கனவில் தொலைந்தவன்

கனவில் தொலைந்தவன்

நூல் விமர்சனம் வகைமை: வரலாற்று நாவல் ஆங்கில மூல நூலின் ஆசிரியர்: கிரண் நகர்க்கர் தமிழாக்கம்: அக்களூர் இரவி வெளியீடு: சாகித்ய அகாதமி பக்கங்கள்: 800 விலை: 1100 ரூபாய்கள் ‘cuckold’ – இதுதான் ஆங்கில மூல நாவலின் தலைப்பு. பெண்மையை அல்லது பெண்ணைக் கொச்சைப்படுத்தும் பொருள் கொண்ட சொல். இது தமிழுக்கு ‘சரி வராது’ என்று தலைப்பை மாற்றிவிட்டதாக எழுதுகிறார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. முதலில் அது அறம்தானா? என்று நண்பர் இரவியிடம் கேள்வி எழுப்பாமல் இந்த மதிப்புரையைத் தொடருவதற்கில்லை. ஏனெனில் கதாநாயகன் ‘கனவில் தொலைவதற்கு’ அந்த இழிசொல்லே காரணமாகி விடுகிறது. இராமாயணத்தில் இத்தகைய இழிசொல்லைத் தாங்காத இராமன் அக்கினியை வென்றுவந்த மனைவிக்கே தண்டனை அளித்தான். தமிழில் கம்பன் அக்கினிப் பரீட்சையோடு இராமாயணத்தை முடித்துக்கொண்டான் அல்லவா? நாவலில் நாயகன் அந்த ‘சொற்குத்தலை’த் தாங்கி மேலெழுகிறான். நாவலும் இராமாயணத்தில் வந்த அதே கதை முடிச்சை இலாகவமாகத் தொட்டுத் தொடங்கும் புனைவழகில் நானும் சற்றுத் தொலைந்து மீண்டேன். அந்த முதல் முப்பது நாற்பது பக்கங்களை இருமுறை படித்தபிறகே நாவலைத் தொடர்ந்தேன். பெண்களும் ‘cuckquean’ ஆக தமக்குள் குமைவார்களே என்று புராணங்கள் இதிகாசங்கள் ஆராயவில்லை அல்லவா? ஆம். இந்தக் கதையின் நாயகன் பெண்கள் விடயத்தில் அப்படித்தானே இருக்கிறான்.. அவன் மட்டுமல்ல; இந்தக் கதையின் அரச குல ஆண்கள் எல்லோருமே அப்படி இருக்கிறார்களே! ஆனாலும் அக்களூர் இரவியின் தலைப்பும் நாவலில் கனக்கச்சிதமாகப் பொருந்தித்தான் போகிறது என்பதைச் சொல்லிவிட்டுத் தொடருவோம். நண்பர் ரவி தொலைத்தொடர்பு இலாகாவில் கணக்கு அதிகாரியாகப் பணிசெய்து ஓய்வு பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்த ரவி வசிப்பது சென்னையில்தான். பத்து நூல்களுக்கு மேல் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நாவல் அவரது மொழியாற்றலின் நுட்பத்திற்குத் தகுந்த சான்று. வரலாற்று நாவல்கள் வரலாற்றின் சிலதுளிகளைப் புனைவாற்றலில் மெருகு சேர்த்துச் சொல்வதுதான். ஆனால் புனைவுச் சுதந்திரம் என்ற பெயரில் வரலாற்றை மனம்போலத் திரித்து எழுதுவது வழக்கமாகிவிட்ட காலத்தில், வரலாற்றின் முனை தேயாது புனைவு முலாம் பூசப்பட்ட நாவல்களைக் காணமுடிந்தால் மிக்க மகிழ்ச்சிதானே. அந்த மகிழ்ச்சியை இந்த நாவல் வாசிப்பு பூரணமாகத் தந்தது. நாவலின் வரலாற்றுக் காலம் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம். ராஜபுதனத்து அரசர் ராணா சங்காவின் (1484 – 1527) காலத்தின் இறுதி ஆண்டுகளில் கதை நடக்கிறது. 