கிழவனிடம் காதல் கொண்டேன்

கிழவனிடம் காதல் கொண்டேன்

புதிதாக ஒன்றையும் சொல்லிவிடப் போவதில்லை இக்கட்டுரை. எண்ணற்ற ஆளுமைகள் சொல்லியிருப்பவற்றைக் காட்டிலும் அரிதாக எதனையும் அள்ளித் தந்துவிடப் போவதில்லை நான். நூற்றாண்டைத் தாண்டியும் ஒடுக்குமுறையாளர்களைக் கனவிலும் கிலி கொள்ள வைக்கும் அக்கிழவனைப் பற்றிப் பேச என்னிடம் என்ன மிச்சமிருக்கிறது?! ஆனாலும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்கள் எண்ணற்றோர். அவர்களை நேசிக்கும் அதே வேளையில், எனது அதீத நேசிப்பென்பது இவ்வுலகில் இருவர் மீது மட்டுமே. அதிலொருவர், புரட்சியாளன் சேகுவேரா; மற்றொருவர், கலகக்காரன் ஈ.வே.ராமசாமி. தனது இனம் ஒடுக்கப்பட்டது, தனது மொழி ஒடுக்கப்பட்டது, தனது சாதி ஒடுக்கப்பட்டது, தனது மதம் ஒடுக்கப்பட்டது, தனது நாடு ஒடுக்கப்பட்டது, தனது வர்க்கம் ஒடுக்கப்பட்டது, தனது நிறம் ஒடுக்கப்பட்டது என்பதன் பொருட்டுப் புயலாய் எழுந்த மரியாதைக்குரியவர்கள் ஏராளம். ஆனால், தனிப்பட்டவிதத்தில் எந்தவித ஒடுக்குதலுக்கும் ஆளாகாமல் ராஜபோகமாய் வாழ்ந்துகொண்டிருக்கையிலேயே, தான், தனது, என்பதைத் தாண்டி  பிற மனிதர் துன்பம் காணச் சகியாது களத்தில் குதித்தார்களே, அதன்பொருட்டே ‘காதல் கொண்டேன்’ இவ்விருவர் மீதும். ஒட்டுமொத்த மானுடத்தையே நேசித்த டாக்டர் சேகுவேரா பிறந்ததோ அர்ஜன்டைனா. போராடியதோ கியூபா, புரட்சிக்கான விதைகளைத் தூவியதோ காங்கோ உட்படப் பல நாடுகள், மாவீரனாய்ச் சரிந்ததோ பொலிவியா. ஓரளவுக்கு அப்படித்தான் நமது கிழவனும். சமூகப் பணிக்கு வரும்போது ஈரோட்டில் அங்கம் வகித்த பதவிகள் மட்டுமே நாற்பதுக்கும் மேல். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒலிக்கத் தொடங்கிய பெரியாரின் குரல் இருபதாம் நூற்றாண்டின் முக்கால்பாகம் வரை சுழன்றடித்த பின்பே ஓய்வு கொண்டது.  ஓய்வு கொண்டதென்னவோ உடல்தான். ஆனால் ஒடுக்குதல்களுக்கு எதிரான அவரது முழக்கங்கள் அரை நூற்றாண்டு கடந்தும் இன்றும் தென்னாட்டைத் தாண்டி, வடக்கு கிழக்கென வியாபித்து, போர்க்குரல் எழுப்புவோர் இடையே ஒலித்துக்கொண்டிருக்கிறது. யானையின் தும்பிக்கையினைப்போலப் போட்டுக்கொண்டிருந்த  ‘லை’யினையும் ‘னை’யினையும் சீர்திருத்தி, இன்றைக்கு இதனைக் கணினியில் தட்டச்சும்போதும்கூடப் பயன்படுகிற எழுத்துச் சீர்திருத்தத்தினை எண்பதாண்டுகளுக்கும் முன்னரே அறிமுகப்படுத்தியவர்தான் தந்தை பெரியார். தெலுங்குக் கீர்த்தனைகள் மட்டுமே பாடிக்கொண்டிருந்த தமிழ்நாட்டின் சங்கீத சபாக்களின் முன் தமிழில் பாடச் சொல்லிப் போர்க்குரல் கொடுத்ததோடு நில்லாமல் தமிழகமெங்கும் தமிழிசை விழாக்களை நடத்தத் துணை நின்றவர்தான் தந்தை பெரியார். இனம், நிறம், பால், மொழி, சமயம், பிறப்பு, உட்பட எதிலும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற ஐ.நா.வினது உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration on Human Rights) கூட 1948இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கும் இருபதாண்டுகளுக்கு முன்னரே அதைச் செயலாக்கத் துணிந்த அக்கிழவனை என்னென்பது?! ஆம், ‘தான் யார்?’ என்பதைக் காட்டிலும் ‘தான் யாருக்கானவன்?’ என்பதில் அம்மனிதனுக்கு இருந்த தெளிவுதான் இன்றைக்கும் அம் மாமனிதனை எண்ணிச் சிலாகிக்க வைக்கிறது நம்மை. சாதி ரீதியாகப் பார்த்தால் தந்தை பெரியாரின் குடும்பமோ ‘முற்பட்ட’ வகுப்பு. ஆனால் குரல் கொடுத்ததோ ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்காக. மொழி ரீதியாகப் பார்த்தால் வீட்டார் கன்னடம். ஆனால் குரல் கொடுத்ததெல்லாம் தமிழ் மக்களுக்காக. நம்பிக்கையின் அடிப்படையிலோ நாத்திகர். ஆனால் இறைத்தலங்களில் சமத்துவம் நிலவக் குரல் கொடுத்ததென்பதோ ஆத்திகர்களின் சுயமரியாதைக்காக. மத ரீதியாகப் பார்த்தால் பெரும்பான்மை. ஆனால் ஓங்கி ஒலித்த குரல் சிறுபான்மை மக்களுக்காக. பாலின ரீதியில் ஆண். ஆனால், குரல் கொடுத்ததெல்லாம் பெண்ணினத்திற்காக. இவை போதாதா இப்பூவுலகு இன்னமும் இந்த மனிதனை நேசித்துக்கொண்டிருக்க? (சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள திராவிடச் சுவடுகள் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

ஞானக்கிழவன்

ஞானக்கிழவன்

கவிதை அக்கினிக் குழம்புகள் அள்ளி எடுத்துப்பக்குவ லேகியம் படைத்த கிழவனே புழுத்துக் கிடந்த புழுக்களுக் குள்ளேபுலியின் ரத்தம் புகுத்திய தலைவனே விழித்தால் மரணம் விளையுமென் றஞ்சித்தூங்கிக் கிடந்த வேங்கையை எழுப்பிநகங்களை நீதான் ஞாபகப் படுத்தினாய்முகங்களில் மீசை முளைப்பதைச் சொன்னாய் தள்ளாடும் வயதிலும் சருகான தில்லைநீஓலையாய்த் தானே உபயோக மானாய் இத்தனை சாதனை வித்தைகள் புரியஎத்தனை பரம்பரை இருந்தது உனக்கு? இரணிய மின்னல் எழுந்ததே அதுவும்சித்தரின் நெருப்புச் சித்தாந்தங்களும்மட்டுமா உன்னை மாற்றின? இல்லையே வால்டேர் செய்த வார்த்தைப் புரட்சிகள்டார்வின் வீசிய தத்துவ வெடிகள்காரல் மார்க்சின் கனத்த கருத்துகள்ரஸ்ஸல் புரிந்த ரசவா தங்கள்விஞ்ஞானிகளின் மெய்ஞ்ஞா னங்கள்இத்தனை உரங்கள் இட்டத னால்உன்மூளையில் மூலிகை முளைத்தது தந்தையே சூரிய மருந்து பட்டதும் வானில்உடுக்கள் என்னும் வடுக்கள் மறையும் உன்கரம் பட்டதும் எம்முடல் தன்னில்காயம் மறைந்தொரு மாயம் நிகழ்ந்தது கி.மு. கி.பி. பழைய கணக்குபெ.மு. பெ.பி. புதிய கணக்கு ஒரு நூற்றாண்டைக் கூட்டிக் கழித்தால்உன்றன் அறிவே மிஞ்சும் எமக்கு நின் அடையாளம் தாடியும் தடியும்நீதான் எங்கள் அடியும் முடியும் (சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள திராவிடச் சுவடுகள் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை)

