உன்னதம் இலக்கிய விழா

உன்னதம் இலக்கிய விழா

எழுத்தாளரும் ஆலா இலக்கியச் செயலி நிறுவனரும் டிஹேஷ் கண்டுபிடிப்பாளருமான கௌதம சித்தார்த்தன் தன்னுடைய பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று, ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரு இலக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். முழுநாள் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நூல் வெளியீடு, நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் ஆகிய அமர்வுகள் இடம்பெறுகின்றன. முற்பகல் அமர்வில், கௌதம சித்தார்த்தன் எழுதியுள்ள காலப்பயண அரசியல் நூல் வெளியீடும், இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை? நூல் அறிமுகமும் பார்வையாளர்கள் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன. பிற்பகல் அமர்வில், மொழிபெயர்ப்பாளர் ஏ. வி. தனுஷ்கோடி அவர்களின் உருவப்படத் திறப்பு (ஓவியம்: சுந்தரன்), அவருடைய விசாரணை நாவல் வாசிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனுடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் குதிரைவால் படக் கதாசிரியர் ராஜேஷ், துறையூர் சரவணன், கவிஞர் மனுஷி, மொழிபெயர்ப்பாளர் எஸ். பாலச்சந்திரன், ஓவியர் சுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கிறார்கள். நிகழ்விடம்:நியூ டெக் எஜுகேசன் சென்டர்,காளிங்கராயன் பாளையம்,சங்கமேஸ்வரர் கோயில் அருகில்,பவானி.நாள்: 17.09.2022 சனிக்கிழமைநேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரைதொடர்புக்கு:9976951585,9500384307,9940786278

வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்

வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்

வண்ணதாசன் பிறந்தநாள் சிறப்புப் பதிவு 1982ல் நான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது எங்கள் அக்கிரஹாரத்தினர் அனைவரும் மெஜுரா காலேஜ் அல்லது அமெரிக்கன் காலேஜில்தான் சேருவார்கள். அவை இரண்டும் தன்னாட்சிக் கல்லூரிகள், அதிலும் மெஜுரா காலேஜில் டபிள் மேஜர், கெமிஸ்ட்ரி பேராசிரியர்களாக நண்பன் விஸ்வநாத்தின் மாமா நடராஜன், மற்றொரு நண்பர்களான கோபால் – வாசு என்ற இரட்டையர்களின் மாமா மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இருந்தது போன்ற காரணங்களால் நான் பிடிவாதமாக தியாகராஜர் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். எங்கள் தெருவினரில் 99 சதவிகிதத்தினர் தெப்பக்குளம் பக்கம் போனதேயில்லை. நான்தான் முதல் ஆள். நான் சேர்ந்ததால் கண்ணனும் அங்குதான் சேர்ந்தான் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவனும் சேர்ந்தான். கூடவே மேலே சொன்ன கோபால் – வாசு இரட்டையர்களும். படிப்பு ஒரு பக்கம், வாசிப்பு ஒரு பக்கம் என்று ஓடிக் கொண்டிருந்தது. மாதநாவல் ஒன்றில் பாலகுமாரனின் ஏதோ ஒரு நதி, சுப்ரமண்ய ராஜுவின் எங்கோ ஒரு இரவில் இரண்டையும் சேர்த்துப் போட்டுக் கலக்கினார்கள். இந்துமதி ஆசிரியராக இருந்த பிரியம்வதா காமிக்ஸில் சுஜாதாவின் நைலான் கயிறு வந்தது. ராணிமுத்துவில் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கும் சிறுவர்களை வைத்து சுஜாதா எழுதிய அன்று உன் அருகில் வந்தது. மகரயாழ் மங்கை, ஆலவாயழகன், திருச்சிற்றம்பலம் என்று வரிசையாக ஜெகச்சிற்பியனின் சரித்திர நாவல்களாக அவரது ஒரு ரசிகரிடமிருந்து ஓசி கிடைக்கும். வேறொரு புறம் அலைஓசை, பார்த்திபன் கனவு என்று ஓசி கிடைக்கும். புஷ்பா தங்கதுரை, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் பற்றி சொல்லவே வேண்டாம். எங்கும் கிடைக்கும். இன்ஸ்பெக்டர் சிங், ஏதோ ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு துப்பறிவார். இப்படியாகக் காலம் போய்க் கொண்டிருந்தது. கண்ணனின் அத்தை வீடு அப்போது கிருஷ்ணாராயர் தெப்பக்குளம் அனுமார் கோவிலுக்கு எதிரில் இருந்தது. அனுமார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையில் மாத நாவல்கள் வாங்கிக் கொண்டு அப்படியே கண்ணனின் அத்தை வீட்டிற்கும் போய் வருவோம். அந்தப் பெட்டிக்கடையில் கல்பனா இதழில் சுஜாதாவின் மண்மகனை வாங்கி கடை வாசலிலேயே நின்று படித்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது. கண்ணனின் அத்தை பையன் ஐஓபியில் வேலை பார்த்தார். அவருக்கு 3 – 4 வயதில் ஒரு பெண்குழந்தை. அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இந்த முறை ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை. வியாழக்கிழமை