பாதி ஆப்பிள் விளைவு

பாதி ஆப்பிள் விளைவு

காதல் எனப்படுவது யாதெனின்.. ஒளி வீசிக்கொண்டிருந்த ஆதவன் கார்மேகக் கூந்தலுக்குள் மறைந்துகொண்டான். ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்த கிளைகளும் உரசி உரக்க உரையாடிக்கொண்டிருந்த இலைகளும் தங்களின் அசைவுகளை நிறுத்திக்கொண்டன. மின்கம்பங்களுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பிகளில் கொஞ்சிக்கொண்டிருந்த காகங்கள் இரண்டு சட்டென்று சிறகை விரிந்துப் பறக்க, ஈர்ப்புவிசை மாறுதலால் துள்ளி எழும்பிக் குதித்து ஆடின மின்கம்பிகள். தன் வாலைப் பின்னங்கால்களுக்குள் உள்ளிழுத்துக்கொண்டு சாலையோரத்தில் படுத்துக்கொண்டது தெருநாய் ஒன்று. என் மனதோ விழித்துக்கொண்டது. திடீரென ஏற்படும் காலமாற்றமும் தென்றலின் தீண்டலும் வீணை நரம்புகளின் மீட்டலும் அவளின் வருகைக்கான சமிக்ஞைகளே. கருவிழிக்குள் அவளின் பிம்பம் குவியும்போதெல்லாம் என் உடலின் ஒவ்வொரு அணுவும் கனவுலகில் சஞ்சாரிக்கிறது. புத்திக்கும் மனத்திற்கும் மட்டுமல்ல, என் உடல் அணுக்களுக்கும் கனவுகாணும் சக்தியைக் கற்றுக்கொடுக்கும் வல்லமை அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் உண்டு. அவளை நினைக்கும்போதெல்லாம் உடலெங்கும் புல்லரிப்பதும் அதனால்தானே. இதனை விஞ்ஞானம் என்பதா அல்லது என் மெய்ஞானம் என்பதா? இது உன்மீது நான் கொண்ட காதலா? அல்லது என் பருவ வயதின் காமமா? குயில்கள் கூவுவதும் மயில்கள் தோகையை விரித்தாடுவதும் மலர்கள் மலர்ந்து மணம் பரப்புவதும் தன் இணையைக் காமத்திற்கு அழைக்கும் காதலன்றி வேறேது? இந்தக் காதல் என்னும் ரசாயன மாற்றம் மனிதர்களுக்கு மட்டுமானதா என்ன?   அவளின் சுவாச ஒலி என் செவிகளுக்குள் புது ராகம் பாடியது. அவளின் வாசம் என் சுவாச மலர்களை மலரச் செய்தது. தடையின்றிச் சுரந்த உமிழ் நீரை முழுவதுமாய் விழுங்கமுடியவில்லை. அது தொண்டைக்குள் உருளும் உருண்டைக்குள் சிக்கிக்கொண்டது. முதலாம் புலனுறுப்பான என் விழிகள் அவள் வரும் திசையைத் தேடின. அவளின் நெளிந்து சுருண்டு காற்றில் ஆடும் காதோரத்துக் கூந்தலோ, இடது வில் புருவத்தின்மீது தவம் செய்யும் மச்சமோ, குவிந்த செவ்விதழ்களின்மீது தீட்டிய ஓவியத்தை ஒத்த ரேகைகளோ, சங்குக் கழுத்தினில் தொங்கியபடி ஊஞ்சலாடும் முத்து மாலையோ, ஏதோ ஒன்று எந்தன் பித்தம் தலைக்கேற்றும் வித்தையைக் கற்றறிந்திருக்கிறது. அன்பு, பாசம், நேசம், விருப்பம், நட்பு எனப் பல சொற்கள் தமிழில் இருந்தாலும் காதல் என்ற சொல் புதிதாய் ஏன் வந்திருக்கும்? பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ இல்லாத ஒரு உணர்வு மனிதர்களுக்கு மட்டுமா உள்ளது? மனிதனைத் தவிர மற்றவற்றுக்குக் காமம் என்பது பசியைப்போல, உறக்கத்தைப் போல எப்போதாவது ஏற்படும் உடலின் தேவைதானே.. பசி வரும்போது வேட்டையாடுவதைப்போல, காமமும் உணர்வெழுச்சியின்போது மட்டுமே. அவை அனைத்து நேரங்களிலும் காமத்தைத் தூக்கிச் சுமப்பதில்லை, நம்மைப்போல. மொட்டுகள் மலர்வது வண்டினங்களுக்குத் தெரிந்துவிடும்தானே.! அவளை நான் உணர்வதும் அதுபோலத்தான். வண்டினங்களின் பசிதான் மலர்களில் தேன் உண்பதெனில், அதில் காமம் ஏது? காதல்தான் ஏது? மலர்கள் உணவுதானெனில் அவளை நான் மலரோடு பொருத்திப் பார்ப்பது தவறல்லவா? காம உணர்வு மனிதனை மட்டும் எல்லா நேரத்திலும் ஆட்கொள்வது ஏன்? மனிதன் ஆடைகொண்டு தேகத்தை மறைக்கவேண்டியதும் அதனால்தான் தோன்றியதாம். பருவம் வந்ததும் நம் மூளையில் எப்போதுமே காமச் சுரபிகள் சுரந்துகொண்டேதான் இருக்கின்றன. பசி, தூக்கம் மறந்தும் காமத்தில் திளைத்திருக்க நம்மால் முடிகிறது. காமத்தை மறைக்கும் ஆடையை நெய்வதென்பது மனிதனால் முடியாத ஒன்றாய் இருக்கிறது. உலகில் இருக்கும் அனைத்தும் நமக்காகத்தான் என அபகரித்த மனிதனால், சக மனிதனை அபகரிக்க முடியவில்லை. பசிக்கு உணவு கிடைப்பதுபோல காமப்பசியை எளிதில் தீர்த்துக்கொள்ள முடியாது தவிக்கிறான். பலம்கொண்ட வர்க்கம், பலம் குறைந்த வர்க்கத்தை அடிமையாக்கக் கற்றுக்கொண்டது. இருவரும் ஒருவருக்கொருவர் காமப் பசியைப் பகிர்ந்துகொள்ள இந்த ஆண்டான் அடிமை உறவு கைகொடுக்கவில்லை. காமம் என்னும் கட்டில் முற்களாலும் பாறைகளாலும் செய்யப்பட்டிருந்தன. வலியும் வேதனையும்தான் புணர்வு தருமெனில் அதை ஏன் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே இருக்கிறான்? இவை அனைத்திற்கும் பதில் தேடும் முயற்சிதான் காதல். காதல் எனப்படுவது.. காதல் என்பது ஓர் கற்பனை ஒழுங்குவாதம். புணர்தலையும் புணர்வுச் சிந்தனையையும் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றவே காதல் என்ற ஒன்றை நம்பவேண்டியிருக்கிறது. காதலும் கடவுளும் ஒன்றுதான் போல. நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு சில வரைமுறைகளை வகுத்துக்கொள்ளத்தான் கடவுள் நம்பிக்கை என்னும் கற்பனை ஒழுங்குவாதம் தேவைப்படுகிறது. அதுபோல, காமத்திற்குக் காதல் தேவைப்படுகிறது. இதோ கார்மேகங்களின் புணர்வில் முதல் துளி மண் சேர, மண் வாசம் மணக்கத் தொடங்கிவிட்டது. அவளை ஆரவாரமாய் வரவேற்கத் தொடங்கிவிட்டது. என் இதயமும் படபடக்க, சாரல் மழை என் மேனி நனைக்க, உள்ளுக்குள்ளும் நனையத் தொடங்குகிறேன். என் இமைகள் பட்டாம்பூச்சியாய்த் துடிக்கின்றன, அவளின் கடைக்கண் பார்வைக்காக. எளிய மொழியில் சொன்னால், காதல் என்பது உருட்டு மட்டுமே. உருட்டுவதாலேயே காதல் உயிர்வாழ்கிறது. எல்லாம் ஏவாள் கடித்துக் கொடுத்த பாதி ஆப்பிளின் விளைவு என்ற உருட்டைப்போலவே.

வன்மம் களைந்த மெய்

வன்மம் களைந்த மெய்

கவிதைகள் மயில் குட்டி ஒளியை உள் வாங்கியமகிழ்வுந்தின் கண்ணாடியொன்றுகம்பி மயிலுக்குக் கதவு திறந்திடஅது கருக்கொண்டுவெண்சுவரில் பிரதிபலித்தாடுகிறது அது கண்டுசிறு திடலென மேடு கண்டதன் வயிற்றில் குறுகுறுத்தகுட்டி மயிலை விரல் பூசிவண்ணம் செய்கிறாள்தோகதவதி வன்மம் களைந்த மெய் மொழி தவிர்த்த துக்கம்சில உடைந்துவெளிக்கொணராமல் இருக்கஇறுகிய குரல்வளைகயிற்றை அறுத்தெறியதேவையாக ஒருகுளியலறை கிட்டியது பொதுபொதுவெனக் கொட்டியநீர் தாங்கிய குழாயினைத்திறக்கும் ஓசையில்அடித்துச் செல்லப்பட்டவிழி நீரும்உடைந்த வார்த்தைகளும்‘ஓ’வெனச் சிதறியமன இரைச்சலும் மறுசுழற்சி செய்த பின்ஒரு குளிர் தேகம்வெற்றுடலுடன் கடந்து வருகிறதுவன்மத்தை வாழைக்காய்ப் படகோட்டி வியாழக்கிழமைச் சந்தையில்அப்பாபச்சை நிறப் படகுஒன்று வாங்கி வந்தார் அது அண்டா தண்ணியில்பத்திரமாக இறக்கப்பட்டதுநிசப்தத்தில் அதுஒரே இடத்தில் நிலைகொண்டது செம்பு கொண்டுஅம்மா நீரெடுக்கையில்அலை மோதி அவள்கை தொட்டது அதை விரலால் குத்திமூழ்கச் செய்து பார்த்தான்அண்ணன் அன்றிரவு என் கனவில்ஆளில்லாப் படகில் நான்ஏறிக்கொண்டேன் அது குதித்துக் குதித்து இப்போதுஒரு சுறா மீன் ஆனது இறுகப் பற்றிக்கொண்டுநீர் சூழப் பயணித்தேன்படாரென்றுபத்துத் தலைப் பாம்பாகியது வாலைப் பிடித்துசறுக்கு மரம் போல் ஏறினேன்உந்தி ஏறுகையில்கடற்குதிரையானது வசமான முதுகு இல்லாததால்அதன் பிடரி சதையைப்பிடித்திழுத்தேன்பிடியகல விடாததால் அதுஎனையொரு பெருங்கடலில்இறக்க நினைத்தது போகும் நதிகடல் சேரும் முன்கை மாற்றப்பட்டதுஇப்போது என் சாயலில்ஒரு யுவதி அதை இயக்கிவீட்டுப் பாத்திரத்தில் போடுகிறாள்கரத் துடுப்பு