எப்போதும் தேவைப்படும்  பெரியார்

எப்போதும் தேவைப்படும் பெரியார்

பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை 1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும் குறிப்பாக பின்னாளில் ஏற்பட்ட தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மூடநம்பிக்கைகள், அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றை வேரறுக்க விரும்பிய ஈ.வெ.ரா. அதற்கான சரியான மனிதர் சிங்காரவேலு என்பதைக் கண்டறிந்தார். ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளிலும் அறிஞராகத் திகழ்ந்த சிங்காரவேலுவே அதற்குச் சரியானவர் என நினைத்தார்; மதித்தார். அறிவியல் அறிவு பெரிதும் இல்லாத அந்தக் காலத்தில் விஞ்ஞானம் தொடர்பான புத்தகங்களைப் படித்ததுடன் கட்டுரையும் எழுதி மக்களுக்கு அறிவுறுத்தி வந்த சிங்காரவேலுவைப் பெரியார் பயன்படுத்திக்கொண்டார். ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற பன்மொழி அறிஞரான சிங்காரவேலுவின் பன்மொழி அறிவைத் தமது பணிக்குப் பயன்படுத்திக்கொண்டார் பெரியார்.பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கடவுளைப்பற்றியும் சாதி மதங்களைச் சாடியும் அறிவியல் ரீதியான கட்டுரைகளை பெரியாரின் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். பெரியாருக்கு உவப்பான இப்பணி 1931 முதல் 1935 வரை சிறப்பாக நடைபெற்றது. சிங்காரவேலின் தொடர்பால் பெரியார் முழுக்க முழுக்கப் பொதுவுடமைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இதற்கு முழு முதல் காரணம் தோழர் சிங்காரவேலு. தந்தை பெரியார் ரஷ்யாவுக்குப் போய்விட்டு இந்தியா திரும்பிய பிறகு சுயமரியாதை சமதர்ம இயக்கத்தைத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். செல்லுமிடமெல்லாம் குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ், மாஸ்கோ, ரஷ்யா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார. இவருடன் சேர்ந்து தோழர்கள் ஜீவா, கிசன் போன்றவர்கள் இயங்கி வந்தனர். ஈ. வெ. ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டவர் 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் புறக்கணித்துப் புறம் தள்ளினார். இவரைப் பெரியார் என்று முதலில் அழைத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமானவர்களின் ஒருவரான வழக்கறிஞர் நாகர்கோயில் பி. சி. சிதம்பரம் பிள்ளை ஆவார். அவர் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஐந்தாவது நிர்வாகியாவார். 1930களில் அவர் எழுதிய ஆலயப் பிரவேசம் என்ற ஆங்கில நூல் பின்னால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் பெரியார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் பற்றி மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, சாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் விளக்கி 1929இல் செங்கல்பட்டில் நடந்த இயக்கத்தின் முதல் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களில் முக்கியமான ஒன்று பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்கவேண்டும் என்பதாகும். எலியின் விடுதலைக்குப் பூனைகள் எங்காவது முயற்சி செய்யுமா? என்று வேடிக்கையாகப் பெரியார் குறிப்பிட்டு, பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதைவிடத் தங்கள் விடுதலைக்காக, சுயமரியாதைக்காக பெண்களே முன் நின்று உழைப்பதே சிறந்தது என்பார். 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் முற்போக்குப் பெண்கள் சங்க மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்வின்போது ஈ.வெ.ரா.வுக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் பெரியார். அந்தப் பட்டத்தை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். தம் வாழ்நாளில் தாம் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால் பெண்களின் கல்விக்காக மட்டுமே பணத்தைச் செலவழிப்பேன் என்று பேசியுள்ளார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் தன் வாழ்நாளில் அவர் பங்கேற்கவில்லை. பெண் ஏன் அடிமையானாள் ? என்ற புரட்சிகரமான நூலில் பெரியார் கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும், கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாற வேண்டும். கற்புக்காக மனதில் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமை அழிய வேண்டும் என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகிறார். தமிழ்மீது தீராக் காதல் கொண்ட பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதை நாம் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றுமில்லை; மிகப் பழைய பாஷை, சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன் என்கிறார். விஞ்ஞானப் பெருவெளியில் உலகம் விரிந்து விரைந்து கொண்டிருக்க தமிழைப் பிற்போக்குப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக்கொள்ள பெரியார் விரும்பவில்லை. துருப்பிடித்த கருத்துக்களைத் துடைத்து வைத்துக் கொண்டிருப்பதா தமிழ்? எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகிவிட்டது என்று முற்றுப்புள்ளி வைப்பதற்கா தமிழ்? பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது? இந்தப் பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற அறிவுத் துயரத்தால்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறினார். ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக, தமிழ்ப் புலவராக இருக்க நேர்ந்துவிட்டால் அவர்கள் உலகம் அறியாப் பாமரர்களாகவே இருப்பார்கள். தமிழ் மொழி மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதைத் தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாக கூறுகிறேன் என்றார். எழுத்து, சொல், கருத்து, அறிவு, பயன்பாடு, படைப்பிலக்கியம் போன்றவற்றைக் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படி புதுப்பித்துக்கொள்ளாத மொழி காட்டுமிராண்டி மொழிப் பட்டியலில் சேர்ந்து விடுமே என்று கவலை கொண்டார். தமிழ் எழுத்துக்கள் ஒலி வடிவம் சார்ந்தவை. 247 ஒலி வடிவங்களோடு வழங்கி வரும் தமிழ், எழுத்துக்கள் மிகுதியான ஒரு மொழி என்பதால் கற்பதற்குக் கடினம். அறிவியல் கருவிகளில் ஏறுவதற்கு இடர்ப்படுகிறது. சுமைகள் குறைந்த பயணம் எளிதாக இருப்பது போல எழுத்துக்கள் குறைந்த மொழி, பறவைப் பாய்ச்சலில் பயணம் ஆகலாம். தமிழில் 247 ஒலி வடிவங்களை 131ஆகக் குறைத்த பெருமைக்குரிய பெரியார் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை, உண்மை ஆகிய தமது பத்திரிகைகளில் சீர்திருத்த எழுத்துக்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். பண்டிதர்களோ பல்கலைக்கழகமோ செய்யத் துணியாத இந்தச் சீர்திருத்தத்தைச் செய்தவர் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத பாமர மேதை பெரியார். பல துறைகளில் தடம் பதித்த பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாட்கள். 8200 நாட்களை சுற்றுப்பயணத்திற்குச் செலவிட்டார். அது 8 லட்சத்து 20ஆயிரம் மைல்கள் பயணத்திற்குச் சமமாகும். அதாவது பூமியின் சுற்றளவைப் போல 33 மடங்கு சுற்றி வந்ததற்கு ஈடாகும். 21,400 மணி நேரம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து ஓட விட்டால் இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் பதினோரு நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இயற்கை நமக்குத் தேவைப்படுவதுபோல எப்போதும் நமக்குத் தேவைப்படுபவர் பெரியார். தமிழ்வெளியில் பெரியார் என்ற பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

