திருப்பூர் எனும் திருப்புமுனை -14

சவால்கள் நிறைந்த சாய ஆலை உற்பத்தி நிலை திருப்பூர் எனும் திருப்புமுனை தொடரின் இந்த அத்தியாயத்திலும் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளின் ஆதரவு மற்றும் ஆதரவற்ற நிலைகள் குறித்துப் பார்க்கலாம். சாய ஆலைப் பிரச்சனை, திருப்பூரின் பின்னலாடைத் தொழிலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. நொய்யல் என்னும் ஜீவ நதி பாழ்பட்டதோடு தொழிலும் ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்தது. நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளதைப்போல, எந்தவிதத் தொழில்நுட்பப் பின்புலன்களோ முறையான செயல்திட்டங்களோ இல்லாமல், சுயம்புவாக உருவாகி வளர்ந்த தொழில் திருப்பூரின் பின்னலாடை உற்பத்தித் தொழில். சாயக்கழிவுகளால் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் பாதிப்படைந்துள்ளதை அறிந்து கழிவு நீர் சுத்திகரிப்பு குறித்துப் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் அரசின் ஆதரவு என்பது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம். நிலத்தில் விழும் நீர் சுத்திகரிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதைத் தவிர எங்களுக்கு மேற்கொண்டு எதுவும் தெரியாது என்பதே அரசின் நிலைப்பாடு.  25 வருடங்களுக்கு முன், பெரும் படிப்பறிவில்லாத தொழில் சமூகமாக மாறிய வேளாண் சமூகம், தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இருப்பினும் 2011ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அனைத்து சாய ஆலைகளையும் மூட உத்தரவிட்டது. உள்ளபடியே இன்றுவரை, பின்னலாடைத் தொழில்துறையைப் பொதுச் சமூகத்தினர் ஒரு உவர்ப்பான மனநிலையிலேயே பார்க்கின்றனர். அணைக்கட்டுத் தண்ணீரைப் பாசனத்திற்குத் திறக்கவேண்டும் என்கிற போராட்டம் பற்றியே கேள்விப்பட்டுள்ள நிலையில், ஒரு வேளாண் சமூகம் அணையைத் திறக்கக் கூடாது என்கிற போராட்டத்தை முன்னெடுத்தது உலக வரலாற்றிலேயே இங்குதான் நிகழ்ந்தது என்பது கடும் வேதனைக்குரிய விடயம். 720 சாய ஆலைகள் ஒரே நாளில் மூடப்பட்டன. ஆடை உற்பத்தியின் மிக முக்கிய நிலைகளின் ஒன்றான சாயம் ஏற்றுதல் நிறுத்தப்பட, தொழில் நடத்துவது கேள்விக்குறியாக மாறியது. இருப்பினும் அந்தச் சமயத்தில் பல்வேறு முயற்சிகளை சாய ஆலை அதிபர்கள் முன்னெடுத்திருந்த காரணத்தால், குறுகிய காலத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்க, சிறிது சிறிதாக உற்பத்தியும் மீண்டும் தொடங்கியது. நீதிமன்றத்தின் கடும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியே ஆலைகள் இயங்கத் தொடங்கின. ஆலைகளை இயக்குவதற்கு சாய ஆலை அதிபர்கள் பட்ட சிரமங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இரு அரசுகளின் பாராமுகம், வங்கிகளின் கடன் உதவி, கடைசிக் குன்றிமணித் தங்கம் வரை அடமானம் வைத்தோ விற்றோதான் ஆலைகளை இயக்கினர். நீண்ட முறையிடலுக்குப் பிறகு, இரு அரசுகளும் மானியங்களை அளித்தன.  இருப்பினும் 720 ஆலைகள் இயங்கிய நிலை மாறி 450 ஆலைகளே தற்போது இயக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும் 13 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் மீண்டும் உபயோகப்படுத்தப்படுவதால் நிலத்தடி நீர் எடுப்பது தடுக்கப்பட்டதுடன், மீதமுள்ள கழிவு நீரும் சுத்திகரிக்கப்பட்டு, தெளிவான நீர் மட்டுமே ஆற்றில் விடப்படுகிறது. இதற்குச் சான்றாக, கடந்த 4 ஆண்டுகளாகப் பாசனத்திற்கு அணை திறக்கப்படும் அந்த நற்செய்தியை இங்கு பதிவு செய்ய விழைகிறேன். எந்தவொரு பிரச்சனைக்கும் நீண்டகாலத் தீர்வும் குறுகிய காலத் தீர்வும் இருக்கவேண்டும். குறிப்பாக தொழில் சார்ந்த விடயங்களில் தொலைநோக்குப் பார்வை மிகவும் அவசியம். அதற்கான அடிப்படைத் தரவுகள், அதுகுறித்த ஆய்வுகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க அரசுகளால் மட்டுமே இயலும். அந்த வகையில் சூழலியல் மற்றும் தொழில் வளர்ச்சியை இணைத்து சாய ஆலைப் பிரச்சனையை அணுகியிருக்க வேண்டும். ஆனால், 400 கோடி ரூபாய் மானியத்துடன் ஏறத்தாழ 1000 கோடி ரூபாயை இங்குள்ள தொழில் முனைவோர்கள் முதலீடு செய்து, கடும் நெருக்கடியில் தொழிலை முன்னெடுக்கும் நிலையே நீடிக்கிறது. வேளாண் துறையும் சிறக்க வேண்டும்; அதே சமயம் தொழில்துறையும் வளரவேண்டும் என்கின்ற பார்வையில் கடலுக்கு அருகே சாய ஆலைகளைக் கொண்டு செல்லும் நீண்டகாலப் பயனளிக்கும் திட்டத்தை நல்ல மானியத்துடன் செயல்படுத்தியிருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நாங்குநேரி தொழிற்பூங்காவில் சாய ஆலைகளுக்கான இடத்தை ஒதுக்கி பொதுச் சுத்திகரிப்பு நிலையம், அனல், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் போன்ற பொது அமைப்புகளை உருவாக்கி, சாய ஆலைகளை அமைத்திருந்தால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் கொண்டு விட்டிருக்கலாம்.   பின்னலாடைத் தொழிலுக்குத் தற்போது பெரும் சவாலாக இருப்பது சாய ஆலைச் செலவினங்கள். மேலும் பெரும் முதலீடு தேவைப்படுவதாலும் முதலீட்டுக்கு ஏற்ற லாபம் கிடைப்பதில்லை என்பதாலும் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதிலும் தயக்கம் நிலவுகிறது. அதேசமயம் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கே செலவுகள் அதிகமே. ஏனெனில் சுத்திகரிப்புப் பணிகளுக்கான கட்டணம் பெரும் பங்கினை எடுத்துக்கொள்கிறது. நான் மேலே குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்திருந்தால், சூழலியல் பாதுகாப்புடன் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவைகளைப் பெற்றிருக்கலாம். ஆடை உற்பத்தித் தொழிலும் மேலும் பல படிநிலை வளர்ச்சியை நோக்கிப் பயணித்திருக்கும். நாளது தேதியில் மேலும் பல முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகி, இன்று விவாதித்து வரும் செயற்கை நூலிழை உற்பத்தி போன்றவை என்றோ பெருமளவில் சாத்தியப்பட்டிருக்கும். இந்த விடயத்தில் நான் அரசை மட்டும் குறை கூற மாட்டேன். தொழில்துறையில் ஒரு கருத்தொற்றுமை உருவாகவில்லை அல்லது உருவாக்கத் தவறிவிட்டடோம். தற்போது அமையப்பெற்றிருக்கும் சாலை வசதிகளும் தொழில்நுட்பங்களும் தொலைத் தொடர்பு வசதிகளும் தொழிலை எளிதாக நடத்தும் சூழலை உருவாக்கியிருக்கும். ஏற்கனவே ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல, துணி உற்பத்தி ஆலைகள் உருவாகியிருக்கும். இது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். தவறவிட்டதைக் கைக்கொள்ளும் வாய்ப்பு தற்போது விருதுநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பாரதப் பிரதமர் ஜவுளிப் பூங்காவில் கிடைத்துள்ளது. சரியான திட்டமிடலுடன் உரிய மானிய உதவி மற்றும் கட்டமைப்பு உதவிகளை அரசு வழங்குமானால், சூழலியல் சார்ந்த உற்பத்தி சாத்தியப்படும். பொதுவாக ஆள்வோரின் பார்வை, அரசியல் கணக்குகள், குறிப்பாக வாக்கு வங்கி உள்ளிட்ட வரையறைக்குள்ளே நிற்கும். அதையும் தாண்டிச் சிந்திக்கும் ஆட்சியாளர்களால் பல விடயங்கள் சாத்தியப்பட்டன. எத்தனைத் தொகுதி பயன் பெறும் அல்லது பாதிக்கப்படும்? அது நமக்கான ஆதரவுப் பகுதியா? எந்தச் சமூகம் பெரும்பான்மையாக உள்ளது? போன்ற விடயங்களே பல்வேறு பின்னடைவிற்குக் காரணமாகின்றன என்று கருதுகிறேன். அரசியல் கணக்குகளைப் புறந்தள்ளி, நீண்ட காலத் தொழில் நன்மை கருதிச் சிந்திக்கவும் முடிவுகள் எடுக்கவும் ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் செல்போன், கார் உற்பத்திக்கு ஈடாக ஆயத்த ஆடைத் தயாரிப்பு உள்ளது. ஆனால் ஒரு செல்போன் நிறுவனத்துக்கு அல்லது ஒரு கார் தொழிற்சாலைக்கு உள்ள நிதி ஆதாரங்களோ கட்டமைப்புகளோ ஆயத்த ஆடைத் தொழிலுக்கு இருக்க இயலாது. ஏனெனில் இது சிறு, குறு, நடுத்தரப் பிரிவில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழிலாக உள்ளது. அதைக் கருத்தில்கொண்டுதான் அரசு செயல்பட வேண்டும். கார் மற்றும் செல்போன் தொழிலோடு இதை ஒப்பிடுவது கூடாது. இந்தியா போன்ற அடர்ந்த மக்கள்தொகை கொண்ட நாட்டில், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களும் தொழில்துறைக்கான அரசின் உதவிகளும் தொடர்ந்து சீராக வழங்கப்பட்டால் மட்டுமே தொழில் எழுச்சி பெறும். இல்லையெனில் எந்தவொரு தொழிலும் பின்னடைவையும் ஒருகட்டத்தில் தொழிலே அழியும் சூழலும் ஏற்படும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, வங்கதேசத்திலிருந்து ஆடைகள் மட்டுமல்ல; பின்னலாடைத் துணிகள் திருப்பூரை நோக்கி அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இது சாய ஆலைகளுக்கு மேலும் நெருக்கடியைத் தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடும் சிரமத்தில் தொழிலை முன்னெடுத்துவரும் சாய ஆலைச் சமூகம் மேலும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டும். அடுத்த அத்தியாயத்தில் வங்கதேசச் சவால் குறித்துக் காண்போம். மீண்டும் திங்களன்று புதிய தரவுகளோடு சந்திக்கிறேன்.