நீலகண்ட பிரம்மச்சாரி – 19
காட்சி 19 இடம் : ஓம்கார் ஆசிரமம்(ஓம்கார் சுவாமிகள் – சங்கர கிருஷ்ணன் உரையாடல் தொடர்கிறது) ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமத்தின் பக்கத்தில் ஓடும் தென்பெண்ணை நதியைப் பார்த்தீர்கள் அல்லவா சங்கர கிருஷ்ணன்..? ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் அமைதியாக ஓடுகிறது. மலைச் சரிவில் ஆர்ப்பரிக்கும் புனல், சமவெளியில் அமைதியாகப் போவது போல, என் வாழ்க்கை காட்டாற்று வெள்ளமாகப் பிரவாகித்து வயலுக்குப் பொசியும் வாய்க்கால் போல அமைதி ஆனது. இங்கு வந்தபோது நான் இந்த நதியைப் போல அமைதியாக இருந்தேன். எனக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அரசியல் சிந்தனைகளிலிருந்து நான் விடுதலை பெற்றிருந்தேன். ஆனால், தொண்டு செய்வதை விட்டுவிடவில்லை. இப்போது வரை 41 வருடங்களாக இங்குள்ள எளிய மக்களுக்குத் தொண்டு செய்து வருகிறேன். எனது ஆன்மீக சாதனைகள் மட்டுமல்ல இந்த ஆசிரம வாழ்க்கை. தொண்டின் மீது நான் கொண்ட தணியாத தாகத்தின் ஒரு பாகமும்தான். தேசத் தொண்டு என்பது, தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்காரவேலரும்தான். சங்கர கிருஷ்ணன் : சிங்கார வேலரின் கம்யூனிஸ்ட் இயக்க வேலைதானே உங்களை இரண்டாவது சிறைவாசத்திற்குக் கொண்டு சென்றது..? ஓம்கார் சுவாமிகள் : என் கூடவே பிறந்தது போன்ற முரட்டுத்தனம்தான் அதற்குக் காரணம். சிறு வயதிலிருந்து நான் முரடனாகவே இருந்திருக்கிறேன். ஒரு நிலைகொள்ளாத உள்ளம் என்னை உந்தித் தள்ளி வந்திருக்கிறது. அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிப் போயிருக்கிறேன். பாலர் சந்திப்புக்குப் பிறகு, முற்றிலுமாக ஒரு பரதேசி போலச் சுற்றல் வாழ்க்கைதான். புரட்சி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது என்பது ஒரு சாக்கு போலத் தொடர்ந்து வந்தது.பாய்ந்து வரும் காட்டாறு, பள்ளம் கண்டால் தங்கிவிடும் அல்லவா? அதுபோலத் தங்கியிருக்கிறேன். பள்ள மனது நிறைவானதும் பயணப்பட்டு விடும் அல்லவா? அதுபோல தங்குதலும் தாவிப் போவதுமாக ஓடிக் கொண்டிருந்தேன். மேடுகள் பிரவாகத்திற்கு லட்சியமில்லை. தள்ளிச் சரித்துவிட்டுத் தன் பாதையை அமைத்துக்கொள்ளும். அந்த ஓட்டத்தில் ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய விவேக மனோபாவம் எனக்குக் கைகூடவில்லை. நான் ஏற்றுக்கொள்ளாத எந்த விஷயத்தோடும் நான் சமரசம் கொள்ளவில்லை. அதுவே எனது அடையாளம். அதுவே என் பலமும் பலவீனமும். நான் இரண்டாம் தடவை சிறைப்பட்டதைச் சொல்கிறேன்; உங்களுக்கே புரியும். சங்கர கிருஷ்ணன் : சொல்லுங்கள் சுவாமி.. ஓம்கார் சுவாமிகள் : அது 1922ஆம் வருடம் ஜூலை மாதம். அப்போது சிங்காரவேலர், கயாவில் நடக்கப்போகும் காங்கிரசில் கம்யூனிஸ்ட்கள் செய்ய வேண்டிய உத்திகளை வகுத்துக்கொண்டிருந்தார். நிறைய பயணங்களைச் செய்துகொண்டிருந்தார். அந்தக் காங்கிரசில்தான் பூரண சுயராஜ்யத் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் முனைப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால், காங்கிரசின் திட்டம் அப்போது பூரண சுயராஜ்யம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா..? அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது சிங்காரவேலர்தான். அந்தக் காங்கிரஸ் நிகழ்ச்சிகளெல்லாம் நான் சிறை சென்ற பின்பு நிகழ்ந்தவை. நான் பத்திரிகை பார்த்துத் தெரிந்துகொண்டவை. ஆகவே சென்னை வேலைகளை நாங்களாகவே செய்துகொண்டிருந்தோம். அப்போது, நான் தயாரித்த பிரசுரம் ஒன்று போலீஸ் உளவாளிகளிடம் சென்றது. அதை தயாரித்தவன் நான் என்பதும், நான் ஆஷ் கொலை வழக்கின் பிரதானக் குற்றவாளி என்பதும், பழைய சிறைப் பறவை என்பதும் அவர்களைப் பதற வைத்தன.