தோறும் மாலையில் பூஜை செய்து பாயசம் நைவேத்யம் செய்து அதை பையன்களுக்குத் தந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று யாரோ அந்த மன்னிக்கு பரிகாரம் சொல்ல, அவர் வாராவாரம் பூஜை செய்ய ஆரம்பித்தார். பாயசம் சாப்பிட நான், கண்ணன், ரவி, பாலன், கோபால், வாசு எல்லோரும் போவோம். கடைசியில் இரண்டாவதும் பெண் குழந்தைதான் பிறந்தது வேறு விஷயம் ! ஆனால், அவர்கள் வீட்டில்தான் எனக்கும், கண்ணனுக்கும் வாசிப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு அறிமுகம் கிடைத்தது. நாங்கள் பூஜை முடியும் சமயத்திற்குப் போவோம். பத்து நிமிடங்கள் காத்திருப்பதாகவே பெரும்பாலும் அமையும். அந்த வீடு ஒரு வக்கீலுக்குச் சொந்தமானது. டிவிஎஸ் கோவாப்பரேட்டிவ் ஸ்டோர்ஸ்க்கு அடுத்த வீடு. முன் போர்ஷனில் வக்கீல் வீடு. பின் போர்ஷன்களில் கண்ணன் அத்தையும், மற்றொரு குடும்பமும் குடியிருந்தார்கள். பூஜை நேரத்தில் வக்கீல் மாமியும், மற்றொரு குடும்பத்தின் மாமியும் வருவார்கள். அப்போது நாங்கள் கல்லூரிக்கு வந்து விட்டதால் இயல்பாகவே எதிர்பாலினரை கவனிக்கும் குறுகுறுப்பு வந்துவிட்டது. கண்ணன், கோபால், வாசு ஆகியோர் மனைமாட்சியிலிருந்து நேரே எழுந்து வந்தவள் போல் இருந்தாள் என்பாரே சுஜாதா, அது மாதிரி மனைமாட்சி லுக்கில் யாரேனும் இருந்தால் உருகிவிடுவார்கள். நான், ரவி, பாலன் மூவரும் ஜெயமாலினி மாதிரி இருப்பவர்களைத் தான் பார்ப்போம். வக்கீல் மாமி நடிகை சுமித்ரா ஜாடை. மற்றொரு மாமி சி.ஐ.டி.சகுந்தலா ஜாடை. சகுந்தலா மாமியின் கை உருண்டு திரண்டு பயில்வான் மாதிரி இருக்கும். மாமி குட்டைக் கை ரவிக்கை போட்டு கையின் திண்மையை இன்னும் சற்று enchance செய்வாள். சி.ஐ.டி. சகுந்தலா மாமி அவ்வப்போது என்னிடம் “நீங்க தெலுங்காளா? மராட்டிலதானே ராவ்னு வெப்பா ! கூடப் பிறந்தவா எத்தன பேர்“? என்பது மாதிரி சி.ஐ.டி கேள்விகள் கேட்பாள். நானும் மாமி,மாமி என்று ஓவராக பாசம் பொங்க, குஷியாக பதில் சொல்வேன். சுமித்ரா ஜாடை மாமியை நான் கண்டு கொண்டதே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடியே சி.ஐ.டி.சகுந்தலா மக்கு. வக்கீல் வீட்டு சுமித்ரா மாமி அறிவாளி. அதிலும், அந்த மாமி வண்ணதாசன் படிப்பவராக இருந்தார். ஒரு சுபயோக, சுபதினத்தில் கண்ணனுக்கு வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தைத் தந்தாள். அதற்கு முன்பே அன்னம் நவ கவிதை வரிசையின் புலரி மூலமாக கல்யாண்ஜியாக அவரை எங்களுக்குத் தெரிந்தாலும், அவரது சிறுகதைகளைப் படித்ததில்லை. உண்மையிலேயே எங்கள் வாசிப்பைப் புரட்டிப் போட்ட எழுத்து அது. அந்த தனுமையை வாழ்க்கையில் மறக்க முடியுமா? தனலட்சுமியையும், ஞானப்பனையும். டெய்சி வாத்திச்சியையும், சைக்கிளில் வரும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணையும் கண் முன்னே நிறுத்தின எழுத்து. அவர்கள் எல்லோருமே நிஜம். அது வண்ணதாசனின் கல்லூரி நாட்களின் கதை என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன். ஞானப்பன் அவரது அறை நண்பராம். இந்த நல் உணவை தந்த நம் இறைவனைப் பாடுவோம் என்ற பாட்டும் நிஜம். நிஜம் தவிர வேறில்லை என்று சொல்லியிருந்தார் வண்ணதாசன். கண்ணனும், நானும் வண்ணதாசனைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தோம். எத்தனை கதைகள்… எல்லாமே மனதுக்கு மிக நெருக்கமாக, என் கதையாக, அல்லது எனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்தவர் ஒருவரின் கதையாக … இதை எழுதும் போதே சில பழைய பாடல்கள் கதை ஞாபகத்திற்கு வருகிறது… அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் வேண்டுமா? அன்பே வா…. அழைக்கின்ற தெந்தன் மூச்சே…, தென்றலே நீ செல்வாய் எங்கும் நில்லாமல் செல்வாய்…. என்று இலங்கை வானொலியை நினைவூட்டும் அற்புதமான கதை… அதிலும், நீ வரவில்லையெனில் ஆதரவேது… என்ற பாடல்… கண்டசாலா மாதிரி பாடும் சத்யம்… கடைசியில் கதையின் முடிவில் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே…. இந்தப் பாடல்களில் எதை நினைத்தாலும், அல்லது கேட்டாலும், அந்தக் கதையும், வண்ணதாசனும் தானே நினைவிற்கு வருகிறார்கள் ! தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்களில் வரும், “எங்க அம்மையில்ல”. படிக்கும் போது அப்படிச் சிலிர்த்திருக்கிறேன். பின்னாளில் பலரும் மோகமுள்ளின் ”இதுக்குத்தானா பாபு?” என்ற வரியை சிலாகிக்கும் போதெல்லாம், என் மனம் டெய்சி வாத்திச்சியின், “தனலட்சுமி