ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த எழுவரும் இன்று (11.11.2022) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு போன்றவற்றில் நம்மைப் பின்னோக்கி இழுக்கும் அதே நீதிமன்றம், இப்படியான தீர்ப்புகளையும் அவ்வப்போது வழங்குவதே நமக்கான ஆறுதலாகவும் நீதிமன்றத்தின் மீதான பிடிப்பாகவும் இன்னும் நீடிக்கிறது. எழுவர் விடுதலையின் கிரெடிட்டை எடுத்துக்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், தனி நபர்கள் இப்படி ஏராளனமானோர் வரிசையில் இருக்கிறார்கள். ஆனாலும்கூட, இந்த விடுதலைக்கு – தீர்ப்புக்கு ஒட்டுமொத்தமாக எவரொருவரும் உரிமை கோர முடியாது. இருப்பினும், எந்த ஒன்றுக்கும் தொடக்கப்புள்ளி என்ற ஒன்று வேண்டுமல்லவா? ஒரு கட்டடம் கட்ட முதல் கல், ஒரு கோலம் போட முதல் புள்ளி, ஒரு காடு வளர்க்க முதல் விதை.. இந்த வரிசையில், எழுவர் விடுதலைக்கு முதல் விதை போட்டவர் யார்? ஒருவேளை, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்குத் தூக்கு உறுதி செய்யப்படாமல், அவர்களின் கருணை மனு ஜனாதிபதியால் ஏற்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டிருந்தால், இந்த ஏழு பேரும் வாழ்நாள் முழுக்க சிறையிலே கிடந்துக்கூட மரணம் எய்தியிருக்கக்கூடும். ஆனால், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டி, ராம் ஜெத்மலானியை அழைத்துவந்து வாதாடி, அவர்கள் தூக்கிலிடப்படுவதைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் வழியே நிரந்தரமாக அவர்களின் தூக்குக் கயிற்றை அறுத்தெறிந்தவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ. மூவரின் தூக்கை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் முடிவையும் மாநில அரசே எடுக்கலாம் என்றும் கூறியது. அந்தத் தீர்ப்புதான் பேரறிவாளன் முதலான எழுவரின் விடுதலைக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. அந்தத் தீர்ப்பை முன்வைத்துதான் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன; அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியது. அம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததால்தான், இன்றைய தீர்ப்பில், ஆளுநர் தன் கடமையைச் செய்யத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதை முன்வைத்தே இன்று அறுவர் விடுதலை பெற்றுள்ளனர். இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சியாக, மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் விதமாக, சட்டமன்றமும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல், சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்ளும் ஆளுநர்களுக்கும் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி மட்டுமன்று. எதிர்காலத்தில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வாறு நடந்துகொண்டால், அதை முறியடிக்க உதவும் வழிகாட்டுதலாகவும் அமைந்துள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டப் போராட்டங்களுமே இன்றைய விடுதலையைச் சாத்தியப்படுத்தியுள்ளன. நளினியின் தாயார் தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதைப் போல, இந்த விடுதலையானது ஒரு கூட்டு முயற்சியே. அந்த முயற்சியில் மேலே குறிப்பிட்டதைப்போல, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், பொருளாதார ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் உதவியவர்கள் என்று அனைவரின் பங்களிப்பும் உள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடியவர்கள் விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மூவர் தூக்கை எதிர்த்து மீண்டும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியதன் வழியே, ‘இன்றைய மகிழ்ச்சிக்கான விதையை அன்றே ஊன்றியவர் வைகோ’ என்பதை யாரும் மறுத்துவிட முடியாது என்பதே உண்மை, தேவர் மகன் திரைப்படத்தில், “நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ; பிறகு உன் மகன் சாப்பிடுவான், அதன்பிறகு அவன் மகன் சாப்பிடுவான். ஆனா விதை.. நான் போட்டது” என்று சொல்வாரே அதைப் போல.