மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7
8. அம்பையைக் கொன்ற பீஷ்மர் விசித்திரவீரியன் சார்பில் காசி இளவரசிகள் சுயம்வரத்தில் பங்கேற்க பீஷ்மர் சென்றார் என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம். மகாபாரதக் காலத்தில் பல திருமண முறைகள் அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைகளாக இருந்தன. அதில் ஒன்றுதான் ‘ராட்சதத் திருமண முறை’ என்பதாகும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண், தன்னுடைய போட்டியாளர்கள் அனைவரையும் யுத்தம் செய்து தோற்கடித்து, பலவந்தமாகக் கவர்ந்துகொண்டு போய்த் திருமணம் செய்துகொள்ளும் முறைக்குத்தான் ‘ராட்சதத் திருமண முறை’ என்று பெயர். சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைவரும் பீஷ்மரின் வருகையின் நோக்கம் பற்றிப் புரியாமல் குழம்பிப்போய் நின்றனர். சுயம்வர மண்டபத்திற்குள் வந்த பீஷ்மர், திருமண விருப்பத்தின் பேரில் கூடியிருந்த மன்னர்களையும் இளவரசர்களையும் பார்த்து, “நான் காசி இளவரசிகள் மூவரையும் கவர்ந்து போகிறேன். உங்களில் அதை ஆட்சேபிக்கும் இளவரசர்கள் யாரேனும் இருந்தால், என்னுடன் போர்புரிந்து என்னைத் தடுத்துக் கொள்ளுங்கள்” என்று கர்ஜித்தபடி தன் வில் வளைத்து நாணேற்றி யுத்தத்திற்குத் தயாரானார். அவர் கர்ஜனையைக் கேட்டதும் குழுமி இருந்த இளவரசர்களில் ஒருவனைத் தவிர, மற்ற அனைவரும் அவருடன் யுத்தம் செய்யப் பயந்து ஒதுங்கிக்கொண்டனர். சால்வன் என்ற இளவரசன் மட்டும் பீஷ்மரோடு யுத்தம் புரிய முன்வந்தான். அதற்குக் காரணம், மூன்று இளவரசிகளில் மூத்தவளான அம்பையும் அவனும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். சுயம்வரம் நடந்திருந்தால் அம்பை சால்வனின் கழுத்தில்தான் மாலையைப் போட்டு தன்னுடைய கணவனாக வரித்து இருப்பாள். பீஷ்மரின் செயலால் அதிர்ச்சியுற்ற சுத்தவீரனான சால்வன், அம்பையைத் தீவிரமாகக் காதலித்து வந்ததால், பீஷ்மரின் புகழ் பற்றியும் வீரம் பற்றியும் கவலைகொள்ளாமல் பீஷ்மருடன் கடும் யுத்தம் செய்தான். ஆனால் நீண்ட யுத்தத்திற்குப் பின் தோற்றுப்போய், மனமுடைந்து யுத்த களத்தை விட்டு விலகினான். ராட்சதத் திருமண முறையில், ‘கவர்ந்து செல்லப்படும்’ கன்னியரின் அபிப்பிராயத்தையோ விருப்பத்தையோ கேட்கும் வழக்கமில்லை. நிபந்தனை விதித்துத் திருமணத்திற்கு உடன்பட்ட கங்காதேவியைப் பார்த்த நாம், விருப்பு வெறுப்பை வெளியே சொல்லக்கூட உரிமையில்லாமல், பலவந்தமாய்த் தேரில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட கன்னியரையும் பார்க்கிறோம். பீஷ்மரின் இந்த நடவடிக்கை முழுவதும், திருமணம் பற்றி மகாபாரதக் காலத்தில் வழக்கில் இருந்த சட்ட நியதிகளைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. எது எப்படியாயினும், ‘ராட்சதத் திருமண முறைப்படி’ யார் கவர்ந்து செல்கிறார்களோ, அவர்களேதான் கவர்ந்து சென்ற கன்னியரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வேறு ஒருவருக்கு, அவர்கள் சொந்த சகோதரனாக இருந்தாலும் கன்னிகாதானம் செய்து கொடுத்துத் திருமணம் செய்துகொள்ள வைப்பது என்பது ‘ராட்சதத் திருமண முறைக்கே’ விரோதமான செயல். பலவந்தமாகக் கவர்ந்து செல்லப்பட்ட மூன்று இளவரசிகளும், தங்களைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளவே பீஷ்மர் யுத்தம் செய்து அழைத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டு இருந்தார்கள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் இளவரசிகளாக இருந்தாலும், தங்கள் விருப்பத்தை வெளியில் சொல்ல முடியாதது மட்டுமல்ல, தாங்கள் யாரை மணம் முடிக்கப் போகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது என்பதை இது காட்டுகிறது. இந்த ‘ராட்சதத் திருமண முறையில்’ இளவரசிகள் மூவரும் அஃறிணைப் பொருட்கள் போல நடத்தப்பட்டார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ‘பலமுள்ளவன் விரும்பியதை அடைந்து கொள்ளலாம்’ என்ற மிருக இனவிதி, மகாபாரதக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதியாக இருந்தது என்றாலும் அந்த விதி, நாம் நாகரீக உலகம் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய சமுதாயத்திலும் அங்கீகரிக்கப்படாத விதியாக உள்ளது என்பதை ஊன்றிக் கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். அஸ்தினாபுரம் போன