கனவுசீன் கதவில் மாறும் திருவாழியின் காட்சிகள்

கனவுசீன் கதவில் மாறும் திருவாழியின் காட்சிகள்

நூல் அறிமுகம்: சேலம் ராஜா எதையாவது ஓரிரு வார்த்தைகளை எழுதுவதும் பின்பு அழித்துவிடுவதுமாக, திருவாழியை வாசித்ததிலிருந்து மனம் ஓர் உள்ளே வெளியே விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. காரணம் அது வாசக நெஞ்சின் இருண்ட பகுதிகளையும்  தன்னுடைய பொருள் புதைந்த, கருணைமிக்க, எளிய மனங்களின் ஏகபோக அன்பினால் ஒரு வெளிச்சத்தை இழையோட விட்டிருப்பதுதான். இன்றெல்லாரும் நவீன காலத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் பழைமையான உணவு வகைகள், மண்பாண்ட சமையல், இயற்கைமுறை விவசாயம், பசுமை நடை, ஆற்றுக்குளியலென காலத்தில் பின்சென்றவற்றைத் தேடி ஓடுபவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இதுவொரு உணவுச்சங்கிலித் தொடர்போலத்தான். கற்காலத்திலிருந்து தொடங்கி நவீனமயப்பட்டு பிற்பாடு கற்காலத்தை நோக்கியே திரும்புவது. இதுதான் என்றுமே மாற்றமுடியாத நியதியும்கூட. இன்னும் ஒரு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்குமென்பது இப்பொழுது இருக்கும் நமக்குத் தெரியப்போவதில்லை. ஆனால் இந்தக் காலச் சுழற்சியில் நாமும் சிறு துரும்பாகச் சுழன்றுகொண்டிருப்போம் என்பது உண்மை. இதிலுள்ள ஆச்சரியப்படும் ஒருசில உண்மைகள் என்னவென்றால், திடீரென திருவிழாக்கூட்ட நெரிசலில் நாம் தொலைத்துவிடுபவை / விடுபவர்களை இந்தக் காலம் மீண்டும் ஒரு புள்ளியில் நம்மிடமே அல்லது தொலைந்துபோன இடத்திலேயே வீசிச் செல்வதுதான். அப்படியாக, ஒருசிறு நிலத்தில் வாழும் சில மனிதர்களின் பெருவாழ்வே இந்தத் திருவாழி.  இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் சிறு துரும்பில் கால்பகுதிகூட இல்லை. ஆனால் மனிதகுலத்திலிருந்து  எதிர்கொண்டு பார்க்கையில் அவனுடைய வாழ்வென்பது எவ்வளவு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் எத்தனையெத்தனைத் திருப்பங்கள் பொதிந்துகிடப்பதாகவும் இருக்கிறது! திருவாழி என்பது வளர்ந்துவரும் ஒரு சிறு நகரிலுள்ள ஏழு கடைகள் அடங்கிய வணிகக் கட்டிடம். இத்தனைக்கும் அந்தப் பெயர் அதற்கெனப் பிரத்யேகமாக வைக்கப்பட்ட பெயரல்ல. அது அதனுடைய உரிமையாளரின் பெயர். அவர் வசிப்பது வேறொரு ஊராக இருப்பினும் தன்னுடைய மாமியார் வீட்டுவழி கிடைத்த நிலத்தில் அந்த வணிக வளாகத்தை நிறுவுகிறார். பிறகு அதில் கடை வைத்துத் தொழில் செய்து பிழைக்க வரும் மனிதர்களும் அவர்தம் வாழ்வுமே இந்த நாவல் முழுக்க விரியும் பிரதானக் கதைக்களம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் தொடங்கி இரண்டாயிரத்துப் பதினைந்து வரை, உத்தேசமாக நாற்பத்தி ஐந்தாண்டு காலம், பல்வேறு மனிதர்களினுடைய வாழ்வை உள்ளடக்கியது. ஒரு தனி மனிதனின் பாதி ஆயுள்; அதைச் சுணக்கமில்லாது சொல்லி முடிப்பதே ஒரு பெரிய வேலை. ஆனால் இந்த நாவலில் பிரவேசிக்கும் இருபதிற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வியலை அன்போடும் பரிகாசத்தோடும் அதேசமயம் சலிப்பேதும் வந்துவிடாதபடி நாஞ்சிலின் பச்சையான புழங்குமொழியில் ஐந்தாறு வருடப் பார்வையாளனாக விவரித்திருக்கிறார் மீரான் மைதீன்.  காட்சிகளாக விரிவடைகையில், மேற்கிலிருந்து கிழக்காக ஐந்து கடைகளும்  கிழக்கிலிருந்து தெற்காக இரண்டு கடைகளுமாக ஒரு ‘எல்’ வடிவத் தோற்றமுடையது திருவாழி கட்டிடம். பின்புறமாக பொன்னம்மா மனையும் எதிர்ப்புறமாக  கிருஷ்ணனின் டீக்கடையும் அதையொட்டி நீளும் பிள்ளையின் மனையுமாக, ஒரு வட்டாரத்தை உள்ளடக்கியது அவ்விடம். இதில் கிருஷ்ணன் கடையின் பக்கவாட்டில் உள்ள சிமெண்ட் பெஞ்சும் சில டிராக்டர் டயர்களுமே பல முக்கிய முடிவுகளெடுக்கப்படும் இடம். கதையின் தினசரி தொடங்குவது கிருஷ்ணணின் டீக்கடையிலிருந்துதான். திருவாழி கட்டிடம் எழும்பிய புதிதில் ஐந்தாம் எண் கடை பட்டணம் சாயிப்புக்காக ஓட்டல் நடத்தத் தரப்படுகையில், அதில் வேலை செய்தவர்தான் இந்தக் கிருஷ்ணண். அப்போது அவருடன் வேலைபார்த்து மரித்துப்போன மைதீன் கண்ணுவின் மகன் அன்சாரிதான் திருவாழி கட்டிடத்தின் மேற்பார்வையாளன்.  அனைத்துக் கடைகளிலும் மாத வாடகை வசூலிப்பது, வருட ஒப்பந்தப் பத்திரத்தைப் புதுப்பிப்பது, திருவாழி வருகிறார் என்றால் அவரை அழைத்துவர, பின்பு போய் பஸ் வைத்துவிட என்கிற பணி அன்சாரிக்கு. ஓர் இருபத்தைந்து வயதுடைய இளைஞன், அறுபதிலுள்ள கிருஷ்ணண் ஆகிய இருவரைத் தொட்டுதான் தினசரி கதைக்களம் விரியும். உடன் வேலை பார்த்த மைதீன் கண்ணுவின் மகன் என்பதால் தன்னுடைய மகன் போலவே கிருஷ்ணன் பரிகாசம் காட்டுவார். அன்சாரியும் எல்லாருக்கும் இணங்கிப்போகிற குணமுடையவன்தான்.   பட்டணம் சாயிபு, ஓட்டல் நடத்திய காலத்தில் கணவனால் கைவிடப்பட்டு இரு குழந்தைகளோடு சூளாமணி என்கிற  பெண் சாயிபின் கடைக்கு வேலை கேட்டு வருகிறாள். சாயபு யாருக்கும் தவறுதலாகக்கூடத் தீங்கிழைக்காத நபர். வேலையும் தருகிறார். எல்லாம் நல்லபடியாகச் செல்லும்போது சாயிபின் மனைவிக்கு சூளாமணி மீது சந்தேகமெழ, அவளை விளக்குமாற்றால் அடித்துத் தூற்றி, இல்லாத வசவுகளைப் பேசி வெளியே அனுப்பிவிடுகிறாள். அதன்பிறகு தண்ணீர் பிரச்சனையென எதேச்சையாக சாயிபினாலும் ஓட்டலை நடத்தமுடியாமல் போய்விட,  அதிலிருந்து அந்த ஐந்தாம் எண் கடையை எடுத்தவர்களுக்குத் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு இடது கால் முறிய, அந்தக் கடையில் ஏதோவொரு அமானுஷ்யம் இருக்கிறதென ஒரு பேச்சு உலவத்தொடங்குகிறது. ஆறேழு இடது கால்களின் முறிவுக்குப் பிறகு, ஏரியாவில் ஐந்தாம் எண் கடையின் பேச்சுக்கு இறக்கை முளைத்துப் புற்றீசல் கூட்டாமாகி அவ்வூர் கடந்தும் ஐந்தாம் எண் கடையின் கட்டுக்கதைகள் பிரபல்யமடைகின்றன. என்னதான் நாகரீகத்தில் மனிதன் தெளிவான சிந்தனையாளனாக ஆகிவிடினும் உருவமற்றும் இலக்கற்றும் பறந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கதைகள், லேசாக அசைத்துதான் பார்க்கின்றன. நெடுங்காலமாக அங்கேயே திருவாழிக் கட்டடத்தின் ஒவ்வொரு மாறுதல்களையும் பார்த்துவந்த கிருஷ்ணண்கூட, இது முன்பு வேலை பார்த்த சூளாமணியின் சூழ்ச்சியாகத்தான் இருக்குமென நம்பிவிடும் ஆளாகிறார்.  எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனும் திராணி உடையவனாக ஆறேழு இடது கால்களுக்குப்பின் சிலாங்கா என்பவன் வந்து அன்சாரியிடமும் திருவாழியிடமும் பேசி, தாரை தப்பட்டையோடு தடபுடலாக ஐந்தாம் எண் கடையில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையைத் தொடங்குகிறான். கடை தொடங்கிய அன்றே அவனுக்கும் விபத்து நேர்ந்து இடதுகால் முறிகிறது. அக்கடை பற்றிய புற்றீசல் பேச்சுக்கு அது மேலும் பெட்ரோல் ஊற்றியதுபோல ஊரெங்கும் பறந்து பற்றி எரிகிறது. அன்சாரியும் கிருஷ்ணணும் திருவாழியும்கூட, அந்தக் கடையில் ஏதோ மாந்ரீக சக்தி உள்ளதாக நம்பத் தொடங்குகிறார்கள். பின்பு  கிருஷ்ணணின் ஏற்பாட்டால் ஒரு மாந்ரீகன் வருகிறான்; கழிப்பு செய்து சூன்யம் நிவர்த்தியாக்கப்படுகிறது. பிறகு அக்கடைக்கு ஜீனா வருகிறான். இப்படியாக இறந்தகாலம் முதல்  நிகழ்காலம் வரை ஊடாடி ஊடாடி கதைக்களம் விரிகிறது.   முதலாம் எண் கடை பூபாலன் என்பவனுடைய ஜெராக்ஸ் கடை. இரண்டாவதாக பேபி குட்டியின் நகை அடகுக் கடை, மூன்றாவதாக வேலுமயிலின் டிரம்ப்பட், நான்காவது சிந்துவின் பியூட்டி பார்லர், ஆறாவது ராஜகுமார் அண்ணாச்சியின் மளிகைக் கடை, ஏழாவது சலாமின் டெய்லர் கடை. இப்படியாக, பல மனிதர்களுடைய வாழ்க்கைப் பாடுகளைத் தாங்கியிருக்கிறது திருவாழி கட்டிடம். இதிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் பல கதைகள் இருக்கின்றன. இதில் சிந்து, விவாகரத்தான பேரிளம் பருவத்துடையவள். அவளுக்கு அன்சாரி மீது இன்னதென வரையறுக்கவியாலத ஒரு மோகம் இருக்கிறது. அவனுக்கும்தான். ஆனால் அதுவெல்லாம் தூரத்துப் பச்சையின் அளவுதான். வண்டிச்சக்கரம்போலச் சுழலும் இந்தக் காலம், தன்னகத்தே வைத்துக்கொள்ள மனிதன் நினைப்பவற்றைத் தொலைவில் விசிறிவிடுகிறது. தொலைக்க நினைப்பதை அருகிலேயே இருக்குமாரு பார்த்துக்கொள்கிறது. ஆனாலும் மிக விசித்திரமானது. எங்கெங்கோ அலைக்கழிக்க வைத்தபின் அவன் விரும்பியதை அல்லது அவனுக்குச் சேரவேண்டிய ஒன்றை அவனுக்கே இறுதியில் தந்துவிடும் என்பதே நிதர்சனம். ஐந்தாம் எண் கடையின்படி பார்த்தால் இது மாய மந்திர சித்துவிளையாட்டின் கதையாகத் தோன்றும். ஆனால் உண்மை வேறு. மனிதனின் பெருவாழ்வில் அவையெல்லாம் வந்துபோவதும் பலரும் அவற்றைக் கடந்து வருவதும் இயல்புதானே. அப்படி மிக இலகுவாகக் கடந்துவிடும் இடங்கள் அவை. அதன்பிறகு பார்த்தால், மனிதர்கள் தங்களின் இருப்பை இவ்வுலகில் தக்கவைக்கப் படும்பாடுகளே அதிகமாக நிறைந்திருக்கின்றன.   அன்சாரி தொடங்கி அவ்வப்போது பெரிதும் பின் விவரணைகளற்றுத் தொலைந்துபோகும் குச்சான் வரை, எல்லாருக்குப்பின்னும் வாசிப்பவர்கள் யாரும் எதிர்பாராத துயரமான நிகழ்வுகள் ஆலைக்கழிவுகளைப்போலக் குவிந்து கிடக்கின்றன. அதுபோலவே மிக இயல்பாக நம்மோடு ஒட்டிக்கொண்டு வரும் மனிதரிடத்தும் உள்ளுக்குள் பொறாமையும் பகைமையும் நிறைந்திருக்கின்றன என்பது வாழ்வின் அபத்தமான விசித்திரம். இப்படிப் பலவாறான ஏற்ற இறக்கமுள்ள கதை மாந்தர்கள் இருப்பினும், எங்கோ இருந்தபடி எல்லாரின் குணங்களையும் பிரித்து அறிந்து வைத்திருப்பவராக இருக்கிறார் திருவாழி. ஏகபோக சொத்துக்கள் இருந்தும் அதை இவ்வூரிலிருந்தபடியே ஆண்டு அனுபவிக்க மகன்கள் ஒத்துழைக்காத வேதனையே அவரை உருக்குகிறது. அவரைப் பொறுத்தவரை இந்த நிலமும் இங்கிருக்கும் மக்களும்தான் அவருக்கு நகமும் சதையும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிப்போக இஷ்டப்படவில்லை மனது. தனக்குப் பிறகு பிடிமானற்று நிற்கும் அன்சாரி தடுமாறிவிடக்கூடாது; அவனுக்கு ஏதாவது நல்லது செய்து கரையேற்றிவிட வேண்டுமென்கிற எண்ணம் ஒருபுறம் அவரை மேலும் வதைக்கிறது. அதுபோலவே அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை; அதில் பகுதி ஆசைகள் இந்த மீதமுள்ள ஜீவிதத்தைக் கடத்த பொருள் சேர்த்திவைப்பதாக இருப்பதுவே. அதற்குள்ளாக சாதி நிமித்தமும் மதத்தின் நிமித்தமும் ஏழ்மையின் நிமித்தமும் ஒருவன் உயிர்வாழ எவ்வளவோ முட்டுக்கட்டைகள் வந்துவிடுகின்றன. மொத்தமாகச் சொல்லப்போனால் வாழும் இந்தச் சிறிய வாழ்வில் கதைகள் இல்லாத மனிதனுமில்லை; ஆசையில்லாத மனிதனுமில்லை என்பது மட்டுமே உண்மை. ஆனால் அதை அன்போடும் கருணையோடும் முன்கொண்டு செல்வதில்தான் இவ்வுலகின் சக்கரம் இயங்குகிறது. அதன்படி அறத்தின்பால் ஒருவன் நடந்துகொள்ளும்போது அவன் முன்பு இழந்தவற்றை வேறு வடிவிலோ எப்படியோ மீண்டும் இயற்கையின் நியதி அவனிடமே அதை ஒப்படைத்துச் செல்கிறது. அன்சாரியும் பட்டிணம் சாயிபும் கிருஷ்ணணும் சிலாங்கா, மனோகரன் வாத்தியார் போல சுயநலத்தோடில்லாமல் அகமனதோடு உரையாடியபின் நல்லவற்றின் பக்கமே நிற்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் போட்டியான வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் அன்சாரி துவண்டுபோகும்போதெல்லாம் அவனுடைய உம்மாவின் வார்த்தைகள் அவனைத் தேற்றிக்கொண்டுவருபவையாக இருக்கின்றன.   ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடப்பதை எழுதுவது ஓரளவுக்கு சுலபம். ஆனால் இந்த ஏழு கடையின் மனிதர்கள் மட்டுமின்றி இவர்களுக்கு முன் அங்கிருந்தவர்கள், அவர்களின் சுற்றப்பாடுகள் தொடங்கி இடையில் வந்துபோவோர் முதற்கொண்டு அந்நிலத்தின் தகவமைப்பு, இயற்கை,  மலை, மரம் என அப்படியே கண்முன் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் மீரான் மைதீன். அங்குள்ள ஏழு கடைகளை வர்ணித்திருப்பதிலேயே வாசகன் மனதில் காட்சிகள் விரிவடையத் தொடங்கிவிடுகின்றன. அதிலேயே ஒட்டுமொத்தக் கட்டடத்தின் வரைபடமும் மனத்தில் பதிந்துவிடும். மேலும் மைனர் சலீம் கடை சிந்தியாவிற்கும் அண்ணாச்சிக் கடை அகிலனுக்கும் டிரம்பட் கடை பிலிப்பிற்கும் சிந்துவிற்குமென நாவல் முடிந்தபிறகும் பெருங்கதைக்கான கிளைகள் நீண்டிருக்கின்றன. அதுவொரு வாசகப் பார்வைக்கான வெளியாக ஆசிரியர் திறந்துவிட்டிருக்கிறார் போலும்.   சிந்துவின் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பியூட்டி பார்லரை மிக உவமையோடு விவரித்திருப்பார். அதிலொன்றுதான் அழகிய வேலைப்பாடு மிகுந்த உள்அறைக் கதவு. அதை ‘கனவுசீன்’ கதவு எனும் சொல்லாடலில் குறிப்பிட்டிருப்பார். படிக்கும்போது ஒருமாதிரி சிரிப்பு வந்தாலும் பிறகு அதுவொரு பரஸ்பர அடையாளமாக ஒட்டிக்கொள்ளும். ஒட்டுமொத்த நாவலில் சிந்து

கோணூசி என்னும் ஆயுதமும் கோபம் கொண்ட குழந்தை மனமும்

கோணூசி என்னும் ஆயுதமும் கோபம் கொண்ட குழந்தை மனமும்

நூல் விமர்சனம் கதைகள் நம் வாழ்வின் காட்சியாக நம்முன் விரியும்பொழுது ஏற்படும் உணர்வு அலாதியானது. அந்தக் கதைகள் நம் சமூக அமைப்பின் சிக்கல்களையும் முறையற்ற தன்மைகளையும் விளக்குவதாக அமையும்போது மனம் கனத்து, இப்படிப்பட்ட உலகில் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோமே என்கிற குற்றவுணர்வையும் கூடுதலாகத் தருகிறது என்பது உண்மைதான். “என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளின் தவறுகள் என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கின்றன” என்பார் மண்டோ. நம் காலத்தில் நடந்துகொண்டிருக்கிற வன்முறைகள், சாதிப் பாகுபாடுகள், சமுதாயத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், படைப்பு மனத்தினை வெகுவாகப் பாதிக்கின்றன. அந்த பாதிப்பின் வெளிப்பாடாக விளையும் கதைகளாகவே சேதுவின் கதைகள் நம்முன் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நூலுக்கான முன்னுரை என்பது அதை எழுதுபவரின் கருத்தாக மட்டும் நின்றுவிட்டால் அது புதிதாக வாசிக்கிற மனங்களை இடைஞ்சல் செய்துவிடக்கூடும். எழுத்தாளரின் புதிய முயற்சிகளை, அவர் எடுத்துக்கொண்ட கரு சொல்லப்படுகிற கோணத்தை என்று, கதைகளைத் தொட்டும் தொடாமலும் அழகாக அறிமுகம் செய்துவைப்பதுடன். என்னதான் சொல்ல வருகிறது இந்தத் தொகுப்பு என்று தேடுகிற மனநிலையை உருவாக்குகிறது அமிர்தம் சூர்யாவின் முன்னுரை.  வாசகருக்குப் புதிய பாதைகளைத் திறந்து விடுகிறது. அதன் மூலம் தடையின்றிக் கதைகளுக்குள் நுழைய முடிகிறது. சமூகத்தை மாற்றிவிடவும் அல்லது சமூக அவலத்தைக் களைந்துவிடவும் துடிக்கிற படைப்பு மனம், அல்லல்படுகிற மனிதர்களையும் காட்சிகளையும் கூர்ந்து கவனித்துத் தன் எழுத்தில் வெளிப்படுத்தும். அந்த வகையில், தன்னுடைய கதைகளின் மூலமாக, இந்தச் சமூகம் காட்டுகின்ற மனிதர்களையும் அவர்களது வலிகளையும் அவர்களை இந்தச் சமூகம் எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதையும் நம்மிடம் சொல்ல முனைகிறார் சேது. எளிய மக்களின் வாழ்வை, கைவிடப்பட்டவர்களின் வலியை, ஏமாற்றப்பட்டவர்களின் ஆற்றாமையை மட்டுமே கதைகளாக மாற்றுவதற்கு, இந்தச் சமூகத்தின் மீது அக்கறையும் எளிய மனிதர்களின் மீது ஆதுரமும் இருக்க வேண்டும். அந்த இரண்டும் வழிந்தோடும் கதைகளாகவே சேதுவின் கதைகள் உள்ளன. எல்லா விஷயங்களுக்கும் தீர்வு சொல்வதோ அல்லது எழுத்தின் மூலமாக மட்டுமே புதிய உலகை உருவாக்குவதோ இயலாத விஷயம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால், அவருடைய கதைகளை, இது இது இப்படி இப்படி நடந்துகொண்டிருக்கிறது என்கிற விதமாக, ஒரு அன்றாடப் பதிவைப்போல எழுதி வைக்கிறார். அந்தப் பதிவுகள் நமக்குள் கடத்தும் உணர்வுகள் அதிர்ச்சியும் வலியும் நிறைந்ததாக இருக்கின்றன. வாய்ப்புள்ளவர்கள் சிலர் முன்னேறுகிறார்கள், வாய்ப்புக் கிடைக்காதவர்களில் சிலரோ, கிடைத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்க எந்த எல்லைக்கும் போகத் துணிகிறார்கள். எப்போதுமே, இல்லாதவர்கள்தான் எல்லாப் பழிகளுக்கும் ஆளாகி வாழ்வைத் தொலைக்கிறார்கள். எந்தக் கூடுதல் சொற்களும் அறவுரைகளும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் இ.பி.கோ. கதையின் சண்முகம்போல, அன்றாட வாழ்வில் பலரையும் கடந்துதான் போகிறோம் என்பது உணர்த்தப்படும் இடத்தில் நம்முள் எழும் கேவல்தான் அந்தக் கதையின் வெற்றி. பள்ளிகொண்ட பெருமாள் எம்.பி.ஏ. என்ற கதை, தொகுப்பின் முதலாக இருப்பதோடு தொகுப்பை வாசித்த அனைத்து மனங்களிலும் நிலைத்து நிற்கும் புதிய கதையாகவும் உள்ளது. ஒரு தேர்ந்த நிர்வாகவியல் மாணவனாக மாறி, பக்தனையும் கடவுளையும் அவர்கள் இருவருக்கும் நடுவில் நிற்கிற விற்பனைப் பிரதிநிதியையும் நடமாடவிட்டிருக்கும் இந்தக் கதை சிரிப்பையும் ‘அட!’ என்ற ஆச்சரியத்தையும் தவறாமல் தந்து செல்கிறது. புராணங்களும் இதிகாசங்களும் மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்படும்போது, புதிய புரிதல்களும் புதிய கருத்தாக்கங்களும் உருவாவதும் அதன் வழி நின்று இன்றைய நிலையில் தேவையான சமூகக் கருத்தியல்களுடன் அவற்றைப் பேசுவதும் எழுதுவதும் அவசியமாகிறது. அந்த வகையில், நிறம் கதையில், வாழ்வின் எதார்த்தத்தில் நின்று புராணப் பாத்திரத்தின் மனதைப் பேச வைத்திருப்பது மட்டுமல்லாமல் காலந்தோறும் விதந்தோதப்படுகிற ஒரு கதாபாத்திரத்தைக் கேள்விகளுக்குள்ளாக்கி நிறங்களால் கட்டமைக்கப்பட்டதை நிறங்களால் உடைக்கும் நல்ல முயற்சி. இதுபோன்ற புதிய முயற்சிகள் தொடர்ந்தால், இவர் எழுத்தால் எதிர்காலத்தில் இன்னும் மெருகேறுவார் என்றும் நம்பலாம். கற்பக்கிரகம் என்றொரு கதை. அடைப்புக்குறிக்குள் வல்லினம் மிகும் இடம் என்ற சுட்டுதல். எல்லா இடங்களிலும் வல்லினங்கள் மிகுவது இலக்கணப் பிழைதானே?! படித்து முடிக்கும்போது ஏற்படுகிற வலியும் ஆயாசமும் நன்றாகச் சொல்லப்படிருக்கிற கதை என்று தலையாட்ட வைக்கிறது. இந்த உலகம் குறித்துக் கவலைப்படுகிற மனத்துக்குள் இருக்கிற அந்தத் தவிப்பும் தவறுகளைச் சரி செய்துவிடத் துடிக்கிற துடிப்பும் கதையில் சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது. வாசித்து முடித்தபின் கண்மூடி அமர வைத்துவிடுகிறது, கதையைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம். கோணநிலா, கிரகப்பிரவேஷம் என்ற கதைகளின் வழியாக இந்தச் சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பகடிக்குள்ளாக்கும் சேதுவை, தாராளமாகப் பாராட்டலாம். இந்தத் தன்னலம் மிகுந்த அரசியலில்தான் வெள்ளைச்சாமியைப் போல் எத்தனை அத்திக்குளவிகள்?! இந்தக் கதையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் கரு வழக்கமானதுதான் என்றாலும் எழுதப்பட்டிருக்கும் விதம் வித்தியாசமாக உள்ளது. கதையினூடாக வருகிற அத்திக்குளவியின் வாழ்வின் கதை, சமூக எதார்த்தத்தைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. இதைப்போலவே குருதியின் விழையம் என்ற கதை எழுதப்பட்டிருக்கும் விதத்தில் சிறப்பாக உள்ளது. வித்தியாசமான முறைகளில் கதைகளைச் சொல்லி, எடுத்துக்கொள்ளும் கரு வழமையானதாக இருந்தாலும் கதை சொல்லலின் மூலம் அதைப் புதியதாக மாற்றும் திறன் இருக்கிறது சேதுவின் எழுத்துக்கு. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு புதிய முயற்சியாகச் செய்து பார்த்திருக்கிறார். வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு சில தலைப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்பதும் பல கதைகளை இன்னும்கூட விரிவாக எழுதியிருக்கலாம் என்பதும் சின்ன விமர்சனம். முதல் தொகுப்பு என்ற வகையில் இந்த விமர்சனங்கள் மட்டுமே போதும். அடுத்தடுத்த தொகுப்புகளில் இன்னும் சிறப்பான கதைகளுடன் அவர் மிளிர்வார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் மனத்தில் தோன்றிய எண்ணங்களைச் சேகரித்து, சொற்களைக் கூட்டிக் கோணிப்பையில் சேகரித்துத் தைக்கும் முயற்சி என்கிறார் கோணூசியை. வாசித்து முடிக்கும்போதோ, கத்தியால் குத்த முடியாத கையாலாகாத நிலையிலோ கோபம் கொண்ட குழந்தையொன்று கையிலிருக்கும் கோணூசியால் எதிராளியைக் குத்துவதைப்போல், சின்ன சின்ன ஆறுதல்களைத் தேடிக்கொள்கிற கதைகள் நிறைந்த தொகுப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. அழகியலும் மொழியழகும் வாசிக்க மயக்கும் நடையழகும் கதைகளுக்குத் தேவையென்றாலும்கூட, இந்தச் சமூகத்தின் புரையோடிப்போன புண்களைக் கழுவி மருந்திடுகிற எண்ணவோட்டம் கொண்ட கதைகளும் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது. அந்த வகையில், இப்போதுதான் தொடங்கியிருக்கும் சேது இன்னுமின்னும் சிறப்பாக எழுதுவார். சமூகத்துக்குப் பயனுள்ள எழுத்துகளைத் தொடர்ந்து தருவார் என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்தத் தொகுப்பு. கோணூசி தன் பணியைச் செவ்வனே செய்யும். சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு சேதுவை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இப்படியான எழுதுவினைமை கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளரை நமக்கும் அறிமுகம் செய்துள்ளது. சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலின் உயரிய அங்கீகாரத்தில் ஒன்றாகத் திகழும் ‘சௌமா’ இலக்கிய விருதை இந்த ஆண்டில் கோணூசி சிறுகதைத் தொகுப்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சின் இலக்கிய மனம்

