சண்டிகர் கரே ஆஷிகி

சண்டிகர் கரே ஆஷிகி

திரைவிமர்சனம் எத்தனையோ வாதப் பிரதி வாதங்களையும் தாண்டி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, நாடாளுமன்றம் இயற்றிய சட்ட அங்கீகாரத்தின்படி, இந்நிகழ்வு இன்றைய நிலையில் இயல்பான ஒன்று என்றாலும், அத்தனை சுலபமாக இல்லாமல், நடைமுறையில் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள், வலிகளின் நேர்த்தியான திரை வடிவம்தான், சுப்திக் சென், துஷார் பரஞ்சிபே எழுதி, அபிஷேக் கபூர் இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஹிந்தியில் வெளியாகியுள்ள ‘சண்டிகார் கரே  ஆஷிகி’. பாடி பில்டர் மனு முஞ்சள் (ஆயுஷ்மான் குரானா) சொந்தமாக ஜிம் நடத்தி வருகிறான். அதன் ஒரு பகுதியில், ஜும்பா நடனப் பயிற்சி தரும் ஆசிரியை மான்வி (வாணி கபூர்) இடையே மலர்ந்து பயணிக்கும் காதல், திருமணத்தை எட்டும் நிலையில், அவள் சொல்லும் ‘அந்த’ உண்மையை அவன் சகித்துக் கொள்ள முடியாமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முனைகிறான். தனது நேர்மையை உணராமல் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதையும், யாதொரு தவறும் செய்யாத நிலையில், சுயமரியாதை  காயப்படுத்தப்பட்டதையும் ஜீரணிக்க முடியாது தவித்துப் போகிறாள் மான்வி. இந்நிலையில், இவர்களிடையேயான பிரச்சனை எவ்விதம் தீருகிறதென்பதே சண்டிகார் கரே  ஆஷிகி படத்தின் மீதிக் கதை. புரிந்து கொள்ளாமல் மனு கிளம்பும்போது,  உடைந்து போவதில் ஆகட்டும், ஒரு சிறு கீரலுக்குக் குழந்தை போல அழுததைச் சுட்டிக்காட்டி, எத்தனை வெட்டு, ரண வலிகளை தான் தாங்கியதைச் சொல்லி, “இனி இதைவிட என்னைக் காயப்படுத்த ஏதுமில்லை, அப்படியான வலி ஏதாவது உனக்கு இருந்தா காட்டு” என்று சவாலாகச் சொல்வதில் ஆகட்டும், அப்பா, மகன் என்று குறிப்பிடும்போது, உடன் ‘மகள்’ என்று திருத்துவதில் ஆகட்டும், ஜிம்மை விட்டு நின்று விடும்படி கோரும் அப்பாவிடம், “என்னோட ஸ்கூல், என்னோட வீடு, என்னோட ஊர விட்டுட்டேன். இப்போ ஜிம்மையும் விட்டுட்டு எங்க ஓடுவேன்? நான் நான்தான். நானா இருக்கிற  எனக்கு எந்த அவமானமும் கிடையாது” என்று ஸ்திரமாக சொல்வதில் ஆகட்டும், “என்னோட கௌரவத்தை என்னால பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று சொல்வதில் ஆகட்டும் மான்வி பாத்திரத்தில் வாணி கபூர், அதேபோல, அவளின் நிலையை, அவளுடனான உறவை ஏற்றுக்கொள்வதிலான தயக்கத்தால், தேய்த்துத் தேய்த்துக் குளிப்பதில் ஆகட்டும், தனது நண்பர்களுடன் அவற்றைப் பகிர்ந்து தவறு இழைத்ததாகத் தடுமாறிப் புலம்புவதில் ஆகட்டும், அதே சந்தர்ப்பத்தில் அவர்கள் அவளை இழிவாகக் குறிப்பிடுவதை ஏற்காமல் சண்டையிடுவதில் ஆகட்டும், மருத்துவர் வழங்கிய ஆலோசனைகளுக்குப் பிறகு தெளிவு பெறுவதில் ஆகட்டும் மனு முஞ்சள் பாத்திரத்தில் ஆயுஷ்மான் குரானா என இருவருமே ஏற்ற பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தத்தம் நடிப்பின் பன்முகத் தன்மையை வெளிக்காட்டியுள்ளது சிறப்பு. மான்வியின் தந்தை மொஹிந்தர் (கன்வல்ஜித் சிங்), மனுவின் நண்பர்கள் (கௌரவ் சர்மா, கௌதம் சர்மா), மனுவின் அப்பா நவீன் (கிரிஷ் தாமிஜா), மனுவின் சகோதரிகள் (தான்யா அப்ரால், சாவன் ரூபாவாலி) ஆகிய கலைஞர்களும் சிறப்பாகவே பங்களிப்பைச் செய்துள்ளனர். ஒளிப்பதிவும் (மனோஜ் லோபோ) அருமை.  மாண்டேஜ் வகைப் பாடல்கள் இனிமை. இசை, சச்சின்-ஜிகர். சந்திரன் அரோரா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஓடும் படத்தில், முதல் நாற்பதாவது நிமிடத்திலேயே ‘அந்த’ உண்மையைப் போட்டுடைத்தும், படத்தின் இறுதிவரை இக்கதைக் கருவில் ரசிகர்களை அக்கறைப்படுத்தி,  ஈடுபாட்டுடன் கொண்டு செல்லும் இயக்குனர் அபிஷேக் கபூரின் துணிச்சலான திறமை பாராட்டுக்குரியது. மதிப்பெண்:7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே)

கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே)

திரை விமர்சனம் ஒரு வாரத்தில் மதுரையில்  மாண்டி என்கிற மந்தாகினியுடன், வெங்கடேஷ் விஸ்வநாத் ஐயர் என்கிற விஷுவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பீகாரில் ரிங்கு சூரியவன்ஷியுடன் திருமணம் நடந்தேறிட, அதை இருவருமே விரும்பாத நிலையில், அவர்களது வாழ்க்கைப் பயணத்தை விறுவிறுப்பாகவும் சுவையாகவும் கொஞ்சம் லாஜிக் தவிர்த்தும் கூறும் ஹிந்திப்  படம்தான், ஹிமன்ஷு ஷர்மா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஆனந்த் எல்.ராய் இயக்கி, தமிழ்  மொழி மாற்றத்தில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள ‘அத்ராங்கி ரே’, தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’. “இந்த வாயாலதான் நான் இன்னும் உயிரோட இருக்கேன், இல்லேன்னா என்னை எப்பவோ வெட்டி இந்த அடுப்புல போட்டுப் பொசுக்கி இருப்பீங்க, என்னை என்ன கோயில் பிரசாதம்னு நினைச்சியா? கையை நீட்றவனுக்கெல்லாம் தூக்கி கொடுக்கறதுக்கு, இதென்ன கருமம் பிடிச்ச லவ்வு? லவ்வுன்னா நாலஞ்சி தலைங்க உருளனும், ரெண்டு வீட்டுக்காரர்களும் அடிச்சுக்கணும், ஊர்ல பேரு கெடணும், ரெண்டு குடும்பமும் பத்திக்கிட்டு எரியணும். இதெல்லாம் இல்லேன்னா பீகார்ல அது அரேஞ்ச்ட் மேரேஜ் தான்”  ரிங்கு பேசும் இத்தகு வசனங்களிலிருந்து பீகாரின் சமூக நிலையைத் தெளிவாகப் புரிந்து  கொள்ளலாம். ரொமான்டிக் காமெடி வகையான இப்படத்தில், அக்ஷய் குமார் (சஜ்ஜாத் அலி கான்), சாரா அலி கான் (ரிங்கு), தனுஷ் (விசு) போன்றோரின் பண்பட்ட நடிப்பால், அழகான அழுத்தமான பங்களிப்பை வழங்கி, இரண்டே கால் மணி நேரம் போவதே தெரியாமல், ரசிகர்களைப் படத்தோடு லயித்துப் போகச் செய்து விடுகின்றனர். சாரா அலி கானின் மனப்போராட்டம், வெகுளித்தனம், காதல் வயப்படுதல் என, அசத்தலான நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதேபோன்று, நிச்சயதார்த்தத்தின்போது திருமணம் நின்ற பின்பு, முதன்முதலாக ரிங்குவிடம் தனது காதலை தனுஷ் வெளிப்படுத்துவதும் அருமை. சாரா அலி கான் – அக்ஷய் குமார் இணைந்து வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பானவை. “டெல்லி… கொஞ்சம் மூச்சுதான் விட முடியல, மத்தபடி நல்லா இருக்கு” ஆட்டோவுக்கு வெளியே தலை நீட்டிச் சொல்லும் ரிங்கு, “விஷு சார், இந்த உலகத்லேயே நான் ஒரே பொண்டாட்டின்னு நெனைக்கிறேன், சொந்தப் புருஷனோட எங்கேஜ்மெண்ட்ல இவ்வளவு குஷியா இருக்கேன்”, விஷுவிடம் ரிங்கு, “இவன் பாடு ரொம்பக் கஷ்டம்ப்பா, ஒரு மொபைலில் ரெண்டு சிம் போடப் பாக்கறான்”, எம்.எஸ்.  சஜ்ஜாத் கொண்டு வரும் ஆட்டைக் கட்டி, மது பால் கறக்கும் பரிதாபம், ஆக்ராவில் தாஜ்மகாலை மறைய வைக்க முயன்று,  முடியாத தோல்வியை ரிங்கு உணரும் சோகம், தொடர்ந்து விஷுவை அவள் உணர்ந்து கொள்ளல் போன்றவை, பசுமையாக நினைவில் நிற்கும் காட்சிகள். துணைப் பாத்திரங்களான, ஆஷிஷ் வெர்மா (எம்எஸ்), டிம்பிள் ஹயாதி (மாண்டி), சீமா பிஸ்வாஸ் (துல்ஹயன்), நித்யா ரவீந்திரன் (விசுவின் அம்மா), ஜி மாரிமுத்து (மாண்டியின் அப்பா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பில் நிறைவைத் தருகின்றனர். படத்தின் இன்னுமொரு சிறப்பு, இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் துள்ளலான பாடல் இசையும் அருமையான பின்னணி இசையும்தான். மதன் கார்க்கி, யுகபாரதி, கபிலன், தனுஷ், ரோகிணி, விவேக் எழுதிய அனைத்துப் பாடல்களும், மனோ, ஹரிசரன் சேஷாத்ரி, ஸ்ரேயா கோஷல், ஏ.ஆர். ரகுமான், கே.எஸ்.சித்ரா, தனுஷ்  குரல் இனிமையால், பன்முக உணர்வுகளில் மூழ்கடித்து விடுகின்றன, பாடல்கள் அனைத்தும். பங்கஜ் குமாரின் காமிரா, பீகார் சிவன் ஜங்ஷன், டெல்லி, ஆக்ரா, செட்டிநாடு வெளிப்புறம் உள்புறமுமாகவும், பகலும் இரவுமாகவும் சுழன்று சுழன்று கண்களைக் கவர்ந்து விடுகிறது. ஹிமல் கோத்தாரியின் படத்தொகுப்பும் நிறைவைத் தருகிறது. சுவைக்காகவும் சுலபத்திற்காகவும் அமானுஷ்யம், பேய் பிசாசு என்று பூ சுற்றி விடாமல், உளவியலை  (பாராகசம்) முன்வைத்து, தெளிவான ஒரு கதையை அழகான பொழுதுபோக்குச் சித்திரமாக்கித் தந்திருக்கும் இயக்குனரின் நேர்மை பாராட்டுக்குரியது. மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஆன்டி இண்டியன்