பின்புதான், தங்களை மணக்கப் போவது பீஷ்மரல்ல என்பது இளவரசிகளுக்குத் தெரிந்தது. மேலும், பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரருக்கு, மனைவியராக்கவே தாங்கள் தூக்கி வரப்பட்டிருக்கிறோம் என்பதும் தெரிந்தது. சால்வனின் காதலியான அம்பைக்கு மட்டும் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொள்ள இயலவில்லை. தைரியத்தை வரவழைத்துச் கொண்டு விசித்ரவீரியனிடம் ‘தான் சால்வனை உளமாரக் காதலிப்பதை’ நயமாக எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட விசித்ரவீரியன், வேறொருவரை மனம் விரும்பிக் காதலிக்கும் பெண்ணை, தான் திருமணம் செய்து தன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லிவிட்டான். அதனால் விசித்ரவீரியன் பீஷ்மரிடம் விஷயத்தைச் சொல்லி, அம்பையை சால்வனிடம் அனுப்பி வைத்துவிடும்படி கேட்டுக்கொண்டான். நிலைமையைப் புரிந்துகொண்ட பீஷ்மரும் அம்பையை அவள் விரும்பிய வண்ணமே சால்வனிடம் பாதுகாப்பாய் அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, ‘நான் சத்ரியன், என்னைப் போரில் தோற்கடித்துவிட்டு, வேறொருவன் கவர்ந்து போன பெண்ணை நான் ஏற்றுக்கொள்வது சத்ரியனுக்கும் சத்ரிய தர்மத்திற்கும் கேவலமான இழுக்காகும். எனவே உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் காதலை மறந்துவிட்டு நீ பீஷ்மரிடமே போய்விடு’ என்று அம்பையைத் திரும்பவும் விசித்திரவீரியனிடம் அனுப்பி வைத்துவிட்டான். இதேபோல சால்வனும் விசித்திரவீரியனும் திரும்பத் திரும்ப ஒருவரிடம் இருந்து ஒருவர் அனுப்புவது பலமுறை தொடர்ந்தது . அம்பை மனமுடைந்து போனாள். அதனால் அவள் பீஷ்மரிடமே போனாள். ‘நீங்கள்தானே என்னைக் கவர்ந்து வந்தீர்கள்; இப்போது விசித்திரவீரியனும் சால்வனும் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் கவர்ந்து வந்த சத்திரியகுலத் திலகமான நீங்கள்தான் என்னை மணந்துகொள்ள வேண்டும்’ என்று சொன்னாள். ‘அம்பையே, நான் பிரமச்சாரியாக வாழ்வேன்’ என்று உலகறிய சபதம் செய்தவன். எனவே நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை’ என்று பீஷ்மர் கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டார். என்ன சொல்லியும் யார் சொல்லியும் பீஷ்மர் அம்பையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். அம்பை பல மன்னர்களை அணுகி, தனக்கு நீதி கிடைக்க வழி செய்யும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அவர்கள் அனைவரும் பீஷ்மரின் பெயரைக் கேட்டதும் பயந்து விலகிக்கொண்டார்கள். இறுதியில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமரிடம் போய் அம்பை முறையிட்டாள். சத்ரியர்களை வதம் செய்வதையே தனது புனிதப் பணியாகக் கருதி, சத்ரியர்களை அழித்தொழித்தலில் ஈடுபட்டுவந்த பரசுராமரின் ‘சத்திரிய வதம்’ பற்றிய சபதம், மகாபாரதத்தின் இன்னொரு சுவாரசியமான உபகதை. பரசுராமர் அம்பையின் பொருட்டு பீஷ்மருடன் போரிட்டார். பல நாட்கள் நடந்த அந்த யுத்தம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் அம்பையின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால் பல்வேறு முயற்சிக்குப் பிறகு, சிவபெருமானை வேண்டி நெடுந்தவம் புரிந்து சிவபெருமானைத் தரிசித்து, ‘அடுத்த பிறவியில் பீஷ்மரைக் கொல்லும் வீரனாகப் பிறக்கும்’ வரத்தைக் கேட்டுப்பெற்று, தீக் குண்டத்தில் குதித்து இறந்துபோனாள். அந்த வரத்தின்படி, அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்து, பீஷ்மர் கொல்லப்பட அம்பை பிரதான காரணமானாள். இதில் உள்ள கேள்வியே, இதில் பீஷ்மர் செய்தது பின்னாளில் பிதாமகனாகக் கருதப்பட்டவரின் சரியான செயல்தானா என்பதுதான். அம்பையை விசித்ரவீரியன் மறுதலித்ததிலும் சால்வன் அம்பையை நிராகரித்ததிலும், அவர்களுக்குரிய நியாயம் இருந்தது. ஆனால் அம்பையை ‘ராட்சதத் திருமண முறைப்படி’ கவர்ந்து வந்த பீஷ்மர், சத்திரிய தர்மப்படி நடந்துகொள்ள மறுத்ததாலும், அதனால் அரச குமாரி என்றாலும் நிர்க்கதியாய் விடப்பட்ட அம்பையினால் பீஷ்மரை எதிர்த்துப் போராடி நியாயத்தை நிலைநாட்ட முடியவில்லை என்பதாலும், பீஷ்மர் ஒரு அபலைப் பெண்ணின் காதல் கோட்டையைத் தகர்த்தெறிந்ததுடன் அவளையே மரண வளையத்திற்குள் தள்ளிவிடும் அக்கிரமத்தையும் செய்தார். (வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)