மார்க்சின் இலக்கிய மனம்

நூலறிமுகம் காரல் மார்க்ஸ் அன்பும் இருதயமும் ஒன்று சேர்ந்த மனிதர். ஸ்டூவர்ட்மில், பெட்டி, ஜான் பெல்லர்ஸ், பெய்லி, ஆதம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய அரசியல் பொருளாதார நிபுணர்கள், ‘முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வடிவம் அழிவற்றது; இறுதியானது’ என்ற தங்களுடைய கருத்தை எழுதி, மக்களை நம்ப வைத்துவிட்டனர். முதலாளித்துவம் அதனை வரித்துக்கொண்டு சட்டங்களாகவும் வேதங்களாகவும் ஆக்கியது. ‘இதை மாற்ற வேண்டும்; மாற்ற முடியும்’ என்று தனது பகுப்பாய்வின் மூலம் தெரியப்படுத்தியவர் காரல் மார்க்ஸ். அவர் எழுதிய எழுத்துக்கள், வெறும் பொருளியல் தத்துவங்கள் என்றில்லாமல், இலக்கிய வளமும் நயமும் கொண்டவை என்று இந்த நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது. வால்டேர், ஷீல்லர், ரூஸோ, கான்ட் போன்ற முற்போக்காளர்களுடைய கருத்துக்களால் இவரது இல்லம் சூழ்ந்திருந்தது, குழந்தைப் பருவத்தில் ஒரு நல்ல அடிப்படையாக அமைந்திருந்தது காரல் மார்க்சிற்கு.  புரோகிதத்தை வெறுத்த மார்க்ஸின் தந்தை ஹைன்ரிக் மார்க்ஸ், ஓர் அறிஞர்; விடாமுயற்சி உடையவர்; மனச்சாட்சிக்குப் பயந்து நடப்பவர்; மதத்தின் மீது பற்றில்லாதவர். இவரது தாய் ஹென்ரிட்டே ஒரு டச்சுக்கார யூதர். கிறிஸ்தவர்களாகப் பின்னர் மாறினர். சிறு வயது முதலே கவி பாடும் திறன் பெற்றிருந்தார் காரல் மார்க்ஸ். இலத்தீன், கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகள் தெரிந்தவர் அவர். பின்னாளில் ரஷ்ய இலக்கியங்களைக் கற்க, ரஷ்ய மொழியைக் கற்றார். கிரேக்கக் காவியங்களைப்  படித்தார். இவர் பிறந்த ஊரான டிரியருக்கருகிலுள்ள பான் நகரத்தில் படிக்கும்போது, அங்கிருந்த கவிஞர்கள் சங்கத்தில் தனது பெயரைப் பதிவு செய்துகொண்டார். மார்க்சின் குடும்ப நண்பர், ஜென்னியின் தந்தை லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலன் கலைச்சுவை நிரம்பியவர். கிரேக்கக் காவியங்களிலிருந்து, ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலிருந்து, அநேக பாகங்களைப் பாராமல் ஒப்பிப்பதோடு, அழகாக விளக்கவும் செய்வார். இவரது உறவு மார்க்சை இளம் பருவத்திலேயே இலக்கிய உலகிற்கு அழைத்துச் சென்றது. இவர் மார்க்சிற்கு ஹோமர், ஷேக்ஸ்பியர் போன்ற ஆகச்சிறந்த கவிஞர்களை அறிமுகப்படுத்தியதோடு, ஷேக்ஸ்பியரின் வரிகளையும் மார்க்சிற்குப் படித்துக் காண்பித்தார். இத்தகைய சூழல் காரல் மார்க்ஸ்க்கு கவிதை ரசனையைத் தூண்டி, அழகியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. காரல் மார்க்ஸ், தனது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வுக் கட்டுரையை, லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலனுக்கு சமர்ப்பணம் செய்தார். அவ்வப்போது தான் எழுதிவைத்திருந்த சில கவிதைகளைத் தொகுத்து ஒரு கையெழுத்துப் புத்தகமாக ஜென்னிக்கு அனுப்பியுள்ளார் காரல் மார்க்ஸ். ‘கலை ஞானமும் சத்தியமும் சேர்ந்து வாழ்கிற கோயில்’ என்று ஒரு கவிஞனால் வர்ணிக்கப்பட்ட பெர்லின் பல்கலைக்கழகத்தில், அவர் எடுத்துக்கொண்ட பாடங்களில் இலக்கியமும் ஒன்று. படிக்கும் காலத்திலே ஜென்னியை நினைத்து, பல காதல் கவிதைகள் இயற்றியுள்ளார். இலக்கியப் படைப்புகளிலிருந்து சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் தனது தத்துவ ஆளுமையை உயர்த்திக்கொள்வதில் தன்னை வளர்த்துக்கொண்டார். சமுதாயச் செழுமைக்குப் பயன்படாத எந்த இலக்கியமும் இலக்கியம் அல்ல என்பது இவரின் மையக் கருத்து. மக்களுடைய ஆவலைப் பிரதிபலிக்கக் கூடியதாக, மக்களின் எண்ணத்தை உயர்த்துவதற்காக, எதிர்கால வாழ்க்கையை லட்சியப்படுத்திக் காட்டுவதற்காக இலக்கியம் இருக்க வேண்டும் என்று கருதியதால் ‘மூலதனம்’ நூலைக்கூட இலக்கியக் காட்சியும் இலக்கிய நயமும் உடையதாகப் படைத்தார் மார்க்ஸ். பாட்டாளி வர்க்க அரசியலுக்காக இயங்கிய தோழர் மார்க்ஸை, பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கக் கட்சியின் தோழர் போல் லபார்க் லண்டனில் சந்தித்தபோது, மார்க்ஸின் அரசியல் மதிப்போடு அவரது இலக்கிய ஈடுபாட்டையும் தனது நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். ‘காரல் மார்க்ஸிற்கு ஹைனே, கதே பாடல்கள் மனப்பாடம். உரையாடலின்போது அவர் அடிக்கடி பாடல்களை எடுத்துக் கூறுவார்; ஐரோப்பியக் கவிஞர்களின் படைப்புகளை உற்சாகத்தோடு படிப்பார்; ஸ்காட்லாந்து தேசத்துக் கவியின் நையாண்டிக் கவிதைகளையும் வீர காவியங்களையும் தம் புதல்வியர் ஒப்பிக்கும்போதோ பாடும்போதோ மிக மகிழ்ச்சியுடன் அவற்றைக் கேட்பார்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இலக்கிய ரசனையைத் தனக்குரிய தன்னிறைவாகக் கருதாமல், விமர்சனப்பூர்வமாக உள்வாங்கி, உரிய நோக்கத்திற்கு ஜனநாயகப்பூர்வமாகப் பயன்படுத்தினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அதிக ஈடுபாடு கொண்ட மார்க்ஸ், அவற்றை மூலதனம் என்ற தன் படைப்பில் திறம்படக் கையாண்டார். ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மூலதனத்தில் பல இடங்களில் பயன்படுத்துகிறார். ‘ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில், நிலப் பிரபுத்துவம் சிதைவதையும் பூர்ஷ்வாக்கள் எழுச்சி பெறுவதையும் சித்தரித்திருக்கிறார்’ என்பது மார்க்சின் கருத்து. ஏதன்ஸ் நகர டிமன் என்ற நாடகத்தில், நாடகக் கதாநாயகன் மூலம் பணம் பற்றி ஒரு ஆழ்ந்த விமர்சனத்தை முன் வைத்ததை, ‘ஏ பாவ ஜென்மமே.. வா! மனித குலத்தின் வேசியே வா! உன் பணியைச் சரியாகச் செய்யவிடுகிறேன்’ என்ற கவிதை வரிகளை விளக்கும்போது, காரல் மார்க்ஸ், ‘பணம் மனிதனது பண்புகள் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. நடக்க முடியாததை நடத்திக் காட்டுகிறது. உண்மையைச் சிதைக்கிறது. மனிதத் தன்மையை மாற்றுகிறது. அது அவனது அந்நியமான திறமையாகும். மனிதனாகச் செய்ய முடியாததை, பணத்தின் மூலம் மனிதன் செய்கிறான். எனக்குப் பிடித்தமான உணவு வேண்டும் என்றால், நான் தபால் வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்றால், பணம் அதனைச் செய்துவிடுகிறது’ என்று எழுதுகிறார். மூலதனம் முதல் தொகுதியில், தென் அமெரிக்கச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றி ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார். ‘450 அடி ஆழத்திலிருந்து, உலோகங்களைத் தோளில் தூக்கிச் சுமந்துவரும் தொழிலாளர்களைப் பற்றி, தம்மளவில் இந்தத் தொழிலாளர்கள் ரொட்டி உண்பதையே விரும்புகிறார்கள். ஆனால் ரொட்டி உண்பதைக் காட்டிலும் குதிரைகள் தின்னும் மொச்சையைத் தின்றால் தொழிலாளர்களின் உழைப்பு சக்தி இன்னும் மேம்பட்டுக் கிடைக்கும் என்று கருதிய சுரங்கத் தொழிலதிபர்கள், தொழிலாளர்களை மொச்சை தின்னக் கட்டாயப்படுத்துகிறார்கள். தொழிலாளர்களின் சொந்த நுகர்வைக்கூட மறுதலிக்கும் முதலாளித்துவம், தனது ஆதிக்கத்தில் தொழிலாளியின் சொந்த நுகர்வு என்பது, மூலதனத்தின் உற்பத்தியிலும் மறு உற்பத்தியிலும் ஒரு காரணியாகிறது’ என்பதை இலக்கிய நயத்தோடு எடுத்துச் சொல்கிறார் கார்ல் மார்க்ஸ். இது போன்ற பதிவுகளை இந்நூலில் பரக்கக் காணலாம். சமுதாய வளர்ச்சி, வாழ்நிலைகளின் சூழலில் இலக்கியத்தைப் பயன்படுத்துகிறார். புதுவுலகப் படைப்பாளியான பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில், சமுதாய மாற்றத்திற்காக மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற, இலக்கியத்தையும் அதனோடு ஒப்பிட்டு அரசியலையும் அயராது கற்போம்; கசடறக் கற்போம்; அதன்படி நிற்போம். இதற்கு ஒரு துளி அளவேனும் பயன்படும் விதத்தில் இந்நூலைப் பழுதற வாசிப்போம். நூல்: மார்க்ஸின் இலக்கிய மனம்ஆசிரியர்:  துரை. சண்முகம்வெளியீடு: கீழடி பதிப்பகம்பக்கங்கள் : 40விலை: ரூபாய் 40தொடர்புக்கு : 9176 587 245