தான் வேணுமாக்கும்?” என்ற கேள்வியை நினைத்துக் கொள்ளும். கடைசி வரியில் ஒரு அழுத்தம் என்ற ஒரு அம்சத்தின் மீது எனக்கு ஒரு தனி காதல் வரக் காரணமாக இருந்தது வண்ணதாசனின் பல கதைகளின் கடைசி வரிகள்தான்.. தேர் நிலையத்துக்குள் இருந்து கோமுவை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது…என்றொரு கடைசி வரி. போலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க்கொண்டே இருப்பவள் என்று அவளைப் பற்றித் தோன்றியது… என்றொரு கடைசி வரி.. வீட்டுக்கு ஒரு நாள் வாயேன் ராஜீ என்றேன். வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லை. என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதில் சந்தோஷம், என்று சொன்னாள். அது இவ்வளவு பெரிய விஷயமாகி விட்டிருக்கிறது அவளுக்கு ! என்றொரு கடைசி வரி.. ஈஸ்வரி ஓடையில் நின்றுகொண்டிருந்தாள், என்றொரு கடைசி வரி. எதை எழுத வேண்டும் என்கிறது போல, எதை எழுதக் கூடாது என்கிறதும் எனக்குத் தெரியாதா சின்னம்மா? எனக்கும் கொஞ்சம் புரிந்து எழுதுகிற வயதாகிவிட்டதில்லையா இப்போது? என்றொரு கடைசி வரி. இவை கடைசி வரிகளல்ல உண்மையில் வேறொரு கதையின் ஆரம்ப வரிகள் என்பதைப் புரிந்து படிக்கும் வயது எனக்கு வந்தபோது, நான் நல்ல வாசகனானேன்! [எனது ‘வாசிப்பு அறிந்ததும், அடைந்ததும் தொகுப்பிலிருந்து’] என் அன்பிற்குரிய வண்ணதாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் வணக்கமும். முகப்பு ஓவியம்: கனலி கட்டுரை: ச. சுப்பாராவ், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

நூல் அறிமுகம் இருபத்தி ஆறு தலைப்புகளில், இந்தப் புதினம் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுப் புதினம். காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளான ‘ஜனவரி 30, 1948’ தான் இறுதி இயலின் தலைப்பு. இந்நூல், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்து விட்டுத் தம் பசுமையான நினைவுகளோடு பிரியா விடை கொடுக்கும், புதினத்தின் முக்கியக் கதைமாந்தர்களான சீனிவாச ராகவன், பிரான்சிஸ், மற்றும் செந்தூர் பாண்டியன் ஆகியோரது எதிர்காலத் திட்டங்கள் பற்றிய உரையாடலோடு தொடங்குகிறது. ஆதரவற்ற அநாதையான பிரான்சிஸ், தான் வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தினைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள கண்டியில் கிறித்துவப் பாதிரியாவதற்குப் படிக்கச் செல்கிறான்.  செந்தூர் பாண்டியன், தன் தந்தையின் வணிகத்தை மேம்படுத்த லாகூருக்குப் பயணிக்கிறான். பயணத்தின்போது, அரசு உயர் அதிகாரி ஒருவரோடு பரிச்சயம் ஏற்பட, அந்த அதிகாரி, காந்தியம் பற்றி அறிந்து கொள்ளச்சொல்லி, ரொமன் ரொலைந்த் எழுதிய நூல் ஒன்றையும், தன்வரலாற்றுப் புத்தகமான ‘சத்திய சோதனை’ நூலையும் வாசிக்கத் தருகிறார். அந்த நூல்களைப் பயணத்தின் போதே வாசிக்கத் தொடங்குகிறான் செந்தூர் பாண்டியன். பிராமண குலத்தைச் சேர்ந்த ராகவன், தன் தந்தையின் வழி, வழக்குரைஞர் தொழில் செய்யாது, புனேயில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் நிருபர் பணிக்குச் செல்கிறான். அந்தப் புதிய சூழலில், ராகவன் வரலாற்றுப் பாத்திரங்களான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கர்க்கரே, சாவர்க்கர் போன்றோர்களோடு தொடர்பு ஏற்பட்டு அவர்களோடு தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபடுகிறான். இதனால், காந்தியத்தைப் பற்றியும், பிராமணீயத்தின் மறுபுறத்தையும், இந்துத்துவ அமைப்புகளின் வெறுப்பு அரசியலை மய்யமாகக் கொண்ட தீவிரவாதத் தன்மையையும் அவனால் நன்கு உணர முடிகிறது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சமயங்களின்  நல்லிணக்கத்திற்குப் பெயர் போன லாகூர் மாநகரம், அங்கு நிகழ்ந்த முஸ்லீம் லீக் மாநாட்டுப் பிரிவினைவாதத் தீர்மானத்தின் பின்புலத்தில்  தீவிரவாத இஸ்லாமியர்களின் போக்கினால் எவ்வாறு அமைதியற்றுப் போயுள்ளது என்பதை லாகூர் சென்றடைந்தவுடன், செந்தூர் பாண்டியன் கண்கூடாகப் பார்த்து அதிர்ந்து போகிறான். அவனுடைய சினேகிதன் யாகூப் கூட மதவெறியால் மாறிப் போயிருப்பதைக் கண்டு வருத்தம் கொள்கிறான். ஆனால், யாகூப்பின் அன்னையும், சகோதரியும் இவன் மீது எப்போதும் போல சகஜமாகப் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில், யாகூப்பின் இளைய சகோதரி சலேலாவிற்கு, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் தாய், செந்தூர் பாண்டியனுக்கு மணம் முடிக்க யோசனையை முன்வைக்கிறார். பிறகு, தேசப் பிரிவினையுடனான