பொன்னியின் செல்வன் – 2

பொன்னியின் செல்வன் – 2

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1 – முந்தைய பகுதியைத் தவறவிட்டவர்கள் இந்த இணைப்பில் வாசித்துவிட்டுத் தொடரலாம். பொன்னியின் செல்வன் – 2 பழுவேட்டரையரின் பரிவாரங்கள் ராஜபோகமாக ஆர்ப்பாட்டத்துடன் செல்வதை வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகார ஆக்கிரமிப்பில் பழுவேட்டரையரின் காவலாளிகள், தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவன் குதிரையுடன் வம்புக்குச் சென்றார்கள். அவர்களால் சீண்டப்பட்ட குதிரை கூட்டத்தில் குழப்பம் விளைவித்தபடியே தப்பித்து ஓடியது. அதனைத் தடுக்க முடியாமல் வாடி நின்ற வந்தியத்தேவனைக் கண்ட ஆழ்வார்க்கடியான் அவனிடம், ‘என்னிடம் காட்டிய வீரத்தை அவர்களிடம் காட்டக்கூடாதா?’ என்று வேறு  குத்திக் காட்டினான். உள்ளூரக் கோபத்திலிருந்த வந்தியத்தேவன், பழுவேட்டரையருடைய வீரர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சண்டைக்குப் போகாமல், தள்ளிப் போய் பாவமாக நின்று கொண்டிருந்த குதிரையைத் தட்டிக் கொடுத்துக் கூட்டி வந்தான். ‘இந்த வீரர்களுக்கு என்றேனும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்’ என்றும் எண்ணிக் கொண்டான். ஆழ்வார்க்கடியான் காத்திருந்ததைக் கண்டபோது இன்னும் எரிச்சலாயிருந்தது. போதாதற்கு  ஆழ்வார்க்கடியானும் நோட்டம் பார்ப்பது போல், ‘எங்கு தங்குகிறாய்?’ எனக் கேட்டதும் இடக்காகப் பதில் சொன்னான். ஆழ்வார்க்கடியான் விடாமல், ‘நீ கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்குவதாயிருந்தால் எனக்கு உன்னிடம் ஒரு உதவி தேவைப்படுகிறது’ எனக் கூறினான். தான் செல்லப் போகுமிடம் அவனுக்குத் தெரிந்திருந்தது வந்தியத்தேவனுக்குத் திகைப்பாக இருந்தது. அதைக் குறித்து அவன் எப்படி எனக் கேட்க,  ‘பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சம்புவரையரின் மரியாதை வழங்கப்பட்டு  அங்குதான் செல்கின்றன;  மேலும், நாடெங்கிலும் இருந்து விருந்தாளிகள் இன்று இங்கு வரப்போகிறார்கள்’ என்று ஆழ்வார்க்கடியான் கூறவும், பழுவேட்டரையர் போன்ற மாவீரரை இன்று அந்த மாளிகையில்  சந்தித்துப் பழக வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுக்கு ஏற்பட்டாலும், அவருடைய படைவீரர்களின் அதிகார அலட்சியம் அவனுக்குக் கசந்தது. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், அன்றிரவு சம்புவரையர் மாளிகையில் நடக்கும் குரவைக்கூத்து, களியாட்டம் போன்றவற்றைப் பார்க்க வேண்டுமென்றும், தன்னை ஒரு பணியாள் போலப் பொய் சொல்லி அவனுடன் அங்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்டான். வந்தியத்தேவன் அவ்வாறெல்லாம் மோசடிக் காரியத்துக்கு உடன்பட மறுத்து, தான் தன்னுடன் படித்த சம்புவரையர் மகனான கந்தமாறவேளின் நண்பன் என்ற உரிமையில் போவதாகக் கூறினான். அப்படியென்றால் அவனுக்கே இன்றைக்கு அங்கு தங்குவது சிரமம்தான் எனக் கூறினான், ஆழ்வார்க்கடியான். பேசிக்கொண்டே தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான், வீர நாராயண ஏரியை ஒட்டியிருந்த வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்தியத்தேவனை அழைக்க, அவனும் உடன் சென்றான். வீர நாராயணர் கோவிலைப் பற்றிய ஒரு அறிமுகம்: முதலாம் பராந்தகச் சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில், இராஷ்டிரகூட மன்னர்கள் படையெடுத்து வருவார்கள் என எதிர்பார்த்து, பாதுகாப்புக்காகத் தன் மகன் இராஜாதித்தன் தலைமையில் ஒரு பெரிய சைன்யத்தைத் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். படைவீரர்கள் வேலையின்றி