இரண்டாம் வேற்றுமை உருபு

இரண்டாம் வேற்றுமை உருபு

நூல் அறிமுகம் சமூகம், இயற்கை, இலக்கியம் என மூன்றின் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்டுவரும் பறம்பு தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் பங்கு பெற்ற சுமார் ஆயிரம் சிறுகதைகளில் ஆறு நடுவர்கள் மற்றும் சங்கத்தின் இலக்கியப் பிரிவான பாட்டாபிறையின் முன்கள நிர்வாகிகள் பன்னிருவர் உதவியுடனும் தேர்தெடுக்கபட்ட சிறந்த இருபத்தெட்டு சிறுகதைகளின் தொகுப்புதான் இரண்டாம் வேற்றுமை உருபு. முதல் கதையே வாசகனை ஈர்த்து உள்ளுழுத்துக்கொள்கிறது. ‘அம்சவேணியின் ஞாயிற்றுக்கிழமைகள்’ என்ற கதையில் வருவது போன்ற துயரங்களும் சமூக அவலங்களும் நித்தமும் நிறையவே நடக்கின்றன. இந்த சமூகத்தைக் கேட்க நினைக்கும் கேள்விகளையெல்லாம் அம்சவேணியின் மூலம் சாட்டையடியாய்க் கேட்கிறார் எழுத்தாளர் வா.மு கோமு. ‘நொண்டிக் கருப்பு’ எனும் தலைப்பில் உலகநாதன் கருப்பசாமி, மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இருக்கும் உறவையும் உணர்வுகளையும் கிராமத்துச் சூழலையும் சொல்லியிருக்கும் விதம் வெகு அழகு. ‘அம்மாவின் நடனம்’ என்ற தலைப்பில் ஒரு கைம்பெண்ணாகிப்போன அம்மாவின் இருண்ட வாழ்க்கையையும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய மகனோ மகளோ பாதுகாக்கத் தவறியதையும் சிறப்பாச் சொல்லியிருக்கிறார் கோமதி சங்கர். தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திருவிழாக்களில் வட தமிழகத்தின் அடையாளமாக மாறிப்போன திருவிழா எனில் அது திரௌபதி அம்மன் வசந்தப் பெருவிழாதான். அதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில் காட்சிகளை எல்லாம் எழுத்தின் வழி கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். உதிரச்சோறு உண்மையில் வடதமிழகத்தினரின் உற்சாகச் சோறு. இதை எழுதிய அ.மோகனாவுக்குப் பாராட்டுகள். கல்யாணம் ஆகாத கீதாரி பற்றிய கதை ‘பாயும் புலி’. அவனின் மனநிலையையும் காம உணர்வுகளையும் கண்முன்னே கொண்டுவர முயன்றிருக்கிறார் ஆசிரியர் மௌனன் யாத்ரீகா. சம்சாரியின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கும் விதம் அற்புதம். ஒரு திருடன் படும் பாட்டை வெகு அழகாய் ‘களவு’ எனும் தலைப்பில் எழுதியுள்ளார் முத்துச்செல்வன். இப்படி ஒரு கதையைப் படித்தால் திருட நினைப்பவர்கள்கூட திருந்தி வாழ ஆசைப்படுவார்கள். ஒரு சாதாரண கிராமத்து தினக்கூலித் தொழிலாளியின் வாழ்க்கையை, ‘அழிஞ்சைக் காட்டின் கிளிகள்’ கதையில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் சிவக்குமார் முத்தப்பா. வயதான, அதே நேரத்தில் மனதளவில் இளைஞரான முருகேசு இல்ல முருகேஷ் பற்றிய கதை வெகு சுவாரஸ்யம். கதையை மிக நேர்த்தியாகச் சொல்லியுள்ளார் திசு சிவசங்கர். திருப்பதி வாசகன் எழுதிய ‘கங்கா நதி’ கதை நெகிழவைக்கும் கதை. இப்படியும் நடக்குமா என்று மனம் குமைந்து நம்மை நொறுக்கிப் போடும் வலி நிறைந்த கதை இது. தெருவோரங்களில், சிக்னலில், சுங்கச் சாவடிகளில் கையேந்தும் சில குழந்தைகளின் அவலநிலையைக் கண்முன்னே காட்சிப்படுத்தி இருந்தார் விஜி முருகநாதன். சுதந்திர இந்தியாவில் இன்னும்கூடப் பலர் மூன்று வேளையில் ஒருவேளை உணவுகூட இல்லாமல் மாண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை ‘வடகறி’ சிறுகதை மூலம் சொல்லியிருக்கிறார். மனநிலை பாதித்த குழந்தையை வளர்க்க ஒரு பெண் படும் பாடு ஒவ்வொன்றையும் மிகவும் கச்சிதமாக ‘பிள்ளைக் கனியமுதே’ எனும் தலைப்பில் டி.கே.வித்யா கண்ணன் எழுதியுள்ளார். விவசாயப் பின்னணியில் இருக்கும் இளைஞன் படுகிற பாட்டை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மகேஷ் குமார். கதைக்கு செவலை என்ற தலைப்பு ஆகப்பொருத்தம். ஒரு தனியார் அலுவலகத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களையும் அது தொடர்பான விசாரணைகளில் பெண்கள் படும் பாட்டினையும் சமூகம் அதை எவ்வளவு அலட்சியமாகக் கடந்துசெல்கிறது என்பதையும் மிக எதார்த்தமாகயும் துல்லியமாகவும் எழுதி இருக்கிறார் ‘பெண் விழை’ எனும் தலைப்பில் ஹேமா ஜெய். வசதி படைத்த உயர்சாதியினர் தங்களைக் கீழ் சாதியினராகக் காட்டிக்கொண்டு அரசாங்கச் சலுகைகளைப் பெறுவது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை ‘வாழ்வியல் அறம்’ தலைப்பில் கே.சுப்புராஜ்அசத்தலாக எழுதியிருக்கிறார். அதுவும் அந்தப் பின்குறிப்பும் கதையில் வரும் கவிதைகளும் அருமை. காதலியை இழந்த தவிப்பை, வலியை ‘எங்கே என் இதயம் அன்பே’ கதையில் வெகு அற்புதமாகச் சொல்லியிருந்தார் கவிஜி. ஒரு சமமான காதலை வேறு கோணத்தில் சொல்லி இருந்தார் ‘சமன்பாடுகள்’ எனும் தலைப்பில் எம்.சங்கர். ‘பச்சை’ கதையில் ஒரு கிராமத்துப் பையன் நகரத்திற்கு வந்து படும் வாழ்வியல் போராட்டங்களைக் கணகச்சிதமாக எழுதியுள்ளார் சந்துரு மாணிக்கவாசகம். ‘குறிப்புகள்’ கதையில் ஒரு மாற்றுத்திறனாளியும் அவரது குடும்பமும் படும் பாட்டை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் க.மூர்த்தி. நடுத்தர வர்க்கத்தினரின் காதலை மிகச்சரியாக சொல்லி இருந்தார் ‘பூவண்ணம்’ கதையில் கே.எஸ்.சுதாகர். ஒரு சாதாரண மனிதனுக்குப் பேரிடர் காலத்தில் கிடைத்த அனுபவத்தையே கதையாக மிகவும் நேர்த்தியாக எழுதி இருந்தார் கோவார்த்தனா. மலை கிராம மக்களின் வாழ்க்கையைப் ‘வெறியாட்டு’ எனும் தலைப்பில் படம் பிடித்துக் காட்டியிருந்தார் நெய்வேலி பாரதிகுமார். பாலியல் வன்கொடுமைகளையும் அதனால் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் ‘பழியும் பாவமும்’ கதையில் சிறப்பாகச் சொல்லி இருந்தார் ஞா.கலையரசி. மரத்தை மையப்படுத்தி படைக்கப்பட்ட நேர்த்தியான கதை ‘புளிய மரத்தின் சுவை’. மரம் நடச் சொல்லும் அந்த மனிதரே மரத்தை வெட்டினால்தான் வியாபாரம் நடக்கும் என்று கூறுகிறம் அபாரம். தீராத நோய்க்கு ஒரே வழி மரணம்தான் என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக வலியால் சாவதைவிட ஒரேயடியாகப் போய்ச் சேருவது நலம்தானே என்று நமக்கே தோன்றிவிடும் அளவுக்கும் எழுதியிருந்தார் ‘யாறப்பே’ எனும் தலைப்பில் ஜவ்வாது முஸ்தபா.  தனது சொந்த அனுபவங்களையே ‘விளையும் களை’ என்ற கதையாக எழுதியிருக்கிறார் புதுவை அருண்.கோ. முள்ளிவாய்க்கால் துயரத்தையும் அதனூடாகக் காதலையும் ‘பொய்மையும் வாய்மையுடைத்து’ எனும் தலைப்பில் அற்புதமாக எழுதியுள்ளார் சண் தவராஜா. ஒரு பெண்ணின் அவலத்தை வெகு இயல்பாக எழுதி இருக்கிறார் ‘குலசாமி’ எனும் தலைப்பில் எஸ்.மோகன். நம் குல தெய்வங்களை நாம கும்பிட மறந்துவிட்டோம் என்பதை வெகு அழகாக தனது பாணியில் எழுதி இருந்தார் ‘கடவுள் கோட்பாடு’ தலைப்பில் ஏ.ஆர் முருகேசன்.  மொத்தத்தில் இந்தக் கதைகள் அனைத்தும் ஒரு கதம்ப சாதத்தைப் போல மிகவும் சுவையானவை. இரண்டாம் வேற்றுமை உருபு – இன்னொரு உலகின் திறவுகோல்.

பருந்து – நூல் விமர்சனம்

பருந்து – நூல் விமர்சனம்

மனங்களைக் கொத்திப் பறக்கும்  பருந்து வெளித்தோற்றத்திற்கு மனிதன் நாகரீகத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிந்தாலும் அவனது அகமனத்தோடு ஒரு காது வைத்துக் கேட்டோமேயானால் இன்னும் யாரோ ஒருவரின் அரவணைப்புக்காக, தலை கோதலுக்காக ஏங்கும் சிறு குழந்தையாகவே இருக்கிறான். அந்த மனத்தின் முகம், அவனுக்கே நெருங்கிய அல்லது பிரியப்பட்டவர்களன்றி வேறு யாருக்கும் தெரிவதில்லை. அம் மனவெளியங்கும் ஏராளமான நிராசைகளும் ஏக்கங்களும் தவறிய ஒன்றின் குற்ற உணர்ச்சிகளுமே நிரம்பிக் கிடக்கின்றன. நிகழ்காலத்தில் அதில் முடிந்தவற்றை நிகழ்த்திக்கொள்கிறான்; முடியாதவற்றை வேறு ஏதேனும் செயல்களின் மூலமாக நிவர்த்தி செய்ததாக நினைத்து ஆசுவாசமடைந்துகொள்கிறான். பருந்து சிறுகதைத் தொகுப்பு முழுக்க ஆசைகளாலும் கனவுகளாலும் வாழ்வை எதிர்கொள்ளும் எளிய மனிதர்களே நிரம்பியிருக்கிறார்கள். கதைகளை, மனிதர்களின் சுற்றங்களையும் தலையாய பிரச்சனைகளையும் வைத்துக் கட்டமைக்கும்போது சம்பந்தப்பட்ட மனிதனுக்கே முக்கியத்துவம் இருக்கும். அதில் அவனுடைய முக்கியமான பிரச்சனைகள் மையப்பட்டிருக்கும். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அப்படி பெரிய பிரச்சனைகளை மையப்படுத்துபவை அல்ல. ஒன்று நிகழ்வதற்கு முன், நிகழ்ந்த பின் அல்லது நடந்துகொண்டிருக்கும்போது அவனுக்குள் நேர்மறை, எதிர்மறையாகக் கிளை பரப்பும் எண்ண ஓட்டங்களை வெளிச்சமிடும் தொகுப்பாக இருக்கிறது. மனத்தின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதால் உளவியல் ரீதியாக இது நிஜம்தானே என்கிற கருத்தில் வாசகன் உடன்படுவான். மொத்தமாகப் பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் பத்திற்கும் மேற்பட்ட கதைகள் பெண்களை மையப்படுத்தியவை. கையில் சிறு பொருளொன்றை எடுக்கும்போது அதன் தரத்தையும் வடிவமைப்பின் நுணுக்கத்தையும் பெரும்பாலானவர்கள் பார்க்கிறோமெனில் இந்த கதைகள் அந்தப் பொருளுக்கு பின் உழைத்த யாரோ ஒரு கடைநிலை ஊழியனின் பாடுகளை, உளச் சிக்கலைப் பேசுபவை. பல கதைகள் பால்யத்தின் நிராசைகளை வைத்தும் சில கதைகள் சம்சாரி வாழ்வையும் பேசுகின்றன. தள்ளாத வயதில் மகன்களால் கைவிடப்பட்ட கரிச்சான் என்கிற சவரியடிமைக்கு தன்னுடைய முதல் காதலியின் மரணம் அவ்வளவு சோகமாக முடிகிறது ‘கரிச்சான்’ கதையில். ‘உடைமரக்காடும் அவளது வெட்டுக்கத்தியும்’ கதையில் அத் தம்பதிக்கு சொந்த வீடு கனவாகவே கலைகிறது. ‘ஆம்பக்காய்’ கவிதா யாருக்கும் எதற்கும் பயப்பட்டுவிடாமல் நம்மோடு நெஞ்சை நிமிர்த்திச் சுற்றிக்கொண்டிருக்கிறாள். ’நெகிழி கனவு’ இவ்வனைத்திலிருந்தும் மாறுபட்ட கதை. ஒருவன் தன் அன்றாடத்தைக் கூடக் கழிக்க முடியாத சூழலில் எவ்வாறு தடுமாறிப் போகிறான் என்பதை அவனுடைய காலைக்கடனின் வாசனையோடு வாசகன் முடிப்பதாக இருக்கிறது. நாம் பார்க்கும் யாரும் இப்படி ஒரு பேரவஸ்தையை அனுபவிக்கக் கூடாது என ஒவ்வொரு வாசகனும் நினைக்க கூடும். அமுதா ஆர்த்தி விரிக்கும் புனைவுலகு இதுதான் தொடக்கமென்றும் இதுதான் முடிவென்றும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாததாக இருக்கிறது. பல கதை மாந்தர்களுக்குப் பெயர்கூட இல்லை. கொண்டாடுவதற்கும் நிராகரிப்பதற்குமான இடைக்குவியல் இது. அவர்கள் அவர்களாகவே அகமனதிலிருந்து உரையாடத் தொடங்கிவிடுவதால் அடையாளக் குழப்பங்கள் இல்லாமல் போகிறது. ஆஹா ஓஹோவெனப் புகழ்வதற்கும் ஒன்றுமற்றதெனப் புறந்தள்ளுவதற்கும் இடையேயான அகத்தின் உணர்வுக் குவியல்கள் இக்கதைகள். அமுதா நாஞ்சில் நிலத்துக்காரர். ஆகவே கதைகளில் விரியும் நிலம் நாஞ்சிலின் வழக்குமொழியில் இனிக்கிறது. பெரிய சோகத்தை, வலியைத் தராதவை இந்தக் கதைகள். எதிர்பாராத முடிவுகள் இல்லை. ஆனாலும் நெஞ்சப்பரப்பில் உறுத்திக்கொண்டிருக்கும் கசடாகத் தொடர்ந்தபடியே வருபவை. இது இவரின் முதல் தொகுப்பு எனினும் அனைத்துக் கதைகளும் ஆனந்த விகடன், காலச்சுவடு, கணையாழி, அம்ருதா, பேசும் புதிய சகதி ஆகிய இதழ்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றவையே. முதல் தொகுப்பிலேயே எளிய மனங்களை உள்ளிருந்து படித்தாற்போல் ஆணித்தரமாகத் தடம் பதித்திருக்கிறார் ஆசிரியர். அடுத்த தொகுப்பில் இன்னும் அவரிடமிருக்கும் வேறு மனிதர்களை நம்மோடு கட்டவிழ்த்துவிட வாழ்த்துவோம். நூல் : பருந்துவகைமை : சிறுகதைகள்ஆசிரியர் : அமுதா ஆர்த்திவிலை : ரூ. 200எதிர் வெளியீடுதொடர்புக்கு: 99425 11302

ஒரு தேசியக் குடும்பம்

ஒரு தேசியக் குடும்பம்

விடியுமா? நூல் அறிமுகம் 1942. பூர்ணியா மத்தியச் சிறைச்சாலையில் மூன்றாம் வகுப்பு கைதியான (கைதி எண் 1109), முப்பத்தி மூன்று வயது “பூர்ணா” எனும் பீலி பாபுவிற்கு நாளை வைகறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. பீலிக்கு இத்தண்டனை கிடைக்கக் காரணமானவன், நீதிமன்றத்தில் அவனுக்கு எதிராய் சாட்சி சொன்ன அவன் மிகவும் நேசிக்கும் அவனின் அருமைத் தம்பி “நீலு”. பீலு, நீலுவின் பெற்றோர்களும் அதே சிறையில்தான் இருக்கிறார்கள். பூர்ணியா அரசுப்பள்ளியின் முன்னால் தலைமையாசிரியரான அவர்களின் அப்பா “மாஸ்டர் ஸாஹப்” ஸன்யால், சிறையின் முதல் வகுப்பு வார்டில் இருக்கிறார். அம்மா பெண்கள் வார்டில். நீலு இப்போது அவன் பெரியம்மா வீட்டில் தங்கியிருக்கிறான். அண்ணன் பீலு ஒரு காங்கிரஸ் சோஷியலிஸ்ட். தம்பி நீலு ஒரு கம்யூனிஸ்ட். அவர்களின் பெற்றோர் முதிர்ந்த காங்கிரஸ்வாதிகள்; காந்தியை தெய்வமாகத் தொழுபவர்கள். அப்பா ஸன்யால், பீலு, நீலு சிறுவர்களாயிருக்கும்போது தன் தலைமையாசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவர் (அவரின் அந்த முடிவு தவறென்று அவரின் நெருக்கமான உறவினர்கள் சிலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஸன்யால், காங்கிரஸில் சேருவதான தன் முடிவிற்கு தன் மனையிடம் மட்டும்தான் சம்மதம் கேட்கிறார்). பீலுவும், நீலுவும் சிறுவர்களாக இருந்தபோது/வளர்பருவத்தில் காங்கிரஸ் அபிமானிகள்தான். பீலு சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று காந்தியை ஒருமுறை சந்தித்திருக்கிறான். ஆனால் வளர வளர பீலுவிற்கும், நீலுவிற்கும் அவர்களின் அரசியல் நோக்குகளில் மாற்றம் உண்டாகிறது. ஆகஸ்ட் 8, 1942 – பாம்பேயின் “கோவாலியா டேங்க்” மைதானத்தில் காந்தி அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் முழக்கத்தை அறிவிக்கிறார். அதன்பின்பு… பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் வங்க நாவல்களையும், எழுத்தாளர்களையும், அவர்களின் பாணிகளையும் அருமையாக அலசி அவ்வரலாற்றில் ஸதீநாத்தின் ஜாகரி (விடியுமா?) எங்கு அமர்கிறது, அதன் தனித்துவம் என்னென்ன என்பதைப் பிரமாதமான முன்னுரையாகக் கொடுத்திருக்கிறார் ஸரோஜ் பந்தோபாத்யாய. முன்னுரையிலிருந்து…ஸதீநாத் பாதுரியின் ஜாகரி வங்காள அரசியல் நாவல், இலக்கியத்துக்கு ஒரு புதுப் பரிமாணம் கொடுத்துள்ளது. 1942-ம் ஆண்டிலேயே பாரத அரசியல் விழிப்புணர்வின் ஒருமை சிதறி, வேற்றுமைகள் தனித்துவம் பெற்று வளர ஆரம்பித்துவிட்டன. காங்கிரஸ் இசைத்து வந்த கோஷ்டிகான அமைப்பில், சி.எஸ்.பி, அதாவது காங்கிரஸ் ஷோசியலிஸ்ட் பார்ட்டி, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆகியோர் தங்கள் தனி ஸ்வரங்களை மீட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆகஸ்ட் இயக்கத்தின் உசிதத்தைப் பற்றியே காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடும் கருத்து மோதல்கள் எழுந்தன. காங்கிரஸுக்கும் சி.எஸ்.பி.க்கும் இடையே இயக்கத்தின் கதிவிதிகளைப் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஜாகரி-யில் வர்ணிக்கப்படும் மாஸ்டர் ஸாகிப்பின் குடும்பம் அன்றைய அரசியல் சூழலின் ஒரு நுணுக்க ஓவியமாக அமைந்திருக்கிறது. முந்தைய நாள் மாலையிலிருந்து பீலு தூக்கிலிடப்படப் போகும் அடுத்த நாள் விடிகாலை வரையிலான பத்து/பனிரெண்டு மணி நேரங்கள்தான் முழு நாவலுமே. சிறையிலிருக்கும் அம்மா, அப்பா, பீலு, தூக்கிற்குப் பின் அண்ணன் பீலுவின் உடலை வாங்கிச்செல்ல அந்த இரவில் சிறையின் கேட்டருகே காத்திருக்கும் நீலு, ஆகிய நால்வரின் நினைவோடையாக நாவல் விரிகிறது. அருமையான நாவல்! அற்புதமான மொழிபெயர்ப்பு! நிறைவான வாசிப்பின்பம்! சிறிதும் வாசிப்பின் வேகம் குறைக்காத அபாரமான சுவாரஸ்யமான எழுத்து!. நிகழ்வுக்கும் நினைவுகளுக்கும் இயல்பாய் வழுக்கி மாறும் அந்த லாவகம் அபாரம்! முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த நாவலின் தனித்துவமான அந்த உத்தியும், துளியும் செயற்கையற்ற இயல்பான அதன் நடையும், கையாளப்பட்ட விஷயங்களின் புதுமைத் தன்மையும், சமூக அக்கறைகளும், எழுப்பிக்கொள்ளும் வினாக்களின் வழியே இழைந்தோடும் மனிதமும், அக்காலகட்டத்தின் உண்மை பொலியும் யதார்த்தச் சித்திரமும் மனதை வெகுவாக வசீகரித்தன. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் 1942 ஆகஸ்ட் கிராந்தி இயக்கத்தின் (வெள்ளையனே வெளியேறு) கொந்தளிப்பான காலகட்டத்தில், அந்த அரசியல் சூழல் ஒரு தேசியக் குடும்பத்தை எங்கனம் அலைக்கழித்தது என்பதை ஆழமாகப் பேசுகிறது நாவல். நாற்பதுகளின் இந்திய அரசியல் சூழலை நுண்ணி அறிய விரும்பும் இலக்கிய வாசகர்களும், வரலாற்றாய்வில் விருப்பமானவர்களும் தவறவிடக் கூடாத முக்கியமான நாவல் விடியுமா? நாற்பதுகளின் சமூக அரசியல் சூழல் நாவலில் ஆழமாய் அறியக் கிடைக்கிறது. சிறைச்சாலை நடவடிக்கைகளும், அக்காலத்தில் சிறைகளின் இயங்கு முறைகளும், சிறைச்சாலையின் உட்புறக் கட்டமைப்பும், அதிகாரப் படிகளும், கைதிகளின் அன்றாடங்களும், பல்வகைக் கைதிகளின் மனோநிலைகளும் நடவடிக்கைகளும் நாவலில் நுணுக்கமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தன் பதினான்கு வருட சிறை வாசத்திற்குப் பின் ஹஸாரிபாக் ஜெயிலிலிருந்து விடுதலையாகும் ஆங்கிலோ இந்தியன் வில்லியம்ஸ், ஜெயிலில் தான் நட்டு வளர்த்த கொய்யா மரத்தையும், ஜாமூன் மரத்தையும், அசோக மரத்தடியில் தான் கட்டிய மேடையையும் பார்த்து விம்மி விம்மி அழுகிறான். முன்னுரையில் ஸரோஜ் குறிப்பிடுவது போல் விடியுமா?-வின் மூலப்பொருள் கட்சித் தொண்டனல்ல – மனிதன். விடியுமா? – ஸதீநாத் பாதுரிவங்க நாவல்; மூலம்: Jagari 1945தமிழில்: என்.எஸ். ஜகந்நாதன்நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

