மக்களின் சொர்க்கம்; அரசின் தலைவலி

முகப்புக் கட்டுரை நான் பணியில் இருந்தபோது சக பெண் தோழர்கள் வெளிநாடு போவதற்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்பார்கள். அது ஒரு பெரிய நடைமுறை. எல்லா மட்டங்களுக்கும் சென்று, காரண காரியங்கள் ஆராயப்பட்டு, மூன்று மாதம் கேட்டால் இரண்டு மாதம் விடுமுறை தருவார்கள். நாங்கள் சங்கத்தின் மூலம் போய்ப் பேசி, மூன்று மாதங்கள் வாங்கித் தருவோம். இதில் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நிறைய பேர் கனடாவிற்குச் செல்ல விண்ணப்பிப்பார்கள். இதன் பின்னால் உள்ள ரகசியம், பணி ஒய்வு பெற்ற பின்னரே எனக்குத் தெரிந்தது. அங்கே தங்கியிருந்த தோழி ஒருவர், அந்த நாட்டைப் பற்றி, சூழல் பற்றி, ஒழுங்குமுறை பற்றி, அரசு ஆட்சி பற்றியெல்லாம் பேசுவார். கல்வி அங்கே எப்படிச் சிறந்து விளங்குகிறது என்று சொல்வார். Hassle free education என்பார். தற்போது சில வாரங்களாக, கனடா இந்தியா உறவுகள் எப்படி மாறிவிட்டன?! இந்தியாவிற்கான விசா அனுமதி நிறுத்தப்பட்டிருக்கிறது. கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கவும் என்று இந்திய வெளியுறவுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இரு நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவர்கள் (ambassadors) திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். ஏன் இந்த நிலைமை? என்ன நடக்கிறது கனடாவில்? ஒரு பருந்துப் பார்வை பார்க்கலாம். வெளிநாடு அல்லவா? மேலிருந்து பார்த்தால் போதும். கனடா ஒரு சர்வ சுதந்திர ஜனநாயக நாடு என்று தன்னைப் பிரகடணப்படுத்திக் கொண்ட நாடு. மக்களின் உரிமைகளை மதிக்கிறோம் என்று காண்பிக்கும் நாடு. இதற்கு சாட்சியே, அங்கே சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள். அந்த இயக்கத்தின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த சில வாரங்களுக்கு முன் அடையாளம் தெரியாதவர்களால் சுடப்பட்டார். அதில் இந்திய ஏஜென்சிகளுக்குப் பங்கு உள்ளது என்று அதிகாரப் பூர்வமாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தலைவலி ஆரம்பித்தது. தூதுவர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டனர். கடந்த வாரம் டெல்லியில் நடந்த G 20 மாநாட்டில்கூட இரு நாடுகளுக்கும் தனிச் சந்திப்பு (one to one talk) நடைபெறவில்லை என்று தகவல் கிடைக்கிறது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசினார்கள் தவிர, தலைவர்களிடையே சந்திப்பு நடைபெறவில்லை. இதற்கான காரணங்களை ஆராயும் முன்னர், நம் இரு நாடுகளுக்கிடையே தொடர்பு, உறவுகள் எப்படி ஆரம்பித்தன, இருந்தன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால், விக்டோரியா மகாராணியின் குடையின் கீழ் இந்தியா, கனடா போன்ற நாடுகள் இருந்த காலம். “எங்கள் சாம்ராஜ்யத்தில் எங்கு சென்றாலும், இந்தியர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படமாட்டாது; ஆங்கிலேயர்களும் இந்தியர்களும் சம உரிமை பெறுவார்கள்” என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்ததன் பேரில், இங்கிருந்து ஓய்வுபெற்ற ராணுவத்தினர் பலர் கனடாவில் குடியேறினர். ராணுவத்தினர் எனில், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் அதிகம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இப்படித்தான் சீக்கியர்களின் குடியேற்றம் கனடாவில் தொடர்ந்து நடந்தது. பல இந்தியர்களும் குடியேறினார்கள். இந்தியா போன்ற நாடுகள் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்த பின்பு, அவை காமன்வெல்த் நாடுகள் என்ற பெயரில் ஒன்றிணைந்தன. பரஸ்பர ஒற்றுமையும் வணிக ஒப்பந்தங்களும் ஏற்பட்டன. 