ஆன்டி இண்டியன்

திரை விமர்சனம் வழக்கமான கதை, திரைக்கதை இல்லை. வழக்கமான நடிகர், நடிகைகள் இல்லை. வழக்கமான காதல், சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. வழக்கமான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு இல்லை. வழக்கமான திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. வழக்கத்திலிருந்து வேறுபட்டுத் தனித்து, விறுவிறுப்புடன் ரசிகர்களைச் சுவைக்கவும் சிந்திக்கவும் கொஞ்சம் வருந்தவும் செய்து, இறுதிவரை இருக்கையில் இறுத்திப் பார்க்க வைத்து விடுகிற படம்தான், மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து, ப்ளூ சட்டை சி இளமாறன் கதை, திரைக்கதை, வசனம், இசை பொறுப்பேற்று, அறிமுக இயக்கம் என்கிற சுவடே தெரியாமல் அருமையாக இயக்கி வெளிவந்துள்ள ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம். சென்னை மயிலாப்பூர் இடைத் தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அத்தொகுதியைச் சேர்ந்த சுவர் ஓவியர் பாஷா (ப்ளூ சட்டை இளமாறன்) யாது காரணத்தாலோ, யாராலேயோ வெட்டிக் கொல்லப்பட்டு விடுகிறார். ஒரு பக்கம் காவல்துறை விசாரணை நடத்த, மறுபக்கம் கட்சிகளின் தேர்தல் வியூகம் நடைபெற்றுக் கொண்டிருக்க, அவரை எரிப்பதா, புதைப்பதா, அடக்கம் செய்வதா என்பதில் துவங்கும் பிரச்சனை, எவ்விதம் முடிவுக்கு வருகிறது என்பதுதான் ‘ஆன்டி இந்தியனி’ன் மொத்தக் கதை. தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் புறா கதை, ப்ளூ சட்டை மாறன் துணிச்சலுடன், இப்படி ஒரு படத்தை நேர்த்தியாக எடுத்துத் தருவதற்கு அடிப்படை என்பது, சுவையான ஒரு செய்தி !ஆரம்பத்தில் சொல்லும் இக்கதையை மாறன் இறுதியில் வைத்து முடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். “மதத்த நம்பறவன் கோச்சுக்க மாட்டான்… மதத்தை வெச்சு பொழப்பு நடத்தறான் பாத்தியா, அவன்தான் கோச்சுப்பான்”, “நம்ம மக்களப் பத்தி நமக்கு தெரியாதா? செருப்பால அடிச்சிட்டு… கைல கருப்பட்டி கொடுத்தா, நக்கிக்கிட்டே போயிடுவாங்க” செத்தவன் பேரு பாஷா, அப்பன் பேரு இப்ராஹிம், உங்க பேரு?, என்ன, சரோஜாவா?, நம்ம புள்ளைங்கங்ற நம்ம அடையாளமே இல்லீயேப்பா…, இந்துக்களுக்கு என்ன ஒரு பிரச்சனையானாலும் அங்க நாங்க இருப்போம், நார்த் மாதிரி இல்ல தலைவரே, இங்கே எல்லாமே கஷ்டம், அவரு 25 வருஷமா இதோ வரேன் அதோ வரேன்னு சொல்லி, அவர் ரசிகர்களை ஏமாத்திட்டிருக்காரு, செத்தவனை வச்சு பொழப்ப நடத்தி, வாழ்ந்தவங்கதானே நம்ம அரசியல்வாதிக, இவங்க பொணத்த வெச்சிகிட்டு வெளயாட்டு காட்டிட்டிருக்காங்கண்ணா, முன்னாடி எல்லாம் தூர்தர்ஷன்னு ஒரே ஒரு சேனல் இருக்கும், அதுல ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கும். இன்னிக்கு ஊர்பட்ட சேனல்ஸ் இருக்கு, எல்லாத்திலும் வெறும் பஞ்சாயத்து மட்டும்தான் ஓடிட்டு இருக்கு, -இப்படிப் படம் முழுவதும் ‘பஞ்ச் டயலாக்’ ஸாக இல்லாது, ரசிகர்களின் மனதைப் ‘பன்ஞ்’ செய்து விடுகிற டயலாக்குகளாக விரவி இருக்கின்றன. இந்தப் படம் எந்த ஒரு தரப்பையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டிடவில்லை; மதவாதிகள், அரசியல்வாதிகள், ஊடகவாதிகள், ஏன் மக்களையும் சேர்த்து, எல்லோரையுமே அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. என்னதான் இயல்புத் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும், படம் முழுவதுமாகத் தொடரும் கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். இறந்த உடலுக்குச் சுன்னத் செய்ய, மார்க்கம் அனுமதிக்குமோ ! படத்தின் பெயரும் கதைக்கருவோடு ஒட்டவில்லை. ராதாரவி (முதல்வர் செங்குட்டுவன்), ஆடுகளம் நரேன் (காவல்துறை துணை ஆணையர்), வழக்கு எண் முத்துராமன் (காவல் ஆய்வாளர்) ஜெயராஜ் (ஏழுமலை) வேலு பிரபாகரன் (ஹாஜியார்) விஜயா (சரோஜா), பசி சத்யா (சரோஜாவின் தோழி) உட்பட அனைத்துக் கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். கதிரவனின் ஒளிப்பதிவும், சுதர்சனின் படத்தொகுப்பும், மாறனின் பின்னணி இசையும், உறுத்தாமல் படத்தின் தேவையை நிறைவு செய்கின்றன. இடையிடையே கானா பாடல், இனிமை சேர்க்கிறது. “பேசாம பாடிய எடுத்துட்டு போய் மெடிக்கல் காலேஜிலாவது போடுங்க சார், பசங்கலாவது அதை வெச்சி படிக்கட்டும்” என்று கருஞ்சட்டை மனிதர் (கில்லி மாறன்) மூலம் துணிச்சலுடன் சொல்லிய இயக்குனர் மாறன், படத்தின் இறுதிக் காட்சியையும் அதே துணிச்சலுடன், மதச் சார்புத் தன்மையை மறுக்கும் விதத்தில், அவ்விதமே அமைத்திருந்தால், ‘ஆன்டி இந்தியன்’ கூடுதல் சிறப்புப் பெற்றிருக்கும். மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்

மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்

திரை விமர்சனம் எப்போது வரும், எப்படி வரும் என விளையாட்டுக காட்டும் மரணத்தை, அறியாத நிலையில் அதன் நினைப்பில் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், அந்த மரணத்தையே வலிந்து எதிர்கொள்ளும் ஒருவனின் கதைதான், லைம் ஹெம்ஸ்வொர்த் நடித்து, நிக் சன்தோரா எழுதி, ஃபில் ஆபிரகாம் இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில், தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ‘மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்’ ஆங்கிலத் திரைப்படம். டெட்ராய்ட் நகரில் வசிக்கும் முன்னாள் தடகள வீரரும், ரியல் எஸ்டேட் தொழிலில் தோல்வியுற்றுத் துவண்டிருப்பவரும், உயிர்க்கொல்லி நோயால் மரணத்தை எதிர்கொண்டு இருப்பவருமான டாட்ஜ் டைன்ஸ், பிறக்கப் போகும் தனது குழந்தை மற்றும் மனைவியின் எதிர்கால நலனுக்காக, யாருமே துணியாத அபாயகரமான ஒரு திட்டத்திற்கு உடன்படுகிறார். அதன் அடுத்தடுத்த நிகழ்வுகளும், முடிவுமே இப்படத்தின் மொத்தக் கதை. இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தின் முப்பதாவது நிமிடத்தில், கதை நாயகன் டாட்ஜ், தன்னைத் துரத்தும் மரணத்திலிருந்து தப்பிக்க ஓடத் தொடங்கிய நிமிடம் முதல், படமும் படுவேகமாக ஓட்டமெடுக்கிறது. குலை நடுங்க வைக்கும் ஓட்டத்தில், அவனோடு நம்மையும் இழுத்துக் கொண்டே ஓடுகிறான். விரக்தி, கோபம், பாசம்,நட்பு,வருத்தம், கண்களில் மரண பயம் என, பல்வேறு முகபாவ வெளிப்பாடுகளுடன் லைம் ஹெம்ஸ்வொர்த் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் மைல்ஸ் செல்லர் (கிறிஸ்டோபர் வால்ட்ஸ்), மனைவி வால் (சாரா கார்டன்), நண்பன் ரோஜர் (ஜாக் செர்ரி), கண்காணிப்பாளர் கானல் (ஆரன் பூளே), வேட்டையாளர் நிக்சன் (கிரீஸ் வெப்ஸ்டர்), ரீகன் (பில்லி புர்க்), கார்ட்டர் (ஜிம்மி அக்கின்போலா), எல்பிஜே (பேட்ரிக் காரோ), கென்னடி (நட்டாஷா லியோ போர்டிஸோ) ஆகியோர் அவரவர்களுக்குரிய பாத்திரப் படைப்புக்கு நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தனது உடல்நிலை பற்றி உண்மை தெரிந்த வினாடியில் டாட்ஜ் நிம்மதி பெற்றாலும், தான் ஏமாற்றப்பட்டதையும், பேரபாயத்தில் சிக்க வைக்கப்பட்டதையும் உணர்ந்து கொதித்து வெடிக்கும்போது, “எல்லாம் உனக்கு ஹெல்ப் பண்ணத்தான். நீ செத்துகிட்டுதானே இருந்தே, உன்கிட்ட பணம் இல்ல, காரியர் இல்ல, ஃப்யூச்சர் இல்ல, நீ சந்தோஷமாக வாழ்ந்து எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? நான்தான் உனக்கு புது வாழ்க்கைய தந்திருக்கேன்” என்று மைல்ஸ் செல்லர் கூலாகச் சொல்வதும், தன்னைக் காப்பாற்றும் நண்பனை டார்ஜ் புரிந்து கொள்ளும் தருணமும், எந்தப் படுமோசமான சூழ்நிலைகளிலும் எல்லோருமே விதிகளைக் கடுமையாகப் பின்பற்றும் நிகழ்வுகளும், பதைபதைக்க வைக்கும் கிளைமாக்ஸ்சில், ஹன்டர் நிக்சன் “சூரியன் வந்திருச்சி, கேம் முடிஞ்சு போச்சு. நல்ல விளையாடின, தேங்க்ஸ். எனக்கு ஆட்டத்த காமிச்சிட்டே” என்று ஜென்டிலாக சொல்லிச் செல்வதும் ரசிக்கத்தக்கக் காட்சிகள். மேத்யூ ஜே லாய்ட் டின் அற்புதமான ஒளிப்பதிவும், டோடர் கொபகோவ்வின் அசத்தலான பின்னணி இசையும், வில்லியம்ஸ் டரோ, கெய்ஜர் ஆகியோரின் கச்சிதமான படத்தொகுப்பும் பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. படத்தின் இறுதிக் காட்சியில், மிகவும் பேராபத்தான விளையாட்டின் மரண பயத்தில் இருந்து நாமே விடுபட்ட உணர்வை ஏற்படுத்தி விடுவதுதான், ‘மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்’ திரில்லரின் வெற்றி. மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஜீவன் சந்தியா