சுதந்திரம் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், லாகூர் பாகிஸ்தானின் பக்கம் என்று தகவல் கசிந்தவுடன், லாகூரில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. இதன் தீவிரத்தை உணர்ந்த செந்தூர் பாண்டியனின் தந்தை சற்குணம் தன் வீட்டுப் பத்திரத்தை சலேலாவின் பெயருக்கும், தன் பெரிய கடையினை யாகூப்பின் பெயருக்கும் மாற்றம் செய்து, அவர்கள் அன்னையிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டுத் தன் மகனுடன் சொந்த ஊர் திரும்புவதாகச் சொல்கிறார். தன் தொழிலில் ஈட்டிய சொத்தையே எழுதிக் கொடுத்து விட்ட சற்குணத்திற்கு, தன் சொத்தான சலேலாவைத் தருகிறாள் அவளுடைய அன்னை. தான் மனதால் நேசித்த சலேலா, மனைவியாகப் போகும் குதூகலத்துடன்  தன் தந்தையுடன் ஊர் திரும்பும் வழியில், காவலர்கள் வழி மறிக்கிறார்கள்.  சலேலாவின் மீது கொண்ட இச்சை காரணமாக, ஒரு வாரம்  வைத்துக் கொண்டு அனுப்புவதாகக் கூறித் தன் வண்டியில் ஏற்றச் சொல்கிறார்கள். அதை எதிர்த்து மற்ற இருவரும் போராடும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்கிறான் செந்தூர் பாண்டியன். அதே சமயத்தில், சலேலாவும், காவலர் பிடியிலிருந்து திமிறி, காவலரின் கத்தியுடன் கூடிய துப்பாக்கியால் தன்னைக் கீறிக் கொண்டு சாய்கிறாள். ஓட்டுனர் பகதூர், அதிர்ச்சியில் உறைந்து போகும் செந்தூர் பாண்டியனைத் தேற்றி,  தில்லி நோக்கிச் செல்லலாம் என்கிறான். அங்கு காந்தி தங்கியிருந்த குடியிருப்பையும், அவரது சமாதான நடவடிக்கைகளையும் கண்ணுற்ற பாண்டியன், பழி வாங்கும் எண்ணம் ஏதுமின்றி, சொல்லொணாத் துயரைத் தாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்வதைத் தவிர்த்து, ராகவனைச் சந்திப்பதற்காகப் புனே செல்கிறான். அங்கு ராகவனோடு கழிக்கும் கால கட்டத்தில், காந்தியைக் கொல்ல சதிவலை பின்னப்படுவதாக இருவரும் உணர்கிறார்கள். தேசப் பிரிவினையால், உலகு கண்டிராத மதக் கலவரமும், தேசம் கண்டிராத அகதிகள் பிரச்னையும் ஏற்படுகிறது. முஸ்லீம் லீக ஆட்சி செய்யும் வங்காளம் கொலைக் களமாக மாறுகிறது. வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டதுபடி, 55000 ராணுவ வீரர்கள் தில்லியில் கொண்டு வர இயலாத அமைதியை, ஒற்றை வீரராக காந்தி, நவகாளியில் தன் சாகும் வரை உண்னாவிரதப் போராட்டத்தால் கல்கத்தாவில் கொண்டு வருகிறார். அதன் பின் தில்லி வருகிறார் காந்தியடிகள். தன்னுடைய சமாதான நடவடிக்கைகள் பலனளிக்காது போகவே, பிர்லா மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். அடுத்தடுத்த உண்ணாவிரதத்தால் 79 வயது நிரம்பிய காந்தியின் உடல்நிலை மிகவும் பலவீனமடைந்தாலும், நாட்டில் அமைதியை நிலை நாட்ட உறுதியுடன் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார் மகாத்மா காந்தி.    காந்தியைக் காண செந்தூர் பாண்டியன் தில்லி செல்கிறான். ஐந்து நாட்களில் நிலைமை சீரடைகிறது. ‘காந்தி செத்தொழியட்டும்’ என்று பழித்த அகதிகள், காந்தியின் உயிரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும், அமைதிக்கான உறுதிமொழியைக் காந்தியிடம் அளித்தபின், அந்த உறுதிமொழிகள் மன உறுதியுடன் நிறைவேற்றப் படாவிட்டால், தான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டியதிருக்கும் என்று காந்தி எச்சரிக்கை விடுக்கிறார். மௌலானா ஆசாத் பழச்சாறு கொடுக்க உண்ணாவிரதம் நிறைவு பெறுகிறது. அதற்குப்பின், வழக்கம் போல காந்தி தன் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஆனால், அவரைக் கொல்வதற்கான திட்டம் புனாவில் தீட்டப்பட்டு, அதை நிறைவேற்றத் தில்லியில் திரள்கிறது மதவெறி பிடித்த கோட்சே கும்பல். ஒரு மாகாத்மாவின் கொலைச் செயலின் பின்புலமாக இருந்த மதவெறி பிடித்த பிராமணீயக் கொள்கையை மட்டுமின்றி, அந்தப் படுகொலை செயல்படுத்தப்பட்ட நுட்பமான விவரங்களையும் இந்த அற்புதமான நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.  நூலாசிரியர்: கன்யூட் ராஜ் பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2022)  விலை: ரூ. 460/- ஆனந்த் பாசு                      

வாழ்க்கையை உருட்டும் பகடைகள்

வாழ்க்கையை உருட்டும் பகடைகள்