1526இல் பாபர் இப்ராஹிம் லோடியை வென்று மொகலாயப் பேரரசைத் தொடங்கி வைக்கிறார். அடுத்து ராணா சங்காவோடு 1527இல் கனுவாவில் நடந்த மோதலில்வெற்றி பெறுகிறார். ராணா சங்காவின் மூத்த மகன் போஜராஜன் என்ற மஹராஜ் குமார். மஹராஜ் குமாரின் மனைவி கிருஷ்ண பக்தையாக அறியப்படுகிற மீரா. இவர்களோடு இன்னும் சில வரலாற்றுப் பாத்திரங்கள். ராணா சங்கா நடத்திய சில யுத்தங்கள் வழியே அவரை ராஜபுதனத்தின் மகத்தான அரசராக வரலாறு நினைவில் வைத்திருக்கிறது.ஆனால் பாபருடன் நடந்த கனுவாப் போர் அடுத்த 250 ஆண்டுகளுக்கு பாரதத்தில் மொகலாயப் பேரரசை இருத்தி வைத்தது. ஒருபுறத்தில் இந்த நாவல் பாபரின் அல்லது வெற்றிபெற்ற சாம்ராஜ்யக் கனவாளனின் கதையாகவும் மறுபுறத்தில் அதே கனவாய் வாழ்ந்து அதே ‘கனவில் தொலைந்துபோன’ மகராஜ் குமாரின் கதையாகவும் இரண்டு மடிப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று மடிப்புகளில் மீராவின் கதை நாவலில் புனைவின் மடிப்பாக அணைந்து கொள்கிறது. மீராவின் கதையைப் பலர் புனைந்திருக்கின்றனர். அவையெல்லாம் மீராவின் பார்வையில் புனைந்த பக்திப் புனைவுகள். இந்த நாவல் மீராவின் கணவனின் பார்வையில் விரியும் புனைவு. மறுக்கப்பட்ட காதலின், நிராகரிக்கப்பட்ட காமத்தின் கதை. பழைய புனைவுகளைக் கடந்துவிடாமல் புதிய புனைவை இருத்திவைக்கும் இலாவகத்தில் நாவலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மீராவைப் பின்நவீனமாக வாசிக்கும் இரசனையில் வாசகனாக நான் தொலைந்து மீண்டெழுந்தேன். ஏறத்தாழ நான்கு மாத காலம் வாசிப்பில் என்னோடு நெல்லைக்கும் சென்னைக்குமாக இந்த 800 பக்கப் புத்தகமும் பயணம் செய்தது. எனது பல்வேறு சொந்த மற்றும் இலக்கியப் பணிகளினால் வந்த இடைவெளிகளில் வாசிப்பு தள்ளிப்போன யதார்த்த நிலை தவிர, நாவலில் வந்த மீராவின் கதையும் என் வாசிப்பில் இடைவெளியை வேண்டிக்கொண்டே வந்தது. நாவலின் பல பக்கங்கள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்ட பிறகும் அவற்றின் வாசிப்பு பூரணம் ஆகிவிடவில்லை என்றுதான் சொல்வேன். அரசகுடும்பத்தின் வாரிசுச் சண்டைகள் பற்றி பல நவீனங்கள் ரசனையான கதைகளைத் தந்திருக்கின்றன. இந்த நாவலும் தன் கதை நகர்வை சகோதரச் சண்டையில் சாமர்த்தியமாக வைத்துக்கொண்டது. ஆனால் நாவல் அதைப் பற்றியதல்ல. எதிரியைச் சந்திப்பதென்பது, ‘இம்’மென்றவுடன் நேருக்கு நேர் நின்று கத்தி உருவிச் சண்டையிடுவதும் உயிரைத் திருணமாக எண்ணி வெற்றி அல்லது வீரச் சாவு என்ற முரட்டு முடிவுகள் தவிர்த்த மற்றெல்லாம் கோழைத்தனமென யோசிப்பதுமான இராஜபுதனத்து வீரர்களிடையே நவீன ஆயுதத் தொழில்நுட்பங்களை, கொரில்லா யுத்த முறைகளை, தேவையேற்படும்போதெல்லாம் பின்வாங்கித் தப்பிக்கும் உத்திகளை உபதேசிக்கும் மகாராஜ் குமார் என்ற நவீன போர் சிந்தனையாளன் என்னாவான்? 