ஒரு சமூகம் மேம்படுவதற்கான மிக முக்கிய அடிப்படைத் தேவைகள் கல்வியும் சுகாதாரமும். இத் தேவைகளை முழுமையாக வழங்குவதே ஒரு அரசின் கடமை. அதுவே நாட்டை முன்னேற்றும். மக்களின் ஒரு பகுதியினருக்கு இவ்விரண்டு அடிப்படைத் தேவைகளும் கிடைக்கவிடாமல் தடுத்துக்கொண்டு, அவர்களின் உழைப்பையும் வியர்வையையும் உறிஞ்சிக் கொழுத்து, தங்களை மேல்தட்டுச் சமூகமாகக் காட்டிக்கொள்ளும் ஒரு கீழ்த்தரமான சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வேரூன்றி உள்ளது. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அத்தகைய பல்லாயிரம் ஆண்டுகாலப் புரட்டர்களை, தங்கள் புரட்சிகரச் சிந்தனைகளால் வீழ்த்தி, மக்களிடம் பெரும் எழுச்சியை உண்டாக்கினார்கள். பின்னாளில் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளும், மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளும் சமூக நீதியைச் சட்டமாக்கின. ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள சனாதனக் கும்பல், வெறும் ஆறு ஆண்டு காலத்திலேயே நூறு ஆண்டு காலத்தில் உருவான மாற்றங்களைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து மக்களுக்கும் கல்வி தரவேண்டிய அரசு, தன் கடமையிலிருந்து விலகி, அடித்தட்டு மக்களுக்குக் கல்வியை எட்டாக் கனியாக மாற்றி, அதனை ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமானதாக விளங்கிய பழங்கதைக்கு மாறி வருகிறது. இந்தியா என்பது மாநிலங்கள் இணைந்த ஒன்றியம் என்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடித்தளத்தையே தகர்த்து, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே தேர்வு, என ஒற்றை முனையத்தை நோக்கி அதிகாரக் குவிப்பைத் தீவிரமாக்கி, சர்வாதிகாரத்துடன் நடந்து வருகிறது. கொரோனா காலத்தில் நாட்டை மொத்தமாக முடக்கிப் போட்டுவிட்டு, தங்கள் கையில் அதிகாரம் உள்ளது என்ற ஆணவத்தில் மாநில உரிமைகளைப் பறித்து அனைவரையும் அடிமைகளாக மாற்ற முயன்றுவருகிறது மோடி அரசு. வெளியிடப்பட்டது முதலே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்துவரும் புதிய கல்விக் கொள்கைக்கு, மத்தியா அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. முடக்கக் காலம் எப்போது முடியும், பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியாத சூழலில், புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளிப்பது என்பது, சனாதனக் கொள்கைகளை கொல்லைப்புற வழியே திணிக்கும் திருட்டுத்தனமாகும். மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மொத்தக் கல்வித் துறையையும் கண்காணிக்கும் ஒற்றை தேசியக் கல்வி ஆணையம், இந்தி சமஸ்கிருத சனாதனத் திணிப்பு, ஒரே பொதுத் தேர்வு, ஒரே நுழைவுத் தேர்வு, பள்ளிகள் ஒருங்கிணைப்பு, குலக்கல்வி முறை என அடித்தட்டு மக்களின் கல்வி உரிமைக்கும் சமூக நீதிக்கும் வேட்டு வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் முழுமையாகப் புறக்கணித்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வரும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். ஒரு நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டால்தான் சுகாதாரம் பேணப்படும். இதை உணர்ந்தே, வளர்ந்த நாடுகள் பலவும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழில்கள் அனைத்தையும் வளரும் நாடுகளின் மீது திணிக்கின்றன. அவ்வகையில், மைய அரசின் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுத் திருத்த அறிவிப்பு நாட்டிற்கும் இயற்கைக்கும் மோடி அரசு விளைவிக்கத் துணிந்துள்ள பெருங்கேடு ஆகும். நாட்டின் பன்முகத் தன்மைக்கும், சமூக நீதிக்கும் வேட்டு வைக்கும் புதிய கல்விக் கொள்கையும், இயற்கையின் கருவறையையே சிதைக்க முனையும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுத் திருத்தமும் தீயிலிட்டுக் கொளுத்தப்பட வேண்டியவை. எந்தப் போராட்டத்துக்கும் வழி இல்லாத இச்சூழலில், நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் திட்டங்களை இந்தக் கோழை அரசு எதிர்ப்பின்றி நிறைவேற்றிவிடத் துடிக்கிறது. பொதுமக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால், மோடி ஆட்சியின் பலனாக நாம் ஒருசில நூற்றாண்டுகள் பின்னோக்கி வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது.