் அவன் யார் கையிலும் சிக்காமல் இலங்கைக்கு சென்றுவிட்டதும் அதை அதிகப் படுத்தியிருந்தன. எனவே, இலங்கையிலிருந்து இளவரசர் வரும்போதே யாரும் அணுகாவண்ணம் தஞ்சைக்குக் கூட்டி வந்துவிட வேண்டும் என்று யோசித்து கோடியக்கரைக்குக் கிளம்பினார். நந்தினியும் உடன்வருவதாகச் சொல்லவும் அவளுடன் சேர்ந்து பிரயாணம் செய்யும் ஆசையுடன் சம்மதித்தார். இருவரும் பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். நந்தினிக்கு ‘ரவிதாஸன் இலங்கை சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்தானா?’ என்று தெரிந்து கொள்வதும் வந்தியத்தேவன் மூலம் குந்தவை இளவரசருக்கு அனுப்பிய செய்தியைத் தெரிந்துகொள்வதும் நோக்கமாய் இருந்தன. நாகப்பட்டினத்தில் தனாதிகாரியாக தன் கடமைகளை முடித்துவிட்டு கோடியக்கரை வந்து, அவருக்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்ட  கூடாரத்தில் பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடனும் தன் பரிவாரங்களுடனும் தங்கினார். அப்போதுதான் சுழற்காற்று அடித்து ஓய்ந்திருந்தது. அச்சமயத்தில் பார்த்திபேந்திரனுடைய மரக்கலம் வந்து சேர்ந்தது. ஒரு படகில் பார்த்திபேந்திரன் கூடாரத்துக்கு வந்தான். பெரிய பழுவேட்டரையர் விசாரிக்குமுன் நந்தினி  முன்வந்து பேசினாள். பார்த்திபேந்திரன் அந்தக் கணத்தில் அவளின் செளந்தர்யத்தில் மதிமயங்கிப் போனான். அதைக்கண்டு பெரிய பழுவேட்டரையர் எரிச்சலடைய, நந்தினி இளவரசரைப் பற்றிக் கேட்க, சுய நினைவடைந்த பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற இளவரசர் கடலில் குதித்ததையும்,  காப்பாற்றியபின் அந்தப் படகு உடைந்து அனைவரும் மூழ்கிவிட்டதையும் பாதி உயிராய் தான் ஒருவன் மட்டுமே திரும்பியதாகவும் கூறினான்.  இளவரசர் மூழ்கிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதுமே பெரிய பழுவேட்டரையர் வேரற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்தார். நந்தினி நீர்கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த, தன் கையால் இளவரசரைத் தூக்கி  வளர்த்ததை நினைவுபடுத்திக்கொண்டு கலங்கியபடி பார்த்திபேந்திரனை வெகுவாகக் கோபித்துக் கொண்டார். இளவரசர் கோடிக்கரையில் கரையொதுங்க வாய்ப்பிருப்பதாக பார்த்திபேந்திரன் கூறவும், காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்தது வரை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நந்தினி வேண்டுமென்றே, ‘ஒருவேளை அவன் வந்த மரக்கலத்தில் இளவரசரை மறைத்து வைத்திருக்கலாம்’ என ரகசியமாகக் கூற, பழுவேட்டரையர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு மரக்கலத்தை சோதனை செய்ய ஆட்களுடன் விரைந்தார். அவனுடன் தனியே பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட நந்தினி, தன் சாகசத்தை பார்த்திபேந்திரனிடம் தொடங்கினாள். ஆதித்த கரிகாலனிடம் நந்தினி பற்றி அறிந்திருந்த பார்த்திபேந்திரன், அவளிடம் தாங்க முடியாத வெறுப்பை உமிழ்வதற்குக் காத்திருந்தவன், அவளைப் பார்த்த்தும் தன்வயம் இழந்து மகுடிமுன் ஆடும் பாம்பைப் போல் ஆகியிருந்தான். நந்தினி பல்வேறு சொற்களால் அவன் இதயத்தில் தன் மீதான பரிதாபத்தை வளர்த்தெடுத்தாள். பார்த்திபேந்திரன் அவளை பழுவேட்டரையரிடமிருந்து விடுவித்து, தன்னுடன் கூட்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்குமளவுக்கு அவனை மயக்கமூட்டியும் பரிதாபத்துகுரியவளாகத் தன்னைக் காட்டிக்கொண்டும் பேசினாள். அவன் அப்படி மயங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஆதித்த கரிகாலனை சம்புவரையர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டுமென நந்தினி கேட்டுக் கொண்டாள். ‘ஆதித்த கரிகாலனுக்கு சம்புவரையர் மகளான மணிமேகலையை மணம் செய்து வைத்துவிட்டால் தான் நிம்மதி அடைந்துவிடுவேன்’ எனவும் பார்த்திபேந்திரனிடம் பசப்பினாள். கலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரிய பழுவேட்டரையர் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்தார். பார்த்திபேந்திரனைக் கைது செய்ய ஆணையிட்டார். ஆனால், கைது செய்ய வந்தவரகளைத் தாக்கிவிட்டு பழுவேட்டரையர் என்ன சொன்னாலும் தான் கேட்பதாகப் பணியவும், பார்த்திபேந்திரன் மேல் அவருக்கு நல்ல எண்ணம் வந்தது. ‘அரசரிடம் இளவரசரைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பார்த்திபேந்திரன் இருந்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்’ என நந்தினி எடுத்துச் சொல்ல, பழுவேட்டரையர் அதற்குச் சம்மதித்தார். அதற்குள் மந்திரவாதியின் ஆந்தைக் குரல் கேட்டதால், ‘ஒருநாள் இருந்து இளவரசர் கரையொதுங்குகிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு போகலாம் எனக் கூறினாள் நந்தினி. கரையோரமாய் ஆட்களை நிறுத்தி தேடிப் பார்க்கவும் தனாதிகாரி ஆணையிட்டார். பூங்குழலி படகை வலிக்க, வந்தியத்தேவன் இளவரசரிடம், ‘கோடியக்கரை போனால் பழுவேட்டரையர்கள் கைது செய்யும் அபாயம் இருப்பதால், குந்தவையின் ஆணைப்படி பழையாறைக்கு செல்ல வேண்டு’மென வலியுறுத்தினான். ஆனால், இளவரசருக்குக் குளிர்க்காய்ச்சல் அதிகமாக, தூரத்திலிருந்து கலங்கரை விளக்கின் மேலே ஆட்கள் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பூங்குழலி சொல்ல, கோடியக்கரையில் இருந்து நாகை செல்லும் ஒரு வாய்க்காலில் ஓடத்தை மறைத்து நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்று விஷயங்களை அறிந்து வந்தபின் பயணத்தை முடிவு செய்யலாம் என இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, பூங்குழலி அங்கிருந்த குழகரின் கோவிலை அடைந்தாள். கோவிலில் பட்டரைச் சந்தித்து பிரசாதங்களையும் பாலையும் பெற்றுக்கொண்டு, பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருப்பதை அறிந்து கொண்டு திரும்பினாள். நந்தினியை, பூங்குழலின் அண்ணியான ராக்கம்மாள் சந்தித்து பாண்டியர் ரகசிய முத்திரையைக் காண்பித்து தானும் ஆபத்துதவி என்று தெரிவித்துக் கொண்டாள். மந்திரவாதியுடன் பேச குழகர் கோயிலுக்குக் கூட்டிச் செல்வது போல் கூட்டிச் சென்றாள்.  அப்போது சேந்தன் அமுதன் இங்கு வந்திருப்பதையும் இருவரும் கலங்கரை விளக்கின் மேல் இருந்தபொழுது ஒரு படகு வந்து பின் கண்ணுக்கு மறைந்து விட்டதையும் கூறினாள். பின்னர் நந்தினியின் உருவம் ஊமைராணியை ஒத்திருப்பதாகக் கூற, இனி ஊமைராணியை கண்டால் தன்னிடம் கூட்டி வருமாறு நந்தினி கேட்டுக் கொண்டாள். அவளை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாதெனவும் பூங்குழலிக்கு அவளை நன்கு தெரியுமெனவும் இராக்கம்மாள் கூறினாள். இருவரும் மந்திரவாதியிடம் வந்து சேர்ந்தனர். மந்திரவாதியும் நந்தினியும் பேசுவதை பூங்குழலி திரும்பிப்போகும் வழியில் கேட்க நேரிட்டது. இளவரசர் இறந்துவிட்தாக வந்த செய்தியை நந்தினி நம்பவில்லை. பூங்குழலியைப் பற்றிச் சொல்லி மண்டபத்தில் ஒளித்து வைத்திருக்கலாம் என ராக்கம்மாள் மந்திரவாதியிடம் சொல்ல, பூங்குழலிக்கு அச்சம் பரவியது. இளவரசரைச் சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்திருந்த ஆபத்தை உணர்ந்து கொண்டாள். எப்பாடுபட்டாவது அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் தனக்கு இருப்பதை உணர்ந்து மறைவிடம் நோக்கி விரைந்தாள். ஆனால், விட்டுவிட்டு வந்த இடத்தில் ஓடமும் இளவரசரும் இல்லாதிருப்பதைக் கண்டு மேலும் கலவரமடைந்தாள். மண்டபத்தில் ஒளிந்து இருக்கலாம் என்று நினைத்தால் மந்திரவாதி அங்கு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வர, எச்சரிப்பதற்காக காட்டு வழியில் வேகமாக ஓடினாள். நடுவில் சேந்தன் அமுதன் பாடுவது போல் நடித்து, மந்திரவாதி அங்கிருப்பதை உணர்த்த, இருவரையும் மந்திரவாதி ரவிதாசன் ‘இளவரசர் எங்கே?’ எனக் கேட்டு மிரட்டினான்.  பூங்குழலி இளவரசர் இறந்து விட்டதாகக் கூற ரவிதாசன் அதை நம்பவில்லை. பூங்குழலி கடற்கரைப் பக்கம் ஓடுவது போல போக்குக்காட்டி ரவிதாசனைப் புதைமணலில் விழுமாறு செய்தாள். ரவிதாசன் காப்பாற்றுமாறு கதற, சேந்தன் அமுதனின் துண்டை வாங்கி அவனைக் கட்டிவிட்டு, ‘காலையில் யாரேனும் வந்தால் அவிழ்த்து விடுவார்கள்’ எனக் கூறி இருவரும் மண்டபத்துக்கு விரைந்தனர். இளவரசரை நாகப்பட்டினத்திலுள்ள சூடாமணி விஹாரத்திற்கு கூட்டிச் செல்லுமாறு குந்தவை சொல்லி அனுப்பியதாக சேந்தன் அமுதன் கூற, வந்தியத்தேவன் பழையாறைக்குச் செல்வதாக ஏற்பாடாயிற்று. சுரவேகத்தில் மயக்கமடைந்திருந்த அருள்மொழிவர்மரைப் படகில் ஏற்றினர். அப்போது நரிகளின் ஊளைக் குரல் கேட்டது. இளவரசர் அபாயத்திலிருக்கும் மனிதனைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிக்கொண்டே மறுபடியும் மயங்கி விழ, பூங்குழலி ரவிதாசனைக் காப்பாற்ற புதைகுழிக்கு விரைந்தாள். வந்தியத்தேவனும் உடன் சென்றான். அதற்குள் ராக்கம்மாள் ரவிதாசனை விடுவித்து விட்டிருந்தாள். இவர்கள் கால்வாய்க் கரையை நோக்கி வரும் வழியில் ரவிதாசனும் ராக்கம்மாளும் மறைந்திருப்பதைப் பார்த்து விட்டார்கள். அவர்களும் இவர்களைக் கவனித்து விட்டார்கள். வந்தியத்தேவன் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி, ‘ஆதித்த கரிகாலன் அரசாள்வதற்காக பொன்னியின் செல்வரை, தான் கடலில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டதாகவும் பூங்குழலி அதைப்பற்றி வாய்திறந்தால் ரவிதாசனைப் புதைசேற்றில் தள்ளிக் கொன்றதை நந்தினியிடம் சொல்லி விடுவேன்’ என்றும் மிரட்டி நடித்தான். அவளுடைய மாமன் மகன் கொண்டுவரும் ஓடத்தில் ஏறி இலங்கை போய்விடுமாறும் பூங்குழலியை மிரட்டினான். அதன்படியே பூங்குழலி ஓடத்தில் ஏறிக்கொள்ள, படகை நாகப்பட்டினம் நோக்கி செலுத்தினார்கள். மந்திரவாதியும் ராக்கம்மாளும் இதைத் தொடர்ந்து மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின் மந்திரவாதி வெளிப்பட, வந்தியத்தேவன் ‘பிசாசு, பிசாசு’ எனக் கத்திக்கொண்டே ஓடி மந்திரவாதி பார்வையில் இருந்து மறைந்தான். சேந்தன் அமுதன் சொன்ன இடத்தில் தன் குதிரையைக் கண்டுகொண்டான். பழையாறை பாதையில் குதிரையை நடத்தினான். சுரத்தில் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரைக் கனிவுடன் கவனித்துக் கொண்டும் இடைப்பட்ட கிராமங்களில் சேந்தன் அமுதன் கொண்டுவந்த  உணவைப் பகிர்ந்துண்டும் மூவருமாக நாகப்பட்டின சூடாமணி விஹாரத்தை அடைந்தனர். பூங்குழலி இளவரசருக்கு சேவை செய்வதில் தனி உவகை கொண்டிருந்தாள். இவர்கள் சூடாமணி விஹாரத்தை அடைந்தபொழுது அங்கே இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி கிடைத்து அல்லோல கல்லோலமாயிருந்தது. சேந்தன் அமுதன் தலைமைப் பிட்சுவிடம் சென்று விஷயங்களைச் சொல்லி விஹாரத்தின் பின்பகுதியில் நிறுத்தியிருந்த படகிடம் அழைத்து வந்தான். அவரும், குந்தவை தேவி ஏற்கனவே அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு, ரகசியமாகவே இளவரசரை உள்ளே அழைத்துச் சென்றார்.  ‘மறுபிறவியிலேனும் அருள்மொழி வர்மரை மறுபடி சந்திக்க முடியுமா?!” என்ற ஏக்கத்துடன் பூங்குழலி கதவு மூடும்வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 11

