காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்
‘ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது..’ என்று கணீரென்ற உச்சரிப்பில் கம்பீரமான குரலுடன் ஆரம்பித்தது எனில், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சட்டென்று ரேடியோவை நோக்கித் திரும்புவார்கள். செய்திகளைச் செவிமடுப்போர் எண்ணிக்கை அதிகமாகும். காலை 7.15 மணி என்று தெரிந்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராவார்கள். செய்தி முடிந்தவுடன் ரயிலுக்குச் செல்பவர்கள், பஸ் பிடிப்பவர்கள் வீட்டை விட்டுக் கிளம்புவார்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் இடையினில் செல்ல மனம் இடம் தராது. அப்படிப்பட்ட கம்பீர குரலுக்குச் சொந்தக்காரர் சரோஜ் நாராயண் சுவாமி, சென்னையில் தன் 87 வது வயதில் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார். சரோஜா என்று இயற்பெயர் கொண்ட சரோஜ் நாராயண் சுவாமி, மும்பையில் பிறந்தவர். தாய்த் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாயின் காவிரித் தண்ணீரும், தான் பார்த்த தமிழ் சினிமாக்களும், படித்துப் படித்து மகிழ்ந்த பாரதியார் பாடல்களும்தான் தன் தமிழ் உச்சரிப்பிற்குக் காரணம் என்பார். கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தபின், டெல்லியில் யூகோ வங்கியில் பணியில் இணைந்தார். அருகிலேயே டெல்லி அகில இந்திய வானொலி நிலையம். தமிழார்வம் காரணமாக அங்கே பணி கிடைத்தது. தமிழ் செய்தி வாசிப்பின் பொற்காலம் அங்கிருந்து தொடங்கியது. சரோஜ்தான் இந்தியாவில் தமிழில் செய்தி வாசித்த முதல் செய்தி வாசிப்பாளர். வானொலியில் 35 ஆண்டுகள் பணி புரிந்த பின்னர் செய்தி ஒளிபரப்புத் துறையில் சில காலம் பணி புரிந்தார். செய்தி ஆவணங்களுக்கு (news reels) குரல் கொடுத்தல், சினிமாக்களுக்கு சப் டைட்டில்கள் எழுதுதல் என்று பலவகையான பணிகளில் ஈடுபட்டார். தன் வானொலி அனுபவங்களைப் பல நேர்காணல்களில் வெளிப்படுத்தி உள்ளார். அவரது செய்தி வாசிப்புக்கால அனுபவங்களில் முக்கியமானவை அவரது பேட்டிகளில் இருந்தே நமக்குக் கிடைக்கின்றன. 31.10.1984 இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஒரிஸா பயணங்களைப் பற்றிக் காலைச் செய்திகளில் சொன்னவர், ‘இந்திராவின் ஒவ்வொரு துளி இரத்தமும் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக’ என்று பேசியதைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது, அன்று மாலையே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைச் சொல்ல நேரும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று வருந்திக் குறிப்பித்துள்ளார். செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் சுகம், துக்கம் போன்றவற்றைச் செய்தி வாசிப்பில் காண்பித்துவிடக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம் என்றாலும், அன்று சற்று நெகிழ்ந்து போய் இருந்ததாகவும், அவர் மரணத்தை அறிவிக்கும்போது, ‘அன்னை இந்திரா காந்தி’ என்று செய்தியில் எழுதப்படாத ‘அன்னை’ என்ற வார்த்தையைச் சேர்த்து தான் சொன்னதையும், அதற்காக அவர் மிகவும் பாராட்டப்பட்டார் என்பதையும் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். பின்னர் வந்த காலங்களில் பஞ்சாபிலிருந்து செய்தி வாசிப்பாளர்கள் வரமுடியாமல் போக, அவர்களின் பணிச் சுமையும் இவருக்குச் சேர்ந்தது. காலை 5.30 மணி செய்திக்கு, 3 மணிக்கே தயாராக ஆரம்பித்து விடவேண்டும். ஆங்கில, இந்தி செய்திகளை வைத்துக்கொண்டு, மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்வது அந்தந்த மாநில மொழிச் செய்தி வாசிப்பவரின் பொறுப்பு என்பதால் வேலைப்பளு அதிகம். சில சமயங்களில் ஒரு சில வார்த்தைகளுக்காக, தூதரகங்களைத் தொலைபேசியில் அழைத்து உதவிகள் வாங்கியதையும் அவர் பேட்டிகளில் குறிப்பித்துள்ளார். தன்னால் மறக்க முடியாத காலம் பங்களாதேஷ் போர் நடந்த காலம் என்று கூறியுள்ள சரோஜ், அப்போது செய்திகளைக் கேட்ட நேயர்கள், ஏதோ தானே இந்திய வெற்றிக்குக் காரணம் என்பது போல மகிழ்ந்து தனக்குப் பாராட்டு மடல்கள் எழுதியதை சந்தோஷமாகக் குறிப்பிட்டுள்ளார். “பலர் என்னிடம், ‘உங்கள் குரல் மேல் (male) வாய்ஸ் போல இருக்கிறதே’ என்பார்கள். ‘ஆம், என் குரல் மேலான குரல்தான்’ என்பேன்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். மும்பையில் பிறந்து, டெல்லியில் பணிபுரிந்து, கிழக்கு வங்காளத்தின் விடுதலைச் செய்திகள் சொல்லி, பஞ்சாபியில் கலக்கிய கணீர்க் குரல் சென்னையில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டதன் மூலம், தான் இந்திய தேசத்திற்கே சொந்தமானவர் என்று நிரூபித்திருக்கிறார். 2009 ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. கம்பீரக் குரலின் தமிழ் என்றும் நம் நினைவில் தங்கும். கோவை பிரசன்னா