ஒருவன் தானாகவே இருத்தல் என்பது பெரிய விசயம். தான் தானாய் இருத்தல் என்பது ஒருவகை லயித்தல். சூழல் மாறலாம், வாய்ப்புகள் வந்து போகலாம். ஆனால் எப்பொழுதும் தன்னியல்பில் இருந்துகொள்தல் என்பது ஒரு பாதுகாப்பு. அல்லது தன் நிலையைத் தக்கவைத்தல், நியாய அநியாய தர்க்கங்களுக்கு வெளியே நின்று தன் நிலையில் தானாகக் கரைந்துவிடுதல் அது. அந்நிலை அனைவருக்கும் வாய்க்காது. படைப்பாளிகளுக்கு – சித்திரம் வரையும் – செதுக்கும் படைப்பாளிகளுக்கு வாய்க்கலாம். தன் இரசனையை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே லயித்துச் சாகுதல் என்பது ஒரு கவி நிலை. அப்படியாய் கவிஞர்கள் – கவித்துவ மனநிலை கொண்டவர்கள் லயித்துப்போவார்கள். கவித்துவ மன நிலை கொண்ட எல்லோரும் கவிதை எழுதிவிடுவதில்லை. ஆனால், கவிதைகளை ரசித்துவிடுவார்கள். அவர்களுக்கு ‘லயித்தல் மனநிலை’யில் தன்னைத் தக்க வைக்கும் கால அளவு மாறுபடலாம். ஆனால், கவிஞர்களுக்கு அது கைக் கொள்ளும். கவிஞர்கள் கவிதை எழுதலாம், ஓவியம் வரையலாம், புகைப்படம் எடுக்கலாம், சிறுகதை எழுதலாம், நாவல் கூட எழுதலாம். ஆனால் எல்லா இடத்திலயும் தன்னை மீறி ஏதேனும் ஒரு வரியில், ஒரு நிலையில் தன்னை மறந்து ஏதாவது ஒரு நினைவில் லயித்து, தான் கவிஞன் என்ற அடையாளத்தைக் காட்டிவிடுவான். கவிஞர்கள் சிறுகதை எழுதினால் இதைத்தான் தேடிப்பிடிப்பேன் – என்ற ஒற்றை வரிக்கு மேற்சொன்ன இத்தனை வரிகள் எழுத வேண்டியுள்ளது. அமிர்தம் சூர்யா ஒரு நல்ல மேடைப்பேச்சாளர். கணேசகுமாரன் எழுதிய ‘மெனிஞ்சியோமா” வை அவரைப் பேசவிட்டு கேட்கவேண்டும். நல்ல விமர்சகர். இணையதளக் காணொளி வெளியிடுகிறார். இந்த “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” சிறுகதை எழுதியுள்ளார். எல்லாவற்றிலும் மேலாக இவர் ஒரு கவிஞர். சிறுகதைகளைப் படித்துவிட்டு அதன் நுணுக்கங்களை, கதை தவறும் கணங்களை அல்லது கதையின் உச்சங்களைக் குறுக்குவெட்டு செய்து பார்ப்பதை விட, ஒரு சிறுகதைத் தொகுப்பு வாசகனின் மனத்திற்குள் ஏதேனும் பழைய அனுபவத்தை மீட்டெடுக்கச் செய்வதை அல்லது புது அனுபவத்திற்கு அவனைப் பாத்தியப்படுத்துவதைப் பற்றிப் பேசவேண்டும் என்பதே என் கருத்து. ஒரு படைப்பின் நோக்கம் அதுவாகத்தானே இருக்கவேண்டும்?! “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அதைத்தான் செய்கிறது. ஒரே மாதிரியான கதை மாந்தர்கள் அல்லது ஒரே பெயரில் வரும் கதை மாந்தர்கள் ஒரு வித அயற்சியைத் தரும் என்ற நிலைப்பாட்டை அமிர்தம் சூர்யா சுக்குநூறாக உடைக்கிறார். எல்லாக் கதைகளிலும் கிருஷ்ணன் வருகிறான், வியாசர் வருகிறார், சார்வாகன், த்ரௌபதி இப்படி வருகிறார்கள் . படித்து முடித்து விட்டு “RECALLING CUE” குறைவாய் இருக்கும் என்னைப் போன்றோருக்கு ஒரு சவால் இருக்கிறது. சாதிக்குப் பயந்து பெயரை மாற்றிக்கொண்ட ‘ராமண்ணா’ என்ற கிருஷ்ணன்தான் தாமரைக் காட்டைத் தேடி அலைந்து பைத்தியம் ஆகிறான் என்று கதை கட்டிவிடும் சவால் அது. ஒரு கதையில் இருக்கும் கதாபாத்திரம் இன்னொரு கதையில் உள்ள கதாபாத்திரத்தின் வேலையைச் சீர் செய்வது போல். அது சரி, ஒரு கதை இன்னொரு கதையை உண்டாக்கினால்தான் என்ன?! அமிர்தம் சூர்யா உருட்டிவிட்ட ‘சகுனிப் பகடையாய்’ அந்தக் கதை சொல்லும் தொனி எங்கும் அயற்சியை ஏற்படுத்தவில்லை. நிறைய மாதிரிகளை “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” மூலமாக நமக்குத் தருகிறார் அமிர்தம் சூர்யா. ‘மாதிரி’கள் என்பவை இங்கு ஒன்றைப் போல இன்னொன்று என்றும் எடுக்கலாம். உவமை என்று இலக்கிய ஆர்வலர்களாயும் எடுக்கலாம். சில மாதிரிகள்: “தமிழ் சினிமால வர்ற குழந்த நட்சத்திரம் ஷாலினி மாதிரி ஓவர் ஆக்டிங்கா இருந்தாலும் கிருஷ்ணன் ……” “மூளை செவிடான மாதிரி…” “காதலும் கவிதை மாதிரிதான்…” “இரட்டைச் சகோதரர்கள் மாதிரி இருந்தது அந்த வீடு”. கதையின் போக்கைத் துரிதப்படுத்துவது என்பது வார்த்தைகளில் வெளிப்படுவது. உரையாடலில், கதைசொல்லியின் குரலில், இரண்டையும் விட வாசகனின் கற்பனைக்குள் அமர்ந்துகொண்டு, அவனைத் தன் வயப்படுத்தி, கதையைக் காட்சி வடிவில் அரங்கேற்றம் செய்து காண்பிப்பது. புனைவையோ அபுனைவையோ வாசகனோடு ஒன்றச் செய்யும் இந்த வகையான ரசவாதம் என்பது கிட்டத்தட்ட பூக்களை ஒரே நாரில் வைத்துக் கோர்த்துக்கொண்டே வருவதுதான். சில கதைகளில் பூக்கள் முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு விழுகின்றன, சில கதைகளில் கற்பனை செய்த மாதிரியே ஒரு பூ மாலையாக உருப்பெறுகின்றன. ஆனால் அடிப்படை, வாசகனின் மனதிற்குள் காட்சிப்படுத்த எடுக்கப்படும் ப்ரயத்தனம்தான். அமிர்தம் சூர்யாவின் காட்சிப்படுத்துதலில் எந்த விதிகளும் அல்லாது, கட்டுப்பாடுகளற்ற, வாசகனுக்கு எந்த வழிகாட்டுதலுமில்லாத, எந்த வரையறைக்குள்ளும் சிக்கிவிடாத அல்லது சிக்கத்தோன்றாத, இப்படித்தான் என்ற