பொன்னியின் செல்வன் – 11

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.மறுநாள், தியாகவிடங்கக் கரையரை கோவிலில் சந்தித்தபொழுது அவரும் பூங்குழலியை அழைத்துச் செல்லும்படி கேட்குமாறும், ஆனால் அவளிடம் எந்த ஆசை வார்த்தைகளைப் பேசியும் கோபப்படுத்திவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கடலுக்குச் சென்று குளிக்கலாம் என்று கடலுக்குள் இறங்கியவன், தான் கழற்றி வைத்திருந்த தன் துணிகளில் இருந்து ஓலையை எடுத்துக்கொண்டு பூங்குழலி ஓடுவதைப் பார்த்து அதிர்ந்துபோய் ஓடி வந்தான். பூங்குழலி வெகு வேகமாக விரைந்து காட்டுப் பகுதியில் மறைந்து கொள்ள, வெகுதூரம் அவளைத் தேடி காட்டுக்குள் வந்தியத்தேவன் அலைந்தான். ஒரு இடத்தில் பூங்குழலி ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்தியத்தேவனைச் சிறைப்பிடிக்க வைத்தியர் மகன் பழுவேட்டரையரின் ஆட்களைக் கூட்டி வந்திருப்பதாகக் கூறி, அதில் இருந்து தப்புவிப்பதற்காகவே திசைதிருப்பி வேகமாகக் காட்டுப்பகுதிக்குக் கூட்டி வந்ததாகக் கூறினாள். பூங்குழலியின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லிவிட்டு, இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி மறுபடியும் வேண்ட, பதிலாக பூங்குழலி, தான் கேட்கும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். அவனை அங்கேயே மறைந்து இருக்குமாறும் இரவு வரும் வரை வெளியே வரவேண்டாமெனவும் சொல்லி ஒரு மண்டபத்தில் மறைந்து இருக்கச் சொன்ன பூங்குழலியிடம் ஆபத்தான மிருகங்கள் வருமே என வந்தியத்தேவன் தன் பயத்தை வெளிப்படுத்தினான். வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து ஒரு சிறுத்தையை அதில்தான் கொன்றேன் எனக் கூறிக் கிளம்பிய பூங்குழலியை வந்தியத்தேவன் பிரமிப்புடன் பார்த்தான். காரணம், அது திருக்கை மீனின் எலும்பு. இரவில் முன்னேற்பாடுடன் வந்து பூங்குழலி கொடுத்த சமிக்ஞையின் பேரில் வெளிவந்து இருவரும் ஓசைப்படாமல் படகைத் தள்ளிக் கிளம்பினர். அவள் படகைக் கையாளும் லாவகம் குறித்துப் பாராட்டி அவளின் தந்தை அவளை அழைத்துச் செல்லச் சொன்னதைக் கூறிய வந்தியத்தேவனிடம், கடலுக்கு வந்துவிட்டால் சமுத்திர ராஜனே அவளது தந்தை எனவும் அவள் சமுத்திரகுமாரி எனவும் பூங்குழலி கூறினாள். வந்தியத்தேவன் அவளிடம் பேசித் தெரிந்து கொண்டதில் அவள் சாதாரண பெண்களைப் போல அல்ல என்றும் பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மரின் பெயரைச் சொன்னால் அவளின் முகத்தில் நாணமும் உடலில் குழைவும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டான். கடலில் ஏற்படும் ஆபத்துகளைப் பூங்குழலி சொல்லச்சொல்ல, வந்தியத்தேவன் அதைக் கேட்டுக் குழம்பி கடலில் குதித்து விட, பூங்குழலி பெரும்பாடுபட்டு அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினாள். மறுபடியும் கண்விழித்த போது அவள் பாடிக் கொண்டிருந்தாள். ‘வாரிதியும் அடங்கி நிற்கமாருதமும் தவழ்ந்து வரகாரிகையென் உள்ளந்தனிலேகாற்று சுழன்றடிப்பதேன்?அலை கடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?வந்தியத்தேவன் அவள் மனதில் ஏதோ சோகமும் ஏமாற்றமும் சஞ்சலப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்று எண்ணினான். அவளை சந்தேகப்பட்டது மிகவும் தவறெனவும் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டான். பூங்குழலி அதை ஒன்றும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இலங்கையில் நாகத்தீவில் இறக்கிவிடுவதாகக் கூறவும், இளவரசர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதைப் பற்றிய பேச்சு வந்தது. பூங்குழலி நாகத்தீவுக்கு முன் பூதத்தீவு என்று ஒன்று உள்ளதாகவும் இவன் படகிலேயே இருந்தால் அவள் போய் விஷயம் சேகரித்து வருவதாகவும் சொல்ல, வந்தியத்தேவன் அதற்குச் சம்மதித்தான். பூதத்தீவில் இறங்கி சொன்ன மாதிரியே ஒரு நாழிகைக்குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவள் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரை மாதோட்டத்தில் சந்திக்க இளவரசர் சென்றிருப்பார் எனக் கூறினாள். கரை நெருங்க பூங்குழலி கேட்ட சத்தியத்தை நினைவுபடுத்தி என்ன உதவி வேண்டும் என வந்தியத்தேவன் கேட்க, சில நிமிடங்கள் சிந்தித்தவள், பொன்னியின் செல்வனைச் சந்தித்து ஓலையெல்லாம் கொடுத்தான பிறகு ‘சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?’ என்று கேட்க வேண்டுமென்றும், அதற்கு அவர் சொல்லும் பதிலை மாறாமல் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். பூங்குழலியின் மனதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன் திகைத்து, ‘அவ்வளவு உயரத்தில் பறக்கவா இந்த ஓடக்காரப் பெண்ணுக்கு ஆசையிருக்கிறது!’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, உன் உதவிக்காகவே இதைக் கண்டிப்பாகச் செய்வேன் என உறுதி பூண்டு அவளிடமிருந்து விடைபெற்றான். பூங்குழலி ஓடத்தில் சாய்ந்து அவளுலகில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாள். கடற்கரையோரமாக நடந்து சென்று இலங்கையின் மாதோட்டத்தில் சோழ சைன்யம் தங்கியிருந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கும் கடம்பூரைப் போலக் கெடுபிடிகள் நடக்கவும், வந்தியத்தேவனைச் சிறைப்பிடித்தனர். அவன் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளரைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லவும் அவனிடமிருந்த முத்திரை மோதிரம், ஓலை எல்லாவற்றையும் பரிசோதித்து எடுத்துக் கொண்டார்கள். அப்போது சேனாதிபதி, முதன்மந்திரி அநிருத்த ப்ரும்மராயரை ராமேசுவரம் வரை வழியனுப்பச் சென்றிருந்ததனால் அவர் வரும் வரை அவனைக் காவலில் வைத்திருந்தனர். பிரயாணத்தில் களைத்திருந்த வந்தியத்தேவன் முதல்நாள் முழுக்க நன்கு தூங்கி ஓய்வெடுத்தான். இரண்டாம் நாளின் இறுதியில் பக்கத்து அறையிலிருந்து ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கவே ஆச்சர்யமடைந்தான். பிறகு விசாரித்ததில் அவன் சேனாதிபதியுடன் இங்கு வந்ததாகக் கூறினான். குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்த ஆழ்வார்க்கடியான், அங்கிருந்து மதுரை சென்று சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு முதன்மந்திரி அநிருத்த பிரும்மராயர் இலங்கையில் அருள்மொழிவர்மரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்த வணிகர்களைச் சந்தித்து நடப்பு நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அங்குதான் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தன் எஜமானனான அநிருத்த பிரும்மராயரிடம் ஆழ்வார்க்கடியான் முழுவதுமாகக் கூறினான். அநிருத்த பிருமராயர் சேனாதிபதியுடன் இருந்தபோது வந்தியத்தேவனைப் பற்றிச் செய்தி வந்ததால் ஆழ்வார்க்கடியான் விரைந்து இலங்கைக்குச் சென்று வந்தியத்தேவனைப் பற்றி எடுத்துச் சொல்லி இளவரசரிடம் தன் ஓலையைக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவரின் ஆணையைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்து சேனாதிபதியுடன் திரும்பியிருந்தான். வந்தியத்தேவனிடமிருந்து எடுக்கப்பட்ட ஓலை, மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இளவரசர் அநுராதபுரம் சென்றுவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஓலையைச் சேர்க்கும்படி சேனாதிபதி சொன்னதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். இருவரும் இணைந்து சேனாதிபதியைச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே அவருக்கு வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. வந்தியத்தேவன் புத்திசாலித்தனமாக, அவரது அண்ணன் மகளான வானதியைப் பற்றியும் குந்தவை அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றியும் பேச சேனாதிபதி மகிழ்வுற்றார். இருவரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாதெனவும் ஒற்றுமையுடன் சென்று இளவரசரைச் சந்திக்கும்வரை சண்டையிடாமல் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்த, அவரை வணங்கி விடைபெற்று இருவரும் இளவரசரைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 9

