மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை என்பதை நோய் என்றும் கூறலாம், அறிகுறி என்றும் கூறலாம். மஞ்சள் காமாலைக்கு ஆங்கிலத்தில் jaundice. இது jaunice எனும் ப்ரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் மஞ்சள் நிறமாதல். இதை மருத்துவ ரீதியில் icterus என்றும் அழைப்பர். மஞ்சள் காமாலை நோயானது பிலிருபின்(Bilirubin) என்ற ஒரு மூலக்கூறினால் ஏற்படுகிறது. பிலிருபி னின் வாழ்க்கையை அறிந்து கொள்வோம். அப்போது தான் மஞ்சள் காமாலை எளிதாகும். நம் உடல் இயங்க இரத்தம் தேவை, இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள் குறிப்பிட்ட அளவில் இருப்பது அவசியம். அந்த இரத்தச் சிவப்பணுக் களால் தான் நம் இரத்தம் சிவப்பாக உள்ளது. இந்த இரத்தச் சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப் படுகிறது. இந்தச் சிவப்பணுக்கள் ஹீமோகுளோபினோடு இணைந்து ஆக்சிஜனை உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலம், நம் உடல் இயங்குகிறது. இந்த சிவப்பணுக்களுக்கு வாழும் காலம் என ஒன்று இருக்கும். அது 120 நாட்கள். 120 நாட்களுக்கு பின் வயது முதிர்ந்த இரத்த சிவப்பணுக்கள் உடைக்கப்படும் இந்த இரத்த சிவப்பணுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் இணக்கமற்ற பிலிருபின்னாக மாற்றப்படும். இந்த இணக்கமற்ற பிலிருபின் ஆனது ஒரு லிக்கியூடால் கரைக்கக்கூடிய ஒன்று. அதாவது நீரால் கரைக்க முடியாது. எனவே இதனை அல்புமின் நம் கல்லீரலுக்கு எடுத்து செல்லும். அங்கு இது யூரோபிலினிடோ குளுக்காரோனா ட்ரான்ஸ்பரேஸ் மூலம் இணக்கமான பிலிருபின் ஆக மாற்றும். இணக்கமான பிலிருபின் நீரில் கரையக்கூடிய ஒன்று. இது அங்கிருந்து பித்தப்பையின் பித்தக் குழாய் மூலம் கணையத்தை அடைந்து அங்கிருந்து குடலுக்குச் செல்லும். குடலில் உள்ள பொருட்களால் இந்த பிலிருபின் யூரோபிலினோஜன் ஆக மாற்றப்படும். யூரோபிலினோஜன் நிறமற்றது. இந்த யூரோபிலினோஜனின் 80% வரையிலான அளவு அப்படியே குடலில் உள்ள பொருட்களால் ஸ்டெர்கோபிலி னோஜன் அதன் பின் ஸ்டெர்கோபிலினாக மாற்றப்படும். இந்த ஸ்டெர்கோபிலின் தான் மலத்திற்கு ஒருவகை மஞ்சள் பழுப்பு நிறத்தை கொடுக்கிறது. மீதமுள்ள 20% யூரோபிலினோஜன் மீண்டும் கல்லீரலுக்கு வந்து அங்கிருந்து குறிபிட்ட அளவு சிறுநீரக உறுப்பிற்கு வந்து யூரோபிலின் ஆக மாற்றப்படுகிறது. இந்த யூரோபிலின் தான், நம் சிறுநீருக்கு இளம் மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. மேலே கூறப்பட்ட பிலிருபின்னின் வரலாறு, எப்போதும் நிகழக்கூடிய ஒன்று. மேலே குறிப்பிட்ட வரலாற்றில் ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும் பிரச்சினை காரணமாக ஒவ்வொரு வகை மஞ்சள் காமாலை ஏற்படும். அந்த வகைகளை அடுத்த இதழில் காண்போம். தொடரும்