மகா மகா சாணக்கியன்

மகா மகா சாணக்கியன்

“தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட – இழிவாய்க் கருதப்பட்ட மக்கள், அதாவது தீண்டத்தகாதோர் –  கீழ் சாதியார் – ஈன சாதியார் – சூத்திரர் என்பனவாகிய, ‘பிறவி இழிவும் – பிறவி அடிமைத்தனமும், சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி, பிரவாகமும், வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கை கொண்டு, அதில் இறங்கி வேலை செய்தவர், அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி; ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி; ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கு விரோதி! இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான  நிலையில், நெருப்பின்மேல்  நின்றுகொண்டு வேலை செய்வதுபோல், வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் – இலக்கியமாகவும் விளங்கினார்.” இவ்வளவு அடைமொழிகளையும், அர்த்த மிக்க சொல்லாடல்களையும் தந்தை பெரியார் அவர்களால் பொழிந்து எழுதப்பட்டது யாருக்கு என்றால், பானகல் அரசர் என்று கூறப்படும் பனங்கண்டி இராமராய நிங்கர் அவர்களுக்குத்தான்! தந்தை பெரியார் நெஞ்சத்தில் ஆழமாகக் குடிகொண்ட இந்தப் பெரு மகனாரின் பிறந்தநாள் இந்நாள் (சூலை 9, 1866). பெருஞ்செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் முன்னோர்கள் ஆந்திராவின் பானகல்லு எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். அதன்பின் காளஸ்திரியில் குடியேறினர். காளஸ்திரி அரசர் குடும்பத்தோடு மண உறவு கொண்டவர்கள். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்தவர் – சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர். 1912 முதல் 1915 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு முத்திரையைப் பொறித்தவர். டாக்டர் சி. நடேசனார் அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நீதிக் கட்சியின் வேர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். 1919ஆம் ஆண்டில் பார்ப்பனர் அல்லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி, பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் வாதிட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் பானகல் அரசர் அங்கம் வகித்தார். 1920ஆம் ஆண்டில் சென்னை மாநில முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். வழக்குரைஞர் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். உடல் நலக்குறைவு காரணமாக சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் பதவியிலிருந்து விலகியபோது, பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். 1923ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதம அமைச்சர் ஆனார். இவர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் பெற்ற உரிமைகளும், வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் அசாதாரணமானவை. 1) 1921ஆம் ஆண்டில் முதல் வகுப்புவாரி உரிமைச் சட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) இயற்றப்பட்டது.  2) பஞ்சமர், பறையர் என்ற பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்று அழைக்கப்படுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 3) தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக ‘லேபர் கமிஷனர்’ என்ற தனி அதிகாரிகள் நியமனம். 4) ஆங்கிலேயர் வசமிருந்த சென்னை மாநில மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. (நீதிக்கட்சி ஆங்கிலேயர்களுக்குத் துணை போனது என்று வாய்க் கூசாமல் பேசுவோர்க்கு இது காணிக்கை)  5) சென்னைப் பல்கலைக்கழக சட்டம்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. 6) கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தலைமை ஆசிரியர்களின் அதிகாரத்தில் இருந்தது.  பெரும்பாலும் அவர்கள் பார்ப்பனர்களாக இருந்ததால், பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் நுழைவு என்பது தடையாக இருந்தது. இதனை மாற்றி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு என்று தனிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 7) மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது (இந்தக் கால மருத்துவர்களுக்கு இந்த வரலாறு தெரிய வேண்டும்). 8) பார்ப்பனர்களின் கொட்டமாக இருந்து வந்த இந்துக் கோயில்களின் சொத்துகளைக் காப்பாற்ற, இந்து அற நிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (மத விஷயங்களில் அரசு தலையிடுகிறது என்று சத்தியமூர்த்தி அய்யர் போன்ற தலைவர்கள் போட்ட கூச்சல் கொஞ்ச நஞ்சமல்ல! நீதிக்கட்சிக்காரர்கள் பிராமணர்களை மட்டுமல்ல; கடவுளையும் அழிக்கக் கிளம்பி விட்டனர். மதத்தை அழிக்க முனைந்து விட்டனர் என்று முரட்டுக் கூச்சல் போட்டனர்). 9) நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவும் திட்டம் – தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கு வழி செய்யப்பட்டது. 10) சென்னையில் தியாகராயர் நகர் என்ற விரிந்த பகுதியை உருவாக்கிய வரும் இவரே! “மகா மகா சாணக்கியன்” என்று பார்ப்பனர்களால் கருதப்பட்டவர் பானகல் அரசர். தனது திரண்ட செல்வத்தைப் பொது வாழ்வுக்காகக் கொட்டியவர். தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். பானகல் அரசர் மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய மிக நீண்ட அறிக்கை – பானகல் அரசரின் அருமையையும், சாதனையையும் என்றென்றைக்கும் பறைசாற்றும்! வேறு எந்தத் தலைவருக்கும் இவ்வளவுப் பெரிய அறிக்கையை தந்தை பெரியார் வெளியிட்டதில்லை. ‘திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது?’ என்று கேட்பவர்கள் அதன் சாதனைகளை அறியாதவர்களே! நீதிக்கட்சி அடிகோலிய கட்டுமானத்தின்மீதுதான் இன்றைய வளர்ச்சிகள் எல்லாம் நிமிர்ந்து நிற்கின்றன என்பதுதான் உண்மை. குறிப்பாக, சமூகநீதி என்பது இன்றைக்கு இந்தியா முழுவதும் உயிரோட்டமாக – ஒடுக்கப்பட்ட மக்களின் அடிநாதமாக இருக்கிறது.  இந்திய அரசமைப்புச் சட்டமே அங்கீகரிக்கிறது என்றால் அதற்கான ஆசான் நீதிக்கட்சியே! நீதிக்கட்சியே!! ‘மகா மகா சாணக்கியன்’ என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட பானகல் அரசரின் பிறந்த நாளில் அந்தப் பெருமகனாரை மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவு கூர்வோம். சமூகநீதிக்கு அறை கூவல்கள் புறப்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பானகல் அரசர் என்ற பெருமானின் உணர்வுகளை, தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற போராட்டக்  குணத்தோடு முன்னெடுப்போம்! சமூக நீதிக்கான சவால்களை முறியடிப்போம்! வாழ்க பானகல் அரசர் என்ற பெம்மான்! கி.வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்9-7-2016சென்னை பானகல் அரசரின் 156 ஆம் பிறந்தநாள் இன்று! ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பானகல் அரசரின் 150 ஆம் பிறந்தநாளில் வெளியிட்ட அறிக்கை இது.

உண்மையான சமூகநீதி நாள்

உண்மையான சமூகநீதி நாள்

பெரியார் பிறந்த செப்.17-ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெரியார் விரும்பிய சமூக நீதி எது? அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதா? வெறும் உறுதிமொழி மட்டும் ஏற்பதா? பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது. இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று தங்களுக்குத் தாங்களே இட ஒதுக்கீடு வழங்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் பலன் அடைந்தவர்கள் வேற்றுகிரகவாசிகளைப் போல நடந்துகொள்ளும் அளவிற்கு அதன் வரலாறு தெரியாமல் இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகியுள்ளது என்பது சமூகநீதித் தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சமூக நீதி என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதோடு முடிந்துவிட்டதா? இதனைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா? ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களுக்கான இடப் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? எப்போது கட்சிப் பதவிகளில் வாரிசு அரசியல் ஒழிந்து, தலைமைப் பொறுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும்? எப்போது ‘கல்வியும் மருத்துவமும் விற்பனைக்கு’ என்ற நிலை மாறி அனைவருக்கும் சமமான கல்வியும் மருத்துவமும் கிடைக்கும்? இட ஒதுக்கீட்டின் பலன் எப்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும்? மிக முக்கியமாக, எப்போது பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாகும்? இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை, “நான் இப்போது பேசுவதைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பிய பெரியாரின் கனவு நனவாகும் நாளே உண்மையான சமூக நீதி நாளாகும். அப்படியான ஒரு நாள் உருவாகும் வகையில், இளைய தலைமுறையை வழிநடத்துவோம் என்று உறுதியேற்றுச் செயல்படுவதே உண்மையான சமூகநீதியை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக இருக்கும்.

