நீலகண்ட பிரம்மச்சாரி – 4

நீலகண்ட பிரம்மச்சாரி – 4

காட்சி 4 (மேடையில் முந்தைய காட்சியில் ஓம்கார் சுவாமிகள் பேசிக்கொண்டிருந்த இடம் இருட்டாகவும் இன்னொரு பகுதி ஒளியிலும் இருக்க வேண்டும். ஒளி விழும் பகுதியில் காட்சிகள் விரிகின்றன) காலம் : 1907ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள் முற்பகல் வேளைகளம் : சென்னையில் இந்தியா பத்திரிகை அலுவலகம்பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை (பாரதியார் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். நீலகண்டர் படித்துக்கொண்டிருக்கிறார். வ.உ.சி. உள்ளே வருகிறார்) வ.உ.சி : வணக்கம் மாமா..! பாரதி : வாரும் மாப்பிள்ளை.. பட்டனத்திற்கு எப்போ வந்தீர்..? வ.உ.சி : இன்னைக்குக் காலையிலேதான் மாமா.. பாரதி : சுதேசிக் கப்பல் ஓட்டமெல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது..? வ.உ.சி. : வழக்கம்போல நெருக்கடிதான். இருந்துமென்ன? தூத்துக்குடி வர்த்தகப் பெரியவர்களும் மக்களும் தரும் பேராதரவில் சுதேசிக் கம்பெனி நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது மாமா. அது விஷயமாகவும் உங்களைப் பார்க்க வந்தேன். பாரதி : ‘சொல்லுங்க பிள்ளைவாள்.. வ.உ.சி. : கம்பெனிக்கு இன்னும் பங்குகள் சேகரிக்க வேண்டும். தேசபக்தியும் வர்த்தக நிபுணத்துவமும் தெரிந்த இளைஞர் ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் மாமா. பாரதி : கிடைச்சாச்சுன்னு வச்சுக்குங்க மாப்ளே.. (நீலகண்டரைப் பார்த்து) தம்பி.. இங்கே கொஞ்சம் வாரும். சிதம்பரம் பிள்ளையைத் தெரியுமல்லவா..? நீலகண்டன் : பிள்ளைவாளைத் தெரியாமலா..? (வ. உ. சி. யைப் பார்த்து) “வணக்கம் அண்ணா.. பாரதி : (வ.உ.சி.யிடம்) இவர் நீலகண்டன். இங்கிருக்கும் பிரசித்தி பெற்ற வர்த்தகக் கம்பெனி ஒன்றில் கணக்கராகவும் சரக்குப் பிடிக்கிறவராகவும் வேலை பார்க்கிறார். விபின் சந்திரபாலர் இங்கே வந்தபோது, அவரது பேச்சினால் தேசபக்தராகி இந்தியாவுக்கும் வேலை பார்க்கிறார். இப்போ பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, முழுமையாக தேச வேலைக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான்தான் நேரம் வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். வ.உ.சி. : ஆஹா..! சந்தோஷம். பாலரைக் கேட்ட பிறகும் ‘இந்தியாவுக்கு‘ வேலை செய்யாமல் போவாரா..? பாரதி : (வ.உ.சி.யின் சிலேடையைக் குறித்து) சபாஷ்.. (நீலகண்டனைப் பார்த்து) இனிமேல் பிள்ளைவாளிடம் நீ வேலை பார்க்கலாம். சுதேசிக் கம்பெனிக்கு பங்குகளைச் சேகரித்துக் கொடுக்கவேண்டும். அப்படியே பிள்ளைவாளுக்குத் துணையாக தேச சேவையும் செய்யலாம். என்ன சொல்கிறாய் தம்பி..? நீலகண்டன் : அண்ணா பேச்சுக்கு அட்டியேது..? இன்னைக்கே பிள்ளைவாளுடன் சேர்ந்துடறேன். வ.உ.சி. : இப்போது வேண்டாம் நீலகண்டன். நான் சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் சேர்த்து அழைத்துப் போக வந்திருக்கிறேன். மாமாவைப் பார்க்க வந்த முக்கிய வேலையே அதுதான். நான் தூத்துக்குடி சென்றபிறகு ஒருநாள் அழைக்கிறேன். வந்து விடுங்கள். நீலகண்டன் : சரி அண்ணா.. வ.உ.சி. : (நீலகண்டனைப் பார்த்து) பாலரின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள்.. எப்படி இருந்தது..? நீலகண்டன் : ஒரே நேரத்தில் வெயிலும் சாரலும் சேர்ந்ததுபோல.. ஒரே நேரத்தில் கள்ளும் தேனும் அருந்தியதுபோல.. ஒரே நேரத்தில் பிள்ளைவாளையும் பாரதியாரையும் கேட்பதுபோல.. வ.உ.சி. : பலே பலே.. மாமா.. தம்பிக்குக் கவிதையும் வரும்போல.. சகவாச வரமா..? பாரதி : இவன் சிங்கம்.. உங்களிடம் சேர்ந்தால் தங்கமாகவும் மின்னுவான்.. பராசக்தி அருள் பொழிவாள்..! வ.