மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11
12. திருமண உரிமைகளின் பரிணாம வளர்ச்சி இன்றைய சமுதாயத்தில் கருமுட்டை அல்லது விந்து தானம் செய்தவரின் பெயரை அதை தானமாகப் பெற்றவர்களுக்குக்கூடத் தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. ஆனால், கருமுட்டை அல்லது விந்து தானம் என்ற அதிநவீன விஞ்ஞானமுறை இல்லாததாலும் குழந்தை ‘வரம்’ தந்தவரே நேரடியாக உடலுறவு வைத்துக்கொள்வதாலும் குழந்தையின் தாய் யார் என்பதையும் தந்தை யார் என்பதையும் மறைக்க இயலாத சூழல் அப்போது இருந்தது. அது பல்வேறு சமயங்களில் விதுரன் போன்ற ஞானிகளைக்கூடக் கடும் அவமானத்திற்கு உள்ளாக்கி வைத்ததையும் பார்க்கிறோம். ஒருவகையில் பார்த்தால், குருவம்சத்தினர், மீனவர் குலப் பெண்ணான சத்யவதியின் வழித்தோன்றல்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், வேதங்களைத் தொகுத்தவர் என்று சொல்லப்படும் வேதவியாசரின் வாரிசுகள் என்பதை மகாபாரதத்திலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். அதனால், பீஷ்மரைப் போன்றவர்கள், தொடர்ந்து சத்திரியகுலம் மட்டுமே அரசாளத் தகுதியுள்ளவர்கள் என்று சொல்வது மகாபாரதக் கதையின் கதைப்போக்கிற்கு எதிர்மாறாக இருப்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டு, மாத்ரியுடன் உடலுறவுகொள்ள முற்பட்டபோது, முனிவரின் சாபத்தின்படி தலை சுக்கு நூறாக வெடித்துச் செத்துப் போனான். பாண்டுவின் இளைய தாரமான மாத்ரி, கணவனுடன் உடன்கட்டை ஏறித் தன்னை மாய்த்துக்கொண்டாள். ஆனால், பாண்டுவின் முதல் மனைவியான குந்திதேவி, உடன்கட்டை ஏறுவதைத் தவிர்த்துவிட்டு, பாண்டவர்களை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டாள். இந்த நிகழ்வு, உடன்கட்டை ஏறும் வழக்கம் மகாபாரதக் காலத்திலேயே இருந்தது என்பதைக் காட்டுகிறது. ஆனால், உடன்கட்டை ஏறுவதைப் பொறுத்தவரையில், இறந்தவரின் மனைவிக்குக் குழந்தைகள் இருந்தால் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளத் தேவையில்லை என்பதும், குறைந்தது குழந்தைகளைக் கவனித்து வளர்க்க இறந்துபோன கணவனுக்கு குந்திதேவி போல இன்னொரு மனைவி இருந்தால்தான் உடன்கட்டை ஏறி, ‘சதிமாதா’ ஆகமுடியும் என்பதும் விளங்கும். எனவே, மகாபாரதக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் மனைவி கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான நியதி அல்ல என்பதைத்தான் குந்திதேவியும் மாத்ரியும் நமக்கு உணர்த்துகிறார்கள். மகாபாரதக் காலத்தில் பெண்ணிற்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டது என்றாலும் பெண் என்பவள் ஆன்மா என்று ஒன்று இல்லாத ஜீவன் என்ற நிலைப்பாடு அப்போது இல்லை என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. பெண் ஆன்மா இல்லாதவள் என்பதால், இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறி சதிமாதாவாகக் கடமைப்பட்டவள் என்பது, பின்னாளில் பார்ப்பானியத்தால் முனமொழியப்பட்ட நிலைப்பாடு. உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம், ராஜாராம் மோகன்ராய் மற்றும் ஆங்கிலேயர்களின் முன்முயற்சியினால் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது ‘உடன் கட்டை’ ஏறும்படி செய்பவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. மத ரீதியான