ஆழ்ந்தடங்கிய அறிவாற்றலின் ஊற்றுக்கண்
பேராசிரியர் நா. வானமாமலை பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை கட்டுரையாளர் : அக்ரி பரத்வாஜ் தொழிற்சங்க எல்லைக்குள்ளோ, அரசியல் எல்லைக்குள்ளோ நின்றுவிடாத பொதுவுடைமைவாதிகளில் வித்தியாசமானவர் பேராசிரியர் நா. வானமாமலை. ஒரு சிறந்த மார்க்சிய சித்தாந்தவாதியாக விளங்கிய அதே நேரத்தில், தமிழக நாட்டுப்பாடல், கிராமியக் கலாச்சாரம் பற்றிய ஆய்வாளராகவும் திகழ்ந்தார். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழக நாட்டார் வரலாறு, வழக்காற்றியல் எனப் பல துறைகளில் முத்திரை பதித்தவர். பேராசிரியர்கள் எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா. ராகவையங்கார், டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் ஆகியோரது வரிசையில் வைத்து எண்ணிப் போற்றத்தக்கவர் பேராசிரியர் நா. வானமாமலை. உத்தியோக ரீதியில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக விளங்காவிடினும் பேராசிரியர் என்ற அடைமொழி அவருடைய பெயருடன் மதிப்பர்த்தத்துடன் இணைக்கப்பட்டதற்கான காரணம், தொன்மைச் சிறப்புமிக்க மக்களின் வரலாற்றை, பண்பாட்டை, இலக்கியத்தை, வாழ்வியலை அறிவியல் முறையிலான சமூகவியல் நோக்கில் பல்கலைக்கழக நிறுவனங்களுக்கு வெளியே இருந்து அறிவுப்பூர்வமாக ஆய்வினை மேற்கொண்டதுதான். நா.வா. தனது பிறந்த ஆண்டைப்பற்றிக் குறிப்பிடும்போது ரஷ்யப் புரட்சி நடந்த அதே ஆண்டில் பிறந்தவன் என்று பெருமையாகக் கூறும் விதத்தில் 07.12.1917இல் நாங்குநேரியில் நாராயணன் – திருவேங்கடத்தம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். டால்ஸ்டாய், டிக்கன்ஸ், வால்ட் விட்மன், ஹியூகோ ஆகியோரின் எழுத்துகளால் கவரப்பட்ட அவர், மனிதனை உயர்த்தும் எழுத்தோவியங்களைத் தமிழில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் டால்ஸ்டாயின் கதைகளையும் குறுநாவல் நாடகம் ஒன்றையும் மொழிபெயர்த்தார். கல்லூரி நாட்களில் இவர்களது படைப்புகளைப்பற்றிக் கட்டுரை ஒன்றை எழுதினார். இவரது எழுத்துப் பணியை இலக்கிய நூல்களின் மொழிபெயர்ப்பு, விஞ்ஞான நூல்களின் மொழிபெயர்ப்பு, தமிழ்நாட்டு வரலாறு – பண்பாடு பற்றிய ஆய்வு, பாடல் தொகுப்பு – ஆராய்ச்சி, இலக்கிய விமர்சனம் எனப் பிரிக்கலாம். விஞ்ஞான உண்மைகளைத் தமிழில் எழுதவேண்டும் என்ற எண்ணம் எளிய முறையில் ஹால்டேன் எழுதிவந்த கட்டுரைகளைப் படித்தபோது அவருக்கு உதயமானது. அவருடைய கட்டுரைகள் சிலவற்றை மொழிபெயர்த்து சக்தி இதழில் வெளியிட்டார். ஐன்ஸ்டீன் தத்துவம், லைசெய்கோ தத்துவம், இரசாயனத் தத்துவங்கள் ஆகிய பொருள்கள்பற்றி எளியமுறையில் தமிழில் எழுதி, பல பத்திரிக்கைகளில் வெளியிட்டார். சிறுவர்களிடம் அறிவியல் மனப்பாங்கை ஏற்படுத்திடும் வகையில் இரப்பரின் கதை, காகிதத்தின் கதை, இரும்பின் கதை ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டார். எஸ்.தோத்தாத்ரியுடன் இணைந்து எழுதிய இரப்பரின் கதை 1962இல் இந்திய அரசின் பரிசினைப் பெற்றது. தாத்தா பேரப்பிள்ளைகளுக்குக் கதை கூறுகிற முறையில் இந்நூல்கள் அமைந்துள்ளன. தமிழகம் வந்த பி.சி.ஜோஷி, நா.வா.