கடற்படை எழுச்சியின் கதை ஆங்கில மூலம் : பிரமோத் கபூர்தமிழில் : ச.சுப்பாராவ் நூலறிமுகம் ஒரு புரட்சியைத் தயார் செய்யும் கட்சியானது வெகுஜனப் பரப்பில் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல குழுக்களாக இயங்கும். தகவல் தொடர்பு, தபால் தந்தி, தொலைபேசி மற்றும் போக்குவரத்து போன்ற கேந்திரமான துறைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் புரட்சிக்காரர்கள், புரட்சியின்போது துறைகளின் செயல்பாட்டைத் தமது கரங்களில் எடுத்துக்கொள்வார்கள். மக்கள் திரளிலிருந்து உருவாகும் புரட்சிகர இராணுவத்தோடு அரசின் படையும் ஒன்றிணையும் நேரத்தில் ஒரு புரட்சி வெற்றி பெறும். அந்த வேலையை இராணுவத்தில் இருக்கும் புரட்சிக்காரர்கள் செய்வார்கள். ஆனால் இராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படையிலிருந்து கிளர்ச்சி தொடங்கி, அது மக்கள் திரளோடு இணைய முற்பட்டது சரியா தவறா? வெகு மக்கள் திரளை வழிநடத்திய இயக்கங்களின் திருப்தியும் சம்மதமும் அதற்கு இல்லாமல் போனால் என்னவாகும்? அதுதான் ‘1946 கடற்படை எழுச்சி’. இந்த முன்னுரையோடு நூலறிமுகத்தில் நுழையலாம். மகத்தான மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிற தோழர் சுப்பாராவ் அவர்கள் சமீபத்தில் மொழிபெயர்த்து, பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் ‘1946’ நம்மில் பலருக்குத் தெரியாத வரலாற்றை மிகத் தெளிவாகப் பேசுகிறது. 1946 என்றவுடன் 70களில் பள்ளிப் பருவத்தை முடித்தவர்களுக்கு, வரலாற்றுப் பாடத்தில் ‘கடற்படை மாலுமிகள் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள்’ என்ற ஒரு வரிச் செய்தியாகத் தெரிந்திருக்கூடிய இந்த நிகழ்வு, 400 பக்கங்களில் பிரமோத் கபூரின்கடின உழைப்பினால் நம் கவனம் ஈர்க்கிறது. இப்போதைய பாடங்களில் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்த தருணத்தில் உலகமெங்கும் ஜனநாயக இயக்கங்கள் வலுப்பெற்று, காலனிய நாடுகள் அடிமை நுகத்தடியை உதறி விடுதலை பெற்றுவந்த தருணம். 1942இல் பிரிட்டிஷ் படை வசம் இருந்த சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தபோது, அந்தப் படையில் இருந்த பெரும்பாலான இந்திய வீரர்களை பிரிட்டிஷ் படை கைகழுவிப் போய்விட்டது. அந்த வீரர்கள் தம்மை இந்திய தேசிய இராணுவமாக மாற்றிக்கொண்டு ஜப்பானுடன் சேர்ந்துகொண்டார்கள். இந்த INA, 1943இல் நேதாஜியின் தலைமைக்குப் போனபோது இந்திய மக்கள் வாழ்த்தி வணங்கினார்கள். நேதாஜியும் இந்திய தேசிய இராணுவமும் இந்திய பர்மா எல்லையில் நாட்டின் கதவைத் தட்டியதை தேச மக்களுடன் பிரிட்டிஷ் படையும் வியந்து பார்த்தது. இந்திய தேசிய இராணுவம், இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டிஷ் படையிடம் ஜப்பான் தோற்றபோது பின்வாங்க நேர்ந்தது. பிரிட்டிஷ் படையினால் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தது. ஜவஹர்லால் நேரு நீண்ட நாட்களுக்குப் பின்னர் வழக்கறிஞர் கோட்டை மாட்டிக்கொண்டு நமது வீரர்களுக்காக வழக்காடினார். அந்த வீரர்கள் தூரக்கிழக்கு ஆசியாவில் செய்த சாகசங்களினாலும் அவர்கள் மீதான தேச பக்த ஆவேசத்தினாலும் மக்கள் உளக் கிளர்ச்சி கொண்டிருந்த காலம். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனின் நேச நாட்டுப் படை வென்றிருந்தது. அந்தப் படையில் போரிட்டு வெற்றிக்குக் காரணமாயிருந்த இந்திய வீரர்களும் கடற்படை மாலுமிகளும் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளால் பாராட்டுப் பெற்றிருந்தார்கள். தேசம் விடுதலை பெற்றுவிடும் என்ற நம்பிக்கை தேசியவாதிகளிடம் ஏறக்குறைய வந்துவிட்ட நேரம். 1942 ஆகஸ்ட் போராட்டம் ஒரு எரிமலை போல நடந்து முடிந்து, தேசம் முழுவதும் அந்த வெம்மை குறையாமல் இருந்த நான்கு வருடங்கள், இத்தகைய சர்வதேச மற்றும் தேசிய சூழ்நிலைகள் இந்தியாவில் விடுதலை ஆர்வத்தை உந்திக் கொண்டிருந்தன. போர் முடிந்தவுடன் தேசத் தலைவர்கள், நாட்டிற்கு விடுதலை தரப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பிரிட்டன் இநதியாவுக்கு விடுதலை தருவதில் தாமதம் காட்டிக்கொண்டுதான் இருந்தது. பம்பாய் கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் அரபிக் கடலைப் பார்த்தவாறு இருந்த வீடு ஒன்றில் வசித்துவந்த பிரான் நாயர் மற்றும் குஸூம் நாயர் தம்பதியரை (இவர்கள் மலையாளிகள் இல்லை என்று அறிக) சந்திக்க, காங்கிரசில் இருந்த அருணா ஆசப் அலி உள்ளிட்ட சோசலிஸ்ட் தலைவர்கள் வந்து போனார்கள். IPTA (Indian People’s Theatre Associastion) என்ற இந்திய முற்போக்கு நாடகக் கலைஞர்களின் அமைப்பைச் சேர்ந்த K.A.அப்பாஸ், சலீல் சௌத்ரி, பண்டிட் ரவிசங்கர் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களும் முன்னாள் இராணுவத்தினரும் வந்து போனார்கள். கப்பற்படையில் இருந்த இளம் மாலுமிகள் சிலரும் வந்தார்கள். தேச விடுதலைக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பேச்சு ஆயுதமேந்திய புரட்சியாக வடிவம் கொண்டது. பலாய் சந்திர தத், (சுருக்கமாக பி.சி.தத்) சலீல் ஷியாம், மதன் சிங், ரிஷிதேவ் பூரி, முகமது சாஹிப் கான், (சுருக்கமாக எம்.எஸ்.கான்) ஆகிய இளம் மாலுமிகள்தான் புரட்சியின் நாயகர்கள். நூலாசிரியர் பிரோமத் கபூர் தேடித் தேடிக் கண்டடைந்து தந்திருக்கிற இந்த வரலாற்றைப் படிக்கப் படிக்க, மனம் அந்தக் காலத்திற்கே சென்றுவிடுகிறது. பிரிட்டிஷ் ஆவணங்கள், அரசுமுறைக் கடிதங்கள், சுய சரிதைகள், விசாரணை அறிக்கைகள், தேசத் தலைவர்களின் கருத்துரைகள், பத்திரிகைகளில் வந்த செய்திகள், கள ஆய்வுகள் என்ற சலிப்பில்லாத தேடல் அதிசயிக்க வைக்கிறது. 1946 பிப்ரவரி முதல் நாள், ஆர்.கே.சிங் என்ற மாலுமி கடற்படையிலிருந்து இராஜினாமா செய்கிறார். அவ்வாறு விலகிக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை என்பது அன்றைய விதி. இது அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டபோது, தனது தொப்பியைக் கழற்றிக் காலால் உதைத்து, ‘நான் ராஜினாமா செய்கிறேன்’ என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். அரண்டு போகிறது கடற்படை அதிகார பீடம். ‘என்னவோ நடக்கப் போகிறது’ என்பதற்கான அபாய அறிவிப்பு. அவர் கைது செய்யப்பட்டார். ஏன் அவர் ராஜினாமா செய்தார்? இரண்டாம் உலகப்போரில் சண்டையிடுவதற்கு பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் ஆள் பற்றாக்குறை இருந்தது. பல விதமாக விளம்பரங்களில் ஆசைகாட்டி ஆள் சேர்த்தார்கள். பதின் பருவம் முடிந்தும் முடியாத பொடியன்களைச் சேர்த்துக்கொண்டு உலகப் போரில்ஆட்டம் போட்டது காலனி அரசு. நல்ல சம்பளம், பணி நிரந்தரம் என்பதெல்லாம் இந்தப் பையன்களைப் போரிட வைத்தன. போர் முடிந்ததும் அவர்கள் மிக எளிதாகக் கழற்றிவிடப்பட்டார்கள். இந்த பச்சைப் பொய்களைச் சுமந்துகொண்டிருந்த வெளியேற்றம், பணியில் இருந்த மாலுமிகளுக்கு அச்சத்தைக் கொடுத்தது. ஐம்பது பேர் தங்கக்கூடிய இடத்தில் 200 பேரை அடைத்துத் தங்கவைப்பது, சுகாதாரமற்ற, சுவையற்ற, தேவைக்கும் குறைவான உணவு, அதிலும் வெள்ளைக்காரர்களுக்கு முதல் தர உணவு, இந்தியர்களுக்குக் கடைத்தரம். இன்னொரு கொடுமை, வெள்ளை அதிகாரிகளின் இனவெறி, மிஞ்சிய அழுத்தத்துடன் கூடிய திமிர்ப் பேச்சுகள். இவற்றுக்கு எதிரான ஒரு ஆரம்பம்தான் ஆர்.கே.சிங்கின் ராஜினாமா. வெளியிலிருந்த எரிமலையின் வெடிப்புக்கான புறச் சூழ்நிலை, கப்பற்படை மாலுமிகளின் அகச் சூழ்நிலைக்கு நெருங்கி வந்திருந்ததன் ஒத்திகை, தல்வார் சிக்னல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே 1945 டிசம்பர் 1இல் நடந்த கடற்படை தினத்தன்று நடந்திருந்தது. பி.சி.தத் தனது தோழர்களுடன் அதை நிகழ்த்தியிருந்தார். கடற்படை தினத்திற்கு வந்திருந்த நிறவெறி பிடித்த அதிகாரிகளை மேடையிலிருந்து வெளியேறச் சொல்லும் அரசியல் முழக்கங்கள் முகத்தில் அடித்ததை, அவர்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திருக்கமாட்டார்கள். யார் இதைச் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத வெள்ளை நிர்வாகம், அதிகாரியை மாற்றி ஒரு மோசமான இனவெறியனைக் கொண்டுவந்து எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியது. அதற்கும் ஒரு பதிலடி கொடுத்தார்கள் தோழர்கள், அடுத்த மாதத்தில். 1946 ஜனவரி 21இல், இதே போன்று ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோஷங்களுடன் பரேட் மைதானம் அதிர்ந்தது. ஆனால் இந்த முறை பி.சி.தத். மாட்டிக்கொண்டார். தொடர்ந்து அவரது லாக்கர் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது புரட்சியின் பொறிகள் வெள்ளை நிர்வாகத்தின் முகத்தில் அடித்தன. பிறகு என்ன? பிப்ரவரி முதல் வாரத்திலிருந்தே மாலுமிகளை மோசமான வார்த்தைகளால் சீண்டி வந்த கிங், பிப்ரவரி 8ஆம் தேதி பாசறைக்கு வந்தபோது, மாலுமிகள் எழுந்து மரியாதை தரவில்லை. பிப்ரவரி 16க்குள் வேகமாக சம்பவங்கள் நடந்தன. கூட்டாக மாலுமிகள் கிங் மீது எழுத்தில் புகார் கொடுத்தனர். உலகம் முழுவதும் ஆணவத் திமிருடன் நடந்துகொண்டிருந்த ஏகாதிபத்திய வெள்ளை அதிகாரம் திடுக்கிட்டுப்போனது. கிங்கின் மிரட்டல் ஆணவம் தொடரவே, பிப்ரவரி 17இல் கடற்படை மாலுமிகள் தங்களுக்குத் தந்த உணவை மறுத்துப் போராட்டத்தைத் தொடங்கினர். உண்ணா நோன்பு உக்கிரமானது. தல்வார் சிக்னல் பள்ளி, புரட்சியாளர்கள் கையில் வந்தது. தல்வாரில் இருந்து எழுச்சி, கடற்படையின் தரைக் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் முழுதும் பரவியது. போராட்டக்காரர்கள் தங்களுக்கு ஒரு தலைமைக் குழுவை உருவாக்கினர். பெரும்பான்மை இந்துக்களாக இருந்த மாலுமிகளின் போராட்டக் குழுவிற்கு ஒரு முகமதிய மாலுமி எம்.