உ.சி. : கவி வாக்கு பலிக்க வேண்டும். இப்போ சூரத் காங்கிரஸ் வேலைகள் பற்றிப் பேசலாமா மாமா..? (மேடையில் மூவரும் இருக்கும் பகுதியில் ஒளி மங்கி, ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருந்த பகுதியில் ஒளி பரவுகிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. கவி வாக்கு பலித்ததா..? ஓம்கார் சுவாமிகள் : ஆஹா..! பாதி பலித்தது.. பாதி பலிக்கவில்லை தம்பி. சங்கர கிருஷ்ணன் : அது எப்படி சுவாமிஜி? ஓம்கார் சுவாமிகள் : சிதம்பரம் பிள்ளையே பெரிய சிங்கம். நான் அவர் பக்கத்தில் மின்னுவதெப்படி..? ஆகவே பாரதியார் சொன்ன நீலகண்ட சிங்கம், வேறு தங்கங்களைத் தயார் செய்யப் போய்விட்டது. அதற்கும் பிள்ளைவாள் பாசறையில் கற்றதுதான் காரணம் தம்பி. அதுதான் பாதி பலித்தது என்றேன். சிதம்பரம் பிள்ளை ஒரு வசீகரமான தலைவர். கனவான்கள், தொழிலாளிகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என்று, எல்லாத் தரப்பாளர்களிடமும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. சுருக்கமாச் சொன்னால், அவர் பின்னால் தூத்துக்குடி நகரமே இருந்தது. அது மட்டுமல்ல; சூரத் காங்கிரசுக்குப் போய்விட்டு வந்தபிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைவருமாகிவிட்டார். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! சுவாமிஜி, வ.உ.சி.யின் ஆளுமையை எத்தனை உணர்ச்சி பொங்க வர்ணிக்கிறீர்கள்..! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, பிள்ளைவாளின் ஆதர்சம் அப்படி.(கொஞ்சம் நிறுத்துகிறார்)சங்கர கிருஷ்ணன் : என்ன சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (குரல் தழுதழுக்க) பாரதியார் சொன்னாரே.. “வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார் மன்னனென மீள்வான்” என்று. அந்த வாக்கு, சிதம்பரம் பிள்ளைக்குப் பலித்திருக்க வேண்டும் தம்பி.. (சீடர் உள்ளே வருகிறார்) சீடர் : சுவாமி.. கோவில் பூஜைக்கு நேரமாகிறது. ஓம்கார் சுவாமிகள் : பூஜை முடித்து வந்தபிறகு பேசலாம் தம்பி.. (ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை பேசுவோம்.

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

காட்சி 3 காலமும் களமும் : அதே நாள்; அதே இடம். பாத்திரங்கள்: சங்கர கிருஷ்ணன் மற்றும் சீடர். (மேடையின் ஒருபகுதி இருளாகவும் மறுபகுதி ஒளியிலும் இருக்கிறது. இருளான பகுதியில் ஓம்காரின் அறை உள்ளது. ஒளிவிழும் பகுதியில் சங்கர கிருஷ்ணன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : “ஐயா, ஆசிரமம் எவ்வாறு நடக்கிறது? பொருள் உதவி யார் செய்கிறார்கள்.?” சீடர் : “சுவாமிஜியைத் தெரிந்த வடநாட்டு நண்பர்களும் இங்கேயே இருக்கும் சில பெரிய மனிதர்களும் தனவந்தர்களும் உதவி செய்கிறார்கள். சுவாமிஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும் பொது ஜனங்களும் உதவுகிறார்கள். இந்தப்பக்கம் உள்ள ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் உதவி பண்றாங்க..” சங்கர கிருஷ்ணன் : “நல்லது ஐயா, சுவாமிஜி பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்களேன்..” சீடர் : “ஐயா, நான் இங்கு வந்து சிலகாலம்தான் ஆகிறது. எனக்கு சீர்காழி. சுவாமிகளின் ஊர்க்காரன்தான். சுவாமிஜியின் பிரசங்கங்கள் இங்கு வெகு சகஜம். வடநாட்டு பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் இவரைப் பத்தியும் இவரோட பிரசங்கங்களையும் போட்டிருக்கிறார்கள். இவர் பெரிய புரட்சிக்காரர் என்பதெல்லாம் இங்கே உள்ளவர்களுக்கு அதிகம் தெரியாது. இவரும், தனது பழைய செய்திகளை யாருக்கும் சொல்வதும் இல்லை. எனக்குக்கூட கொஞ்சமாகத்தான் தெரியும்..” (சங்கர கிருஷ்ணன் சாப்பிட்டு முடிக்கிறார்) சீடர் : “தட்டத்திலேயே கை அலம்பிக்கொள்ளுங்கள். ஓய்வறை இருக்கிறது. சற்று ஓய்வெடுங்கள். சுவாமிஜியை மாலை சந்திக்கலாம். நான் வந்து அழைத்துக்கொள்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “ஓய்வு தேவையில்லை. ஆசிரமப் பணிகளைப் பார்க்கிறேனே..” சீடர் : சரி, வாருங்கள், சுற்றிக் காட்டுகிறேன். (இருவரும் அறையிலிருந்து வெளியேறுகிறார்கள். சாப்பாட்டு அறையில் ஒளி மறைந்து ஓம்கார் சுவாமிகளின் அறைப் பகுதியில் ஒளி வருகிறது. ஓம்கார் சுவாமிகள் அமர்ந்திருக்கிறார். சங்கர கிருஷ்ணன் உள்ளே வருகிறார்) நேரம் : மாலை 4 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : “வாரும் சங்கர கிருஷ்ணன். அமருங்கள். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தீங்களா?” சங்கர கிருஷ்ணன் : “ஆமாம் சுவாமி.. கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது.” ஓம்கார் சுவாமிகள் : “என்ன ஆச்சர்யம் தம்பி?” சங்கர கிருஷ்ணன் : “இந்த 85 வயசிலேயும் ஆசிரம வேலைகளை நீங்களும் செய்றீங்க.. அப்புறம்…” ஓம்கார் சுவாமிகள் : “அப்புறம் என்ன? சொல்லுங்கள்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமணர் என்பதால் ஆசிரமத்தில் எல்லாரும் பிராமணர்களாக இருப்பாங்களோன்னு நெனைச்சுட்டேன். ஆனா ஹரிஜன்கள் தொண்டர்களா இருக்காங்க. சமையல் வரைக்கும் அவங்க இருக்கறதும் ஆசிரமக் கோவில் பணிகள்ளே அவங்க சுதந்திரமா வேலை செய்யறதும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது..” ஓம்கார் சுவாமிகள் : “ஆமாம் ஒரு பன்னிரண்டு தாழ்த்தப்பட்ட குடும்பத்தச் சேர்ந்தவங்க இந்த ஆசிரமப் பணிகள்ள இருக்காங்க. எல்லா சாதிக்காரங்களும் இங்கே வந்து வேலை செய்யலாம். ஆசிரமத்துல சாதி வித்தியாசமே தெரியாது. இப்ப உங்க கண்ணுல பட்டுருக்கு. கண்ணுலயா.. காதுலயா.?” (கேட்டுவிட்டுக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி, நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் உங்களிடம் சந்தேகம் ஒன்று கேட்கலாமா?” ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக்கொண்டே) “இந்தப் பீடிகையிலேயே நீங்கள் கேட்கப் போவதென்ன என்று தெரிகிறது. கேளுங்கோ..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமண பாஷையை விலக்கிப் பேசுவது வியப்பளிக்கிறது..” ஓம்கார் சுவாமிகள் : (மீண்டும் வெடிச் சிரிப்புடன்) “40 வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். நான் இப்போது பிரசங்கி அல்லவா? தமிழில் பேசுகையில் இன்னும் முழுதாக மாறிவிட்டதுன்னு சொல்லமுடியாது சங்கர கிருஷ்ணன். நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்கோ.” சங்கர கிருஷ்ணன் : “அறுபது வருசத்திற்கு முன்னே நீங்கள் பெரிய புரட்சிக்காரர். இப்போ சாது. இந்த சந்நியாச வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்திப் போனீர்கள்..?” ஓம்கார் சுவாமிகள் : “இது உங்கள் கேள்வியாக இருக்கமுடியாது. கேட்க வந்ததை நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.” சங்கர கிருஷ்ணன் : “அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல, இது தப்பித்தலா என்று தோன்றுகிறது சுவாமிஜி..” (ஓம்கார் சுவாமிகள் மௌனமாகிறார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதை அடக்கிக்கொள்வது போன்ற மௌனம்) ஓம்கார் சுவாமிகள் : (கொஞ்சம் உஷ்ணமாகவே) “என்ன சொன்னீர்? கோழைத்தனம் என்றா? தப்பித்தல் என்றா? நான் கோழையில்லை தம்பி; தப்பிக்கவும் இல்லை. நான் அதிபயங்கரவாதியெல்லாம் கிடையாது. அந்த வார்த்தையே தப்பு. என்னால் தொண்டு செய்யாமல் சோம்பி இருக்க முடியாது. இளமையில் குடும்பம், கல்யாணம், சம்பாத்தியம் எல்லாமே விட்டுட்டு வந்தது நாட்டுத் தொண்டுக்காகத்தான்.” (சற்றே நிதானிக்கிறார். இப்போது குரல் சாந்தமடைகிறது) “தம்பி, என் இருத்தல் அவசியமல்லவா? 