கரைசேராப் படகுகள் – 11

கரைசேராப் படகுகள் – 11

களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பிய செந்தாமரை, “மரகதம், நாளைக்கு அரைவிடுதி வேலைதான் ஆளுங்களுக்கு சொல்லிவிட்டிருக்கு; நீ காலைல கஞ்சியும் சேர்த்து எடுத்துட்டு வந்துடு. ஆளுங்க கோழிகூவயிலேயே வந்துருவாங்க” என்றார்.    “அய்யோ நாளைக்கும் கஞ்சி காய்ச்சணுமா? வீட்ல சொல்லிவிட்டவங்க எல்லாம் வந்துடுவாங்களே.. வேலை மெனக்கெடுமே” என்று புலம்பினாள் மரகதம். “விளைஞ்ச வெள்ளாமை வீடு வர வேணாமா? மேலு அலுப்ப பார்த்தா முடியுமா?” “நான் கஞ்சி காய்ச்சிடறேன் மாமோய்.. சத்த அந்தக் கஞ்சி அண்டாவ, மாரிய விட்டு தூக்கிப் போயிடேன்..” என்று கொஞ்சும் குரலில் சொன்னாள் மரகதம். “சிறுமலை சுத்தற சின்னக்காளுக்கு மணவறை சுத்தனா மயக்கமா?” என்று நீட்டி முழக்கினார் பட்டம்மா. “யாரும் இங்க பவுசா உட்காந்து திங்கல. ‘இடிஇடின்னு இடியாப்பம் பிழிஞ்சு, காப்பித் தண்ணி கொடுத்து கப்பலேத்தி விட்டாங்க’ன்னு சொல்றா மாதிரி உழைச்சிகிட்டுதான் இருக்கோம்” என்று பதிலுக்குப் பொரிந்தாள் மரகதம். “டேய் சுள்ளான்… இங்க நின்னு பஞ்சாயத்து பார்த்தோம்னா பஞ்சா பறந்துடுவோம். களத்துமேட்டுக்குப் போலாம் வா” என்று நாயையும் அழைத்துக்கொண்டு செந்தாமரை கிளம்பினார். கோழி கூவறதுக்கு முன்னாடியே எழுந்து, வாசல் தெளித்து, செம்மண்ணில் ஓரங்கட்டி, வாசல் அடைத்து பச்சரிசி மாவில் கோலம் போட்டு, வாசலில் தொங்கிய வேப்பிலையெல்லாம் எடுத்து வீசினாள் மரகதம். அடுப்பை மெழுகிக் கோலம் போட்டு, கஞ்சி காய்ச்சினாள். குளித்து   முடித்து சிவப்பு நிறத்தில் சின்ன சின்னதாக மஞ்சள் பூப்போட்ட புடவையைச் சுற்றிக்கொண்டு விளக்கு தட்டு விளக்கி, சாமி மேடையைச் சுத்தம் செய்தாள். முருகர் படத்தைத் துடைக்கப் போனவள், படத்துக்குப் பின்னாடி இருந்த கடிதத்தைப் பாரத்தாள். “கூறுகெட்ட மனுசன், கடுதாசி படிச்சா தூக்கிப் போடவேண்டியது தானே..” என்று தூக்கிப் போடப் போனவள், ‘பிரிக்காமலேயே இருக்கே..’ என்று அங்கேயே வைத்துவிட்டு, அடுப்படி வேலைக்கு வந்துவிட்டாள். எட்டு மணி சங்கு கூவும்போது, இருளாயி வந்து சேந்தாள். முந்தானையில்  பறிச்சு வச்சிருந்த குப்பைமேனி, தூதுவளை, கற்பூரவல்லி, முடக்கத்தான், முசுமுசுக்கை, முருங்கை, துளசி, சீந்தல், அருகம்புல், வேப்பிலை, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் எல்லாவற்றையும் அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள். அண்டா நிறைய சுடுதண்ணி விளாவி வைத்து, புனிதாவைப் புழக்கடைப் பக்கம் அழைத்து வந்து உட்காரவைத்து, தலையில் பொட்டு எண்ணெய்  வைத்து அரப்புப் பொடி போட்டு நல்லா தலை முடியைக் கசக்கி எடுத்தாள்.  