சமத்துவத் தலைவர்

சமத்துவத் தலைவர்

பெரியார் பக்கம் 21 புரட்சியாளர் பெரியார் (3) எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி துல்லியமான கருத்து கொண்டிருந்தார் பெரியார். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியே நடத்தியிருப்பதற்கான சான்றுகள் அவர் தரும் முறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழில் எழுத்துகள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துகள் அதிகம். தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இவை இரண்டும் தேவையில்லாதவை. மேலும் இவை கூட்டெழுத்துகளே ஒழிய, தனி எழுத்துகள் அல்ல. அவற்றுக்கு மாற்றாக ஐ=அய், ஒள=அவ் என எழுதலாம். இப்படிக் குறைப்பதால் மொத்தத்தில் 38 எழுத்துகள், அதாவது உயிரெழுத்து ஐ, ஔ ஆகிய இரண்டும் அவை ஏறும் மெய்யெழுத்துகள் 2×18=36, ஆக மொத்தம் 38 எழுத்துகள் ஞாபகத்திற்கும் பழக்கத்துக்கும் தேவையில்லாதவை ஆகிவிடும்.  மற்றும் மெய்யெழுத்துகளில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில் நெடில் எழுத்துகள் கொண்ட 18×4=72 தனி உருவ எழுத்துகளை நீக்கிவிட்டு, தனிச் சிறப்புக் குறிப்பை உண்டாக்கி உயிர்மெய் 10, மெய் 18, குறில் நெடில் குறிகள் 9, ஆய்தம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துகளாகச் சுருக்கிவிடலாம். அடுத்தபடியாக, மெய்யெழுத்துகளில், ந, நு, ஞ ஆகிய மூன்றையும் எடுத்துவிடலாம். ன்+த=ந, ன்+க=நு, ன்+ச=ஞ என்று ஆக்கிவிடலாம். இப்படிச் செய்தால் உயிர் 5, மெய் 15, சிறப்புப் பகுதி 8, ஆய்தம் 1 மொத்தம் 29 உருவ எழுத்துகளிலேயே கூடத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சுருக்கிவிடலாம். எப்படியும் தமிழ் எழுத்துகள் குறைக்கப்படவேண்டும். கற்கும் குழந்தைகள் மூன்று மாதங்களில் படிக்கத் துவக்கலாம் என்பதுதான் என் ஆசை என்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்ட பெரியார், இந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்வதால் தமிழ் மொழிக்கோ, இலக்கணத்திற்கோ எவ்விதக் குறைபாடோ கேடோ விளையாது என்று உறுதி கூறினார். எனினும் நினைத்தோம், சொன்னோம், செய்தோம் என்று மின்னல் போக்கில் பெரியார் செயல்படவில்லை. உரியவர்களின் உளப்போக்கை மாற்றி ஒப்புதல் பெறவே முனைந்தார். பெரியாரின் முதல் தளபதிகளில் ஒருவராகிய திரு.குருசாமி 1932இல் துறையூரில் நடந்த தமிழர் மாநாட்டின் முன் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் ஒன்றை வைத்தார். அதை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளாமல் மாநாட்டுத் தலைவர் தள்ளிவிட்டார். 1933 ஆம் ஆண்டின் கடைசியில் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டிற்கு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானத்தை, திருவாளர்கள் கே.எம்.பாலசுப்ரமணியம், சேலம் ஆர்.நடேசன், சாத்தான்குளம் அ.இராகவன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்கள். மாநாட்டில் அத்தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைப்பற்றி, நுணுக்கமாக ஆய்ந்து கருத்து சொல்ல, பதினோரு பேர்கள் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு கூடவேயில்லை. பெரியார் ஓராண்டு காலம் பொறுத்திருந்துவிட்டு, 1.1.1935 முதல் தமிழ் நெடுங்கணக்கில் பலவற்றைப் புதிய முறையில் அமைக்கத் தலைப்பட்டார். ணா, னா, றா, ணொ, னொ, றொ, ணை, னை, லை, ளை போன்ற எழுத்துகளின் படத்தில் உள்ளபடியான பழைய வரி வடிவத்தை மாற்றி தற்போதைய நடைமுறை வரிவடிவில் எழுதுதல் ஆகும். பெரியாரின் ‘குடி-அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ இதழ்கள் இம் முறையைப் பின்பற்றின. ‘குடி-அரசு’ வெளியீடுகள் மேற்கூறிய எழுத்து மாற்றங்களைக் கையாண்டன. திரு.ஓமாந்தூர் இராமசாமி முதலமைச்சராகவும், திரு.டி.எஸ்.அவினாசிலிங்கம் கல்வியமைச்சராகவும் இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆய்ந்து ஆலோசனை கூற, பல தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்று நிறுவப்பட்டது. அதில் பன்மொழிப் புலவர் டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வரதராசனார், கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இடம் பெற்றிருந்தனர். அக்குழு, பெரியார் கையாண்ட எழுத்துச் சீர்திருத்தங்களை ஆதரித்துப் பரிந்துரைத்தது. அரசு அப் பரிந்துரைகளைப் பார்த்து ஆணையிடுவதற்கு முன், அமைச்சரவையில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அமைச்சரவை, இதைப்பற்றி முடிவெடுக்காமல், காலங் கடத்திவிட்டது. இப்படி இருபத்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இதற்கிடையே தமிழகப் புலவர் குழு, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது. பின்னர், தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதென்று மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் பாராட்டுதலைப் பெற்றது. விழாக்களைத் திட்டமிட ஓர் உயர்மட்டக் குழுவொன்று டாக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் நியமிக்கப்பட்டது. அக்குழு, விழாக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், நிலையாக நிற்கக்கூடிய, பெரியாருக்கு உடன்பாடான, சில ஆலோசனைகளைக் கூறிற்று. அதில் ஒன்று, பெரியார் கையாண்ட தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றுவது என்பதாகும். ஒருமனதாகக் கூறப்பட்ட இப்பரிந்துரையைத் தமிழகஅரசு உடனடியாகக் கவனித்து, ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது, போற்றத்தக்கதாகும். பெரியார் கையாண்ட எழுத்து முறைகளில் ‘ஐ’ என்பதை ‘அய்’ என்றும், ‘ஔ’ என்பதை ‘அவ்’ என்றும் எழுதுவதும் அடங்கும். மேற்படி அரசு ஆணைக்குப் பிறகு இதைப்பற்றிச் சிலர் சலசலப்பை எழுப்பினார்கள். அரசின் சார்பில் மறுபரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. ‘ஐ’, ‘ஔ’ என்பவை ஓரொலி எழுத்துகள் அல்ல, ஈரொலிகள் சேர்ந்தவை. அவற்றைப் பெரியார் கையாண்டபடியே இனிக் கையாளுவதில் குறையேதும் வந்துவிடாது. முதலில் அரசு இட்ட ஆணைப்படியே செயல்படலாம்.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அவருடைய புரட்சிகரமான சிந்தனையின் வெற்றிக்குச் சான்றாக விளங்குவதோடு, தமிழ் அச்சுக்கும், தட்டச்சுக்கும் உதவியாக அமையும் என்பது உறுதி. பெண்களின் திருமண வயது பெண்களின் திருமண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டுமென்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் முடிவு செய்தபோது, புருவங்களை நெறித்தார்கள்; வசைமாரி பொழிந்தார்கள். இன்று இது சட்டமாகிவிட்டது. நடை முறையில், எண்ணற்ற பெண்கள், பதினெட்டு இருபது வயது வரை திருமணம் செய்து கொள்ளாதிருக்கிறார்கள். பழைய காலத்தில், இது ஓயாத பேச்சுக்கு இடமாகும். இப்போது அப்படியில்லை. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அதுவும் பலித்துவிட்டது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை என்னும் கொள்கை சட்டமாகிவிட்டது. பழையகாலம் போல், மூன்றுநாள் திருமணம் தேடினாலும் கிடைக்காது. பெரும்பாலான திருமணங்கள் ஒன்றரை நாள் திருமணங்களாகி உள்ளன. புரோகிதம் நீங்கிய திருமணங்கள் ஒரு வேளைத் திருமணங்களாகி உள்ளன. இதில் மேலும் செலவுக் குறைப்புக்கும் காலச் சிக்கனத்திற்கும் இடம் இருக்கிறது. இத்தகைய சீர்திருத்தங்களை இளைஞர்கள் போதிய துணிவோடு முன்னிலும் அதிகமாக நடைமுறைப்படுத்துவார்களாக. குடும்பக் கட்டுப்பாடும் கடவுள் மறுப்பும் ‘அளவான குடும்பம் வளமான வாழ்வு’ என்னும் கொள்கையைத் தென்னகத்துப் பொது மக்களிடையே பரப்பிய முன்னோடி தந்தை பெரியார் ஆவார். அப்போது கிண்டல் செய்தவர்களே ஆட்சியாளராக மாறியபோது, அதைத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்தது பெரியாரின் மற்றோர் கொள்கைக்கு வெற்றியாகும். வெவ்வேறு சமய நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் கடவுள் படங்கள் இருத்தலாகாது, பூசைகள் நிகழ்த்தலாகாது என்று பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது ஆணையிட்டார். பல பொது இடங்களில் இவ்வாணை செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமூட்டுவதாகும். பொதுக்கூட்டங்களின் தொடக்கத்திலாவது முடிவிலாவது அரசு வாழ்த்து, கடவுள் வணக்கம், தலைவர் வணக்கம் பாடக்கூடாதென்ற தன்மான இயக்க முடிவு, அவ்வியக்கத்திற்கு அப்பால் செயற்படவில்லை.  எத்தனையோ சிலை திருட்டுகள் வாரந்தோறும் வெளியாகின்றன. தமிழ்நாட்டு நாத்திகர் எவரும் எந்தச் சிலைத் திருட்டுக் குற்றத்திற்கும் ஆளாகவில்லை என்பது பெரியாருக்குப் பெருமை; பகுத்தறிவு இயக்கத்திற்குச் சிறப்பு; நாத்திகர்கள் மற்றவர்களைவிட ஒழுக்கச்சீலர்களாக, உண்மையாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமென்று, தந்தை பெரியார் கற்றுக்கொடுத்த பாடத்தைத் தன்மான இயக்கத்தவர்கள், கசடறக் கற்றுக்கொண்டார்கள்; கற்றபடி நிற்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. கடவுள் நம்பிக்கை கோயில் வழிபாடு, இவைகளைப் பொறுத்தமட்டில் இலட்சக்கணக்கானவர்கள் இந்நம்பிக்கையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் கோடிக்கணக்கானவர்கள் சமயநம்பிக்கையை விட்டபாடில்லை. சிலை வணக்கத்தை ஒதுக்கியபாடில்லை. இவற்றிற்காக, பொருளையும் நேரத்தையும் சிந்தனையையும் பழையபடியே பாழாக்கி வருகிறார்கள். தாமே, நேரே, பொருள் படாடோபமின்றி, வழிபடும் அளவுக்குக்கூடப் பெரும்பாலான ஆத்திகர்கள், தெளிவோ, துணிவோ பெறவில்லை. ‘ஏட்டிக்குப் போட்டி’ மக்கள் பிரிவில் எங்கும் உள்ள மனநோயாகும். தமிழர்களுக்கோ இந்நோய் அளவுக்குமீறி செறிந்துள்ளது. எனவே, பலவேளை, தங்கக்கூரை, வெள்ளித்தேர் போன்ற தேவையற்ற ஆடம்பரங்களில், வழிபாட்டின் பேரால், திளைக்கிறார்கள். இது பெரியாருக்கோ அவரது கொள்கைக்கோ இழுக்கல்ல. தமிழர்களுடைய சிந்தனைப் போக்கிலுள்ள குறைபாடுதான். வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக  சமுதாயத்திற்குத் தவறான வழிகாட்டும் ‘பெரியவர்களின்’ கோணல் புத்தி. சமதர்மத் திட்டம் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் சமதர்மத் திட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியதை முன்னரே கண்டோம். பொருளியல் அமைப்பை மாற்றும் கொள்கையைப் பெரியார் வீரமாகப் பரப்பி வந்தார். இரயில்வே துறை நாட்டுடைமையாக வேண்டுமென்பது பெரியார் தீட்டிய சமதர்மத் திட்டத்தின் ஓர் பகுதியாகும். அது பலித்துவிட்டது. சாலைப் போக்குவரத்துகள், நாட்டுடைமை ஆகவேண்டுமென்பது அத்திட்டத்தின் மற்றோர் கிளை. அதுவும் பெருமளவு பலித்துவிட்டது. கப்பல் போக்குவரத்து இனி நாட்டுடைமை ஆகவேண்டும். விமானப் போக்குவரத்து நாட்டுடைமையாகிவிட்டது எல்லோரும் அறிந்ததே. தொழில் துறைகள் போன்ற உற்பத்திச் சாதனங்களின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசியல் அமைப்புகளின் வழியாகச் செய்ய வேண்டுமென்னும் பெரியாரின் சமதர்மத் திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால், அதற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆளும் வாய்ப்பே கிட்டவில்லை. அறிஞர் அண்ணாவின் பாராட்டு ஈராண்டு காலம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா, பெரியார் எனும் பகுத்தறிவுப் பல்கலைக்கழகத்தின் தலை மாணாக்கர் ஆவார். அவர் ‘விடுதலை வரலாறு’ என்ற நூலில் பெரியாரைப் படம் படித்துக் காட்டுகிறார். அது இதோ: ‘கல்லூரி காணாத கிழவர். காளைப் பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர். அரசியல் நோக்கத்துக்கான முறையிலே, கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர். பொதுமக்கள் மனம் புண்படுமே; புண்பட்டவர்கள் கோபத்தால் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டுமென்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர். அவர், யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுவர். யாரைக் காண வேண்டுமோ அதற்கேற்ற கோலம் வேண்டாமா என்ற யோசனை அற்றவர். தமிழ் ஆங்கிலத் தினசரிகளின் ஆதரவு இல்லாதவர். ஆரிய மதம், கடவுள் எனும் மூடமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடு வருமென்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டப்பட மறுப்பவர்…’ மேற்கூறியபடி பெரியாரின் ஆளுமையைக் காட்டிய அண்ணா , அவருடைய சாதனைகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘பெரியார், எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய செயல்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். “அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால், நாட்டினுடைய விழிப்பினுக்கு

