அவன் என்னைப் போலவே இருப்பான்
சிறுகதை கம்பீரமான சிவப்புக் கட்டடத்தில் பரபரப்பான திருவல்லிக்கேணியில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் பழைமையான மகப்பேறு மருத்துவமனை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை. இப்போதும் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆனால் கோஷா ஆஸ்பிடல் என்றால் சின்ன குழந்தைகூட வழி சொல்லிவிடும். கிட்டத்தட்ட முந்நூறு வருடங்களுக்கும் மேலாக இது ஓய்வின்றி இயங்கிவருகிறது. அன்றைய மெட்ராஸில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் இங்கே பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இது அரசு இலவச மருத்துவமனையாக இருப்பதால் இன்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஏழைகளுக்கு இந்த மருத்துவமனை ஒரு வரப்பிரசாதம் எனலாம். அந்த கம்பீரமான சிவப்புக் கட்டடத்திற்கு வெளியே உள்ள மேடைகளிலும் பெஞ்சுகளிலும் இரவும் பகலும் தங்கள் பெண்களைப் பிரசவத்திற்காக அனுமதித்துவிட்டு நல்லபடியாகக் குழந்தை பிறக்க வேண்டுமே என்று தங்கள் குலதெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கும் தாய்மார்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். அங்கே பார்வையாளர்கள் நேரம் என்பது காலை ஏழிலிருந்து ஒன்பது, மாலை நான்கிலிருந்து ஆறு என்பது பெயருக்குத்தான். வாசலில் இருக்கும் வாட்ச்மேனிடம் காசைத் திணித்துவிட்டு விடுவிடுவென்று உள்ளே சென்று பார்த்து வருபவர்களும் உண்டு. இரவில் யாரும் பேஷண்டுடன் தங்குவதற்கு அனுமதியில்லை. ஆனாலும் வார்டுகளை ஒட்டியுள்ள வராண்டாக்களில் வார்டு ஆயாக்களை கவனித்துவிட்டு ஒளிந்து அமர்ந்து தங்கள் பெண்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் பெண்மணிகளைக் காணலாம்,. அவர்களை விரட்டுவதுபோல் விரட்டிக் காசு வாங்கும் ஆயாக்கள் சரியாக மாலை ஆறு மணிக்கெல்லாம் கையில் ஒரு சிறு கம்பினால் கட்டில்களைத் தட்டிக்கொண்டு வந்து “யாரும்மா அங்கே..? டைம் முட்ஞ்ச்சி போச்சி.. போ..போ.. அட இன்னாமா.. நா சொல்லிகினே கீறேன்.. குந்திகினே கீறே.. டாக்டரு வந்தா நா தான் மாட்டிக்கிவேன். போ..போ..” என்று கூவிக்கொண்டே வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வராண்டா சுவருக்குப் பின்னால் ஒளியும் தாய்மார்களின் அருகில் வந்து, “ஐய.. நீ இங்க ஒளிச்சிகின்னா.. இன்னா.. எனக்குத் தெலியாதா? எம்மாங் காலமா ஆஸ்பத்திரில குப்பை கொட்டிக்கினு கீறேன்.. கெளம்பு கெளம்பு..” என்றதும் அவர்கள், “எம்மா எம்மா.. பச்சப் புள்ளம்மா.. கொஞ்சம் இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும்..” என்று கெஞ்சிக்கொண்டே தங்கள் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் காசை எடுப்பார்கள். அதைப் பார்த்ததும் “சரி சரி.. பச்சப் புள்ளனு சொல்ற.. பாவமாதான் கீது.. இன்னிக்கி ஒரு தபா மட்டும்தான்.. ராத்திரி