உருவாக்க நுணுக்கங்களுமில்லாத மேலும் தனி பாணி என்ற முத்திரையும் இல்லாது ஒரு நிகழ்வை அப்படியப்படியே வர்ணிக்கிறார். காட்சிப்படுத்துதலை ஓர் எழுத்தாளன் செய்துவிடுவதுதான் செய்ய வந்த வேலையில் பாதி. அது சிறப்பாய் முடிந்துவிட்டால் மீதியை வாசகன் முடித்துக்கொள்வான். “இருளின் முகம் மெல்ல வெளிறும்படி இலையுதிர்க் காலத்தால் வந்த இடைவெளிகளில் ஆதவனின் ஒளிக்கற்றை இறங்கி, புதர் மண்டிய அந்தக் கற்குகை வாசலில் நிரம்பித் ததும்ப ஆரம்பித்தது”. கவிஞர் அமிர்தம் சூர்யா ஒரு சிறுகதையில் இப்படி எழுதியிருக்கிறார். கதையின் போக்கில் களத்தைச் சொல்வதில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”-இல் எந்தச் சிக்கலும் இல்லை. கிருஷ்ணன், சார்வாகன், வியாசர், த்ரௌபதி போன்ற கதாபாத்திரங்கள் போக, காற்றையும் பெரும்பாலான கதைகளில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில், காற்று ஒரு மேகத்தை அழைத்துச்செல்கிறது, போரில் தோல்வி பெற்றவர்களின் தபோவனத்தின் வாசலில் காற்று வறட்சியாய் இருக்கிறது, பூவரசம் பூக்களுடன் கைகலப்பில் காற்று ஈடுபடுகிறது, ஓங்காரச் சிரிப்பைக் காற்று ஒரு குளமாக மாறி, கல் மூலம் அதிர்வு பெறுகிறது, காற்றை மட்டும் சாப்பிட்டு சித்தர் ஆகும் முறையைச் சொல்கிறது, மாம்பழத்தின் வாசனையை இரயில் நிலையத்தில் மூக்கு முன்னால் போட்டு விட்டுச் செல்கிறது ஒரு காற்று, மயானத்தில் அப்பாவின் சமாதி தேடும் ஒருவன் முன் காற்று கனம் கூடி வீசுகிறது. சிறுகதையாளர்களால் காற்றைக் கதைக்குள் கொண்டுவர முடியும். கவிஞர்களால் மட்டும்தான் காற்றை ஒரு வரிக்குள் கொண்டுவரவும் முடியும், ஒரு வரியைக் காற்றுக்குள்ளும் கொண்டுவர முடியும். ஒரு படைப்பு ஏற்படுத்தும் அனுபவம்தான் வாசகனுக்கு முக்கியம். படைப்பை ஆராய வேண்டிய தேவை வாசகனுக்கு இல்லை. அது எழுத்தாளர்களின் வேலை. வாசகன், ஒரு படைப்பிற்குள் தன்னைப் பார்ப்பதும், தன் அனுபவத்தை உணர்வதிலுமே அந்தப் படைப்பு, வாசகனுக்கானது என்று ஆகிறது. அழகியல், எதார்த்த அனுபவங்கள் சொல்லப்படும் விகிதங்களில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” வாசகனுக்கானத் தொகுப்பு. அழகியல் நோக்கில் இந்தப் படைப்பை அணுகுவது தவிர்த்து, விமர்சனப் பார்வையில் எழுதிவிடுவதுதான் இலக்கிய ஆர்வலர்களுக்கான விசயம். படைப்புகளில் “நிறைவுறாத்தன்மை” என்பதும்கூட ஒரு வகையான அழகுதான். ஆனால், வெகுஜனக் கதைகளில் புகுத்தப்படும் “நிறைவுறாத்தன்மை” என்பது, அமிர்தம் சூர்யாவின் மொழியில் சொல்லப்பட வேண்டுமென்றால், சக்கரவியூகத்தில் நுழைந்த அபிமன்யூவின் வீரம் போன்றது. தன் சாதி காரணமாகப் பெயரை மாற்றிக்கொள்ளும் கிருஷணன் ஆகட்டும், சாதி மாறித் திருமணம் முடித்து ஊர் திரும்பும் ஒருவனாகக் கனவு காணுவதாக இருக்கட்டும், அமிர்தம் சூர்யா என்ற ஆகச்சிறந்த ஊடகம் மிகப்பெரிய விசயத்தைச் சொல்லவருகிறது என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் கதை வெகு ஜாக்கிரதையாக அந்தச் சிக்கலில் இருந்து வெளியேறி “சுபம்” போடுகையில் அபிமன்யூ குறி வைக்கப்படுகிறான். அப்பாவைச் சாந்தப்படுத்த சமாதி தேடுபவனுக்கு மனைவி பிரிந்து போயிருக்கிறாள். உயிரோடு இருப்பவளைத் தேடாமல், செத்த ஒருவனைத் தேடி அலையும் ஒருவனது கதையில் “நிறைவுறும் தன்மை” நிராயுதபாணியாய் நிற்கும் அர்ஜூனனைத் தவிக்க விட்டு ஓடும் பரமாத்மாவாய் நிற்கிறது. தன்னிலை அறிக்கையில் இவை எல்லாம் அனுபவங்கள் சார்ந்து புனையப்பட்டவை அல்லது செய்யப்பட்டவை என்ற எழுத்தாளரின் கூற்றோடு கதையைப் படிக்கும்பொழுது எதார்த்தம் வெளிப்படுகிறது. வாழ்வின் வெளி இப்படித்தானே இருக்கிறது?! நிறைவுறாத்தன்மையும் நிறைவுறும் தன்மையும் கிட்டத்தட்ட ஒரு மனநிலைதானே?! எதார்த்தங்கள் சுவாரஸ்யங்களைத் தந்துகொண்டே இருப்பதற்கு அடிப்படை, நாம் நினைப்பது நடக்காமல் இருப்பதும், நாம் நினைக்காதது நடப்பதிலும்தான். வாழ்க்கை நமக்கு உருட்டிவிடும் பகடைகள் எப்பொழுதும் நமக்குச் சாதகமாய் இருப்பதில்லை. அந்தந்த நேரத்து உருட்டல்களை அந்தந்த நேரத்துச் சூழ்நிலைகளில் அந்தந்த நேரத்து மனநிலையில் மனிதர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள். “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அந்தப் பகடைகளை உருட்ட, வந்து விழுந்த சில கதாபாத்திரங்கள்தான். கடவுளைக் கண்டுபிடிப்பதை விட உணர்வது சுவாரஸ்யமானது. “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”ஐ நீங்கள் உணரலாம். பழனிக்குமார், மதுரை.

