தற்கொலை முயற்சிக்குப்பின் தலைசிறந்த இலக்கியங்கள்
உலக இலக்கியங்களிடையே மிகுந்த தனித்தன்மையும் பெரும் சிறப்பும் பெற்று விளங்குகின்றன இரஷ்ய, சோவியத் இலக்கியங்கள். ரஷ்ய கலை இலக்கியத் துறையில் மாக்ஸிம் கார்க்கியின் பங்கு மகத்தானது. தனது வாழ்நாளை, கலை இலக்கிய வாழ்வாக வாழ்ந்து காட்டியவர் மாக்ஸிம் கார்க்கி. மேலை நாடுகளில் அன்றைய காலகட்டத்தில் நிலவி நின்ற பழைய இலக்கியக் கோட்பாடுகளிலும் சரி, புதிய இலக்கியக் கோட்பாடுகளிலும் சரி; கார்க்கி முழு அறிவு படைத்தவராக இருந்தார். கார்க்கி தன் பயிற்சியால் தயாரான கலைஞர். இசை, சிற்பம், ஓவியம் முதலிய பல்வேறு கலைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார். அவர் தனது சுயசரிதத்தில் குறிப்பிடுவதுபோல, வாழ்க்கையே அவருக்குப் பெரும் கல்லூரியாகத் திகழ்ந்தது. ரஷ்ய நாட்டு மக்கள் துன்பங்களின்றி, எல்லா உரிமைகளுடனும் வாழப் பங்காற்றிய எழுத்தாளர்களில் மாக்ஸிம் கார்க்கியும் ஒருவர். அவர் உலகப் படைப்பாளர்களில் முன்னணியில் இருந்தவர். மனிதனே கார்க்கியின் இலக்கியப் படைப்புகளின் தலைவன். மனிதன் மாண்புற வேண்டும் என்பதற்காகவே எழுதுகோலை ஏந்தியவர். லியோ டால்ஸ்டாய், விளாடிமர் கோரோலெங்கோ போன்ற ஆகச் சிறந்த எழுத்தாளர்களை ஆழ அலசிக் கற்றவர். இரஷ்ய இலக்கியத்தின் பால் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. ஐரோப்பிய இலக்கியத்தின் வரலாற்றில் ரஷ்ய இலக்கியத்தின் கம்பீரத்தையும்பேராற்றலையும் உலகம் ஒப்புக்கொண்டு வியப்படைகிறது. அந்த இரஷ்ய இலக்கியத்தில் அவர் நிலைகொண்டு இறவாப் புகழ் அடையும் முன்பு, பலவிதமான வேலைகளில் இருந்திருக்கிறார். நீஜ்னி நோவ்கோரத் (Ni Zhni Novgorod) என்ற ஊரில் மாக்சிம் செவ்வோட்டிவிச் பெஷ்கோவ்வின் மகனாக 1868, மார்ச் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 1872இல் கார்க்கியின் தந்தையும், 1878இல் தாயும் மரணமடைந்தனர். தாயார் மறைவுக்குப்பிறகு செருப்புக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பின் பிளான் வரைகிறவரிடம் வேலை. அதன்பின் ரொட்டிக் கிடங்கில் சிற்றாள் வேலை. 1880இல் கப்பல் ஒன்றில் சமையலறை சிற்றாளாக வேலை பார்க்கும்போதுதான் படிக்கக் கற்றுக்கொண்டார். நூலக குமாஸ்தாவாக, பறவைகளைப் பிடித்து வாழ்க்கை நடத்துபவனாக என்று பலப்பல வேலைகளைப் பார்த்த கார்க்கி, வேலையின்றி உணவுக்கு வழியின்றி, காஸானுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே கூத்தாடிகளுடன் சேர்ந்து கூத்தாடிப் பிழைத்தார். தெருக்களில் குவாஸ் விற்றுப் பிழைத்தார். 1887 டிசம்பர் 12இல் தற்கொலைக்குக்கூட முயன்றிருக்கிறார். 1888இல் புரட்சிக்காரர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். பின் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டார். காஸ்பியன் கடலில் மீன் பிடித்துக்கொண்டு சுற்றித் திரிந்து வயிறு வளர்த்தார். 1888 – 89 ஆண்டுகளில் ரயில்வே தொழிலாளியாக வேலை பார்த்தார். அவர் வேலை பார்த்த எந்த இடத்திலும் மனிதத் தன்மையற்றவர்களையே சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழத் துணிந்தார். சிறையில் அடைக்கப்பட்ட கார்க்கி சிறையில் இருந்து வெளிவந்தவுடன் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மைல் தொலைவு நடந்தே பயணம் செய்தார். பின்னர் எழுத்துலகில் நுழைந்தார். மனிதன் புராதன காலம் தொட்டுத் தன்னுடைய உழைப்பால் உருவாக்கி, வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொடுத்துவந்த கலைச்செல்வத்தைக் கரைத்துக் குடித்தார். ‘நான் எப்படி எழுத்தாளன் ஆனேன்?’ என்ற கட்டுரையில், ‘உலகில் சகல எண்ணங்களையும் பொருட்களையும் ஆக்குவதும் அமைப்பதும் மனிதனே. பல அற்புதங்களைச் செய்பவனும் மனிதனே. இயற்கை சக்திகள் அனைத்தையும் அடக்கி ஆளுகிற எஜமானனும் அவனே. உலகிலுள்ள அழகிய பொருட்கள் யாவும் மனிதனாலும் மனிதனுடைய திறமையான அவனுடைய உழைப்பினாலும் உண்டாக்கப்பட்டவையே.உழைப்புத் திறனை உபயோகப்படுத்தும் முறைகளில் இருந்தே சகலவிதமான எண்ணங்களும் உதித்தன. கண்கூடாகத் தெரியும் நிதர்சனத் தோற்றங்களுக்குப் பிறகு எண்ணங்கள் உதிக்கின்றன. நான் மனிதனை வணங்குகிறேன். ஏனெனில் மனிதனுடைய பகுத்தறிவாலும் சிந்தனையாலும் படைக்கப்பட்டவற்றைத் தவிர வேறு எதையும் இவ்வுலகில் நான் பார்க்கவில்லை. அந்தப் பார்வையில் நான் எழுதலானேன்’ என்கிறார். மாக்ஸிம் கார்க்கி ஒரு புரட்சிக்காரர். ‘வாழ்க்கை முழுவதையும் மாற்றி அமைப்பதற்காக, திரண்டு வரும் பொது ஜனசக்தியின் வெள்ளப் பெருக்கில் எழுத்தாளர்கள் இரண்டறக் கலக்கவேண்டும். எழுத்தாளன் கடந்துபோன காலத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் இவ்வாறு தெரிந்துகொள்வதினாலேயே அவன் தன்னுடைய காலத்தைப் பற்றியும் அக்காலத்தில் செய்யவேண்டிய புரட்சிகரமான கடமைகளைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்’ என்று அவர் கூறுகிறார். பிரெஞ்சு எழுத்தாளர் லூயி ஆர்கன், ‘புராதன ரஷ்ய இலக்கிய உலகின் பழைய பாட்டுக்களையும் கவிதைகளையும் அவற்றைப் பாடி மகிழ்ந்த மக்களையும் சரித்திரத்தின் கம்பீரமான முன்னேற்றத்தில் கார்க்கி தன்னுடன் சேர்த்து வெற்றிநடை போட்டு அழைத்துச் சென்றார்’ என்று கார்க்கியைப்பற்றி மதிப்பீடு செய்கிறார். அவரே, கார்க்கியின் மறைவைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘கார்க்கி நறுமலர்களின் நடுவே, சோகக் கண்ணீர் சிந்திய பச்சைச் செடிகளின் நடுவே தூங்கிக்கொண்டிருந்தார். அவர் மிகப்பெரிய பெருமைமிக்க மனிதர். தன்னுடன் எவ்வளவோ ரகசியங்களை அவர் எடுத்துச் சென்றுவிட்டார். அந்த ரகசியங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவரோடு, அந்த ரகசியங்களைப் பற்றிய அறிகுறிகள் எல்லாம் மறைந்துவிட்டன. அவை நற்குணங்களைப் பற்றிய ரகசியங்கள், மக்களைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை வெளியிடும் முடிவற்ற ரகசியங்கள், பொறுமையைப் பற்றிய ரகசியங்கள், கள்ளம் கபடமற்ற தூய இதயங்கள் லட்சோபலட்சக் கணக்கில் மனம் அறியாமல் துடித்து வெளியிடும் அரிய ஓசைகளை செவி கொடுத்துக் கேட்பது பற்றிய ரகசியங்கள். மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, தான் கற்றுக்கொண்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் மனிதராகவே அவர் எப்போதும் வாழ்ந்தார்’ என்று கூறுகிறார். அவரது மகத்தான படைப்பான ‘தாய்’ நாவல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புடையது. தமிழில் செய்த முயற்சிகளில் தொ.மு.சி.ரகுநாதனின் மொழிபெயர்ப்பைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். 1936 ஜூன் பதினெட்டாம் தேதி மாக்சிம் கார்க்கி மாஸ்கோவில் மரணமடைந்தார். அந்த மகா மனிதனின் இறுதி யாத்திரையை சோவியத் அரசு நடத்தி வைத்தது. அவருக்காக எண் திசையிலும் சோகக் குரல் எழுந்தது. ‘ரஷ்யப் புரட்சியில் முன்னின்று பங்குகொண்டவர் மாக்சிம் கார்க்கி என்றும் புரட்சியின் புயல் பறவையாகத் திகழ்ந்தார்’ என்றும் மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்ட மாக்சிம் கார்க்கியை நினைவு கூர்வோம்.