1930இல் விடுதலையானேன். நாடு மாறியிருந்தது. வெளியே வந்தபோது உப்புச் சத்தியாக்கிரகம் உச்சத்தில் இருந்தது. தேசபக்தி என்பது மாறியிருந்தது. போர்க்களம் மாறியிருந்தது. புதிய களத்தில், புதிய பாதையில், நான் பொருந்திப் போகவில்லை. நான் அறிந்திராத புதிய தேசத் தொண்டர்களோடு என் சேர்க்கை அமையமுடியாது என்ற நிலை. அதுபோக, இந்தச் சாது மனோநிலைக்கு நான் சிறையிலேயே வந்திருந்தேன். அதனால் என் இருப்புக்கும் நாட்டுப் பணியைத் தொடர்ந்து செய்யவும் இந்தப் புதிய பிறப்பைத் தேர்ந்தெடுத்தேன். பலாத்காரப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்தவனாக என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் வங்கப் புரட்சியாளர்கள் இருந்தார்கள்.. பாரதியார் இருந்தார்.. சிதம்பரம் பிள்ளை இருந்தார்.. அரவிந்தர் இருந்தார்.. வ.வே.சு.அய்யர் இருந்தார்.. சிங்காரவேலர் இருந்தார்.. கம்யூனிஸ்ட் பிரசாரகனாகவும் சிலநாட்கள் இருந்தேன். நான் ஒரு கலவை மனிதன். இந்தச் சாது வாழ்க்கைகூட முழுமையில்லை என்றே உணர்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “மன்னிக்க வேண்டும் சுவாமிஜி.. உங்களை சினப்படுத்திவிட்டேன்..” ஓம்கார் சுவாமிகள் : “பரவாயில்லை தம்பி.. இப்பவும், என் பழைய தோழன் சங்கர கிருஷ்ணன் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்..” சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி.. காலையில் ஆஷ் கலெக்டர் கொலை பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள்.. தொடர்ந்து சொல்லவேணும்..” ஓம்கார் சுவாமிகள் : “ஆஷ் கொலை.. அது ஒரு குறைப் பிரசவம்.. ஆனாலும் அது, வெள்ளைக்காரர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. இந்தியாவில் மட்டுமல்ல; இங்கிலாந்தில்கூட அதன் எதிரொலிகள் இருந்தன. அந்தக் கொலையை வாஞ்சி ஐயர் செய்தபோது நான் காசியில் இருந்தேன் தெரியுமா தம்பி..? ஆனால், என்னைத்தான் முதல் குற்றவாளியா ஆக்கினாங்க.” சங்கர கிருஷ்ணன் : ‘தெரிந்திருக்கிறேன் சுவாமிஜி.. ஆனால் உங்கள் வாக்கு மூலத்தில் நீங்கள் யாரையும் விட்டுக் கொடுக்கவில்லை.. குற்றத்தின் மோடிவிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முயலவில்லை..’ ஓம்கார் சுவாமிகள் : ‘அது எப்படிச் செய்வேன்.. அந்த செயலின் சூத்திரதாரி நானில்லை.. அது வ.வே.சு.ஐயர்.. ஆனால் அந்தத் தோழர்கள் என் வார்ப்புகள்.. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டார்கள்.. அவர்கள் அவசரத்தின் காரணம் சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கலெக்டர் இழைத்த கொடுமைகள்தான்.. சங்கர கிருஷ்ணன் : “விவரமாகச் சொல்ல வேண்டும்.” ஓம்கார் சுவாமிகள் : “சொல்கிறேன். அதைச் சிதம்பரம்பிள்ளையிடம் இருந்து தொடங்கவேண்டும். அப்போது, நான் பாரதியாரின் இந்தியா பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பாரதியாரைப் பார்க்க வந்த சிதம்பரம்பிள்ளையிடம் பாரதியார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அது 1907ஆம் வருசமாயிருக்கும். (சுவாமிகள் கண்களை மூடி நினைவுகளில் மூழ்குகிறார். ஒளி மங்கித் திரை விழுகிறது.)