பொன்னியின் செல்வன் – 9

பழையாறையிலிருந்து சற்று மாமல்லபுரம் வருவோம். மாமல்லபுரத்தின் பிரதான வீதியில் ஒரு விமான ரதத்தில் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று பட்டப்பெயர் கொண்ட, அடுத்த பட்டத்துக்குரியவனாக இளவரசர் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மூத்த இளவரசனான ஆதித்த கரிகாலனும், மிலாடுடையார் என்ற பட்டத்தைப் பெற்றவரும் சுந்தரசோழரின் இரண்டாவது மனைவி வானமாதேவியின் தந்தையுமான – ஆதித்த கரிகாலனின் பாட்டனார் திருக்கோவிலூர் மலையமானும்,  பல்லவ குலத்தின் தோன்றலான பார்த்திபேந்திர பல்லவனும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரிலிருந்து வந்த செய்திகளைப் பற்றி மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.  பீஷ்மரை ஒத்தவராக இருந்த மலையமான் மிலாடுடையாரின் பேச்சை, ஆதித்த கரிகாலன் மறுத்துப் பேசாதவனாயிருந்தான். பார்த்திபேந்திரன் வீரபாண்டியனை எதிர்த்த போரின் போது துணைசெய்தவனாய் இருந்ததால் ஆதித்த கரிகாலனுடன் இணைபிரியாதிருந்தான். அவனுக்கு, வந்தியத்தேவனும் கரிகாலனும் பாராட்டிய நட்பால் வந்தியத்தேவன் மேல் பொறாமை இருந்து வந்தது. பழுவேட்டரையர்களின் அதிகாரத்தைப் பற்றி அதிருப்தி தெரிவித்த ஆதித்த கரிகாலனிடம், ஏற்கனவே வந்தியத்தேவனின் மீதிருந்த பொறாமையால், அவன்தான் போன காரியத்தை உத்தேசித்துப் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமென பார்த்திபேந்திரன்  குறை கூறினான்.  மிலாடுடையார்  பொறுமையாக சூழ்நிலையை இருவருக்கும் விளக்கத் தொடங்கினார். கடம்பூரில் நடந்த சதியாலோசனை பற்றிக் குறிப்பிட்டவர், பழுவேட்டரையர்கள் நாட்டுக்கு எதிரான முன்னெடுப்புகளை திட்டமிடுவதாகவும், மதுராந்தகனுக்கு அரசாட்சியை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்ததையும், அந்தக் கூட்டத்தில் மதுராந்தகன் கலந்து கொண்டதையும் கூறி வருந்தினார்.  “மதுராந்தகன் கையில் வாளெடுத்து அறியாதவன்; பெண்ணாய்ப் பிறப்பதற்கு பதில் ஆணாய்ப் பிறந்தவன். மேலும், எனக்கு அரசுரிமைப் பட்டம் கட்டிவிட்டு, இப்போது எப்படி மாற்றலாம்?” என்று ஆதித்த கரிகாலன் கேட்க, மதுராந்தகனுக்கும் உரிமை உண்டு என்று சொல்லி மலையமான் அவனை சமாதானப்படுத்தினார். அதற்கு பார்த்திபேந்திரன் வெகுண்டு எழ, அவனை அடக்கியவர், “என் பேரனுக்கு சோழ அரசு இல்லையெனில்  படையெடுத்தாவது பெற்றுத் தருவேன்” என்று கூறி அவனையும் சமாதானப்படுத்தினார். கடம்பூர் மாளிகைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பானோ என்று வந்தியத்தேவன் மீது தனக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகவும், சின்னப் பழுவேட்டரையர் அவனை ஒற்றன் என்று குற்றம் சாட்டியதால் . பின்னர் தெளிந்ததாகவும் மிலாடுடையார் சொல்லவும், தான் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருப்பதாகக் கூறிய ஆதித்த கரிகாலன், குறுக்கே வந்தியத்தேவனை பழித்துக் கூறிய பார்த்திபேந்திரனையும் அடக்கினான். மிலாடுடையார் இப்போது சோழ ராஜ்யத்திற்கு பெரிய அபாயம் சூழ்ந்துள்ளதாகவும், இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனை உடனே இங்கு வருவிக்குமாறும், பின் அனைவரும் சென்று சக்ரவர்த்தியைப் பழுவேட்டரையரின் பிடிகளில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கூறினார்.  வந்தியத்தேவனை குந்தவையிடம் அனுப்பியிருப்பதாக ஆதித்த கரிகாலன் கூற, மிலாடுடையார் குந்தவையின் மீதான நம்பிக்கை தனக்குப் பெரிதாக உள்ளதாகவும், அவளைப் போன்ற அறிவுடையவர்கள் இதுவரை சோழர் குலத்தில் பிறந்ததில்லை எனவும், முதன்மந்திரியான அநிருத்தர் கூட குந்தவையின் கருத்தைப் பெரிதும் மதிப்பவர் எனவும் பெருமையாகக் கூறினார். அப்பொழுது பார்த்திபேந்திரன், ‘வந்தியத்தேவன் குந்தவையைப் பார்ப்பதற்கு முன் நந்தினியைப் பார்த்து மயங்கியிருந்தால் என்ன செய்வது?’ என்று கூற, ஆதித்த கரிகாலன் உறுத்து பார்த்திபேந்திரனைச் சுட்டு விடுவது போலப் பார்க்கவும், பார்த்திபேந்திரன் நடுங்கி விட்டான்.  மிலாடுடையார் பார்த்திபேந்திரனை மறுநாளே  இலங்கைக்குச் சென்று அருள்மொழிவர்மனை அழைத்து வரக் கிளம்புமாறு கூறினார். பார்த்திபேந்திரன் அலைக்கழிப்புடன் நின்றிருக்கும் ஆதித்த கரிகாலனை நெருங்கினான். என்னவென்று கேட்க, ஆதித்த கரிகாலன் நெடிய பெருமூச்சை விட்டு நீங்காத வேதனையில் துடிப்பதை எவ்வாறு சொல்ல முடியும் என்று வருந்தியபடி இருக்க, அனைவரும்  அரண்மனைக்குத் திரும்பினர். பார்த்திபேந்திரன் எப்படியும் இதைக் கேட்டறிவது என்று உறுதி பூண்டான்.  அரண்மனை திரும்பியதும் அரவான் கதை கேட்க பெரியவர் கிளம்பியவுடன், பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனை அணுகினான். ஆதித்த கரிகாலன், மனம் நிலையற்று தவிப்புற்றிருந்தான். பார்த்திபேந்திரன் போரைப் பற்றிப் பேச்செடுக்கையில் ஆதித்த கரிகாலன் வேதனையுடன் போரையும் தன் சாதனைகளையும் வெறுத்து விரக்தியுடன் பேச, வேதனைகளைச் சொல்லுமாறு பார்த்திபேந்திரன் வற்புறுத்தினான். பெருமூச்செறிந்த ஆதித்த கரிகாலன், தூரத்தே வெறித்துப் பார்த்தபடி, ‘என் மனதைத் திறந்தால் இருப்பது என் தாயும் தந்தையும் அல்ல; குடும்பத்தினர் அல்ல; இந்த தேசம் அல்ல. அங்கு இருப்பது பழுவூர் இளையராணி நந்தினி மட்டும்தான்’ என்று கூற, பார்த்திபேந்திரன் திடுக்கிட்டான். தங்களுக்கு அவளை எப்படித் தெரியும் என்று கேட்க, ஆதித்த கரிகாலன் நந்தினியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ‘நந்தினியை என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் சிறு பெண்ணாக சந்தித்தேன்.  நானும் என் தம்பி, தங்கையும் விளையாடி முடித்துவிட்டு என் பாட்டி செம்பியன்மாதேவியைச் சந்தித்தபொழுது, அங்கு உதவி கேட்டு வந்தவர்களுடன் நின்றிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் அவள் என்னைக் கவர்ந்து கொண்டாள். அவளை எங்கள் தோழியாக ஏற்றுக் கொள்ளச் சொல்லி என் பாட்டி சொல்ல, குந்தவைக்கு அவளை ஏனோ பிடிக்காமல் போயிற்று. அழகின் மீதான பொறாமையில் சொல்கிறாள் என எண்ணி, அவளைச் சீண்டுவதற்காகவே நான் நந்தினியுடன் தொடர்ந்து பழகி குந்தவையுடன் சண்டை போட்டுக் களித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாண்டிய நாட்டு யுத்தத்துக்குப் படையெடுத்துச் சென்ற என் தந்தைக்கு உதவியாக நானும் சென்றுவிட்டேன். அந்த யுத்தத்தில் தோற்று வீரபாண்டியன் எங்கோ மறைந்துகொள்ள, இலங்கைக்கும் நம் படைகள் செல்ல, நாங்கள் அதற்கெல்லாம் உதவி செய்துவிட்டுத் திரும்ப இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.   நான் திரும்பி வருகையில் குந்தவையும் நந்தினியும் வெகு அழகாகப் பரிமளித்ததுடன் தோழிகளாகவும் ஆகியிருந்தனர். எனக்கு நந்தினியுடன் பேசுவதானால் அத்தனை இன்பமாய் இருந்தது. ஆனால், என் பாட்டி செம்பியன் மாதேவிக்கோ குந்தவைக்கோ நான் அவளுடன் பேசுவது பிடிக்கவில்லை. பாட்டி என்னைக் கூப்பிட்டு, “அவள் சாதாரண அர்ச்சகருடைய பெண். அவளுடன் இவ்வளவு நெருக்கமாகப் பழகக்கூடாது” என்று கூறினாலும் நான் கேட்பதாயில்லை. திடீரென ஒருநாள், அவளை அவளுடைய உறவினர்களுடன் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகத் தகவல் வந்தது. அதனால் நான், என் கோபத்தைக் குந்தவையிடம் காட்டிக் கொண்டிருந்தேன். பிறகு, இராஷ்டிரகூடப் படைகளை விரட்டுவதற்காக சோழப் படைகளுடன் நான் தொண்டை நாட்டுக்கு வந்தபோதுதான் நீயும் நானும் நண்பர்களானோம்.  இலங்கையில்  நமது படை முறியடிக்கப்பட்டு கொடும்பாளூர் சிறிய வேளார் இறந்துவிட்டார் என்ற பின்னடைவு நமக்கு ஏற்பட்டதும் ஒளிந்திருந்த வீரபாண்டியன் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து மதுரையைக் கைப்பற்றினான். அப்போது என் தந்தைக்கு உடல்நலம் குன்றத் தொடங்கியிருந்தும்கூட, அவர் மதுரைக்குப் படையெடுக்கச் சித்தமானார். அவரைத் தடுத்து, மதுரையை மீண்டும் கைப்பற்றி வீரபாண்டியனுடைய தலையைக் கொண்டுவராமல் சோழ நாட்டுக்குத் திரும்பமாட்டேன் என சூளுரைத்துவிட்டு நாம் சென்றோம்.  வரிசையாய் வெற்றிகளைக் குவித்து, தப்பியோடிய வீரபாண்டியனைத் துரத்திக்கொண்டு சென்றோம். அப்போது வைகை நதியின் நடுவில் ஒரு சோலையில், ஆண்டாளை ஒத்த தோற்றத்தில் நந்தினியைக் கண்டேன். அவள் கண்ணனுக்கே தன்னை அர்ப்பணித்து விட்டதாகக் கூறி, தன் தாய் தந்தை மற்றும் தமயனுடன் வசிப்பதாகவும் தமயன் காசிக்குப் போயிருப்பதாகவும் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டாள். அவளின் மீதான மோகம் கொழுந்துவிட்டு எரிந்தபோதும், வந்த காரியம் முடியட்டும் என்று பொறுமை காத்து , அவள் இருந்த பக்கம் படைகள் போகாதவாறு பார்த்துக் கொண்டேன். வீரபாண்டியனுடைய தலையுடன் தந்தையிடம் சென்று, அந்த வெற்றிக்குப் பரிசாக நந்தினியை மணக்கக் கேட்க வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.  ஆனால், தப்பி ஓடிய வீரபாண்டியன் அவள் வீட்டிலேயே கட்டிலில் படுத்திருந்ததையும் இவள் அவனுக்குப் பணிவிடை செய்ததையும் கண்டவுடன் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. நந்தினி என் காலில் விழுந்து, “நீங்கள் என்மீது ஒருகாலத்தில் கொண்டிருந்த அன்பின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். அவரை ஒன்றும் செய்யாதீர்கள்” என்றாள்.  “பாண்டியனுக்கும் உனக்கும் என்ன உறவு?” என்று அவளிடம் கேட்டேன். நந்தினி, “அவர் எனது காதலர். என் தெய்வம். என்னை மணம் புரிந்து கொள்ளப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்” என்று சொல்லவும், என் கோபம் கட்டுக்கடங்காமல் சென்று அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஒரே வீச்சில் வீரபாண்டியனின் தலையை வெட்டி வீழ்த்தினேன்.  உலகத்தின் மொத்த வெறுப்பு, குரோதம் எல்லாவற்றையும் அடக்கிய பார்வையில் நந்தினி என்னைப் பார்த்தாள். அச்சமயத்தில் நீங்களெல்லாம் வந்துவிடவும் குடிலில் இருக்கும் பெண்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என உத்தரவு இட்டுவிட்டு பாசறைக்குத் திரும்பிய என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் கேட்டதைக் கொடுக்க முடியவில்லை என்றும் என் பிரியத்துக்குரிய நந்தினி வேறொரு ஆடவனின் உயிருக்காய் மன்றாடினாள் என்பதையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.  மறுபடி அவளைத் தேடிக்கொண்டு சென்றபோது அவளின் பெற்றோர் என நான் பழையாறையில் முதன்முதல் கண்டவர்கள் அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தனர். விசாரித்தபொழுது நந்தினியைத் தனியே விட்டுவிட்டு அவர்கள் மூத்த மகளின் வீட்டுக்குப் போயிருந்ததும் திரும்பி வரும்பொழுது ஒரு பெண்ணின் கை, காலைக் கட்டிச் சிதையில் போட சிலபேர் முயன்றதைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தால் அவளைக் காணவில்லை என்றும் அழுதனர். நான், அந்தச் சிதையில் எரிந்த பெண் நந்தினியாகத்தான் இருக்கும் என முடிவு செய்து வருந்தி எரிச்சலடைந்து திரும்பிவிட்டேன்.  பின்னர் நாம் பழுவேட்டரையரின் திருமணம் பற்றி அறிந்துகொண்டு ஏளனமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு என்னை அழைத்து இளவரசப் பட்டாபிஷேகம், மேலும் பரகேசரி என்னும் பட்டம் அளித்து இனி சோழராஜ்யத்தை ஆளும் பொறுப்பு முழுவதும் உனக்கே என என் தந்தை ஆசிர்வதித்து, அதற்குப் பாட்டியும் பெரியோர்களும் ஆசி கூறும் வைபவம் நடைபெற்றது. அந்த மணிமகுடத்துடன் அன்னை, பாட்டி என அனைத்து மாதரசிகளிடமும் ஆசி பெற அந்தப்புரத்துக்குத் தந்தை என்னை  அழைத்து சென்றார். அங்கே நடுநாயகமாக நந்தினி நின்றாள். ராணிக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து முன்னைக் காட்டிலும் அழகாக, சர்வாலங்கார ரூபிணியாக நின்ற அவளைக் கண்டதும் அவளை மீண்டும் பட்டமகிஷியாக அடையப் போகிறேனா என்றெல்லாம் ஒரு கணம் என் மனம் மனக்கோட்டை கட்டியது.  ஆனால், அப்பொழுது என் தந்தை ‘ஆ’ வெனக் கூச்சலிட்டபடி மூர்ச்சையடைந்து விட்டார். அவரைத் தூக்கி வந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். அவர் நந்தினியைப் பார்த்துதான் மூர்ச்சை அடைந்திருப்பாரோ என்ற ஐயம் எனக்கிருந்தது. நான் குந்தவையைத் தனியே அழைத்து நந்தினியைப் பற்றிக் கேட்க, “இப்போது நந்தினிதான் பழுவூர் இளைய ராணி. பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்டு வந்திருக்கிறாள்” என அவள் கூறினாள். அதைக் கேட்டபோது நான் அடைந்த வலியைப் போல் இதுவரை எந்த வலியையும் நான் உணர்ந்ததில்லை. அன்று மயங்கிய என் தந்தையும் இன்றுவரை பூரண குணம் அடையவேயில்லை.  நந்தினி ஒருநாள் என்னை அவள் அரண்மனைக்கு வரச் சொல்லி செய்தி அனுப்ப, நான் அங்கு சென்று அவளை லதா

