நீலகண்ட பிரம்மச்சாரி – 10

காட்சி 10 காலம் : 1911ஆம் வருடம்.ஜனவரி மாதத்தில் அதே நாள்இடம் : பாண்டிச்சேரி ‘தர்ம இல்லம்’பாத்திரங்கள் : வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், நாகசாமி. (வ.வே.சு.அய்யரும் வாஞ்சிநாதனும் ஒரு இல்லத்தின் முன்பு நிற்கிறார்கள். வாசலில் ஒரு இளைஞர் நிற்கிறார்) வ.வே.சு.அய்யர் : வாஞ்சிநாதன்.. இதுதான் ‘தர்மம்’ பத்திரிகாலயம்.. இவர் நாகசாமி. இவர்தான் ‘தர்மம்’ பத்திரிகையைக் கவனித்துக்கொள்கிறார். நாகசாமி : வாருங்கள் அய்யர்.. வாரும் தம்பி.. தம்பி யார்..? வ.வே.சு.அய்யர் : இவர் வாஞ்சிநாதன். நீலகண்டரின் தயாரிப்பு. அவரைத் தேடித்தான் வந்திருக்கிறார். (நீலகண்டர் பெயரைச் சொன்னதும் நாகசாமியின் முகம் மாறுகிறது. வ.வே.சு.அய்யரும் அதைக் கவனிக்கிறார்) நாகசாமி : நீலகண்டரைத் தேடி வந்தாரா..? அவர்தான் இப்போ இங்கு இல்லையே.. வ.வே.சு. அய்யர் : ஆமாம்.. அவர் வரும் வரை இங்கேதான் இவர் தங்க வேண்டும்.. நீர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். நாகசாமி : சரி.. அப்படியே ஆகட்டும்.. ஆனால்… வ.வே.சு. அய்யர் : மற்றதை அப்புறம் பேசிக்கொள்வோம்.. இவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடும்.. மாலை சந்திக்கலாம்.(வ.வே.சு. அய்யர் புறப்படுகிறார்)(மேடையில் இருள் பரவுகிறது. மீண்டும் ஒளி பரவும்போது வ.வே.சு. அய்யரின் வீடு. வ.வே.சு.அய்யரும் நாகசாமியும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : அய்யரே.. நீலகண்டன் நம் காரியத்துக்கு ஒத்து வர மாட்டார் என்றுதானே தர்ம இல்லத்தில் இருந்து அவரை நான் வெளியேற்றினேன்.. நம் ரகசியங்கள் பல அவருக்குத் தெரியும்.. அவர் நம் கருத்திலிருந்து கொஞ்சநாள் விலகிப் பேசி வந்தார். அவர் நம்முடன் இருந்தால் போலீசுக்குக்கூட விவரங்கள் போய்விடலாம். வ.வே.சு. அய்யர் : என்ன நாகசாமி.. நீலகண்டன் நம்முடன் மாறுபடுகிறாரே தவிர, நம்பிக்கைத் துரோகி அல்ல. இயக்க சபதம் செய்திருப்பவர். அவரைப் பற்றி இந்த சந்தேகம் வேண்டாம். நாகசாமி : சரி அய்யரே.. இந்த வாஞ்சி, நீலகண்டரின் ஆள் ஆயிற்றே.. இவரை வைத்து என்ன செய்யப் போகிறோம்..? வ.வே.சு. அய்யர் : துணிச்சல் மிகுந்த பையனாக இருக்கிறான். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கும் தேசபக்தர்களின் தொடர்பு இருக்கிறது. நீலகண்டர் மீது இவனுக்கு மனக்குறை இருக்கிறது. நமது திட்டத்தை இவனை வைத்து நிறைவேற்றலாம். அவனிடம் இணக்கமாகப் பேச்சுக் கொடுத்து அவனது மனநிலையைப் புரிந்துகொள்ளும். நாம் பிறகு சந்திப்போம். (மேடையில் இருள் பரவி மீண்டும் ஒளி பரவுகையில் ‘தர்மாலயம்’ வீட்டில் நாகசாமியும் வாஞ்சிநாதனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : தம்பி வாஞ்சி.. நம்ம வீட்டுச் சாப்பாடு பிடித்திருந்ததா..? பிரம்மச்சாரி செய்த சாப்பாடாயிற்றே..? வாஞ்சிநாதன் : நல்லா இருந்தது அண்ணா.. நாகசாமி : சந்தோசம் தம்பி. தம்பிக்கு திருவிதாங்கூர் ராஜ்யத்தில் செங்கோட்டைன்னு அய்யர் சொன்னார். கலியாணம் ஆகிவிட்டதா..? வாஞ்சிநாதன் : ‘ஆம் அண்ணா. திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நாகசாமி : ஓ..! இளம் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து தேச சேவைக்கு வந்திருக்கிறீர். உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது தம்பி. தம்பிக்கு என்ன வேலை..? வாஞ்சிநாதன் : காட்டிலாகா ரேஞ்சர். நாகசாமி : ஆஹா..! இப்படி ஒரு வேலையை வைத்துக்கொண்டா இந்த ரகசிய இயக்கத்திற்கு வந்தீர்கள்..? கேட்கவே அதிசயமாய் இருக்கிறது தம்பி.. நீர் நீலகண்டரைத் தேடி வந்ததைப் பற்றி அய்யர் சொன்னார். அப்படித் தலை போகிற அவசரம் என்ன வந்தது தம்பி..? வாஞ்சிநாதன் : திருநெல்வேலியில் நடப்பதெல்லாம் பிரம்மச்சாரிக்குத் தெரியுமா..? அவர்பாட்டுக்கு பாண்டிச்சேரிக்குப் போனவர் ஒரு தகவலும் தரவில்லை. புனலூர் சங்கர கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதிலும் உருப்படியாக ஒன்றுமில்லை. எனக்கு ஒரு