மார்க்சின் இலக்கிய மனம்
நூலறிமுகம் காரல் மார்க்ஸ் அன்பும் இருதயமும் ஒன்று சேர்ந்த மனிதர். ஸ்டூவர்ட்மில், பெட்டி, ஜான் பெல்லர்ஸ், பெய்லி, ஆதம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய அரசியல் பொருளாதார நிபுணர்கள், ‘முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வடிவம் அழிவற்றது; இறுதியானது’ என்ற தங்களுடைய கருத்தை எழுதி, மக்களை நம்ப வைத்துவிட்டனர். முதலாளித்துவம் அதனை வரித்துக்கொண்டு சட்டங்களாகவும் வேதங்களாகவும் ஆக்கியது. ‘இதை மாற்ற வேண்டும்; மாற்ற முடியும்’ என்று தனது பகுப்பாய்வின் மூலம் தெரியப்படுத்தியவர் காரல் மார்க்ஸ். அவர் எழுதிய எழுத்துக்கள், வெறும் பொருளியல் தத்துவங்கள் என்றில்லாமல், இலக்கிய வளமும் நயமும் கொண்டவை என்று இந்த நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது. வால்டேர், ஷீல்லர், ரூஸோ, கான்ட் போன்ற முற்போக்காளர்களுடைய கருத்துக்களால் இவரது இல்லம் சூழ்ந்திருந்தது, குழந்தைப் பருவத்தில் ஒரு நல்ல அடிப்படையாக அமைந்திருந்தது காரல் மார்க்சிற்கு. புரோகிதத்தை வெறுத்த மார்க்ஸின் தந்தை ஹைன்ரிக் மார்க்ஸ், ஓர் அறிஞர்; விடாமுயற்சி உடையவர்; மனச்சாட்சிக்குப் பயந்து நடப்பவர்; மதத்தின் மீது பற்றில்லாதவர். இவரது தாய் ஹென்ரிட்டே ஒரு டச்சுக்கார யூதர். கிறிஸ்தவர்களாகப் பின்னர் மாறினர். சிறு வயது முதலே கவி பாடும் திறன் பெற்றிருந்தார் காரல் மார்க்ஸ். இலத்தீன், கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகள் தெரிந்தவர் அவர். பின்னாளில் ரஷ்ய இலக்கியங்களைக் கற்க, ரஷ்ய மொழியைக் கற்றார். கிரேக்கக் காவியங்களைப் படித்தார். இவர் பிறந்த ஊரான டிரியருக்கருகிலுள்ள பான் நகரத்தில் படிக்கும்போது, அங்கிருந்த கவிஞர்கள் சங்கத்தில் தனது பெயரைப் பதிவு செய்துகொண்டார். மார்க்சின் குடும்ப நண்பர், ஜென்னியின் தந்தை லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலன் கலைச்சுவை நிரம்பியவர். கிரேக்கக் காவியங்களிலிருந்து, ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலிருந்து, அநேக பாகங்களைப் பாராமல் ஒப்பிப்பதோடு, அழகாக விளக்கவும் செய்வார். இவரது உறவு மார்க்சை இளம் பருவத்திலேயே இலக்கிய உலகிற்கு அழைத்துச் சென்றது. இவர் மார்க்சிற்கு ஹோமர், ஷேக்ஸ்பியர் போன்ற ஆகச்சிறந்த கவிஞர்களை அறிமுகப்படுத்தியதோடு, ஷேக்ஸ்பியரின் வரிகளையும் மார்க்சிற்குப் படித்துக் காண்பித்தார். இத்தகைய சூழல் காரல் மார்க்ஸ்க்கு கவிதை ரசனையைத் தூண்டி, அழகியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. காரல் மார்க்ஸ், தனது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வுக் கட்டுரையை, லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலனுக்கு சமர்ப்பணம் செய்தார். அவ்வப்போது தான் எழுதிவைத்திருந்த சில கவிதைகளைத் தொகுத்து ஒரு கையெழுத்துப் புத்தகமாக ஜென்னிக்கு அனுப்பியுள்ளார் காரல் மார்க்ஸ். ‘கலை ஞானமும் சத்தியமும் சேர்ந்து வாழ்கிற கோயில்’ என்று ஒரு கவிஞனால் வர்ணிக்கப்பட்ட பெர்லின் பல்கலைக்கழகத்தில், அவர் எடுத்துக்கொண்ட பாடங்களில் இலக்கியமும் ஒன்று. படிக்கும் காலத்திலே ஜென்னியை நினைத்து, பல காதல் கவிதைகள் இயற்றியுள்ளார். இலக்கியப் படைப்புகளிலிருந்து சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் தனது தத்துவ ஆளுமையை உயர்த்திக்கொள்வதில் தன்னை வளர்த்துக்கொண்டார். சமுதாயச் செழுமைக்குப் பயன்படாத எந்த இலக்கியமும் இலக்கியம் அல்ல என்பது இவரின் மையக் கருத்து. மக்களுடைய ஆவலைப் பிரதிபலிக்கக் கூடியதாக, மக்களின் எண்ணத்தை உயர்த்துவதற்காக, எதிர்கால வாழ்க்கையை லட்சியப்படுத்திக் காட்டுவதற்காக இலக்கியம் இருக்க வேண்டும் என்று கருதியதால் ‘மூலதனம்’ நூலைக்கூட இலக்கியக் காட்சியும் இலக்கிய நயமும் உடையதாகப் படைத்தார் மார்க்ஸ். பாட்டாளி வர்க்க அரசியலுக்காக