இவன் இன்னும் இயங்குகிறான் என்பதும் அதுவும் கம்யூனிஸ்ட் பிரசாரகன் என்பதும் தெரிந்தவுடன் சுறுசுறுப்பானார்கள். அந்தப் பிரசுரத்தை ராஜதுவேசப் பிரசுரம் என்று கொண்டு, அதைப் பிரசுரித்த என்மீது வாரண்ட் கொண்டுவந்தார்கள். நான் தலைமறைவானேன். சங்கர கிருஷ்ணன் : ஏன் தலைமறைவானீர்கள்..? உங்கள் தோழர்களிடம் ஆலோசிக்கவில்லையா..? ஓம்கார் சுவாமிகள் : அதுதான் என் விவேகமின்மை. போலீஸ் என்னைத் தேடினார்கள். 1922 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, திருவல்லிக்கேணி இடுகாட்டில் மறைந்திருந்த என்னைக் கைது செய்யச் சுற்றி வளைத்தார்கள். (மேடையில் ஓம்கார் சுவாமிகள் அறையில் இருள் பரவி மறுபக்கம் ஒளிர்கிறது) காலம் : 1922ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதிஇடம் : விசாரணை நீதிமன்றம், சென்னைபாத்திரங்கள் : விசாரணை அதிகாரி, நீலகண்டர் விசாரணை அதிகாரி : மிஸ்டர் நீலகண்டர், உம்மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.முதலாவது, நீர் ராஜ துவேஷப் பிரசுரங்கள் அச்சிட்டு, மக்களிடம் அரச விரோதத்தைத் தூண்டியுள்ளீர்.இரண்டாவது, நீர் உரிமம் இல்லாமல் கைத் துப்பாக்கி வைத்திருந்தீர்.முன்றாவதாக, அந்தத் துப்பாக்கியால் உம்மைக் கைது செய்ய வந்த போலீஸ் ஜவான்களில் ஒருவரைச் சுட்டீர். அந்தத் துப்பாக்கி சரியாக வேலை செய்யாததால் அந்த ஜவான் தப்பித்தார். இருப்பினும் அது கொலை முயற்சியே.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உமது பதில் என்ன? நீலகண்டர் : பிரிட்டிஷார் சட்டத்தையும் கோர்ட்டையும் நான் மதிப்பதில்லை. இந்தியர்கள் உருவாக்காத சட்டங்களுக்குக் கீழ்ப்படிய எனக்கு விருப்பமில்லை.உங்கள் சட்டத்தின் முன்பு ராஜதுவேஷமாகச் சொல்லப்படும் எமது அறிக்கை, எமது மக்களின் எதிர்கால விடுதலைக்கானது. அந்த விடுதலைக்காக அவர்களை அணி சேர்ப்பதற்கானது. மற்ற குற்றச்சாட்டுகளில், நானே என் நடத்தையின் மீது விளக்கம் சொல்வது அவசியம் என்று தோன்றவில்லை. நீங்கள் உங்கள் தீர்ப்பைக் கூறலாம். எதுவாயினும் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன். (மேடையில் ஒளி இடம் மாறி ஓம்கார் ஆசிரமத்தில் விரிகிறது) ஓம்கார் சுவாமிகள் : எனக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அளித்தார்கள். பழைய புரட்சிக்கார குற்றவாளி என்பதாலும் என் பழைய சிறை வரலாறுகள் கலகச் சாயையைக் கொண்டிருப்பதும் சிறையிலும் நான் மற்ற கைதிகளின் உரிமைகளைப் பேசுபவன் என்பதை அடையாளப்படுத்தி நின்றன என்பதாலும் சிறை அதிகாரிகள் என்னைக் குறித்து அச்சத்தில் இருந்தனர். ஆகவே என்னை இந்தியாவுக்கு வெளியே அனுப்பிவைத்தார்கள். ஆனால் சிறைவாசத்தில் அமைதியானவனாக மாறிக்கொண்டு வந்தேன். என் மனப் புயல்கள் ஓய்ந்து வந்தன. சங்கர கிருஷ்ணன் : உங்கள் வாழ்க்கைமீது மிகுந்த மரியாதை வருகிறது சுவாமி.. உங்கள் தற்போதைய ஆசிரம வாழ்க்கையின்மீதுகூட என்னால் விளக்க முடியாத பிரியம் வருகிறது. (திரை விழுகிறது)