கடிதம் எழுதி, மான் தோல் ஒன்று ஏற்பாடு செய்து தரும்படிக் கேட்டிருந்தார். வேறு செய்தி இல்லை. நாகசாமி : இதற்கெல்லாமா அவசரப்பட்டு அவரைப் பார்க்க வந்திருக்கிறீர்..? வாஞ்சிநாதன் : அது மட்டுமில்லை அண்ணா. பரலிக்கோட்டை நெல்லையப்பர், சிதம்பரம் பிள்ளையை ஜெயிலில் பார்த்துவிட்டு வந்து சொன்ன செய்தி எங்களை உருக்கிவிட்டது. ஜெயிலில் அந்த மேதையைச் செக்கிழுக்க வைக்கிறார்களாம். அடிக்கக்கூடச் செய்கிறார்களாம். நெல்லையப்பரிடம் சொல்லி வருந்தியிருக்கிறார் பிள்ளைவாள்.. (கண் கலங்கி அழுகிறான்)இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணமான கலெக்டர் ஆஷின் அக்கிரமங்களுக்கு ஒரு முடிவே இல்லையான்னு அவர் நெல்லையப்பரிடம் சொன்னாராம்.ஆஷ் கலெக்டர் அக்கிரமமும் கூடிப் போச்சுங்க ஐயா. குற்றாலத்தில் வெள்ளையர்கள் குளிப்பதற்குத் தனியாக நேரம் வைத்துச் சட்டம் போட்டிருக்கிறான், அந்த இன வெறியன். வெள்ளையர்கள் குளிக்கும்போது நம்ம ஜனங்கள் யாரும் அருவிப் பக்கமே போகக்கூடாதாம்.திருநெல்வேலியில் இப்போ யாரும் சுதந்திரமா பேசக்கூட முடியாது. நீலகண்டர் வந்தால் அவரிடம் கேட்டு, இவன் அக்கிரமத்திற்கு ஏதாவது பாடம் பண்ணணுமுன்னு யோசிச்சோம். அவரைக் கேட்காம எதையும் செய்யவும் தயக்கமாயிருக்கு. அதான் நேரே பார்த்துட்டு வந்திரலாமுன்னு சகோதரர்கள் அனுப்பி வச்சாங்க. நாகசாமி : நெல்லையப்பர் இங்கேயும் வந்திருந்தார். எங்களுக்கும் இந்தச் சேதி தெரியும். நாங்களும் கொதிச்சுப் போய்த்தான் இருக்கோம். இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந்து இழிவுற்றாலும்விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்று பாரதியார் பாடியது பிள்ளையவர்களுக்கே பொருந்தும். அந்த மகானுக்காகவேனும் ஏதும் செய்துதானாக வேண்டும் என்று எனக்கும் தோன்றுகிறது தம்பி. கவலைப்படாதே தம்பி, இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை காலை பேசுவோம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. ஒளி விரியும்போது வ.வே.சு. அய்யரும் நாகசாமியும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : அய்யரே, இந்தப் பையன் வேண்டாம். புதிதாகத் திருமணம் ஆனவன். பெண் குழந்தை இருக்கிறது. இவனுக்கு ஏதேனும் ஆனால் இவனது இளம் மனைவியின் நிலை என்னவாகும்..? வ.வே.சு.அய்யர் : தேச இயக்கம் என்று வந்துவிட்டால், இப்படியெல்லாம் பார்க்க முடியமா..? நமது திட்டத்தை இவனை வைத்துச் செய்ய முடியுமா என்று பார்ப்போம். முடிந்தால் செய்ய முனையலாம்.. நாளை கரடிக் குப்பத்திற்கு எல்லாரையும் வரச்சொல்லி இருக்கிறேன். நீரும் வாஞ்சிநாதனை அழைத்துக்கொண்டு வந்துவிடும்.. அங்கே பேசிக்கொள்வோம். (மேடை இருளாகிறது.. மீண்டும் ஒளி பரவ, ஓம்கார் ஆசிரமத்தில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமி.. உங்களைத் துரோகி என்று வெளியேற்றினார்களா..? ஏன் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : பலாத்கார இயக்கம் என்பது ஆயதந்தாங்கிய யுத்தம் என்றே நான் நம்பி வந்தேன். அப்படியான நேரடிப் போரைத்தான் எதிர்பார்த்து நான் சந்தித்தவர்களிடமெல்லாம் சொல்லியும் நம்பிக்கையும் கொடுத்து வந்தேன். தனிநபர் கொலையில் எனக்கு நம்பிக்கையும் சம்மதமும் இல்லை. ஆனால் சில நாட்களாக பாரிஸிலிருந்து வ.வே.சு.அய்யருக்கு வந்திருக்கும் செய்தியின் அடிப்படையில், அவர்கள் தனிநபர் கொலைகள் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அந்த முரண்பாடு முற்றவே, அவர்கள் என்னை ஒதுக்கிவைத்துப் பேசினார்கள். என்மீது ஐயமும் கொண்டார்கள். அதிலும் நாகசாமி என்னைப் போலீஸ் உளவாளி என்று சந்தேகம் கொண்டுவிட்டார். என்னை தர்மாலயத்திலிருந்து வெளியேற்றவும் செய்தார். இது அரவிந்தருக்குத் தெரிந்திருக்கும். பாரதியாருக்குத் தெரியாது. சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்ன ஆச்சு சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : வாஞ்சிநாதனை உயிர்த் தியாகம் செய்யத் தயார் செய்தார்கள். (திரை விழுகிறது) (நாளை தொடரும்)