வை அழைத்து “இந்திய நாட்டுப் பாடல் செல்வம்” என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதப்போவதாகவும் அதற்கு தமிழ்நாட்டு – நாட்டுப் பாடல்களில் சிலவற்றைச் சேகரித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தருமாறும் உரிமையுடன் கேட்டுக்கொண்டார். அவரைச் சந்தித்த பிறகு இத்துறையில் ஈடுபடுவது தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் ஆராய்பவருக்கு அவசியமானதொன்று என்ற முடிவுக்கு வந்தார் பேராசிரியர். நாட்டுப்பாடல்கள், நூற்றுக்கணக்கான எழுதப் படிக்கத் தெரியாத கிராம மக்களது கலைப் படைப்புகள், அவர்களது உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் இப்பாடல்கள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளனவென்றும் வரலாற்று நிகழ்ச்சிகளைப்பற்றிய கண்ணோட்டம் அவர்கள் பாடும் கதைப் பாடல்கள் மூலம் வெளிப்படுகின்றனவென்றும் உணர்ந்த பேராசிரியர், இவற்றைச் சேகரித்து வெளியிடுவதும் ஆராய்வதும் தமிழிலக்கியத்தின் துறைகளில் மிக முக்கியமானதென்றறிந்தார். நாட்டுப் பாடல்களைச் சேகரித்து வெளியிட முடிவு செய்து பல பாடல்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை, ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ (1960), ‘தமிழ்நாட்டுப் பாடல்கள்’ (1964) என இரு தொகுதிகளாக வெளியிட்டார். இவ்விரு தொகுப்புகளிலும் பாடல்களில் உள்ள கொச்சைச் சொற்களைத் திருத்தாமல் அப்படியே எழுதியுள்ளார். மேலும் பாடல்களைப் பகுதி பகுதியாக வரிசைப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். நா.வா. எழுதியிருக்கும் முன்னுரை நாட்டுப்பாடல்களின் சிறப்பை அறியப் பெரிதும் துணை செய்கிறது. நண்பர்களின் (சிவகிரி S.M.கார்க்கி, ராமச்சந்திரன், இரா.நல்லகண்ணு, டி.மங்கை, S.S.போத்தையா ஆகியோர்) உதவியைக்கொண்டு பேராசிரியர் இத்தொகுப்புகளைச் செய்து முடித்தார். பாடல்களில் இடம்பெற்றுள்ள சொற்களுக்குப் பாடலின் இறுதியில் பொருள் குறிப்பிட்டுள்ளார். பாடலின் இறுதியில் பாடலைச் சேகரித்தவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது சிறப்பம்சமாகும். பேராசிரியர் இலக்கியம் பற்றிய அணுகுமுறையில் ரசனை முறை, மார்க்சிய முறை என இருநிலைகளைக் கொண்டிருந்தாரென்று கூறலாம். தொடக்கக் காலத்தில் அவர் கொண்டிருந்த அணுகுமுறை ரசனை முறையாகும். பின்னர் முற்போக்கு இயக்கங்களுடன் இணைத்துக்கொண்ட பிறகு உருவான முறை மார்க்சிய அணுகுமுறை. பிந்திய இம்முறையை அவர் தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்தார். தொ.மு.சி. ரகுநாதன், தி. க.சிவசங்கரன் ஆகியோரோடு அவர் அமைத்த நெல்லை இலக்கியச் சங்கம், விவசாயச் சங்கம், பீடித் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றில் ஏற்பட்ட ஈடுபாடு, இவற்றின் விளைவாக மார்க்சியத்தைக் கற்கும் வாய்ப்பு ஆகியன அவருடைய இலக்கிய நோக்கத்தினை மார்க்சிய அணுகுமுறைக்கு மாற்றியது. மகாகவி பாரதியின் வசன கவிதைபற்றிக் குறிப்பிடும்போது, “உணர்ச்சிமிக்க சிந்தனைப் பிரச்சாரத்திற்கு ஏற்ற கருவி வசன கவிதை; உரைநடை போல விளக்கும் சக்தியும் கவிதை போல உணர்ச்சியைப் பாய்ச்சும் சக்தியும் அதற்கு உண்டு என்பதை, நிறவெறியை எதிர்த்து மனித குல ஒருமையை நிலைநாட்ட வசன கவிதை எழுதிய வால்ட் விட்மன், ஏகாதிபத்திய