மக்கள் கவிஞர்
29 ஆண்டுகளே வாழ்ந்த பட்டுக்கோட்டையார் தனது 19 வயது வரை இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி என 17 வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார். இறுதியாக, கவிஞராக உருவாகியிருக்கிறார். இவரது பாடல்களில் வழி வழி மரபு, அதாவது நாடோடிப் பரம்பரை மற்றும் நவீன முறை என இரு கூறுகளை இணைத்த பாட்டுத் திறமையைக் காணமுடியும். இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஒன்றை இப்பகுதியில் நினைவுகூர்வதன் மூலம் எப்படிப்பட்ட மனிதர் இவர் என்பதை அறியலாம். சென்னை இராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில், தனது மனைவி கௌரவம்பாளுடன் தனிக்குடித்தனம் செய்து வருகிறார் கல்யாணசுந்தரம். வீட்டின் கீழ்த்தளத்தில் எப்போதும் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், பாடலுக்கான சூழ்நிலையைக் கூறும் கதாசிரியர்கள் எனக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். ஜெமினி நிறுவனம் ஏராளமாகப் பணத்தை வசூலித்துக்கொண்டிருந்த பைகாம் என்ற இந்திப்படத்தைத் தமிழில் மறுதயாரிப்பு செய்ய உரிமை பெற்றுச் செயலில் இறங்கியது. தொழிலாளர் போராட்டத்தைப் பற்றிய திரைக்கதை அது. தமிழில் இரும்புத்திரை என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் பாடல்கள் எழுதக் கேட்டுக்கொண்டது நிறுவனம். ‘ஜெமினி நிறுவனத்தில், எப்போதும் பிரமாதமாகப் பாட்டெழுதும் கொத்தமங்கலம் சுப்பு என்ற பெருங்கவிஞர் இருக்கும்போது நான் எழுதுவது நியாயமா? அப்படியெல்லாம் என்னால் எழுத இயலாது’ என்று மறுத்தார் கல்யாணசுந்தரம். பாகப்பிரிவினை என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியை சரவணா பிக்சர்ஸ் ஜி.என்.வேலுமணி பட்டுக்கோட்டையிடம் விளக்கிக்கொண்டிருந்தபோது அங்கே வந்தார் கொத்தமங்கலம் சுப்பு. வாசலுக்கே ஓடோடி வந்து வணக்கம் கூறி கொத்தமங்கலம் சுப்புவை வரவேற்றார் பட்டுக்கோட்டை. வரவேற்ற அவரை ஜெமினி நிறுவனத்திற்குக் காரில் அழைத்துச் செல்ல விரும்பிய சுப்புவின் வார்த்தைகளைப் பட்டுக்கோட்டையாரால் மறுதலிக்க இயலாமல் போயிற்று. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், கல்யாணசுந்தரத்திடம் ‘கொத்தமங்கலம் சுப்பு எங்கள் நிறுவனத்தின் ஆஸ்தான வித்வான். அவருக்கு இங்கே மாதச் சம்பளம். நீங்கள் பாட்டு எழுதுவதால் இவருக்கு நஷ்டம் வராது. தொழிலாளர் பிரச்சினை தொடர்பான படம் என்பதால் அது குறித்த பாடல்களை நீங்கள் எழுதுங்கள். கொத்தமங்கலம் சுப்பு பொதுவான பாடல்களை எழுதட்டும். சரிதானே?’ என்றார். சம்மதம் தெரிவித்தார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார். இதுதான் பட்டுக்கோட்டையாரின் பெருந்தன்மை. ஒருமுறை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தாம் எழுதிய ‘நண்டு செய்த தொண்டு’ என்ற கவிதையை எடுத்துக்கொண்டு ஜனசக்தி அலுவலகத்திற்குச் சென்று, ‘நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். அப்படியே ஒருவரிகூட விடாமல் வெளியிட வேண்டும்’ என்ற வேண்டுகோளுடன் கவிதையைத் தந்தார். இதழாசிரியர் கவிதையைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘தலைப்பும் கவிதையும் தரமாக இருக்கிறது’ என்று