ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

கட்டுரை: அக்ரி பரத்வாஜ் யூரல் மலையும் ஆறும் என அமைந்துள்ள பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குடியேறிய இனம் ‘ஸ்லாவ்’. பின்னர் ‘ரோஸ்’ அல்லது ‘ரூஸ்’ எனப்பட்டவர்கள் படையெடுத்தனர். இவ்விரு இனத்தவரும் கலந்து தோன்றிய இனமான ரஷ்யர்கள் வாழ்ந்த பகுதிதான் ரஷ்யா எனப்பட்டது. நவ்கோரட்-டைத் தலைநகராகக்கொண்டு ரூஸ் தலைவர் ரூரிக் என்பவர் ஸ்லாவ் இனத்தவரின் வேண்டுகோளின்படி ஆண்டு வந்தார். இவரது ஆதரவாளர்கள் ரூஸ் எனப்பட்டனர். இவர்களால் வரி வசூலிக்க நியமிக்கப்பட்டவன்தான் இவான். மூன்றாம் இவான் (ஐவான்) பைசாண்டையின் பேரரசின் உறவுக்காரப் பெண்ணை, போப்பின் உதவியால் மணந்துகொண்டான். பைசாண்டையின் பட்டம் எதேச்சையதிகாரி என்பதாகும். ரோமர்களின் பட்டம் சீசர் என்பதாகும். இரண்டையும் இணைத்து அழைக்குமாறு வேண்டினாள் அப்பெண். அதுதான் ரஷ்ய மொழியில் ஜார் என்றானது. பேரரசர் சூட்டிக்கொண்ட பெயர் இவ்வாறாகத்தான் வந்தது. ஜார் பேரரசைச் சார்ந்த மகா பீட்டர் ரஷ்யாவை ஆசிய நாடுகளின் கலாசாரத்திலிருந்து ஐரோப்பியப் பண்பாட்டு வட்டத்திற்குள் கொண்டுவந்தார். நிக்கோலஸ் ரோமோனோவ், இரண்டாம் அலெக்சாண்டர், மூன்றாம் அலெக்சாண்டர், இரண்டாம் நிக்கோலஸ் ஆகிய ரஷ்ய மன்னர்கள் அரசாண்டபோது மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். மக்களது அடிமைத்தனங்களையெல்லாம் அறுத்தெறியும் வகையில் வந்ததுதான் இப்புரட்சி. 1917இல் நடந்த ருசியப் புரட்சி அல்லது நவம்பர் புரட்சி, ஜார் மன்னரையும் உயர் குடியினரையும் விரட்டி அடித்தது. புதிதாக உருவாகி வந்த முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளை மாற்றி அமைத்தது. தொழிற்சாலைகள், வங்கிகள் ஆகியவற்றை அவற்றின் உடைமையாளர்களிடமிருந்து பறித்து, அவற்றைத் தொழிலாளர் மன்றங்களான சோவியத் கரங்களில் ஒப்படைத்தது. வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர் வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆகவே பாரதி இதனை ‘யுகப்புரட்சி’ என்று வர்ணித்தான். ‘குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு’ என்று வரையறுத்தான். ‘தேசிய இனங்களின் சிறைக்கூடம்’ என்று அறியப்பட்ட ரஷ்யா, புரட்சிக்குப் பிறகு பல தேசங்கள் மற்றும் அயல் நாட்டு விவகாரங்களின் விஷயத்தில் ‘தொழிலாளர் வர்க்க சர்வதேசியம்’ என்ற ஒரு திசைவழியைக் காட்டியது. இவ்வாறாக, சகல ரஷ்ய மக்களுக்கும் தானே பிரதிநிதி, தானே தலைவன் என்று கூறிக்கொண்டிருந்த, ‘இரணியன் போலரசாண்ட கொடுங்கோலன் ஜாரெனும் பேரிசைந்த பாவி, ஜார் மூடன், புரட்சியின் மூலம் இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்தான்’. பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த சுமடர் புயற்காற்று சூறைதன்னில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோலே, ஜாரைச் சுற்றி இருந்த மூடர்கள் மரமாக விழவில்லை. விழுந்து விறகானர்கள். மரம் போன்று விழுந்தால் வீட்டு கட்டிடத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். விறகாக வீழ்ந்தால் சாம்பலாகத்தான் போகும். மக்கள் எழுச்சி பெற்றால் மன்னனும் அவனைச் சார்ந்தோரும் சாம்பலாகத்தான் போவார்கள் என்பதை புதுமை விரும்பி பாரதி தனது கவிதை மூலம் தெளிவாகக் கூறுகிறார். உணவும் பண்டங்களும் எரிபொருளும் பதுக்கப்பட்டன. கள்ளத்தனமாக நாடு கடத்தப்பட்டன. இடைக்கால அரசின் அதிகாரப்பூர்வமான அறிக்கையின்படி ராத்தல் இரண்டு ரூபிளுக்குத் தகுதியான காபிக் கொட்டை வாங்குவதற்கு நுகர்வாளர் 13 ரூபிள் தரவேண்டிய சூழல் இருந்தது. மக்கள் ரொட்டி கிடைக்காமல் திண்டாடினர். போர் முனையில் படையாட்கள் பசியிலும் வதைந்தனர். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ? இனி ஒரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம். தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்திணை அழித்திடுவோம் என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கேற்ப, போல்ஷிவிக்குகளின் குரல், ‘அனைத்து ஆட்சியதிகாரமும் சோவியத்களுக்கே! ரொட்டி வேண்டும்; நிலம் வேண்டும்; யுத்தத்திற்கு முடிவு கட்டு; ஒழித்து கட்டு கள்ளச்சந்தை வாணிபத்தை’ என்பதாக ஓங்கி எழுந்தது. பாரதியைப் போன்றே, பாரதிதாசன் வழி வந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் நவம்பர் புரட்சியை, ‘புதிய ஒளி வீசுது பார்!’ என்று கூறுவதைப் பார்க்கிறோம்.‘சதிமிகுந்த கொடுங்கோலன் ஜார்முன் மக்கள்கதியுயரக் காணும் வழிஏது மின்றிமிதியுண்டார் அராஜகத்தின் மீளாச் சேற்றில்வெம்பி யழுதார் பசியால் வெந்தார் நைந்தார்இதைக்கண்டார் லெனின் ஸ்டாலின். செக்கிலிட்டதேங்காய்போல் தொழிலாளர் துயரும் கண்டார்உதிர்த்த கண்ணீர் துடைத்தெழுந்தார்உதித்ததுபார் புரட்சியெனும் உரிமைச் செம்போர்’ என்று வரவேற்றார். புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையிலான போல்ஷிவிக்குகள் ஆட்சி கூட்டுப்பண்ணை விவசாயம் மேற்கொண்டதை, ‘நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம்’! என வரவேற்றார். லெனின் புரட்சியைப்பற்றிக் கூறும்போது, ஏகாதிபத்திய யுகத்தில் புரட்சி என்பது ஒரு ஜனநாயகக் கட்டத்தின் வழியாகவே பிறக்கும் என்றார். அதற்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்று பெயரையும் இட்டார். நேரடியாக சோசலிசத்துக்குள் குதித்துவிட முடியாது என்றும் கூறினார். ஜார் மன்னனின் நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய ஆளும் முறைமையின் மீது மக்கள் அதிருப்தி அடைந்திருந்த நேரத்தில், அந்த அமைப்பை வீழ்த்தவேண்டுமானால் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தியாக வேண்டும் என கட்சியை ஏற்கச் செய்ய லெனின் பெரிதும் முயன்றார். அதில் வெற்றியும் கண்டார். ரஷ்யப் புரட்சி 1917 மார்ச், நவம்பர் என இரு கட்டங்களாக நடைபெற்றது (ரஷ்யக் காலண்டர்படி பிப்ரவரி, அக்டோபர்). செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்றழைக்கப்படும் பழைய பெட்ரோகிராடைச் சேர்ந்த சோவியத்கள், ஜார் மன்னனைத் தூக்கி எறிந்துவிட்டு கெரன்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசுக்கு முழு அதிகாரத்தை வழங்கினர். லெனின் தலைமறைவாக இருந்தார். ஏப்ரல் மாதம் ரஷ்யத் தலைநகர் வந்தார். மக்களைப் படிப்படியாக ஈர்த்து முழு அதிகாரத்தையும் அமைதியான வழியிலே கைப்பற்ற சோவியத்துகளுக்கு ஆலோசனை வழங்கினார். நவம்பர் 6 என்பது நேரத்துக்கு முந்தியது. நவம்பர் 8 என்பது கால தாமதமானது. நவம்பர் 7 மிகச் சரியானது என்று எடுத்துரைத்தார். சோவியத் அதிகாரம் நிலைநாட்டப்பட்டவுடன் சோவியத் அரசு சார்பாக அமைதி, ரொட்டி, நிலம் என 3 பிரகடனங்களை அறிவித்தார். மின்மயமாக்குதலையும் சோவியத் அதிகாரத்தையும் கூட்டினால் கம்யூனிசம் என்ற உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான சூத்திரம் என லெனின் குறிப்பிட்டார். தொழிலாளர் வர்க்கம் சீர்திருத்தத்திற்கான போராட்டம் என்பதைத் தாண்டி, ஒரு தொழிலாளர் வர்க்க ஆட்சியை உருவாக்கிய பெருவெடிப்பை இப்புரட்சி நிகழ்த்தியது. அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற உருவான எழுச்சியானது, முதலாளித்துவ அமைப்பு முழுவதையும் தூக்கி எறிவதற்கும் வழிவகை செய்கிறது என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியது. கற்றறிந்த ஞானியின் தலைமையிலான சோஷலிச அரசு, அடிமை முறையிலும் வறுமையிலும் இருந்த விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சமுதாயத்தின் எஜமானவர்களாக மேன்மை அடையச் செய்தது. இலவச வீட்டு வசதி, கல்வி, சுகாதார வசதி, கண்ணியமான வாழ்க்கை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படி செய்தது. புரட்சிக்குப் பிந்தைய கால்நூற்றாண்டுக்குள் வேலையின்மையைத் துடைத்துப் போட்டது. பூர்ஷ்வா வர்க்கத்தைப் பாட்டாளிகளால் நிச்சயமாக தோற்கடிக்க முடியும்; சோசலிசம் முதலாளித்துவத்தைத் தோற்கடிக்க முடியும்; ஒடுக்கப்பட்ட நாடுகள் ஏகாதிபத்தியவாதிகளை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய இப்புரட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு ஓர் உன்னதமான அனுபவம் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் காலனி நாடுகளிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்த – இருக்கும் நவம்பர் புரட்சி – சோவியத் புரட்சியை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்ளும்போதில் 70 ஆண்டுகளைத் தாண்டி அதன் விழுமியங்கள் நிலைகொள்ளாமல் போனதின் துயரமும் நெஞ்சில் அப்பிக்கொள்வதை பலமாக உதறிக்கொண்டு, ‘சோவியத் புரட்சியின் விளைவுகள் நீடுழி வாழ்க’ என்று உள்ளம் வாழ்த்துகிறது. ‘இடிபட்ட சுவர்போல கலி வீழ்ந்தான் கிருதயுகம் எழுக மாதோ’ என்ற தமிழ்க் கவியின் வாக்கு எழுந்து பொலிகிறது.

வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள்?

வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள்?

மகாபாரதத்தில் ஒரு காட்சி:அர்ஜுனன் அம்பு எய்யப் பழகிக் கொண்டிருக்கிறான்.துரோணர் கேட்கிறார், “மரம் தெரிகிறதா?”“இல்லை”“மரத்தின் கிளை தெரிகிறதா?”“இல்லை”“கிளையில் இலையின் அசைவுகள்?”“தெரியவில்லை குருவே”“கிளையில் அமர்ந்திருக்கும் குருவியாவது தெரிகிறதா?”“மன்னித்துக் கொள்ளுங்கள் குருவே. குருவியும் தெரியவில்லை”துரோணருக்கு ஆச்சரியம்.“பிறகு என்னதான் தெரிகிறது அர்ஜுனா?”“நான் வீழ்த்த வேண்டிய குருவியின் தலை மட்டும் தெரிகிறது”பெருமை தொனிக்க துரோணர் சொல்கிறார்:“அம்பினை விடுக” அப்படித்தான் பாஜக-வை வீழ்த்தக் குறி வைப்பதற்காக இந்தியாவின் பெரும்பாலான எதிர்கட்சிகள் வருகின்ற ஜுன் 23 அன்று பாட்னாவில் சந்திக்க இருக்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், டெல்லியிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சிவசேனாவின் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். சமீபத்திய கர்நாடகத் தேர்தல் வெற்றியும் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையும் காங்கிரசிற்கு உத்வேகம் அளித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் மேலே சொன்ன தலைவர்கள் அனைவருமே அவரவர் மாநிலங்களில் தங்களுக்கென வாக்கு வங்கியைக் கொண்டவர்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்து பாஜக-விற்கு எதிராகப் பொது வேட்பாளரை நிறுத்த முடியுமா என்பது மில்லியன் டாலர் வினா. அனைவருமே தோளில் கை போட்டு, காலை வாரி விடுவதில் கை தேர்ந்தவர்கள்தான். இருப்பினும் ‘நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் மதவெறிக்கு எதிராக, மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்’ என்ற புரிந்துணர்வு மட்டுமே, அவர்களுக்கு 2024 தேர்தலில் பாஜக என்ற குருவியின், இல்லையில்லை, வல்லூறின் தலையை மட்டும் பார்க்க வைக்கிறது. ஆம், வல்லூறுதான். இந்தியாவில் பாஜக தவிர வேறு கட்சிகளை ஒழித்துவிட்டு, பாஜக மட்டுமே ஒற்றைக் கட்சியாக இருக்க வேண்டும். ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே பண்பாடு என எல்லாவற்றையும் மதவாதம் என்னும் ஒற்றைச் சித்தாந்தத்தக் குடையின்கீழ் கொண்டுவரத் தீவிரமாகச் செயலாற்றி வரும் ஒன்றிய வல்லூறு. ஜனநாயகத்தின் சிறப்பே, வலிமையான எதிர்க்கட்சி என்பதுதான். எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சியல்ல; ஆளும் கட்சி தவறிழைக்கும்போது அதைச் சுட்டிக்காட்டி, சரிப்படுத்திச் செல்ல உந்தும் ஒரு அமைப்பு முறை. எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த ஆட்சியின் ஒற்றுமையையும் சிறிது காலத்திற்குப் பின்னர் வந்த வி.பி.சிங் ஆட்சியையும் இங்கே கவனத்தில் கொண்டால், இந்திய ஜனநாயகம் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு மதிப்பளித்திருந்தது என்று புரிந்துகொள்ள முடியும். அதேபோல கூட்டணி ஆட்சிமுறையில் குறைந்தபட்ச செயல்திட்டங்களுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆட்சி முறை. இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அதிகம் இருந்த நாட்களையும் அவர்கள் குறைந்துபோய், பாராளுமன்றம் என்பதே ஒரு கேலிக்கூத்து ஆகிவிட்ட இந்தக் காலத்தையும் ஒப்புமைப்படுத்தி தற்போது என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். பாராளுமன்றத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்களும் அவற்றை வழிநடத்திய காட்சிகளும் இருப்பதுதானே ஜனநாயகம்? ஒரு குறிப்பிட்ட மதத் தலைவர்கள், அவர்களுக்கு மாபெரும் ஓவியங்கள், சிலைகள் வைத்து, இந்தியா மதரீதியான நாடாக நிறுவ முயற்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இவற்றையெல்லாம் ஒற்றுமையுடன் மக்களிடம் கொண்டு சேர்த்து, மதவாதப் பொது எதிரியை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்கும் களமாக எதிர்க்கட்சிகள் சந்திப்பு இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு எப்படி இருக்கும், ஒரே நாளில் புரிதல் வருமா, பிரதமருக்கான பொது வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியுமா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்கென்று இருக்கும் கெத்து, ஈகோக்களை விட்டுக்கொடுத்து,பொதுவான கருத்தொற்றுமையை யார் உருவாக்கப்போகிறார்கள், இவர்களை ஒன்றிணைப்பவர்களாக யார் யாரை முன்னிறுத்தப்போகிறார்கள் என்பதெல்லாம் பெரிய விவாதப் பொருள்களாக இருக்கப்போகின்றன. முதல் சந்திப்பின் தலைவர் என்பதாலேயே நிதிஷ்குமார்தான் தலைமை என்று சொல்ல முடியாது. எல்லா மாநிலங்களுக்கும் ஜாதா சென்றதாலேயே