நவரசா ~ இன்மை
திரை விமர்சனம் நவரசா இணையத் தொடரில் முத்தாய்ப்பாக அமைந்து, ‘பயம்’ எனும் ரசத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முழுமையான திரை வடிவமாகத் திகழும் படம்தான், ரவீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ள ‘இன்மை’. இஸ்லாமிய கதைப் பின்னணி. என்றாலும், எந்த மதப் பின்னணிக்கும் பொருந்துகின்ற கதைதான். ஒரு செல்வந்த மரைக்காயரின் (ஷிமூர் ரூஸ்வெல்ட்) சொத்துகளை அடையும் பொருட்டுத் திட்டமிட்டு, இளம்பெண் வஹிதா (முற்பகுதியில் அம்மு அபிராமி பிறகு, பார்வதி திருவோத்து) மூளைக் கட்டியுடன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள ஒருவரை, காதலன் அன்வரின் (பாவெல் நவகீதன்) நிர்பந்தத்தால் மணந்து கொள்கிறாள். எதிர்பார்த்தபடி மரணம் அவரை நெருங்காத நிலையில், உசைன் ஹோஜா (ராஜேஷ் பாலச்சந்திரன்) என்கிற, ‘ஜின்’னை (குட்டிச்சாத்தான்) ஏவும் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடுகின்றனர். அதன் பிறகு, தற்போது புதுச்சேரியில் புத்துணர்வு பெற்று மலரும் வஹிதாவின் வாழ்க்கையில், ஃபாரூக் (சித்தார்த்) வர, அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்தான் ‘இன்மை’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. பிளாஷ்பேக்கில் கதை சொல்வது என்பது புதிதில்லை என்றாலும், நிகழ்கால சம்பவ ஓட்டத்திற்கு இடையூறு இல்லாமல், சுவாரஸ்யம் கெடாமல் முடிச்சுகளை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து, கதைக்குள் இறுதிவரை ரசிகர்களை ஈர்த்து உட்கார வைத்துவிடும் இயக்குனரின் உத்தியும், சாமர்த்தியமும் அசாதாரணமானது, அசத்தலுமானது. காலிக்ராபி, டீ கப் பயன்பாடு, ப்ளேசிபா எபெக்ட் போன்றவற்றைப் பொருத்தமாகக் கதையில் இடம்பெறச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஆதார ஸ்ருதியே திரைக்கதையும் நடிப்பில் பார்வதி திருவோத்து, சித்தார்த்தின் அற்புதமான பங்களிப்பும்தான். வசனங்கள், காட்சிகள் யாவும் கனகச்சிதம். ஃபாருக்கை வஹிதா புரிந்துகொண்ட விதத்தில், பயத்தில் உறைந்து, அவனிடம் பேசும், கெஞ்சும், ஏன் கதறும் ஒவ்வொரு பிரேமிலும் படு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார் பார்வதி திருவோத்து. அலட்டலில்லாத அழுத்தமான முகபாவங்களை வெளிப்படுத்தி உள்ளார், சித்தார்த். மரைக்காயருக்கு அடுத்துப் பயம் வஹிதாவுக்குத்தானே தவிர, ரசிகர்களுக்கு இல்லாத நிலையில், ஃபாரூக் அவள் பேசப் பேச மந்திர உச்சாடனம் செய்வதுபோல முணுமுணுப்பது, ஏனோ? முற்பகுதியில் உள்ள முகமது ஃபாருக் ஜாபராகவும் பிற்பகுதியில் வஹிதா முன் நிற்கும் ஃபாருக்காகவும் சித்தார்த்தே இருக்கும் போதும், மிக நீண்ட கால இடைவெளி இல்லாத நிலையிலும் வஹிதாவிற்கு மட்டும் இரு வேறு நடிகைகள் ஏனோ? போகட்டும், உருவத்தில் ‘கண்டினியூட்டி’யே அவசியம் இல்லாத நிலையில், அம்மு அபிராமிக்கும் பார்வதிக்கும் இடது கண் புருவத்தில் சிறுவெட்டு ஏனோ? விராஜ் சிங் கோஹில்லின் கண்ணைப் பறிக்கும் ஒளிப்பதிவும் விஷால் பரத்வாஜின் மனதை ஈர்க்கும் இசையும் ஆனந்த் ஜெரால்டின் நறுக்குத் தெரித்தாற்போல் அமைந்த படத்தொகுப்பும் ஏ. ஆர். மோகனின் அழகுற அமைந்த கலை இயக்கமும் இயக்குனர் ரவீந்திரன் ஆர். பிரசாத்தின் பக்கபலம். வெறும் 30 நிமிடங்களே ஓடும் இக்கதை, முழுநீளத் திரைப்படமாக விரிந்திருக்க வாய்ப்புள்ளது. என்றாலும், நிர்ணயித்த வரம்புக்குள் அர்ப்பணிப்பு உணர்வுடன், தொழில் பயத்துடன் அல்ல, அக்கறையுடன் நிறைவாகத் தந்துள்ள ‘இன்மை’ குழுவினர் பாராட்டுக்குரியவர்களே. மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து