இருப்பதைக் கண்ட இராஜாதித்தன், குடிமக்களுக்கு உதவும் வகையில் கொள்ளிடத்திலிருந்து வீணாகும் வெள்ள நீரின் ஒரு பகுதியைச் சேமிக்க ஒரு ஏரியை உருவாக்கி, அதற்கு தன் தந்தையின் இன்னொரு விருதுப் பெயரான வீர நாராயணன் ஏரி எனப் பெயரிட்டான். ஏரிக் கரைகளைக் காக்க அந்நாளில் பெருமாளுக்குக் கோயில் கட்டுவது வழக்கம். அந்தக் கோவிலுக்குத்தான் இப்பொழுது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் வந்திருக்கிறார்கள். ஆழ்வார்க்கடியான் பக்திப் பரவசத்தில் கண்ணீர் வழிய உருகி, பாசுரங்களைப் பாடுவதைக் கண்ட வந்தியத்தேவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது மதிப்பு உண்டாகியது.  அர்ச்சகர் ஈசுவர பட்டரிடம் தீர்த்தம் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தவுடன் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானிடம் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டான். பதிலுக்கு ஆழ்வார்க்கடியான் கேட்ட உதவி வந்தியத்தேவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பழுவேட்டரையருடன் மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஒரு சீட்டு தருவதாகவும், அதை சம்புவரையர் மாளிகையில் தங்க நேர்ந்தால் அந்தப் பெண்ணிடம் சேர்த்து விடுமாறும் ஆழ்வார்க்கடியான் கூறியதைக் கேட்ட வந்தியத்தேவன், படபடப்படைந்து கோபப்பட்டான். ஆழ்வார்க்கடியான் அதைப் பொருட்படுத்தாமல், ‘முடியாது என்றால் பரவாயில்லை; நீ இந்த உதவியை எனக்குச் செய்திருந்தால், பின்னால் நானும் உனக்கு உதவ வசதியாய் இருக்கும்’ எனக் கூற, வந்தியத்தேவன் எரிச்சலில் உடனே அங்கிருந்து குதிரையிலேறிக் கிளம்பி விட்டான். சம்புவரையரின் மாளிகையை வேகமாய் நெருங்கியவன், பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்தான். தயங்கி நின்றால் விசாரிப்பார்கள் என்று எண்ணி, குதிரையைத் திறந்திருந்த பெரிய கோட்டையின்  வாசலுக்குள்  வேகமாக இட்டுச் சென்றான். ஆனால் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி அவன் துடுக்குத்தனத்தை விசாரிக்க ஆரம்பித்தனர். அவன் யார் என விசாரித்ததற்கு, ‘என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்; என் நாடு திருவல்லம்; என் குலத்து முன்னோர்களின் பெயர்களை உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள், தெரிந்ததா?’ என வீரமாகக் கூறினான். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் ஏற்கனவே சீண்டிய குதிரையையும் அவர்கள் ஏளனமாய்ப் பேசுவதைக் கண்ட வந்தியத்தேவன் சட்டென ஒரு யுக்தியைச் செயல்படுத்தினான்.   குதிரையை விட்டால் திரும்பிப் போவதாக அமைதியாக வந்தியத்தேவன் கூறினான். கயிற்றை வீரர்கள் விட்டவுடன், உடைவாளை உருவிக் கொண்டு பெரும் வேகத்துடன் கோட்டைக்குள்ளே சென்றான். தடுத்த வேல்கள் விழுந்தன. சுற்றியும் வந்த வீரர்கள் சிதறினர். கோட்டைக்கதவு சாத்தப்பட்டது. வீரர்கள் ‘பிடி.. பிடி..’ என சுற்றி வளைத்தனர். எல்லோரும் சுற்றி வளைத்ததும், வந்தியத்தேவன் குதிரையிலிருந்து தாவிக் குதித்தான். ‘கந்தமாறா.. கந்தமாறா.. என்னைக் கொல்கிறார்கள்’ என சத்தம் போட, நெருங்கி வந்த வீரர்கள் அவன் தங்கள் எஜமானனின் மகன் பெயரைக் கூறவும் தயங்கி நின்றனர். மேல் மாடத்திலிருந்து செங்கண்ணன் சம்புவரையர், தன் மகன் கந்தமாறனை அழைத்து ‘என்ன கலகம்?’ என்று பார்த்து வரச் சொன்னார். கந்தமாறன் வரும்வரை அனைவரும் அப்படியே நின்றிருந்தனர். பிடித்த கத்தியுடன் தனியொரு வீரனாக நின்றிருந்த வந்தியத்தேவனைப் பார்த்ததும், “வல்லவா.. நண்பா.. நீதானா?” என வியந்து கட்டிக் கொண்டான் கந்தமாறன். “இதுதான் நீ எனக்களித்த வரவேற்பா?’ என வந்தியத்தேவன் கூறவும், சுற்றி இருந்த வீரர்களைக் கடிந்துகொண்டு, வந்தியத்தேவனை அணைத்தபடி வெகு உற்சாகமாக உள்ளே கூட்டிச் சென்றான் கந்தமாறன். (கல்கியின் வார்த்தைகளில்: இளம்பிராயத்தில் நட்பும் காதலும்தான் பரவசப் படுத்தக் கூடியவை. காதலுக்காவது சில துன்பங்கள் உண்டு; நட்புக்கு அதுவும் கிடையாது) கந்தமாறன் வந்தியத்தேவனை, தன் தந்தை சம்புவரையரிடம், உற்சாகமும் பெருமையுமாகத் ‘தன் நண்பன்’ என அறிமுகப்படுத்த, அவர் அத்தனை மகிழ்ச்சியாகப் பேசவில்லை. ‘கலவரத்திற்கு காரணம் இவன்தானா?’ என்றும், இருட்டியதற்குப் பிறகு இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்ததையும் அவர் குறை கூறியது கந்தமாறனுக்கு வருத்தமாய் இருந்தது. அடுத்து வந்தியத்தேவனைப் பழுவேட்டரையரிடம் கூட்டிச் சென்றான். பழுவேட்டரையரின்பால் வந்தியத்தேவன் கொண்டிருந்த ஈடுபாட்டைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு, ‘மாமா. இவன் என் நெருங்கிய நண்பன். வாணர் குலத்தவன். நாங்கள் எல்லைக்காவல் புரிந்தபோது உங்களைப் பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டே இருப்பான். தங்கள் உடம்பில் போரினால் ஏற்பட்ட அறுபத்து நான்கு காயங்கள் இருப்பது உண்மைதானா என எண்ணிப் பார்க்க வேண்டுமென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான்’ எனப் பெருமையாகக் கூறினான். பழுவேட்டரையர் குதர்க்கமாக, ‘எண்ணிப் பார்க்கவில்லையென்றால் நம்ப மாட்டாயா? வாணர் குலத்துக்கு மட்டும்தான் வீரம் சொந்தமா?’ என்று கேட்கவும், இருவரும் எரிச்சலும் வருத்தமும் அடைந்தார்கள். வந்தியத்தேவன் சுதாரித்தபடி, ‘ஐயா, பழுவேட்டரையரின் புகழ் குமரி முதல் இமயம் வரை பரவியிருக்கிறது. சந்தேகிப்பதற்கு நான் யார்?’ எனப் பொறுமையாகக் கூறவும், ‘நல்ல மறுமொழி’ என பழுவேட்டரையர் அமைதியாகி விட்டார். சம்புவரையர் வந்தியத்தேவனுக்கு உணவளித்துவிட்டு சீக்கிரம் படுக்க வைத்துவிட்டுத் திரும்புமாறு கந்தமாறனுக்குக் கட்டளையிட்டார். அந்தப்புரத்துக்கு வந்தியத்தேவனைக் கூட்டிச் சென்ற கந்தமாறன், தன் அன்னையை அவனுக்கு அறிமுகப் படுத்தினான். அன்னையை வணங்கிய வந்தியத்தேவன் அவருக்குப் பின்னால் ஒளிந்ததுதான் கந்தமாறன் முன்பு தன்னிடம் சொல்லியிருந்த அவனது தங்கை மணிமேகலையாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். பின், அங்கிருந்த பெண்களின் கூட்டத்தில், ‘பல்லக்கில் வந்த பெண் இருக்கிறாளா?’ என்று கண்களால் தேடினான். தொடரும். சவிதா

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

சோழர் பரம்பரை – ஒரு எளிய அறிமுகம் பொன்னியின் செல்வன் கதைக்குள் நுழையும் முன்பு கதை நிகழும் காலத்தோடு பயணம் செல்ல இந்த பரம்பரை வரலாறு உதவியாக இருக்கும்.விஜயாலய சோழன், ஆதித்ய சோழன் என சிற்றரசாக இருந்த சோழர்கள் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தங்கள் எல்லையை விரிவடையச் செய்து பேரரசாக உருவெடுத்தனர். பராந்தக சோழனின் மூத்த மகனான இராஜாதித்ய சோழன் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். எனவே இரண்டாவது மகனாகிய கண்டராதித்ய சோழன் அரசராகப் பதவி ஏற்றார். அவர் ஒரு சிவபக்தர். வெகுகாலம் திருமணத்தை வெறுத்த அவர், தன்னைப் போலவே சிவபக்தியில் தேர்ந்த செம்பியன் மாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வெகுகாலம் குழந்தைப் பேறு இல்லாததால், இளையவரான அரிஞ்சய சோழருக்கு பட்டத்து இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. பின்னர், கண்டராதித்ய சோழனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே கண்டராதித்ய சோழன் காலமானார். எனவே, அரிஞ்சய சோழர் அரசராக முடிசூடினார். அவரும் குறைந்த காலத்திலேயே இறந்துவிட, அவரின் மகனான சுந்தர சோழன் பதவி ஏற்றார். அவருடைய காலத்தில் நடைபெற்ற கதையைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சுந்தர சோழனின் முதல் மகனான ஆதித்த கரிகாலனுக்கு மதுரையை ஆண்ட வீரபாண்டியனை வென்றதால் இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. இதற்கிடையில் கண்டராதித்தனின் மகன் மதுராந்தகனும் வயதை அடைந்து வாரிசாக இருக்கிறார். இந்த வாரிசுரிமை, அரசியல் களத்திலும் சோழமன்னர் குடும்பத்திலும் எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதுதான் இக்கதையின் சாரம். இனி.. புதுவெள்ளம்சற்றேறக்குறைய சுமார் 1070 ஆண்டுகளுக்கு முன், இதே ஆடி பதினெட்டாம் நாளன்று கதை தொடங்குகிறது. இப்பொழுது வீராணம் ஏரி என்று அழைக்கப்படும் வீர நாராயண ஏரிக்கு அன்றுதான் வந்தியத்தேவன் வந்திருக்கிறான். இந்த ஏரி எழுபத்து நான்கு கணவாய்களை உடையது. அது உண்மைதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்தியத்தேவன் தன் குதிரையுடன் வந்தடைந்த நாளில், பதினெட்டாம் பெருக்குக்காக ஏரிக்கரை களைக்கட்டியிருந்தது. இரு கரைகளும் பொங்கிப் பாய்ந்த அந்த வெள்ளத்தில் மக்களின் வெள்ளமும் சேர்ந்துகொள்ள, வந்தியத்தேவனுக்கு உற்சாகம் பொங்கியது. கண்ணுக்கினிய பெண்கள் கூட்டம் பாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது. சில உபசரிப்புகளையும் அவன் ஏற்றுக் கொண்டான். சோழர்கள் உண்டாக்கி வைத்திருந்த நீர் மேலாண்மையையும் மக்கள் கூட்டம் அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்ததையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது சலசலப்பும் பரபரப்பும் உற்சாகமும் பதட்டமும் நிறைந்த கூச்சல்கள் எழத் தொடங்கின. எல்லோரும் பார்த்த திசையைப் பார்த்தபோது, ஏழெட்டு பெரிய ஓடங்கள் வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்டு ஏரிக்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. முதலில் வந்த படகில் வீரர்கள் ஆயுதங்களுடன் இறங்கி கூட்டத்தை ஆயுத பலத்துடனும் உரத்த குரல்களுடனும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட இன்றையக் காலகட்டத்தில் பிரதமர் வருகையின்போது நடக்கக்கூடிய கெடுபிடிகள் போன்று அது இருந்தது. வருபவர் யாரென விசாரித்தபோது பனைமரக் கொடியைச் சுட்டிக் காட்டினர். வந்தியத்தேவன் புரியாமல் பார்க்க, அது பழுவேட்டரையருடையது என்று அவனுக்கு ஒருவர் புரிய வைத்தார். அவர் வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்த பொழுது அவரின் அரசியல் பலம் புரிந்தது. வந்தியத்தேவனால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பழுவேட்டரையர் சிறந்த வீரர். சோழப் பேரரசின் நிதி அமைச்சரான அவர், நிர்வாகத்திலும் மிகுந்த செல்வாக்கு கொண்டிருந்தார். கருவூலம், நிதி மேலாண்மை, கூல விநியோகம் போன்ற முக்கியப் பொறுப்புகள் அவர் வசமும் தலைநகர் தஞ்சாவூர் கோட்டைக் காவல் அவரின் தம்பியான சின்னப் பழுவேட்டரையரின் வசமும் இருந்தன. சுற்றியிருக்கும் அரசுகளுக்கு வரி, தண்டம் விதிக்கக்கூடிய அளவுக்கு உரிமை கொண்டவர் என்றெல்லாம் ஏற்கனவே அவரைப்பற்றி வந்தியத்தேவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வீர இளைஞனான அவனுக்கு, அந்த மாபெரும் வீரரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது உவகையாக இருந்தது. ஆனால் அவன் வந்த வேலையை நினைத்துக் கொண்டான். காஞ்சி நகரில் சோழ அரசின் பட்டத்து