எஸ். கான் தலைவர். அடுத்த இடத்தில் மதன் சிங். சீக்கிய மாலுமி. தரை அலுவலகங்களிலிருந்து, புரட்சி கப்பல்களுக்குப் பரவியது. பிரித்தானிய சாம்ராஜ்யக் கொடியும் கப்பற்படைக் கொடியும் இறக்கப்பட்டு தேசியக் காங்கிரசின் மூவர்ணக் கொடியும் முஸ்லீம் லீக்கின் பச்சைக் கொடியும் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியும் ஏற்றப்பட்டன. இந்தக் கொடிகள் ஏற்றப்பட்டதன் செய்தி என்ன? நாங்கள் தேசிய இயக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோம்; நாங்கள் மதங்கள் கடந்து ஒன்றுபட்டிருக்கிறோம்; நாங்கள் வர்க்கமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இணைந்திருக்கிறோம் என்பதே. இந்தச் செய்தி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செவிட்டில் அறைந்தது. புரட்சியை அடக்க இராணுவத்தின் பிற பிரிவுகளும் காவலர்களும் ஏவப்பட்டனர். ஆனால் அவர்கள் சொந்தச் சகோதரர்களைச் சுட மறுத்தனர். 1942 ஆகஸ்ட் போராட்டத்தை ஒடுக்கிய இந்திய இராணுவமும் போலீசும் 1946இல் உதவிக்கு வராது என்பதை ஏகாதிபத்தியம் புரிந்துகொண்டது. இந்தியாவுக்கு விடுதலை கொடுத்துவிடலாம் என்பதற்கான திட்டத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றம் அறிவித்து, அதை ஏற்பாடு செய்ய சர்.ஸ்டாப் போர்டு கிரிப்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழுவையும் அறிவித்தது. இந்தப் புள்ளியில்தான் 1946 எழுச்சி இறுதி சுதந்திரப் போர் ஆனது. பம்பாய் தாண்டி பல துறைமுகங்களுக்குப் புரட்சி பரவியது. கராச்சியில் தீவிரம் ஆனது. இசுலாமியர்களுக்கு தனி தேசம் இல்லாமல் இந்திய விடுதலைப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில்லை என்ற நிலை எடுத்த முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் லீக், கராச்சியில் பரவிய மதம் தாண்டிய கிளர்ச்சியை ரசிக்குமா? கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் புரட்சிக்கு ஆதரவு நிலை எடுத்தது. தொழிலாளர்கள், மாணவர்கள், வெகுஜன மக்களைக் கொண்டு வேலை நிறுத்தங்கள் செய்தது. பம்பாய் மக்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வீதியில் இறங்கினர். சாலைத் தடுப்பரண்களுக்குப் பின்னால் நின்று வெள்ளைக்கார போலீசையும் இராணுவத்தையும் எதிர்த்தனர். கலகம் வன்முறையானது. துப்பாக்கிச் சூட்டில் மக்களின் பிணங்கள் விழுந்தன. ரத்தம் சிந்தாமல் விடுதலை கனியப்போகிற தருணத்தில் ஏகாதிபத்தியத்துடன் அமர்ந்து பேசி வரவேண்டிய விடுதலை, இப்படிக் கனிவதிலோ அல்லது இந்தக் கலவரத்தைக் காரணம் காட்டி விடுதலை தள்ளிப்போவதிலோ