புரட்சியாளர் பெரியார் (2)

புரட்சியாளர் பெரியார் (2)

பெரியார் பக்கம் 20 இக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம். https://naarkaram.com/pp3301/ தாழ்த்தப்பட்டவர் வாழ்வில் மறுவாழ்வு கீழ்வெண்மணி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர் ஆகிய ஊர்கள் ஆதிதிராவிடர்களுக்கு இழைத்த கொடுமைகள் வேதனையின் நினைவாலயங்களாகக் காட்சியளித்தாலும் இன்று ஆதிதிராவிடர்களைக் கட்டிவைத்து, அடித்து, சாணிப்பால் ஊற்றமுடியாது. பேருந்துகளில், இரயில்வண்டிகளில், எட்டி உட்காரு என்று எவரையும் நாட்டுப்புறங்களில்கூடச் சொல்லமுடியாது. சிற்றூர்களிலும் உள்ளூர்களிலேயே ஆதிதிராவிட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மேட்டுக்குடி மாணவர்கள், அவர்களைக் கண்டால், எழுந்து நின்று, ‘வணக்கம் அய்யா’ என்று கும்பிடும் நிலை பெரும்பாலான ஊர்களில் உருவாகிவிட்டது.  நீதியரசர் அ. வரதராஜன், உச்சநீதிமன்றத்தின் முதல் பட்டியல் இன நீதிபதி நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றம் உட்பட ஆதிதிராவிட நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்; பெரியாரின் தொண்டு அந்த அளவுக்கு வெற்றி கண்டுள்ளது. அந்த நீதிபதிகளை உயர் சாதி இந்துக்கள் பார்ப்பனர்கள் உள்பட ‘மை லார்ட்’ (My Lord) அல்லது ‘யுவர் ஆனர்’ (Your Honour) என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். எத்தனையோ ஊர்களில், ஊராட்சித் தலைவர்களாக ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.  சாதிப் பெயர் மறைவு சாதிக் குறிகளைப் போட்டுக்கொள்ளக்கூடாதென்று முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு தொடக்கத்தில் கிண்டலும் ஏளனச் சிரிப்பும் பரிசாகக் கிடைத்தன. ஆனால் கால ஓட்டத்தில் அம்முடிவு நடைமுறையாகி விட்டது. வெறும் சந்தானமாக, ஈசுவரனாக, சிவச்சைலமாக, பக்தவத்சலமாக, நடராசனாக, சாமிநாதனாக, மகாராசமாக, சோமசுந்தரமாகப் பெயரை மடக்கிக் கொள்வதே இக்கால நாகரீகம். துண்டு போட்டுக்கொண்டு நாயனம் வாசிக்கக்கூடாதென்று சிவக்கொழுந்துவுக்கு கானாக்காத்தான் ஆணையிட, அதை எதிர்த்துத் தன்மான இயக்கத்தின் பீரங்கி அஞ்சாநெஞ்சம் அழகிரிசாமி போராடிய நிலையிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு முன்னேறி விட்டோம்! 1971 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சென்னையில் நடந்த தமிழ் இசை விழாவில், தொடக்க நாளன்று, மேடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த அய்வரில் செட்டிநாட்டு அரசர், ஆளுனர் K.K.ஷா தவிர, மற்ற மூவரும் கலைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நாயனக் கலைஞர் வீராசாமி, நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு ஆவார்கள். அம்மூவரும் பளபளக்கும் சொக்காய் போட்டிருந்தார்கள்; அழகிய நீண்ட மேல் துண்டு அணிந்திருந்தார்கள். இவற்றையெல்லாம்விட மேலான பெருமை ஒன்றை உணர்ந்தேன். இம்மூவரில் எவரும் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு அரசருக்கு, ஆளுனருக்குச் சமமாக உட்காரலாமா என்று சங்கடப்படவில்லை. அத்தகைய சிறப்புக்கே பிறந்தவர்கள்போல், தன்னம்பிக்கையோடு, அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இதுதானே பெரியாரின் வெற்றி?!  நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு எதிர்க்கருத்து கொண்டோரும் புறந்தள்ள முடியாதது சுயமரியாதை இயக்கம். இயக்கத்தைச் சாடிக்கொண்டிருந்த ஒருவரின் வாயால் சுயமரியாதை இயக்கத்தின் சாதனை உளமாரப் பாராட்டப்பட்டதை நான் நேரில் கேட்டு மகிழும் பேறுபெற்றேன். பெரியார் ஆதரித்த நீதிக்கட்சியைச் சாடுவதையே காங்கிரசுத் தொண்டாகக் கொண்டிருந்த மூத்த தியாகி ஒருவரின் படப்பிடிப்பு இப்போது நினைவிற்கு வருகிறது. திரு.மீ.பக்தவத்சலம் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த காலம். நான், தமிழ்நாட்டின் பொதுக்கல்வி இயக்குநராக இருந்தேன். அலுவல் பற்றி, கல்வி அமைச்சரைக் காண, அவர் இல்லத்திற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் பலர் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிலும் மூத்தவர். தமிழ்நாட்டு காங்கிரசு வட்டாரத்தில் பெரிய புள்ளி. நான் உள்ளே வருவதைக் கண்டதும் அவர் எழுந்து, முன்னே வந்து, என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.  ‘நன்றாக இருக்கிறீர்களா?’ என்று நான் அவரைக் கேட்டேன். பொங்கும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், ‘மிக நன்றாயிருக்கிறேன். ஒரு குறையும் இல்லை. மகாத்மா காந்தி புண்ணியத்தில், நாட்டுக்கிருந்த இழிவு போயிற்று. பெரியார் எங்கள் கோவை செங்குந்தர் (இசை வேளாளர்) சாதிக்கு இருந்த இழிவைப் போக்கிவிட்டார். அதில் உங்களுக்கும் பங்கு உண்டு அது பற்றித்தான் உங்களிடம் எனக்குப் பற்று. இரண்டு இழிவுகளும் துடைக்கப்பட்டுவிட்டதை எண்ணி மகிழ்ச்சியோடு வாழ்கிறேன் என்றார். இருவர் கண்களிலும் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிகள் கரைகட்டின. கோவை சி.பி.சுப்பய்யா இப்படிப் பாரட்டியபோது, நான் பெரியார் கொள்கையாளனாக வாழ்வதைப் பற்றிப் பரவசமானேன்.  அரசியல் சூழலில் மாற்றம் பெரியாரின் வாழ்நாள் போராட்டம் சமுதாய மாற்றத்தோடு நிற்கவில்லை; அரசியல் சூழ்நிலையையே மாற்றிவிட்டது. ஏழைப் பங்காளர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ்நாட்டில் முதல் அமைச்சர்களாக விளங்கிய சமுதாய நிலையை உருவாக்கியது, பெரியாரின் சமுதாயப் புரட்சி வெற்றி பெற்றதற்கு அடையாளம். திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களும் அதை மதிக்கிறவர்களும்தான் தமிழ்நாட்டை ஆளமுடியும் என்னும் நிலை உருவாகியுள்ளது. இது பெரியார் அளித்த கொடையாகும்.  