டாக்டர் ரவுன்ஸ் வரப்போ கக்கூசுல போயீ டபாய்ஞ்சுக்கோ.. இன்னா பிரிதா..? என்ன மாட்டி வுட்றாத..” என்று சொல்லிவிட்டு 50 ரூபாயைப் பிடிங்கிக்கொண்டு போய்விடும். டெலிவரி வார்டின் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. ‘டப் டப்’பென்று டியூப் லைட்டுகளை நிறுத்திக்கொண்டே சென்றாள் ஒரு ஆயா. இப்போது மெலிதான நைட் லேம்புகள் மட்டும் ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தன. ஸ்டாப் நர்ஸ் ஒவ்வொரு பெட்டுக்கும் சென்று அதில் மாட்டியிருந்த சீட்டைப் பார்த்து மாத்திரைகளை கொடுத்துக்கொண்டே சென்றாள். “ம்ம்.. மாத்திரையெல்லாம் ஒழுங்கா போட்டுகிட்டு படுங்க” என்று சொன்னபடி நகர்ந்தாள். அந்த வார்டின் கடைசி பெட்டின் அருகில் வந்தவுடன், “ஏம்மா உன் பேரு தானே செவப்பி..” என்றாள். தன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையை அரவணைத்தபடி படுத்திருந்த செவப்பி, “ஆங்.. நா தான் சிஸ்டர்..” என்றதும் “என்ன நீ.. சரியா மாத்திரை போட மாட்டேறேன்னு டே டியூட்டி நர்ஸ் சொல்லிட்டுப் போறா.. இத பாரு.. மாத்திரைதான் குடுக்க முடியும். அதை நீதான் ஒழுங்கா போட்டுக்கணும். அப்பதான் உனக்கும் நல்லது உன் பிள்ளைக்கும் நல்லது.. தெரியுதா? இந்தா மாத்திரை.. எழுந்திரு.. சாப்பிட்டியா . மாத்திரையை என் முன்னாடியே போடு.. உன்னை நம்ப முடியாது” என்று சொல்லிக் கொண்டே மாத்திரையை அவள் கையில் கொடுத்தாள். அதை எழுந்து உட்கார்ந்து வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்தவள், சரிந்து தன் குழந்தையின் அருகில் ஒருக்களித்துப் படுத்தாள். அப்போது வார்டின் சுவர்க் கடிகாரம் ‘டங்க்.. டங்க்.. டங்’கென்று பத்து முறை அடித்து ஓய்ந்தது. அந்தக் கடிகாரத்தின் சத்தம் அவளின் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. ஆறு வருடங்களுக்கு முன்னால் சாந்தோம் தேவாலயத்தின் மணி இதேபோல் ஒலிக்க, சர்ச்சின் இசைக் குழுவினர் இசைக்க, அந்த இசை மனத்திலும் உடலிலும் ஒருவித சிலிர்ப்பைக் கூட்ட, நீலப் பட்டுடுத்தி தலையில் வெள்ளை ரீத்தும் மெல்லிய பூக்கள் கோர்த்தது போல் கிரீடமும் அணிந்து, காற்றில் மிதப்பது போல் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வந்து, மைக்கேல் ராஜூவோடு ஃபாதர் செபஸ்டியன் முன் சென்று மண்டியிட்ட காட்சி நெஞ்சில் நிழலாடியது. ‘ஃபாதர் செபஸ்டியன் இருவர் கைகளையும் இணைத்து வைத்துப் புனித நீர் தெளித்து, “இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்று தன் கம்பீரமான குரலில் சொல்லவும், அந்த வார்த்தைகள் சாந்தோம் தேவாலயச் சுவரின் எல்லாப் பக்கங்களிலும் பட்டு எதிரொலித்ததே அது என்னவாயிற்று?!’ என்று நினைத்தவள் கண்களில் வெளிப்பட்ட கண்ணீர் அவள் காதுகளைத் தாண்டித் தலையணையை நனைத்தது. செவப்பி என்று அவளுக்குப் பெயர் வைத்திருந்தாலும் அவள் சற்றே கறுத்த நிறம்தான். ஆனால் வடித்து வைத்த சிலைபோல் அழகான முகமும் மினுமினுப்புக் கூடிய வடிவமும் கொண்டவள். மைக்கேல் ராஜூவும் அப்படியொன்றும் வெளுத்த நிறமுடையவன் இல்லைதான். ஆனால் செவப்பியைவிடச் சற்று வெளுத்த தோலுடன், கடலில் வலைவீசி வீசி இறுகிய கட்டான தேகம் கொண்டவன். அவன் தீவிர எம்,ஜி,ஆர் ரசிகன் என்பதால் எப்போதும் கலர்கலராகப் பூப்போட்ட மினுமினுவென்ற முழுக்கைச் சட்டை போட்டு, அதைத் தன் புடைத்த புஜங்கள் தெரியுமாறு சுருட்டி விட்டுக்கொள்வான். வாத்தியார் ரசிகனாக இருந்துகொண்டு பீடி சிகரெட்டு, குடிப்பழக்கம் எல்லாம் கூடாது என்ற கொள்கை உடையவன். அவனுக்கு அப்பா இல்லை, அம்மா ஆரோக்கிய மேரி மட்டும்தான். மைக்கேலைக் கரம்பிடித்து, சாந்தோம் சர்ச்சின் பின்னால் இருந்த மீனவக் குப்பத்தில் இருக்கும் பழைய ஹவுசிங் போர்டின் மூன்றாவது தளத்தில உள்ள அந்தச் சிறிய வீட்டிற்குக் குடிவந்த பிறகுதான் ‘வாழ்க்கை இத்தனை இனிமையானதா!’ என்று தெரிந்துகொண்டாள் செவப்பி. மைக்கேலும் அவளை ஒருநாளும் கோபமாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. மைக்கேலுக்கு அவள் மேல் கொள்ளை ஆசை. ஆரோக்கிய மேரியும் ஆரம்பத்தில் அவளை மிகவும் அன்பாகத்தான் பார்த்துக்கொண்டாள். கல்யாணமான புதிதில் அக்கம்பக்கத்தார், “இன்னா ஆரோக்கியம்.. உம்புள்ளைக்கி நல்லா வஜ்சிரம்மாட்டம் வெளுப்பா மருமவ கொண்டாருவேனு பாத்தா.. கறுத்த வௌவாலு மாதிரி புட்சாந்து கீறியே..” என்று சீண்டுவார்கள். உடனே ஆரோக்கியத்துக்குக் கோவம் மூக்குக்கு மேல் வந்துவிடும். “அடியேய் செவத்த சிறுக்கிய.. செவப்ப்பு என் காலு பாதத்தில கீதுடி.. என் மருமவ கருப்பு வுங்க கண்ணில கீதுடி.. போங்கடி போக்கத்தவகளே.. போயி வேலையைப் பாருங்கடி.. வந்துட்டாளுங்க என் மருமவள பத்தி பேச.. ஆய்ஞ்சு பூடுவேன் ஆய்ஞ்சி..” என்று வாயடிப்பாள். அப்படி இருந்தவள், ஆண்டுகள் இரண்டு மூன்று நான்கு என்று ஓடியும் செவப்பி உண்டாகாமல் இருக்க, “ஏசப்பா.. இது வுனுக்கே நாயமா கீதா.. நேத்து கண்ணாலம் கட்டிக்கிட்ட சிறுக்கியெல்லாம் கையில ஒன்னு வவுத்துல ஒன்னுனு இஸ்த்துகினு திரியுதுங்க.. எம் மவனுக்கு இன்னாயா கொறச்சலு..? பாவி மவ வவுத்துல ஒரு புழு பூச்சி இல்லியே.. ஏசப்பா.. நீ எப்பதான் கண்ணு தொறப்பியோ..” என்று வாசற்படியில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டாள். “அடியே உன் வவுத்துல இன்னாடி கல்ல கட்டி வைச்சினுகிரியா..? அல்லாரும் இன்னா இன்னுமா உம் மருமவ உண்டாகலனு கேக்கறப்போ அவுமானமா கீதுடி” என்று செவப்பியிடமும் சிடுசிடுப்பாள். ஆனால் அதற்காக ஒருநாள்கூட ஆரோக்கியத்தை எதிர்த்து ஒரு சொல் சொல்லமாட்டாள் செவப்பி. “இன்னாதான் சொல்றுதுனு தெலியல.. எம்மாந் திட்னாலும் கம்முனு பூட்ற.. வேற எவளா இருந்தா இன்னேரம் பிலுபிலுனு புட்சிக்குவாலுங்க.. சட்டிய தூக்கினு தனியா பூட்றனுவாளுங்க.. ஏசப்பா ஏந்தான் வுனுக்கு ஒரு புள்ளைய குடுக்காத