பொன்னியின் செல்வன் – 7

பொன்னியின் செல்வன் – 7

வந்தியத்தேவன் தனக்குள் வலிந்து ஏற்றிக் கொண்ட திடசித்தத்தால் நந்தினியின் மோகன சக்தியையும்  அவளின் தேர்ந்த மயக்கும் சொற்களையும் சமாளித்து, அவனுடைய எஜமான விசுவாசம் என்ற கவசத்தால் தகுந்த மறுமொழிகளைத் தந்தான். ‘முற்பிறவியில் நாம் சந்தித்தவர்களாக இருந்திருப்போம்’ என்று நந்தினி கூறியபோதுகூட, மனதில் குடந்தை ஜோதிடர் வீட்டில் சந்தித்த பெண்ணை நினைத்தபடி நந்தினியை ஒட்டியே பேசினான்.  ஆழ்வார்க்கடியான் தன்னிடம் நந்தினியைத் தன் தங்கையெனக் கூறியதாகவும் மறுபடியும் பழைய வாழ்க்கைக்குத் தங்களை அழைத்துப் போக விருப்பமாக இருப்பதையும் நந்தினியிடம் கூறச் சொல்லியதாகக் கூறினான். ‘அது தன்னால் முடியாது’ என்று கூறிய நந்தினியிடம், அவளைப் பாராட்டி புகழ்ந்தே வந்தியத்தேவன் பேசியதை அவள் ஒருவாறு ஏற்றுக் கொண்டாள். முத்திரை மோதிரத்தை பழுவேட்டரையர் தன்னிடம் கொடுத்ததாக சின்னப் பழுவேட்டரையரிடம் பொய் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது எக்காளங்களும் முரசுகளும் ஒலிக்கக் கேட்டு பெரிய பழுவேட்டரையர் வந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டார்கள்.  பேச்சுவாக்கில் குந்தவையைப் பற்றிப் பேசும்போது நந்தினியின் கண்ணில் தெரிந்த குரோதத்தைக் கண்ட வந்தியத்தேவன் உள்ளூர அதிர்ந்தான். தனக்கான அந்தரங்க ஊழியனாக இருக்கச் சொல்லி நந்தினி கேட்டபொழுது, அந்தப் பணிக்காகவே தன் தலைவன் கரிகாலன் குந்தவையிடம் தன்னை அனுப்பி வைத்திருப்பதாக வந்தியத்தேவன் கூறியதைக் கேட்டு எரிச்சலடைந்தாள். குந்தவைக்கு எடுத்துச் செல்லும் ஓலையைப் படித்துவிட்டு, இதற்கு மறுமொழியை என்னிடம் காட்டுவதாயிருந்தால் இந்தக் கோட்டையை விட்டு உங்களைத் தப்பி செல்ல உதவி செய்வதோடு  வேறு சில உதவிகளும் என்னால் செய்ய முடியும் என நந்தினி கூறியபோது ஆந்தையின் குரல் கேட்டது. நிஜ மந்திரவாதியே வந்து விட்டான் என்றாள் நந்தினி; வந்தியத்தேவன் மறைந்து கொண்டான்.  ஆழ்வார்க்கடியான் திருப்புறம்பியம் பள்ளிப்படையில் பார்த்த அந்த ரவிதாசன்தான் மந்திரவாதியாக வந்திருந்தான். நந்தினியிடம் அவளின் பழைய கதையை நினைவூட்டிய ரவிதாசன்,  வீரபாண்டியன் சிதையோடு கட்டாய உடன்கட்டை ஏற்றப்பட இருந்த அவள், தங்களுடன் இணைந்து பழிவாங்கும் நடவடிக்கையில் உதவுவேன் என்று சொன்னதை நினைவூட்டினான். தங்கள் கூட்டத்தில் யாரும் நம்பவில்லையாயினும், தான் மட்டும் அவளை நம்பிக் காப்பாற்றியதாகவும், நந்தினி பழுவேட்டரையரை மணந்து கொண்டதால் ஆத்திரமுற்றுக் கொல்ல வந்த பொழுது, பழைய சம்பவங்களுக்குப் பழிவாங்குவதற்கே இந்த அரண்மனையில் இருப்பதாக நந்தினி கூறியதையும் அவளுக்கு நினைவுபடுத்தி,  இப்பொழுது சுகபோகத்தில் அதை மறந்து விட்டதாகக் குற்றம் சாட்டினான். மேலும் வந்தியத்தேவனின் அழகில் அவள் மயங்கியிருக்கலாம் என்றும் சொல்ல, நந்தினி கோபமுற்று தான் செய்யும் திட்டங்கள் குந்தவைக்கு எதிரானவை என்றும் அங்கிருந்தும் சோழ அரசை அழிக்கும் செயலைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினாள். அதை நம்பாமல் பார்த்த ரவிதாசனிடம், வந்தியத்தேவனை அவனிடம் ஒப்படைப்பதாகவும் அவனுடன் சென்று குந்தவையிடம் பதில் ஓலை வாங்கியதும் தன்னிடம் அழைத்து வருமாறும் கூறிவிட்டு வந்தியத்தேவனைத் தேடியபோது அவன் அங்கிருந்து காணாமல் போயிருந்தான்.  பெரிய பழுவேட்டரையர் திரும்பி வந்தபொழுது எப்பொழுதும் எதிர்கொள்ளும் சின்ன பழுவேட்டரையர் சிறிது நேரம் கழித்தே வந்தார். போன காரியம் வெற்றியடைந்ததைப் பற்றிச் சொன்ன பெரிய பழுவேட்டரையரிடம், குந்தவையிடமும் செம்பியன் மாதேவியிடமும் கவனத்துடன் இருக்க வேண்டுமென சின்ன பழுவேட்டரையர் கேட்டுக் கொண்டார்.  பின்னர் பெரியவர் பெயரைச் சொல்லிக் கொண்டு முத்திரை மோதிரத்துடன் வந்திருந்த வந்தியத்தேவன் பற்றிய நிகழ்ச்சிகளைச் சின்னவர் சொல்ல, இருவரையும் வந்தியத்தேவன் ஏமாற்றி விட்டதை உணர்ந்து கோபமடைந்தனர். அப்படியானால் அந்த முத்திரை மோதிரம் இளையராணிதான்  தந்திருக்க முடியும் எனவும், நந்தினி மேல் தனக்கிருக்கும் சந்தேகங்களையும் சின்ன பழுவேட்டரையர் கூற, பெரியவர் சின்னப் பையனிடம் ஏமாந்துவிட்டதற்காகவும் நந்தினி மேல் சந்தேகப்பட்டதற்காகவும் சினந்து, தம்பியை வார்த்தைகளில் வறுத்தெடுத்துவிட்டு நந்தினியைப் பார்க்கச் சென்றார். செல்லும் வழியில் நந்தினியைப் பற்றி யோசித்துக் கொண்டே சென்ற பெரியவர், மந்திரவாதியை அடிக்கடி அழைத்துப் பேசுவது, தன்னைத் தொட விடாமல் விரதம் என்று சொல்வது பற்றியெல்லாம் கேட்டே ஆகவேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டார். பழுவேட்டரையர் லதாமண்டபத்தை அடையும்பொழுது நந்தினி அழுதுகொண்டே, தான் அவரை விட்டுப் பிரிந்து இருப்பது கடினமாக இருந்தது என்றும், தன்னை அனைவரும் பழிசுமத்துகிறார்கள் எனவும் நாடகமாடினாள். நந்தினியின் நடிப்புக்குக் கைப்பாவையாகிவிட்ட பழுவேட்டரையர், அவளை சமாதானப் படுத்தினார். மதுராந்தகனை நந்தினி அரச பதவிக்காக மனம் மாற்றியதையும், சுரங்க வழியில் சென்று பல்லக்கில் மறைத்து சென்றதையும் அவளின் புத்திசாலித்தனமான யோசனை எனக் கூறிப் பாராட்டி சமாதானப்படுத்த முயன்றார். நந்தினி மேலும் மேலுமாக நடித்து, ‘ஒரு கிழ எருமை மாட்டை இந்த இளம்வயதில் மணந்திருக்கிறாயே’ என்று சொல்லி குந்தவை அவளை ஏற்கனவே அவமானப்படுத்தியதை எல்லாம் சொல்லி அழத் தொடங்க, குந்தவை மீதான பழுவேட்டரையரின் சினம் மேலும் அதிகமானது. போர்க்களத்தில் தன்னந்தனியான வழியில் அபயம் என நந்தினி வந்தபோதே அவர் உள்ளம் அவள்பால் விழுந்து விட்டது என்றும் முன் பிறவிகளாய் நாம் இணைந்திருந்தோம் என்றும் பழைய கதைகளைக் கூறக்கூற நந்தினி பின்பக்கமாய்த் திரும்பி எரிச்சலை அடக்கிக்கொண்டு அவர் பேசுவதைக் கண்டு மகிழ்வதைப் போல நடித்தாள்.  மேலும், வீரராகிய அவர் பெண்ணான குந்தவையின் மந்திரசக்தியை எதிர்ப்பது அவரின் வீரத்துக்கே இழுக்கு என்பதால்தான், மந்திரவாதியின் உதவியைத் தான் நாடுவதாக நந்தினி கூறியதும் பழுவேட்டரையர் உருகிவிட்டார். அந்தப் பொழுதிலேயே நந்தினி, சுந்தர சோழரை அரச பதவியிலிருந்து இறக்கிவிட்டு பழுவேட்டரையரை சோழ சிம்மாசனத்தில் அமர வைப்பதுதான் தன் திட்டம் எனக் கூறவும் அவர் மேலும் நிலைகுலைந்தார்.  