1925இல் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் காஞ்சி மாநில மாநாட்டில் வாதிப்பதற்கும் விடவில்லை. ஆனால் அதே காங்கிரசின் சார்பில் காமராசர் அமைச்சரவை அவ்வகுப்புரிமையைக் கருத்திற்கொண்டு செயல்பட்டது. எல்லாப் பகுதியினருக்கும் கல்வி நிலையங்களில், அரசுப் பதவிகளில் உரிய பங்கு கிடைக்கும்படி பார்த்துக்கொண்டது. ஆகவே, வகுப்புரிமை பற்றிய பெரியாரின் கொள்கை வென்றது, பெரியார் வென்றார். இலவசக் கல்வி பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் அவர்களுக்குச் சமமாகக் கல்வி அறிவு பெறவேண்டுமென்று கனவிலும் நனவிலும் பெரியார் நினைத்து வந்தார். அக்கொள்கையும் வெற்றி பெற்றதைக் கண்டோம். நம் மக்கள் உள்ளங்களையும் சமுதாயச் சூழ்நிலையையும் ‘எல்லார்க்கும் கல்வி’ என்னும் கொள்கைக்கேற்பப் பண்படுத்தி வந்தார், தந்தை பெரியார். உழுது பரம்படித்து வைத்திருந்த தமிழ்நாட்டு வயல்களில், கல்விப் பயிரைச் செழிக்க வைத்தார், கர்மவீரர் காமராசர். பகல் உணவு என்னும் நீரைப் பாய்ச்சினார்; இலவசக் கல்வி என்னும் உரத்தையிட்டார்; சீருடை என்னும் களையெடுப்பைச் செய்தார். எல்லாச் சாதிப் பையன்களும் பெண்களும் படிக்கப்போனார்கள்; முன்னர்க் காணாத அக்கறையோடு படித்தார்கள். நன்றாகத் தேர்ச்சி பெறவும் தலைப்பட்டார்கள். இவ்வளர்ச்சி பொதுக் கல்வியோடு, பள்ளிக் கல்வியோடு நிற்கவில்லை. கல்லூரிக் கல்விக்கும் தொழில் கல்விக்கும் பரவிற்று.  பள்ளி இறுதிவரை இருந்துவந்த இலவசக்கல்வி முறையை 1969இல் புகுமுக வகுப்பிற்கும் விரிவுபடுத்தி அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டார். இது ஏழைகளின் மேல்படிப்பிற்குத் தூண்டுகோலாயிற்று. முன்னர், மேல்சாதிக்காரர்களே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அலுவல் பற்றி போவார்கள். இப்போது பல சாதிக்காரர்களும் பிற நாடுகளில் பணிபுரிகிறார்கள். இன்று தமிழ்நாட்டில் வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் நீங்கிய மற்ற எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பதைக் காணலாம். வடநாட்டில் எதிரொலி இன்றைக்கும் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பின்தங்கிய வகுப்பாருக்கு நூற்றுக்கு இருபது இடங்களைக் கல்லூரிப் படிப்பிலும் வேலை வாய்ப்புகளிலும் ஒதுக்க முனையும்போது சொல்லி முடியாத கலவரங்கள் நடக்கக் காண்கிறோம். இங்கோ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, வகுப்புரிமை விரிந்த அளவில் செயல்பட்டது. புதிய அரசியல் சட்டம் அதை ஓரளவு முடமாக்கியது. இருப்பினும் பெரியார் கிளர்ச்சி செய்து, பின்தங்கியவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யலாம் என்னும் திருத்தத்தைக் கொண்டுவரச் செய்து வெற்றி கண்டார். உயர் கல்வியில் முன்னேற்றம் அதன் விளைவாக, தொழிற் கல்வியிலும் வேலைகளிலும் பின் தங்கியவர்களுக்கும் பெருமளவு நீதி வழங்க முடிந்தது. 1975ஆம் ஆண்டு எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம். சேர்க்கைகளில், தாழ்த்தப் பட்டவர்களும் பின்தங்கியவர்களும் சேர்ந்து மொத்தத்தில் நூற்றுக்கு எழுபது இடங்கள் போல் பிடிக்க முடிந்தது. பார்ப்பனர்களுக்குப் பத்துப்பதினைந்து விழுக்காடு கிடைத்திருக்கலாம். இந்தச் சமவாய்ப்புப் பெருக்கு பெரியாரின் இயக்கத்தின் பெரும்பயனாகும். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் படிக்கவேண்டும் என்பது பெரியாரின் சூடுதணியாத கொள்கை. இன்னும் அந்நிலை கைகூடாவிட்டாலும் அதை நோக்கித் தமிழ்நாடு விரைகிறது. 1978ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்காக 1055 பேர்களைப் பொறுக்கியெடுத்தார்கள். அந்தப் பட்டியலில் 196 பெண்கள் இருந்தார்கள். இன்னும் அய்ந்தாண்டுகளில் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்து மாணவர்களும் மாணவியர்களும் சமமாகி விடுவார்களென்று எதிர்பார்க்கலாம். பெண்களை ஆசிரியர் தொழிலுக்கும் மருத்துவத் தொழிலுக்கும் மட்டும் எடுப்பது போதாது. காவல்துறையிலும் இராணுவத்திலும் சேர்க்க வேண்டுமென்று 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாட்டில் முடிவு செய்தார்கள். தற்போது காவல்துறையில் பெண்களும் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றுகின்றனர்.  கல்விமுறை, மாணாக்கரின் சிந்தனையைத் தூண்டுவதாக அமையவேண்டும் என்னும் திட்டம் இன்றும் இலட்சியமாகவே இருக்கிறது. இலக்கியப் பகுதி என்னும் பேரால், நாம் தலைமுறை தோறும் மூடநம்பிக்கைப் பகுதிகளை நுழைத்துக்கொண்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் வருகிறோம். இம்முறையை மாற்றுவது வருங்காலத் தலைமுறையின் பொறுப்பாகும். இந்தி எதிர்ப்புக் கொள்கையில் பெரியார் இன்றுவரை வெற்றி பெற்று வந்துள்ளார். பள்ளிகளில் இந்திப் பாடம் எடுக்கப்பட்டுவிட்டது. நாளை என்ன ஆகும்? சமூகவியல், பொருளியல் முறைகளைப் புதிய கண்ணோட்டத்தோடு கண்டு, அவற்றை அடியோடு மாற்றி அமைக்க அரும்பாடுபட்ட பெரியார், மொழிபற்றியும் புதிய, புரட்சிகரமான கண்ணோட்டம் உடையவராக விளங்கினார். தமிழ் மொழி பற்றிய ஆய்வு கடவுள், சமயம் ஆகியவற்றிற்குப் புனிதத்தன்மை கற்பித்து வந்ததை வன்மையாகத் தாக்கிய பெரியார், நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு மரபுவழி கூறப்படும் புனிதத்தன்மையை எள்ளி நகையாடினார். அதே சமயம் தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துக்காட்டத் தவறியதில்லை. அவரது கூற்றுப்படி தமிழ், நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டின் வேறெந்த மொழியையும்விடத் தமிழ் நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூயதமிழ் பேசுவதால் – மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்கவழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன்மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும் கருத்துகள், நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன. தென்னாட்டு மொழிகளை ஒப்பிட்டுக் கூறும்போது, அவர் ‘என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்குவிதமாகப் பேசப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதில் செய்யப்பட வேண்டிய சில சீர்திருத்தங்களைப்பற்றி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தினார். ‘தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும்.’ ஆகவே, பிறர் எளிதாகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளவும், எளிதாக அச்சுக்கோக்கவும், தட்டச்சு அடிக்கவும், தமிழ் எழுத்துகளை மாற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு அடிப்படைக் காரணத்தையும் தெளிவுபடுத்தினார். ‘மொழி என்பது உலகப்போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக்