இளவரசரும், தன்னுடைய தலைவனுமான ஆதித்த கரிகாலன் எச்சரித்திருந்ததையும் நினைவில் கொண்டு வந்தான். ஆதித்த கரிகாலன் இரு ஓலைகளை, தன் தந்தையான சுந்தர சோழரிடமும், தமக்கையான குந்தவை தேவியிடமும் ரகசியமாக ஒப்படைக்க வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தார். முக்கியமாக, பழுவேட்டரையர்களுக்குத் தெரியவே கூடாது என்றும் சொல்லியிருந்தார். வந்தியத்தேவன் குறும்பான வாலிபன் என்பதால், அடக்கமாக, யாருக்கும் தெரியாமல், எந்த வம்புச் சண்டையிலும் நுழையாமல், பத்திரமாகச் செல்லுமாறு கண்டித்திருந்தார். (ஆனால், அவன் அப்படி இருந்திருந்தால் இந்தக் கதை உருவாகியே இருந்திருக்காது) அதை நினைத்துக்கொண்ட வந்தியத்தேவன் பழுவேட்டரையரைப் பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு, கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் இரவு தங்கும் நோக்கத்துடன் குதிரையைச் செலுத்திக்கொண்டு கிளம்பி விட்டான். இயல்பிலேயே துடிப்பான வந்தியத்தேவனுக்கு, தன் வால்தனங்களை அடக்கிக்கொண்டு பயணம் செய்யக் கடினமாக இருந்தது. ஆனாலும், பழையாறை போன்ற முக்கியமான நகரங்களைப் பார்ப்பது குறித்தும், குந்தைவை தேவியைச் சந்திக்கப்போகும் பெருமையை நினைத்தும், தன் ஆவலை அடக்கிக் கொண்டான். வீரநாராயண விண்ணகரக் கோவிலுக்குச் செல்லும் வழியில், கடைத்தெரு கோலாகலமாய் நிறைந்திருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றவனை அங்கு நடந்துகொண்டிருந்த சைவ வைணவச் சண்டை ஈர்த்தது. ஒரு சைவர், ஒரு வைணவர் மற்றும் ஒரு அத்வைதி ஆகியோர் தங்கள் கொள்கையே சிறந்தது என வாதிட்டுக் கொண்டிருந்தனர். இருபக்கமும் மனிதர்கள் நின்றுகொண்டு தத்தம் கொள்கைகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தனர். சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்களில் வைணவத்துக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தவர்தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. அவர் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சைவ- வைணவச் சண்டைகள் அப்பொழுது வெகு பிரசித்தம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத வந்தியத்தேவன் நடுவில் புகுந்து, சண்டை போடுவதை நிறுத்துமாறும், அப்படிப் போட வேண்டிய அவசியம் இருந்தால், போருக்குச் செல்லும்படியும் கூறினான். மக்களில் சிலருக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது. ஆழ்வார்க்கடியானின் மொத்த ஆவேசமும் இவன் பக்கம் திரும்பிவிட்டது. விளையாட்டாய் சண்டையை நிறுத்த வந்தியத்தேவன் முயல, கூட்டமும் அதில் சேர்ந்து கொண்டது. அப்போது மறுபடியும் சலசலப்பு ஏற்பட்டது. பழுவேட்டரையர் யானையின் மீது அமர்ந்து, தன் கூட்டங்களுடன் அதிகாரம் பொருந்திய மிளிர்வுடன் வந்து கொண்டிருந்தார். பின்னால் ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கின் உள்ளே யார் இருப்பாரோ என்ற எதிர்பார்ப்புடன், வந்தியத்தேவன் பல்லக்கை நோக்கினான். பல்லக்கு வந்தியத்தேவனைக் கடக்கும் போது திரை விலகியது. அழகு பொங்கும் சுந்தர முகம் தோன்றியது. ஆனாலும் மனத்தில் காரணம் தெரியாத ரசிப்பின்மை தோன்றியது. இவனைப் பார்த்தவுடன் சட்டெனத் திரை மூடிக் கொண்டது. யாரைப் பார்த்து பயந்து திரை மூடிக் கொண்டது என்று வந்தியத்தேவன் தேடும்போது, ஆழ்வார்க்கடியான் விசித்திரமான முகபாவத்துடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு அது மர்மமாகத் தோன்றியது. அந்தக் கணத்தில் அவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது ஒரு வித வெறுப்பும் அருவருப்பும் தோன்றியது. தொடரும் சவிதா