வாழ்க்கையை உருட்டும் பகடைகள்

வாழ்க்கையை உருட்டும் பகடைகள்

ஒருவன் தானாகவே இருத்தல் என்பது பெரிய விசயம். தான் தானாய் இருத்தல் என்பது ஒருவகை லயித்தல். சூழல் மாறலாம், வாய்ப்புகள் வந்து போகலாம். ஆனால் எப்பொழுதும் தன்னியல்பில் இருந்துகொள்தல் என்பது ஒரு பாதுகாப்பு. அல்லது தன் நிலையைத் தக்கவைத்தல், நியாய அநியாய தர்க்கங்களுக்கு வெளியே நின்று தன் நிலையில் தானாகக் கரைந்துவிடுதல் அது. அந்நிலை அனைவருக்கும் வாய்க்காது. படைப்பாளிகளுக்கு – சித்திரம் வரையும் – செதுக்கும் படைப்பாளிகளுக்கு வாய்க்கலாம். தன் இரசனையை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே லயித்துச் சாகுதல் என்பது ஒரு கவி நிலை. அப்படியாய் கவிஞர்கள் – கவித்துவ மனநிலை கொண்டவர்கள் லயித்துப்போவார்கள். கவித்துவ மன நிலை கொண்ட எல்லோரும் கவிதை எழுதிவிடுவதில்லை. ஆனால், கவிதைகளை ரசித்துவிடுவார்கள். அவர்களுக்கு ‘லயித்தல் மனநிலை’யில் தன்னைத் தக்க வைக்கும் கால அளவு மாறுபடலாம். ஆனால், கவிஞர்களுக்கு அது கைக் கொள்ளும். கவிஞர்கள் கவிதை எழுதலாம், ஓவியம் வரையலாம், புகைப்படம் எடுக்கலாம், சிறுகதை எழுதலாம், நாவல் கூட எழுதலாம். ஆனால் எல்லா இடத்திலயும் தன்னை மீறி ஏதேனும் ஒரு வரியில், ஒரு நிலையில் தன்னை மறந்து ஏதாவது ஒரு நினைவில் லயித்து, தான் கவிஞன் என்ற அடையாளத்தைக் காட்டிவிடுவான். கவிஞர்கள் சிறுகதை எழுதினால் இதைத்தான் தேடிப்பிடிப்பேன் – என்ற ஒற்றை வரிக்கு மேற்சொன்ன இத்தனை வரிகள் எழுத வேண்டியுள்ளது. அமிர்தம் சூர்யா ஒரு நல்ல மேடைப்பேச்சாளர். கணேசகுமாரன் எழுதிய ‘மெனிஞ்சியோமா” வை அவரைப் பேசவிட்டு கேட்கவேண்டும். நல்ல விமர்சகர். இணையதளக் காணொளி வெளியிடுகிறார். இந்த “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” சிறுகதை எழுதியுள்ளார். எல்லாவற்றிலும் மேலாக இவர் ஒரு கவிஞர். சிறுகதைகளைப் படித்துவிட்டு அதன் நுணுக்கங்களை, கதை தவறும் கணங்களை அல்லது கதையின் உச்சங்களைக் குறுக்குவெட்டு செய்து பார்ப்பதை விட, ஒரு சிறுகதைத் தொகுப்பு வாசகனின் மனத்திற்குள் ஏதேனும் பழைய அனுபவத்தை மீட்டெடுக்கச் செய்வதை அல்லது புது அனுபவத்திற்கு அவனைப் பாத்தியப்படுத்துவதைப் பற்றிப் பேசவேண்டும் என்பதே என் கருத்து. ஒரு படைப்பின் நோக்கம் அதுவாகத்தானே இருக்கவேண்டும்?! “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அதைத்தான் செய்கிறது. ஒரே மாதிரியான கதை மாந்தர்கள் அல்லது ஒரே பெயரில் வரும் கதை மாந்தர்கள் ஒரு வித அயற்சியைத் தரும் என்ற நிலைப்பாட்டை அமிர்தம் சூர்யா சுக்குநூறாக உடைக்கிறார். எல்லாக் கதைகளிலும் கிருஷ்ணன் வருகிறான், வியாசர் வருகிறார், சார்வாகன், த்ரௌபதி இப்படி வருகிறார்கள் . படித்து முடித்து விட்டு “RECALLING CUE” குறைவாய் இருக்கும் என்னைப் போன்றோருக்கு ஒரு சவால் இருக்கிறது. சாதிக்குப் பயந்து பெயரை மாற்றிக்கொண்ட ‘ராமண்ணா’ என்ற கிருஷ்ணன்தான் தாமரைக் காட்டைத் தேடி அலைந்து பைத்தியம் ஆகிறான் என்று கதை கட்டிவிடும் சவால் அது. ஒரு கதையில் இருக்கும் கதாபாத்திரம் இன்னொரு கதையில் உள்ள கதாபாத்திரத்தின் வேலையைச் சீர் செய்வது போல். அது சரி, ஒரு கதை இன்னொரு கதையை உண்டாக்கினால்தான் என்ன?! அமிர்தம் சூர்யா உருட்டிவிட்ட ‘சகுனிப் பகடையாய்’ அந்தக் கதை சொல்லும் தொனி எங்கும் அயற்சியை ஏற்படுத்தவில்லை. நிறைய மாதிரிகளை “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” மூலமாக நமக்குத் தருகிறார் அமிர்தம் சூர்யா. ‘மாதிரி’கள் என்பவை இங்கு ஒன்றைப் போல இன்னொன்று என்றும் எடுக்கலாம். உவமை என்று இலக்கிய ஆர்வலர்களாயும் எடுக்கலாம். சில மாதிரிகள்: “தமிழ் சினிமால வர்ற குழந்த நட்சத்திரம் ஷாலினி மாதிரி ஓவர் ஆக்டிங்கா இருந்தாலும் கிருஷ்ணன் ……” “மூளை செவிடான மாதிரி…” “காதலும் கவிதை மாதிரிதான்…” “இரட்டைச் சகோதரர்கள் மாதிரி இருந்தது அந்த வீடு”. கதையின் போக்கைத் துரிதப்படுத்துவது என்பது வார்த்தைகளில் வெளிப்படுவது. உரையாடலில், கதைசொல்லியின் குரலில், இரண்டையும் விட வாசகனின் கற்பனைக்குள் அமர்ந்துகொண்டு, அவனைத் தன் வயப்படுத்தி, கதையைக் காட்சி வடிவில் அரங்கேற்றம் செய்து காண்பிப்பது. புனைவையோ அபுனைவையோ வாசகனோடு ஒன்றச் செய்யும் இந்த வகையான ரசவாதம் என்பது கிட்டத்தட்ட பூக்களை ஒரே நாரில் வைத்துக் கோர்த்துக்கொண்டே வருவதுதான். சில கதைகளில் பூக்கள் முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு விழுகின்றன, சில கதைகளில் கற்பனை செய்த மாதிரியே ஒரு பூ மாலையாக உருப்பெறுகின்றன. ஆனால் அடிப்படை, வாசகனின் மனதிற்குள் காட்சிப்படுத்த எடுக்கப்படும் ப்ரயத்தனம்தான். அமிர்தம் சூர்யாவின் காட்சிப்படுத்துதலில் எந்த விதிகளும் அல்லாது, கட்டுப்பாடுகளற்ற, வாசகனுக்கு எந்த வழிகாட்டுதலுமில்லாத, எந்த வரையறைக்குள்ளும் சிக்கிவிடாத அல்லது சிக்கத்தோன்றாத, இப்படித்தான் என்ற உருவாக்க நுணுக்கங்களுமில்லாத மேலும் தனி பாணி என்ற முத்திரையும் இல்லாது ஒரு நிகழ்வை அப்படியப்படியே வர்ணிக்கிறார். காட்சிப்படுத்துதலை ஓர் எழுத்தாளன் செய்துவிடுவதுதான் செய்ய வந்த வேலையில் பாதி. அது சிறப்பாய் முடிந்துவிட்டால் மீதியை வாசகன் முடித்துக்கொள்வான். “இருளின் முகம் மெல்ல வெளிறும்படி இலையுதிர்க் காலத்தால் வந்த இடைவெளிகளில் ஆதவனின் ஒளிக்கற்றை இறங்கி, புதர் மண்டிய அந்தக் கற்குகை வாசலில் நிரம்பித் ததும்ப ஆரம்பித்தது”. கவிஞர் அமிர்தம் சூர்யா ஒரு சிறுகதையில் இப்படி எழுதியிருக்கிறார். கதையின் போக்கில் களத்தைச் சொல்வதில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”-இல் எந்தச் சிக்கலும் இல்லை. கிருஷ்ணன், சார்வாகன், வியாசர், த்ரௌபதி போன்ற கதாபாத்திரங்கள் போக, காற்றையும் பெரும்பாலான கதைகளில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில், காற்று ஒரு மேகத்தை அழைத்துச்செல்கிறது, போரில் தோல்வி பெற்றவர்களின் தபோவனத்தின் வாசலில் காற்று வறட்சியாய் இருக்கிறது, பூவரசம் பூக்களுடன் கைகலப்பில் காற்று ஈடுபடுகிறது, ஓங்காரச் சிரிப்பைக் காற்று ஒரு குளமாக மாறி, கல் மூலம் அதிர்வு பெறுகிறது, காற்றை மட்டும் சாப்பிட்டு சித்தர் ஆகும் முறையைச் சொல்கிறது, மாம்பழத்தின் வாசனையை இரயில் நிலையத்தில் மூக்கு முன்னால் போட்டு விட்டுச் செல்கிறது ஒரு காற்று, மயானத்தில் அப்பாவின் சமாதி தேடும் ஒருவன் முன் காற்று கனம் கூடி வீசுகிறது. சிறுகதையாளர்களால் காற்றைக் கதைக்குள் கொண்டுவர முடியும். கவிஞர்களால் மட்டும்தான் காற்றை ஒரு வரிக்குள் கொண்டுவரவும் முடியும், ஒரு வரியைக் காற்றுக்குள்ளும் கொண்டுவர முடியும். ஒரு படைப்பு ஏற்படுத்தும் அனுபவம்தான் வாசகனுக்கு முக்கியம். படைப்பை ஆராய வேண்டிய தேவை வாசகனுக்கு இல்லை. அது எழுத்தாளர்களின் வேலை. வாசகன், ஒரு படைப்பிற்குள் தன்னைப் பார்ப்பதும், தன் அனுபவத்தை உணர்வதிலுமே அந்தப் படைப்பு, வாசகனுக்கானது என்று ஆகிறது. அழகியல், எதார்த்த அனுபவங்கள் சொல்லப்படும் விகிதங்களில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” வாசகனுக்கானத் தொகுப்பு. அழகியல் நோக்கில் இந்தப் படைப்பை அணுகுவது தவிர்த்து, விமர்சனப் பார்வையில் எழுதிவிடுவதுதான் இலக்கிய ஆர்வலர்களுக்கான விசயம். படைப்புகளில் “நிறைவுறாத்தன்மை” என்பதும்கூட ஒரு வகையான அழகுதான். ஆனால், வெகுஜனக் கதைகளில் புகுத்தப்படும் “நிறைவுறாத்தன்மை” என்பது, அமிர்தம் சூர்யாவின் மொழியில் சொல்லப்பட வேண்டுமென்றால், சக்கரவியூகத்தில் நுழைந்த அபிமன்யூவின் வீரம் போன்றது. தன் சாதி காரணமாகப் பெயரை மாற்றிக்கொள்ளும் கிருஷணன் ஆகட்டும், சாதி மாறித் திருமணம் முடித்து ஊர் திரும்பும் ஒருவனாகக் கனவு காணுவதாக இருக்கட்டும், அமிர்தம் சூர்யா என்ற ஆகச்சிறந்த ஊடகம் மிகப்பெரிய விசயத்தைச் சொல்லவருகிறது என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் கதை வெகு ஜாக்கிரதையாக அந்தச் சிக்கலில் இருந்து வெளியேறி “சுபம்” போடுகையில் அபிமன்யூ குறி வைக்கப்படுகிறான். அப்பாவைச் சாந்தப்படுத்த சமாதி தேடுபவனுக்கு மனைவி பிரிந்து போயிருக்கிறாள். உயிரோடு இருப்பவளைத் தேடாமல், செத்த ஒருவனைத் தேடி அலையும் ஒருவனது கதையில் “நிறைவுறும் தன்மை” நிராயுதபாணியாய் நிற்கும் அர்ஜூனனைத் தவிக்க விட்டு ஓடும் பரமாத்மாவாய் நிற்கிறது. தன்னிலை அறிக்கையில் இவை எல்லாம் அனுபவங்கள் சார்ந்து புனையப்பட்டவை அல்லது செய்யப்பட்டவை என்ற எழுத்தாளரின் கூற்றோடு கதையைப் படிக்கும்பொழுது எதார்த்தம் வெளிப்படுகிறது. வாழ்வின் வெளி இப்படித்தானே இருக்கிறது?! நிறைவுறாத்தன்மையும் நிறைவுறும் தன்மையும் கிட்டத்தட்ட ஒரு மனநிலைதானே?! எதார்த்தங்கள் சுவாரஸ்யங்களைத் தந்துகொண்டே இருப்பதற்கு அடிப்படை, நாம் நினைப்பது நடக்காமல் இருப்பதும், நாம் நினைக்காதது நடப்பதிலும்தான். வாழ்க்கை நமக்கு உருட்டிவிடும் பகடைகள் எப்பொழுதும் நமக்குச் சாதகமாய் இருப்பதில்லை. அந்தந்த நேரத்து உருட்டல்களை அந்தந்த நேரத்துச் சூழ்நிலைகளில் அந்தந்த நேரத்து மனநிலையில் மனிதர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள். “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அந்தப் பகடைகளை உருட்ட, வந்து விழுந்த சில கதாபாத்திரங்கள்தான். கடவுளைக் கண்டுபிடிப்பதை விட உணர்வது சுவாரஸ்யமானது. “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”ஐ நீங்கள் உணரலாம். பழனிக்குமார், மதுரை.