16ஆம் நூற்றாண்டில் யுத்த முறைகள் நவீனமாகிவிட்டன. போர் உத்திகளில் மாற்றங்கள் வந்திருந்தன. இந்த நவீன மாற்றங்கள் பழைய யுத்த பாணிகளில் நிலையான நம்பிக்கை பெற்றிருந்த பாரத நாட்டின், குறிப்பாக வட மேற்கில் அந்நிய எதிரிகள் அடிக்கடி ஊடுருவும் ராஜபுதனத்தின் வீரர்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன. போர்கள் என்பவை எதிரி நாட்டைக் கொள்ளையிட, பெண்களைச் சூறையாட என்பதெல்லாம் போய், பேரரசுக் கனவுகள் வந்திருந்தன. அதுவும் அந்நியர், நிலையான இருப்புக்காக வடமேற்கிலிருந்து பீரங்கிகள், மாட்ச் லாக் துப்பாக்கிகள் என்று நவீன ஆயுதங்களோடு வந்து மோதியபோது மிகப்பெரிய படைகள் நிலைகுலைந்தன. யுத்தம் எங்கு யாருக்கிடையே நடந்தாலும் அதற்கான நிதிக்கடனை அளித்து லேவாதேவி செய்யும் வணிகத் தந்திரங்கள் அறிமுகமாகி இருந்ததை நாவலின் ஆரம்பப் பக்கங்கள் சொல்கின்றன. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளில் இவர்களே முதலாளியத்தின், ஆயுத வியாபாரத்தின் ஆரம்பமாக இருக்கப்போவதின் எளிய அறிமுகத்தை நாவல் சொல்கிறது. நாவல் பாதி நகர்ந்த பிறகுதான் நாவலில் பாபர் வருகிறார். அவர் எழுதிவைத்திருக்கும் (பின்னாளில் ‘பாபர் நாமாவின்’) குறிப்புகள் வழியாக இந்த ஆப்கானிய அந்நியன் நாவலில் அறிமுகமாகிற புனைவழகு, வாசகனைத் திடீரென்று புதுப்பிக்கிறது. கடல் வழியாகப் போர்ச்சுக்கீசியன் என்ற வணிகன் கடைவிரித்தது மட்டுமல்லாமல், மேலைக் கடல் வழி செல்லும் கப்பல்காரர்களிடம் வரி தண்டல் செய்து அச்சமூட்டுகிற ஆரம்பத்தையும் நாவல் கோடி காட்டுகிறது. எடுத்ததற்கெல்லாம் சண்டை பிடிக்கிற பேராசைக் கூட்டத்தை அவர்கள் புரியத் தொடங்கிவிட்டார்கள். இன்னொரு செய்தி முக்கியமானது. மொகலாயர் வருகைக்கு முன்னர் முஸ்லீம் சுல்தான்களுக்கும் இந்து மன்னர்களுக்கும் பிணக்குகள் இருந்தாலும் சில இணக்கங்களும் இருந்துவந்தன. டில்லி சுல்தானியம் என்பது தங்கள் தலைமேல் கத்தி என்பதை உணர்ந்திருந்தார்கள் என்பதும் இந்து மன்னர்கள் படைகளில் கணிசமான முஸ்லீம் வீரர்கள் இருந்தனர் என்பதும் நமக்கு வியப்பைத் தருகிறது. மதம் வேறு; பிரதேசம் வேறு என்ற புரிதல் இடைவெளி இருந்திருக்கிறது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் அரச அதிகாரத்தில் பெண்களின் நிர்க்கதியான நிலையை, அவர்களைப் படுக்கைக்கு இழுத்துப்போகும் கேட்பாரற்ற யதார்த்தத்தைச் சொல்கின்றன. இந்தப் பெண்களின் நடுவில் மேர்த்தாவின் இளவரசி மகராஜ் குமாரின் மனைவியாக வருகிறாள். தான் கிருஷ்ணனின் காதலி என்று முதல் நாள் இரவிலேயே மகராஜ் குமாரின் காதலை, காமத்தை நொறுக்கிப் போட்டுவிடுகிறாள். பொது இடத்தில் பாடுகிறாள்; நடனமாடுகிறாள்; இளந்துறவியாகிறாள். ஆனால் இவளுக்குள்ளும் மகராஜ் தன் கணவன் என்ற உடைமைத்துவம் பொங்கி வழிகிறது. அவனது