ஜீவன் சந்தியா

திரை விமர்சனம் அங்கிங்கு என்று இல்லாமல், இந்தியச் சமூகத்தில் எங்குமே எப்போதுமே நிலவும் ஒன்றுதான், ‘காதல் கசக்குதையா’. ஜீவன் அபயங்கர், சந்தியா ஜோஷி விஷயத்திலும் அதே நிலைதான். அவரவர் குடும்பங்கள் அவர்களது நட்புக்கு, காதலுக்கு, வாழ்க்கைக்கு, தோழமைக்கு குறுக்கே நிற்கின்றன. தடைகளைத் தாண்டி, அவர்கள் இணைந்தார்களா? வாழ்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான், தீபக் பிரபாகர் மாண்டே எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மராத்தி மொழி குடும்பச் சித்திரம்,  ஜீவன் சந்தியா. காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டும் இல்லை, வயதும் இல்லை; தேவை மட்டுமே உண்டு. என்ன ஒன்று, ஜீவன் அபயங்கர் (அசோக் சரப்) சந்தியா ஜோஷி (கிஷோரி சஹானே) ஜோடி, அவர்களின் தேவையை உணரும்போது கொஞ்சம் வயதாகி விடுகிறது;  அறுபதுகளில்தான் அவர்களிடத்தில் காதல் வாய்க்கிறது. அதனால் ஒன்றும் அது சுலபமாகி விடவில்லை. வாழ்க்கையில் போராட்டமாகவும், போராட்டமே வாழ்க்கையாகவும் தொடர்கிறது, பரஸ்பரம் கைத்தலம் பற்றியே என்பதால், சுமையும் சுகமுமாக. மர்ம முடிச்சுகள் இல்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. கிளுகிளுப்பான காட்சிகள் இல்லை. சண்டை சர்க்கஸ் இல்லை. கிளாமருக்கு இடமில்லை. விரசம் இல்லை. காமெடி டிராக் இல்லை. இத்தனை ‘இல்லை’ என்றாலும், நிறைவும் இல்லாமல் இல்லை. நடுங்கும் கையைப் பற்றிக் கொண்டு, “மிஸ்டர் அபயங்கர், எனக்கு நீங்க கைய கொடுக்கறீங்களா? இல்ல, பிடிமானத்துக்காக என் கைய  புடிச்சுக்கிறீங்களா?” எனக் கேட்கும் சந்தியாவிடம், “கைய நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் இந்த வயசுல நம்ம ரெண்டு பேருக்குமே பிடிமானம் தேவைப்படுதே, மிஸஸ் அபயங்கர்” என்பதும்,  ஆட்டோவில் அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகம், ரெஸ்டாரண்டில் ஜோஷியின் அழகை ஆராதித்து, ஜீவன் அபயங்கர் வண்ணத்துப்பூச்சியை வாழ்க்கைக்கு ஒப்பீடு செய்தலும், சந்தியா மகளிடம் பேச முனையும்போது முடியாமல் போவதும், பின்னர் மகள் பேச முனையும்போது பேச்சை முடித்து விடுவதும், பூங்காவில் அபயங்கர், ஜோஷி பூவைச் சூடிக் கொள்ளச் சம்மதிக்க அந்த மலர் பற்றி எடுத்து விளக்குவதும், கண்ணாடியைப் பார்க்கச் சொல்ல, அவள் பார்ப்பதும், நட்பு காதலாகித் திருமணத்தில் வந்து நிற்கும் நிலையில், பூங்காவில் அவர்களுக்குள்ளான உரையாடலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அபயங்கரோடு சந்தியாவின் பேச்சும், அப்பாவின் வாழ்க்கை குறித்து எடுத்த முடிவை மகன் அங்கூர் சொல்ல, “உன்னுடைய சந்தோஷத்துக்காக வேண்டுமானால் அந்த பேப்பரில் கையெழுத்துப் போடுகிறேன். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்தில வெச்சுக்கோ, பேப்பர்ல போடற கையெழுத்து நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறத நிறுத்தப் போறதில்ல” என்று சொல்வதும், நர்ஸ் மமதா கரே வாக அபயங்கர் குடும்பத்தினருடன் அளவளாவதும், ரசிக்கத்தக்க  நயமான காட்சிகள். தொலைபேசியிலோ செல்பேசியிலோ அனைத்துப் பாத்திரங்களும் ஒரு முறை பேசி விடுகிற காட்சி தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. சந்தியா ஜோஷியை சந்திக்கக்கூட மறுக்கும் அளவிற்கு, மகன் அங்கூர் அபயங்கரின் அதீத வெறுப்புக்கு வலுவான காரணம் இல்லை. பாத்திரத்தின் தன்மையால் அசோக் சரப்பும், கிஷோரி சஹானாவால் பாத்திரமும் மெருகேறி நிற்பது சிறப்பு. ஜீவன் அபயங்கராக முற்பகுதி நடிப்பில் இருந்த இயல்பு, பிற்பகுதியில் சற்று தொய்வடைந்து விடுகிறது. சந்தியா ஜோஷியாக  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்கிறது நடிப்பில் சரிவே இல்லாத செறிவு. சமீர் தர்மாதிகாரி (அங்கூர் அபயங்கர்),  பிரதீபா அபயங்கர் (ருசிதா ஜாதவ்), ரவீந்திர மக்கானி (டாக்டர் தாமலே), ரமேஷ் தியோ (சந்தீப்), சீமா தியோ (சினேகா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பை, ஏற்ற பாத்திரங்களுக்குப் பழுதில்லாமல்  வழங்கியுள்ளனர். அதுல் பாலச்சந்திர ஜோஷியின் இசையில் இனிமையான  பாடல்களும், பின்னணி இசையும், மங்கேஷ் அஷோக் கடேக்கர் கண்கவர் ஒளிப்பதிவும் மனதைக் கவர்கின்றன. மஹந்தேஷ்வர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். இரண்டு மணி 15 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை, இயக்குனர் உடன் இணைந்து பேசி, இருபது நிமிடங்களைக் குறைத்திருந்தால், இன்னும் நிறைவாக இருந்திருக்கும். காதல் என்பது எதுவரை என்கிற கேள்விக்கு, இறுதிச் சுவாசம் உள்ளவரை என்கிற பதிலை, அறுபது வயதிற்கு மேற்பட்டவருக்கு என்று இல்லாமல், எல்லா வயதினர் மனதிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது, ‘ஜீவன் சந்தியா’. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஜெய் பீம்