கூறிவிட்டு, ‘உங்கள் பெயர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று கவிதையைவிட நீளமாக இருக்கிறது. கம்பன், வள்ளுவன், இளங்கோ என்று எவ்வளவு சுருக்கமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்றார். ‘அவர்களெல்லாம் மிகப்பெரிய கவிஞர்கள். ஆகவே பெயரைச் சிறிதாக வைத்திருக்கிறார்கள். ஆனால் நானோ மிகச்சிறிய கவிஞன். எனது பெயராவது பெரிதாக இருக்கட்டும்’ என்று பட்டுக்கோட்டை சொன்னதும் ஆசிரியர் அந்தப் பதிலை வெகுவாக ரசித்துப் பாராட்டினார். திரை உலகிற்கு வரும் முன்பு கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிக்கையிலும் அவரது உதவியாளராகச் சிறிது காலமும் பணியாற்றினார்.அ வரது திருமணம் 11.09.1957இல் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில்தான் நடந்தது. பாடலோ கடிதமோ, தான் எழுதுவது எதுவாக இருந்தாலும் முதலில் ‘பாரதிதாசன் வாழ்க!’ என்று எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்த அளவிற்குப் புரட்சிக் கவிஞரிடம் மக்கள் கவிஞருக்கு மரியாதை. பாண்டிச்சேரியில் வேளாளர் வீதியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, புதுவை விடுதலை வீரரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வ. சுப்பையாவைச் சந்தித்து, பட்டுக்கோட்டை அழகிரியின் அறிமுகக் கடிதத்தை கொடுத்தார். அந்தக் கடிதத்தில், ‘இக்கடிதம் கொண்டுவரும் பையனின் பெயர் கல்யாணசுந்தரம். நன்றாகக் கவிதை எழுதக்கூடியவன். கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு உடையவன். பாரதிதாசனிடம் உதவியாளனாகச் சேர்த்து விடுங்கள்’ என்று பட்டுக்கோட்டை அழகிரி வ.சுப்பையாவிற்கு எழுதியிருந்தார். அணைக்கட்டு டேவிட் கடிதம், அழகிரியின் கடிதம், அண்ணன் கணபதி சுந்தரம் வரைந்த ஓவியம் மற்றும் 12 மாம்பழங்களுடன் வ. சுப்பையா அனுப்பிவைத்த கட்சித் தொண்டரோடு பாரதிதாசனைப் பார்த்தார். பகல் முழுவதும் பாரதிதாசன் இல்லத்தில் பணி; இரவில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் படுக்கை என வாழ்ந்தார். ஒருநாள் தனது மாணவர்களை பாரதிதாசன் உற்சாகத்தோடு அழைத்து, ‘ஏய் ஆம்பிளைப் பசங்களா! நீங்களும்தான் கவிதை எழுதுகிறீர்கள்! இதைப் பாருங்கள். அகல்யா என்னும் பெண்ணொருத்தி பிரமாதமாகப் பாட்டு எழுதியிருக்கா பாருங்க!’ என்று அஞ்சலில் வந்த கவிதையை வாசித்துக் காட்டினார். இந்த அகல்யா யார் என்பது பட்டுக்கோட்டைக்கு மட்டுமே தெரியும். அ. கல்யாணசுந்தரம் என்பதில், புள்ளியையும் கடைசி ஐந்து எழுத்துக்களையும் நீக்கிவிட்டதில் ‘அகல்யா’ வந்திருந்தாள். 1954 ஆகஸ்ட் முதல் தேதி, திண்டுக்கல் காந்தி மைதானத்தில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் மக்கள் நாடக மன்றத்தின் ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் அரங்கேறியது. இந்த நாடகத்தில் இடம்பெற்ற பட்டுக்கோட்டையின் பாடல் ஒன்று, அவரது ஆழ்மனத்தில் பதிந்திருந்த நெடுநாள் கவலையை எதிரொலித்தது. அப்பாடல் ஆணும் பெண்ணும் பாடுவது போன்று இருந்தது. பெண்: தேனாறு பாயுது! செங்கதிரும் சாயுது!ஆனாலும் மக்கள் வயிறு காயுது!ஆண்: மானே இந்நாட்டிலே வகையான மாறுதல் வந்தாலன்றி ஏது சீருகள்?