மெழுகாய் உருகும் மனங்கள்

மெழுகாய் உருகும் மனங்கள்

தீக் கானல் பற்றிய நேர்காணல்                                                      விபத்துகள் நம்மை உலுக்கி எடுப்பவை. இயற்கைப் பேரிடர்களால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுப்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் மனிதத் தவறுகளால் நேரிடும் விபத்துகள் தரும் இழப்புகளும் வலிகளும் வாழ்நாள் வடுக்களாக மாறிவிடுகின்றன. கும்பகோணம் பள்ளித் தீ விபத்து சமகாலத்தில் நாம் சந்தித்த கொடூரங்களில் ஒன்று. தீயில் சிக்கி 94 குழந்தைகள் பொசுங்கிப்போயினர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அந்தத் தீ விபத்தில் உயிர்தப்பிய பெண் ஒருவருடனான நேர்காணல் இது. தற்செயலாக நடந்த உரையாடல் ஒன்றில்தான் அவர் கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பியவர் என்ற செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து சம்பிரதாயமான பேட்டியாக இல்லாமல், இயல்பாக அவருடன் நடந்த உரையாடல்தான் இது. அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க பெயர் குறிப்பிடப்படவில்லை. விபத்து நடந்தது 2004ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று. 20 ஆண்டுகள் முடியவுள்ள இந்தத் தருவாயிலும் மனதளவில் இன்னும் தீயின் தாக்கம் அவரிடம் இருப்பதைக் காணமுடிகிறது. அந்தக் கோர நாளின் நினைவுகளையும் அதன் பிறகான தனது மனநிலையையும் அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.   தென்னிந்தியாவில் ஏற்பட்ட மோசமான தீ விபத்து கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து. அப்போது நீங்கள் எந்த வகுப்பு? சென்னைவாசியான நீங்கள் அந்தப் பள்ளியில் படிக்க என்ன காரணம்? அப்பா மட்டும்தான் அப்போது சென்னையில் இருந்தார். நானும் தம்பியும் கும்பகோணத்தில் பாட்டி வீட்டில் இருந்தோம். பாட்டி வீட்டுக்குப் பக்கம்தான் அந்தப் பள்ளிக்கூடம். அதனால் பக்கத்துலேயே படிக்கட்டும் என்று சேர்த்துவிட்டார்கள். நான் அப்போ 3ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தேன். தம்பி அப்போது எல்.கே.ஜி. அந்த நாளில் என்ன நடந்தது என்று நினைவிருக்கிறதா? எத்தனை நண்பர்கள் உயிர் தப்பினார்கள்? உங்கள் தம்பி என்ன ஆனார்? என் தம்பி அன்று பள்ளிக்கு லீவ் போட்டிருந்தான். அதனால் அதிர்ஷ்டவசமாக அவன் பிழைத்தான். ஒருவேளை அன்று அவன் பள்ளிக்கு வந்திருந்தால், அவன் ரொம்ப சின்ன பையன் என்பதால் தப்பிப்பது கஷ்டமாக இருந்திருக்கும். அன்று  கணித வகுப்பு நேரம். ஆசிரியர் வரவில்லை என்பதால்  எல்லாருமே கத்திக்கொண்டும் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தோம். அதுவும் வழக்கமான ஒரு நாளாகத்தான் இருந்தது, தீ விபத்து ஏற்படும் வரை. அதன்பிறகு கத்தி வீசியதைப்போல ஒரே அலறல் சத்தம். எல்லாருமே கத்தியபடி ஓடிக்கொண்டிருந்தனர். எங்கும் ஒரே புகைமூட்டமாக இருந்தது. ஒரு அண்ணாதான் என்னை தூக்கிக்கொண்டு போனார். நான் பாதியிலே மயக்கம் அடைந்தேன். விழித்துப் பார்க்கும்போது மருத்துமனையின் மேற்கூரை தெரிந்தது. அருகில் சில மாணவர்கள் வாழையிலையில் போர்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள். அது மட்டுமே நினைவில் உள்ளது. மற்ற நண்பர்கள் பற்றி நினைவு இல்லை. அது ஆடி மாதம் என்பதால் பக்கத்தில் கூழ் ஊற்றும் சத்தம் போலத்தான் இருந்தது. தாமதமாகத்தான் எங்களுக்கு தீ பற்றிக்கொண்டது தெரிந்தது. மேலும் கோயிலில் இருந்துதான்  தீ பிடித்திருக்கும் என்று நாங்க நினைத்தோம். பிறகுதான் உணவுக் கூடத்திலிருந்து தீ பரவியது தெரிந்தது. மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்புகளில் ஒன்று நெருப்பு. இந்தச் சமூகத்தில் பெண்களே நெருப்போடு அதிக நேரம் நெருங்கி வாழ்கிறார்கள். விபத்தில் பாதிக்கப்பட்ட உங்களுக்கு நெருப்பை அணுக இன்னும் தயக்கம் உள்ளதா? ஆண், பெண் என்ற பேதமில்லை. பசித்தால் சமைத்துதான் சாப்பிட வேண்டும். தொடக்கத்தில் எனக்கு மிகவும் பதட்டமாகத்தான் இருந்தது. தீக்குச்சி பற்றவைக்கும்போதுகூட நடுக்கமாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது பழகிவிட்டது. இருட்டு அறையில விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மட்டுமே தனியாக இருக்க வைத்தார்கள். அது ஒருவகை உளவியல் சிகிச்சை. அப்படியே பழகிப் பழகி, நெருப்பு நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுதான் என்கிற இயல்புநிலை புரிய ஆரம்பித்தது. வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தைப் பார்க்கும்போது எப்படி உணர்வீர்கள்? இப்போதும்கூட கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். சத்தம் இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். திருவிழாக்களில் தீச்சட்டி எடுப்பது, வாயில் நெருப்பை ஊதி வேடிக்கை காட்டும் நிகழ்ச்சி போன்றவற்றையெல்லாம் பார்ப்பதுண்டா? கோயிலில் தீபம் காட்டுவதுகூட பயமாகத்தான் இருக்கும். என்ன செய்ய? அங்கேதானே அழுது தீர்க்க முடிகிறது?!  தீ விபத்து ஏற்பட்ட அதே ஆண்டில்தான் சுனாமி வந்தது. அதற்காக பயந்துகொண்டு யாருமே கடலுக்குப் போகாமல் இருக்கவில்லையே! புயல் வருவதால் காற்றை நாம் வெறுக்கிறோமா என்ன? பஞ்சபூதங்கள் நம்ம வாழ்க்கையில் முக்கியமானவை என்ற புரிதல் நாளடைவில் வந்துவிட்டது. தீயினால்  சுட்டபுண் உள்ளாறும் என்று சொல்வார்கள். ஆனாலும் உங்கள் மனத்திலும் உடலிலும் ஏற்பட்ட பக்கவிளைவுகள்? தீ விபத்துக்குப் பிறகு நிறைய நாக்குகள் தீயை உமிழ்ந்திருக்கின்றன, அப்பா உட்பட. பெண் பார்க்கும்போது நிறைய தவிர்ப்புகள். முகத்தை உற்றுப் பார்ப்பார்கள். எனக்கு மேக் அப் போடப் பிடிக்காது. ஆனாலும் (முகத்தில் உள்ள தழும்பைக் காட்டி) இதை மறைக்க மேக் அப் போடுவேன். கூட்டத்தில் நான் இருக்கும்போது ராசியில்லாத பொண்ணு என்று சொல்வார்கள். பக்கவிளைவாக முடக்கு வாதம் இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு ஓரளவுக்குப் பரவாயில்லை. என்னை உற்றுக் கவனித்தால் நான் நான் கொஞ்சம் இழுத்து இழுத்து நடப்பது தெரியும். இப்போது நன்றாகவே நடக்கிறேன். அலுவலகத்தில் தீத் தடுப்புப் பயிற்சிகள் வழங்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எல்லாரும் அதைப் பாடமாக மட்டுமே கவனிப்பதால் தைரியமாக  இருப்பார்கள். அதுவே விபத்தாக இருந்தால் அவரவர் தப்பிக்கவேண்டும் என்றவொரு பதற்றம் இருக்கத்தான் செய்யும். எனக்கு இருவிதமான மனநிலையும் இருக்கும். தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகள் பற்றி? எனக்கு தீபாவளி பிடிக்காது. பட்டாசுச் சத்தம் கேட்டால் ஒரு பூனைக்குட்டி எப்படிப் பதுங்குமோ அப்படி அறைக்குள் பதுங்கிக்கொள்வேன். பறவைகள் எப்படிப் பதறிப் பறக்குமோ அப்டியொரு பயம் இருக்கும். பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்படும் தீ விபத்து குறித்த செய்திகளைக் காணும்போது எப்படி உணர்வீர்கள்? மீண்டும் நெருப்புக்கு பயந்த அந்த அலறல் சத்தம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு தத்துவம் இருக்கிறது, இயற்கை ஒரு குழந்தை; நாம் எல்லாருமே அதன் பொம்மைகள். (விரக்தியான சிரிப்பு) நாடு நன்கறிந்த கோவை குண்டுவெடிப்புகள் குறித்த உங்கள் கருத்து? கண்மூடித்தனமான, தெளிவில்லாத கடவுள் நம்பிக்கையினால் வந்த விளைவு. தீக்காயம் அல்லது தழும்பு உள்ளவர்களைச் சந்திக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? என்னைத் தூக்கிச் சென்று காப்பாற்றிய அந்த அண்ணாவை ஒருமுறையாவது பார்க்கமாட்டோமா என்ற ஏக்கம் எழும். அவரைப் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பு உள்ளதா? ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரை அடையாளம் காட்டலாம் என்ற நம்பிக்கை உள்ளது. (சிறிது மௌனம்) தீ வாடை, தீயணைப்பு வண்டிச் சத்தம் போன்றவற்றை உணரும்போது உங்கள் மனநிலை? தீயணைப்பு வண்டிச் சத்தம், ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே எனக்கு அன்று கண்கள் மூடிய அலறல் சத்தம்தான் காதில் கேட்க ஆரம்பிக்கும். இயல்பாக என்னை நானே சமாளிப்பது கடினம். அனைத்தையும் உடைத்து வெளியே வந்துகொண்டு இருக்கிறேன். சிகரெட் பிடிப்பவர்களைப்பற்றி? அது அவர்கள் விருப்பம். உடன்கட்டை ஏறுதல்,  புராணங்களில்  வரும் ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னது, கண்ணகி மதுரையை எரித்தது போன்ற சம்பவங்கள் பற்றி? எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் இந்த ஒரு விசயதுக்காக ராமரைப் புனிதப்படுத்தத் தேவையில்லை. கண்ணகி மதுரையை  எரித்தது உண்மை சாகடிக்கப்பட்ட கோபத்தில்தானே?! உடன்கட்டை ஏறுதல் நடைமுறையில் இல்லாவிட்டாலும் இன்றளவும் சமூகத்தில் ஏராளமான பிற்போக்குச் சிந்தனைகள் இருக்கத்தான் செய்கின்றன. நேர்காணல் முடித்து இருவரும் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, “நாம ஒருநாள் அந்த கும்பகோணம் ஸ்கூலுக்குப் போகலாம்” என்றார். நான் வியப்போடு நிமிர்ந்து பார்த்தேன். தேநீர்க்கடை சுவற்றில் Every sip has a story என்று எழுதியிருந்தது.