ஜெய் பீம்

திரை விமர்சனம் யாரெல்லாம் மனித உயிருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமோ அவர்களே அதற்கு எதிராக இருந்தால் என்ன விளைவு என்பதுதான், ட்டி.ஜெ.ஞானவேல் எழுதி இயக்கி, சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், முதன்மைப் பாத்திரத்தில் சூர்யா நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம். கல்வி அறிவுக்கு வாய்ப்பில்லாத, சாதி பண பலமில்லாத ராஜாக்கண்ணு, ஒரு திருட்டுப் புகாரில் உறவினர் சிலரோடு விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், அவனது மனைவி செங்கேணியிடம், அவர்கள் தப்பித்து விட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். நம்ப மறுத்த மனைவி, காவல்துறையினரின் சித்திரவதை நெருக்கடிகளைத் தாண்டி, கையிலும் வயிற்றிலும் குழந்தைகளோடு சந்துரு என்கிற வழக்குரைஞர் துணையுடன், காணாமல் போன தனது கணவனை மீட்டுத் தர நீதிமன்றங்களில் சட்டப் போராட்டத்தை நடத்துகிறார். அதன் முடிவு என்ன என்பதே ஜெய் பீம் படத்தின் கதை. “ஒரு ஆளு மேல ஒரு கேசுதான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேசு போட்டு வையுங்க, எவன் வந்து கேட்கப் போறான்?” – ஜெயிலர், “நேத்து அடி வாங்கினான், இன்னிக்கு வந்து போராட்டம் பண்றான். இதுதான் ட்ரீட்மென்ட் கொடுக்கற லட்சணமா? யூஸ்லெஸ் ஃபெலோஸ்” – காவல்துறை அதிகாரி “விஐபி கேஸ்கூட இல்லை மேடம், சாதாரண டிரைபல் உமன் கேசுதான்” – உயர்நீதிமன்ற வழக்குரைஞர் “ஒரு டிரைபல் பொம்பளைய ஹைகோர்ட் வரை வர விட்டிருக்க” – அட்வகேட் ஜெனரல் “குற்றத்தைத் தடுக்கணும்னா எல்லா நேரமும் சட்டப்படி நடக்க முடியாது சந்துரு” – காவல்துறை அதிகாரி “நாளை ஒரு நாள் மட்டும் சமாளிச்சுட்டா போதும், ஜட்ஜ் பேனல் மாறுது” – அட்வகேட் ஜெனரல் – லாக்கப் உள்ளே இருப்பது மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் இந்தவகை மனோநிலைக்கு மத்தியில், வெளியே இருப்பதும்கூட பேராபத்துதான் என்பதை, இதைப்போன்ற வசனங்கள் மூலம் படம் துல்லியமாகச் சித்தரிக்கிறது. “எம்மா நடந்தாலும் எங்க ஆளுங்களுக்கே பட்டா கெடைக்கறதில்ல. நீங்க என்னமோ பட்டாங்கறீங்க, படிங்கறீங்க..” என மைத்ரா டீச்சரிடமும், “பாம்பு பிடிக்க வேணாம்னுதாய்யா படிக்க ஆசைப்பட்றான்” என்று தாசில்தாரிடமும், “டே பையா, மனுஷங்கிட்ட இருந்து ஒத்தி இருந்தாதான் உனக்கு நல்லது, போயிட்டு வா” என்று பாம்பிடமும், “இந்தக் காயமெல்லாம் கொஞ்ச நாள்ல ஆறிடும். ஆனா திருட்டுப் பட்டம் காலத்துக்கும் தங்கிடும்டா…” என்று சகோதரன் இருட்டப்பனிடமும் கூறும், அப்பாவி இருளர் ராஜாகண்ணுவாக வரும் கே.மணிகண்டன் –    “உழைச்சுப் பொழைக்க தெம்பு இருக்கும்போது, நாங்க ஏஞ்சாமி திருடனும்?” என திருட்டுத் தாலி என்று பரிகசிக்கும் காவலரிடம் சொல்லும்போதும், “இந்தக் கேஸ்ல தோத்தாகூடப் பரவாயில்லை, புள்ளைங்ககிட்ட போராடித் தோத்துட்டேன்னு சொல்லிக்கிறேன்” என டிஜிபியிடம் சொல்லும்போதும், டிஜிபி சொல்லியபடி போலீஸ் ஜீப்பில் ஏறாமல் நடந்தும் பஸ்ஸிலுமாக வீட்டிற்குத் திரும்பும்போதும், சித்திரவதைக்கு இடையில் வெளியே சாப்பிட ஒரு வாய் எடுத்து வைக்கும்போது லாக்கப் உள்ளே ஆணும் பெண்ணுமாகக் காவலர்களின் சித்திரவதைகளால் அலற, அழுதுகொண்டே சாப்பாட்டைத் தவிர்க்கும்போதும், தனது கணவனின் பெயர் ஒரு பாடலில் வருகிறது என்கிற ஒரே காரணத்தால், அந்தப் பாடலையே நேசிக்கும் போதும், சுயமரியாதையும் பாசமும் நேசமும் கொண்ட பெண் செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் – “அசிங்கம் அவங்க பேச்சில இல்ல, நம்ம நடத்தையிலும் இருக்கு” என்று சக காவல் அதிகாரியிடம், “ஜனநாயகத்தை நில நிறுத்தணும்னா சில நேரத்துல சர்வாதிகாரத்தக் கையிலெடுத்துதான் ஆகணும்” என்று வழக்குரைஞர் சந்துருவிடம், “டிபார்ட்மெண்ட்டுக்காக எதையாவது விட்டுக் கொடுக்கலாம், எதற்காகவும் என் மனசாட்சிய விட்டுக்கொடுக்க முடியாது, சாரி சார்” என்று டிஜிபியிடம், உச்சபட்சமாக உயர்நீதிமன்றத்தில் மனசாட்சிப்படி விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து, சாட்சிகளின் வாக்குமூலம் வழங்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் – “அப்போ கடைசிவரை வேடிக்கை மட்டும்தான் பாப்பீங்க? ஏழாயிரம் மனுஷங்க சார்”, “இல்ல சார், நீங்க இவ்வளவு பாசிட்டிவா சொல்றதுதான், இன்னும் எனக்குச் சந்தேகமா இருக்கு” சந்திரனிடம் அவ்வப்போது பேசும்போதும், “திருடங்க இல்லாத சாதி இருக்கா நடராஜ்? முதல்ல, ஒரு ஜாதி பெயரைச் சொல்லி அவங்களை இப்படி பிராண்ட் பண்றத நிப்பாட்டுங்க” என்று காவல்துறை அதிகாரியிடம் கூறும்போதும், ” “எந்த ஆதாரமும் இல்லாமல் கேஸ் போடுவது, போலீசை எதிர்த்து அல்ல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எதிர்த்து. இந்த அரசாங்கத்த எதிர்த்து. சவாலான போராட்டமாய் இருக்கும், தயாரா இருங்க” என்று செங்கேணியிடமும், மைத்ராவிடமும் சொல்லும்போதும், “எதையும் சாதிப்பதற்காக இந்தக் கேஸ எடுக்கல சார். ஒரு இன்னசன்ட் டிரைபல் உமனுக்கு ஜஸ்டிஸ் கிடைக்கணும்னு போராடறேன். இன்னிக்கு செங்கேணி, நாளைக்கு இன்னொரு பொண்ணுக்கு ஆதரவா நிப்பேன். நீதி கிடைக்கலன்னா, ரோட்டுல நின்னு போராடுவேன். போராடறதுக்கு லா எனக்கு வெப்பன், தட்ஸ் ஆல்” என்று அட்வகேட் ஜெனரல் ராம்மோகனிடம் தெளிவு படுத்தும்போதும், “தப்பு பண்றவங்களுக்கு ஜாதிகள் நிறைய இருக்கு சார், பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்? நாமும் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போலாம் சார்” என்று ஐஜி பெருமாள்சாமியிடம் உறுதியாகத் தெரிவிக்கும்போதும், “காந்தி நேருன்னு முக்கியமான தலைவரெல்லாம் இருக்காங்க, ஏன் அம்பேத்கர் மட்டும் இல்ல!?” என்று வினவும் போதும், “ஏழு பேரா, ஏழாயிரம் பேராங்கறது முக்கியம் கிடையாது. பாதிக்கப்பட்டவங்க யாராயிருந்தாலும், அவங்க எத்தனை பேரா இருந்தாலும் நீதி கிடைக்கணும். அத உறுதி செய்யறது இந்த நீதிமன்றத்தோட தார்மீகக் கடமை, மை லார்ட்”, “பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த அநீதியைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்”, “நீதிக்கு ஆதரவான வார்த்தைகளவிட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது”, “வரலாறு தெரியாதவங்களுக்குச் சொல்றேன். கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட புருஷனோட மரணத்துக்கு நீதி கேட்கற இந்தப் பொண்ணு செங்கேணிதான், நம்ம கண்ணு முன்னாடி நிக்கற கண்ணகி”, “கணவன இழந்த செங்கேணிக்கு ஊர் மையத்துல ஒரு பட்டா வழங்கனும்னு கேட்டுக்கறேன்” என்று ஆணித்தரமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும்போதும், சட்ட நிபுணத்துவம் மட்டுமல்லாது மனிதநேயமும் கூடிய உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வரும் சூர்யா – என அனைவருமே கதை, சம்பவங்கள், காட்சியமைப்பு, வசனங்கள் சேர்ந்து செதுக்கிய இம்முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றி, உச்சபட்ச அர்ப்பணிப்புத் திறமையால், அவை ‘பளிச்’சிட்டுத் துலங்கச் செய்துவிடுவது தனிச்சிறப்பு. அவ்வாறே, குழந்தை அல்லி (பேபி ஜோஷிகா மாயா), எஸ்.ஐ. குருமூர்த்தி (தமிழ்), ஆசிரியை மைத்ரா (ரஜிஷ விஜயன்), தலைமைக் காவலர் வீராச்சாமி (சூப்பர்குட் சுப்பிரமணி) காவலர் கிருபாகரன் (பால அசன்), அட்வகேட் ஜெனரல் எஸ் ராம்மோகன் (ராவ் ரமேஷ்), வழக்குரைஞர் சங்கரன் (எம்.எஸ்.பாஸ்கர்), பப்ளிக் ப்ராசிக்யூட்டர் செல்லபாண்டியன் (குரு சோமசுந்தரம்), ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் (இளவரசு), காவல்துறை அதிகாரி நடராஜ் (ராஜேஷ் பாலச்சந்திரன்), டிஜிபி எஸ் ராதாகிருஷ்ணன் (ஜெயபிரகாஷ்) தத்தம் பங்களிப்பைக் குறைவில்லாமல் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவும் (எஸ்.ஆர்.கதிர்) இசையும் (சீன் ரோல்டன்) படத்திற்கு வலு சேர்த்துள்ளன. தோய்வே தோய்ந்து போகும் அளவிற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குனர் மற்றும் காஸ்ட்டிங் டைரக்டர் வெகுவான பாராட்டுக்குரியவர்கள். காவல்துறையினரின் லாக்கப் சித்திரவதைகள் திரையைத் தாண்டி வந்து நம்மைத் தாக்குகின்றன. இனி, இது நின்று விடுமா? சாத்தான்குளம் சம்பவமே வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு பிறகும்தானே! ஒட்டுமொத்தமாக நிற்காது, குறையலாம். அப்பட்டமாக ஒரு அப்பாவியைக் கொலை செய்த, அதை மறைக்கப் பாடுபட்ட அத்தனை நெஞ்சழுத்தக்காரர்களின் மனசாட்சியையும் நிச்சயம் இது உலுக்கி இருக்கும். அவ்விதம் அவர்கள் செய்ய எத்தனிக்கும்போது, இனி யோசிக்க வைக்கும். ஜெய் பீம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு இருந்தாலும், சில சித்தரிப்புகள் அதனுடன் சேர்க்கப்பட்டிருப்பது, கலையம்சம் மிகுந்த படமாகவும் பரிணமிக்கச் செய்வதுடன், பட்டவர்த்தனமான உண்மைகளைக் கூறும் ஆவணப்படங்களில் இருந்து விலகி நிற்பவர்களையும்கூட, ஆவணப்படுத்தப்பட்ட உண்மை நிலையை அறியச் செய்வதும்தான் ! சித்தரிப்புகளில் சில, சிலரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்குமாயின், அவை சரியாகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விதமான சித்தரிப்புகள் இனியும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கேதான் உண்டு. ஜெய் பீம் கொண்டாடப்பட வேண்டிய படம் மட்டுமல்ல; அது பேசும் உண்மைகளை, திரையரங்க வெளியீட்டின் மூலமும் கடைகிராம மக்கள் வரை, கொண்டு சேர்க்கப்பட வேண்டிய படமும்கூட. முழுத் தகுதிகள் இருந்தும் விருதுகள் கிடைக்காமல் போகலாம் – காட்டப்படும் உண்மைகளையும் சேர்த்துச் சேர்த்து அங்கீகரிப்பதாகி விடுமோ எனும் அச்சத்தால். இதை வெறும் படமாக மட்டும் கடந்து செல்லாமல், பல பரிமாணங்களில் அது தரும் பாடத்தையும், படத்தைக் காண்பவர் எல்லாம் பாராட்டித் தீர்ப்பதுதான், அதன் வெற்றி. 27 ஆண்டுகளுக்கு முன்பு, ஜஸ்டிஸ் கே.சந்துரு சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தபோது கையாண்ட வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஜெய் பீம் படத்தில், வழக்குரைஞர் சந்துருவாக பாத்திரமேற்று உயிர்ப்பித்ததின் மூலம், நீதி நாயகம் கே.சந்துரு மற்றும் நடிகர் சூர்யா பரஸ்பரம் கௌரவம் பெறுகிறார்கள். இப்படம், நடிகர் சூர்யாவின் நடிப்புத் தொழிலில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையிலேயே ஒரு மைல்கல். மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