நீலகண்ட பிரம்மச்சாரி – 2

நீலகண்ட பிரம்மச்சாரி – 2

காட்சி 2 (திரை எழவில்லை. மெல்லிய செவ்வொளி பரவி நிற்கிறது.பின்னணியில் குரல் மட்டும் ஒலிக்கிறது) குரல் : “பாரதியார் சொன்னதுபோல, தேசபக்தச் செம்மல்கள் பசி தாகம் மறந்து, சொந்த வாழ்க்கை பற்றிய நினைவே இல்லாமல் பட்டினியாக அலைந்ததெல்லாம் எமது நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதி. அது தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில், உன்னதமான காலமாக இருந்தது. விடியும்போது வீட்டில் இருந்தால், இருட்டும்போது வீடா அல்லது சிறையா என்று அவர்களுக்குத் தெரிந்திராது. பேச வாய்ப்பூட்டு; எழுதினால் தணிக்கை; நடந்தால் கண்காணிப்பு. இப்படி வாழ்ந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் அடுத்த கால்பகுதியில் என்னவானார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர்களில் சிலபேரின் வரலாற்றையேனும் நமது இளையதலைமுறைக்குச் சொல்லிவைக்கலாம் என்பதால், இந்த நீலகண்ட பிரம்மச்சாரியை இங்கு அழைத்து வந்துள்ளோம். கால வெள்ளத்தில் நாம் நூறு ஆண்டுகள் பின்னாலிருந்து பார்க்கப் போவதால், முன் பின்னாக, நம் வசதிக்கேற்றார் போலவே பார்க்கப் போகிறோம். நாம் சந்திக்கப்போகும் நிகழ்ச்சிகளும் நண்பர்களும் நமக்கு காலப் பிரமாணத்தை உணர்த்தி, உதவியாக இருப்பார்கள்.” (ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவ, திரை விலகுகிறது) காலம்: 1974 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் ஒருநாள் காலைகளம்: சத்குரு ஓம்கார் ஆசிரமம். மைசூர் நந்தி மலை அடிவாரம்பாத்திரங்கள்: சத்குரு ஓம்கார் சுவாமிகள், சீடர், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன் பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன், நந்திமலை அடிவார ஆசிரமம் முன்பு வந்து, வாசலில் நிற்கும் சீடரிடம் பேசும்போது காட்சி தொடங்குகிறது. கட்டட முகப்பில் ‘SATHGURU OMKAR ASHRAM, NANDHI HILLS’ என்ற பழைய போர்டு தொங்குகிறது. சங்கர கிருஷ்ணன்: “நான் ஒரு பத்திரிகையாளன். சென்னையில் இருந்து வருகிறேன். சுவாமிஜியைப் பார்க்கவேண்டும்..” சீடன் : “தங்கள் பெயர்?” சங்கர கிருஷ்ணன் : “சங்கர கிருஷ்ணன்” சீடன் : “கொஞ்சம் பொறுங்கள்.. சுவாமிஜியிடம் அனுமதி கேட்டு வருகிறேன்.” (உள்ளே சென்று சில கணங்களில் திரும்புகிறார்.) சீடன் : “வாங்க.. சுவாமிஜி அழைக்கிறார்..” (இருவரும் உள்ளே போகிறார்கள்.மேடை இருளுக்குள் போய், ஒளி திரும்பும்போது, ஆசிரம உள் அறையாகத் தெரிகிறது. சுவாமிகள் ஒரு பாயில் அமர்ந்திருக்கிறார். படித்துக்கொண்டிருந்த ஆங்கில செய்தித்தாளைக் கீழே வைத்துவிட்டு, சுவாமிகள் உள்ளே வரும் சங்கர கிருஷ்ணனைப் பார்க்கிறார். செய்தித்தாளின் தலைப்பில் பீஹார் மாணவர் போராட்டங்கள் பற்றிய செய்தியும் ஜெயப்ரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி அரசைக் கண்டித்திருப்பதும் பெரிய எழுத்துகளில் தெரிகிறது.) ஓம்கார் சுவாமிகள் : “வாங்க தம்பி.. அமருங்கள்.” (சுவாமிகளின் எதிரில் விரிக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு பாயில் சங்கர