வெறியையும் தேசிய வெறியையும் எதிர்த்து மனித குல ஒற்றுமையை உருவாக்க வசன கவிதை எழுதிய எட்வர்ட் கார்பெண்டர், மேலைநாட்டுப் பண்பாட்டையும் கீழை நாட்டுப் பண்பாட்டையும் இணைத்து ஒருவகைப் பண்பாட்டை நிறுவ வசனகவிதை எழுதிய இரவீந்திரநாத் தாகூர் ஆகிய தத்துவாசிரியர்களைக் கற்றுணர்ந்த பாரதி, தனது தத்துவ தரிசனத்தை வெளியிட வசன கவிதையைத் தேர்ந்தெடுத்தான் என்பதை மார்க்சிய வழியில் அணுகியுள்ளார் பேராசிரியர். நின்னைப் போல் எமதுயிர் நூறாண்டுவெம்மையும் சுடரும் தருக. தீயே, நின்னைப்போல எமதறிவு கனலுக இவ்வாறு சூரியனது இயல்புகள் மனிதனுக்குக் கிட்டவேண்டும் என்று சூரியனிடம் வரம் கோருகிறான். ‘உள்ளக் கவலை யறுத்துஊக்கம் தோளிற் பொருத்து’ என்கிறான் பாரதி. மண்ணுக்குள்ளே அமுதைக் கூட்டிகண்ணுக்குள்ளே கவியைக் காட்டிஎண்ணுக்குள்ளே இன்பத் தெளிவாய்வாராய் நிலவே வா!அச்சப் பேயைக் கொல்லும் படையாம்வித்தைத் தேனில் விளையுங் கனவாய்வாராய் நிலவே வா! பாரதியின் தத்துவ தரிசனத்தைப் பலர் பல பெயர்களிட்டு அழைக்க முயலுகிறார்கள். பாரதி காற்றையும் சூரியனையும் நிலவையும் தீயையும் வணங்குவதால் அவனை வேதக் கடவுளரை வழிபடுபவன் என்றும் கிரேக்க இயற்கை வழிபாட்டு மதமான ‘ஹெலனிக்’ வழிபாட்டை மேற்கொண்டவன் என்றும் கூறுகிறார்கள். ‘எல்லாம் தான்’ என்று கூறுவதால் அத்வைதி என்றழைக்கிறார்கள். நாயகி – நாயக பாவத்தைக் கையாண்டிருப்பதால் வைஷ்ணவ பக்தன் என்கிறார்கள். மகா சக்தியை வழிபடுவதால் சித்தன் என்கிறார்கள். காண்பன யாவும் உண்மை என்பதால் உலோகாயதன் என்கிறார்கள். இவையாவும் உண்மையாக இருக்க முடியாது. இவற்றுள் ஒவ்வொன்றும் உண்மையுமல்ல. வேதக் கடவுளை வழிபடும் பாரதி, நாடோடித் தெய்வங்களையும் வழிபடுகிறான். இயற்கை வழிபாட்டில் ஈடுபடும் அவன், தான் என்னும் பிரம்மமாக நாம் மாற வேண்டும் எனவும் கூறுகிறான். அத்வைதம் பேசும் அவன் மாயையை நிராகரிக்கிறான். காண்பனவெல்லாம் உண்மை என்று உலோகாயதம் பேசும் பாரதி ஆன்மிகமும் பேசுகிறான். பாரதி தத்துவம், ஒவ்வொரு மதக் கொள்கையிலும் ஓர் அகப்பை அள்ளிக்கொண்ட கூட்டுச் சரக்காகும். ஆகவே நிவர்த்திக்க முடியாத முரண்பாடுகள் அதனிலுண்டு. ஆனால் இவை அனைத்தையும் நவரத்தின மாலையாக இணைக்கும் பொற்சரடு அவனுடைய மனிதத்துவம், வாழ்க்கை மீது விடாப்பிடியான ஆர்வம், பரந்த நோக்கு, மனிதன் இன்பமுற்று அமர நிலைபெற்று வாழ வேண்டும் என்ற பெருவிருப்பு முதலியன. இவையே முரண்பாடுகளை மீறி – பாரதியின் வசன கவிதையில் ஒளிவிடும் உணர்ச்சிகள் என மதிப்பிடுகிறார் பேராசிரியர் நா.வா. ஆய்வும் அறிவும் தன்னோடு மட்டும் நின்றுவிடாமல் இத்துறையில் ஆர்வம் உள்ளவர்களை ஒன்றாக இணைத்துப் பயிற்சி கொடுத்து ஆய்வு முறைகளை எழுதத் தூண்டும் முயற்சியில் வெற்றி கண்டவர் பேராசிரியர், சிந்தனையாளர் நா.வா. எழுத்தாளர் சுஜாதா பேராசிரியரைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘வானமாமலை அவர்கள் சாகித்திய அகாதமியின் பார்வையில் சிக்காதது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. அதற்கு அவருடைய இடதுசாரிச் சிந்தனைகள் காரணமாக இருக்கலாமோ என விசனப்படுகிறேன்’ என்கிறார். சீரிய கல்வியும் பண்பும் அமைதியும் பொருந்திய நா.வா.வின் பிறந்த தினம் 07.12.1917.