சர்தார் உத்தம்

சர்தார் உத்தம்

திரை விமர்சனம் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, பஞ்சாப் மாநில ஆளுநர் லெப்டினன்ட் மைக்கேல் ஓ டயர் ஆணையின் பேரில், அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரம் பேர்கள் மீது முன்னெச்சரிக்கை ஏதும் செய்யாமல், பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட, ரத்தக் குளியலில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் கொல்லப்பட்டனர். அப்படுகொலையைக் கண்ணுற்றுத் தகித்துப் போன மாணவர் உத்தம் சிங், 1933 ஆம் ஆண்டு ஆப்கான், ரஷ்யா வழியாகக் கடும் பயணம் மேற்கொண்டு, லண்டனுக்குச் சென்று, படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் மரணமுற்றதை அறிந்து, அடுத்து அப்படுகொலைக்கு ஆணையிட்ட அன்றைய ஆளுநர் மைக்கேல் ஓ டயரை 1940 மார்ச் 13 ஆம் தேதி சுட்டுக் கொன்று, ஜூலை 31 ஆம் தேதி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வரலாற்றின் இந்தி திரை வடிவம்தான், விஷால் கௌசல் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, சூஜித் சிர்கார் இயக்கி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழில் வசன எழுத்துகளுடன், தற்போது வெளியாகியுள்ள ‘சர்தார் உத்தம்’. படம் ஆரம்பித்து இருபத்தேழாவது நிமிடத்தில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான அந்த நிகழ்வு நடந்தேறிவிட, அதற்குப் பிறகும் படம் தொடர்கிறது. அடுத்த ஒன்றேகால் மணி நேரத்தில், பேரதிர்ச்சியான தீர்ப்பு வெளியாகிவிட, படம் முடியவில்லை, தொடர்கிறது. அதற்கடுத்த 15 நிமிடங்களில் முத்தாய்ப்பாக, எல்லாவற்றுக்கும் அடிப்படையான நிகழ்வு விரிந்து, 24 நிமிடங்கள் நீடித்து மனதை ரணமாக்கிட, அதற்குப் பிறகான நிகழ்வில் உள்ளம் கனத்தும் போகிறது. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப்படத்தின் முக்கியமான ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும், தொய்வில்லாமல் விறுவிறுப்புடன் படம் தொடர்வதற்கு அடித்தளம், வலுவான திரைக்கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய இயக்கமும்தான். சுதந்திரமும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில், அந்தச் சுதந்திரத்திற்காகவும் மனித உரிமைக்காகவும் போராடும் மனித குலப் பிரதிநிதிகளின் வீரமும் தியாகமும் செறிந்த வரலாற்றின் ஒரு கீற்றுதான், சர்தார் உத்தம். லண்டன் காக்ஸ்டன் ஹாலில், காவல்துறை பிடியில், எதிர்த்து ஆரவாரம் செய்யும் மக்களிடையே, பதட்டம் இல்லாமல் தெளிவான முகத்துடன் வெளியே வரும்போதாகட்டும், ஸ்காட்லாந்து யார்டின் மூன்றாம் தர விசாரணை நடைமுறையின் போதுகூட “மரணத்தப் பார்க்கற நான், வலியை உணரல” என்று சிரித்துக் கொண்டே சொல்லும்போதாகட்டும், சுதந்திரத்திற்காகப் போராடுவது குறித்து எலீன் பால்மரிடம் விவாதிக்கும் போதாகட்டும், இந்தியர்களைப் பற்றி, சுதந்திரத்திற்காகப் போராடும் புரட்சியாளர்களைப் பற்றி மைக்கேல் ஓ டயர் பேச்சுகளைக் கேட்ட உணர்வில் தகிக்கும் போதாகட்டும், “அதனாலே பகத்சிங் பத்தி பேசாதே… அவரப்பத்தி உனக்குத் தெரியாதா?” என்று டிடெக்டிவ் ஸ்வைனிடம் சொல்லும் போதாகட்டும், கள்ளம் கபடமற்ற தோழி ரேஷ்மாவுடன் அளவளாவும் போதாகட்டும், “உங்க பிரிட்டிஷ் சட்டத்தில் இந்தக் கொலை, போராட்டமாகக் கருதப்படுமா? அல்லது கொலையாகக் கருதப்படுமா?” என்று லாயர் ஹாட்சிசனிடம் அப்பாவியாகக் கேட்கும் போதாகட்டும், “என்னைச் சுடு, இந்த வழக்கே நேர விரயம். பேசாம என்னைச் சுட்டு விடு. டயர் குற்றவாளி, நீங்களும் உங்க கொள்கைகளும்தான் குற்றவாளிகள்…” என்று துவங்கி, தண்டனை அறிவிப்புக்குப் பிறகு, “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக, கொடுங்கோன்மை ஒழிக, புரட்சி நீண்ட காலம் வாழ்க” என தீரத்துடன் நீதிமன்றத்தில் வாதாடுவதாகட்டும், “நான் ஒரு புரட்சியாளன் என்பதை இந்த உலகுக்குத் தெரிய வைங்க” என்று ஸ்வைனிடமும், ‘செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரினால் வாழ முடியும்’ என்று கூறும் எலீன் பால்மரிடம் மறுத்து, “என் நண்பன பாக்கற நேரம் வந்துடுச்சு…” என்று பகத்சிங்கை நினைத்துச் சொல்லும் போதாகட்டும் இப்படத்தில் விஷால் கௌவுசல், சர்தார் உத்தம் சிங்காகவே வாழ்ந்திருக்கிறார். மைக்கேல் ஓ டயர் (ஷான் ஸ்காட்), டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்வெயின் (ஸ்டீபன் ஹோகன்), பகத்சிங் (அமோல் பரசார்), ரேஷ்மா (பணிட்டா சந்து), ஜெனரல் ரெஜினால்ட் டயர் (ஆண்ட்ரூ அவில்), எலீன் பால்மர் (கிறிஸ்டியன் அவெர்டன்) ஆகியோரும் தத்தம் பாத்திரத்திற்கு உரிய பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். சிந்தனைக்குரிய வசனங்களும் தத்ரூபமான காட்சியமைப்புகளும் அருமையான ஒளிப்பதிவும் மிகவும் பொருத்தமான பின்னணி இசையும் நேர்த்தியான படத்தொகுப்பும் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பும் படத்தின் சிறப்புக்குப் பக்கபலம். “ஒரு உண்மையான புரட்சியாளர் சில கொள்கைகள பின்பற்றணும். நீங்க பாரபட்சமாக, மத வெறியனாக, சாதி வெறியனாக இருக்க முடியாது. பொருளாதார அல்லது சமூக வர்க்க வேறுபாடு இல்லாது கடைப்பிடிக்கும் ஒரே உண்மை, சமத்துவமாகும். எல்லாரையும் சமமாக நடத்தி மனித நேயத்தில் வலுவான நம்பிக்கையோடு இருப்பது…. “ “அவங்க என்னைக் கொன்று விடலாம். ஆனா என் கருத்துகள கொல்ல முடியாது. ஒரு கொள்கைக்கான நேரம் வந்துட்டா அதன் பிறகு அதைத் தடுக்க முடியாது. நீங்க எதிர்த்திடா விட்டால் அல்லது ஒடுக்குபவருடன் போராடாம விட்டால், உங்க உரிமைகள் உங்களுக்கு எப்பவுமே கிடைக்காது. ஒரு உண்மையான கொள்கை இன்றிக் கிடைக்கும் சுதந்திரம், அடிமைத்தனத்தை விட மோசமாக இருக்கும். சுதந்திரம் நமது பிறப்புரிமை, எனவே, இந்த அடக்குமுறை ஆட்சியை நாங்கள் நிராகரிக்கிறோம்”. இவை யாவும் பகத்சிங்கின் வார்த்தைகள்தாம்; எனினும், அவரது நிலையில் உலகில் இருக்கும் எவர் சிந்தனையும் இவையாகத்தான் இருக்கக்கூடும். முதல், இரண்டாம் உலகப் போர்களில் பிரிட்டிஷ் நாட்டிற்காக 2.6 மில்லியன் இந்தியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்காலக் கொள்கையின்படி ‘மனித ஏற்பாடா’க உருவாக்கப்பட்ட வங்காளப் பஞ்சத்தால் 4 மில்லியன் இந்தியர்கள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள். நூறு ஆண்டுகள் கடந்தும், நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து அலுவல் பூர்வமான மன்னிப்பை இந்தியாவால் இன்னும் பெற இயலவில்லை என்பது கூடுதல் கொடுமை. எது தேசபக்தி என்று பாடம் எடுக்காமல், இதுதான் தேசபக்தி என்று பாடமாகவே வாழ்ந்து, மன்னிப்புக் கேட்டு மறுவாழ்வு பெறுவதை மறுத்து, சுத்த சுயமரியாதை வீரனாகத் திகழ்பவன்தான், சர்தார் உத்தம்சிங். வரலாற்றை மறைப்பதற்கோ திருத்துவதற்கோ முன்னரே, அதனைப் படித்து விழிப்புணர்வு பெறுவது மிகவும் அவசியம்; அந்த வகையில், ‘ சர்தார் உத்தம் ‘ வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்ப்பதும்கூட. மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