1949இல் பிரதமர் நேரு, கனடா சென்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்று அழைக்கப்படும் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 1950இல் கொழும்புவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு பல ஒப்பந்தங்களுக்கு வழிகோலியது. விவசாயம் சார்ந்த உணவுப் பொருட்கள், இயந்திரங்கள் சார்ந்த தொழில்நுட்பம் போன்றவற்றில் இந்தியாவுடன் கனடா ஒப்பந்தம் செய்துகொண்டது. தமிழ்நாட்டின் குந்தா நீர் மின்னேற்ற நிலையம், கனடாவின் ஒத்துழைப்புடன் நிறைவேறியது. நன்றாகச் சென்றுகொண்டிருந்த பயணத்தில் 1974இல் பொக்ரான், ப்ரேக் போட்டது. இந்தியா நடத்திய ‘சிரிக்கும் புத்தர்’ அணுசக்தி சோதனையைத் தங்கள் நாட்டு அணு உற்பத்தி சாதனமான CIRUS உலையைக்கொண்டு நடத்தியது, ஒப்பந்த மீறல் என்று கனடா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கிடையே விரிசல்கள் விழத் தொடங்கின. NPT என்று அழைக்கப்படும் அணுசக்தி எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கனடா இந்தியாவைக் கட்டாயப்படுத்தியது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதற்கு இடம் தரவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இரண்டும்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள். “இந்தியா அணுசக்தியின் எதிர்மறை விளைவுகளை ஆதரிப்பதில்லை. எனினும், அந்த ஒப்பந்தத்தின் சில பிரிவுகள், ஒரு சில நாடுகளுக்குப் பாரபட்சம் காட்டுவதாக இருக்கின்றன. எனவே நாங்கள் கையெழுத்திட வாய்ப்பு இல்லை” என்று இந்தியா அறிவித்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, நம் நாட்டின் அணு உற்பத்தி நிலையங்களை, சில குறிப்பிட்ட நாடுகளைக்கொண்ட ஏஜென்சிகள் பார்வையிடலாம். இதை இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை. 1971இல் அன்றைய பிரதமர்கள் இந்திரா காந்தி, பியர் ட்ரூடே (ஜஸ்டின் ட்ரூடேவின் தந்தை) 1985 ஜனவரி ஒரு மோசமான விமான விபத்து நிகழ்ந்தது. கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து டெல்லி வந்துகொண்டிருந்த AI 182 விமானம், வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. விமானத்திலிருந்த 329 பேரும் உயிரிழந்தனர். இதில் கனடா நாட்டினர் அதிகம். அதற்கு முந்தைய ஆண்டில்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டிருந்தார். விபத்திற்குக் காரணம் கனடாவில் இருந்த சீக்கியத் தீவிரவாதிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். நான்கு பேர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்தர்ஜித் சிங் ரேயாத் தண்டிக்கப்பட்டார். இந்த விபத்திற்கு முழுமுதற் காரணமாக, மூளையாகச் செயல்பட்ட, தல்வீந்தர் சிங் பர்மார், தண்டனை நிரூபிக்கப்படாமல் விடுதலையானார். இந்தியாவில் பிறிதொரு நாளில் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்தியாவில் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், கனடாவில் காலிஸ்தான் அமைப்பின் பேரில் சுதந்திரமாக இயங்கி வந்தனர். கனிஷ்கா விமான விபத்திற்கான விதை, கனடாவில்தான் ஊன்றப்பட்டது. கனடாவில் தற்போதைய பிரதமரின் தந்தையின் காலத்திலேயே காலிஸ்தான் அமைப்புகள் இயங்கினாலும் தற்போதைய பிரதமரின் ஆட்சியில் அவர்களின் போராட்டங்கள் அதிகமானது. இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் கனடாவில் சீக்கிய அமைப்புகள் அரசியல் கட்சியாகப் பரிமளித்தன. தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர்கள் ஆன வரலாறும் உண்டு. காலிஸ்தான் ஆதரவு பெற்ற ஜக்மீத் சிங், ட்ருடேவின் அமைச்சரவையில் பங்கு பெற்றார். அவரின் நம்பிக்கைக்கும் ஆளானார். தற்போதைய