இரண்டாம் வேற்றுமை உருபு

இரண்டாம் வேற்றுமை உருபு

நூல் அறிமுகம் சமூகம், இயற்கை, இலக்கியம் என மூன்றின் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்டுவரும் பறம்பு தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் பங்கு பெற்ற சுமார் ஆயிரம் சிறுகதைகளில் ஆறு நடுவர்கள் மற்றும் சங்கத்தின் இலக்கியப் பிரிவான பாட்டாபிறையின் முன்கள நிர்வாகிகள் பன்னிருவர் உதவியுடனும் தேர்தெடுக்கபட்ட சிறந்த இருபத்தெட்டு சிறுகதைகளின் தொகுப்புதான் இரண்டாம் வேற்றுமை உருபு. முதல் கதையே வாசகனை ஈர்த்து உள்ளுழுத்துக்கொள்கிறது. ‘அம்சவேணியின் ஞாயிற்றுக்கிழமைகள்’ என்ற கதையில் வருவது போன்ற துயரங்களும் சமூக அவலங்களும் நித்தமும் நிறையவே நடக்கின்றன. இந்த சமூகத்தைக் கேட்க நினைக்கும் கேள்விகளையெல்லாம் அம்சவேணியின் மூலம் சாட்டையடியாய்க் கேட்கிறார் எழுத்தாளர் வா.மு கோமு. ‘நொண்டிக் கருப்பு’ எனும் தலைப்பில் உலகநாதன் கருப்பசாமி, மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இருக்கும் உறவையும் உணர்வுகளையும் கிராமத்துச் சூழலையும் சொல்லியிருக்கும் விதம் வெகு அழகு. ‘அம்மாவின் நடனம்’ என்ற தலைப்பில் ஒரு கைம்பெண்ணாகிப்போன அம்மாவின் இருண்ட வாழ்க்கையையும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய மகனோ மகளோ பாதுகாக்கத் தவறியதையும் சிறப்பாச் சொல்லியிருக்கிறார் கோமதி சங்கர். தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திருவிழாக்களில் வட தமிழகத்தின் அடையாளமாக மாறிப்போன திருவிழா எனில் அது திரௌபதி அம்மன் வசந்தப் பெருவிழாதான். அதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில் காட்சிகளை எல்லாம் எழுத்தின் வழி கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். உதிரச்சோறு உண்மையில் வடதமிழகத்தினரின் உற்சாகச் சோறு. இதை எழுதிய அ.மோகனாவுக்குப் பாராட்டுகள். கல்யாணம் ஆகாத கீதாரி பற்றிய கதை ‘பாயும் புலி’. அவனின் மனநிலையையும் காம உணர்வுகளையும் கண்முன்னே கொண்டுவர முயன்றிருக்கிறார் ஆசிரியர் மௌனன் யாத்ரீகா. சம்சாரியின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கும் விதம் அற்புதம். ஒரு திருடன் படும் பாட்டை வெகு அழகாய் ‘களவு’ எனும் தலைப்பில் எழுதியுள்ளார் முத்துச்செல்வன். இப்படி ஒரு கதையைப் படித்தால் திருட நினைப்பவர்கள்கூட திருந்தி வாழ ஆசைப்படுவார்கள். ஒரு சாதாரண கிராமத்து தினக்கூலித் தொழிலாளியின் வாழ்க்கையை, ‘அழிஞ்சைக் காட்டின் கிளிகள்’ கதையில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் சிவக்குமார் முத்தப்பா. வயதான, அதே நேரத்தில் மனதளவில் இளைஞரான முருகேசு இல்ல முருகேஷ் பற்றிய கதை வெகு சுவாரஸ்யம். கதையை மிக நேர்த்தியாகச் சொல்லியுள்ளார் திசு சிவசங்கர். திருப்பதி வாசகன் எழுதிய ‘கங்கா நதி’ கதை நெகிழவைக்கும் கதை. இப்படியும் நடக்குமா என்று மனம் குமைந்து நம்மை நொறுக்கிப் போடும் வலி நிறைந்த கதை இது. தெருவோரங்களில், சிக்னலில், சுங்கச் சாவடிகளில் கையேந்தும் சில குழந்தைகளின் அவலநிலையைக் கண்முன்னே காட்சிப்படுத்தி இருந்தார் விஜி முருகநாதன். சுதந்திர இந்தியாவில் இன்னும்கூடப் பலர் மூன்று வேளையில் ஒருவேளை உணவுகூட இல்லாமல் மாண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை ‘வடகறி’ சிறுகதை மூலம் சொல்லியிருக்கிறார். மனநிலை பாதித்த குழந்தையை வளர்க்க ஒரு பெண் படும் பாடு ஒவ்வொன்றையும் மிகவும் கச்சிதமாக ‘பிள்ளைக் கனியமுதே’ எனும் தலைப்பில் டி.கே.வித்யா கண்ணன் எழுதியுள்ளார். விவசாயப் பின்னணியில் இருக்கும் இளைஞன் படுகிற பாட்டை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மகேஷ் குமார். கதைக்கு செவலை என்ற தலைப்பு ஆகப்பொருத்தம். ஒரு தனியார் அலுவலகத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களையும் அது தொடர்பான விசாரணைகளில் பெண்கள் படும் பாட்டினையும் சமூகம் அதை எவ்வளவு அலட்சியமாகக் கடந்துசெல்கிறது என்பதையும் மிக எதார்த்தமாகயும் துல்லியமாகவும் எழுதி இருக்கிறார் ‘பெண் விழை’ எனும் தலைப்பில் ஹேமா ஜெய். வசதி படைத்த உயர்சாதியினர் தங்களைக் கீழ் சாதியினராகக் காட்டிக்கொண்டு அரசாங்கச் சலுகைகளைப் பெறுவது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை ‘வாழ்வியல் அறம்’ தலைப்பில் கே.சுப்புராஜ்அசத்தலாக எழுதியிருக்கிறார். அதுவும் அந்தப் பின்குறிப்பும் கதையில் வரும் கவிதைகளும் அருமை. காதலியை இழந்த தவிப்பை, வலியை ‘எங்கே என் இதயம் அன்பே’ கதையில் வெகு அற்புதமாகச் சொல்லியிருந்தார் கவிஜி. ஒரு சமமான காதலை வேறு கோணத்தில் சொல்லி இருந்தார் ‘சமன்பாடுகள்’ எனும் தலைப்பில் எம்.சங்கர். ‘பச்சை’ கதையில் ஒரு கிராமத்துப் பையன் நகரத்திற்கு வந்து படும் வாழ்வியல் போராட்டங்களைக் கணகச்சிதமாக எழுதியுள்ளார் சந்துரு மாணிக்கவாசகம். ‘குறிப்புகள்’ கதையில் ஒரு மாற்றுத்திறனாளியும் அவரது குடும்பமும் படும் பாட்டை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் க.மூர்த்தி. நடுத்தர வர்க்கத்தினரின் காதலை மிகச்சரியாக சொல்லி இருந்தார் ‘பூவண்ணம்’ கதையில் கே.எஸ்.சுதாகர். ஒரு சாதாரண மனிதனுக்குப் பேரிடர் காலத்தில் கிடைத்த அனுபவத்தையே கதையாக மிகவும் நேர்த்தியாக எழுதி இருந்தார் கோவார்த்தனா. மலை கிராம மக்களின் வாழ்க்கையைப் ‘வெறியாட்டு’ எனும் தலைப்பில் படம் பிடித்துக் காட்டியிருந்தார் நெய்வேலி பாரதிகுமார். பாலியல் வன்கொடுமைகளையும் அதனால் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் ‘பழியும் பாவமும்’ கதையில் சிறப்பாகச் சொல்லி இருந்தார் ஞா.கலையரசி. மரத்தை மையப்படுத்தி படைக்கப்பட்ட நேர்த்தியான கதை ‘புளிய மரத்தின் சுவை’. மரம் நடச் சொல்லும் அந்த மனிதரே மரத்தை வெட்டினால்தான் வியாபாரம் நடக்கும் என்று கூறுகிறம் அபாரம். தீராத நோய்க்கு ஒரே வழி மரணம்தான் என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக வலியால் சாவதைவிட ஒரேயடியாகப் போய்ச் சேருவது நலம்தானே என்று நமக்கே தோன்றிவிடும் அளவுக்கும் எழுதியிருந்தார் ‘யாறப்பே’ எனும் தலைப்பில் ஜவ்வாது முஸ்தபா.  தனது சொந்த அனுபவங்களையே ‘விளையும் களை’ என்ற கதையாக எழுதியிருக்கிறார் புதுவை அருண்.கோ. முள்ளிவாய்க்கால் துயரத்தையும் அதனூடாகக் காதலையும் ‘பொய்மையும் வாய்மையுடைத்து’ எனும் தலைப்பில் அற்புதமாக எழுதியுள்ளார் சண் தவராஜா. ஒரு பெண்ணின் அவலத்தை வெகு இயல்பாக எழுதி இருக்கிறார் ‘குலசாமி’ எனும் தலைப்பில் எஸ்.மோகன். நம் குல தெய்வங்களை நாம கும்பிட மறந்துவிட்டோம் என்பதை வெகு அழகாக தனது பாணியில் எழுதி இருந்தார் ‘கடவுள் கோட்பாடு’ தலைப்பில் ஏ.ஆர் முருகேசன்.  மொத்தத்தில் இந்தக் கதைகள் அனைத்தும் ஒரு கதம்ப சாதத்தைப் போல மிகவும் சுவையானவை. இரண்டாம் வேற்றுமை உருபு – இன்னொரு உலகின் திறவுகோல்.