புரட்சியாளர் பெரியார்

புரட்சியாளர் பெரியார்

பெரியார் பக்கம் -19 பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையின் பொது இயக்குநர் பொறுப்பில் இருந்த பெருமைக்குரியவர் நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்து, அந்தப் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தவர். இராஜாஜி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் குலக்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு சுமார் 3000 ஓராசிரியர் பள்ளிகள் மூடப்பட்டன.  இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து தந்தை பெரியார் போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக, இராஜாஜி முதல்-அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காமராசர் முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்தார். அப்போது நெ.து.சுந்தரவடிவேல் அவர்களைப் பயன்படுத்தி காமராசர் வழியாக மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்கச் செய்தார் பெரியார்.  தொடர்ந்து பெரியார் கல்வியில் பெரும் புரட்சிகளைச் செய்தார். நெ.து.சுந்தரவடிவேல் தன்னைப் பெரியாரின் தொண்டராகவே நினைத்து வாழ்ந்து கல்வித் துறையில் சாதனைகள் பல செய்தவர். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, நெ.து.சுந்தரவடிவேலு புரட்சியாளர் பெரியார் என்னும் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதன் சிற்றாவணக் கோப்பு (PDF) அண்மையில் எனக்குக் கிடைத்து. அதை முழுமையாகவும் படித்தேன்.  அந்த நூலின் இறுதிப் பகுதியில், தந்தை பெரியார் அவர்களால் இந்த சமுதாயம் எப்படி மாற்றங்களைப் பெற்றது என்பதைத் தக்க சான்றுகளுடன் விவரித்திருந்தார். அந்த விவரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு கல்வியாளர் பார்வையில் பெரியாரின் சமூகப் பணிகள் மிக அருமையாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் நூலிலிருந்த சில பிழைகளை நீக்கியிருக்கிறேன், தற்காலத்திற்கான சொற்களையும் நான் பயன்படுத்தி இருக்கிறேன். இனி பெரியார் பற்றி நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் பார்வையை அப்படியே தந்துள்ளேன்.  ‘உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்து உயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வரவேண்டும்’ என்னும் தனது குறிக்கோளை அடைய வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். அவர் எங்கோ ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, தம்மை நாடி வந்தவர்களுக்கு மட்டும் புரட்சிக் கருத்துகளை எடுத்துரைப்பதோடு நின்றாரில்லை.  மனதில் பட்டதை எழுத்தில் வடித்து, அச்சாக்கி, வெளியிட்டதோடு அமைதி கொள்ளவில்லை. தற்குறிகள் நிறைந்த நாட்டில் எழுத்தில் வருவதைப் படிக்கும் ஆட்கள் சிலரே. மாறாக, சிங்கத்தின் குகைக்குள்ளே புகுந்து போராடுவதைப்போல், காலமெல்லாம் செயல்பட்டார் பெரியார். தமிழ்நாட்டில் அவர் கால்படாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு சூறாவளிப் பயணம் செய்துகொண்டு இருந்தார். புரட்சிக் கருத்துகளை, மணிக்கணக்கில் விதைத்தார். கேள்விக் கணைகளை வரவேற்பதில், அவற்றைக் கொள்கை விளக்கத்திற்கான நல் வாய்ப்புகளாகப் பயன்படுத்தி, பதில் சொல்வதில், பெரியார் இணையற்று விளங்கினார். இச்செயல்கள் பேரலைகளை எழுப்பின. ஏமாந்த காலத்தே ஏற்றங்கொண்டோர், வேங்கையெனப் பாய்ந்தனர்; நரிகளென ஊளையிட்டனர்; ஆதிக்கப்புரிகள் ஆட்டங் காண்பதைக் கண்டு அஞ்சி அப்பாவி மக்களை, ஏவிவிட்டனர். அவர்கள் தன்னலக் கோட்டையைக் காக்க, எத்தனையோ சாகசங்களைக் கையாண்டார்கள். திண்ணைக்குத் திண்ணை தூற்றல்கள். மேடைகளில் அவதூறுகள். ஆசிரியர் கடிதங்களின் வழியாகத் தூண்டுதல்கள். ஆட்சியாளரை நெருக்கி வழக்கு போடுதல். இத்தனைக்கிடையிலும் தெளிந்த அறிவுடையோர், முற்போக்குக் கருத்துடையோர், தந்தை பெரியாரையும் அவருடைய இயக்கத்தின் அடிப்படைச் சிறப்புகளையும் அப்போதைக்கப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றைக் கவனிப்போம்.  ஆக்ஸ்போர்டு அறிஞர் பாராட்டு ஈரோட்டில் பெரியாரைக் கண்டு உரையாடிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு. பெசில் மாத்யூஸ் என்பவர், ‘புறத் தோற்றத்தில் மட்டும் அல்ல, உள்ளுணர்ச்சியிலும் தோழர் ஈ.வே. ராமசாமி வில்லியம் மாரிஸ் போன்றவரே’ என்பதை அவருடன் நான் பேசிக் கொண்டிருந்த 2,3 மணி நேரத்திற்குள் கண்டுகொண்டேன். பொருளற்ற எந்தப் பழைய சமுதாயக் கட்டுப்பாடுகளையும் அடியோடு தகர்த்து எறியவேண்டும் என்னும் அந்தத் துடிதுடிப்பு, காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களையும் பழமைப் பாசி படர்ந்துவிட்ட கருத்துகளையும் உடைத்தெறிய வேண்டும் என்னும் அந்த நெஞ்சழுத்தம், ‘புதியதோர் உலகு செய்வோம்’ என்னும் அந்த உறுதிப்பாடு, இவை அத்தனையிலும் தோழர் ஈ.வே.ரா. வில்லியம் மாரிஸ் அவர்களைப் போலவே செயல்படுகிறார்.  மாரிசைப் போலவே ஈ.வே.ராவும் மிக எளிய வாழ்க்கையே வாழ்கின்றார். ‘சொந்த அச்சகத்தின் வாயிலாகவே, சொந்தக் கருத்துகளைப் பொதுமக்களுக்கு உரைப்பது வில்லியம் மாரிசுக்கும் ராமசாமிக்கும் உள்ள வியக்கத்தக்க இன்னொரு ஒற்றுமை என்பதையும் கண்டேன். தோழர் ஈ.வே.ரா. நடத்துகின்ற ஆங்கில வார இதழ் இருக்கிறதே, அதன் பெயராகிய புரட்சி (Revolt) என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கே பெயராய்ச் சூட்டிவிடலாம். அது மிகப் பொருத்தமாகவும் இருக்கும்’ என்று பெரியாரின் உண்மையான உருவத்தைக் காட்டினார். பனகல் அரசர் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக விளங்கிய, பனகல் அரசர் சர்.பி.ராமராய நிங்கவாரு, 1928இல் ஈ.வே.ராமசாமியைப் பற்றி ‘மதிப்பு வாய்ந்த எனது நண்பர் தோழர் ஈ.வே.ராமசாமி தற்காலத்தில் பெரிய சமூகச் சீர்திருத்தக்காரர் ஆவார். அவர் சமூகச் சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில் அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பலதடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூகச் சீர்திருத்தக் கொள்கை முன்னேற இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும் மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் தயாராயிருக்கிறார். ‘சமூகச் சீர்திருத்தத் துறையில் பலர் பல ஆண்டுகள் பாடுபட்டுப் பயன் பெறாமல்போன வேலையைச் சில ஆண்டுகளில் இவர் பயனளிக்குமாறு செய்து விட்டார்’ என்று உரைத்தார்.  