ஐயாவின் கம்பு

கல்வெட்டுக் கதைகள் – 1 ஆக்கம்: சரண்யா சச்சிதானந்தம் “மழக்காத்தடிச்சு வெள்ளம் வந்தா இந்த வீடும் கரைஞ்சிருமே ஐயா, என்ன பண்ணுவேன்..”.. பொன்னி ஓரமாக அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள். அவளது வீடு சின்னஞ்சிறிய குடிசை. கனமான கீற்று தான். நான்கைந்து மழையைப் பார்த்து விட்டது. ஒழுகி ஒழுகி கீற்றின் வாசமும் தரையிறங்கி அவள் மெழுகி வைத்திருந்த சாணம் தெளித்த தரையின் வாசனையைக் கூட்டி இருந்தது. கூடவே கொஞ்சம் முடை நாற்றமும்.. ” .ம்மா.. ஐயாவின் கம்பை எனக்குத் தர்றேன்னு சொன்னியே, எப்பமா தருவ.” வளவன் குளித்து முடித்து வந்து கேட்டான். பதினைந்து வயதுக்கே உரிய துடுக்கான மெல்லிய மீசை. அவனது ஐயா மணியனைப் போல் அத்தனை ஆஜானுபாகுவாய் வருவான் என்றெல்லாம் தோன்றவில்லை பொன்னிக்கு. தாயைப் போல பிள்ளை. இவள் கொஞ்சம் கட்டை . வளவனின் ஐயா மணியன். வள்ளுவன் மாணிக்கன் மணியன்.. அந்த ஊர்க் காவற்காரர்களில் தலைமகன்.  அஞ்சு வருஷத்துக்கு முன்ன,  காட்டுக்கு காவலுக்கு போகும் போதெல்லாம் துரட்டிக் கம்பை வழி நெடுக தரையில் நிரடிக் கொண்டே போவான். அவன் தெருமுனையைத் தாண்டும் வரை பொன்னிக்கு அந்த நிரடல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். வேலைக்குப் போகும் கணவன்  கொண்ட பொறுப்புகள் ஒருவகையில் பெண்களுக்கு கொஞ்சம் பெருமிதத்தையும் தரவே செய்யும். ஊர்க்காவல் படைனா சும்மாவா.  “ஏய் பொன்னி. அதென்ன உங்கூட்டுக்காரரு கம்பெடுத்து காவலுக்குப் போனா மட்டும் களுக்குன்னு சிரிச்சிக்குற. பழைய நெனப்போ .” பக்கத்து வீட்டு மங்கா, நாரத வாய்க்காலுக்குப் போகையில் இடிப்பாள். சேர்ந்து போய் தான் குளித்து வருவார்கள்… நாரத வாய்க்கால்.. அங்கே தான் மணியனும் உச்சிப் பொழுதில் இளைப்பாற வருவான். அவர்கள் வீட்டிலிருந்து அந்த வாய்க்கால் சில நிமிடங்கள்தான். பொன்னியும் வந்து விடுவாள். கணவனுக்கு கஞ்சிக் கலயத்தோடு.  ஏனோ மணியன் வெயில் சாயும் வரை வீட்டுக்கு வருவதை விரும்ப மாட்டான். மழையோ, புயலோ, வெயிலோ, நாள் முழுக்க அவனுக்கு ஊர் ஞாபகம் தான் நெஞ்சில் நிற்கும். காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாகி விட்டது. பின்னே மணியடித்தாற் போல் வீட்டுக்கு வந்து உண்டுறங்க முடியுமா என்ன.? அந்தக் கம்பு அவனுக்கு ஒரு பேராயுதம். துணை. வழிகாட்டி. சுமை தாங்கி. எல்லாம். ஊர்க் காவலர்களில் தலைவனுக்கு மட்டுமே கொடுக்கப் படும். மற்றவர்க்கு குறு வாள் மட்டும் தான். இவனும் வாள் வைத்திருப்பான். ஆனாலும் உறைக்குள் மறைந்திருக்கும். தேவைப்படுகையில் மட்டும் வெளியே வரும் . இதுவரை