மந்திரவாதியும் நந்தினியும் பேசிக்கொண்டிருந்த போதே, அங்கிருந்து மறைவில் சென்ற வந்தியத்தேவன் தட்டுத்தடுமாறியபடி ஒரு இருண்ட சுரங்கப்பாதையை அடைந்தான். இருட்டில் துழாவியபடி வழியைத்தேடிக் கொண்டிருந்தபோது காலடிச் சத்தம் கேட்டு அத்திசையில் பார்க்கையில் மதுராந்தகனை வேல் தாங்கிய காவலன் ஒருவனும், அவனுடைய நண்பனான கந்தமாறனும் அழைத்து வருவதைக் கண்டான். பல்லக்கில் நந்தினியை அனுப்பிவிட்டு கோட்டைக்குள் சுரங்க வழியாக மதுராந்தகனை ரகசியமாக அழைத்து வருவதைப் புரிந்து மறைந்து கொண்டான். அவர்கள் வந்த வழியே தப்பிச் சென்றுவிடலாம் என்று கருதி அவ்வழியே சென்றவன் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ள, அந்த இடம் பொக்கிஷ நிலவறை என்பதை உணர்ந்துகொண்டான். மறுபடியும் ஏதோ ஒலி கேட்க வந்தியத்தேவன் ஒளிந்து நின்று கவனித்தான். மதுராந்தகனை விட்டுவிட்டு வந்த கந்தமாறன், காவலனுடன்  ஒருபுறம் வர, பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடன் இன்னொரு புறத்திலிருந்து வந்து சந்தித்து ஏதோ பேசிக்கொண்டார்கள்.  பிறகு கந்தமாறன் விடைபெற்று முந்திச் செல்ல பெரிய பழுவேட்டரையர் பின்செல்லும் வீரனுக்கு ஏதோ சமிக்ஞை செய்தார். இருண்ட அந்தப் பாதையில் கந்தமாறனைப் பின் தொடர்ந்தால் கோட்டைக்கு வெளியே சென்றுவிடலாம் என்று புரிந்து கொண்ட வந்தியத்தேவன் சற்றுத்தொலைவில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.  ரகசியமான இடத்தில் சுவர் திறக்கப்பட, முதலில் வெளியேறிய கந்தமாறனைப் பின்னாலிருந்து காவலன் கத்தியால் குத்தினான். வந்தியத்தேவன் துரிதமாகச் செயல்பட்டு, அந்தக் காவலன் மேலும் கந்தமாறனைத் தாக்காதவாறு அவனை உதைக்க, அவன் சுவரில் மோதி கீழே சரிந்தான். அந்த நேரத்தில்  விளக்கு வெளிச்சம் வந்தியத்தேவன் மீது விழுந்தது. முதலில் கந்தமாறனைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், அந்தக் காவலனை அவனது அங்கவஸ்திரத்தைக் கொண்டேக் கட்டிப் போட்டுவிட்டு, மயங்கிச் சரிந்திருந்த கந்தமாறனைத்  தூக்கிக்கொண்டு சுரங்கப் பாதையிலிருந்து வெளியே வந்தான். அது கோட்டைக்கு வெளியே வடவாறு ஒட்டிச்செல்லும் இடம் என்பதைக் கவனித்து கந்தமாறனைத் தோளில் சுமந்து நீரில் மூழ்கிவிடாதவாறு ஓரமாகவே சென்று ஆழம் குறைவாக இருந்த இடத்தில் சிரமப்பட்டு ஆற்றைக் கடந்து சென்றான். மரநிழலில் அவனைக் கீழே இறக்கி இன்னும் உயிர் இருக்கிறதா என்று பார்க்க, சற்றே கண்விழித்த  கந்தமாறன், வந்தியத்தேவன்தான் தன்னைப் பின்னாலிருந்து  கத்தியால் குத்திவிட்டதாகக் குற்றம் சாட்டடிவிட்டு மீண்டும் மயங்கிவிட்டான். வந்தியத்தேவன் உள்ளம் சோர்ந்து போனான்.  மறுபடியும் கந்தன்மாறனைத் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த சேந்தன் அமுதன் வீட்டிற்குச் சென்றான். தோட்டத்தை நெருங்கியபோதே அது முற்றிலுமாக நாசமாக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கலங்கிப் போனான். சின்ன பழுவேட்டரையரின் ஆட்கள், தான் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து வந்து நாசமாக்கியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டவன், திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனை மெல்ல எழுப்பி கந்தமாறனைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைக் கூறினான். சேந்தன் அமுதன், படைகள் வந்து அவனை விசாரித்து  நந்தவனத்தை அழித்துவிட்டுப் போனதாகவும் நல்லவேளையாகக் குதிரையை ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லிவிட்டு முதலில் இங்கிருந்து தப்பித்துப் போகும்படி வந்தியத்தேவனிடம் கூறினான். தன்னுடைய அன்னை வைத்தியத்தில் தேர்ந்தவள் என்று கூறிய சேந்தன் அமுதன் அன்னையை எழுப்பினான். பச்சிலைகள் கட்டி கந்தமாறனுக்கு மருத்துவம் செய்யத் தொடங்கியபோது படைவீரர்கள் வரும் சத்தம் கேட்கவே, சேந்தன் அமுதனை பழையாறைக்குச் செல்ல சிறிது தூரம் வழிகாட்ட வருமாறு அழைத்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையில் ஏறிக் கிளம்பினான். வந்த படைவீரர்கள் வாய்பேசமுடியாத முதியவளிடமிருந்து எதையும் தெரிந்துகொள்ள முடியாமல் வெளியேறினர். அதில் பாதிப்பேர் குதிரைச் சத்தத்தைக் கேட்டு வந்தியத்தேவனை துரத்திக்கொண்டு சென்றனர். மறைந்த கண்டராதித்தரின் மனைவியான செம்பியன் மாதேவியும், குந்தவையும், வானதியும், பழையாறையில் கிருஷ்ணனின் பிறந்தநாளான அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்புகையில் ஆழ்வார்க்கடியானைக் கண்டார்கள். சிறு சமிக்ஞையின் மூலம் அவனை அரண்மனைக்கு வருமாறு சைகை செய்தனர். ஆழ்வார்க்கடியான் முதலில் செம்பியன் மாதேவியைச் சந்தித்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைப் பற்றி விவரமாகக் கூறலானான். ‘ஆதித்த கரிகாலன், பார்த்திபேந்திர பல்லவன் மற்றும் ஆதித்த கரிகாலனுடைய பாட்டனாராகிய திருக்கோவலூர் மலையமான் ஆகியோர் காஞ்சிபுரத்தில் பேசிக்கொண்டனர். இரண்டு பழுவேட்டரையர்களும் மதுராந்தகனும் சேர்ந்து சதி செய்து, சக்ரவர்த்தியைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அதற்கு செம்பியன் மாதேவியின் ஆதரவும் உள்ளது என்று சந்தேகப் படுகிறார்கள். எனவே அந்தரங்கமான தூதுவன் ஒருவனை ஓலை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அவன் சக்ரவர்த்தியைச் சந்தித்து ஓலையைக் கொடுத்து விட்டான். பதில் அளிப்பதற்கு ஒரு நாள் காத்திருக்குமாறு சக்ரவர்த்தி கூற, அதற்குள் அவன் சின்ன பழுவேட்டரையனின் கட்டுக்காவலை மீறித் தப்பித்துவிட்டான். அவன் அசகாய சூரன். மேலும்…’ என ஆழ்வார்க்கடியான் தயங்கியபோது, எதுவானாலும் சொல்லுமாறு செம்பியன் மாதேவி கூறினார். மதுராந்தகன் பல்லக்கில் கடம்பூரில் நடந்த ரகசியக் கூட்டத்துக்கு வந்ததையும், அங்கு நடந்த ஆலோசனைகளைப் பற்றியும் கூறினான். மிகவும் வருந்திய செம்பியன் மாதேவி குந்தவை தேவியைக் கலந்துகொண்டு மறுபடியும் ஆழ்வார்க்கடியானைச் சந்திப்பதாகக் கூறி அவனை அனுப்பி வைத்தார். பழையாறை நகரில் சோழ அரண்மனையை ஒட்டி ஓடை ஒன்றை அரசர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். குந்தவையின் மாளிகையில் உத்தியானவனத்தில்  குந்தவையும் வானதியும் பேசிக்கொண்டிருந்தனர். ஈழத்துக்கு