கிருஷ்ணன் உட்கார்ந்துகொள்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “வணக்கம் சுவாமிஜி..” ஓம்கார் : “வணக்கம். உங்கள் பெயர், எனக்குப் பழைய நினைவுகளை இழுத்து வருகிறது..” சங்கர கிருஷ்ணன் : “என் பெயரா சுவாமி?” ஓம்கார் : “ஆமாம்.. அது இருக்கட்டும்.. பிரயாணம் பத்திரமாக இருந்ததா..? ஜெயப்பிரகாஷ் கிளர்ச்சி பலமா இருக்கே..!” சங்கர கிருஷ்ணன் : “இங்கே எல்லாம் அவ்வளவு தீவிரம் இல்லை சுவாமிஜி..” ஓம்கார் : “நல்லது.. என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்?” சங்கர கிருஷ்ணன் : “பத்து நாள் முன்னாலதான் உங்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். தலைவர் காமராசர் உங்களப் பத்தி பேசின செய்தி, எல்லாப் பத்திரிகையிலேயும் வந்தது. உங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரருக்கான தாமிரப் பட்டயம் கொடுக்கணுமின்னு அரசாங்கத்தக் கேட்டிருந்தாரு காமராசர்..” ஓம்கார் : “காமராசருக்கு ரொம்ப நல்ல மனசு.. ஆனா அவரே பெரிய தியாகி ஆச்சே.. இப்படியெல்லாம் சலுகை கொடுப்பதற்கும் கேட்பதற்கும் தந்தா வாங்குறதுக்கும் அவருக்கே வெட்கமா இருந்திருக்கும். இப்போ விடுபட்டவங்களுக்குக் கேக்குறாரு. நான் இரண்டாம் தடவை ஜெயிலுக்குப் போகும்போது, அவருக்கு இருபது இருபத்தஞ்சு வயசு போல இருக்கும். சத்தியமூர்த்திகூட ஒரு தடவை பாத்திருக்கேன்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்களும் தாமிரப் பட்டயத்தை வேண்டாமுன்னு சொல்லிட்டதா செய்தி கேள்விப்பட்டேன்.” ஓம்கார் : “அதுகூட தெரிஞ்சிடுத்தா..? காமராசருக்கிட்ட போயி என் தம்பிதான் சிபாரிசு பண்ணிருக்கான். அவனை சத்தம் போட்டு, போன மாசம்தான் கடிதம் எழுதியிருந்தேன்..” சங்கர கிருஷ்ணன் : “ஏன் சுவாமி?” ஓம்கார் : “அது அவசியமில்ல தம்பி. நாட்டுக்காக செஞ்ச வேலை. நாங்க ஆரம்பிச்சு வச்சோம். காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா, ஜனங்க எங்க பின்னால வந்துருவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா, ஜனங்கள தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலையெல்லாம் செஞ்சார்.” (பேச்சை நிறுத்திவிட்டு, கண் மூடி ஏதோ யோசனையில் ஆழ்ந்து போகிறார். சில நொடிகள் சென்ற பின்னே..) சங்கர கிருஷ்ணன் : “சுவாமி..” ஓம்கார் : “பழைய யோசனை தம்பி..” சங்கர கிருஷ்ணன் : “அதெல்லாம் கேட்கணுமின்னுதான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன் சுவாமி..” ஓம்கார் : “அந்தப் பழைய கதையை எல்லாம் இப்போ நான் யாருக்கும் சொல்றதில்ல தம்பி..” சங்கர கிருஷ்ணன் : “அப்படி இல்லை சுவாமிஜி. உங்கள் கதை எல்லாருக்கும் தெரிய வேணும். ரொம்ப தூரத்திலிருந்து அதை எல்லாம் தெரிஞ்சுக்கிடத்தான் வந்திருக்கேன். நீங்க சொல்றத பத்திரிகைல போட உங்க அனுமதியும் வேணும் சுவாமிஜி..” ஓம்கார் : “முரட்டுத்தனமா முடியாதுன்னு சொல்ல முடியலயே தம்பி.. இது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. நான் சிறுபிள்ளையிலே இருந்தே ரொம்ப முரண்டு தம்பி. உங்க பெயரில எனக்கு ஏதோ வசீகரம் வருது. உங்ககிட்டே சொல்றேன். ஆனா, பத்திரிகையிலே கட்டாயம் வேண்டாம்..” சங்கர கிருஷ்ணன் : “ரொம்ப சந்தோஷம் சுவாமி. உங்க அனுமதி இல்லைன்னா உங்க கதை பத்திரிகையில வராது சுவாமி..” ஓம்கார் : “அந்தப் பழைய கதையை உன் பெயர் கொண்ட என் தோழனிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்..