சோதிக்கிறாரோ.. தெலியலயே” என்றும் சொல்லுவாள். அதற்கும் மௌனமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, “அயித்த வா.. கொயம்பு கொச்சிட்சி.. சூடா துன்னு வா” என்று கூப்பிட்டு தட்டில் சோற்றைப் போடும்போது அவள் முகத்தைப் பார்த்து அப்படியே கண் கலங்குவாள் ஆரோக்கியம். செவப்பிக்கு மட்டும் பிள்ளை பெற்றுகொள்ள ஆசையில்லையா என்ன? தினமும் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு சர்ச்சுக்குப் போய் தோமையர் கல்லறையில் மண்டியிட்டு ‘ஒரு புள்ளையைக் கொடு’ என்று மனத்தாலேயே மன்றாடுவாள். அப்படித்தான் ஒருநாள் கல்லறையில் கண்ணை மூடிக்கொண்டு நேரம் போவதே தெரியாமல் இருந்துவிட்டாள். அதற்குள் இருட்டிவிட்டது. ‘இவ்வளவு நேரமாகியும் செவப்பி வரலையே..’ என்று கலவரப்பட்ட ஆரோக்கியம், “அடியே சுந்திரி… என் மருமவள பாத்தியா? அடேய் அந்தோணி மவனே.. என் மருமவள காணோம்டா.. ஓடிப்போய் மைக்கேல கூட்டியாடா.. ஐயோ நா என்னா பண்ணுவேன்..” என்று ஒப்பாரி வைத்து குப்பத்தையே கலக்கிவிட்டாள். இவள் போட்ட கூச்சலில் ஆளுக்கொரு பக்கமாக ஓடி செவப்பியைத் தேட ஆரம்பித்தார்கள். சிலர் சர்ச்சுக்கும் ஓடிப்போய்த் தேடினார்கள். ஆனால் யாருக்கும் பின்னால் இருக்கும் கல்லறைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. சேதி கேட்டு ஓடிவந்த மைக்கேலுக்கு, தன் வீட்டின் முன்னால் கூடியிருந்த கும்பலைப் பார்த்ததும் அடிவயிறு கலங்கியது. கும்பலை விலக்கிக்கொண்டு வாசல்படியில் காலை விரித்துக்கொண்டு தலைவிரி கோலமாக அரற்றிக்கொண்டிருந்த ஆரோக்கியத்திடம், “எம்மா.. இன்னாமா ஆச்சி..? ஏம்மா கூவிகினு கீற..?” என்றவனைப் பார்த்து “ஐயோ நா என்னத்த சொல்லுவன்.. செவப்பி எங்கியோ பூட்டாடா.. எல்லா எட்திலயும் தேடிட்டோம்.. எங்கிமே இல்லடா.. ஏசப்பா நீ தாம்ப்பா அவள கண்ணுல காட்டணும்” என்று ஓவென்று புலம்பி அழுதாள். “ஆமா.. அல்லாம் உன்னாலதான்.. எப்பப்பாரு புள்ள பெத்துக் குடுக்கலனு அவள திட்டிக்கினே இருந்தா.. எத்தினி நாளிக்கித்தான் பொறுத்துப்பா.. இப்ப எங்கியோ பூட்டா.. போம்மா” என்றவன் மூளையில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. ஃபாதர் செபஸ்டியனைப் பார்த்தால் ஏதாவது செய்வார் என்ற எண்ணத்தில் வேகமாக சர்ச்சை நோக்கி ஓடினான். ஃபாதர் செபஸ்டியன், அப்போது கல்லறை வாசல் விட்டிறங்கி சர்ச்சை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் அவர் முன் மண்டியிட்டு அவர் கையைப் பிடித்துக்கொண்டு, “ஃபாதர்.. ஃபாதர்.. எஞ் செவப்பி.. எஞ் செவி..” என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் தேம்பினான். அவன் கைகளிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்ட ஃபாதர் செபஸ்டியன், சிரித்துக்கொண்டே “மைக்கேல்.. என்ன ஆச்சு உனக்கு..? அழாம சொல்லு” என்றார். “செவப்பியைக் காணோம் ஃபாதர்..” என்றவனைப் பார்த்து, அவன் தோளைப் பிடித்து எழுப்பி, “மைக்கேல், கர்த்தர்