ஒச்சையிட்டபடி கடந்து போகும் காலம்

ஒச்சையிட்டபடி கடந்து போகும் காலம்

“மாப்ளே ஐயப்பா, நான் பொதுவாத்தான் சொன்னேன். என்னையத்தான் எடுத்துக்கோ. நான் இன்னா நிக்கேன். நாளைக்கு இருப்பேன்னு உறுதியாச் சொல்ல முடியுமா?”– என்று இயல்பான பேச்சினூடே முந்தைய நாளில் சொல்லும் கோயா அடுத்த நாளே கொலையுண்டு கிடக்கிறான். அவனது மரணச் செய்தி, உறக்கம் கலையாத அந்த ஊரில் தீயாகப் பரவுகிறது. ஊரின் பிரதான இடமான ஜங்ஷன் முக்கு கடைவீதிதான் இப்படி எல்லாத் தகவல்களும் உலவும் இடம். கோயாவின் கொலைச் செய்தி பரவியதிலிருந்து ஊரே பரபரப்பான முகத்தைச் சூடிக்கொள்கிறது. இதில் குறிப்பாக, ஊரின் அனைத்துப் பிரச்சனைகளும் கை,கால் முளைத்து சிறகடித்துப் பறக்குமிடம் சாலம்துவின் டீக்கடையாக இருக்கிறது. காவல் துறை வருகிறது. கொலையுண்டவனுக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களென ஒவ்வொருவராக அழைத்துச் சென்று தனது பாணியில் விசாரணையை முடுக்கி விடுகிறது. எப்போதும் அதிகாரம் எளிய மனிதர்கள் மீதுதான் தனது முழு பலத்தையும் காட்டும். இந்த நாவலிலும் அப்படி ஒன்றுமறியாத அப்பாவிகளையே நெருக்குகிறது. இதனால் தவறே செய்யாத பூமணி என்பவன் இறந்து போகிறான், மோசே பைத்தியம் ஆகிறான், ஐயப்பன் ஊரையே காலி செய்துகொண்டு கேரளாவில் தஞ்சமடைகிறார்.  நாவலின் கதைக்களம் ஒரு கொலையின் பின்னணியில் சூடுபிடிக்கத் தொடங்கினாலும் வழமையான த்ரில்லர் கதைகளாக இல்லாமல் அந்த ஊரின் அமைப்பையும், எளிய முறையில் ஜீவிதம் செய்யும் மனிதர்களின் அன்றாடத்தையுமே அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது.  நாவலாசிரியர் மீரான் மைதீன் நாகர்கோவிலைச்சார்ந்தவர். இதற்கு முன்பான இவரது நாவல்களிலும், கதைகளிலும் நாஞ்சில் மொழியைப் பிரத்யேகமாகப் படம்பிடித்துக் காட்டியது போலவே, இந்த நாவலிலும் அம்மொழியைக் கையிலெடுக்க, நழுவியோடும் உயிர் மீனின் லாவகத்தன்மையோடு வாசகனுக்கு விளையாட்டு காட்டியுள்ளார்.  குடும்பத்தைப் பிரிந்து காவல் சங்கக் கட்டிடத்தில் காவலாளியாகப் பணி செய்து வருபவன் கோயா. ஊரில் மட்டுமல்லாது கொஞ்சம் உலக விசயங்களிலும் ஞானமுடையவன். ஒருசிலருக்கு அவனுடைய மேதாவித்தனமான பேச்சுகள் சுவாரஸ்யம் தந்தாலும் ஒரு சிலருக்கு சமயங்களில் அலுப்பூட்டுகிறது. ஆனாலும் யாரோடும் பகைமை இல்லாது இருப்பவன். இரக்க குணம் கொண்டவன். அவனுக்கு ஆற்றங்கரையோரம் குடிசையமைத்து வாழும், இடுப்புக்கு கீழே கால்கள் சூம்பிப்போன மனோரஞ்சிதம் மீது கூடுதல் பிரியம் இருக்கிறது. அடிக்கடி அவளது வீட்டுக்கு இவனுடைய போக்கு கண்டு ஊர் வாய்க்கு வழக்கம்போல கண் காது முளைத்து விடுகிறது. பிறகு அது எப்படி ஒரு கொலைப்பாதகம் வரை நீள்கிறது என்பதே முழு நாவலும்.  சொந்த ஊரிலேயே இருக்கும் காவல் நிலையம் என்றாலும் காவல் நிலையம் என்றதும் அது ஒரு போகக்கூடாத இடமாகவே இன்றளவும் சாமானிய மக்களின் மனதில் தீர்க்கமாகப் பதிந்திருக்கிறது. அதேபோல காவல் துறையின் கிடுக்கிப்பிடிக் கேள்விகளில் கூட்டத்தோடு நின்றிருக்கும் ஒருவன் சிக்கும்போது அதற்குப் பலவாறு கிளை வரைந்து வேர் பாய்ச்சும் கூட்டமாகவும் அதே சாமானியர்களின் மனங்கள் இருக்கிறது. தன்னை விசாரிக்க அழைக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் நிற்காமல் சிறுநீர் கழிக்கும் நெட்டை ஆகட்டும், விசாரணை முடிந்து வெளியே வரும் ஐயப்பனிடம்,  “ரேகை மட்டும் எடுக்கானுவளா…இல்ல கேள்வியும் கேக்கானுவளா “,?-எனும் கோலப்பனுக்கு,  “ரேகையும் எடுத்துட்டு நல்ல முறுவலா ஒரு தோசையும் கொஞ்சோல கெட்டிச் சட்டினியும் தரானுவோ.” ஒரு மாதிரி விரக்தியிலும்,இயலாமையிலும் ஐயப்பன் சொல்லும் போது வாசகன் அடுத்து என்ன நடக்கும் என்ற மனநிலையை மறந்து சட்டென சிரித்து விடும் இடங்களாக இருக்கின்றன. அதுபோல பஷீரும், சரவணனும் பொறியாளர் அன்வரின் ஏமாற்று வேலைகளைப் பகடி செய்யும் இடங்களும், பஷீரின் காதல் கதையும் கொஞ்சம் இறுக்கமான மனதைத் தளர்த்திக் கொள்ளும் இடங்களாகும்.  இவர் கதை சொல்லும் யுக்தி முறை அலாதியானது. உதாரணமாக, தொடக்கத்திலேயே நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் வந்துவிடுகிறார்கள். உள்ளே போகப்போக மீண்டும் மீண்டும் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு காட்சிகளும் தொடங்கும் விதம் சினிமா காட்சிகளைபோல் பல திருப்பங்களைத் தருகின்றன. புறம்போக்கு நிலத்தை பொய் பத்திரம் தயார் செய்து ஊரை ஏமாற்றும் குமாஸ்தா சதாசிவம்தான் கொலைகாரன் என்று வாசிப்பவர்கள் நம்பும் வேலையில் ஆசிரியரின் மாயாஜால எழுத்து வேறொரு பக்கம் கொண்டு போய்விடுகிறது. ஜின்னா, ஐயப்பன், பூமணி, மோசே,மனோரஞ்சிதம், சதாசிவம், நெட்டை, கோலப்பன், பஷீர், சரவணன் என்ற கதாபாத்திரங்களின் வழி தொன்னூறு சதவீதம் கதை நிகழ்ந்தாலும் மொத்தமும் அதிகாரத்திற்கு அடங்கி ஒடுங்கி அஞ்சும்போது, அதற்கு எதிரான இயலாமை வாசகனின் உள்ளளத்திலும் கனல்கிறது. தன் மகன் வயதுடைய நீலன் எஸ் ஐ “உன் அம்மைக்கு மாப்பிள்ளை பாக்க” என்று தன்னுடைய அதிகாரத் திமிரை ஐயப்பனிடம் வெளிப்படுத்தியதிலிருந்து அவ்வார்த்தை ஐயப்பனைத் தூங்கவிடாமல் செய்கிறது. நாட்டில் அதிகாரத்தில் இருந்தாலே போதும் வயது வித்தியாசமின்றி யாரிடமும் நடந்து கொள்ளலாம் என்பதற்கு இப்படி சிலர் இன்றும் சாட்சியாக இருக்கிறார்கள். அந்த ஒற்றைச் சொல் ஐயப்பனைத் துரத்துவதை ஆசிரியர் “கற்பனையில் ஒருவனை சன்னம் சன்னமாகக் கொன்று போடக்கூடிய அளவுக்கு வன்மம் நிறைந்த வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமானவை” என்றெழுதி நீலன் சொன்னது ஐயப்பனிடம் மட்டுமல்ல எளியவர்கள் எல்லோருக்கும் அதிகாரம் இப்படித்தான் ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் என்பதாகச் சொல்லியுள்ளார்.  ஒட்டுமொத்த நாவலிலும் மும்மத மக்களையும் கதாபாத்திரங்களாக அமைத்திருக்கிறார். எல்லோரிடமும் உள்ள கேலி, கிண்டல் அறியாமைகளை தன்னுடைய எழுத்துக்களில் பதிந்துள்ளார். ஒரு கட்டத்தில் கொலையாளி சிக்கி, பின் ஜாமீனில் வெளியே வந்து கொஞ்ச காலம் ஊரோடு ஒட்டாமல் இருந்தவன் பிறகு சகஜமாகிவிடுகிறான். கோயாவை மறந்து எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். அடுத்த ஒரு பரபரப்பான செய்தி கிடைக்கிறது. வழக்கம் போல அதற்கு இறக்கைகளைப் பொருத்திப் பறக்கவிடும் வேலைகளை ஊர் தொடங்குவதாக முடிகிறது. ஒச்சை என்றால் உற்றுக்கேட்டல், இரைச்சல் என்று பொருள். ஒரு இரைச்சல் கேட்டால் கூட்டம் கூடிவிடும் ஊர், ஒவ்வொரு காலத்திலும் இதையேதான் செய்து கொண்டிருக்கிறது. பெரிய பூடகமாக எந்த விவரணைகளுமில்லாமல் எளிய மனிதர்களின் அன்றாடங்களை மிக எளிமையாகப் பதிவு செய்வதே ஆசிரியர் மீரான் மைதீனின் பாணியாக இருக்கிறது. அதே சமயம் மொழியில் அழகியலையும், நையாண்டிகளையும் ஒரு சேரக் கலந்து கொடுத்து வாசகனைக் கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர். எளிய மனிதர்கள் மீதே எப்பொழுதும் தன்னுடைய படைப்புலகத்தைக் கட்டமைக்கும் மீரான் மைதீனுக்கு வாழ்த்துகள்.   நூல்: ஒச்சைவகை: நாவல்ஆசிரியர்: மீரான் மைதீன்வெளியீடு: புலம்விலை: ரூ.180 விமர்சனம்: சேலம் ராஜா