இரண்டு முறை வந்திருக்கிறது. வளவனுக்கு அப்போது பத்து வயது. ஐயாவின் கம்பும்,  வாளும் இவனுக்கு ஐயாவின் அங்கங்கள் போலவே பரிச்சியமாகி இருந்தன. கம்பில்லாத ஐயா இவனுக்கு அந்நியம். உறங்கும் போதும் விரிப்புக்கு அருகில் வைத்திருப்பார். மணியன் உறங்கியதும் இவன் போய் தொட்டுப் பார்ப்பான். சொர சொர என்றிருக்கும். தரையில் தேய்த்துத் தேய்த்து முனை இன்னும் கூர்மையாக. “ ஒருவேளை ஐயாவுக்கு கூர்ப்பு பத்தலன்னு நிரடிகிட்டு போறாரா அம்மா ?” என்பான் பொன்னியிடம். அவள் சிரித்துக் கொள்வாள். மணியனோடு சேர்த்து அவ்வூரில் ஏழு பேருக்கு காவல் பணி .  நாளும் ஒவ்வொரு தெருவை ஒவ்வொருவர் காவல் காக்க வேண்டும்.  சீவல்லப மங்கலத்தில், வீர நாராயணர் கோயில் தெரு, கல்லுடைச்சான் தெரு, வண்ணார் தெரு, தேரடி வீதி, படைத் தெரு, கொல்லந் தெரு. இப்படி. சன்னிதித் தெருவுக்கு மட்டும் மணியன் தான் ரெண்டு நாளுக்கு ஒருமுறை காவலுக்கு வர வேண்டும். அது அரசாணை. மீற முடியாது. அவன் மீறவும் விரும்ப மாட்டான்.  சன்னிதித் தெருவில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பூக் கைங்கர்யம் செய்வோர், நீராட்டுக்கு தீர்த்தம் கொண்டு வருவோர், சுவாமி புறப்பாட்டுக்கு அலங்காரம் செய்வோர் என அத்தனை பேரும் ஒருங்கே வாழ்ந்து வந்தார்கள். கருவறையில் வீற்றிருக்கும் சுவாமி வீர நாராயணர். பெயரிலேயே வீரம். நூறு வருசத்துக்கு முன்ன, பராந்தக வீர நாராயண ராசா இந்தக் கோயிலக் கட்டுனாருன்னு மணியனின் தாத்தா சொல்லுவாராம். மணியனை அந்தத் தெருவில் வாழ்பவர்கள் நித்தம் காவல் காக்கும் வீர நாராயணனாகவே கற்பனை செய்து கொள்ளலாம். அங்கிருப்பவர்கள் அத்தனை பேரின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவன் மணியன்.  முணுக்கென்றாலும் மணியன் பெயர் தான். ” மணியா.. தோ பாரு. தேரடியில நேத்து யாரோ பாம்பை கொண்டாந்து விட்டுட்டா . அது சர சரன்னு கோயில் வாசல்லயே ஏறிடுத்து. தெருவுல எல்லாரும் மணியா மணியா ங்கறோம். உன்னைக் காணல .” எனக் கடிந்து கொண்டார் கோயில் பட்டர்.  “. மன்னிக்கணும் சாமி. வாய்க்கா பக்கம் இருந்துட்டேன். பொன்னி கை மணத்துல ரெண்டு வாய் அதிகமாக் கொண்டுட்டேன். கொஞ்சமா அசதி. இனி சரியா வந்துடரேணுங்க.” ” பாழாய்ப் போச்சு போ. உண்ட மயக்கமா. ஒன்னு செய். நாளைல இருந்து பொன்னிய இங்கேயே கொண்டு வந்து தரச் சொல்லிடு.  தெனமும் பாம்ப தொரத்த நான் போயிட்டா யார் சுவாமியைப் பாக்கறது .?. வாஞ்சையும் லேசான கட்டளைத் தோரணையும் கலந்து சொன்னது போல் தான் இருந்தது மணியனுக்கு. மறுநாள் முதல் பொன்னி அவள் பிள்ளை வளவனுடன் சன்னிதி தெருவுக்கே கஞ்சி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.  “ஏன்டிம்மா பொன்னி. மணியனைக்  கொஞ்சம் அந்தக் கம்பை ஓரமா வச்சிட்டு வரச் சொல்லேன். கொழந்தேள்லாம் பயப்படறா ” என்றார் ஒரு மாமி. “ஏன் மாமி. அவர் கம்பை கீழே வச்சுட்டா வர்ற பாம்பை உங்க வீட்டு மாமா அடிப்பாரா .” எனச் சொல்லிச் சிரிப்பாள். “ஏய் புள்ள. என்னதிது ஐயரூட்டம்மாட்ட வம்பு. ” என்பான் மணியன். ” அட சும்மாருங்க. நாளைக்கே அவங்களுக்கு ஒன்னுன்னா நீங்க போய் நிக்க மாட்டீங்களா என்ன. போன வாரம் கூட பறை கொட்டுச்சே மறந்துருச்சா. வேணாட்டு ராசா குதிர மேல ஆளு கம்போட வாராராமே. நீங்க என்கிட்டக் கூடச் சொல்லல . அந்தம்மா தான் சொன்னாங்க. ” எனப் பொரிந்தாள். மணியனுக்கும் மனைவியிடம் சொல்லக் கூடாதென்ற எண்ணமெல்லாம் இல்லை. நித்தம் சிரிப்பும் சத்தமுமாக இருக்கும் அவள் கண்களில் கண்ணீரைப் பார்க்கும் தைரியம் அவனுக்கில்லை.  கொடுத்த பொறுப்பை கையிலெடுத்து விட்டால் அவனை விஞ்ச ஆளில்லை…. அந்தக் கம்பைக் கையில் எடுக்கும் போதெல்லாம் செவிகளில் சென்ற சமரில் சாவின் விளிம்பைக் கண்டு வந்த மக்களின் குரல் ஒலித்த படியே இருக்கும்….  “எங்களைக் காப்பாத்த நீ தான்யா இருக்க… அந்தத் தைரியத்தில் தானே கோயில் பூசையே நடக்குது… “ செவிப்பறைகளில் இன்னும் அந்தச் சொற்கள்… காவல் பணி என்பதென்ன…. ஆயுதம் ஏந்தி நிற்பதா… இல்லை.. மக்களின் மனதில் நம்பிக்கையை விதைப்பது… அச்சத்தைப் போக்குவது… ஊர் முழுதும் கண்ணுறங்க இரண்டே இரண்டு விழிகள் எப்போதும் விழித்திருக்கும் எனும் உத்திரவாதம்… அதை மணியனால் தர முடிந்தது.. மக்கள் நம்பினார்கள்… உயிரென்றும் பொருளென்றும் வந்து விட்டால் பேதங்கள் தங்கிடுமோ.. தடை தான் சொல்லுமோ… என்னாளும் கோயில் பூசைக்கு மணியனை அவர்கள் அழைத்ததில்லை… இவனும் கேட்டதில்லை… வீட்டுக்குள் அமரச் சொன்னதில்லை… அது அவனுக்கொரு பொருட்டாகவே இருந்ததில்லை…  வேலையில் அர்ப்பணிப்பு என்பது தனக்குக் கொடுக்கப்படும் மதிப்பினால் வருவதா… வழங்கப்படும் ஊதியத்தால் வருவதா… சமூகம் வழங்கும் வெகுமதிகளால் வருவதா… இல்லை… அது மனத்தின் கண் ஒழுகும் ஒழுக்கத்தால் வருவது… செய்யும் வேலைக்கு உண்மையாய் இருத்தல் எனும் நேர்மையால் வருவது… இட்ட பணியை முட்டாக முடித்தல் ஒரு வாழ்வியல் கூறு.. அதை அனுபவித்தவர்களுக்கு ஒரு போதை… பாதை வழுவ மாட்டார்கள்.. புறக் காரணிகள் அவ்வொழுக்கத்தை குலைக்காமல் பார்த்துக் கொள்வார்கள்… அது மணியனுக்கும் இருந்தது… மாணிக்கத்தின் வெளிச்சம் போல்…  …வேணாட்டுப் படைகளும் ஆய் நாட்டுப் படைகளும் சீவல்லப மங்கலத்தில் இதுவரை விளைவித்த சேதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இருப்பினும் அவர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இதோ நாளை படையுடன் வந்து விடுவார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணுக்குக் கண்ணாய் காவல் காக்கும் ஊரை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என மணியன் யோசித்துக் கொண்டே இருந்தான். பொன்னிக்குத் தெரிந்திருக்கக் கூடும். இம்முறை அவர்களது குறி கோட்டைகள் அல்ல. கோயில் தெருக்கள் என்று.  ஓர் ஊரை அழிக்கப் பல வழிகள் உண்டு. விளைநிலங்களை அழிப்பது. கால்நடைகளை அழிப்பது. காவல் அரணை அழிப்பது.. அதே ஊரின் பெருமைகளை அழிக்க வேண்டுமென்றால் கலைகளை அழிப்பது. இலக்கியங்களை அழிப்பது. கலைஞர்களை அழிப்பது.  எதிரிப் படைகள் இவை இரண்டையுமே செய்து விட்டன. மணியனின் குறு வாளுக்கு அந்த இரு முறைகளிலும் வேலை வந்தது. குறைந்தது நூறு இதயங்களையாவது அந்த வாள் கிழித்துப் போயிருக்கும். அதன் பின்னர் தான் கிடைத்தது தலைமைக் காவலன் பதவி. அந்தக் கம்பும். இம்முறை அவர்கள் கண் வைத்திருப்பது மக்களின் நம்பிக்கையை. வழிபாட்டை. விக்கிரகத்தை. கோயிலை சார்ந்திருக்கும் அத்தனை பேரையும் அழித்தொழிக்க சூளுரைத்திருக்கிறானாம் எதிரி நாட்டுத் தளபதி. கோயில் என்றால் கோயில் மட்டுமா. அது பொக்கிஷம். கோயில் பண்டாரங்களில் இருக்கும் நகைகள் மட்டும் பல கோடி பெறும். அது போக அரசாங்கச் சொத்துக்கள் கூட ஆங்காங்கே கோயில்களில் தானே பூட்டி வைக்கப் படுகின்றன. ஆண்டவன் இருக்கும் இடத்தை யாரும் நெருங்கி கைப்பற்ற மாட்டார்கள் என்று நினைத்திருந்தார்களோ என்னவோ.  போர் முரசு கொட்டுகிறது. ஜனங்கள் இங்கும் அங்கும் சிதறி ஓடுவதைக் காண்கிறான். சங்கொலி கேட்கிறது. அது வீர நாராயணர் கோயில் சங்கல்ல என்பது மணியனுக்கு நன்றாகப் புரிகிறது. தூரத்தில் குதிரைக் குளம்பொலிகள். வந்துவிட்டார்கள். “.பொன்னி. நீ வீட்டுக்குப் போ. வளவனையும் கூட்டிட்டுப் போ. இந்தக் கம்புக்கும் வாளுக்கும் அடுத்த வேலை வந்து விட்டது ” என்கிறான் மணியன்.. அவள் போகவில்லை. எப்படிப் போவாள்? கணவனை சாக்காட்டில் விட்டு வீடு திரும்ப எந்தப் பெண் தான் நினைப்பாள்..? குதிரைகள் நெருங்கி விட்ட சத்தம். கோயில் பூட்டப் படுகிறது. ஓடுவதற்கு எத்தனிக்கையில் கத்தி முனையில் எதிரிகளால் நிறுத்தப்படுகிறார் கோயில் பட்டர்.  ” பாவிகளா. எத்தனை முறை தான் ஊரைக் கொள்ளையடிப்பீங்க. உங்களால் எத்தனை உயிர் போனது. இன்னும் வெறி அடங்கவில்லையா. மிச்சமிருப்பது எங்கள் உயிர் மட்டும் தான்..” அழுகைக்கும் அச்சத்துக்கும் கோபத்துக்கும் இடையில் சன்னிதித் தெரு