மடிக்கனம்

மடிக்கனம்

மடிக்கனம் – கவிதை புழுதியை எழுதியெழுதிக்களைத்த பகல் கூடடைந்திருக்கவிழித்திருக்கிறதுநெடுஞ்சாலையின் இரவுவாடை மையொழுகும் விழிபொய்யொழுகும் இதழ்திட்டுத் திட்டாககோகுல் சாண்டலொழுகும் கன்னக்கதுப்பு புருவஞ்சுருக்கிக் கவனங்குவித்துபழக்கப்பட்ட லாரிக்காரனுக்காய்விழிநோக நிற்குமந்தக் கனகாவின்ஈரமொழுகும் ரவிக்கை வாடைக்குஇரவைக்கிழித்து ஊளையிடுகிறதுமுட்புதருக்குள் குட்டிகளைப் பதுக்கி வெளியேறும் மடிசரிந்த நாயொன்று குப்பையோரம் கிடந்த கொட்டாங்குச்சியில்தன் பாரம் அத்தனையும் இறக்கி வைத்துவிட்டுமேலும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்கிறாள் கனகா மடிகனத்த நெடுஞ்சாலைக் கிளிகளின் யாமம்விமோசனமில்லாப் பெருஞ்சாபம்

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களால் கருணாநிதியைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டம்தான் கலைஞர். அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல, தமிழ்கூறும் உலகம் இருக்கும்வரை கலைஞர் என்று உச்சரித்தால் அது கருணாநிதியை அழைப்பதாகவே இருக்கும். அவர் தனது வாழ்நாள் முழுவது தமிழ் இலக்கியத்துக்காக பணியாற்றினார் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு அரசியல் உலகில் எந்த அளவுக்கு அவர் பணியாற்றினாரோ அதையும் விஞ்சும் அளவுக்கு தமிழிலக்கியத்திற்கும் பணியாற்றினார் என்பதும் உண்மையே. அவருடைய மாணவப்பருவத்திலேயே தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டதின் காரணமாக ‘மாணவ நேசன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி அதில் அவருடைய எண்ணங்களைப் படைத்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்க முயன்றிருக்கிறார். பத்திரிகைப் பணிகள் 1942இல் முரசொலி எனும் துண்டு பிரசுரத்தை எழுதி வெளியிட்டுவந்தார்.  அவ்வெளியீடு சில மாதங்களிலேயே நின்றுபோனது. 1946இல் மீண்டும் முயற்சித்து அதை மாத இதழாக வெளியிட்டார். 1948இல் மீண்டும் அது நின்றுபோனது. கருணாநிதி அவர்கள் தனது முயற்சியைக் கைவிடாமல் 1953இல் மீண்டும் முரசொலியை மாத இதழாகக் கொண்டுவந்தார். முரசொலியின் மூலம் தனது கருத்துகளை, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மிகத்தெளிவாக மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் மாணவர்களும் இளைஞர்களும் திராவிடர் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உந்துதலாக இருந்திருக்கின்றன. 1960இல் மாத இதழாக இருந்த முரசொலி, நாளிதழாக வெளிவரக் காரணமாயிருந்தவரும் அவரே. அன்று முதல் இன்று வரை திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக முரசொலி வெளிவந்துகொண்டிருக்கிறது. திரையுலகப் பயணம் கலைஞரின் எழுத்தில் வெளிவந்த திரைப்படங்களும் ஏராளம். சுமார் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு சில திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1952இல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. தனது 20ஆம் வயதிலேயே ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் படக் கம்பெனியில் அவர் பணியாற்றியபோது அவருடைய வசனத்தில் வெளியான முதல் திரைக் காவியம் ராஜகுமாரி. திரும்பிப்பார், மனோகரா போன்ற திரைப்படங்கள் அவரைத் திரையுலகில் ஜொலிக்க வைத்தன. நாடக உலகில் கலைஞர் பல்வேறு நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதி அவற்றில் அதில் நடித்தும் இருக்கிறார். 1947 தொடங்கி 1979 வரையிலும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் மணிமகுடம், மகான் பெற்ற மகன், மந்திரி குமாரி, தூக்குமேடை ஆகிய சில நாடகங்கள் அவரை நாடக்கலையிலும் வல்லுநராகப் பார்க்க வைத்தன. இலக்கிய உலகில் நீங்கா இடம் புதிய கோணங்களில் புதினங்களைப் படைப்பதிலும் கருணாநிதி கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். அரும்பு, இரத்தக் கண்ணீர், சுருளி மலை, நடுத்தெரு நாராயணி, புதையல், பெரிய இடத்துப் பெண், ஒரே இரத்தம் ஆகிய புதினங்கள் மிகச்சிறப்புப் பெற்றவை. கலைஞரின் சிறுகதைகள், பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் அரசியல் மற்றும் கட்சித் தலைமைப் பண்பையும் விவரிக்கும் படைப்பாகவே அமையப்பெற்றிருப்பது அவருடைய கொள்கைப் பற்றையும் அரசியல் தெளிவையும் நமக்குச் சொல்வதாகவே காணப்படுகின்றன. பாலைவன ரோஜா, விஷம் இனிது, வேணியின் காதலன், நளாயினி, நுனிக் கரும்பு ஆகிய சிறுகதைகள் படிக்கும்போதே நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவருடைய படைப்பில் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் கண்ணடக்கம், ஒரு மரம் பூத்தது, கிழவனின் கனவு, சங்கிலிச் சாமியார் ஆகிய அனைத்துமே கொள்கைக் களஞ்சியமாக, பெட்டகமாக வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தொகுப்புகள். அவருடைய இலக்கியப் படைப்புகள் இத்தோடு நின்றுவிடவில்லை. கலைஞரின் கவிதைகள், திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றோடு திருக்குறள் உரை, சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, குரளோவியம், சிலப்பதிகாரம், தாய், பூம்புகார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தமது வாழ்க்கையைத் தன்வரலாறாக எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற நூலாக வெளியிட்டுள்ளார். 4000க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட நெஞ்சுக்கு நீதி 6 பாகங்களாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கில் விற்னையாகியுள்ளது. கலைஞரின் சொற்பொழிவுகள், பத்திரிகைப் பேட்டிகள் மட்டுமே 5 தொகுப்புகளாக உள்ளன என்பதை மெச்சாமல் இருக்கமுடியுமா!? கட்டுரைத் தொகுப்புகள் 30 தலைப்புகளிலும் சிறு குறிப்புகள் 20 தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. கலைஞர் கடிதங்கள் 12 தொகுப்புகள், குடியரசு கட்டுரைகள், கரிகாலன் பதில்கள் என்று அவரது எழுத்துகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏராளமான பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1957 முதல் 2018 வரை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய சட்டமன்ற உரைகளின் தொகுப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. அவருடைய மொத்தப் படைப்புகளையும் வாசித்து முடிக்க நமக்கு ஒரு வாழ்நாள் போதாது என்றால் மிகையில்லை. கலைஞரின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் தற்போதைய திமுக தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகிறது. ஆனால் கலைஞரின் படைப்புலகப் பங்களிப்புகளை இன்றைய திமுகவினர் பெரும்பாலானவர்கள் சிறிதளவுகூட வாசித்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. கலைஞரின் நூற்றாண்டு தொடங்கும் இந்த வேளையில், அவருடைய படைப்புகள் பொதுமக்களைப் பரவாலாகச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதே அவருடைய இலக்கியப் பங்களிப்பை நிலை நிறுத்த உதவும். இல்லையேல் அது வெறும் அடையாளமாகவே நின்றுவிடும்.   முகப்புப் படம்: இணையத்திலிருந்து

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம் மல்லுகட்டிமல்லுகட்டிபதக்கம் வாங்கினார்கள்தேசம் கொடி அசைத்துக்குதூகலித்ததுபிரதமரோடு படம் எடுத்துமகிழ்ந்துகொண்டார்கள் மல்லுகட்டிமல்லுகட்டிகோரிக்கை வைத்தார்கள்மல்லுகட்டிமல்லுகட்டிமறுக்கிறது அதிகாரம் மல்லுகட்டிவாங்கிவந்த பதக்கங்கள்புறக்கணிப்போம் என்றாலும்மல்லுகட்டிப் பார்க்கிறதுஅதிகாரம் பல்லைக்காட்டிச் சிரிக்கிறதுசெங்கோல்