பொன்னியின் செல்வன் – 5

பொன்னியின் செல்வன் – 5

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அவ்வப்போது சிங்கள மன்னர்கள் பாண்டியர்களுக்கு உதவி செய்வது வழக்கமாய் இருந்தது. பாண்டிய மன்னனான வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் வென்றதைத் தொடர்ந்து, ஈழமன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என சோழநாடு விரும்பியது. போர் புரிவதை விரும்பும் சோழத் தளபதிகள்,  மாவீரர்கள் அங்கு செல்வதற்குப் போட்டி போட்டனர். அப்பொழுது இளவலான அருள்மொழிவர்மன், தன்னை அனுப்பும்படி அனைவரிடமும் வலியுறுத்தினார். குந்தவை தேவிக்குத் தன் தம்பியாகிய அருள்மொழிவர்மன் மீது தனிப்பிரியம். அவரும் தமக்கை குந்தவை இட்ட கட்டளைகளை மீறியதே கிடையாது. தன் தம்பியை வீரனாகவே வரித்திருந்த குந்தவைக்கு ஈழம் செல்லத் தகுதியானவன் அருள்மொழிவர்மர்தான் என்று தோன்றியது. ஈழத்துக்கு வழியனுப்புகையில், தன் தோழியான வானதியை ஆரத்தி எடுக்கப் பணித்தபொழுது, வானதி தனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியால் தட்டைத் தவறவிட்டு மயக்கமடைந்தாள். இளவரசரும் பதற, குந்தவை வானதியைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்து சென்றார். இளவரசர் வந்து வானதியைசி சற்றே சமாதானப் படுத்திவிட்டு விடைபெற்றுச் சென்றார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் வானதிக்கு அடிக்கடி மயக்கம் வந்தது. குந்தவையும் அவளைக் கண்போலப் பார்த்துக் கொண்டிருந்தாள். இது, உடனிருந்த தோழிகளிடையே வானதியின் மேல் பொறாமையைச் வளரச் செய்தது. வானதியின் பயத்தைப் போக்க, தாங்கள் ஜோதிடர் வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் ஒரு பொம்மை முதலையைத் தயார் செய்து வைக்கச் சொல்லியிருந்தாள் குந்தவை. அவர்கள் இருவரும் திரும்பி வந்தபோது, அனைவரும் ‘முதலை முதலை’ எனக் கத்திக்கொண்டு பயந்தது போல நடித்தனர். வானதி பயப்படவில்லை. ஆனால், இந்த சத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த வந்தியத்தேவன், பெண்களைக் காப்பாற்றுவதாக எண்ணி ஈட்டியால் முதலையைத் தாக்கினான். அதிலிருந்து பஞ்சும், வாழைநாரும் வெளிவந்தன. சுற்றியுள்ள பெண்களெல்லாம் சிரிக்க, வந்தியத்தேவன் குழம்ப, குந்தவை ஜோதிடர் வீட்டில் பதில் சொல்லாமல் வந்ததற்கும், இங்கு பொம்மை முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்ததையும் சொல்லி வருத்தம் தெரிவிக்க, வந்தியத்தேவன் அடைந்த ஏமாற்றத்தைச் சொல்லி மாளாது. இத்தனையும் பெண்களுக்கு நடுவில் நடக்கவும், அசூயை அடைந்த வந்தியத்தேவன் குதிரையை விரட்டிக்கொண்டு வேகமாகக் கிளம்பி விட்டான். அதைக் கண்டு குந்தவை வருந்தியதோடு, தோழிகளையும் கடிந்து கொண்டாள். குந்தவையைச் சந்தித்தபிறகு அங்கேயே நின்றுவிட்ட மனதைத் திருப்ப முடியாமல் வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். குந்தவையின் நினைவால் இயற்கை எழிலை ரசிக்க முடியாமல் புதுவித உணர்வில் தவித்துக்கொண்டே தஞ்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவையாறு திரும்பும் வழியில் கடம்பூர் மாளிகையில் பார்த்திருந்த மூடுபல்லக்கு வருவதைக் கவனித்தவன், அதில் இருப்பவர் மதுராந்தகன் என்பதை எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும் என முடிவு செய்துகொண்டு பல்லக்கைத் தொடர்ந்தான். பழுவேட்டரையரும் அவரின் பரிவாரங்களும் உடன் வராததால் இன்னும் துணிவு பிறந்தது. பழுவூர் ஆட்கள் இவன் பின்தொடர்வதைக் கவனித்து விசாரிக்க முயல்கையில், வேண்டுமென்றே பல்லக்கை இடிப்பதுபோல் சென்று காப்பாற்ற வேண்டும் என பல்லக்கில் இருப்பவரிடம் முறையிட்டான். காவலர்கள் பிடிக்க வந்த நேரம் பல்லக்கின் மூடுதிரை விலகியபோது உள்ளே தெரிந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்தான். மதுராந்தகனை எதிர்பார்த்த வந்தியத் தேவனுக்கு அழகிய மோகினியைப் போன்ற பெண்ணைக் கண்டு பேரதிர்ச்சி. முதலில் பேச்சு வராமல் திகைத்தவன், அவள் நந்தினிதான் என்று யூகித்த கணத்தில், ஆழ்வார்க்கடியானின் பெயரை உபயோகித்து, தங்களிடம் பேச வேண்டும் என்றான். பழுவூர் இளைய ராணியான நந்தினி, ஒரு கணம் வியந்தவள் அரண்மனையில் வந்து சந்திக்குமாறு கூற, ‘காவலர்கள் விடமாட்டார்களே’ என வந்தியத்தேவன் நயந்தான். உடனே நந்தினி, ஒரு தந்த மோதிரத்தைக் கொடுத்து, பின் தொடர்ந்து வரவேண்டாம் என எச்சரித்துவிட்டே அந்தப் பல்லக்கை நகரச் சொன்னாள். வந்தியத்தேவன் அவள் அழகில் கிறுகிறுத்துப் போயிருந்தான். பழுவேட்டரையர் இவள் பேச்சைக் கேட்கிறார் என்பது உண்மையானால் அது தவறில்லை என்று நினைத்துக் கொண்டான். பல்லக்கு வெகுதூரம் சென்றபிறகே கிளம்பிய வந்தியத்தேவன், தஞ்சையை அடைந்தான். நகரத்தை ரசிக்க ஆவலிருந்தாலும் முதலில் வந்த வேலையைப் பார்க்க வேண்டும் என்ற கடமையினால், கோட்டை பிரதான வாயிலுக்குச் செல்ல, அங்கு யாரும் உள்ளே சொல்லாமல் ஒதுங்கி நின்றிருந்தனர். காவலர் கவனத்தைக் கவராது உள்ளே செல்வது கடினம் என்று உணர்ந்து கொண்டு, அருகிலிருந்த ஒரு இளம் வாலிபனிடம் பேச்சுக் கொடுத்து, வேளக்காரப் படை வெளியில் வருவதற்காகத்தான் அனைவரும் ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். வேளக்காரப் படை பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வெளிவந்தது. அவர்கள் வெளியில் வந்த பிறகு முக்கியஸ்தர்களைத் தவிர உள்ளே செல்ல யாருக்கும் அனுமதியில்லை என்று தெரிந்து கொண்டவன், இரவைக் கோட்டைக்கு வெளியே கழித்து விடலாம் என்று முடிவு செய்தான். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிவபக்தன் போலத் தோற்றமளித்த வாலிபனிடம் பேச்சுக் கொடுத்ததில், அவன் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்தில் மலர் கைங்கரியம் செய்து வருபவன் எனத் தெரிந்தது. தங்க இடமிருக்குமா என்று கேட்க, சேந்தன் அமுதன் என்ற அந்த வாலிபன் அவன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறினான். அவனுடன் வீட்டுக்குச் சென்ற வந்தியத்தேவன் அவனுடைய தாயார் காது கேளாத, வாய்பேச முடியாத பெண்மணி என்று தெரிந்துகொண்டான். சேந்தன் அமுதனிடம் கோட்டையைப் பற்றிய விவரங்கள் கேட்டு அறிந்தான். கோட்டைக்குள்ளே சுந்தர சோழர், பழுவேட்டரையர்கள், முதன்மந்திரி அநிருத்தர், இளவரசர் மதுராந்தகர் அரண்மனைகளும் மற்றும் அதிகாரிகள் வசிப்பிடங்களும் துர்க்கைக் கோவிலும் கணிகையரும் இருப்பதாகக் கூறினான் சேந்தன் அமுதன். கோட்டைக் காவலர் சின்ன பழுவேட்டரையரின் மகளை மதுராந்தகர் மணந்திருப்பதாகவும் அதற்குப் பிறகு அவரின் குணம் சிறிது மாறிவிட்டதாகவும் கூறினான். வெகு சுவையான உணவை உண்ட வந்தியத்தேவன் அயர்ந்து உறங்கினான். இதற்கிடையில், வந்தியத்தேவன் கிளம்பிப்போன பிறகு திருமலையப்பன் என்னும் ஆழ்வார்க்கடியான், குதிரை வாங்கி வந்த பணியாளோடு பேச ஆரம்பித்தான். தன் பெயர் இடும்பன்காரி என்று அறிமுகப் படுத்திக்கொண்ட அந்தப் பணியாள் தன் கை விரல்களால் மீன் போன்ற முத்திரையைக் காட்ட, ஆழ்வார்க்கடியான் அதைப் புரிந்து கேள்வி கேட்டபோது ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டான். ஆழ்வார்க்கடியானிடம் போக்குக் காட்டி அவன் விலகிச் சென்ற சமயத்தில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மேல் ஏறிக்கொண்டு திரும்பவும் அவ்விடம் வந்த இடும்பன் காரியைக் கண்காணிக்க ஆரம்பித்தான். வெகுநேரம் கழிந்த பின்பு சோமன் சாம்பவன் என்னும் புதியவன் வந்து மீன் முத்திரையைக் காட்ட, இருவரும் கிளம்பித் திருபுறம்பியம் என்னும் பகைவனின் பள்ளிப்படைக்கு ரகசியமாகச் செல்லவேண்டுமெனப் பேசிக்கொண்டே கிளம்பினர். (பள்ளிப்படை என்பது பழந்தமிழகத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த வீரர்களுக்கு எழுப்பப்படும் நடுகல்லும், தெய்வமும் இணைந்த கோயிலாகும்). பாண்டியருக்குப் பகை நிலையில் நின்று போரிட்ட பல்லவ மன்னனின் துணைவன் கங்க மன்னன் பிருதிவிபதி நினைவாக எழுப்பப்பட்ட திருபுறம்பியம் பள்ளிப்படைக்கு ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து இருட்டும்வரை மறைந்து இருந்தான். பின் இருவர் இருவராக ஆறுபேர் வந்து கூடினர். பின்னர் சோமன் சாம்பவனும் இடும்பன்காரியும் வந்து இணைந்து கொண்டனர். ரவிதாஸன் என்பவன் இலங்கைக்கும் தொண்டை மண்டலத்துக்கும் இரு குழுவாகப் பிரிந்துச் சென்று பகைவர்களை ஒரே நேரத்தில் கொல்ல வேண்டுமென்றும், அதற்கான பொருளைச் சோழரின் கருவூலத்திலிருந்தே எடுத்து வந்ததாகக் கூறி பொன் நாணயங்களைக் காண்பித்தான். இடும்பன்காரி பணியாள் போல சம்புவரையர் மாளிகையில் நடித்து, முதல்நாள் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொண்டதைக் கூறினான். ஆழ்வார்க்கடியான் மற்றும் வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியபோது ரவிதாஸன், ஆழ்வார்க்கடியான் செம்பியன் மாதேவியின் ஒற்றனாய் இருக்கலாம் எனக் கூறி அவனை எங்கு பார்த்தாலும் கொன்று விடுமாறு கூறினான். அப்போது ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தில் சலசலப்புத் தோன்ற, நெருங்கி வந்தவர்கள் மீது வெளவாலை எறிந்துவிட்டு ஆழ்வார்க்கடியான் இருளில் மறைந்து தப்பினான். வந்தியத்தேவன் காலையில் புத்துணர்ச்சியுடன் நன்கு அலங்கரித்துக்கொண்டு, அரசரைத் தரிசிக்கக் கிளம்பினான். கோவிலுக்கு பூக்கூடையுடன் கிளம்பிய சேந்தன் அமுதனிடம் பேசிக்கொண்டே, குதிரையை அங்கேயே விட்டுவிட்டு கோட்டை வாசலுக்கு நடக்க ஆரம்பித்தனர். சேந்தன் அமுதனின் அன்னையின் தமக்கை இறந்து விட்டார் எனவும் தமையனார் ஒருவர் கோடியக்கரையில் குழகர் கோயிலில் கைங்கர்யம் செய்வதாகவும் கூறினான். சேந்தன் அமுதனின் மாமன் மகளான பூங்குழலி நன்கு பாடுவாளெனவும், அவள் பாடினால் சமுத்திரமும் காட்டு விலங்கும் கூட மெய்மறந்து போகுமெனவும் சிலாகித்தான். சேந்தன் அமுதனுக்கு பூங்குழலி மீது இருந்த ஆசையை உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், “திருமணம் செய்து கொள்ளலாமே” என்று கிண்டல் செய்ய, சேந்தன் அமுதன் அதற்கு, பூங்குழலியின் சம்மதத்திற்குக் காத்திருப்பதாகக் கூறினான். பழுவேட்டரையரின் திருமணத்தைப் பற்றிப் பகடியாய் வந்தியத்தேவன் பேச, சேந்தன் அமுதன் அதைக் கண்டித்தான். கோட்டைக்குள் செல்லும்போது இத்தகைய பேச்சு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்தான். பழுவேட்டரையர்களை எக்காரணத்தைக் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அவர்கள்தான் இங்கு அதிகார மையம் என்பதையும் புரிய வைத்தான். பழையாறையிலிருந்த சுந்தர சோழரைக்கூட, வீரபாண்டியனின் மரணத்துக்குப் பிறகு பாண்டியர்களால் ஏதாவது ஆபத்து நேரலாம் என்பதால் தஞ்சையில் தங்கள் பாதுகாப்பில் பழுவேட்டரையர்கள் வைத்திருப்பதாகக் கூறினான். இரு கால்களும் உணர்ச்சியற்று இருப்பதால் சக்ரவர்த்தியான சுந்தரசோழர் எங்குமே செல்ல முடியாது என்றும் வருந்தினான். பழுவேட்டரையர்களின் அதிகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் இருப்பதால்தானே நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபடுகிறார்கள் என உள்ளுக்குள் மருகிய வந்தியத்தேவன், சேந்தன் அமுதனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய மனக்கோட்டைகளுடன் கோட்டை வாசலை நெருங்கினான். சவிதா