தலைவி

தலைவி

திரைவிமர்சனம் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையிலோ சுய வரலாற்று அடிப்படையிலோ அல்லாது, அஜயன் பாலா எழுதிய நூலைத் தழுவி, அதே பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘தலைவி’. பதிவாகியுள்ள அரசியல் வரலாற்று நிகழ்வுகளுடன், யூகங்கள் மற்றும் செவிவழி அடிப்படையிலான சில செய்திகளையும் தொகுத்து, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியைச் சுவையாக இயக்குனர் விஜய் காட்சிப்படுத்தியிருக்கிறார். எனவே, இதிலுள்ள உண்மைத்தன்மை நூறு விழுக்காடும் உத்தரவாதத்திற்கு உரியது அல்ல. விருப்பமில்லாமல் வந்த திரைத்துறையிலும் விருப்பமில்லாமல் வர நேர்ந்த அரசியலிலும் அப்போது நிலவிய ஆணாதிக்கத்தைத் துணிவுடன் எதிர்த்து, சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாக, வெற்றியும் பெற்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைதான் ‘தலைவி’யில் விவரிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையும் அரசியலும் பின்னிப்பிணைந்த தமிழக வரலாற்றின் தலைவி அத்தியாயத்தில், ஜெயலலிதாவாகட்டும், ஆர் எம் வீரப்பனாகட்டும், வி.என்.ஜானகியாகட்டும், அத்தனை பேரும் சுற்றிவரும் மையப்புள்ளி எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆரின் விருப்பம் என்னவாக இருந்தாலும், இவர்கள் அனைவரது விருப்பமும், அவர் ஒருவராகத்தான் இருந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்திய விதம் அவரவர்களுக்கு ஏற்ப, மாறுபட்டும் இருந்திருக்கிறது, அவ்வளவுதான். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியதே கலைஞர்தான் என்றாலும், அதன் பிறகு அவரது அரசியலும் அவரைச் சுற்றியேதான் தொடர்ந்தது என்பதும் உண்மையே. இப்படத்தின் கதை ஜெயலலிதாவை நோக்கியது என்கிற வகையில், எம்ஜிஆரின் அரசியல் செயல்பாடுகள், அவரது காலத்தில் கலைஞரின் அரசியல் எல்லாம் ஒரு வரையறைக்குள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஜெயாவாகக் கங்கனா ரனாவத் நிறைவாகவே தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே ஆர். எம்.வீரப்பன் உடனான மோதல், சீண்டல், அலட்சியம், கிண்டல், எகத்தாளம், எம்.ஜி.ஆர். மீதான அதீத அன்பு, அவ்வப்போதான பிணக்கு, சமயோசித அறிவு, திறன், கோபம், கண்டிப்பு, உணர்ச்சி வயப்படுதல் என ஜெயாவின் பன்முகத் தன்மையை, படத்தில் கிடைத்த வாய்ப்பில் வெளிப்படுத்தியுள்ளது சிறப்பு. அரவிந்த் சுவாமிதான் எம்.ஜி.ஆர். கனப்பொருத்தம். அவரிடமே வெளிப்பட்டிராத முக பாவங்களைக்கூட, இதில் இவர் வெளிப்படுத்தி இருப்பது அருமை. நாசர் (கலைஞர் கருணாநிதி), சமுத்திரக்கனி (ஆர் எம் வீரப்பன்) இருவரும் ஏற்ற பாத்திரத்தைப் பழுதில்லாமலும் அட்டகாசமாகவும் செய்துள்ளனர். உடல்மொழியுடன் குரலும் நாசருடையதே என்றால், அவருக்குக் கூடுதல் பாராட்டு. பாக்யஸ்ரீ (சந்தியா), ரெஜினா கஸன்ட்ரா (சரோஜாதேவி), மதுபாலா (வி என் ஜானகி), தம்பி ராமையா (மாதவன்), ஷாம்னா காசிம் (வி.கே. சசிகலா), ராதாரவி (எம்.ஆர்.ராதா) தத்தம் பாத்திரத்தில், உரிய பங்களிப்பைக் குறைவின்றி வழங்கியுள்ளனர். ‘அறிந்தேன் ஆண்மையினை… உண்மையைத்தான் சொன்னேன்’ ‘செட்’டில் எம்.ஜி.ஆரிடம் சரோஜாதேவி, ‘செட்டுக்குள்ள நடிக்கறதுக்கு மட்டும்தான் நீங்க சம்பளம் தர்றீங்க. வெளியே வந்து நீங்க எடுக்கிற பாடத்த கேட்டுக்கறதுக்கு இல்ல..’ ஆர்.எம்.வீ.யிடம் சரோஜா தேவி, ‘தப்பில்லம்மா, அம்மா பண்ணதான், தப்பு’ அம்முவிடம் மாதவன், ‘இப்ப மரியாதை மனசுல வந்துருச்சு’ மாதவனிடம் அம்மு, ‘காப்பாத்தினது கடவுள் இல்லை. இதோ, இந்த மருத்துவரும் மருத்துவமும்தான். அறிவுதான் கடவுள்’ கலைஞர், ‘நல்லா இருக்கு; நான் உங்கள ரெஸ்ட் எடுக்க சொன்னா, நீங்க என் நிம்மதிய கெடுக்கப் பாக்கறீங்களா?’ எம்ஜிஆரிடம் ஜெயா, ‘இது என் படம். என் பணம். யார் வாழணும், யார் சாகணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். டென்ஷனா இருந்துச்சுன்னா மெதுவடை சுட்டு மெதுவா சாப்பிடு’ ஜெயாவிடம் ஆர்.எம்.வீ. ‘உண்மையைச் சொல்லுங்க; ரெண்டு பேர்ல யாரு பெஸ்ட் ஆக்டர்?’ கேட்கும் மாதவனிடம் ‘அது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? யார் பெஸ்ட் ஆக்டர்ன்னா, அது நான்தான்’ என்று சொல்லும் ஜெயா, ‘விரும்பறவங்களோட மனச கோபப்படுத்தலாம், காயப்படுத்தக் கூடாது’ அம்முவிடம் சந்தியா, ‘என்னைத் தவிர என் வாழ்க்கைக்கு எல்லாரும் முடிவெடுக்கிறாங்க, எனக்கு ஒரு வேலையும் இல்ல’, ‘இது விட்ட மாதிரி தெரியல, வேணான்னு வெட்ன மாதிரி தெரியுது’ ‘நாம விரும்பறவங்க நம்ம பக்கத்துல நிற்கும்போது எப்படி சந்தோஷம் இல்லாம இருக்க முடியும்? அது நிஜமல்ல, வெறும் பிம்பம்தான்னு நினைக்கும்போது எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?’ ஜெயா, ‘நாம மக்கள விரும்பினா மக்கள் நம்மள விரும்புவாங்க. அதான் அரசியல்’, எம்ஜிஆர், ‘ஜானகி அம்மாதான் எம்.ஜி.ஆரோட மனைவி, அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, மனைவி தலைவியாக முடியாது’ ஜெயா. இப்படி வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்; பலே, மதன் கார்க்கி. காமிரா கோணங்கள், லைட்டிங், ஏரியல் ஷாட்ஸ், பாடல்களைப் படமாக்கிய விதம் என விஷால் விட்டலின் ஒளிப்பதிவு அருமை. இணையாக, ஜி வி பிரகாஷ் குமாரின் அந்தந்தக் காலகட்டத்திற்கான திரை இசை உட்பட, உணர்வுபூர்வமான பொருத்தமான பின்னணி இசையும் அருமை. படத்தொகுப்பு அந்தோணி. தொலைக்காட்சித் தொடராகவோ, திரைப்படமாக இருந்தால் பாகங்களாகவோ எடுக்க வேண்டிய அளவிற்கு விரிவாக்கம் தேவைப்படுகின்ற இக்கதையை, இரண்டரை மணி நேரத்தில் சுருக்குவது என்பது மிகவும் சிரமம்தான். விளைவு, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்கிற விதத்தில், நிகழ்வுகளின் ஓட்டத்தில் தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் இயலாத திடீர்த் தாவல்கள் நிறைய. எம்.ஆர்.ராதா ஓர் இரவில் எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் செல்கிறார். சுடும் சத்தம் கேட்கிறது. அடுத்து எம்.ஆர். ராதா காயத்தோடு வெளியேறுகிறார்; எம்ஜிஆர் ரத்தவெள்ளத்தில் தரையில், என்று துண்டு துண்டாகக் காட்சிகள். டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசி, எடுத்த முடிவை உடனடியாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்காத ஜெயலலிதா, ‘இதை எப்போ, எங்க சொல்லனும்னு எனக்குத் தெரியும், நான் சொல்லிக்கிறேன்’ என்கிறார். ஆனால், அதை இறுதி வரை சொல்லாமல் போனதாகத்தான் படத்தில் தெரிகிறது. அதே போன்று, சிகிச்சை பெற்று இந்தியாவுக்குத் திரும்பியதில் இருந்து, இறக்கும்வரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சந்திக்காதது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திரைத்துறையிலும் அரசியல் துறையிலும் தவிர்க்க இயலாத பிரமுகர்களாகத் திகழ்ந்த, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எம். வீ சார்ந்த நிகழ்வுகளும் செய்திகளும், ஏறக்குறைய அனைத்தும் அறிந்தவைதான் என்கிற வகையில், இந்தக் கதையில் புதுமை இல்லைதான். என்றாலும், பிந்தைய ஆட்சி அதிகாரம், வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழக்கூடிய எந்தவிதமான மதிப்பீடையும் தவிர்த்த மனநிலையுடன், ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் நுழைந்த ஜெயலலிதா அங்கும், அதற்குப் பின்னர் பல இடர்ப்பாடுகளைத் தாண்டி, ‘தலைவி’யாக அவதாரமெடுத்த அதே ஆணாதிக்கம் மிகுந்த அரசியலிலும் சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதான நிகழ்வுகள் அனைத்தையும் ஒருசேர ‘மலரும் நினைவு’ களாக, இப்பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில், மீண்டும் திரையில் காண்பது, சுவைதரும் அனுபவமே. மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

ச ன் னி

ச ன் னி

திரை விமர்சனம் கொரோனா பேரிடர் காலத்தில் தனிமைப்படுத்தலின் துயரத்தை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்திருப்போம். அத்துடன், தனிப்பட்ட துயரங்கள் கூடுதலாகச் சேர்ந்து கொள்ளுமாயின், அக்கடுந்துயரின் உச்சம் ஒரு மனிதனை எவ்விதமாகவெல்லாம் ஆட்டுவிக்கும் என்பதை, வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் ‘சன்னி’.ரஞ்சித் சங்கர் எழுதி இயக்கி, ஜெய சூர்யாவுடன் இணைந்து தயாரித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள 93 நிமிடங்களே ஓடும் மலையாளத் திரைப்படம். வளைகுடா நாட்டில் இருந்து திரும்பும் சன்னி (ஜெயசூர்யா), கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலின் பொருட்டு ஹயாத் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வந்து சேர்கிறார். ஹோட்டலின் வரவேற்பாளர் ( பூர்ணிமா கிருஷ்ணன் ) குவாரண்டைன் விதிகளைக் கூறி, அறையின் சாவியை வழங்குகிறார். இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் ஒரு முறை தங்கியிருந்த ‘சூட்’ தான், சன்னியின் அறை. அந்த அறையில் சன்னியுடன் இருப்பது அவனது செல்போன் மட்டுமே. நண்பன் கோஷி ராஜேஷ் (அஜு வர்கீஸ்) துவங்கி, ‘பழக்க’மான டாக்டர் அனுராதா (மம்தா மோகன்தாஸ்), கேப் டிரைவர் (கேஜி பினாய்), மணிலெண்டர் ஜேக்கப் (சித்திக்), எஸ்.ஐ. சதாசிவன் நாயர் (விஜயராகவன்), டாக்டர் ஈரலி (இன்னொசென்ட்), பிரிதொரு அறையில் குவாரன்டைனில் இருக்கும் அதிதி (ஸ்ரீதா சிவதாஸ்), அட்வகேட் பால் (விஜய் பாபு), விவாகரத்து கோரும் கருவுற்ற மனைவி நிம்மி (ஷிவதா) என்று பேசி முடிப்பதுதான் படம். இதில், சன்னியுடன் தெரிவது கேப் டிரைவர், அதிதி மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் ஏற்ற இறக்கங்களுடனான அசரீரிகள்தான். படம் முழுவதும் தொடர்ந்து நிறைந்திருக்கிற ஒரே முகம், சன்னிதான். அறைக்குள் ஒரு ‘முடிவு’டன் நுழைந்து, மணிலெண்டரிடம் அதையும் வெளிப்படையாகவே தெரிவித்து முயற்சித்த சன்னியை, அவனது உடல் நிலையை விசாரிக்கும் எஸ்.ஐ. ஏற்பாடு செய்த உளவியல் மருத்துவர் ஈரலியின் தொடர் ஆலோசனைகளும், நேரான மேல் அறையில் இருந்து பறந்து வந்த துப்பட்டா மூலம், பாதி முகமாக அறிமுகமான அதிதியின் அவ்வப்போதான பேச்சும், அவனின் ‘அந்த’ முயற்சியைச் சற்று நிதானப்படுத்த, அவனது அட்வகேட்டிடம் இருந்து வந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளும், முற்றிலும் எதிர்பாராத விதமாக நிம்மியின் அழைப்பும், எந்த ‘முடிவு’க்கு இட்டுச் சென்றன என்பதுதான், ‘சன்னி’யின் மொத்தக் கதை. படம் முழுவதும் ஜெயசூர்யா, தன்னம்பிக்கையுடன் சன்னி பாத்திரத்தில் தனி ஆவர்த்தனமாக, அற்புதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார். விரக்தி, வேதனை, பரவசம், கோபம், துக்கம், அழுகை, நிம்மதி, நம்பிக்கை என பல உணர்வுகளை, முகபாவங்களாக அழுத்தமாகப் பதிவு செய்து, மனதில் நிற்கிறார். ஹோட்டல் அறை, மிஞ்சிப் போனால் வெளியே கடல்வெளி தவிர, பயணிக்க வாய்ப்பு இல்லாத ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன், அத்தனை உழைப்பையும் ஜெயசூரியாவின் முகபாவனைகளை நுட்பமாக ஒற்றி எடுத்துக் கொள்வதில் கொட்டியுள்ளது சிறப்பு. கதைக் கருவுக்கு நெருக்கமாகவும், சன்னி கதாபாத்திரத்தின் மன உணர்வுகளுக்கு இயைபாகவுமான இசையை, சங்கர் சர்மா வழங்கியுள்ளது அருமை. சமீர் முகமதுவின் படத்தொகுப்பு கச்சிதம். தனித்துவமாக இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கவும், சன்னியின் ஆரம்ப ‘மனோநிலை’யில் இருக்கும் எவரும் அதிலிருந்து வெளிவரவும் தேவை, துணிச்சல். அதற்காகவே, ‘சன்னி’யைத் தவறாது சந்திக்கலாம். மதிப்பெண் : 6.5/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