ஒச்சையிட்டபடி கடந்து போகும் காலம்

ஒச்சையிட்டபடி கடந்து போகும் காலம்

“மாப்ளே ஐயப்பா, நான் பொதுவாத்தான் சொன்னேன். என்னையத்தான் எடுத்துக்கோ. நான் இன்னா நிக்கேன். நாளைக்கு இருப்பேன்னு உறுதியாச் சொல்ல முடியுமா?”– என்று இயல்பான பேச்சினூடே முந்தைய நாளில் சொல்லும் கோயா அடுத்த நாளே கொலையுண்டு கிடக்கிறான். அவனது மரணச் செய்தி, உறக்கம் கலையாத அந்த ஊரில் தீயாகப் பரவுகிறது. ஊரின் பிரதான இடமான ஜங்ஷன் முக்கு கடைவீதிதான் இப்படி எல்லாத் தகவல்களும் உலவும் இடம். கோயாவின் கொலைச் செய்தி பரவியதிலிருந்து ஊரே பரபரப்பான முகத்தைச் சூடிக்கொள்கிறது. இதில் குறிப்பாக, ஊரின் அனைத்துப் பிரச்சனைகளும் கை,கால் முளைத்து சிறகடித்துப் பறக்குமிடம் சாலம்துவின் டீக்கடையாக இருக்கிறது. காவல் துறை வருகிறது. கொலையுண்டவனுக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களென ஒவ்வொருவராக அழைத்துச் சென்று தனது பாணியில் விசாரணையை முடுக்கி விடுகிறது. எப்போதும் அதிகாரம் எளிய மனிதர்கள் மீதுதான் தனது முழு பலத்தையும் காட்டும். இந்த நாவலிலும் அப்படி ஒன்றுமறியாத அப்பாவிகளையே நெருக்குகிறது. இதனால் தவறே செய்யாத பூமணி என்பவன் இறந்து போகிறான், மோசே பைத்தியம் ஆகிறான், ஐயப்பன் ஊரையே காலி செய்துகொண்டு கேரளாவில் தஞ்சமடைகிறார்.  நாவலின் கதைக்களம் ஒரு கொலையின் பின்னணியில் சூடுபிடிக்கத் தொடங்கினாலும் வழமையான த்ரில்லர் கதைகளாக இல்லாமல் அந்த ஊரின் அமைப்பையும், எளிய முறையில் ஜீவிதம் செய்யும் மனிதர்களின் அன்றாடத்தையுமே அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது.  நாவலாசிரியர் மீரான் மைதீன் நாகர்கோவிலைச்சார்ந்தவர். இதற்கு முன்பான இவரது நாவல்களிலும், கதைகளிலும் நாஞ்சில் மொழியைப் பிரத்யேகமாகப் படம்பிடித்துக் காட்டியது போலவே, இந்த நாவலிலும் அம்மொழியைக் கையிலெடுக்க, நழுவியோடும் உயிர் மீனின் லாவகத்தன்மையோடு வாசகனுக்கு விளையாட்டு காட்டியுள்ளார்.  குடும்பத்தைப் பிரிந்து காவல் சங்கக் கட்டிடத்தில் காவலாளியாகப் பணி செய்து வருபவன் கோயா. ஊரில் மட்டுமல்லாது கொஞ்சம் உலக விசயங்களிலும் ஞானமுடையவன். ஒருசிலருக்கு அவனுடைய மேதாவித்தனமான பேச்சுகள் சுவாரஸ்யம் தந்தாலும் ஒரு சிலருக்கு சமயங்களில் அலுப்பூட்டுகிறது. ஆனாலும் யாரோடும் பகைமை இல்லாது இருப்பவன். இரக்க குணம் கொண்டவன். அவனுக்கு ஆற்றங்கரையோரம் குடிசையமைத்து வாழும், இடுப்புக்கு கீழே கால்கள் சூம்பிப்போன மனோரஞ்சிதம் மீது கூடுதல் பிரியம் இருக்கிறது. அடிக்கடி அவளது வீட்டுக்கு இவனுடைய போக்கு கண்டு ஊர் வாய்க்கு வழக்கம்போல கண் காது முளைத்து விடுகிறது. பிறகு அது எப்படி ஒரு கொலைப்பாதகம் வரை நீள்கிறது என்பதே முழு நாவலும்.  சொந்த ஊரிலேயே இருக்கும் காவல் நிலையம் என்றாலும் காவல் நிலையம் என்றதும் அது ஒரு போகக்கூடாத இடமாகவே இன்றளவும் சாமானிய மக்களின் மனதில் தீர்க்கமாகப் பதிந்திருக்கிறது. அதேபோல காவல் துறையின் கிடுக்கிப்பிடிக் கேள்விகளில் கூட்டத்தோடு நின்றிருக்கும் ஒருவன் சிக்கும்போது அதற்குப் பலவாறு கிளை வரைந்து வேர் பாய்ச்சும் கூட்டமாகவும் அதே சாமானியர்களின் மனங்கள் இருக்கிறது. தன்னை விசாரிக்க அழைக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் நிற்காமல் சிறுநீர் கழிக்கும் நெட்டை ஆகட்டும், விசாரணை முடிந்து வெளியே வரும் ஐயப்பனிடம்,  “ரேகை மட்டும் எடுக்கானுவளா…இல்ல கேள்வியும் கேக்கானுவளா “,?