பொன்னியின் செல்வன் – 4

பொன்னியின் செல்வன் – 4

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் என நினைத்திருப்போம். ஆனால் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றிருக்கும். வந்தியத்தேவனுக்கு அந்த இரவு அப்படித்தான் அமைந்திருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்ததும், உற்ற நண்பனான கந்தமாறன் தன்னிடம்கூட ஏதும் கூறாமல் தன்னைத் தனியே படுக்க வைத்துவிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதும், தன்னைப் பற்றி எச்சரிக்கையாகப் பேசியதும் வந்தியத்தேவனை அங்கு நடப்பவற்றை உற்றுக் கவனிக்கத் தூண்டின. பழுவேட்டரையர், சாம்ராஜ்யத்தின் அரசுரிமையைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ஏற்கனவே இளவரசராக இருப்பவர் சுந்தரசோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனபோதும், பழுவேட்டரையர் தன்னுடன் குழுமியிருந்தவர்களிடம் அரசைக் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன்மாளிகை கட்டிவைத்துக் கொண்டு அதற்கு சுந்தரசோழரையும் தாயையும் அழைத்துக் கொண்டிருப்பது யாருக்கும் உவப்பில்லை எனக் கூறினார். மேலும் ஈழத்துக்குப் போர் புரியச் சென்றிருக்கும் அருள்மொழிவர்மன், படையெடுத்துச் சென்ற இடத்திலேயே உணவுக்கு ஏற்பாடு செய்யாமல் தஞ்சையிலிருந்து அனுப்பச் சொல்வது சரியில்லை என்றும், அவ்வாறு அவர் கட்டாயப்படுத்தப் படுவதால், நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பிலுள்ள அவரும் அவருடைய தம்பியான சின்ன பழுவேட்டரையரும் அதிகமான வரிகளை விதிப்பதற்குண்டான அவசியம் நேர்வதாகச் சொல்லிக் குறைப்பட்டார். இதற்கெல்லாம் மேல் சுந்தரசோழரின் உடல்நலம் கெட்டுக் கொண்டிருப்பதையும், அடுத்த வாரிசு யாரென முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அரசு நலனில் அக்கறையுள்ள நமக்கு உண்டென்றும் அவர் சொல்லும்போது கூட்டத்தில் உள்ள அனைவரும் அதிர்ந்தனர். ஏற்கனவே வாரிசாய் உள்ள ஆதித்த கரிகாலனைப் பற்றிக் கேட்க, அவர் முந்தைய நாட்களில் நடந்த பட்டத்திற்குண்டான உரிமைகளைப் பற்றி விரிவாக கூறினார். ஆதித்த கரிகாலனை விட சுந்தரசோழரின் பெரியதகப்பனான கண்டராதித்தர் – செம்பியன் மாதேவி தம்பதியருக்குப் பிறந்த மதுராந்தகனுக்கே அதிக உரிமை உண்டென அவர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னபோது, யாராலும் மறுத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. சுந்தர சோழர் இதைப்பற்றி எதையும் பேசத் தெம்பிலாது அவர் மகள் குந்தவை தேவியினால்தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அதிருப்தியாகத் தெரிவித்தபொழுது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு, பழுவேட்டரையரை நோக்கி ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பழுவேட்டரையர் அங்கு கொண்டு வந்து வைத்திருந்த மூடுபல்லக்கைப் பற்றியும், குந்தவை தேவியைப் பழி கூறும் பழுவேட்டரையர், தான் புதிதாக மணந்துகொண்ட மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பதும், இவ்வளவு முக்கியமான கூட்டத்தின்போதுகூட அவரை உடன் கூட்டி வந்திருப்பதையும் சுட்டிக் காட்டினர். பழுவேட்டரையர் சினம் காட்டாமல், முதலில் ராஜாங்க விஷயங்கள் முடிவானதும் அதைப்பற்றிப் பதில் கூறுவதாகக் கையமர்த்தினார். பிறகு மதுராந்தகன் முடிசூடுவதைப் பற்றியான பேச்சுகள் எழுந்தன. அதற்கு ஆதரவு தருபவர்கள் யார் யாரெனத் தெரிந்துகொள்ளப் பழுவேட்டரையர் முயன்றார். அப்போது சம்புவரையர் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார். மதுராந்தகனை செம்பியன் மாதேவி ஒரு சிவக்கொழுந்தாகவே சிறுவயது முதல் வளர்த்து வருகிறார். ராஜ்ய விவகாரங்களில் தலையிடாமல சிவ காரியங்களில் மட்டுமே நாட்டம் செலுத்துபவராகவே மதுராந்தகனை அனைவரும் இவ்வளவு நாள் பார்த்து வருகிறார்கள். இப்பொழுது வாரிசுப் போட்டிக்கு முதலில் செம்பியன் மாதேவி சம்மதிப்பாரா? மற்றும் மதுராந்தகனின் விருப்பம் என்னவென்று தெரியாமல் நாம் கூடி முடிவெடுத்துவிட்டு, பின்னர் அரசரிடம் அவப்பெயர் வாங்கிவிடக்கூடாதே என்றெல்லாம் தன் அச்சத்தைத் தெரிவித்தார். அப்பொழுது பழுவேட்டரையர், யாரும் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், அதற்குரிய ஆதாரத்தைக் காண்பிப்பதாகவும் கூறி “மதுராந்தகரே! வெளியில் வாருங்கள்” என்று கூற, பல்லக்கைவிட்டு வெளியே வந்து அனைவரையும் வணங்கிய மதுராந்தகனைப் பார்த்து அனைவரும் திகைத்தனர். பின்னர் மதுராந்தகனை வாழ்த்தினர். இவற்றை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனும் அதிர்ந்து, ‘இதற்காகத்தான் ஆழ்வார்க்கடியான் ஒற்றறிய வந்தானா?’ என்று நினைத்தபடி ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தைப் பார்க்க, அங்கு யாருமில்லை. இதற்குமேல் இங்கு நின்று கவனித்துப் பார்க்க ஏதுமில்லை என்று தெரிந்து கொண்டவன் அவனுடைய இடத்தில் போய்ப் படுத்து உறங்க முயற்சித்தான். ஒரு பெரும் அரசியல் சுழலில் தான் சிக்கிக்கொண்டதாய் உளைந்தவனால் அவ்வளவு சீக்கிரம் உறங்க முடியவில்லை. காலையில் கந்தமாறன் வந்து எழுப்பிய பிறகே வந்தியத்தேவனால் எழ முடிந்தது. எழுந்ததும், முதல்நாள் நடைபெற்ற சம்பவங்களை நினைத்துக் கொண்டவன் உடனே அங்கிருந்து கிளம்புவதாகக் கூறினான். கந்தமாறன் முதலில் வருந்தினாலும், பெரிதாக எதுவும் சொல்லவில்லை. கொள்ளிடக்கரை வரையிலும் அவனை வழியனுப்ப கூடவே வந்தான். வந்தியத்தேவன், கந்தமாறன் முன்பே அவன் தங்கை மணிமேகலையைப் பற்றிக் கூறியதை நினைவுபடுத்தி, அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை என வருந்தினான். கந்தமாறன் தர்மசங்கடத்துடன், அவன் தங்கை மணிமேகலையை வந்தியத்தேவனுடன் முன்னம் இணைத்துப் பேசியதை மன்னித்துவிடுமாறு வேண்ட, வந்தியத்தேவன் தன்னைப் போன்ற ஓர் ஏழை இதை எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான் எனக் கூறினான். கந்தமாறன் எந்த உண்மையையும் அவனிடம் சொல்ல முடியாததற்கு வருந்தினான். அதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனை சமாதானப்படுத்தி விடைபெற்றான். அவன் குதிரையை ஒரு பணியாள் கொண்டுபோக, இன்னொரு குதிரையை அக்கரையில் வாங்கிக் கொடுக்க இன்னொரு பணியாள் உடன் வர, வந்தியத்தேவன் படகில் ஏறியபோது, இன்னொருவரும் அவசரமாக வந்து ஏறினார். அது ஆழ்வார்க்கடியான். படகில் ஒரு வீர சைவரும் இருக்க, வழக்கம்போல இருவரும் சண்டை போட்டுக்கொண்டே அக்கரையில் இறங்கினர். வந்தியத்தேவனுக்குக் குதிரை வாங்கிக்கொண்டு வருவதற்காக வந்த பணியாள் கிளம்பிவிட, ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஒருவரையொருவர் நேற்று நடந்த விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் ஒற்றறிய முயன்றதால், அவர்கள் இருவரால் எதையும் அறிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமே மிஞ்சியது. மூடுபல்லக்கில் வந்த பழுவேட்டரையரின் ராணியிடம் கடிதம் கொடுக்கச் சொன்ன ஆழ்வார்க்கடியானுடைய செயல் தவறானது என்று வந்தியத்தேவன் சொல்ல, அவன் மறுத்தான். ‘மதுரைக்குப் பக்கத்தில் என்னுடைய பெற்றோர் எடுத்து வளர்த்த குழந்தைதான் நந்தினி. ஆண்டாளைப் போன்று பக்தியில் சீலமாய்த் திகழ்ந்தவள். வடநாட்டுக்கு நான் யாத்திரை சென்றிருந்தபொழுது, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடைபெற்றது. அப்பொழுது தப்பித்து ஓடிவந்த அடைக்கலம் புகுந்த வீரபாண்டியனின் மரணத் தறுவாயில் நந்தினி உதவி செய்தபொழுது, படைவீரர்கள் உட்புகுந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். பழுவேட்டரையர் அவளைப் பிடித்து வந்து கட்டாயமாக மணம் புரிந்திருக்கிறார். அதற்குப் பிறகு நான் அவளைச் சந்திக்க முடியவில்லை. அவளைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் விடுதலை செய்து போகவும் முயன்று கொண்டிருக்கிறேன்’ என ஆழ்வார்க்கடியான் முடித்தான். இதைக் கேட்டவுடனே வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றிய தன் தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டான். எனினும், பல்லக்கிலிருந்தது மதுராந்தகன்தான் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும் விளையாட்டுப் போல, ‘சுந்தரசோழருக்கு அடுத்து யார் பட்டத்துக்கு வருவார்?’ என்ற கேள்வியைக் கேட்டு ஆழம் பார்த்தான். ஆனால் ஆழ்வார்க்கடியான் அசராமல், இதெல்லாம் குடந்தை ஜோதிடர்தான் சொல்வார் எனக் கூறி, ஜோசியரின் பெருமைகளையும் கூறினார். குதிரை வந்தவுடன் வந்தியத்தேவன் ஜோசியர் இல்லத்துக்குச் சென்று ஆருடம் பார்த்துவிட்டே தன் பயணத்தைத் தொடர்வது என்று முடிவு செய்துவிட்டே கிளம்பினான். அதே சமயத்தில் அரிசிலாற்றின் கரையில் ஒரு படகு சில பெண்களைச் சுமந்துகொண்டு வந்தது. படகில் இருந்து இரு முக்கியப் பெண்மணிகள் இறங்கினர். கொடும்பாளூர் இளவரசி வானதியும், சோழவம்சக் குலக்கொடி குந்தவை தேவியும் படகிலிருந்து இறங்கினர். குடந்தையில் தங்களுக்கு முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி வானதியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவை கரையில் காத்துக் கொண்டிருந்த ரதத்தில் கிளம்பினாள். எங்கு செல்கிறோம் என்று கேட்ட வானதியிடம், குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் செல்லப் போவதாகக் குந்தவை கூறினாள். ரதத்தை ஒதுக்கி நிறுத்தச் சொல்லி சாரதிக்கு ஆணையிட்ட இளவரசியையும் வானதியையும் ஜோசியர் வரவேற்று அமர வைத்தார். வானதி சிறிது காலமாக அடிக்கடி மயக்கமடைவதையும், உற்சாகமற்று இருப்பதையும் பற்றித் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் குந்தவை கூறினாள். அக்காலத்தின் பழக்கமாக உயர்குடும்பங்களைச் சேர்ந்த ஜாதகங்களை ஜோசியர்கள் வைத்திருப்பது போன்று வானதியின் ஜாதகத்தையும் வைத்திருந்த குடந்தை ஜோதிடர், ஜாதகத்தை எடுத்துப் பார்த்து, நம்ப முடியாது திகைத்துப்போனார். குந்தவை என்னவென்று வினவ, ஜோதிடர் வானதியின் ஜாதகம் கொண்டிருந்த சிறப்புகளைப் பற்றிக் கூறலானார். வானதியை மணக்கப் போகிறவன் கடல் கடந்து போயிருக்கிறான். அவன் போர்களில் வென்று அரசனாக முடிசூடுவான். இந்தப் பெண்ணின் காலில் இருக்கும் தாமரையினால், பின்னால் ஒரு காலத்தில் பெரும் பட்டமகிஷிகள் கூட இவர் பாதம் பணியக் காத்திருப்பார்கள். இவரின் வயிற்றில் ஆலிலை ரேகை கொண்டுள்ளதால் இவருக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தடங்கல் என்பதே கிடையாது. உலகை வெற்றி கொள்வான்’ என்று கூறிக் கொண்டிருந்தபோதே வானதி மயங்கி வீழ்ந்தாள். அவளின் மயக்கத்தைத் தெளிவித்தவாறே வானில் இருக்கும் வால்நட்சத்திரத்தைப் பற்றிய தன் சந்தேகத்தைக் குந்தவை கேட்டாள். ஆனால், ஜோசியர் அதற்கு சரியான மறுமொழி அளிக்காமல் மழுப்பி விட்டார். விழித்த வானதிக்கும் குந்தவைக்கும் அம்மன் பிரசாதத்தை அளித்த ஜோசியரிடம் வானதி, குந்தவை தேவிக்கு அமையப்போகும் கணவரைப் பற்றிக் கேட்டாள். ‘எங்கிருக்கிறார்? எப்படி வருவார்?’ என்று வானதி கேட்டபோது, ஜோசியர் சொல்வதற்கு முன் குறும்பாக, குதிரையில் ஏறி வருவார், அசகாய சூரர் என்றெல்லாம் குந்தவை பதில் அளித்துக் கொண்டிருக்க, நிஜமாகவே குதிரை வரும் சத்தம் கேட்டது. வாசலில் குழப்பமான ஒலிகள் கேட்டன. கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் உள் நுழைந்தான். குந்தவையின் கண்களும் வந்தியத்தேவனின் கண்களும் சந்தித்துக் கொண்டன. குந்தவையை ஏறிட்ட வந்தியத்தேவன், உடனே சமாளித்துக்கொண்டு சீடனை கடிந்தபடி வெளியே சென்றுவிட்டான். குந்தவையும் வானதியும் விடைபெற்று வெளியில் வந்தபொழுது மன்னிப்பும் கேட்டான். அவர்களின் ரதம் கிளம்பிய பிறகு ஜோதிடரிடம் அவர்கள் யாரெனத் தெரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. வந்தியத்தேவனின் ஜாதகத்தை வைத்திருந்த ஜோதிடர், அவனுக்குக் கடற்பயணம் வாய்க்குமெனினும், உயர்ந்த பதவிகள் அவனைத் தேடிவருமெனவும் ஆருடம் கூறினார். ஆழ்வார்க்கடியானைப் பற்றிக் குறிப்பிட்டபொழுது, அந்த அடையாளத்தில் திருமலையப்பனை மட்டுமே தெரியும் எனக் கூறினார். பொற்கழஞ்சுகளைச் சன்மானம் அளித்த பிறகு வந்தியத்தேவன் வழியெங்கும் இயற்கை எழிலை ரசித்தபடி தன் பிரயாணத்தைத் தொடங்கினான். தொடரும். சவிதா  