ராகுலை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்ல முடியாது. ராகுல் காந்தி பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக நாட்கள் நடக்கவில்லை; குறைந்த அளவு நகரங்களையே தேர்வு செய்தார். தமிழ்நாட்டின் முதல்வர் பெயர் நாடு முழுவதும் பரவியுள்ளது; திராவிட மாடல் குறித்து அனைவரும் பேசுகின்றனர் என்றாலும் வட இந்தியத் தலைவர்கள் எந்த அளவு மதாராஸியை நம்புவார்கள் என்பதைக் கணிப்பது கடினம். இவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பாக இடதுசாரிகளைத்தான் காணமுடிகிறது. ஆனால் மற்றவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள், முக்கியமாக மம்தாவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அனைவரும் சேர்ந்து அந்தந்த மாநிலங்களில் தாங்களே தேர்தலைச் சந்தித்துக் கொள்ளலாம்; மாநில அளவில் எதிர்ப்பு அணியை உருவாக்கிக் கொள்ளலாம்; தேர்தல் முடிந்த பிறகு தலைமையைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று கருதுவார்களேயானால், அது எந்த அளவிற்கு சாதகமாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கலாம். அதற்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு பற்றி பாஜக தலைவர்கள் கூறியிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. பாலம் இடிந்துபோன பாட்னாவில் கூடுகிறார்கள்; அந்தப் பாலம் போலவே இடிந்துவிடப் போகிறது என்று கூறியுள்ளார் ஸ்மிருதி இரானி. ஆனால் அவர் சொல்ல மறந்தது, அந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுத்ததும் கடந்த முறையும் இடிந்து விழுந்ததைச் சரி செய்ததும் ஒரு குஜராத் கம்பெனி என்பதை. இதே நேரம் தமிழ்நாட்டில் வேறொரு முயற்சி நடைபெற்று வருகிறது. எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்பதைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இங்கே எதிரியின் எதிரியைப் பிளவுபடுத்தி அழிக்கும் வேலையை பாஜக செய்ய ஆரம்பித்துள்ளது. நாம் மேலே சொன்ன எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவத்தை இங்கும் பொருத்திப் பார்க்கலாம். டி.டி.வி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் புதிதாகக் கூட்டணி சேர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வைக் கைப்பற்றப் போவதாகக் கூறுகிறார்கள். ஓபிஎஸ் ஏற்கெனவே பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்டவர். பாஜக, தான் நினைத்ததைச் சாதிக்க வசதியாக எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த நினைக்கலாம். அதன்மூலம் தற்போது உருவாக்க முயன்றுவரும், தானே பிரதான எதிர்க்கட்சி என்ற மாயத் தோற்றத்தை நிலைநிறுத்த நினைக்கலாம். தற்போதைய எதிர்க்கட்சியை ஒன்றுமில்லாமல் செய்வதற்கான விதையை பாஜக ஊன்றுகிறது. அதற்கு, அமைப்பு ரீதியாகவும் சட்டரீதியாகவும் பலவீனமானவர்கள், ஒரே இடத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், நேற்றுவரை எதிரெதிராக இருந்தவர்கள், ஒருவர்மீது மற்றவர் மாறி மாறி துரோகி முத்திரை குத்தியவர்கள், திடீரென ஒன்றாகச் சேர்ந்துகொண்டு தண்ணீர் ஊற்றுகிறார்கள். இதை ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினையாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அதிமுக-வின் வீழ்ச்சி தமிழ்நாட்டில் பாஜக-வின் வளர்ச்சி என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் கவலைக்குரிய விசயம் என்னவெனில், ஆளும் கட்சியான திமுகவும் பாஜகவின் இந்த முயற்சிக்கு உரம் கொடுத்து உதவுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அண்ணாமலையைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை, தொழிற்கொள்கை, அதிகாரிகடம் குவிக்கப்பட்ட நிர்வாக அதிகாரம் போன்றவற்றைச் செயல்படுத்துவதில் ஒன்றிய அரசை விடவும் தீவிரம் காட்டுவதும் நமக்கு திமுகவின் மேல் ஐயத்தை ஏற்படுத்துகின்றன. கவர்னர் பதவியை ஒரு கட்சியின் தலைவர் பதவிபோல நடத்திக்கொண்டிருக்கும் போக்கு ஒரு தனி ஆவர்த்தனம். நாடு தழுவிய எதிர்ப்பு அணியில் இதன் தாக்கம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் மேற்கண்ட எதிர்க்கட்சிகள் சந்திப்பை திமுக எப்படிக் கையாளப்போகிறது என்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் சொன்னதுபோல் ஒரு சிட்டுக்குருவி தற்போது வல்லூறாக மாறி, மரத்தில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் இரையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. பாட்னா சந்திப்பில் எல்லாரும் சேர்ந்து வல்லூறை வீழ்த்துவதை இலக்காகக் கொள்வார்களா அல்லது வாய்ப்பைக் கைநழுவ விட்டுவிட்டு வல்லூறின் இலக்குக்கு இரையாவார்களா என்பதை வருங்காலம் நமக்கு உணர்த்தும். ஜுன் 23க்காகக் காத்திருப்போம்.

பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழகப் பள்ளிக் கல்வியில் நாம் எதிர்பார்க்காத அளவில் பல மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம் கல்வியைச் சீர்திருத்தம் செய்து, அடுத்த கட்ட நகர்வை நோக்கி வளர்க்கும் செயல்முறைகளா என்று பார்த்தால், அதுதான் இல்லை. புதிய தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தன்னார்வலர்களைப் பள்ளிக்குள் அனுமதித்தல் என்ற கருத்துதான், தொடர்ந்து தமிழகத்தில் பல விதங்களில் செயல்பாட்டில் வந்துகொண்டே உள்ளது. இல்லம் தேடி கல்வியில் ஆரம்பித்து, தற்போது பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பிக்கக் கூறியுள்ள ஃபெல்லோஷிப் தன்னார்வலர்  திட்டம் வரை அனைத்து நிலையிலும் தன்னார்வலர்கள்தான்.   நிகழ்காலக் கல்வியை நாம் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தால், இன்றைய பள்ளிக்கல்வி மிகுந்த ஆபத்தில் உள்ளது என்பதனை நாம் உணர முடியும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களின் பள்ளிகளில் நிகழ்ந்த அதிர்ச்சி தரும் நிகழ்வுகளே. திருப்பூர், சேலம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில், வட இந்தியாவிலிருந்து வந்துள்ள சில நபர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, கைவினைப் பொருட்கள் செய்யும் முறை குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகின்றனர். இந்த நபர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்ற அறிவிப்பை, முதன்மைக் கல்வி அலுவலர்களே வெளியிட்டுள்ளனர். இதற்காக மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் கொண்டு வந்துள்ள புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனராம். ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் தமிழ் மொழியாக்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். ஏற்கனவே, கொரோனா காலக் கற்றல் இடைவெளியால் வாசிக்கும் திறனில் குறைந்துள்ள மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், மாணவர்களின் மொழியறிவு முற்றாக அழிந்துவிடும் என்று புலம்புகிறார்கள். நாமும் பார்த்திருப்போம், நாம் படித்த காலத்தில்கூட, இதைப்போல ஒரு மனிதர் பள்ளிக்கு வருவார். மிகவும் நலிந்த பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது அவரது தோற்றத்திலேயே வெளிப்படும். காகிதத்தில் பூ, மரம், தொப்பி, மெழுகுவர்த்தி ஸ்டேண்டு போன்றவற்றைச் செய்து காட்டுவார். பின்னர், அதைப்போன்ற செயல்முறைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை மாணவர்களிடம் காண்பித்து, 2 ரூபாய் கொடுத்து விருப்பப்படுபவர்கள் வாங்கலாம் என்பார். ஒருசிலர் வாங்குவார்கள். அப்போது வந்தவர்கள் எல்லாம்   வேலை இல்லாத காரணத்தால், இதைப்போல ஒரு தொழிலை மேற்கொண்டு, அன்றாடம் பிழைப்பு நடத்த வருபவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில், நாம் புதிய தேசிய கல்விக் கொள்கையை வலிமையாக எதிர்த்து வரக்கூடிய சூழலில், நமது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் இரண்டு வடநாட்டு மனிதர்கள் வட இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். ஹிந்தி மொழி மட்டுமே பேசக் கூடிய இவர்கள் தமிழ் மொழியே தெரியாமல், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில், மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளின் நலனின் அக்கறையுள்ள ஆசிரியர்கள், தங்கள் எதிர்ப்புக்  குரலைக் கவலையுடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய பாடப்பிரிவேளைகளில் (Periods) மாற்றம் செய்துள்ளனர். அதில் தமிழ், ஆங்கிலம்,  சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஏற்கனவே  வழக்கில் இருந்த ஏழு பிரிவேளைகள் ஆறாகக்  குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு பிரிவேளையில் கல்வி இணைச் செயல்பாடுகள்  என்ற வகுப்புக்கான செயல்பாட்டை சேர்த்துள்ளனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து பெறப்பட்டு, பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக  ஒதுக்கப்பட்ட பிரிவேளைகளில் செய்யக்கூடிய பணிகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது.  காகிதம் மடித்தல், தொப்பிகள்  செய்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்தல் என ஏராளமான பட்டியலைக் கொடுத்துள்ளது.  