-எனும் கோலப்பனுக்கு,  “ரேகையும் எடுத்துட்டு நல்ல முறுவலா ஒரு தோசையும் கொஞ்சோல கெட்டிச் சட்டினியும் தரானுவோ.” ஒரு மாதிரி விரக்தியிலும்,இயலாமையிலும் ஐயப்பன் சொல்லும் போது வாசகன் அடுத்து என்ன நடக்கும் என்ற மனநிலையை மறந்து சட்டென சிரித்து விடும் இடங்களாக இருக்கின்றன. அதுபோல பஷீரும், சரவணனும் பொறியாளர் அன்வரின் ஏமாற்று வேலைகளைப் பகடி செய்யும் இடங்களும், பஷீரின் காதல் கதையும் கொஞ்சம் இறுக்கமான மனதைத் தளர்த்திக் கொள்ளும் இடங்களாகும்.  இவர் கதை சொல்லும் யுக்தி முறை அலாதியானது. உதாரணமாக, தொடக்கத்திலேயே நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் வந்துவிடுகிறார்கள். உள்ளே போகப்போக மீண்டும் மீண்டும் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு காட்சிகளும் தொடங்கும் விதம் சினிமா காட்சிகளைபோல் பல திருப்பங்களைத் தருகின்றன. புறம்போக்கு நிலத்தை பொய் பத்திரம் தயார் செய்து ஊரை ஏமாற்றும் குமாஸ்தா சதாசிவம்தான் கொலைகாரன் என்று வாசிப்பவர்கள் நம்பும் வேலையில் ஆசிரியரின் மாயாஜால எழுத்து வேறொரு பக்கம் கொண்டு போய்விடுகிறது. ஜின்னா, ஐயப்பன், பூமணி, மோசே,மனோரஞ்சிதம், சதாசிவம், நெட்டை, கோலப்பன், பஷீர், சரவணன் என்ற கதாபாத்திரங்களின் வழி தொன்னூறு சதவீதம் கதை நிகழ்ந்தாலும் மொத்தமும் அதிகாரத்திற்கு அடங்கி ஒடுங்கி அஞ்சும்போது, அதற்கு எதிரான இயலாமை வாசகனின் உள்ளளத்திலும் கனல்கிறது. தன் மகன் வயதுடைய நீலன் எஸ் ஐ “உன் அம்மைக்கு மாப்பிள்ளை பாக்க” என்று தன்னுடைய அதிகாரத் திமிரை ஐயப்பனிடம் வெளிப்படுத்தியதிலிருந்து அவ்வார்த்தை ஐயப்பனைத் தூங்கவிடாமல் செய்கிறது. நாட்டில் அதிகாரத்தில் இருந்தாலே போதும் வயது வித்தியாசமின்றி யாரிடமும் நடந்து கொள்ளலாம் என்பதற்கு இப்படி சிலர் இன்றும் சாட்சியாக இருக்கிறார்கள். அந்த ஒற்றைச் சொல் ஐயப்பனைத் துரத்துவதை ஆசிரியர் “கற்பனையில் ஒருவனை சன்னம் சன்னமாகக் கொன்று போடக்கூடிய அளவுக்கு வன்மம் நிறைந்த வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமானவை” என்றெழுதி நீலன் சொன்னது ஐயப்பனிடம் மட்டுமல்ல எளியவர்கள் எல்லோருக்கும் அதிகாரம் இப்படித்தான் ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் என்பதாகச் சொல்லியுள்ளார்.  ஒட்டுமொத்த நாவலிலும் மும்மத மக்களையும் கதாபாத்திரங்களாக அமைத்திருக்கிறார். எல்லோரிடமும் உள்ள கேலி, கிண்டல் அறியாமைகளை தன்னுடைய எழுத்துக்களில் பதிந்துள்ளார். ஒரு கட்டத்தில் கொலையாளி சிக்கி, பின் ஜாமீனில் வெளியே வந்து கொஞ்ச காலம் ஊரோடு ஒட்டாமல் இருந்தவன் பிறகு சகஜமாகிவிடுகிறான். கோயாவை மறந்து எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். அடுத்த ஒரு பரபரப்பான செய்தி கிடைக்கிறது. வழக்கம் போல அதற்கு இறக்கைகளைப் பொருத்திப் பறக்கவிடும் வேலைகளை ஊர் தொடங்குவதாக முடிகிறது. ஒச்சை என்றால் உற்றுக்கேட்டல், இரைச்சல் என்று பொருள். ஒரு இரைச்சல் கேட்டால் கூட்டம் கூடிவிடும் ஊர், ஒவ்வொரு காலத்திலும் இதையேதான் செய்து கொண்டிருக்கிறது. பெரிய பூடகமாக எந்த விவரணைகளுமில்லாமல் எளிய மனிதர்களின் அன்றாடங்களை மிக எளிமையாகப் பதிவு செய்வதே ஆசிரியர் மீரான் மைதீனின் பாணியாக இருக்கிறது. அதே சமயம் மொழியில் அழகியலையும், நையாண்டிகளையும் ஒரு சேரக் கலந்து கொடுத்து வாசகனைக் கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர். எளிய மனிதர்கள் மீதே எப்பொழுதும் தன்னுடைய படைப்புலகத்தைக் கட்டமைக்கும் மீரான் மைதீனுக்கு வாழ்த்துகள்.   நூல்: ஒச்சைவகை: நாவல்ஆசிரியர்: மீரான் மைதீன்வெளியீடு: புலம்விலை: ரூ.180 விமர்சனம்: சேலம் ராஜா