அடி வயிற்றில் நல்லா தண்ணியை அடித்து ஊற்றினாள். வேகவேகமாகப் புனிதாவுக்குத் துணியைச் சுற்றி, அரைத்து வைத்த மருந்துருண்டையில் மூனு உருண்டை கொடுத்து, சுடு தண்ணி கொடுத்தாள். அதற்குள் மரகதம் கரி நெருப்புல சாம்பிராணி போட்டாள். அதை இருளாயி பக்குவமா புனிதா முடியில காட்டி, தலையில பல்லாங்குழி காய ஆறவிட்டாள். நல்லா நுரை பொங்க காபி தண்ணி கொடுத்தாள். ஆறவைத்து ஒரு சொம்பு நிறைய குடித்தாள் புனிதா. பட்டம்மா பாட்டி புனிதாவைப் பார்த்து, “அரிசி, பருப்பு, புளியில் கை வச்சிட்டு கூடத்துல வந்து உட்காருடி; தல ஆறாம படுக்கக்கூடாது” என்று சத்தம் போட்டாள் இருளாயி, குழந்தைக்குத் தலைக்கு ஊற்றி, நன்றாகத் துவட்டி சாம்பிராணி போட்டு, உச்சந்தலையில் விபூதி வைத்து, புனிதா பக்கத்தில் துணியைப் போட்டுக் கிடத்தினாள். ஒரு வாரம் கழிச்சு இப்பதான் வெளியில் வருகிறாள் புனிதா. பட்டம்மா ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து வந்து அவ தலையில சொருகினாள். அதற்குள் பட்டம்மா பாட்டியின் பட்டாளமெல்லாம் ஒன்றாக  சேர்ந்துகிட்டு, “இதைப் பண்ணியா, அதைப் பண்ணியா” என்று மரகதத்தை அதிகாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க. கடுப்பானாள் மரகதம். “கூடவந்த பெருச்சாளி கூடைய தூக்கிட்டு ஆடுச்சாம்; பாக்க வந்த பெருச்சாளி செருப்ப தூக்கிட்டு ஆடுச்சாம்”ன்னு பாடிகிட்டே எல்லாருக்கும் காபி தண்ணி கொடுத்தாள். எல்லா கிழவிகளும் காபிய குடிச்சிட்டு கிளம்பிடுச்சிங்க. அருக்காணி வாய்க்கால் தண்ணியில் இருந்து, குட்டி குட்டிக் கெண்டை மீனைப் பிடித்துவந்து, காரம் கம்மியா போட்டு, மிளகுத்தூள் போட்டு நல்லெண்ணெய் நிறைய விட்டு, மணக்க மணக்க வச்ச மீன் குழம்ப வயிறுமுட்டச் சாப்பிட்டு, தூங்க ஆரம்பிச்சிட்டா புனிதா. மதியம் வர்ற சொந்தபந்தத்துக்கு நாட்டுக்கோழிக் குழம்போடு இருளாண்டிகிட்ட ஆட்டுக்கறிக்குச் சொல்லி விட்டிருந்தாள். ஆட்டுக் காலு சூப்பும் ஆட்டுக்கறித் தொக்கும் நெய்யை ஊத்தி ருசியா பண்ணி வைத்திருந்தாள் மரகதம். அரைவிடுதி வேலையை முடித்து வந்த செந்தாமரை, சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு, டவுனுக்குப் போய் வெற்றிலை பாக்கு வாங்கிகிட்டு  காப்பு எடுத்துட்டு வரலாம் என்று கிளம்பினார். மரகதத்தின் பெரிய மவளும் ஆத்தா, அப்பன், தம்பியும் வண்டி கட்டிகிட்டு வந்தாங்க. அம்மாவைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாக, “வாங்க வாங்க” என்று அழைத்தபடி வாசலுக்கு ஓடினாள் மரகதம். பெரிய பேத்தியை பார்த்ததும்  பட்டம்மா கிட்டே கூப்பிட்டு கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தா வைத்துக் கொஞ்சினாள். சம்பந்திய ‘வாங்க’ன்னு கூப்பிட்டு, “ஏய்.. மரகதம் எல்லாருக்கும் சாப்பாடு போடு”ன்னு அதிகாரம் பண்ணினார் பட்டம்மாள். மரகதத்தின் அம்மா மரகதத்திடம் வந்து “என்னடி, புனிதாவுக்கு தலைக்கு ஊத்தியாச்சா? மருந்து அரைச்சுக் குடுத்தியா?”