அதற்கான ஆசிரியர்கள் ஏற்கனவே பள்ளிகளில் இருக்கின்றனர். பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று  கலை  ஆசிரியர்கள், சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களே குழந்தைகளுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால் அதை விடுத்து, பள்ளிக்குச் சற்றும் தொடர்பில்லாத வெளி நபர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதித்து செயல்முறைகள் வெளியிட்டு இருக்கின்றனர் கல்வி அலுவலர்கள், இதற்கு ஆணையர் கடிதமும் கூடுதல் பலமாம்.  மேலும்  கலை ஆசிரியர்களாக இல்லாத பிற ஆசிரியர்களும் சிறப்பாசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் கூட இச்செயல்பாடுகளை நேர்த்தியாகக் கையாள முடியும். காரணம்  இன்று இணையத்தில், வலையொலி (YOU TUBE)யில்  தேடினால் ஏராளமான காணொலிகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளே காணொலியைப் பார்த்து மிக அழகாகக் கைவினைப் பொருட்களைச் செய்து வருகின்றனர். குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும் என்றால், எந்த ஆசிரியரும் இந்தக் கல்வி இணைச் செயல்பாடுகள் பிரிவேளையை அணுகும்போது, குழந்தைகளுக்கு அவர்களாகவே  வழிகாட்டுவார்கள். ஏராளமான பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இருக்கின்றது. அங்கும் காணொளிகளைக் காட்டிப் பயிற்சி தரலாம்.  எல்லாமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது .குழந்தைகளது பெற்றோர்கள் பெரும்பாலும் அலைபேசிகளை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் அந்தச் செயல்பாடுகளின் இணையப்பக்கத்தை நாம் கூறினால் அவர்களாகவே தேடுவார்கள் அல்லது ஆசிரியர் அதைப் பார்த்து வந்து வகுப்பறையில் கற்றுத் தரலாம். இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது வட இந்தியாவிலிருந்து வந்துள்ள தன்னார்வலர்களை??!! அதாவது, வெளி நபர்களை முறையாகப் பள்ளிக்குள் அனுமதித்து, அவர்களுக்குப் புத்தகங்களை விற்கும் உரிமையையும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சில மாவட்டங்களில் ஆணை மூலமாக வழங்கியுள்ளது தெரியவருகிறது. அவர்களுடைய ஆணையின் செயல்முறைக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்வையில், ஆணையரின் கடித எண்ணையும் இணைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது, தமிழக பள்ளிக்கல்வித் துறை வடமாநிலங்களில் இருக்கக்கூடிய தனிநபர்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் கூடாரமாக மாறுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதனால், இங்கே பலன் அடைபவர்கள் யார்? என்ற கேள்வியும் எழுகிறது. சராசரியாக ஒரு பள்ளியில் சில நூறு புத்தகங்களை அவர்கள் விற்றாலும்கூட, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகங்களை விற்கும்பொழுது பல கோடி ரூபாய் பகல் கொள்ளை அடிக்கப்படும். இந்தத் தனி நபர்களுடைய முதலாளி யார்? எங்கிருக்கிறார்? அவர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கும் என்ன தொடர்பு? யாரோ சிலர் வருமானம் ஈட்டும் இடமாக தமிழகப் பள்ளிகளை மாற்றுவது ஏன்? இவற்றையெல்லாம் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சந்தேகக் கண்ணோடு நோக்கவேண்டும். இத்தகைய செயல்பாடுகளை ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது, பள்ளிகள் இது போன்ற வெளி நபர்களைக் கட்டாயமாக உள்ளே அனுமதிக்கக்கூடாது, அலுவலர்கள் உத்தரவு கொடுத்தாலும் அதை மறுப்பதற்கான உரிமை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இதில் தலையிட்டு நிராகரிக்க முடிவு செய்ய இயலும்.   இவர்களைப் போன்ற வெளிநபர்கள் எதற்காக நம் பள்ளிகளை நாடி வரவேண்டும்? பள்ளிக்குத் தொடர்பில்லாத நபர்களைப் பள்ளிக்குள் அனுமதிப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? இதைப்போன்ற செயல்பாடுகளைக் கற்பிக்கப் பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஆசிரியர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இல்லையெனினும் நியமனம் செய்ய வேண்டியது அரசின் கடமை.  நமது ஆசிரியர்களுக்கு இல்லாத திறன் ஒன்றும் அவர்கள் எடுத்து வரவில்லை. ஆகவே, தன்னார்வலர்களைப் பள்ளிக்குள்  அனுமதிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கத்தையும் அதனைக் கொல்லைப்புற வழியே அனுமதிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாட்டையும்  உறுதியுடன் நாம் நிராகரிக்க வேண்டும். சு. உமாமகேஸ்வரி 