திருத்தமுடியாத தீர்ப்புகள்

திருத்தமுடியாத தீர்ப்புகள்

இரவு எட்டரை மணிக்கு காலிங்பெல்லின் ‘டிங்டாங்’ கேட்கவே, ‘இந்த நேரத்தில் யார்?’  என்ற யோசனையுடன் ஜன்னல் வழியே பார்த்தவளுக்கு ஆச்சரியத்தில்  மூச்சடைத்தது. “செந்திலண்ணா.. வாங்க..வாங்க..” என்றபடி கதவைத் திறந்தேன். “நல்லாருக்கியாம்மா.. பையன் எங்க காணும்..?” “டியூஷன் போயிருக்கான். அவரு வாறப்ப கூட்டிட்டு வருவாரு. எல்லோருஞ் சொகந்தானே..?” கேட்டுக்கொண்டே சமையலறையில் நுழைந்தவளிடம், “ஏம்மா.. எதுவும் வேண்டாம்.. இங்க வா.. ஒரு நல்ல சேதியோட வந்துருக்கேன்” என்றபடி கையில் வைத்திருந்த மஞ்சள் பையைப் பிரித்து, அழகான விநாயகர் ரூபம் பதித்த அழைப்பிதழை எடுத்தபடியே.. “தர்ஷிணிப் பாப்பா பெரிய மனுஷியாயிட்டா. சீர் வச்சிருக்கேன். ஒரு வாரந்தான் ஆகுது. மாசம் போறதுன்னால உடனே வச்சுட்டோம். கணபதி மண்டபத்திலதான். மாப்பிள்ள வந்தா சொல்லு. குடும்பத்தோட வந்துரு..” என்றபடியே  நீட்டியவரிடம், “தர்ஷிணியா..! அவ்வளவு பெரிய பொண்ணாயிருச்சா..?!” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டவளிடம், “பின்ன.. வருஷம் பன்னெண்டாச்சே…” என்றபடி  மற்ற கேள்விகள் என் வாயிலேயே இருக்க, சிரித்தபடியே  விடைபெற்றுக்கொண்டார். செந்திலண்ணன் எங்க அம்மா வீட்டுக் குடித்தனக்காரர்களில் ஒருவர். அவர் அங்கே குடி வரும்போதே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. அண்ணா வேலை செய்துகொண்டிருந்த வொர்க் ஷாப்  பக்கத்தில் இருந்ததால், எங்க வீட்டின் முன்புறம் இருந்த ஒற்றை அறையில் தங்கி இருந்தார். ஓரளவுக்கு வசதியான குடும்பம்தான் என்றாலும் அண்ணாவிற்கு பிளஸ் டூவுக்கு மேல் படிப்பு ஏறாததால், எங்கள் ஊரின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் கிரைண்டர் உபரி பாகங்கள் செய்யும் கம்பெனி ஒன்றில் நுழைந்துகொண்டார். தங்கமான குணம். நல்ல உழைப்பாளி என்பதால் நான் அண்ணாவென்று அழைத்தால்கூட, அவர் எங்கள்  சாதியைச் சேர்ந்தவர் என்பதால் எங்கள் அம்மாவிற்கு என் தங்கையை அவருக்குக் கொடுத்து மாப்பிள்ளையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ஒருதடவை அண்ணாவைப் பார்க்க வந்த அவருடைய அம்மா, பேச்சுவாக்கில், அண்ணாவிற்காக அவருடைய அத்தை பெண் காத்திருப்பதாகவும் அந்தப் பெண் ஜீவிதா கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதால் அந்த வருடக் கடைசியில் திருமணம் என்றும் சொல்லவே, அந்த ஆசை எங்கள் மனத்திற்குள்ளாகவே புதைந்து போய்விட்டது. சொன்னது போலவே அந்த வருடத்தின் கடைசியில் அத்தைப் பெண்ணுக்குப் பரிசம் போட ஊருக்குப் போனவர், சோர்ந்த முகத்துடன் திரும்பி வந்தார். பவுன் போடுவதில் பிரச்சினையாகி, பேச்சு வார்த்தை முறிந்துவிட்டதாக சோகத்துடன் சொன்னார். ஆனாலும் அண்ணாவுடைய அம்மாவின் ஆசைக்கேற்ப, அடுத்த வருடமே ‘மலர்கொடி’ நல்ல சொத்துக்காரியாக, பூங்கொடியாக அண்ணனின் கைப்பிடித்தாள். ஊரில் தோட்டத்தில் பெரிய பந்தல் போட்டு ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்கள். அதற்குப்பிறகு எங்கள் ஒண்டிக்குடித்தனம் எதற்கு? ஊரின் நடுவில் இருந்த பெரியமருத்துவமனையின் காண்டீன் காண்ட்ராக்ட்டைப் பிடித்துக் கொடுத்துவிட்டார் அண்ணாவின் மாமனார். ஒரு பெரிய வீட்டை வாங்கி பெண்ணுக்கு சீதனமாகக் கொடுத்துவிட்டதில்,  மலர்கொடியுடன் மஹாலட்சுமியும் குடிபுகுந்து விட்டாள். வருடங்கள் ஓடியதில், பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில், கடைசியாக என் தங்கையின் திருமணத்தில் பார்த்தபோது என் கண்ணையே நம்ப முடியாமல், மலர்க்கொடி பூங்கொடி சைசில் இருந்து கொடிப்பூசணி சைசுக்கு மாறி இருந்தாள். என் பையன் படிக்கும் பள்ளியிலேயே அவர்கள் மகளும் படித்ததில் அதற்கப்புறமும் இரண்டொரு முறை பார்க்க நேர்ந்தாலும் புன்னகையுடன் தலையாட்டலாகவே  முடிந்தது. அதற்கப்புறம் இன்றுதான் பார்க்கிறேன். என் கணவர் வந்தவுடன் சொன்னதில், “நா எங்கம்மா அங்கெல்லாம் பழக்கமில்லாம.. நீ வேணா உங்கம்மா போனாங்கன்னா போயிட்டு வந்துரு” என்றார் ஆண்களின் அரிச்சுவடிப்படி. சீர் ஏழு மணிக்கு என்று போட்டிருந்தாலும் ஐந்து மணிக்கே  மண்டபத்திற்குப் போய்விட்டேன். அவ்வளவு சீக்கிரம் போகக் காரணம் என் அம்மா வீட்டுப் பழைய குடித்தனக்காரர்கள் சகுந்தலாக்கா, மாலாக்கா வருவார்கள். அவர்களுடன் அரட்டை அடிக்கலாம் என்ற குதூகலம்தான். இப்போது வெவ்வேறு இடங்களில் குடி இருந்தாலும்  ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் அவர்களும் சீக்கிரமே வந்திருந்தார்கள். முன்புறம் செந்திலண்ணன் மட்டுமே வரவேற்பில் நின்றிருந்தார். “எங்கண்ணா.. மலர்கொடி தர்ஷினிக்குப் போட்டியா அலங்காரமா?” என்றேன் சிரித்துக்கொண்டே. “அதையேம்மா கேக்கற.. இந்த ஒரு வாரமா எம் பொண்ணையும் பொண்டாட்டியையும் தேட வேண்டியதா இருக்கு. பேஷியல்ங்கறாங்க, பிளீச்சுங்கறாங்க.. ஒன்னுமே புரியல போ..” என்றார் முகம் மலர. வரிசையாக சகுந்தலாக்கா, மாலாக்கா என்று வந்ததில் சந்தோஷம் குதி போட சிரிப்பும் பேச்சும் களை கட்டின. சரியாக ஆறு முப்பதுக்கு சடங்குகள் ஆரம்பமாகின. பூக்களால் மயில்போல அலங்கரிக்கப்பட்ட மேடையில்  தர்ஷிணி அமர வைக்கப்பட்டு சீர்  தொடங்கியது. பின்னாலேயே அண்ணன் சொன்னது போல உற்றுப் பார்த்தால்தான் அடையாளம் தெரியுமளவிற்குப் பெரிய கரை வைத்த சிகப்புக் காஞ்சிபுரம் தகதகக்க, தலையை நுண்ணிய முறையில் பின்னி பந்துப் பூ வைத்து, கழுத்து கொள்ளா நகைகளில் மலர்கொடி ஜொலித்தாலும் முகம் மட்டும் புன்னகையின்றி இருந்ததோடு, பார்வையும் அவ்வப்போது எங்கேயோ வெறித்துக்கொண்டே இருந்தது. “என்னது இது.. எதாவது உடம்பு சரியில்லையா?” என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டே இருக்கையில், “அம்மா வூட்டு தாத்தா சீருங்க.. வைர நெக்லஸ் ஒரு செட், பட்டுச்சேலை ஐம்பதாயிரம்..” என்று உரக்கச் சொல்லி தர்ஷிணியின் கையில் கொடுத்தார்கள். கீழே விழுந்து வணங்கிப் பெற்றுக்கொண்ட பெண்ணை, உடுத்திக்கொண்டு வர உள்ளே கூட்டிப் போனார்கள். “அண்ணனுக்கு மாமனார் வூடு வாச்சிருச்சு..” என்றேன் சகுந்தலாக்காவிடம். “ஆமா.. போ.. உனக்கு வெசயமே தெரியாதா..? பாவம் செந்திலு.. மலர்கொடிக்கு.. அதென்னவோ சொல்றாங்களே.. ஹிஸீட்டிரியாவோ என்னவோ.. அதாம்மா.. கலியாணத்துக்கு முன்னாடியே ஆடித் தீத்துருவாளாம். ஆசுபத்திரிக்கு அங்கியும் இங்கியும் கூட்டிட்டுப் போயி எதோ கொஞ்சம் கொணப்படுத்தி அலுங்காப்படி மறச்சு செந்திலு தலயில கட்டிட்டாங்களாம். தர்ஷிணி பொறக்கற வர பரவலாம்மா இருந்தது இப்ப ரொம்ப மிகுந்து போச்சாம்.. அதுவும் அவ இப்புடி குண்டடடிச்சுக் கெடக்கறதுல எந்தப் பொண்ணுட்ட பேசினாலும் ரொம்பவே சந்தேகமாம். பேயி புடிச்ச மாரி ஆடுவாளாம். காசுக்கு ஆசப்பட்டு அனுபவிக்கறாங்க. நல்ல வேள.. நாம எல்லாம் தள்ளி வந்துட்டோம்”. “அதுவும் செந்திலோட அத்த பொண்ணு ஜீவிதா, புருஷனோட பொழைக்காம விவாகரத்து வாங்கிட்டு பையனோட தனியா வந்துட்டாளாம். அதுலர்ந்து இன்னும் சந்தேகமாம். சரி.. செந்துலுந்தான் எத்தன நாளு பொறுத்துட்டு இருப்பான். அவம் மட்டும் ஆம்பள இல்லையா என்ன..?! அப்பப்ப போயிட்டு வந்துட்டு இருக்கிறதா கசமுசான்னு பேசிக்கறாங்க..” “சேச்சே.. என்னக்கா..” என்ற  என்னைப் பார்த்து.. ‌”ஆமா.. நீ நம்பு போ.. எந்தப் புத்துல எந்தப் பாம்போ..” என்றார்கள் அக்காக்கள் ஒரு சேர. அவர்கள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று மனத்திற்குள் இரு கூறு இருந்தாலும்  அருமையான விருந்துச் சாப்பாட்டை சாப்பிட்டு, பரிசுப் பொருளைக் கொடுக்கப் போனோம். அண்ணன், மலர்கொடி இருவருமே இல்லை. அண்ணாவின் அம்மாவிடம் சொல்லிவிட்டு இறங்கி வருகையில் கையிலிருந்த மொபைல் தவறி பின்புறமாகக் கீழே இறங்கிய படிக்கட்டில் நழுவிவிட்டது. பரபரப்பாக ஓடி எடுத்துக்கொண்டு வரும்போது மாடிப்படியின் கீழே, “என்ன ஜீவி.. தனியா பேசணும்னு கூப்பிட்ட..” என்றது செந்திலண்ணன் குரல். ‘அங்கே அத்தனை ஜனம் இருக்க, இங்கே இவளிடம் என்ன தனித்த பேச்சு? ஒருவேளை அக்காக்கள் சொல்வதுபோல்..’ “ஒன்னும் இல்ல செந்திலு.. மலருக்கு இப்புடி இருக்குதே.. அதுக்கு சேலத்து பக்கத்துல மலையில ஒரு ஆசிரமம் இருக்குதாம். அங்க கூட்டிட்டுப் போனா ஒரு மண்டலத்தில குணப்படுத்திராங்களாம். ரோசன பண்ணி உம் மாமனாருகிட்டயும் கலந்து சொல்லு. போனுல சொல்லாம்னா அவதான் பொம்பளன்னு  யாருகூட நீ பேசினாலும் ஆடறா.. இதுக்கு பயந்துகிட்டே நீயும் எங்க வூட்டுப் பக்கம் வாரதே இல்ல.. அதான் இங்க வந்து சொன்னேன்..” “சரி பாக்கலாம் ஜீவி.. இந்த சென்மத்துல அவ கொணமானாலோ  ஆகாட்டியோ எம் பொண்டாட்டிதான். தர்ஷிணி மாதிரிதான் அவளும் எனக்கு. என்ன.. ஒவ்வொரு சமயம் இவ பண்றதுல குழந்த சுருங்கிப் போயிறா.. பயத்துல அவ நடுங்கறத பாக்கவே பாவமா இருக்கு. அதான் இது மாத்தி அது, அது மாத்தி இதுன்னு எதோ ஒரு வைத்தியம். இந்த சீருகூட இவ்வளவு ஆடம்பரமா வேண்டாம்னு சொன்னேன். புடிவாதமா ‘ஏன்.. எங்கூட சோடியா நின்னா எளப்பமாயிருமோ..’ன்னு ஒரே சத்தம் போடறா மலரு. அதான் வச்சுட்டாங்க. சரி நீ போ.. தனியா பேசறத யாராவது பாத்து அது வேற அவ காதுக்குப் போச்சுன்னா தொலஞ்சேன்..” கேட்டுக்கொண்டிருந்த நான் சத்தமே இல்லாமல் மேலே வந்தேன். “ஏம் புள்ள.. கெடச்சுருச்சில்ல.. இதுக்குப்போயி கண்ணு கலங்கிருக்க..” என்று அம்மா சொன்னபோதுதான் என் கண்களில் நீர் வழிந்திருந்ததே புரிந்தது. இப்போது மேடையில் மீண்டும் மலர்கொடி நின்றுகொண்டிருந்தாள். யாரையோ பார்த்து சிரித்துக் கையசைத்துக் கூப்பிட்டாள். செந்திலண்ணன்தான் வேகமாக மேடையேறிக்கொண்டிருந்தார். குடும்பமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். புகைப்படம் எடுப்பவர், “இன்னும் கொஞ்சம் ஒட்டி நில்லுங்க..” என்று சொல்லவே, “வாம்மா..” என்றபடி அவள் தோளணைத்துத் தன் பக்கம் நெருக்கமாக நிற்கவைத்துக்கொண்ட செந்திலண்ணனைப் பார்க்கப் பார்க்க, ‘மலர்கொடியைக் கடவுள் சரியான ஆளிடம்தான் ஒப்படைத்திருக்கிறார்’ என்று தோன்றியது. “நல்லாவே நடிக்கிறான் செந்திலு. இல்லன்னா ரவைக்கு ஆடித் தீத்துருவாளே..” என்றனர் என் பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்த அக்காக்கள் இரண்டு பேரும். அவர்களைப் புன்னகையுடன் பார்த்த நான், “சரிக்கா.. கிளம்பலாம்..” என்றபடி மேடையைப் பார்த்தேன். ‘ஓ..’வென்ற கூச்சலுடன் வண்ணக் காகிதங்கள் பறக்க கேக் வெட்டிக்கொண்டிருந்தனர். ஒருகணம் அங்கே இருந்த அத்தனை பேரும் மலர்கொடி போலவே தெரிந்தார்கள் எனக்கு‌.