சுதந்திரத்தில் தலையிடுகிறாள். மாறிவரும் அரசியலில், அரியணைப் போட்டியில் கணவனுக்கோ சொந்த நாட்டிற்கோ துணை நிற்காது கண்ணண் பக்தியோடு கரைந்துபோகிறாள். நாவலில் வரும் மற்ற பெண்களான கௌசல்யா, சுனேரியா, சுகந்தா, லீலாவதி எல்லாருமே மகராஜ் குமாரின் வாழ்க்கையில் வந்துபோவது காமம் தோய்ந்தே சொல்லப்படுகிறது. கௌசல்யா தனித்து நிற்கும் பாத்திரம். கௌசல்யா, மகராஜ் குமாரின் ‘சகலமும்’. ஆனால் மங்கள் சிம்மனின் தாய். இந்த மூன்று பாத்திரங்களின் உறவுகள் தாண்டி பாத்திரங்களின் வார்ப்பில் கௌசல்யாவும் மங்களும் மகராஜ் குமாரைப் பின்னால் தள்ளிவிட்டார்கள். சுனேரியாவும் சுகந்தாவும் பரிதாபம் கொள்ள வைப்பவர்கள். நாவலின் போக்கில் எந்த பாதிப்பையும் அவர்கள் தரவில்லை. நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நாவல் முடியும் முன்பு நம்மிடம் விடைபெற்றுவிடுகிறார்கள். மகராஜ் குமார் தனது குற்ற உணர்வுகளில் மூழ்கியிருக்கும்போதும் கழிவிரக்கத்தில் மிதக்கும்போதும் தானே கதை சொல்லி ஆகிவிடுகிறான். தன்னைக் குறித்தும் நாட்டைக் குறித்தும் தனது செயல்களைக் குறித்த பிறர் விமர்சனங்களின்போதும் தன் கனவுகளில் தொலைந்து போகிற தருணங்களிலும் பெரும்பாலும் அவனும் சிலபோது கதாசிரியருமாக இணைந்தே வாசகரிடம் கதை சொல்கின்றனர். அவனே சொல்லியிருக்கலாம்; எதற்கு ஆசிரியர் வரவேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆணுறுப்பு சேதிக்கப்பட்டு அரண்மனைகளில் உலாவரும் ஹிஜிராக்களின் கதை பரிதாபமும் வன்மமுமாகச் சொல்லப்படுகிறது. மகராஜ் குமார் யாரின் பிம்பம்? திறமைகள் இருந்தும் அங்கீகாரம் கிடைக்காதவர்களின் பிம்பமா? ஏதோ ஒரு தருணத்தில் கிடைக்கும் வரவேற்பைத் தக்கவைக்கும் திறமை இல்லாதவர்களின் குறியீடா? அவன் தன் கனவில் தொலைந்து போனதுமில்லாமல் தன்னைச் சார்ந்த எல்லோரையும் தொலைத்துவிட்டானே! கனவில் தொலைந்தவன் கதையில் வாழ்கிறான்.அக்களூர் ரவிக்குப் பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது

காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது

முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்களின் காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்கள் பாண்டியர்¸ சேரர் மற்றும் பல்லவர் காலச் செப்பேடுகள் குறித்து மூன்று நூல்களையும் வடகரை, பாதாளி, மதாம் உள்ளிட்ட படைப்புகளையும் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களுடன் இணைந்து வந்தவாசிப் போர் மற்றும் கம்பலை முதல் என்ற வரலாற்றுக் கட்டுரை  நூல்களையும் தந்துள்ளார். முனைவர்.மு.