சுந்தரி

சுந்தரி

திரை விமர்சனம் ‘இப்படியெல்லாம் நடக்குமா!’ என்று வியக்க வைக்கும், ஏன், அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள் நடைமுறையில் நடக்காமலும் இல்லை என்பதே உண்மை, ஆம், கசப்பான உண்மை. அப்படியான ஒரு கதைதான், கல்யாண்ஜி கோகனா எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘சுந்தரி’. ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள அந்தக் கிராமத்திற்கு வந்த பிரபு (அர்ஜுன் அம்பட்டி), தற்செயலாக அங்கு காண நேர்ந்த சுந்தரி (ஷாம்னா காசிம்/பூர்ணா) மீது மையல் கொண்டு, மணமும் செய்து கொள்கிறான். மாதம் ஒரு லட்சம் ஊதியத்தில், மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அனாதையான பிரபுவின் நவநாகரிகமான இல்லத்தில் அடியெடுத்து வைக்கும் கிராமத்துச் சுந்தரிக்கு அந்த நகரச் சூழல் வியப்பையும் கொஞ்சம் அச்சத்தையும் தருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவை தெளிந்து வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பிரபுவுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அதற்கான காரணத்தை அவன் சொல்லவில்லை; அவளும் கேட்கவில்லை. தொடர்ந்து பல இடங்களில் தேடியும், வேலை கிடைக்கவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் விற்கும் நிலை. பிரபுவின் குடிப்பழக்கமும் குடும்பத்தில் சச்சரவும் தொடர்கின்றன. பெற்றோர் இருந்து, ஜாதகம் பார்த்து அவளை மணம் முடிக்காததாலேயே, அவளது ‘ராசி’யால்தான் இவையெல்லாம் என்று, சுந்தரி மீது வீசிய பிரபுவின் வார்த்தைகள் திராவகமாகத் தகிக்கச் செய்கின்றன. இதற்கு ஒரு ‘முடிவு’ காண அவள் மேற்கொண்ட முயற்சி, அறிந்த பலன், முயன்ற விபரீதப் பரிகாரம், கிடைத்த அதிர்ச்சியான உண்மைகள், எடுத்த தீரமான முடிவுதான் சுந்தரி திரைப்படத்தின் மொத்தக் கதை. சுந்தரியாக, ஷாம்னா காசிம் என்கிற பூர்ணா, மிகவும் பொருத்தமே. அவரது காஸ்ட்யூம் டிசைனர் பாராட்டுக்குரியவர். அமைதியான கிராமத்துப் பெண்ணாக, தாம்பத்திய வாழ்க்கையில் காதலில் கட்டுண்ட மனைவியாக, நகர வாழ்க்கையில் நிலவும் நரகச் சூழலில் தகிக்கும் அழகியாக, கேள்வியே இல்லாது கணவனை, ஜோசியத்தை, ஜோதிடனை நம்பும் வெள்ளந்தியாக, உண்மைகளை உணர்ந்து தெளிந்து, வெடிக்கும் அறிவார்ந்த மனுஷியாக, பூர்ணா பல பரிமாணங்களில் வெளுத்து வாங்குகிறார். ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என ஆரம்பித்த அர்ஜுன் அம்பட்டி, பீரும் குடிக்கும் என்கிற வகையில் தனது பங்களிப்பை, அளவோடு வழங்கியிருக்கிறார். சுரேஷ் பொப்ளி இசையும், அளவான பின்னணி இசையும் அருமை. பால் ரெட்டியின் ஒளிப்பதிவு, கிராமம் நகரம், உள்ளே வெளியே எல்லாவற்றிலும் ‘பளிச்’சென்று கவர்கின்றது. மணிகாந்தின் படத்தொகுப்பும் கச்சிதம். பாமரர்கள், படித்தவர்கள் என்ற வேறுபாடில்லாமல், பேராசையால், அறியாமையால்,  அச்சத்தால், சுய சிந்தனை இல்லாமல், மூடத்தனமான நம்பிக்கைகளில் கண்மூடித்தனமாக வீழ்ந்து, உயிரை, உடைமையை, உயிருக்குயிரானவர்களை, ஏன் மானத்தையும் கூட இழந்து, பரிதாப நிலைக்கு உள்ளான நிகழ்வுகளின் பின்னணியில், இந்த சுந்தரி ஒரு விழிப்புணர்வு தரும் எச்சரிக்கை. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

பூமிகா

பூமிகா

திரை விமர்சனம் அறிவியல் ரீதியாகச் சொல்லும் கதைகளை விட, திரைக் கலைஞர்களுக்குச் சுலபமானதும், பெருவாரியான ரசிகர்களுக்குச் சுவையானதுமானவை, அமானுஷ்யம் கலந்து  சொல்லும் கதைகளே. நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாது, தகவல்களைக் கடத்தினால் மட்டும் போதும் என்கிற நிலையில், திரைமொழியில் இது ஒரு புதிய உத்தி.  இந்த உத்தியில் உதித்ததுதான், ரவீந்திரன் ரா. பிரசாத் எழுதி இயக்கி, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள பூமிகா. ‘புவியை நாம் பாதுகாத்தால், அது நம்மைப் பாதுகாக்கும்’ என்கிற கருத்தைக் கொண்ட ஒற்றை வரிதான் மொத்த கதையும்.  ஒரு நள்ளிரவில் கர்ப்பிணி மனைவியுடன் பேசிக்கொண்டே காரைச் செலுத்தும் கேப் டிரைவர் கிருஷ்ணா (ஈஸ்வர் கார்த்திக்) விபத்தில் இறக்கிறான். மறுநாள் மலைப்பாங்கான பகுதியில், மரம் செடி கொடிகள்  அடர்ந்த வெளியை வெட்ட வெளியாக்கி, அமைச்சரின் ஒரு திட்டத்தை நிறைவேற்ற கௌதம் (விது), சம்யுக்தா (ஐஸ்வர்யா ராஜேஷ்), குழந்தை சித்து (அய்யன் அபிஷேக்), காயத்ரி (சூர்யா கணபதி), அதிதி (மாதுரி) காரில் அங்குள்ள கைவிடப்பட்ட ஒரு கட்டடத்திற்கு வந்து, தங்குகின்றனர். உதவிக்குக் காவலாளி தர்மன் (பாவெல் நவகீதன்). அந்த நிமிடத்தில் இருந்து துவங்குகின்றன, திடுக்கிட வைக்கும் அசாதாரண நிகழ்வுகள், தேடல்கள். அமானுஷ்யம் கலந்த திரில்லர் உத்தியில் வெளியான, இயக்குனரின் ‘இன்மை’ படத்தைப் போன்றே, இதிலும் மர்ம முடிச்சுகளைப் படிப்படியாக அவிழ்த்துக் கொண்டே, நிகழ்விலும் பிளாஷ்பேக்கிலுமாகக் கதையை இறுதிவரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நகர்த்திச் செல்லும் விதம் பாராட்டத்தக்கது. இயக்குனரின் இந்த உத்தி அவரின் பாணியாகவே தொடராமல் இருந்தால், முத்திரைக்கு  இலக்காவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வழக்கம்போல் இயக்குனர் ரதீந்திரன் இதிலும், ஜேம்ஸ் லவ்லாக் எனும் பிரிட்டன் விஞ்ஞானியின் ‘கையா ஹிப்போதீசிஸ்’ எனும் சயின்டிஃபிக் தியரியை, புதிய விஷயமாக அறிமுகம் செய்து, ரசிகர்களின் சிந்தனைக்குத் தீனி இடுகிறார்.   அவந்திகா வந்தனாபு ஆட்டிஸ சிறுமியாக, படு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். உடல் மொழியே முழு மொழியாக, பூமிகா பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே தெரியாத அளவிற்கு இயல்பாக மிளிர்கிறார். கதை நடிகர்களைத் தேர்வு செய்துள்ளதால்,  ஐஸ்வர்யா ராஜேஷ், பாவெல் நவகீதன் தவிர மற்றவர்கள் அறிமுகக் கலைஞர்களாக இடம்பெற்றுள்ளது, எந்த விதத்திலும் கதை நகர்வுக்கு இடறலாக இல்லை. அடுத்து, பூமிகாவின் கதையை ஒட்டி, பூமியை அழகாகவும் அழுத்தமாகவும் உருவகிக்கும் காவல்காரர் தர்மன் கவனத்தைக் கவருகிறார்.  ஒரு சைக்காலஜிஸ்ட் என்கிற மனநிலையோடு, உறுதியுடன் பிரச்சனைகளை அணுகும் பாத்திரத் தன்மையை அழகுற வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ், பேசிய வார்த்தைகளில் அதிகமாக உச்சரித்தது, ‘என்னாச்சு? ஏன், என்னாச்சு? சூர்யா கணபதி, விது அந்தச் சூழலுக்கு இன்னும் கூடுதலான அளவு ரியாக்ட் செய்திருக்கலாம். அதிதியின் ரியாக்சன் சற்று அதீதம். பிரித்வி சந்திரசேகரனின் இசை, கதைக்குப் பக்கபலம் மட்டுமல்ல, பக்கா பலமும் கூட. இதற்குச் சற்றும் குறையாத உழைப்பை ஒளிப்பதிவாளர் ரோபோர்டோ ஜஜ்ஜாரா வழங்கியுள்ளார். பூமிகா வரையும் ஓவியங்களாகட்டும்,  அவள் உலவும் இயற்கை அழகு ததும்பும் இடங்களாகட்டும், ஒளியும் வண்ணமும்  தெறித்து விழுகின்றன. ஓவியங்கள் அத்தனையும் அருமை. கலை இயக்குநருக்கும் ஓவியர்களுக்கும்  பாராட்டுகள். ஆனந்த் ஜெரால்ட்டின் படத்தொகுப்பு சற்று சவாலானதுதான். படத்தின் முன் பகுதியில் சற்று வேகத்தைக் கூட்டி இருக்கலாம் அல்லது நீளத்தைக் குறைத்திருக்கலாம். “பூமிகா யாரு? அது பூமிங்க. இந்த பூமி கிதே பூமி, அது ஒவ்வொரு நிமிஷமும் நம்ம கிட்ட பேசுது. அது தெளிவா சொல்லுதுங்க, என்ன தெரியுங்களா? ‘என்ன காப்பாத்திக்க எனக்குத் தெரியும், முடிஞ்சா எங்கிட்ட இருந்து உங்கள காப்பாத்திக்குங்க’. அவ கொஞ்சம் சிலிர்த்தாலும் ஒருத்தரும் தாங்க மாட்டீங்க ” என்று சொல்லும், தெள்ளத்தெளிவாக அந்தப் பகுதியின் வரலாறு தெரிந்த தர்மனிடம், இவர்கள் எதையும் விசாரிக்காதது, சற்று வியப்பைத் தருகிறது . அமானுஷ்யம் என்று வந்து விட்டாலே, ‘லாஜிக்’ பார்க்க முடியாதுதான். என்றாலும் அதற்குள்ளாகவே, அதற்கென்று இருக்கக்கூடிய லாஜிக்கும் கூட ஆங்காங்கே சறுக்குகிறது.  மீண்டும் இடைஞ்சல் தருவதாகக்  கருதி, அவர்களை அங்கிருந்து விரட்ட முனையும் பூமிகா, அவர்கள் காரில் கிளம்பிச் செல்ல முடிவெடுத்தபின் நிறுத்துவானேன்? அப்படி காரை நிறுத்த முடிந்த பூமிகாவால், ஐஸ்வர்யா ராஜேஷ் செல்லும்போது, அவ்விதம் நிறுத்த முடியாமல் பின்தொடர்ந்து ஓடுவானேன் . அப்பள்ளத்தாக்கில் கட்டுமானப்  பணியில் இருந்தவர்களைத் தவிர்த்து, மாணவர்களையோ ஆசிரியர்களையோ பூமிகா பாதிக்காத நிலையில், மவுண்ட் ரோஸ்யார்ட்  பள்ளியை மூட வேண்டிய அவசியமோ, அப்பகுதி மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியமும்தான் ஏனோ? ‘பாராநார்மல்’ செயல்பாடுகளுக்கு,  மிதமானது முதல் மிக அதிகமானது வரையிலான நிலநடுக்கம், நிலச்சரிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இருந்தால், அவரவர்கள் பார்வையில் அவை அமானுஷ்ய நம்பிக்கையாகவும், அறிவியல் பூர்வ உண்மையாகவும், ஏற்புடையதாக அமைந்திருக்கக் கூடும். ஒரு உத்தியாகக்  கொண்டுள்ள அமானுஷ்யத்தில், இந்த லாஜிக் தேடல்களை எல்லாம் சினிமா லிபர்டியாகக் கொண்டு விட்டுவிட்டு, புவி சமநிலையை வலியுறுத்தும் அக்கறையுடன், “என்னிக்குப்  பாலை மட்டுமே குடிக்க வேண்டிய குழந்தை, பெத்தவ மார்பைத் தின்ன ஆரம்பிக்குதோ, அன்னிக்குத் தாய்,  பேயா மாறிடுவா” என்கிற கலை வடிவான, அழுத்தமான, திரை வடிவச் செய்திக்காகவே ரதீந்திரனின் பூமிகாவை வரவேற்கலாம். விமர்சனம்: மது ராஜேந்திரன் மதிப்பெண் : 7/10