இயங்கிய தோழர் மார்க்ஸை, பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கக் கட்சியின் தோழர் போல் லபார்க் லண்டனில் சந்தித்தபோது, மார்க்ஸின் அரசியல் மதிப்போடு அவரது இலக்கிய ஈடுபாட்டையும் தனது நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். ‘காரல் மார்க்ஸிற்கு ஹைனே, கதே பாடல்கள் மனப்பாடம். உரையாடலின்போது அவர் அடிக்கடி பாடல்களை எடுத்துக் கூறுவார்; ஐரோப்பியக் கவிஞர்களின் படைப்புகளை உற்சாகத்தோடு படிப்பார்; ஸ்காட்லாந்து தேசத்துக் கவியின் நையாண்டிக் கவிதைகளையும் வீர காவியங்களையும் தம் புதல்வியர் ஒப்பிக்கும்போதோ பாடும்போதோ மிக மகிழ்ச்சியுடன் அவற்றைக் கேட்பார்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இலக்கிய ரசனையைத் தனக்குரிய தன்னிறைவாகக் கருதாமல், விமர்சனப்பூர்வமாக உள்வாங்கி, உரிய நோக்கத்திற்கு ஜனநாயகப்பூர்வமாகப் பயன்படுத்தினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அதிக ஈடுபாடு கொண்ட மார்க்ஸ், அவற்றை மூலதனம் என்ற தன் படைப்பில் திறம்படக் கையாண்டார். ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மூலதனத்தில் பல இடங்களில் பயன்படுத்துகிறார். ‘ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில், நிலப் பிரபுத்துவம் சிதைவதையும் பூர்ஷ்வாக்கள் எழுச்சி பெறுவதையும் சித்தரித்திருக்கிறார்’ என்பது மார்க்சின் கருத்து. ஏதன்ஸ் நகர டிமன் என்ற நாடகத்தில், நாடகக் கதாநாயகன் மூலம் பணம் பற்றி ஒரு ஆழ்ந்த விமர்சனத்தை முன் வைத்ததை, ‘ஏ பாவ ஜென்மமே.. வா! மனித குலத்தின் வேசியே வா! உன் பணியைச் சரியாகச் செய்யவிடுகிறேன்’ என்ற கவிதை வரிகளை விளக்கும்போது, காரல் மார்க்ஸ், ‘பணம் மனிதனது பண்புகள் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. நடக்க முடியாததை நடத்திக் காட்டுகிறது. உண்மையைச் சிதைக்கிறது. மனிதத் தன்மையை மாற்றுகிறது. அது அவனது அந்நியமான திறமையாகும். மனிதனாகச் செய்ய முடியாததை, பணத்தின் மூலம் மனிதன் செய்கிறான். எனக்குப் பிடித்தமான உணவு வேண்டும் என்றால், நான் தபால் வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்றால், பணம் அதனைச் செய்துவிடுகிறது’ என்று எழுதுகிறார். மூலதனம் முதல் தொகுதியில், தென் அமெரிக்கச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றி ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார். ‘450 அடி ஆழத்திலிருந்து, உலோகங்களைத் தோளில் தூக்கிச் சுமந்துவரும் தொழிலாளர்களைப் பற்றி, தம்மளவில் இந்தத் தொழிலாளர்கள் ரொட்டி உண்பதையே விரும்புகிறார்கள். ஆனால் ரொட்டி உண்பதைக் காட்டிலும் குதிரைகள் தின்னும் மொச்சையைத் தின்றால் தொழிலாளர்களின் உழைப்பு சக்தி இன்னும் மேம்பட்டுக் கிடைக்கும் என்று கருதிய சுரங்கத் தொழிலதிபர்கள், தொழிலாளர்களை மொச்சை தின்னக் கட்டாயப்படுத்துகிறார்கள். தொழிலாளர்களின் சொந்த நுகர்வைக்கூட மறுதலிக்கும் முதலாளித்துவம், தனது ஆதிக்கத்தில் தொழிலாளியின் சொந்த நுகர்வு என்பது, மூலதனத்தின் உற்பத்தியிலும் மறு உற்பத்தியிலும் ஒரு காரணியாகிறது’ என்பதை இலக்கிய நயத்தோடு எடுத்துச் சொல்கிறார் கார்ல் மார்க்ஸ். இது போன்ற பதிவுகளை இந்நூலில் பரக்கக் காணலாம். சமுதாய வளர்ச்சி, வாழ்நிலைகளின் சூழலில் இலக்கியத்தைப் பயன்படுத்துகிறார். புதுவுலகப் படைப்பாளியான பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில், சமுதாய மாற்றத்திற்காக மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற, இலக்கியத்தையும் அதனோடு ஒப்பிட்டு அரசியலையும் அயராது கற்போம்; கசடறக் கற்போம்; அதன்படி நிற்போம். இதற்கு ஒரு துளி அளவேனும் பயன்படும் விதத்தில் இந்நூலைப் பழுதற வாசிப்போம். நூல்: மார்க்ஸின் இலக்கிய மனம்ஆசிரியர்: துரை. சண்முகம்வெளியீடு: கீழடி பதிப்பகம்பக்கங்கள் : 40விலை: ரூபாய் 40தொடர்புக்கு : 9176 587 245