பாரம்பரிய வழக்கம் என்ற வாதத்தைச் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாக, ‘உடன்கட்டை’ ஏற்றும் வழக்கம் இப்போது இந்தியாவில் அடியோடு ஒழிந்துவிட்டது. அதிலும், பலதார மணம் புரிவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 494 சொன்னபிறகு, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கருத்தியல், நடைமுறைக்கு வந்துவிட்டது. மேலும் பெண்ணிற்கு 1955ஆம் ஆண்டு, இந்து திருமணச் சட்டத்தின் மூலம், விவாகரத்து உரிமை வழங்கப்பட்ட பின்பு, ‘கற்பு’ என்ற கற்பிதத்திற்குக் கொடுக்கப்பட்டு வந்து புனித அந்தஸ்தைச் சட்டம் ஒழித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இருபாலருக்கும் திருமண உரிமை வழங்கப்பட்ட பின்பு, இந்து திருமணச் சட்டத்தில் கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில், இருபாலரும் விவாகரத்து பெற்றுக்கொள்வதோடு, வேறு ஒருவரை மறுமணமும் செய்துகொள்ள முடியும். அவ்விதம் மறுமணம் செய்தவரையும் விவாகரத்து செய்தால், மீண்டும் மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெறுவதால், அந்த உரிமையின் உள்ளே ‘பலதாரத் திருமண உரிமை’யும் ‘பலபுருஷத் திருமண உரிமை’யும் ஒளிந்திருப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, ஒரு சமயத்தில் ஒரு பெண் (அ) ஆண் பல ஆண்களை அல்லது பெண்களை மகாபாரதக் காலம் போல மணம் செய்துகொள்ள முடியாது என்றாலும், வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு மறுமணத்தின்போதும், பல புருஷர்களுடன் வாழும் உரிமையைப் பெண்களும் பல பெண்களுடன் வாழும் உரிமையை ஆண்களும் பெற்றுவிட்டனர் என்பதுதான் இன்றைய சட்ட நிலைப்பாடு. சட்டமே அங்கீகாரம் வழங்கிய பின்பு, இன்றும் கற்பின் புனிதம் பற்றியும் மேன்மை பற்றியும் பேசுவது நடப்பில் இருக்கும் இந்து திருமணச் சட்டப் பிரிவுகள் கூறும் உள்ளடக்கம் பற்றிய அறியாமையின் காரணமாகச் சொல்லப்படும் வாதமேயன்றி வேறில்லை. பெண்ணை உடன்கட்டை ஏற்றுவதைப் புனிதச் செயல் என்று கொண்டாடிய காலத்திலிருந்து, விவாகரத்து உரிமை வழங்கியதன் மூலம், கற்பு என்ற கற்பிதத்திற்குக் கொடுத்துவந்த புனித அந்தஸ்து சட்டத்தால் பறிக்கப்பட்டுவிட்ட காலகட்டத்திற்கு வந்துவிட்டோம் என்பதுதான் புரிந்துகொள்ளப்பட வேண்டிய சமூகப் பரிமாணம். இப்போது, ‘திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட புனித உறவு’ என்ற அபத்ததிலிருந்து, வால்டேர் போன்ற மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் சொல்லியவண்ணம், ‘திருமணம் என்பது இருவருக்குமிடையில் செய்துகொள்ளப்படும் சமூக ஒப்பந்தம் (Social Contract)’ என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பது தெளிவு. இது புரியாதவர்கள், திருமணம், விவாகரத்து, மறுமணம் இவற்றைப் பற்றிய பழைய பாரதக் கலாச்சாரம்தான் உலகத்திற்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது என்று பத்தாம்பசலித்தனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புரிதல் இல்லாததால்தான், இந்து மதம், உலகில் உள்ள ஏனைய மதங்களைவிட மேன்மையான மதம் என்ற கருத்தோட்டத்தில் இருந்துகொண்டு, அவர்கள் தங்கள் கண்ணோட்டத்தை உலகக் கண்ணோட்டததிலிருந்து சுருக்கிக்கொண்டுவிடுகிறார்கள். (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)