சாரா’ஸ் (Sara’s)

சாரா’ஸ் (Sara’s)

திரை விமர்சனம் ‘ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை?  ஏன் இன்னும் குழந்தைப் பேறு இல்லை?’  என்று கேட்கும் பழக்கம், இன்றும் தொடரவே செய்கிறது. இல்லாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவர்களே சொல்லாதபோது,  அப்படி அவர்களது தனிப்பட்ட விஷயத்தில், மூக்கை நுழைத்துக் கேட்பது என்பது விஷமமானது மட்டுமல்ல, அநாகரிகமானதும்கூட. தவிர, குழந்தை வேண்டுமா வேண்டாமா, எப்போது வேண்டும் என்று முடிவெடுப்பதில் முதல் உரிமை பெண்ணுக்கானது என்று சொல்கிறது சட்டம். ‘மணம் செய்து கொள்ளலாம், குழந்தை வேண்டாம்’ என்கிற சாரா வின்சென்ட்டுடன் (அன்னா பென்) சம்மதித்துக் கை கோர்க்கிறான் ஜீவன் பிலிப் (சன்னி வைன்). ஆனால் நடந்ததே வேறு. அதனை அடுத்து சாரா ஜீவன் தம்பதியரின் வாழ்க்கைப் போக்கு என்னவானது என்பதுதான், அக்ஷய் ஹரிஷ் எழுதி ஜூட் அண்டனி ஜோசப் இயக்கி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிவந்துள்ள ‘சாராஸ்’ மலையாளத் திரைப்படத்தின் கதை.  வளர்ந்து வரும் திரைக் கலைஞர் சாரா. தனியார் நிறுவனத்தில் ஜீவனுக்கு வேலை. இரண்டாண்டு காலக் காத்திருப்புக்குப் பின், இயக்குனராகப் படம் செய்திட அவளுக்கு வாய்ப்பு. கருத்தரித்தல், குழந்தைப்பேறு, வளர்த்தெடுத்தல் என தனது லட்சியத்திற்கு இடையூறு இல்லாத,  இலட்சிய வாழ்க்கையை அவள் விரும்புகிறாள். ஜீவனும் அவளுக்குத் துணை நிற்கவே செய்கிறான், எதிர்பாராத அந்நிகழ்வு சம்பவிக்கும் வரை. கதையில் டிவிஸ்ட் இல்லை. பரபரப்பான சம்பவங்கள் இல்லை. அடிதடிக்கு அவசியமில்லை. சிருங்காரக் காதல் காட்சிக்கு வாய்ப்பில்லை. எல்லாமே வெளிப்படையானவை;  உணர்வுப்பூர்வமானவை. சமூகக் களங்கமாகக் கருதும் விஷயங்களின்  பொருட்டு, மனிதர்கள் சரியானவற்றைப் புரிந்து கொள்வதும், அவர்களைப் புரிந்துகொள்ள வைப்பதும் அத்துனை சுலபமல்ல. ‘அப்பாடா’ என்றாகிவிடும்; விடுகிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் முகம் முழுவதும் சிரிப்புடன்  வரும் அன்னா பென், பிறகு முற்றிலும் வேறான சாராவாகத் தனது பங்களிப்பை நேர்த்தியாக வழங்குகிறார். “சாரா, இங்கே எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. உன்னோட அப்பா, உன்னோட அம்மா, என்னோட அம்மா, என்னோட சகோதரி, எல்லாரோட சந்தோஷத்தையும் நீ கெடுக்கப் போறே?” என்கிற ஜீவனிடம், சாரா “அப்ப என்னோட சந்தோஷம்?” என்று கேட்பது நியாயமானதே. என்ன ஒன்று, ஏற்ற பாத்திரத்திற்கு உயரமும் உடல் வாகும் கூடுதலாக இருதிருந்தால்,  இன்னும் சிறப்பு கூடி இருக்கும். தாய்க்கும் தாரத்திற்கும் இடையே தவிக்கும் பாத்திரத்தை, ‘பளிச்’செனத்  துலங்க வைத்துள்ளார், சன்னி வைன். ‘Better not be a parent than be a bad parent’ என்கிற ஆலோசனையுடன் வரும் டாக்டர் அபீஸ் (சித்திக்) கதையின் அஸ்திவாரம். எம்.பி.ஏ. கேட் நுழைவுத் தேர்வு, அதற்கானத் தயாரிப்பு என்று ஜீவனிடமும்,  “குழந்தைப் பருவம் சரியா இல்லாததால் அவங்க  கிரிமினல்களாகி விடுவதை நீங்க படங்கள்ல காட்டுறீங்க. படப்பிடிப்பு துவங்கறதுக்கு ரொம்பவும் முன்னேயே, அதப் பத்தி நிறைய யோசனைகள், விவாதங்கள் எல்லாம் நடத்துவது இல்லையா? இது அதையெல்லாம் விட மிகப் பெரிய முடிவு இல்லையா?” என்று சாராவிடமும் அறிவுரையாக இல்லாமல் ஆலோசனையாக வழங்குவது, அவரது நடிப்பைப் போலவே நயமானது. சாராவின் தந்தை வின்சென்ட் (பென்னி பி நாயரம்பலம்), ஜீவனின் தாயார் ரீதம்மா பிலிப் (மல்லிகா சுகுமாரன்), ஜீவனின் சகோதரி டாக்டர் சந்தியா பிலிப் (தான்யா வர்மா) ஆகியோரின் அளவான நடிப்பு கவனம் பெறுகிறது. பாடல்கள் மாண்டேஜ் வகை. ஷான் ரஹ்மான் இனிமையாக இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு பழுதில்லை. ரியாஸ் கே பாதர் படத்தொகுப்பைச் செய்துள்ளார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தின்  நீளத்தை 20 நிமிடங்கள் குறைத்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது. கிளைமாக்ஸில், நான்கு குழந்தைகளுக்குப் பிறகு படுக்கையில் நெருங்கும் கணவனை பலவீனமான நிலையிலும் காலால் பலமாக உதைக்கும் பெண், இரண்டு குழந்தைகளுக்குப் பின்பே இன்னும் பலமாகவும், சமயோசிதமாகவும், உதைத்திருந்திருக்கலாமோ! “சாரா, நீ தயாரா இருந்தா மட்டுமே இதைச்  செய்யணும். இது உன்னோட உடம்பு, முடிவும் உன்னுடையதாகத்தான் இருக்கணும்” என்று முத்தாய்ப்பாக டாக்டர் அபீஸ் கூறுவது சாராவுக்கு மட்டுமல்ல, எல்லாப் பெண்களுக்கும்கூடத்தான். மதிப்பெண் : 7 / 10 விமர்சனம் : மது ராஜேந்திரன்