மகாகவி நாள் குழப்பம்

மகாகவி நாள் குழப்பம்

பாரதி நினைவு நாள் மகாகவி நாளாகக் கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்குப் பாராட்டுகள். ஆனால், பாரதியின் நினைவுநாள் செப்டம்பர் 11 என்பதுதான் பிழையாக உள்ளது. பாரதி இறந்தது செப்டம்பர் 11 நள்ளிரவு 12 முடிந்து, செப்டம்பர் 12 அன்று ஒன்றரை மணிக்கு. சென்னை மாநகராட்சிப் பதிவேட்டிலும் செப்டம்பர் 12 என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அக்கால வழக்கப்படி காலை ஆறு மணி வரையிலான நேரத்தை முந்தைய தேதியில் குறிப்பிட்டு சிலர் பேச்சு வழக்கில் சொன்னதே வரலாறாக நிலைத்துவிட்டது. அனைத்திந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி உள்ளிட்டவை இன்றளவும் செப்டம்பர் 11 தேதியிலேயே பாரதி நினைவு நாள் நிகழ்வுகளை ஒலி/ஒளிபரப்புகின்றன. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பிற மாநிலங்களிலும் பாரதி சிலையில் நினைவுநாள் தவறாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தக் குழப்பத்தைச் சரி செய்யக்கோரி தமிழறிஞர்கள் பலர் குரல் எழுப்பி வந்துள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியர் ச. சுப்புரெத்தினம் எடுத்த முயற்சியின் பலனாக, எட்டயபுரம் பாரதி நினைவு மண்டபத்தில் உள்ள கல்வெட்டில், 2014 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 என்று மாற்றம் செய்யப்பட்டது. மேலும், பேராசிரியரின் முயற்சியால், புதுவை பாரதியார் இல்லத்தில் அவரது இறப்புச் சான்றிதழ் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவர் பாரதியின் நினைவுநாள் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர, செப்டம்பர் 12 என்பதை தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரி வருகிறார். இந்தச் சூழலில், தமிழக அரசே பாரதி நினைவுநாளை செப்டம்பர் 11 என்று அறிவித்துள்ளது வரலாற்றுப் பிழையை அதிகாரபூர்வமாக ஆக்குவதாக உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக மகாகவி நாள் செப்டம்பர் 12 அன்று கொண்டாடப்படும் என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் குழப்பம் முடிவுக்கு வரும்.

உண்மையான சமூகநீதி நாள்

உண்மையான சமூகநீதி நாள்

பெரியார் பிறந்த செப்.17-ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெரியார் விரும்பிய சமூக நீதி எது? அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதா? வெறும் உறுதிமொழி மட்டும் ஏற்பதா? பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது. இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று தங்களுக்குத் தாங்களே இட ஒதுக்கீடு வழங்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் பலன் அடைந்தவர்கள் வேற்றுகிரகவாசிகளைப் போல நடந்துகொள்ளும் அளவிற்கு அதன் வரலாறு தெரியாமல் இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகியுள்ளது என்பது சமூகநீதித் தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சமூக நீதி என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதோடு முடிந்துவிட்டதா? இதனைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா? ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களுக்கான இடப் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? எப்போது கட்சிப் பதவிகளில் வாரிசு அரசியல் ஒழிந்து, தலைமைப் பொறுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும்? எப்போது ‘கல்வியும் மருத்துவமும் விற்பனைக்கு’ என்ற நிலை மாறி அனைவருக்கும் சமமான கல்வியும் மருத்துவமும் கிடைக்கும்? இட ஒதுக்கீட்டின் பலன் எப்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும்? மிக முக்கியமாக, எப்போது பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாகும்? இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை, “நான் இப்போது பேசுவதைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பிய பெரியாரின் கனவு நனவாகும் நாளே உண்மையான சமூக நீதி நாளாகும். அப்படியான ஒரு நாள் உருவாகும் வகையில், இளைய தலைமுறையை வழிநடத்துவோம் என்று உறுதியேற்றுச் செயல்படுவதே உண்மையான சமூகநீதியை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக இருக்கும்.