சென்னை மாகாண ஆளுநர் பிற்காலத்தில், சென்னை மாகாணத்தில் ஆளுநராக இருந்த சர்.கே.வி.ரெட்டி நாயுடு 1928இல் பெரியாரை எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்ப்போம். ‘தனக்கு ஒன்றை உரியதாக்கிக் கொண்டு, அதையே தம் முழுவேலையாகவும் கொண்டு, பல்லாண்டுகளாக வேலை செய்கிற ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று சிறப்பான குணங்கள் அமைய வேண்டும். அவ்விதக் குணங்கள் அமைந்தவர்கள் இத்தென்னிந்தியா முழுவதும் தேடினாலும் நமது நாயக்கரைத் தவிர, வேறு யாரையும் கண்டுபிடிக்க முடியாது. அத்தகைய குணங்கள் எவையெனில், முதலாவது தைரியம்; இரண்டாவது தியாகம்; மூன்றாவது தம்முடைய வேலையை எவ்வாறு நடத்தி அனுபவத்திற்குக் கொண்டுவருவது என்பது. ‘தோழர் ராமசாமி உண்மையான சிங்கம்! சிங்கத்தின் இருதயத்தைப் பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் அச்சமென்பது அவருக்கு இன்னதென்றே தெரியாது. அத்தகைய அச்சமின்மை இருந்தாலொழிய இத்தகைய செயல்களில் யாரும் வேலை செய்யமுடியாது. ‘அவர் எவ்விதத் தியாகமும் செய்யத் தாயாராயிருக்கிறவர். ‘பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தியதுபோல, தோழர் ராமசாமி தமது பேனாவை அச்சமின்றி எங்கும் செலுத்துகிறார்’ என்று புகழ்ந்துரைத்துள்ளார். எஸ்.குமாரசாமி ரெட்டியார் தன்மான இயக்கத்தின் பகுத்தறிவு ஒளி தமிழ்நாட்டோடு நிற்கவில்லை. அது பிற மாநிலங்களிலும் தொலைத்தொடர்புகள் அற்ற காலத்திலேயே பரவிற்று. ‘இந்த இயக்கமானது மக்களின் பேதத்தையும் அறியாமையையும் உயர்வு தாழ்வையும் ஒழிப்பதற்கு ஏற்பட்டதாகும். இவைகள் ஒழிந்தால் தானாகவே சுயமரியாதை உதயமாகிவிடும். இவ்வியக்கம் நாட்டில் எவ்வளவு பரவியிருக்கிறதென்பதற்குப் பம்பாய் முதலிய வெளி மாநிலங்களில் சுயமரியாதை மாநாடுகள் கூடுவதும் அவைகளில் செய்யப்படும் தீர்மானங்களும் போதிய சான்றாகும்’ என்று 20.7.1929இல் திருநெல்வேலியில் நடந்த, மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், அம் மாநாட்டைத் திறந்துவைத்த எஸ்.குமாரசாமி ரெட்டியார் விளக்கினார். எஸ். இராமநாதன் பெரியாரோடு சேர்ந்து காங்கிரசு தொண்டாற்றி, கதரைப் பரப்புவதில் துணை நின்று, பின்னர், வகுப்புரிமைக்குப் போராடும் பொருட்டு, காங்கிரசை விட்டுப் பெரியாரோடு வெளியேறியவர், எஸ். இராமநாதன், எம்.ஏ.,பி.எல். ஆவார். அவர் தன்மான இயக்கத்தில் பல்லாண்டு, பெரியாருக்குத் துணையாக விளங்கியவர். அவர் பெரியாரைப்பற்றிக் கூறும்போது, ‘வைக்கம் வீரர் என்பவர் ஒரு மனிதரல்லர். அவர் எனக்கு ஒரு மனிதராகத் தோன்றவில்லை. ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார். அந்தந்த நாடுகளில் இவரது கொள்கை நிலைக்கக் காணலாம். மற்றும் தீவிரமாக எந்த மக்கள் உரிமைப் போராட்டம் புரிகின்றாரோ அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம்’ எனக் குறிப்பிடுகிறார். கலப்புத் திருமணம்  பகுத்தறிவுப் பகலவன், தன்மான இயக்கத் தந்தை, பெரியார் ஈ.வே.ராமசாமி அரை நூற்றாண்டுக்கு மேலாக அயராது பாடுபட்டதன் விளைவாகக் கலப்புத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. இயக்கத்தின் ஒத்துழைப்பிலும் இயக்கத்திற்கு அப்பாலும் எண்ணற்ற கலப்புத் திருமணங்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. எல்லாச் சாதிகளிலும் எல்லாப் பெரிய குடும்பங்களிலும் பிற சாதிக் கலப்பு மணம் நடைமுறை வாழ்க்கையாகிவிட்டதைக் காண்கிறோம். சாதிக்குள்ளேயே திருமணம் என்பதை அநேகமாக, சமுதாய ஏணியின் கீழ்படிக்கட்டுகளிலும், பொருளியலில் அடிமட்டத்திலும் இருப்போர் மட்டுமே பின்பற்றி வருகிறார்கள். புரோகிதமற்ற திருமணங்கள், அய்ம்பதாண்டு காலத்தில், இலட்சக்கணக்கில் நடந்துள்ளன. ‘இராகு கால’ திருமணங்களும் எண்ணற்றன.  1967ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டத்தை முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா நிறைவேற்றி வைத்தது, தன்மான இயக்கத்திற்குப் பெரும் வெற்றியாகும். புரோகிதர்களை, சடங்குகளை, நீக்கிவிட்டுத் திருமணம் செய்துகொண்டோர், வைதீக முறையிலேயே திருமணம் செய்து கொண்டவர்களைவிட அதிக சிறப்போடு வாழ்வதைக் காணும் இளைஞர் உலகம், அடுத்தபடிக்கு முன்னேறுவதாக; பதிவுத் திருமணங்களைச் சிக்கனமாகச் செய்து கொள்ளும் பழக்கத்திற்கு வருவதாக செய்திகள் கூறுகின்றன. கோயில் நுழைவு தீண்டாமை குற்றம் என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள் ளது. இது பெரியாரின் கொள்கைக்கு வெற்றியாகும். வழக்காடத் துணிவிருந்தால் எவ்வகையில் எவ்வுருவில் தீண்டாமையைக் காட்டினாலும் அவர் தண்டிக்கப்படுவார். அண்மையில் தமிழ்நாட்டில் ஓர் ஊரில், ஆதி திராவிடர் ஒருவருக்குக் கொட்டாங்குச்சியில் தேனீர் ஊற்றியதற்காக, ஓட்டல்காரர் தண்டிக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பதற்காகப் போராடிய பெரியார், வைக்கத்தில் வெற்றி கண்டார். கல்பாத்தியில், சுசீந்திரத்தில் அதன்பின் விளைவைக் கண்டார். தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் எல்லாச் சாதியாரும் போகலாம் என்னும் சட்டம் நடைமுறையில் இருப்பதை, பெரியார் தம் வாழ்நாளிலேயே கண்டார். சமுதாயத்தின் கீழ்ப் படிக்கட்டுகளில் உள்ள பல சாதியார் சமைப்பதை மற்ற சாதியார் ஒன்றாய் இருந்து உண்பதை நடைமுறையாக்கிவிட்டார். சாதி ஏற்றத்தாழ்வைக் காட்டும் அடையாளமாக, ஓட்டல்களில், ‘பிராமணாள்’ என்னும் அறிவிப்பு அநேகமாகப் பறந்து போய்விட்டது. பொதுக் குளங்கள், கிணறுகள், வீதிகள் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்தும் நிலை உருவாகி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிற்சில சிற்றூர்களில், விட்டகுறை தொட்டகுறையாக, சாதி வேற்றுமை பாராட்டப்படுகிறது. அவ்விடங்களிலும் எல்லா வகையிலும் வேற்றுமை அடியோடு தொலைவதற்காகப் பாடுபடவேண்டியது நம் கடமையாகும்.  இன்றைய நடைமுறைப்படி பார்ப்பனர்கள் மட்டுமே தமிழ்நாட்டு கோயில்களில் கருவறைக்குள் செல்லலாம். இம்முறை பார்ப்பனர் அல்லாதாரை இழிவுபடுத்துதலாகும். எனவே கோயில் கருவறைக்குள் எல்லோரும் நுழைவதற்காகக் கிளர்ச்சி செய்யப் பெரியார் திட்டமிட்டிருந்தார். அதை நடத்தி வெற்றி பெறுவதற்குள் மறைந்துவிட்டார். பின்தலைமுறைக்கு அத்தொண்டை விட்டுவிட்டுப் போயிருக்கிறார். யாவர்க்கும் ‘அர்ச்சகர்’ தொழில் உரிமை சாதி வேற்றுமையின்