ன்னு விசாரணை பண்ணாங்க. இதே கேள்வியை பட்டம்மா கூட்டாளிங்க கேட்கும்போது மரகதம் பழிச்சு பாட்டு பாடினா இல்ல.. அதனால் இப்ப பட்டம்மா, “அதியசயமான ஊர்ல புள்ள பொறந்துச்சாம்; தொப்புள் கொடி அறுக்க கப்பல் ஏறுச்சாம்”ன்னு ராகம் இழுத்தா. கொஞ்ச நேரத்தில் நடு மகளும் அவள் மாமியாரும் மட்டும் வந்தாங்க. கோதையையும் கட்டிப் பிடித்துக் கொஞ்சிய பட்டம்மாவுக்கு சந்தோஷத்துல தலகால் புரியல. புழக்கடைப் பக்கம் வந்த கோதைகிட்ட “எப்படியவ இருக்க?” என்றாள் மரகதம். “எள்ளுக்குச் சேலை இருபத்திரண்டு முழமாம்; சுத்து எட்டலைன்னு சுண்டறா கண்ணீர’ன்னு எம் மாமியாகாரிக்கு எவ்வளவு செஞ்சாலும் பத்தாதுமா”ன்னு குறைபட்டாள் கோதை. வந்த உறவுகளெல்லாம் நன்றாகச் சாப்பிட்டு, உண்ட களைப்பு தீர ஓய்வெடுத்தார்கள். டவுனுக்குப் போன செந்தாமரை, சாமானெல்லாம் மூட்டைகட்டிகிட்டு வந்தார். உறவுகளை ‘வாங்க’ன்னு சொல்லிட்டு, மரகதத்தைத் தேடி வந்தார். அங்கே மரகதம் லாந்தர் விளக்கு, பெரிய விளக்கு, சிம்னி விளக்குன்னு    ஏழெட்டு விளக்கை அரிசி மாவு போட்டு கரிபடிஞ்ச சிம்னி எல்லாத்தையும் துடைத்துக் கொண்டு இருந்தாள். “பூவுள்ள மங்கையாம் பொன்கொடியாம்; போன இடமெல்லாம் செருப்படியாம்”ங்கற கதையாட்டம் உனக்கு வேல ஒழிய மாட்டேங்குது. பாவம் புள்ள நீ” என்று பொஞ்சாதிகிட்ட செந்தாமரை உருகறது கடவுளுக்கே பொறுக்கவில்லை போல. “தம்பி.. செந்தாமரை”ன்னு குரல் கொடுத்தார் கோபாலண்ணா. “இதோ, வாரேன்”னு சொல்லிட்டே திண்ணைக்கு வந்த செந்தாமரையிடம், சுப்புடு ஐயர் பேர் எழுதிக் கொடுத்த பேப்பரை நீட்டினார். பேப்பரைக் கையில் வாங்கிப் பார்த்ததும் அதிர்ந்தார் செந்தாமரை. தொடரும். சாம்பவி சங்கர் ஓவியம்: வெண்ணிலா

கரைசேராப் படகுகள் – 9

கரைசேராப் படகுகள் – 9

தொடர்கதை “ஏங்க மாமா… காப்பு சம்மந்தி வீட்லதானே போடுவாங்க? நாம ஏன் வாங்கணும்? மூனாம் மாசம் பொண்ணைக் கூட்டி அனுப்பும்போதுதான் குழந்தைக்கு கொலுசு, அண்ணாக்கயிறுன்னு போட்டு அனுப்புவாங்க” என்று குழப்பத்துடன் கேட்டாள் மரகதம். “இனாமாக் குடுத்த மாட்டைப் பூட்டி நெலாவுல ஏரடிச்சானாம் இளிச்சவாயன்”ன்னு உன் தலையில கட்டிடப் போறாங்கடா, உன் மருமவன் வூட்டு மனுசனுங்க” என்று ராகம் இழுத்தாள் பட்டம்மா. “என்னைய என்ன புத்திகெட்ட ஆம்பளன்னு நினைச்சயளா? ஆளாளுக்கு  அலப்பற தர்ரீங்க..” என்று செந்தாமரை சத்தம் போட்டுவிட்டு, அவங்களுக்கு   டவுனுக்குப் போக பொழுது ஆப்படலையாம். அதான் என்னய  வாங்கியாந்து வைக்கச் சொன்னாங்க” என்றார். மனிதனுக்கு இரண்டு நேரங்களில் கோபம் வரும். செய்த தப்பை மறைக்கும்போதும், தப்பு செய்யாத போது குற்றம் சாட்டப்படும் போதும்.  