பகையொன்றுமில்லை

பகையொன்றுமில்லை

பகையொன்றுமில்லை என் வால் பிடித்து வரும்வஞ்சனைகளை விரட்டவேண்டிக்கொண்டிருக்கையில்எலுமிச்சை தந்து அருள்வாக்களித்தகடவுளின் சொல்லை நம்பிபுலிக் கோடிட்ட பூனையின் கதையாய்பரிகாரம் பல செய்துகதவைத் தட்டும் அதிர்ஷ்ட தேவைதைக்காய்ஆரத்தித் தட்டுடன்கால்கடுக்கக் காத்திருந்தால்ஆசையைக் கொல்லென்றுசெவியில் அறைந்து சென்றான்புத்தன் சுயம் தெளிந்துஆசையைத் தூண்டியகடவுளைத் தேடினேன்எனக்கும் அவருக்குமிடையேபகையொன்றுமில்லைஆனாலும்தாடையைத் தோளில் இடித்துமுகத்தை வான்முட்டத் தூக்கிவைத்தபடிபொடிநடையாகச் சென்றவர்சன்னமாக மின்னிக்கொண்டிருக்கிறார்பல மில்லியன் ஒளியாண்டுகளுக்குஅப்பால்

சிறு பத்திரிகைகள் – அறிந்ததும் அறியாததும்

சிறு பத்திரிகைகள் – அறிந்ததும் அறியாததும்

சிறுபத்திரிகைகளா..! அதென்ன? சிறிய, பெரிய, நடுவாந்திரப் பத்திரிக்கைகள் என்று தனித்தனியே உள்ளனவா என்று உங்களில் சிலர் கேட்கலாம். உண்மையிலேயே middle magazines என்று அழைக்கப்பட்ட பத்திரிகைகள் உட்பட, பல விதமான வகைகளில் பத்திரிக்கைகள் வந்தன; வந்துகொண்டிருக்கின்றன. இந்த வகைப்படுத்தல் எவ்வாறு என்பது அந்தந்தப் பத்திரிகையின் ரீச்சபிலிட்டி, சர்க்குலேஷன் போன்ற பல சமாச்சாராங்களைப் பொறுத்தது. அவை தங்களுக்குள் சில சமயங்களில் குழுக்கள் சார்ந்தும் அரசியல் நம்பிக்கைகள் சார்ந்தும் வேறுபட்டன. உதாரணம் வேண்டுமெனில் விகடன், குமுதம் போன்றவை பெரியன என்றால், காலச்சுவடு, உயிர்மை போன்றவை middle magazine வகைமையில் வரும். சிறு பத்திரிகைகள் கையெழுத்துப் பிரதிகளாக ஒரு காலத்தில் வந்து, தற்போது இணையப் பத்திரிகைகளாக வலம் வருபவை. கனத்த விஷயங்களுடன் குறைந்த பார்வையாளர்களை அணுகுபவை. தற்காலத்தில் இணையப் பத்திரிகைகள், e – magazines என்பவை உலகம் முழுவதும் பார்வையாளர்களை, வாசகர்களை அணுகி வருகின்றன. சிறு பத்திரிக்கைகள்தான் ஆரம்பத்தில் இருந்தன. நமக்குத் தெரிந்து எழுத்து என்ற பத்திரிகையை சி. சு. செல்லப்பா நடத்தி வந்தார். காத்திரமான படைப்புகள் இதில் வந்தன. இலக்கியங்களுக்கான வெட்டுக்குத்து சண்டைகள்கூட வந்தன என்பார்கள். எல்லாமே எழுத்தில். நேரில் சந்தித்தால் தோள்மீது கை போட்டுச் செல்லும் நெருக்கமும் இருந்தது. இன்றுகூட அமேசான் கிண்டிலில் எழுத்து மின்நூலாகக் கிடைக்கிறது. படிப்பது ஒரு சிறந்த அனுபவத்தைத் தரக்கூடும். எழுத்து கூடவே புகழ் பெற்ற இன்னொரு பத்திரிக்கை மணிக்கொடி. அது இலக்கிய உலகின் பொற்காலம் எனலாம். புதுமைப்பித்தன், கு.ப.ரா., கு.அழகிரிசாமி போன்ற ஜாம்பவான்கள் இதில் சிறுகதைகளை அள்ளி இறைத்தார்கள். ஆரம்ப காலத் தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டறை மணிக்கொடி என்றால் மிகையில்லை. சரஸ்வதி என்ற பத்திரிகையை விஜயபாஸ்கரன் சிறப்பாகக் கொண்டுவந்தார். பிறகு வந்த தாமரை, செம்மலர் போன்ற பத்திரிக்கைகளுக்கு இது முன்னோடியாய் அமைந்தது. நாகர்கோவிலிலிருந்து, எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் காலச்சுவடு என்ற சிறு பத்திரிகையை எண்பதுகளில் ஆரம்பித்தார். எட்டு இதழ்களுக்குப் பிறகு நின்று போனதை, அவருடைய மகன் கண்ணன் மீண்டும் கொண்டுவந்தபோது, அது இடைநிலை இதழ் (middle magazine) என்ற புதிய வடிவத்திற்கு அடிகோலியது. சற்று வணிகமய வாசனையுடன், நிறைய இலக்கிய வாசகர்களைச் சென்றுசேரும் வகையில் வெளிவந்தது. மிகவும் காத்திரமான விவாதங்களையும் வேறு மொழியில் வந்த படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் கொண்டுவந்தது இதன் சிறப்பு. பின்னர் அதைத் தொடர்ந்து உயிர்மை, உயிரெழுத்து என பல பத்திரிக்கைகள் தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்தன. இவை தாங்களே பதிப்பகம் ஆரம்பித்ததும் தங்கள் பத்திரிக்கையில் வந்த கதை, கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிட்டதும் தமிழ்ப் பதிப்புலகில் ஒருபெரிய மாற்றத்தினை உருவாக்கியது எனில் மிகையில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், சிறப்பாக வந்து நின்றுபோன சிலவற்றைப் பார்க்கலாம். இனி, படிகம், சுபமங்களா, பரிக்ஷா ஞானி நடத்தி வந்த தீம்தரிகிட போன்றவை இலக்கிய வாசகர்களிடம் பெயர் பெற்றவை. இதே காலத்தில் நிறப்பிரிகை, அன்னம் விடு தூது, போன்றவை நல்ல அழுத்தமான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டன. சில பத்திரிக்கைகள் துறை சார்ந்த இதழ்களாக வெளிவந்தன. இவற்றில் முக்கியமானவை திரைத்துறை சார்ந்த நிகழ், நாடக இலக்கியம் சார்ந்த வெளி போன்றவை. எனக்குத் தெரிந்து இலக்கியத்தரமான, அதே சமயம் பெரிய ஆளுமைகளுடன் நேர்காணல், சுயவரலாறு என்று 5 வருடங்கள் வந்தது சுபமங்களா. இதில் வந்த சி.சு.செல்லப்பாவின் தொடர் ஒன்று, தமிழ் இலக்கியத்தின் பல வகைப்பட்ட போக்குகளை எளிமையாக அறிமுகப்படுத்தியது. யதார்த்தவாதம், சர்ரியலிஸம், மாடர்னிசம், போஸ்ட் மாடர்னிசம் என்று பல ஜானர்களை எளிமையாக உதாரணம் சொல்லி விளக்கினார். தொடர் நூலாக வந்ததா என்று நினைவில்லை. மீண்டும் வந்தாலும் நல்லதே. சுபமங்களாவின் ஆசிரியர் கோமல் சுவாமிநாதன், ‘மாதபலன்’ என்றொரு தொடர் எழுதினார். அந்தந்த மாதத்தில் நடந்த, இலக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருந்தது அது. சுபமங்களாவின் சிறுகதைகள் மூலமாக, அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் தமிழுக்குக் கிடைத்தனர். ஜெயமோகன், வண்ணதாசன், சுப்ரபாரதிமணியன் போன்ற இன்றைய ஜாம்பவான்கள், அன்றைய இளைய வயதினர் இதில் எழுதி வந்தனர். ஐந்து வருடங்களில் சுபமங்களாவின் நேர்காணல்கள், தமிழ் படைப்பாளர்களின் பாதையை தெள்ளத் தெளிவாகக் காட்டியது. அது தனி நூலாகவும் வந்துள்ளது. பெரிய நிறுவனங்கள், இலக்கியம் பக்கம் தலைவைத்துப் பார்க்க ஆரம்பித்தது ஒரு காலம். அறிவியல் வளர்ச்சி அசுரத்தனமான இயந்திரங்களை உற்பத்தி செய்தது. அதற்குத் தொடர்ந்து தீனி போட வேண்டிய தேவையில் விகடன், குமுதம் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய இடைநிலை இதழ்களை ஆரம்பித்தன. விகடன் தடம், குமுதம் தீராநதி என்ற இதழ்கள் வெளிவந்தன. தடம் அச்சிதழ் நின்றுபோனாலும், தீராநதி வந்துகொண்டிருக்கிறது. தற்போது வந்துகொண்டிருக்கும் நூல்கள் எனில், மேற்சொன்ன காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து தவிர, அமிர்தா, தமிழ் வெளி, தமிழ்த்தடம், இலக்கிய வெளி, தளம் போன்றவை முக்கியமானவை. அகநாழிகை என்று ஒரு இதழ் காலாண்டிதழாக வெளிவருகிறது. திசை எட்டும் என்று ஒரு காலாண்டிதழ் மொழி பெயர்ப்புக்காகவே வருகிறது. சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள், கதைகள், பிற மொழிக் கலைஞர்களிடம் நேர்காணல் என்று பத்து வருடங்களுக்கு மேல் தொடர்ந்து வரும் இதழ் இது. சமீப காலங்களில் வாசகசாலை வெளியீடாக வரும் புரவி, பொள்ளாச்சியிலிருந்து வரும் கொலுசு, இணைய இதழ்களாக வரும் சுவடு, ஆவநாழி, தமிழினி போன்றவை முக்கியமானவை. இளைஞர்கள் பலர் இவற்றில் தங்கள் படைப்புகளை எழுதி வருவதுமகிழ்ச்சியளிக்கிறது. 2007-2012 காலகட்டத்தில் அச்சிதழாக சுவடு வெளிவந்த காலத்தில் தமிழ்நாட்டின் அன்றைய இரு முதல்வர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே தினசரிகள்கூட இலக்கியம்பற்றிப் பேச ஆரம்பித்திருக்கின்றன. இவற்றில் சிறுபத்திரிகை பற்றிய அறிமுகங்களும் வருகின்றன. இலக்கியம் வளர்வது நல்லதுதானே.