கடைய நல்லூர் சங்கர கிருஷ்ணன்..! அவன் ரொம்பத் தீவிரமான ஆளு. சிதம்பரம் பிள்ளைக்காக வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். சிதம்பரம் பிள்ளை வேலைக்காகவே நானும் அலைஞ்சபோது பழக்கமானான். பின்னால நாங்க இயக்கம் தொடங்கினப்போ, வாஞ்சிநாதனயும் இன்னும் சில பேரையும் அவன்தான் கொண்டு வந்தான். வாஞ்சி ஐயர் ஆஷ் கலெக்டர சுட்டப்போ, கூடப் போனது இவன்தான்..” (கதையை நிறுத்திவிட்டு..) “சங்கர கிருஷ்ணா, முதலில் ஆகாரம் செய்யுங்கள்.. நிதானமாகப் பேசலாம்..” (சீடனைப் பார்த்து..) “அழைத்துப் போய் ஆகாரம் பண்ணி வைப்பா..” (சங்கர கிருஷ்ணன் செல்ல, சுவாமிஜி மீண்டும் செய்தித்தாளைக் கையில் எடுத்துக்கொள்கிறார். மெல்ல இருள் பரவ, திரை விழுகிறது) (நாளை தொடர்வோம்)

நீலகண்ட பிரம்மச்சாரி

நீலகண்ட பிரம்மச்சாரி

நாடகம் காட்சி 1 காலம்: 1921ஆம் ஆண்டில் ஒருநாள் காலைகளம்: திருவல்லிக்கேணி – பாரதியார் வீடுபாத்திரங்கள்: நீலகண்டர், சகுந்தலா பாரதி, செல்லம்மா பாரதி மற்றும் பாரதியார் வீட்டு முற்றத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் சத்தமாகத் ‘திருக்குறள்’ படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் பாரதியாரின் இரண்டாவது புதல்வி சகுந்தலா. “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் யாசகம் பெற்றுத்தான் உயிர் தரிக்க வேண்டியவாறு இந்த உலக மக்களுக்கு இழிவு இருக்குமானால், இந்த உலகத்தைப் படைத்தவனும் கெட்டு ஒழியட்டும்.” (வாசலில் குரல் கேட்கிறது) குரல்: “அண்ணா.. பாரதி அண்ணா..” சகுந்தலா எழுந்து வாசலுக்கு வருகிறாள். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நிற்கிறார். தாடி அடர்ந்த முகம், அழுக்கான ஆடை, ஆங்காங்கே சில கந்தல்கள். கண்களில் சகுந்தலாவைத் தெரிந்துகொண்டதன் காரணமாக அன்பு கனிந்து நிற்கிறது. சகுந்தலா: “அப்பா இல்லையே.. வெளியே போயிருக்கிறார்..” வாசலில் நிற்கும் மனிதர்: “பாப்பா.. நீ சகுந்தலாதானே?! என்னைத் தெரியவில்லையா..? நான் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. பாண்டிச்சேரியில் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறேன்.” சகுந்தலா: “சரியாக நினைவுக்கு வரவில்லை மாமா.. உள்ளே வாருங்கள். அம்மாவைக் கூப்பிடுகிறேன். அம்மா.. அம்மா..” நீலகண்டர் உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளிருந்து பாரதியாரின் மனைவி செல்லம்மா வருகிறார். நீலகண்டர்: “நமஸ்காரம் மன்னி.. நான் நீலகண்டன்.. தெரியறதா..?” செல்லம்மா: “ஏன் தெரியவில்லை..? வாருங்கோ நீலகண்டன்.. இந்த நாற்காலியில் சித்த உட்காருங்கோ.. உங்கள் அண்ணா வெளியில் போயிருக்கிறார்.. இருங்கோ.. வந்துவிடுவார்.. குடிக்க ஜலம் கொண்டு வருகிறேன்.” சமையல் உள்ளுக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் செல்லம்மா. நீலகண்டர் குடித்து முடிக்கிறார். செல்லம்மா: “மிகவும் இளைத்துவிட்டாற்போல் காண்கிறது..” நீலகண்டர்: “கொஞ்சம் அலைச்சல்..” செல்லம்மா: “ஜெயிலில் இருந்து எப்போ வெளியே வந்தேள்..?” நீலகண்டர்: “இரண்டு வருசம் ஆச்சு..” செல்லம்மா: “இந்த ஊருக்கு எப்போ வந்தேள்..?” நீலகண்டர்: “ஒரு கெழமை இருக்கும்.. இன்னைக்குத்தான் அண்ணா வீட்ட கண்டுபிடிச்சேன்.. பாப்பாவுக்கு என்னை ஞாபகம் வரலை போல..” செல்லம்மா: “அப்போ அவ சின்ன பொண்ணு. அதனால ஞாபகம் இருக்காது..” (சகுந்தலாவைப் பார்த்து) “சகுந்தலா, இவர் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. தீவிர தேசபக்தர்.. அப்பாவோட சிநேகிதர்.. பத்து வருசத்திற்கு முன்னே நாம பாண்டிச்சேரில இருக்கச்சே, திருநெல்வேலி ஆஷ் கலெக்டர் கொலை நடந்த வழக்கிலே எட்டு வருசம் ஜெயில்ல இருந்தவர்..” (வாசலில் சத்தம் கேட்கிறது. பாரதியார் பாட்டொன்றைப் பாடியவாறே உள்ளே வருகிறார்) பாரதியார்: “பாரத சமுதாயம் வாழ்கவே.. ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே..” நீலகண்டர்: (எழுந்தவாறே) “அண்ணா..” பாரதியார்: “யார்..?” நீலகண்டர்: “நீலகண்டன் அண்ணா.. என்னைத் தெரியலையா..?” பாரதியார்: “ஆஹா..! வாரும் நீலகண்டன்.. எப்போ வந்தீர்..?” நீலகண்டர்: “சித்த நேரம் முன்னேதான்..” பாரதியார் : “ஜெயில்ல ரொம்ப சிரமப்படட்டீர் போல.. உடம்பு துரும்பாயிட்டுதே ஓய்..” நீலகண்டர் : “கொஞ்சம் படுத்தினார்கள்தான்.. நானும் விட்டதில்லை. அரசியல் கைதிகளுக்குண்டான மரியாதையை ஜெயில்ல தொடர்ந்து கேட்டதினால, என்னைக் கலகக்காரனாவே நடத்துனாங்க..” பாரதியார் : “அதல்லவோ உம்மோட பெருமை.. நீலகண்டன்னாலே சிம்மம் அல்லவா..?”(செல்லம்மாவைப் பார்த்து) “செல்லம்மா.. சாப்பாடு தயார்தானே?” (கனவில் இருப்பவர் போன்ற தோற்றத்தில் கண்களை அகல விரித்து, நீலகண்டரிடம்) “ஓய் நீலகண்டன்.. ருசிய தேசத்து சேதி ஒன்னு தெரியுமோ..? அங்கே போல்ஸ்விக்-ன்னு ஒரு கட்சியாம். மக்கள் ராஜ்ஜியம் கொண்டு வந்திருக்கிறார்களாம். அங்கே இனிமேல் பசி, பட்டினி எதுவுமிராதாம்.. அதுபோல சமுதாயம் இந்தப் புராதன பாரத தேசத்திற்கு வந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்..?” நீலகண்டன் (குறுக்கிட்டு): “அண்ணா.. ஒரு நாலணா வேண்டும்..” பாரதியார்: “ஏன்..?” நீலகண்டன்: “சாப்பிட்டு முழுதாக ஒன்றரை நாள் ஆச்சு.. பசியில் நீங்கள் பேசுவதுகூட சரியாகக் காதில் விழவில்லை அண்ணா. நாலணா தந்தீர்கள் என்றால் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவேன்..” பாரதியார்: “பாண்டியா.. இதென்ன கொடுமை..!! செல்லம்மா.. நம்ம வீட்டில் ஆகாரம் ஏதேனும்..?” செல்லம்மா மௌனமாக உள்ளே சென்று திரும்பி வந்து, நீலகண்டரிடம் செல்லம்மா: “இந்தாருங்கள்.. போய் ஏதேனும் ஆகாரம் முடித்து வாருங்கள்..” நீலகண்டர்: “வந்தனம் மன்னி..” (நீலகண்டர் வெளியே நடக்கிறார்) பாரதியார்: “அம்மா.. காளி.. உன் பக்தர்கள் நிலையைப் பார்.. இந்த நாட்டில் பெரிய புரட்சியைக் கொண்டுவருவதற்காக சிறையேற்ற மனிதர், பட்டினியில் அலைவதென்றால் நீ இருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது..?”(பாடுகிறார்) “இனியொரு விதிசெய்வோம் – அதைஎந்த நாளும் காப்போம்தனியொருவனுக் குணவிலையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்” (திரை விழுகிறது) (நாளை தொடரும்)