இதில் செந்தாமரை இப்பொழுது கோபப்பட்டது எந்த ரகம் என்று நமக்குப் புரியும். செந்தாமரை லேசாகக் குரலை உயர்த்தியதும், மாமியாரும் மருமகளும்  பொங்குகிற பாலில் தெளித்த தண்ணீர் மாதிரி ‘புஸ்சுன்னு’ அடங்கிவிட்டார்கள். செந்தாமரை வெளியில் வந்து, “ஏய்.. சுள்ளான் இங்க வாடா” என்று கூப்பிட்டதும், வாசலில் படுத்திருந்த சுள்ளான் வாலை ஆட்டிக்கொண்டே இவர் பின்னாடியே ஓடி வந்தது. இவர் வயக்காட்டுப் பக்கம் செல்வதைப்  பார்த்ததும் இவருக்கு முன்னாடி ஓடி வழிகாட்டியது. அதிகாலையில் எழுந்த மரகதம், வெள்ளிக்கிழமைங்கறதால வாசல்  தெளித்து அரிசி மாவில் பெரிதாகக் கோலம்போட்டு, அடுப்பு தட்டு   மொழுகி சும்மா வீட்டை ஜொலிக்க வைத்திருந்தாள். ‘நாளைக்கு வீட்டுக்கு சொந்த பந்தம், சாதி சனமெல்லாம் வருவாங்க’ என்று வீட்டை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு,  தலைக்குக் குளித்து, சின்ன சின்ன பூ கண்ணுக்கே தெரியாத சிவப்பு நிறத்தில் இருந்த மஞ்சள் நிற நூல் புடவையைக் கட்டியிருந்தாள் மரகதம். அவளை ஏற இறங்கப் பார்த்த பட்டம்மா, ‘டொக்…. டொக்..’ என்று வெற்றிலை இடித்துக்கொண்டே, “சீமை சிறுக்கியாட்டும் சீவி முடிச்சு சிங்காரிச்சு வயக்காட்டுல கலெக்டரு உத்தியோகம் பாக்க போனாளாம் வித்தக்காரி” என்று வியாக்கனம் படிச்சார். பொழுது விடிந்ததும் சண்டை வேண்டாம் என்று முகத்தைப் பரண்மேல்  வைத்துக்கொண்டு வேலை பார்த்தாள் மரகதம். “என்னத்த சுத்தம் பண்றா இந்தக் கருப்பாயி?” என்று அவளைத் திட்டிக்கொண்டே மாட்டுக் கொட்டகையைப் பெருக்கி வாரி, சாணத்தைக் குப்பைக்குழியில் கொட்டினாள். மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு போட்டுத் தண்ணீர் காட்டிவிட்டு,  பித்தளையில நல்ல உயரமாக இருக்கும் பால் பாத்திரத்தில் பாலைக் கறந்து, நுரை பொங்கப் பொங்க அப்படியே எடுத்து வந்து பட்டம்மா பக்கத்தில் ‘பட்’டென்று வைத்துவிட்டு, “பால் வாங்க வரவங்களுக்கு அளந்து ஊத்திடுங்க” என்று வெடுக்கென்று சொன்னாள். நுரை பொங்கற பாலை ஊற்றி இழைய காய்ச்சி, கருப்பட்டி போட்டு  புனிதாவுக்கும் மாமியாருக்கும் கொடுத்துவிட்டு, ‘ரெண்டு டபரா’ காபியை கூஜாவில் ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலில் வந்து, ‘வயக்காட்டுப் பக்கம் யாரு போறாங்க?’ என்று பார்த்துக்கொண்டு நின்றாள் மரகதம். “எலே.. குருவம்மா வயக்காட்டுப் பக்கம் போனீன்னா.. என் மாமங்கிட்ட  கொடுத்துடு” என்று சொல்லி, அந்தப்பக்கம் வந்த குருவம்மாவிடம் கூஜாவைக் கொடுத்தாள். “எக்காவ், உங்க வயலுக்குத்தான் அறுப்புக்குப் போறேன்” என்று ‘போற போக்குல’ சொல்லிக்கொண்டே போனாள் குருவம்மா. நேற்று, வயலில் வேலை செய்யும் ஆட்கள்,  “தினம் கூழு வேண்டாம்; அரிசிக் கஞ்சி வேணும்” என்று சொன்னதால் மரகதம் அடுப்பில் உலை வைத்து, பெரிய படியில் ஐந்து படி நொய் அரிசியை ஊறப் போட்டுவிட்டு,  பக்கத்துத் தெருவில் இருக்கும் இருக்கற நாவிதர் வீட்டுக்குப் போனாள். மரகதத்தைப் பார்த்ததும் ஓடி வந்த இருளாயியிடம், “நாளைக்கு புனிதாவுக்குத் தீட்டு எடுக்கணும். வயக்காட்டுல வேலை கெடக்கு,  கொஞ்சம் வெள்ளனயே வந்துடு” என்று சேதி சொல்லிவிட்டுக் கிளம்பினாள். வீட்டுக்கு வந்து கஞ்சி காய்ச்சி எடுத்துக்கொண்டு, தூதுவளை துவையலை  வாழையிலையில் மடித்து அண்டா மேல் வைத்துக்கொண்டு, முந்தானைத் தலைப்பை சிம்மாடு மாதிரி சுருட்டித் தலை மேல் வைத்துக்கொண்டு, ‘ஒத்த கையால’ அண்டாவைப் பிடித்துக்கொண்டாள். ‘ஒத்த கையை வீசி வீசி அவள் நடந்த தாள லயத்துல வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாரை மயங்கியது. நெல்லு பொறுக்கிக்கிட்டு இருந்த தேன்சிட்டு, அந்த அண்டா மேல இருந்த தட்டு விளிம்புல ஊஞ்சல் ஆடிக்கிட்டு வந்தது.’ இந்த காட்சியில் மயங்கிய சூரியனும், ‘தனக்கு ஒருவாய் கஞ்சி கிடைக்காதா?’ என்று, மரகதம் பின்னாலேயே ஓடிவர, மேகக் கூட்டங்கள் அலைஅலையாக ஒன்றோடு ஒன்று துரத்திக் கொண்டு சூரியனை முந்திக்கொண்டு ஓடிவர, ஒருவழியாக வயக்காட்டுக்கு வந்து சேர்ந்தாள் மரகதம். சுடச்சுட கஞ்சியைப் பார்த்ததும், கதிர் அரிவாளைப் போட்டுவிட்டு ஓடிவந்தாங்க. கும்பலா உட்கார்ந்து ஊரு கதையைப் பேசி உரண்டை இழுத்து கஞ்சி குடிக்கற சுகமும் வெஞ்சனம் இல்லாம உடல் உழைச்சி, வயிறாற கஞ்சி குடிக்கற சுகமும் சொர்க்கத்துக்குச் சமம். செந்தாமரை பெரிய மகளை கூவத்தூரில் உள்ள மச்சானுக்கே திருமணம் செய்து கொடுத்தார். நடு மகளை தேவாதூரில் கொடுத்தார். ‘இரண்டு  ஊரும் பக்கம் பக்கம்தான்; இருந்தாலும் நடந்து போக முடியாது’ என்று பொட்டி வண்டியைக் கட்டிக்கொண்டு கிளம்புகிற நேரத்தில், வயக்காட்டில் வேலை செய்தவங்க எல்லாம் வேலையை விட்டுவிட்டு கும்பல் கும்பலாக ஓடினார்கள். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 7

கரைசேராப் படகுகள் – 7

தொடர்கதை` வேகவேகமாக நான்கு கால் பாய்ச்சலில் வாய்க்கால் வரப்பெல்லாம் தாண்டி நடந்தார் செந்தாமரை. நான்கு வயல் தாண்டியதும் மாணிக்கம்  முன்னால் செல்வது தெரிந்தது. இங்கிருந்து சத்தமாகக் கூப்பிட்டார் செந்தாமரை;  “எலே மாணிக்கம்.. எலே மாணிக்கம்….” என்று கத்தினார். மாணிக்கம் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றுகொண்டான். கிட்ட நெருங்கியதும் மாணிக்கத்தைப் பார்த்து, “ஏதோ விசயமா விரசா போற போலிருக்கு” – எங்கே  செல்கிறாய் என்று கேட்காமல் நாசூக்காகக் கேட்டார். “ஆமாண்ணே, பெரிய கருப்பன் வீட்ல மாடு பிடிக்கறதுக்காக மாம்பாக்கம் போறண்ணே” என்று மகிழ்வாகச் சொன்னான் மாணிக்கம். “நல்லதா போச்சு; நானும் என் சின்ன மவள கொடுத்த வீட்டுக்குத்தான் போய்கிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவனுடன் சேர்ந்து நடந்தார் செந்தாமரை. “ஏம்பா.. மாடு வாரத்துக்கு பிடிக்கப் போறயா? மொத்தமா பிடிக்கப் போறயா?” என்று கேட்ட செந்தாமரைக்கு, “விலைக்குதான்ணே.. நல்ல  கறவை மாடா வேணும்ணே” என்று சொல்லிவிட்டு, “ரெண்டு பொட்ட புள்ள ஆயிடுச்சி. அதுங்களுக்குக் கல்யாணம் காட்சின்னு பாக்கணும். காடு கழனியை மட்டும் நம்பி என்ன பண்றதுண்ணே? அதான் மாடு வாங்கலாம்னு” இழுத்தா மாதிரி சொன்னான் மாணிக்கம். “அதுவும் சரிதான்; நல்ல ரோசனைதான்” என்று சொல்லிக்கொண்டே தலையை அண்ணாந்து பார்த்தார். மணி 12 இருக்கும் என நினைத்துக் கொண்டு, “எலே.. இது கோணங்கி வீட்டுக் கிணறுடா; தண்ணி தேனாட்டம் இருக்கும்” என்று சொன்ன செந்தாமரை, படியில இறங்கி தண்ணீரைக் கையில் அள்ளிக் குடிக்க, மாணிக்கமும் இணைந்துகொண்டான். துண்டை ஈரமாக்கி  வெயில் தெரியாமல் இருக்க, தலையில போட்டுக் கொண்டு நடந்தார்கள் இருவரும். மாம்பாக்கம் வந்ததும், “அண்ணே, நீங்க சம்பந்தி வீட்டுக்கு போயிட்டு, கருப்பன் வீட்டுக்கு வந்து மாடு வாங்கித் தாங்கண்ணே” என்றான் மாணிக்கம். “வேலியில போன ஓணானை வேட்டியில விட்ட கதையாயிடுச்சே; வயல்ல வெள்ளாமை இருக்கு, இவன்கிட்ட வியாபாரம் பேசறது தெரிஞ்சா மரகதம் வைவாளே” என்று மனதிற்குள் புலம்பினார். ஆனால் வாய் “வரேன் மாணிக்கம்” என்றது. சம்பந்தி வீட்டுக்குப் போனதும், “தங்கச்சி.. தங்கச்சி…” என்று கூப்பிட்டார். “அடடே! வாங்கண்ணே… என்று வரவேற்றபடி புனிதாவின் மாமியார் பவுனு  வெளியே வந்தார். “புள்ள பெத்த தீட்டு உள்ள வரக்கூடாது; இங்கேயே உட்காந்துக்கறேன்” என்று துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார் செந்தாமரை. “புனிதாவும் பேத்தியும் எப்படிண்ணா இருக்காங்க? எங்கண்ணா வயல் வேலை அதிகமா இருக்கு; கை உழைச்சாதான் கஞ்சிங்கற கதையா இருக்கு. இப்பகூட பொட்ட புள்ளைங்களும் அவரும் வயக்காட்டுலதான் இருக்காங்க. பேத்திய கூட வந்து பாக்க முடியல” என்று புலம்பினாள் பவுனு. “ஏழாம் காப்புக்கு குடும்பத்தோட வந்துடுங்கன்னு சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” என்றார் செந்தாமரை.   “ஆமாண்ணே, என் பேத்திக்குக் காப்பு செய்து போடணும். புள்ள பணம் அனுப்பவே இல்ல, வர்றது வயிறுக்கும் வாய்க்குமே பத்த மாட்டேங்குது” என்று பஞ்சப் பாட்டு பாடினாள் பவுனு. “அதனாலென்ன, காப்புதானே? நான் பார்த்துகறேன்” என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு, “மச்சான் வந்தா சொல்லிடுமா” நான் கிளம்பறேன் என்றார். “இருங்கண்ணே, சாப்பிட்டு போவீங்க” என்ற பவுனிடம்  “வேணாம்” என்று மறுத்துவிட்டுக் கிளம்பினார். வழியெல்லாம், ‘அறுவடைச் செலவையே எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை; இப்ப காப்பு செலவு வேறயா?’ என்று கவலைப் பட்டுக்கொண்டே வந்தார், கருப்பன் வீட்டுக்குச் சென்று மாட்டைப் பல்லு பிடித்துப் பார்த்தார். மடியில  கை வைத்துப் பார்த்தார். “என்ன மாணிக்கம், விலை பேசிடவா?” என்று கேட்டார். “ஆமாண்ணே, பேசி முடிச்சிடுங்க” என்றான் மாணிக்கம். கருப்பனும் செந்தாமரையும் துண்டைப் போட்டு விரலைப் பிடித்து விலை பேசினார்கள். ரொம்ப நேரம் பேரம் பேசி, கடைசியாக மாணிக்கத்திற்குத் திருப்தியாக விலையை முடித்துக் கொடுத்தார். மாட்டை ஓட்டிகொண்டு கிளம்பி வந்தான் மாணிக்கம். வரும் வழியெல்லாம் “;அந்த ஐயனாரப்பன்தான் உங்களைப்போல வந்து, எனக்கு மாடு வாங்கி கொடுத்தாரு” என்று  செந்தாமரையைப் புகழ்ந்து கொண்டே வநதான் மாணிக்கம். வயக்காட்டில் எல்லாரையும் விரட்டி வேலை வாங்கிக்கொண்டு இருந்தாள்  மரகதம். “கதிரெல்லாம் சீக்கிரம் களம் போய்ச் சேரணும். உங்க ஆண்ட வந்தார்னா என்னை ஆஞ்சிடுவார் ஆஞ்சி” என்று விசனப்பட்டாள். “அடியே.. அருக்காணி.. வாய்க்கால் ஓரத்துல கொஞ்சம் காச்சற கீரைய பறிச்சுக் கொடேன்” என்று அதிகாரம் பண்ணினாள் மரகதம். “புள்ள பெத்தவளுக்கா கீரை?” என்று அதிர்ந்தாள் அருக்காணி. “வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்; கத்தாழ முள்ளு கொத்தோட புடுங்குசாம்னு,  நடிக்காதடி. புள்ள பெத்தவளுக்கு எங்கனயாவது கீரை தருவாங்களாடி?” என்று அதட்டலாகச் சொன்னாள் மரகதம். கதிர் எல்லாம் களம் வந்து சேர்ந்ததும், கட்டெல்லாம் எண்ணி வைக்கோல் பிரி போட்டுக் கட்டி, மூலைக்கு மூலை அடையாளம் வைத்துவிட்டு  மாமனுக்காகக் காத்திருந்தாள் மரகதம். வயக்காட்டில் வேலை செய்த பெண்கள் எல்லாம் வாய்க்கால் தண்ணியில் குளித்துவிட்டு, முந்தானையைப் போட்டு அந்த வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்ப்பதற்கு வானில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் நிலவு ஓடி ஓடிப் பிடிப்பது போல அழகாக இருந்தது. வயக்காட்டில் யாரும் இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தாள் மரகதம். தூரத்தில் ஓநாய் கத்தும் சத்தம் கேட்டது. ‘பச்ச உடம்புக்காரிக்கு சோறு போடணுமே; இந்த மனுசனை இன்னும் காணோமே’ என்று தவித்தாள். தூரத்தில் மாமன் மாடு பிடித்து வருவதைப் பார்த்ததும், குழம்பினாள் மரகதம். தொடரும் சாம்பவி சங்கர்