பொன்னியின் செல்வன் – 3

பொன்னியின் செல்வன் – 3

வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான். வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான். பழுவேட்டரையர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மர்மமான பெண்ணை மணந்து கொண்டதாகவும், எங்கு போனாலும் அவளை மூடு பல்லக்கில் வைத்துத் தன்னுடனேயே அழைத்துச் செல்வதாகவும் கூறினான். மேலும், அந்தப் பெண்ணை அந்தப்புரத்துக்குக்கூட அனுப்பாமல், தன்னுடனேயே தங்க வைத்திருப்பதையும், அதை ஒரு தாதிப்பெண் பார்த்துவிட்டு வந்து விவரித்ததை அன்னையும் மற்ற பெண்களும் சொல்லிச் சிரித்ததாகக் கூறினான். இந்த முதிய வயதில் இப்படி அவர் நடந்துகொள்வதே அனைவரின் சிரிப்புக்கும் காரணம் என விளக்க, வந்தியத்தேவன் மறுத்தான். ‘அது மட்டுமல்ல; அந்தப் பெண் அழகாக இருப்பதற்காகவும் உன் வீட்டுப் பெண்கள் சிரித்திருக்கலாம்’ என்றதும், ‘நீ எப்போது பார்த்தாய்?’ எனக் கேட்டான் கந்தமாறன். வரும் வழியில் பார்த்ததையும் இப்போதுதான் அது யாரெனத் தெரிந்து கொண்டதாகவும் வந்தியத்தேவன் கூறியபோது வாத்தியங்களின் முழக்கம் கேட்டது. அது குரவைக் கூத்துக்கான ஆரம்ப முழக்கம் எனக் கந்தமாறன் கூறியதும், ஆழ்வார்க்கடியான் நம்பி அதைக் குறிப்பிட்டது நினைவுக்கு வந்து, தனக்கும் அதைப் பார்க்க ஆவல் என வந்தியத்தேவன் சொல்ல, இருவரும் அங்கு சென்றனர். முற்றத்தில் மேடை அமைக்கப்பட்டு, மயில், அன்னம், கோழி போன்ற சித்திரங்களை வரைந்திருந்தனர். அகில் புகை, மலர் மணம், தீபங்களின் ஒளி எல்லாம் வந்தியத்தேவனின் மனதை மயக்கின. அந்தச் செந்நிறம் ஒருவிதமான உணர்வை எழுப்பியது. முக்கிய விருந்தாளிகள் வந்து அமர்ந்ததும் குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மலர்மாலையுடன் பிணைத்துக் கொண்டு முருகன் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டே ஆடினார்கள். பின் வேலாட்டம் தொடங்கியது. தேவராளன், தேவராட்டி என ஆண், பெண் இருவரும் வந்து சிவப்பு வண்ண ஆடைகளையும் மலர்களையும் அணிந்து ஆடியது அச்சத்தை ஊட்டியது. பின் தேவராளன் வெறியாட்டம் ஆட, அனைவரும் சந்நதம் வந்துவிட்டதாகப் பதைத்தனர். மழை பொழியுமா, நாடு செழிக்குமா, என்றெல்லாம் ஒவ்வொருவராகக் கேட்க, தேவராளன் ஆடிக்கொண்டே, மன்னர் குலத்து, ஆயிரங்கால அரசர் குலத்து ரத்தம் வேண்டும், பலி வேண்டும்; கொடுப்பீர்களா? என உக்கிரமாகக்  கேட்டான். மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர், மழவரையர், சம்புவரையர் எல்லாரும் திகைத்தபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பூசாரியை நிறுத்தச் சொல்ல, தேவராளன் மயங்கி வீழ்ந்தான். சபை மெளனமாகக் கலைய, நரிகள் ஊளையிடும் சப்தம் கேட்டது. வந்தியத்தேவன் அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தான். மதில் சுவற்றின் மேல் ஆழ்வார்க்கடியானின் தலை மட்டும் வெட்டி வைத்திருந்ததைப் போலத் தெரிந்தது. அதிர்ந்துபோன வந்தியத்தேவன் மறுபடியும் பார்க்க, அங்கு எதுவுமே இல்லை. அவன் உள்ளம் எதையோ நினைத்துக் கலங்கிற்று. அதற்குப் பின் பிரம்மாண்டமான விருந்து தொடங்கியது, கந்தமாறன் அங்கு வந்திருந்த அனைவரையும் யார் யாரென எடுத்துக் கூறிக்கொண்டிருந்தான். அங்கு வந்திருந்த பெரியமனிதர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள் அல்லர். அனைவரும் குறுநில மன்னர்கள்; அல்லது தன் வீரத்தினால் குறுநில மன்னர்களுக்கு இணையான பட்டத்தைப் பெற்றிருந்தவர்கள். அதாவது இன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள், பெருங்குழும முதலாளிகள் போன்றவர்கள். கந்தமாறன் சொல்லச் சொல்ல, ‘இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் எதற்காக இங்கு இணைந்து வந்திருக்கிறார்கள்?’ என்ற சந்தேகம் வந்தியத்தேவனுக்குள் வளரலாயிற்று. விருந்து முடிந்து, அரண்மனையின் மேல் மாடத்தின் ஒரு மூலையில் அவனுக்கென ஒதுக்கப்பட்ட திறந்த மண்டபத்தில் கந்தமாறன் விட்டுச் சென்ற பிறகும் கூட, அந்த சந்தேகம் மறையாதிருந்தது. களைப்பினால் கண்ணயர்ந்த பின்னும் ஆழ்மனநிலையில் அந்த சந்தேகம் வலுத்தபடியே இருந்ததால், கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டுப் பாதியிலேயே விழித்துக் கொண்டான். கனவில் வெட்டுப்பட்ட ஆழ்வார்க்கடியான் தலையைக் கண்டிருந்த வந்தியத்தேவன், திடுக்கிட்டு விழித்தபோதும் அதையே பார்த்து வெருண்டான். ஆனால், இந்த முறை தலை மறையவில்லை. கடைசியில் உற்றுப் பார்த்தபொழுது, ஆழ்வார்க்கடியான் மாளிகையின் சுற்று மதிலுக்குப் பின்னாலிருந்து தலையை மட்டும் எட்டி உள்ளே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று துலங்கியது. ஏதோ ஓர் ஆபத்து என உள்மனம் சொல்ல, உடல் பதறி வாளுடன் அவனை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். ஆழ்வார்க்கடியான் தலை தெரிந்த இடத்திற்கும் இவன் படுத்திருந்த இடத்திற்கும் உண்டான தொலைவைக் கவனமாகக் கடந்தபோது பேச்சுக்குரல் கேட்கவே, வந்தியத்தேவன் குனிந்து பார்த்தான். கீழே குறுகலான முற்றத்தில் விருந்தில் பார்த்த அனைத்து முக்கியமானவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவில் பேசிக் கொள்வதானால் ஏதோ ஒரு முக்கிய விஷயமாக இருக்க வேண்டும் என ஊகித்த வந்தியத்தேவன், அதைப் பார்க்கத்தான் ஆழ்வார்க்கடியான் மதிலில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டான். இப்போது ஆழ்வார்க்கடியானைக் கையும் களவுமாகப் பிடிப்பதானாலும் கீழே அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் முடியாது. அப்போதும் அவன் தப்பிவிட்டான் என்றால், தன்னை சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. கந்தமாறனும் அந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டவுடன் காலையில் அவனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான். பக்கத்தில் இருந்த மூடு பல்லக்கைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியான் அந்தப் பல்லக்கில் இருந்தவளைப் பார்க்கத்தான் வந்திருப்பான் எனப் புரிந்து கொண்டான். திரும்பி விடலாம் என யத்தனித்தபோது, தன் பெயர் அடிபடுவதைக் கண்டு உற்றுக் கேட்க ஆரம்பித்தான். ‘உங்கள் மகனின் நண்பன் என ஒருவன் வந்துள்ளானே.. அவன் ஆதித்த கரிகாலனின் கீழ் பணிபுரியும் ஆள். நாம் பேசும் விஷயம் எதுவும் அவனுக்குத் தெரிந்துவிடக் கூடாது. தெரிந்தால் இந்தக் கோட்டையை விட்டு அவன் உயிருடன் போகக் கூடாது’ என்று சொல்லக் கேட்டதும் வந்தியத்தேவனுக்குப் பொறி கலங்கியது. ஆனால், கந்தமாறன் தன் நண்பனுக்குப் பரிந்து பேசினான். அவன் நம்பிக்கைக்குரியவன் என்று கூறியதை ஏற்றுக்கொண்ட பழுவேட்டரையர், “இப்போது நாம் பேசப்போவது பெரிய சாம்ராஜ்யத்தைப் பற்றிய மிக முக்கியமான விஷயம். இது மட்டும் வெளியில் தெரிந்தால், பயங்கரமான பின்விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்” என எச்சரித்துவிட்டு, மேலும் அதிர்ச்சி தரும் விஷயங்களைப் பேசத் தொடங்கினார். வந்தியத்தேவன் முதலில் பயந்தாலும், அவர்கள் பேசும் விஷயங்களை மறைந்திருந்து கேட்கலானான். அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் பல முக்கியமான திருப்பங்களுக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் வந்தியத்தேவனை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டே சென்றன. தொடரும். சவிதா