நிஞ்ஜார் கொலைக்கும் இந்தியாவைக் காரணம் காட்டுவதுகூட, அவருடைய உந்துதலால்தான் என்கின்றார் பழைய கனடா அமைச்சர் உஞ்சால் தோசஞ்ச். கனடாவின் “பேசுவதற்கான உரிமை” காலிஸ்தான் இயக்கங்களுக்குத் துணையாக இருப்பதாகவும், அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். தோசன்ஞ் 2004 – 06 காலத்தில் கனடாவில் அமைச்சராக இருந்தவர். சீக்கியராக இருந்தாலும், காலிஸ்தான் ஆட்களால் தாக்கப்பட்டவர். இதுபோல சாத்வீக சீக்கியர்களுக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் சண்டைகள் நடப்பது சகஜம் என்கிறார் அவர். 2014இல் மோடி பிரதமர் ஆனபோது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, உங்கள் அமைச்சரவையில் இருக்கும் சீக்கியர்களைவிட, இங்கே அதிக அமைச்சர்கள் உண்டு என்று கிண்டலடித்ததும் உண்டு. 2008இல் போடப்பட்ட அணு உற்பத்திசார் ஒப்பந்தம் மூலமாக, இந்தியாவுடனான அமெரிக்கா, கனடா நாடுகளின் உறவு மேம்படத் தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் 2010இல் G 20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டார். 2011ஆம் ஆண்டு கனடாவில் இந்திய ஆண்டாக (Year of India) கொண்டாடப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர். 2015இல் நமது பிரதமர் கனடா செல்ல, 2018இல் கனடா பிரதமர் இந்தியா வர, உறவுகள் மேம்பட்டன. அதே சமயம், கனடா பிரதமரின் மனைவி சோஃபி கிரிகாய்ரே, 2018இல், காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஜஸ்பால் அட்வாலுடன் ஒரு திருமண வரவேற்பில் கலந்துகொண்டதும் கவனிக்கத்தக்கது. தற்போதைய பிரச்சினை வரும் வரை, கனடா – இந்தியா உறவுகள் நல்ல நிலைமையிலேயே இருந்தன. 2023இல் மட்டும் அதற்கு முந்தைய ஆண்டை விட 57% வணிகம் அதிகரித்ததாகவும் கனடாவின் வருமானம் 12 பில்லியன் கனடியன் டாலர் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவிற்கான கனிமங்கள் இறக்குமதியில் கனடா பெரும் பங்கு வகிக்கிறது. சமீபத்திய செய்திகளின்படி, கனடாவின் நட்பு நாடுகள், இந்தியாவுடன் பேசி, கனடா இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளன. கனடா பிரதமரைப் பொறுத்தவரை, அவருக்கு 5 நாடுகள் கொண்ட உளவு அமைப்பின் வழியாக (5 Eyes Allies) கவனிக்கத்தக்க செய்திகள், இந்தியா சம்பந்தமாக வந்துள்ளன என்கிறார். அதேவேளை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இந்தியாவைக் குறித்துப் பேசவும் தயங்குகின்றன. அவர்களுக்கு சீனா காரணமாக, இந்தியாவுடனான சுமூக உறவு நீடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே சமயம், இந்த நிகழ்வு இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? வழக்கமாக வருடம் ஒருமுறை சுழற்சி முறையில் வரும் தலைமைப் பொறுப்பை, ஏதோ உலக நாடுகளே தன்னைத் தேர்ந்தெடுத்து இந்தக் கிரீடத்தைக் கொடுத்ததாகவும் இந்த G 20 மாநாடு தன் இமேஜை வானளவிற்கு உயர்த்தும் என்றும் பேசிய பிரதமருக்கு, அந்த மாநாட்டின் வாசனை போவதற்கு முன், ஒரு G 20 நாட்டுடன் உறவில் சிக்கல் வந்துள்ளது பெரிய பின்னடைவு. இனி கனடாவின் நட்பு நாடுகள், அறிவுரை என்ற பெயரில் இந்தியாவிடம் பேச ஆரம்பிப்பது இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகப் போகலாம் என்ற பதைபதைப்பை ஆளும் அரசுக்குத் தரலாம். இதை எப்படியாவது சமன்படுத்த அரசு முயலலாம். அல்லது வழக்கம்போல ஏதாவது திசைதிருப்பும் நுட்பத்தைக் கையில் எடுக்கலாம். இந்தியாவிற்கு ஆதரவான குரல்கள் அதிகரித்துள்ள நிலையில், வேறு நாடுகளைப் போல பெரியண்ணன் மனோபாவத்துடன் நடக்காமல், கனடாவில் வாழும் இந்தியர்களின் நலனையும் கணக்கில்கொண்டு, பிரச்சினையை இந்தியா தீர்த்து வைக்கும் என்று நம்புவோம்.