இறுதியாக இருவரும்: உழவனும் ஓயாத உழைப்பும்போல நாமே ஒன்றுபட்டு வாழ்க்கையிலே என்றும் இருப்போம்! என்பதாக இருந்தது அப்பாடல். நாடகத்திற்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, இந்தப் பாடலையும் நாடகத்தில் இடம் பெற்றிருந்த இதர பாடல்களையும் வெகுவாகப் பாராட்டிவிட்டு, பட்டுக்கோட்டையாரை ‘மக்கள் கவிஞர்’ என்று மகுடம் சூட்டி அழைத்தார். அன்றிலிருந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ‘மக்கள் கவிஞர்’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். சென்னையில் வாடகைக்கு வீடு கிடைக்காத காரணத்தால், அவரது மனைவி கெளரவாம்பாளை அவரது சொந்த ஊரான செங்கப்படுத்தான் காடு என்ற கிராமத்தில் தனது சொந்த வீட்டில் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் இருக்குமாறு செய்திருந்த கல்யாணசுந்தரம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது ஊருக்குச் செல்வார். அவரது மனைவியை சின்ன பொண்ணு என்றும் செல்லப் பிள்ளை என்றும் அழைப்பார். தனிமையில் மனைவியைப் பார்க்கும்போது, ‘துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே செல்லுது?’ என்று குறும்புத்தனமாகப் பாடுவார். அது ஒரு புகழ்பெற்ற பாடலின் பல்லவியாக மக்கள் மனத்தில் நிலைத்தது. கல்யாணப் பரிசு படத்தில், வளைகாப்புக் காட்சிக்கு ஒரு பாடல் எழுதும் சூழல். பட்டுக்கோட்டை அவரது மனைவியையும் மனைவியின் அக்காவையும் எழுதச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கெளரவாம்பாளின் அக்கா அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டார். ஆனால் கௌரவாம்பாளால் அவ்வாறு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து திட்டுவாரே என்ற பயத்தில், ‘அக்காவுக்கு வளைகாப்பு, அத்தானுக்கு இடுப்பு வலி’ என்று இருவரிகளில் பல்லவி எழுதினாராம். அதைப் பார்த்துவிட்டு, ‘பரவாயில்லையே’ என்று பாராட்டினாராம் கவிஞர். பிறகு, ‘அக்காவுக்கு வளைகாப்பு, அத்தான் முகத்திலே புன் சிரிப்பு’ என்று மாற்றி எழுதிய பல்லவியோடு அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தோழர் ஐ. மாயாண்டி பாரதி, சோவியத் யூனியன் சந்திரனுக்கு (ஆளில்லாத) ராக்கெட் விட்டதைப் பற்றிப் பாடல் எழுதக் கேட்டபோது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காகிதத்தை ஜன்னலில் வைத்து, நின்றுகொண்டே எழுதிய பாடல், ‘சந்திரனைத் தொட்டதின்று மனித சக்திசரித்திரத்தை மாற்றியது மனித சக்திமந்திரமா வெறுங்கதையா இல்லை இல்லைமனித சக்தி, சோவியத்தின் மனித சக்தி!’ என்று தொடங்கியது. காதல் பாடல்களை மிகவும் சுவையாக எழுதியுள்ளார் பட்டுக்கோட்டையார். காதலியைக் காணும் காதலன், காதலியை,‘ஆடை கட்டி வந்த நிலவோ? கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?’ என்று புகழ்கிறான். ஆடை கட்டி வந்த நிலவு என்று கவிஞர்கள் பலர் பாடியுள்ளனர். ஆனால் பட்டுக்கோட்டையோ, ‘காதலியானவள், காதலன் கண்ணிலே மேடை கட்டி ஆடுகின்ற எழில்’ என்பதாகக் கற்பனையின் உச்சிக்கே சென்று விடுகிறார். மக்களின் தேவைக்கேற்ற புதுமையான கருத்தாட்சி, மக்கள் மொழியில் எழுதியுள்ள சொல்லாட்சியோடு, படிப்போர் – கேட்போர் மனத்தில் தைத்து நிற்கும் பாடல் ஆகியவற்றில் முத்திரை பதித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இன்று அவரது நினைவு தினம்.