பொன்னியின் செல்வன் – 26

பொன்னியின் செல்வன் – 26

ஆதித்த கரிகாலன் உள்ளே நுழைந்தபோது சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே நுழைந்ததால், சற்று முன்பு மணிமேகலை ஒளிந்து கொண்டதன் விளைவாக திரைச்சீலை அசைந்ததை வைத்து யாரோ ஒளிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்துக் கொண்டான்.. நந்தினிக்கு அருகே தரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த வாளை அவள் எடுக்குமுன் குனிந்து, தான் எடுத்தான். அதன் நுனியில் புதிய ரத்தக்கறை இருப்பதைப் பார்த்தான். ‘அவனைப் போன்ற வீரர்களை வரவேற்க இதுவே சரியான முறை’ என நந்தினி கூர்மையாக கூறியதை ரசித்தான். தனது வாளைத் தன்னிடம் கொடுக்குமாறு நந்தினி வேண்ட, ‘மலர் கொய்யவும், மாலை புனையவும் பிரம்மன் படைத்த தளிர்க்கரங்களால் வாளைத் தொடலாகாது’ என அவளிடம் கூறினான். பெருமூச்செறிந்தவாறே நந்தினி, ‘இந்த ஏழையின் கைகள் ஆர்வத்துடன் மலர் கொய்து மாலை புனைந்த காலம் உண்டு. அந்த மாலையை சூடுவதற்குரியவர் எப்போது வருவார் என காத்திருந்து காத்திருந்து ஏமாந்த காலமும் உண்டு. அந்த பகற்கனவு கண்ட காலமெல்லாம் மறைந்து இந்த திக்கற்ற அனாதையின் கைகளில் வாளைத் துணைக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. எனவே அந்த வாளை என்னிடம் கொடுத்து விடுங்கள்’ என வேண்டினாள். ஆதித்த கரிகாலன், அவள் தன்னை அனாதையென்று சொன்னதை எள்ளல் செய்து அவள் காலால் இட்ட வேலையைத் தலையாய் செய்ய எத்தனையோ பேர் காத்திருப்பதாக கூறினான். அந்த தூர்த்தர்களிடமிருந்து தன் காலை வெட்டிக்கொள்ளவாவது அந்த வாளின் துணை வேண்டுமென நந்தினி பதிலளித்தாள். அதற்கு கரிகாலன், ‘பழுவேட்டரையர் இருக்கும்போது அந்த தைர்யம் யாருக்கு வரும்’ என்றான். ‘ அவர் கொள்ளிடத்து வெள்ளத்தில் மூழ்கிவிட்டார் என்று தெரிந்த பிறகு அந்த வாலிபப் புலிகளுக்கு தைரியம் வந்துவிட்டது. அவர்களிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளவே நான் இந்த வாள் சுழற்றப் பயின்றேன்’, என்றாள் நந்தினி. ‘வாள் வீசக் கற்றுக் கொண்டதற்கு அதுதான் நோக்கமா? உன் வேண்டுகோளைப் புறக்கணித்து உன் உள்ளத்தில் அழியாத புண்ணை உண்டாக்கிய பாதகனைக் கொல்லும் நோக்கமில்லையா?’ என்றான் கரிகாலன். ‘ஒரு சமயம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த வேளை வந்திருக்கும் போது என் கரங்களில் வலிவும் நெஞ்சில் உறுதியுமில்லாமல் போய்விட்டது. இனி இந்த வாளை என் கற்பையும் என் கணவரின் கெளரவத்தையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே உபயோகிப்பேன். தயவுசெய்து அதைக் கொடுத்து விடுங்கள்’, என்றாள். ‘அந்த பொறுப்பை என்னிடம் கொடுங்கள். நான் அந்த பாதகனை தண்டிக்கறேன்.’, என்று கர்ஜித்தபடி ஆதித்த கரிகாலன் திரைச்சீலையை நோக்கிச் செல்ல. நந்தினி அவன் காலைத் தொட்டு மண்டியிட்டுக் கரங்களைக் குவித்துக் கொண்டு ‘ கோமகனே.. வேண்டாம்.. வேண்டாம்’ என்றாள். ‘ உன் கருணையை வேறு எங்காவது வைத்துக்கொள், ஏரித்தீவில் நீ வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியதெல்லாம் பொய் என நினைத்தேன். கந்தமாறன் சொன்ன பிறகே அனைத்தும் உண்மையென புரிந்து கொண்டேன். நண்பனைப் போல நடித்து சதி செய்யும் சண்டாளனிடம் கருணை காட்டாதே’ எனக் கூறி மேலே நகர்ந்தான். நந்தினி திகைத்து வாயிற்படியருகே அசையாது நின்றுகொண்டிருக்கும் கந்தமாறனைப் பார்த்து அவனைத் தடுக்குமாறு கத்தினாள். ஆனால் அவன் ஒரு அசட்டுச்சிரிப்பை சிரித்துவிட்டு பேசாமல் நிற்க, ஆதித்த கரிகாலன் வேகமாய் கத்தியின் நுனியால் திரைச்சீலையை நகர்த்தினான். உள்ளே சிறிய கத்தியுடன் க்றீச்’ என்று கத்தியபடி மணிமேகலை இருக்கவும் ஆதித்த கரிகாலன் ஸ்தம்பித்து நின்றான். பெரிதாகச் சிரித்தவாறே கந்தமாறனை அழைத்து ‘இந்தப் பெண்புலிக்கு எத்தனை வீரப் புலிக்குட்டிகள் பிறக்குமோ தெரியாது. கொண்டுபோய் உன் அம்மாவிடம் விட்டுவிட்டு வா’ என்று இருவரையும் அனுப்பிவிட்டு நந்தினியை ஏறிட்டான். ஒரு நாடகம் நடித்து அவர்களை அனுப்பி விட்ட தாகவும் இனிமேலாவது உண்மையை மனம் விட்டு பேசலாமென நந்தினியிடம் கூற, அவள் ‘அத்தனையும் நடிப்பா’ என வியந்தாள். ‘நடிப்பு உனக்கு புதிதா’ எனக் கேட்ட கரிகாலன் ‘மணிமேகலையை தான் கொல்லப்போகும்போது தடுக்காதது ஏன்? அவள் சாகட்டும் என விட்டுவிட்டாயா?’ என்று வினவ, அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக நந்தினி கூறினாள். ‘அவ்வளவு அன்பை நந்தினி யார் மீது வைத்தாலும் அவர்கள் தனக்கு விரோதியாகிவிடுவார்’ என ஆதித்த கரிகாலன் கூறினார். நந்தினி பதறி இல்லையெனக் கூறினாள் ‘உண்மையைச் சொல்.சோழ சாம்ராஜ்யத்தை பங்கு போடுவதற்கோ, மணிமேகலையை எனக்குத் திருமணம் செய்விப்பதற்காகவோ இங்கு நீ வரவில்லை. நான் நம்ப மாட்டேன். என் உள்ளத்தில் நிரம்பியிருப்பதெல்லாம் நிராசையும் அவநம்பிக்கையும்தான். இந்த நாட்டை விட்டும் இந்த உலகத்தை விட்டும் போய் விடவே நான் விரும்புகிறேன்.அதற்கு முன்னால் ஒரு தடவை உன்னைப் பார்த்துப் போகலாம் எனவே வந்தேன். நீ என்னிடம் ஒரு வரம் கேட்டாய். நான் என் மூர்க்கத்தினால் அதை உனக்குக் கொடுக்கவில்லை. அதற்கு வருத்தப் படுகிறேன். நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய், என்னை எதற்கு வரவைத்திருக்கிறாய்? பழுவேட்டரையரை எதற்காகத் தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறாய் என்றெல்லாம் எனக்குத் தெரியும். வீரபாண்டியனுடைய வாளினால் என்னைக் கொன்று பழிமுடிக்கும் நோக்கத்துடனேயே நீ இங்கு வந்திருக்கிறாய். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டுமெனவே கந்தமாறனையும் மணிமேகலையையும் வெளியில் அனுப்பினேன். இதோ வாளைப் பெற்றுக்கொள்’ என வாளை நீட்டினான் கரிகாலன். வாளினைப் பெற்றுக்ககொண்ட நந்தினி நடுங்கி கண்ணீர் விட்டு தேம்பலுடன் அழலானாள்.‘உன் அந்தரங்கத்தை நான் அறிவேன். உன் பழியை முடிப்பதற்கு கந்தமாறனையோ, பார்த்திபேந்திரனையோ, வந்தியத்தேவனையோ நீ ஏவி விட வேண்டாம். உன் சபதத்தை உன் கையாலேயே முடித்துக் கொள். இதைவிட நல்ல சந்தர்ப்பம் வரப் போவதில்லை. என்னைக் கொல்லுவதினால் எனக்கு நீ எவ்வித தீங்கும் செய்தவளாக மாட்டாய். பேருதவி செய்தவளாவாய்?’ என்று கரிகாலன் கூற, அழுகையை அடக்கிக் கொண்டு நந்தினி, ‘ நான் இங்கு வந்த நோக்கம் பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் சந்தர்ப்பம் நேர்ந்திருக்கும் சமயத்தில் எனக்கு அந்த தைரியம் இல்லை. என் கைகள் நடுங்குகின்றன’ என்றாள். ‘ ஆம். ஏன் உன் நெஞ்சம் உறுதியாயிற்றே.. இளகிவிட்ட காரணம் என்ன?’ ‘உங்கள் நண்பர் வந்தியத்தேவன் சொன்ன செய்திதான் காரணம்’ ‘ நீயும் நானும் உடன்பிறந்தவர்கள் என்று அவன் சொன்னதை நீ ஏரிக்கரையில் நாம் பேசிக்கொண்டிருந்தபோது அதை நம்பவில்லை என்று கூறினாயே’ ‘அவர் என்னைப் பெற்ற அன்னையை இலங்கைத் தீவில் பார்த்ததாகக் கூறினார். அதை நான் நம்புகிறேன். எனக்கொரு வரம் கேட்கிறேன். இதையாவது கொடுங்கள். வீரபாண்டியன் மரணத்திற்கு பழிவாங்குவதாக செய்த சபதத்தை என்னால் முடிக்க இயலவில்லை. என்னை நானே கொன்று கொண்டு முடியலாம் என நினைத்தால் அதற்கும் என்னிட்ம் தெம்பில்லை. நீங்கள் இந்த வாளால் என்னை வெட்டிக் கொன்று விடுங்கள். இனிவரும் ஜென்மங்களில் நான் நன்றியுடன் இருப்பேன்.’என்று சொல்லியபடி நீட்டிய வாளை ஆதித்த கரிகாலன் வாங்கிக் கொண்டு அந்த அரண்மனையே அதிரும்படி பெரிதாகச் சிரித்தான். யாழ்களஞ்சியத்திலிருந்து இதைக்கேட்ட வந்தியத்தேவன் மருண்டான். இளைய பிராட்டி குந்தவை தன்னை இதுபோன்ற சந்தர்ப்பத்திலிருந்து ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றவே அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான். தற்போது வெளிவந்து அவர்களைக் குறுக்கீடு செய்யாமல் பொறுமையாக காத்திருக்கலாம் என முடிவு செய்து பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். ‘ஒருகாலத்தில் உங்களிடமிருந்து மலர்மாலை சூடுவதாக கனவு கண்டேன். உங்கள் கையால் வாளை சூடும் பேறாவது எனக்குக் கிடைக்கட்டும்’ ‘அப்படியானால், நான் இந்த வாளைக் கொண்டு உன்னிடம் சேர்வதற்கு தடையாய் இருப்பவர்களைக் கொல்கிறேன். நீ என்னுடன் வந்துவிடு நந்தினி’ ‘என்னால் யாரும் சாக வேண்டாம். நமக்கு என் தலைவிதிதான் தடையாக இருக்கிறது’ ‘ அந்த தடையை நான் மாற்றி எழுதுகிறேன். தடை செய்யாதே. வந்தியத்தேவன் சொன்னதைப்பற்றி நாம் சகோதர முறை என யோசிக்கிறாயா?’ ‘இல்லை. நான் உங்களுக்கு ரத்த சம்பந்தமே இல்லை. அதில் சந்தேகமும் இல்லை. நான் பழுவேட்டரையரின் மனைவி. உங்களுக்கு பாட்டி முறை.’ ‘அந்தக் கதையை சொல்லி என்னை ஏமாற்றாதே நந்தினி. உன்னை விட்டு நான் காஞ்சிக்கு சென்ற பின்னும் என்னை ஓயாமல் வதைத்துக் கொண்டே இருந்தாய். நீ மட்டும் அங்கு குதூகலமாய் பழுவேட்டரையரின் மனைவியாக இருந்து கொண்டு என்னை ஆட்டுவித்தாய்’ ‘நான் மட்டும் சுகபோகங்களில் முழுகிக் கிடந்தேன் என நம்புகிறீர்களா?’ ‘இல்லையல்லவா? அப்படியானால் கிளம்பு. எத்தனையோ தீவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றை அடைவோம். உன்னைக் காட்டிலும் எனக்கு ராஜ்யம் பெரிதன்று’ ‘ராஜ்யத்தை துறந்தாலும் இந்தக் கீழ்க்குல மகள் புராதனமான சோழ சிங்காதனத்தில் ஏறுவதற்கு சம்மதிக்க மாட்டீர்கள் இல்லையா’ கேட்டுவிட்டு ஏளனமாக நந்தினி நகைக்க,‘என்னைக் காட்டிலும் சோழ சிங்காதனம் உனக்கு பெரியதாய் போயிற்றா? அதற்காகத்தான் என்னை சிறுபிராயத்திலிருந்து விரும்பினாயா?’ என்று குரோதம் ததும்ப கரிகாலன் கேட்டான். ‘அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதற்காகவே பழுவேட்டரையரை மணந்தேன். வீரபாண்டியரை காப்பாற்ற முனைந்தேன்’. அந்த பெயரைக் கூறியதும் கரிகாலன் வெகுவாக கோபப்பட்டு, ‘இதைச் சொன்னால் நான் கோபப்படுவேன். உன்னை வெட்ட வந்தால் அந்த வந்தியத்தேவன் வந்து என்னை வெட்டிவிடுவான் என கணக்கு போட்டிருக்கிறாயா’ என வாளை சுழற்றிக்கொண்டு ஓடத் தொடங்க.நந்தினி அவர் காலில் விழுந்து ‘வாணர்குல வீரரைப்பற்றி தாங்கள் கூறுவது அபாண்டம். அவரைக் கொலை செய்தால், மணிமேகலை தன் உயிரையே விட்டுவிடுவாள். என் நெஞ்சில் உங்கள் திருவுருவத்தைத்தவிர வேறெதுவும் இல்லை. இது சத்தியம்’ என கதறி அழுதாள். கரிகாலன் தணிந்து அவளைத் தன்னுடன் வருமாறு கெஞ்சினான். நந்தினி மறுத்து தன்னுடைய உண்மையான கதையை கூறினாள். ‘ என் வாழ்க்கையின் விமோசனம் மரணம் ஒன்றுதான். ஈழநாட்டில் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கும் மாதரசி என் அன்னை என்பதை என்னைப்போல பலரும் அறிந்திருந்தனர். என் அன்னையை அத்தகைய வெறியளாக்கிய காரணம் இன்னதென்பதையும் சில காலத்துக்கு முன்பு நான் அறிந்து கொண்டேன். அது என்னவென்றால் என்னுடைய தந்தை… என்னுடைய தந்தை… அவர்தான்’ விக்கி அழுதுகொண்டே ஆதித்த கரிகாலனின் காதில் சொல்லி முடித்தாள். ஒரு கணம் அதைக் கேட்டு பதறித்துடித்த ஆதித்த கரிகாலன், தன் ஆவேசம் தணிந்து அதை ஒத்துக் கொண்டான். ‘ஆம் நந்தினி. இப்போது எனக்கு எல்லாம் தெரிகிறது. உன் ஆழ்மனதில் நீ எவ்வளவு துன்பபட்டிருக்க வேண்டுமெனவும் புரிகிறது. அன்றைக்கு நீ என்னுடைய காலில் விழுந்து மன்றாடிய போது நான் அதை மறுத்தது எத்தனைக் கொடுமை என்று தெரிகிறது நந்தினி. நான் செய்ததற்கு வேறு பிராயச்சித்தமே இல்லை. நம் இருவருக்கும் நடுவில்