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து நூறு நாட்கள் கடந்துவிட்டன. பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுகவும் முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளனர். கொரோனா இரண்டாம் அலைப் பரவல் உச்சத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் ஸ்டாலின். பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள், பலமான கூட்டணி, பத்தாண்டுகால அதிமுக ஆட்சி மீதான சலிப்பு, பாஜக அதிமுக கூட்டணி மீதான வெறுப்பு  என திமுக வெற்றிக்குப் பல காரணங்கள் உண்டு. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நூறு நாள் ஆட்சி குறித்தான நமது சில மதிப்பீடுகள் இவை. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வருக்கு முக்கிய சவாலாக இருந்தது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது முடக்கம் இருக்காது என்று அறிவித்திருந்த முதல்வர், வேறு வழியின்றி பொதுமுடக்கத்தைச் செயல்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மருத்துவமனைகளில்  படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பல சிக்கல்கள் நிலவின. திமுக முழுமூச்சாக எதிர்த்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தேவைக்காகத் திறக்க அரசு அனுமதி அளித்தது. லாக் அறிவித்த நேரத்தில் பேருந்துகளை இயக்கி அரசே நோய்ப்பரவலுக்கு வழி செய்தது. சிறு குறு நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுக் கிடக்க பெரும் தொழில் நிறுவனங்கள் தங்குதடையின்றி இயங்கின. இதனால் பெரும் பணக்காரர்களின் தொழில் தடையின்றி நடைபெற்ற அதே வேளை, எளிய மக்களின் தொழில்கள் முடங்கிப் போயின. கடந்த ஆண்டின் பொதுமுடக்கம் ஒன்றிய அரசினால் அறிவிக்கப்பட்டது என்பதால் வங்கிக் கடன் தவணை செலுத்துதல் போன்றவற்றில் கிடைத்த சலுகைகள் இந்த ஆண்டு கிடைக்காததால் நலிவடைந்தவர்கள் எளிய மக்களே. அதேநேரம், வாக்குறுதி அளித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் பணமும் மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார் முதல்வர். சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையே தடுப்பூசி வழங்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது. கொரொனாவைக் காரணம் காட்டி இன்று வரை பள்ளிகள் திறக்கப்படாதது கல்வித் துறையில் நிகழ்ந்துவரும் பெரும் பின்னடைவாகும். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு சற்றே ஆறுதல் அளித்தாலும் இனி வரும் காலங்களில் இத்தகைய சூழலைச் சமாளித்து, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் தொடர்வதற்கான மாற்று வழிகள் குறித்து அரசு இன்னமும் சிந்திக்கத் தொடங்காதது பெரும் ஏமாற்றமே. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஏராளமான அறிவிப்புகளை மட்டுமே அள்ளித் தெளித்துள்ளதோடு, முந்தைய ஆட்சியின் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் கடப்பதாக உள்ளது. பட்ஜெட்டுக்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் பண வீக்கம், வளர்ச்சி வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்கள் இன்றி அரசு கடனில் மூழ்கிக் கிடப்பதான தோற்றத்தை மட்டுமே உருவாக்கியது. முந்தைய ஆட்சியைக் குறை சொன்ன நிதியமைச்சர், கடன் வாங்குவதில் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். போலவே எல்லோருக்கும் இலவசம் கூடாது என்ற நிதியமைச்சரின் பதவிக்காலத்தில்தான் எல்லோருக்கும் 4000 ரூபாய் வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறை கடுமையான நட்டத்தில் இருப்பதாகவும் எல்லோருக்கும் பொதுவாக இலவசம் இருக்கக்கூடாது என்றும் நிதியமைச்சர் சொல்லிக்கொண்டே அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டார் என்று அவருக்கே வெளிச்சம். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே முடியாது என்று அடம்பிடித்த நிதியமைச்சர், பட்ஜெட்டில் வேறு வழியின்றி 3 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளார். ஆனால்‌ டீசலுக்கு விலைக்குறைப்பு செய்யவில்லை.அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் பள்ளிக்கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘சுவரொட்டி இல்லா சென்னை’ அறிவிப்பு, அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்து, அந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தற்போதுள்ள சூழலில் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு சுவரொட்டிகள் ஓட்டுவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். முக்கியமாக சிறிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் போன்றோர் தங்கள் விளம்பரங்களுக்கு சுவரொட்டிகளை மட்டுமே நம்பியுள்ளனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். விவசாயத்திற்கு முதன்முறையாக தனி பட்ஜெட் அறிவித்தாலும் ஏராளமான அறிவிப்புகள் மட்டுமே அதிலும் இடம்பெற்றுள்ளன. கரும்பு மற்றும் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சொற்பமான கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்யாது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்ட உயர்வுத் தொகையோடு இந்த உயர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பனை மரம் வெட்டத் தடை, பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மைப் பாதுகாப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஓதுவாராகப் பெண்களை நியமித்துள்ளதும் வரவேற்கத்தக்கதே. அதே நேரம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலும் மாரியம்மன் கோயில், சிறிய சிவன் கோயில்களில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது முதல்படி என்பதால் குளறுபடிகளைக் களைந்து அனைத்துக் கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் குறிப்பாக 50% அர்ச்சகர்கள் பெண்களாகவும் இருக்கும் நிலையை உருவாக்க அரசு முனைப்புடன் செயல்படவேண்டும். ஏ.கே.ராஜன் கருத்துக் கேட்புக் குழு அமைத்தது தவிர்த்து, நீட் தேர்வு ஒழிப்பு, ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் திமுக அரசும் முந்தைய அதிமுக அரசின் அணுகுமுறையிலேயே செயல்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதற்கும் ஆட்சியாளர்களாக செயல்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை முன்பு ஆட்சியில் இருந்த கட்சி என்ற முறையில் திமுக அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஊழல் வழக்குகள், சொத்துக்குவிப்பு வழக்குகள் என்று முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்குகள் பாயத்துவங்கியுள்ளன. இதற்கு முன்பாகவும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் கண்டுள்ளோம். ஆனால், வழக்குச் செலவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாவதைத் தவிர வேறு பயன்கள் விளைந்ததில்லை. ஊழல் பணம் மீட்கப்பட்டு கஜானாவில் சேர்க்கப்பட்ட வரலாறு இங்கே இல்லை என்பதால் இனியாவது காட்சிகள் மாறும் என நம்புவோம். மொத்தத்தில் நிறைகளும் குறைகளும் வழக்கமான நடைமுறைகளும் கலந்து நடைபோட்டு வருகிறது நூறு நாள் ஆட்சி.