ராஜேந்திரன் அவர்களை ஆனந்த ரங்கப்பிள்ளையின் தினப்படி சேதிக் குறிப்பு என்ற மகத்தான பதிப்பு முயற்சியின் பதிப்பாசிரியர்களில் ஒருவராக அறிந்துகொண்ட தருணத்தில்¸ அவரது 1801 நாவலை வாசித்தேன். தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டில் முடிவுக்கு வந்த எல்லாவிதமான சுதந்திர முயற்சிகளையும் அதாவது குறிப்பாக, தென் தமிழகத்தில் சென்ற 18ஆம் நூற்றாண்டின் இறுதி இரு ஆண்டுகளில் மையம் கொண்டிருந்த புரட்சிகரப் போராட்டங்களின் முடிவுக் காலத்தை இத்தனை விரிவாகப் புனைவாக்கம் செய்த முயற்சி இதற்கு முன்பு எனக்குத் தெரிந்து இல்லை. ‘1857இல் நடந்த சிப்பாய்க் கலகத்தை இந்திய அரசு இந்தியாவின் முதல் சுதந்திரக் போர் என ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. அப்படிப் பார்த்தால் டெல்லி சிப்பாய்க் கலகம் நடப்பதற்கு ஐம்பத்து ஓரு வருடங்களுக்கு முன்பே 1806இல் வேலூர்ப் புரட்சி நடந்தது. அதுவும் சிப்பாய்களால் நடத்தப்பட்டதுதான். இந்தியா போன்ற பெரும் ஜனநாயக நாட்டில் மக்களின் விடுதலைக்காகச் சிப்பாய்கள் போராடினர் என்று பெருமையுடன் குறிப்பது ஜனநாயக மாண்பிற்கு இழுக்கு. மக்கள் புரட்சியே ஜனநாயகத்தில் மதிப்புமிக்கது. சீருடை அணிந்து மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, சம்பளம் கொடுப்போரை எதிர்ப்பது எந்த நிலையிலும் விடுதலைப் போராட்டம் ஆகாது. மருது சகோதரர்கள் தலைமையில் நடந்த தென்னிந்தியப் புரட்சியை முதல் சுதந்திரப்போராக அறிவிக்க வேண்டும்’ என்று தென்னிந்தியப் புரட்சி என்ற நூலை வெளியிட்டுள்ள வரலாற்று ஆய்வாளர் திரு.ராஜய்யன் குறிப்பிட்டுள்ளதை 1801 நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் நாவலாசிரியர் இராஜேந்திரன். 1801 நாவலும் அதன் தொடர்ச்சியான காலா பாணி நாவலும் தமிழ்நாட்டின் மகத்தான புரட்சிகர விடுதலைப்போரின் வரலாற்றையும் அதன் பின்விளைவுகளையும் பேசுபவை. 1801 நாவல், 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சாகித்ய அகாதமி விருதுக்கு இறுதிவரை போட்டியில் இருந்தது. அந்த நாவலின் தொடர்ச்சியாக அவர் எழுதிய காலா பாணி நாவலுக்குத்தான் இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. 1799 -1801 புரட்சியின் அடுத்த கட்டத்தைச் சொல்லுகிற நாவல்தான் காலா பாணி. அந்த வகையில் தகுதிமிக்க நாவலுக்கே விருது கிடைத்திருக்கிறது. வரலாற்று நாவல் என்பது வெறும் சாகசக் கதைகள், போர்க்கள வருணனைகள் என்பதாக மட்டுமே அறியப்பட்டிருக்கிற தமிழ்ச் சூழலில், தென் தமிழகத்தில் நடந்த மகத்தான காளையார் கோவில் போரின் முடிவில் வெள்ளையர்களிடம் கைதிகளாகி நாடுகடத்தப்பட்டவர்களின் கதையைச் சொல்கிற காலா பாணி நாவல் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. விருது பெற்ற காலா பாணி நாவலையும், விருதாளர் மு.இராஜேந்திரன் அவர்களையும் சுவடு இதழின் சார்பிலும் சுவடு பதிப்பகத்தின் சார்பிலும் பாராட்டி மகிழ்கிறேன்.